Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடராக்குங்கள்’

‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடராக்குங்கள்’

“புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, . . . அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்.”மத். 28:19, 20.

பாடல்கள்: 141, 97

1, 2. மத்தேயு 24:14-ல் இருக்கும் வார்த்தைகளை படிக்கும்போது என்ன கேள்விகள் நமக்கு வருகிறது?

கடைசி நாட்களில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படும் என்று இயேசு சொல்லியிருந்தார். (மத். 24:14) இந்த வேலையை யெகோவாவின் சாட்சிகள் செய்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். நாம் சொல்லும் செய்தியை சிலர் ஆர்வமாக கேட்கிறார்கள்; சிலர் அதை கேட்பதில்லை. இருந்தாலும் நாம் செய்யும் வேலையை அவர்கள் உயர்வாக மதிக்கிறார்கள். இயேசு சொன்ன வேலையை இன்று நாம் மட்டும்தான் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்கிறோம். அப்படி சொல்ல நமக்கு உரிமை இருக்கிறதா? அதை நாம் எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ல முடியும்?

2 நற்செய்தியை பிரசங்கிப்பதாக மற்ற கிறிஸ்தவர்களும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சர்ச்சில், டிவியில் அல்லது இன்டர்நெட்டில் மட்டும்தான் அவர்கள் பிரசங்கிக்கிறார்கள். அல்லது இயேசுவைப் பற்றி அவர்கள் எப்படி கற்றுக்கொண்டார்கள் என்பதைப் பற்றி மட்டும் மற்றவர்களுக்கு சொல்கிறார்கள். இன்னும் சிலர், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதன் மூலம்... டாக்டர்களாக, நர்சுகளாக, டீச்சர்களாக சமூக சேவை செய்வதன் மூலம்... பிரசங்க வேலையை செய்வதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், பிரசங்க வேலையை இப்படி செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னாரா?

3. மத்தேயு 28:19, 20-ல் இருக்கும் என்ன 4 விஷயங்களை நாம் செய்ய வேண்டும்?

3 ஜனங்களே தேடி வரும்வரை சீடர்கள் காத்துக்கொண்டிருக்க வேண்டியிருந்ததா? இல்லை! ஏனென்றால் உயிர்த்தெழுந்த இயேசு நூற்றுக்கணக்கான சீடர்களிடம், “புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, ... அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்” என்று சொன்னார். (மத். 28:19, 20) இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாரும் 4 விஷயங்களை செய்ய வேண்டும் என்று இந்த வசனம் சொல்கிறது. மக்களை சீடர்களாக்க வேண்டும், அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும், இயேசு சொன்ன விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் செய்வதற்கு முன்பு நாம்தான் முதலில் புறப்பட்டு போய் மக்களை சந்திக்க வேண்டும். “புறப்படுங்கள்” என்ற வார்த்தையைப் பற்றி ஒரு பைபிள் ஆராய்ச்சியாளர் இப்படி சொன்னார்: ‘மக்களை சந்தித்து பைபிளைப் பற்றி சொல்வது ஒவ்வொரு கிறிஸ்தவருடைய கடமை. அதற்காக அவர்கள் வீடுவீடாக மட்டுமல்ல, கடல் கடந்தும் போக வேண்டும்.’—மத். 10:7; லூக். 10:3.

4. “உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக்குவேன்” என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன?

4 சீடர்கள் எப்படி பிரசங்கிக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்த்தார்? தனித்தனியாக அவர்கள் இஷ்டப்படி பிரசங்கிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாரா? அல்லது, அவர்கள் எல்லாரும் ஒரு தொகுதியாக ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாரா? எந்தவொரு தனி நபராலும் ‘எல்லாத் தேசத்தாருக்கும்’ நற்செய்தியை சொல்ல முடியாது. அதனால், நாம் ஒரு தொகுதியாக, ஒன்றுசேர்ந்து பிரசங்கிக்க வேண்டும். இதை மனதில் வைத்துத்தான் மீன் பிடிப்பவர்களாக இருந்த தன் சீடர்களிடம், “உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக்குவேன்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 4:18-22-ஐ வாசியுங்கள்.) ஒரு தூண்டிலையும் இரையையும் பயன்படுத்தி மீன் பிடிக்கும் ஒருவரை பற்றி அவர் இங்கு பேசவில்லை. ஒரு பெரிய வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதைப் பற்றி பேசினார். இப்படி மீன் பிடிப்பதற்கு நிறையப் பேர் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டும்.—லூக். 5:1-11.

5. என்ன 4 கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ள வேண்டும், ஏன்?

5 இயேசு சொன்னது போல் யார் இன்று நற்செய்தியை பிரசங்கிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள இந்த 4 கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்:

  • எதைப் பற்றி பிரசங்கிக்க வேண்டும்?

  • என்ன நோக்கத்தோடு பிரசங்கிக்க வேண்டும்?

  • எந்தெந்த வழிகளில் பிரசங்கிக்க வேண்டும்?

  • பிரசங்க வேலையை எந்தளவுக்கு செய்ய வேண்டும், எவ்வளவு நாள் செய்ய வேண்டும்?

இந்த கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொண்டால் இயேசு சொன்ன உயிர்காக்கும் வேலையை தொடர்ந்து செய்ய நாம் தீர்மானமாக இருப்போம்.—1 தீ. 4:16.

நாம் எதை பிரசங்கிக்க வேண்டும்?

6. இயேசு சொன்ன விஷயத்தைத்தான் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கிறார்கள் என்று நீங்கள் எப்படி உறுதியாக நம்பலாம்?

6 லூக்கா 4:43-ஐ வாசியுங்கள். இயேசு “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை” பிரசங்கித்தார். அதை பற்றித்தான் அவருடைய சீடர்களும் பிரசங்கிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார். ஆனால், இந்த செய்தியை இன்று ‘எல்லாத் தேசத்தாருக்கும்’ யார் பிரசங்கிக்கிறார்கள்? யெகோவாவின் சாட்சிகள்தான்! அவர்கள் மட்டும்தான் இந்த வேலையை செய்கிறார்கள் என்று அவர்களை எதிர்க்கிறவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். இந்த அனுபவத்தை கவனியுங்கள். ஒரு பாதிரி நிறைய நாடுகளில் மிஷனரியாக இருந்திருக்கிறார். யெகோவாவின் சாட்சிகளை எந்த நாட்டில் பார்த்தாலும், ‘நீங்க ஊழியத்துல எதை பத்தி சொல்றீங்க?’ என்று கேட்பார். அவர்கள் சொன்ன பதிலை பற்றி அவர் ஒரு யெகோவாவின் சாட்சியிடம் இப்படி சொன்னார்: “சாட்சிகள் எல்லாரையும் முட்டாள்கள்னுதான் சொல்லணும். ஏன்னா சொல்லி வெச்ச மாதிரி எல்லாரும், ‘கடவுளோட அரசாங்கத்தை பத்திய நற்செய்தியை’ சொல்றோம்னு சொன்னாங்க.” இந்த அனுபவத்தில் இருந்து ஒரு உண்மையை நாம் தெரிந்துகொள்கிறோம். எந்த இடத்தில் இருந்தாலும்சரி, சாட்சிகள் எல்லாரும் ஒரே விஷயத்தைத்தான் பிரசங்கிக்கிறார்கள். (1 கொ. 1:10) அதுமட்டுமல்ல, நாம் படிக்கும் காவற்கோபுர பத்திரிகையின் முக்கிய நோக்கமே கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிப்பதுதான். இந்த பத்திரிகை 254 மொழிகளில் கிடைக்கிறது. ஒவ்வொரு இதழும் சுமார் 5 கோடியே 90 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்படுகிறது. இந்த உலகத்தில் வேறு எந்த பத்திரிகையும் இந்தளவுக்கு அதிகமாக அச்சடிக்கப்படுவதில்லை.

7. இயேசு சொன்ன செய்தியை சர்ச் பாதிரிகள் பிரசங்கிப்பதில்லை என்று நாம் எப்படி சொல்லலாம்?

7 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியெல்லாம் சர்ச் பாதிரிகள் பிரசங்கிப்பதில்லை. அப்படியே பிரசங்கித்தாலும், அந்த அரசாங்கம் ஒரு கிறிஸ்தவருடைய இருதயத்தில் இருக்கும் உணர்வு என்றுதான் சொல்கிறார்கள். (லூக். 17:21) கடவுளுடைய அரசாங்கம் நிஜமானது... இயேசுதான் அதற்கு ராஜா... சீக்கிரத்தில் அந்த அரசாங்கம் மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க போகிறது... உலகத்தில் நடக்கும் அநியாயத்தை முடிவுக்கு கொண்டுவரப்போகிறது... என்றெல்லாம் அவர்கள் சொல்லிக்கொடுப்பதில்லை. (வெளி. 19:11-21) கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகை சமயங்களில் மட்டும்தான் அவர்கள் இயேசுவைப் பற்றி பேசுகிறார்கள். சொல்லப்போனால், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜா எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்று அவர்களுக்கே தெரியாது. இயேசு எதை பற்றி பிரசங்கித்தார் என்று அவர்கள் புரிந்துகொள்ளாததால், எதற்காக பிரசங்கிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தெரிவதில்லை.

எதற்காக பிரசங்கிக்க வேண்டும்?

8. என்ன நோக்கத்தோடு நாம் பிரசங்கிக்க கூடாது?

8 “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத். 10:8) அதனால், இயேசுவை பின்பற்றுகிறவர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவோ பெரிய பெரிய கட்டிடங்களை கட்டுவதற்காகவோ பிரசங்கிக்க கூடாது. வியாபாரத்திற்காகவும் பிரசங்க வேலையை செய்யக் கூடாது. (2 கொ. 2:17, அடிக்குறிப்பு) அதோடு, சம்பளத்திற்காகவும் இந்த வேலையை செய்யக் கூடாது. (அப்போஸ்தலர் 20:33-35-ஐ வாசியுங்கள்.) இயேசு கொடுத்த ஆலோசனை அவ்வளவு தெளிவாக இருந்தாலும் இன்று நிறைய சர்ச்சுகளில் பணத்தை வசூலிக்கிறார்கள். சர்ச்சுகளை பராமரிக்க... பாதிரிகளுக்கும் அங்கு வேலை செய்பவர்களுக்கும் சம்பளம் கொடுக்க... அந்த பணத்தை பயன்படுத்துகிறார்கள். அதனால், சர்ச் பாதிரிகள் நிறையப் பேர் பணக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள்.—வெளி. 17:4, 5.

9. யெகோவாவின் சாட்சிகள் என்ன நோக்கத்தோடு பிரசங்கிக்கிறார்கள்?

9 கூட்டங்களிலும் மாநாடுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் பணம் வசூலிக்கிறார்களா? இல்லை! எல்லாரும் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையால்தான் பிரசங்க வேலையை செய்கிறார்கள். (2 கொ. 9:7) போன வருஷத்தில் மட்டும் பிரசங்க வேலையை செய்ய அவர்கள் கிட்டத்தட்ட 200 கோடி மணிநேரங்களை செலவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் 90 லட்சத்துக்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். இந்த வேலையை செய்வதற்கு அவர்கள் எந்த சம்பளமும் வாங்குவதில்லை. அவர்களுடைய சொந்த செலவிலேயே இந்த வேலையை செய்கிறார்கள். ‘ஊழியம் செய்றதையும் பைபிள் படிப்பு நடத்துறதையும் யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப முக்கியமா நினைக்கிறாங்க. . . . அதுமட்டுமில்ல, யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள்ல பாதிரிகள் இல்லாததால அவங்களால பணத்தை மிச்சப்படுத்த முடியுது’ என்று ஒரு ஆராய்ச்சியாளர் சொன்னார். அப்படியென்றால், நாம் என்ன நோக்கத்தோடு இந்த வேலையை செய்கிறோம்? இந்த உலகத்தில் இருக்கும் மக்களையும் யெகோவாவையும் நாம் நேசிப்பதால்தான் இந்த வேலையை சந்தோஷமாக செய்கிறோம். நாம் செய்யும் வேலை சங்கீதம் 110:3-ன் நிறைவேற்றமாக இருக்கிறது. (வாசியுங்கள்.)

எந்தெந்த வழிகளில் பிரசங்கிக்க வேண்டும்?

மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நற்செய்தியை சொல்கிறோம் (பாரா 10)

10. இயேசுவும் அவருடைய சீடர்களும் எந்தெந்த வழிகளில் பிரசங்கித்தார்கள்?

10 இயேசுவும் அவருடைய சீடர்களும் மக்களை எங்கெல்லாம் பார்த்தார்களோ அங்கெல்லாம் போய் நற்செய்தியை சொன்னார்கள். உதாரணத்துக்கு தெருக்களில், மார்க்கெட்டுகளில், வீடுகளில் மக்களை சந்தித்து நற்செய்தியை சொன்னார்கள். (மத். 10:11; லூக். 8:1; அப். 5:42; 20:20) இருந்தாலும், எல்லா மக்களுக்கும் நற்செய்தியை சொல்ல வீட்டுக்கு வீடு ஊழியம் சிறந்த வழியாக இருந்தது.

11, 12. பிரசங்கிக்கும் விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகள் எப்படி மற்ற கிறிஸ்தவர்களில் இருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள்?

11 சர்ச்சுகளில் இருக்கிறவர்கள் இயேசுவைப் போல் வீடுவீடாக பிரசங்கிக்கிறார்களா? பொதுவாக, சம்பளத்துக்காக வேலை செய்யும் பாதிரிகள் சர்ச்சுகளில் பிரசங்கம் செய்கிறார்கள். புதிதாக ஒருவருக்கு கடவுளைப் பற்றி கற்றுக்கொடுத்து அவரை சீடராக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதில்லை. ஏற்கெனவே சர்ச்சுக்கு வந்துகொண்டிருப்பவர்கள் சர்ச்சைவிட்டு போகாமல் இருப்பதற்குத்தான் முயற்சி செய்கிறார்கள். சிலசமயம் சர்ச்சில் இருப்பவர்களிடம் பிரசங்க வேலையை செய்யும்படி சொல்லியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு 2001-ல் போப் ஜான் பால் II, சர்ச்சுகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். “நற்செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்கு ஐயோ!” என்று சொன்ன அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் சுறுசுறுப்பாக பிரசங்கிக்க வேண்டும் என்று சொன்னார். பயிற்சி பெற்றவர்கள் மட்டுமல்ல எல்லாருமே பிரசங்கிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். இருந்தாலும் கொஞ்சம் பேர்தான் அவர் சொன்னதை செய்தார்கள்.

12 ஆனால், யெகோவாவின் சாட்சிகள் அப்படியில்லை. 1914-லிருந்து இயேசு ராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்று அவர்கள் மட்டும்தான் பிரசங்கிக்கிறார்கள். இயேசு சொன்னதுபோல் தங்கள் வாழ்க்கையில் ஊழியத்துக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். (மாற். 13:10) ஒரு ஆங்கில புத்தகம் (Pillars of Faith—American Congregations and Their Partners) இப்படி சொல்கிறது: ‘பசியில், தனிமையில், வியாதியில் கஷ்டப்படுகிறவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்கிறார்கள். இருந்தாலும், இந்த உலகத்துக்கு வரப்போகும் முடிவைப் பற்றியும் அதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் சொல்வதுதான் அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.’ இந்த செய்தியை யெகோவாவின் சாட்சிகள் இன்றுவரை தொடர்ந்து சொல்கிறார்கள். எந்தெந்த வழிகளை பயன்படுத்தி இயேசுவும் சீடர்களும் பிரசங்கித்தார்களோ அதேபோல் அவர்களும் பிரசங்கிக்கிறார்கள்.

எந்தளவுக்கு செய்ய வேண்டும், எவ்வளவு நாள் செய்ய வேண்டும்?

13. நற்செய்தியை நாம் எந்தளவுக்கு சொல்ல வேண்டும்?

13 “உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும்” நற்செய்தியை சொல்ல வேண்டும் என்று இயேசு அவருடைய சீடர்களிடம் சொன்னார். ‘எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்க’ வேண்டும் என்றும் சொன்னார். (மத். 24:14; 28:19, 20) அப்படியென்றால், நற்செய்தி உலகம் முழுவதும் சொல்லப்பட வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

14, 15. இயேசுவுக்கு கீழ்ப்படிந்து யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் நற்செய்தியை சொல்கிறார்கள் என்று எப்படி சொல்லலாம்? (ஆரம்பப் படம்)

14 இயேசுவுக்கு கீழ்ப்படிந்து இன்று யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் நற்செய்தியை சொல்கிறார்கள். அதை நாம் எப்படி சொல்லலாம்? அமெரிக்காவில் மட்டும் எல்லா கிறிஸ்தவ பிரிவையும் சேர்ந்த மதத் தலைவர்கள் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அங்கு சுமார் 12 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை சொல்கிறார்கள். உலகம் முழுவதும் கத்தோலிக்க பாதிரிகள் மட்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் 80 லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள். அவர்கள் 240 நாடுகளில் நற்செய்தியை சொல்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் யெகோவாவுக்கு புகழ் சேர்க்கிறார்கள்.—சங். 34:1; 51:15.

15 இந்த உலகத்துக்கு முடிவு வருவதற்கு முன்பு நம்மால் முடிந்தவரை எல்லாருக்கும் நற்செய்தியை சொல்வதுதான் நம் நோக்கமாக இருக்கிறது. இந்த வேலையை செய்ய கோடிக்கணக்கான புத்தகங்கள், பத்திரிகைகள், துண்டுப்பிரதிகள், மாநாடு மற்றும் நினைவுநாள் அழைப்பிதழ்களை 700-க்கும் அதிகமான மொழிகளில் நாம் மொழிபெயர்த்து, வெளியிடுகிறோம். இதையெல்லாம் நாம் விலையில்லாமல் கொடுக்கிறோம். போன வருஷத்தில் மட்டும் 450 கோடி பத்திரிகைகளையும் புத்தகங்களையும் நாம் வெளியிட்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 20 கோடி புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை 130-க்கும் அதிகமான மொழிகளில் வெளியிட்டிருக்கிறோம். நம்முடைய வெப்சைட் 750-க்கும் அதிகமான மொழிகளில் இருக்கிறது. எந்த கிறிஸ்தவ அமைப்பாவது இந்த வேலையை இந்தளவுக்கு செய்கிறதா?

16. கடவுளுடைய சக்தியின் உதவியோடுதான் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கிறார்கள் என்று எப்படி சொல்லலாம்?

16 எதுவரைக்கும் நாம் பிரசங்க வேலையை செய்ய வேண்டும்? முடிவு வரும்வரை செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார். கடைசி நாள் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை சொல்கிறார்கள் என்றால் அதற்கு யெகோவாவுடைய சக்திதான் காரணம். (அப். 1:8; 1 பே. 4:14) சில கிறிஸ்தவர்கள், “எங்ககிட்டயும் கடவுளோட சக்தி இருக்கு” என்று சொன்னாலும் பிரசங்க வேலையை அவர்களால் தொடர்ந்து செய்ய முடிகிறதா? யெகோவாவின் சாட்சிகளைப் போல் ஊழியம் செய்ய சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள், ஆனால் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. சிலர் பிரசங்கிக்க ஆசைப்பட்டாலும் அவர்களால் கொஞ்ச நாட்களுக்குத்தான் செய்ய முடிகிறது. இன்னும் சிலர் வீடுவீடாக சென்று பிரசங்கித்தாலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் சொல்வதில்லை. அப்படியென்றால், இயேசு சொன்ன வேலையை அவர்கள் செய்வதில்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

இன்று யார் நற்செய்தியை பிரசங்கிக்கிறார்கள்?

17, 18. (அ) யெகோவாவின் சாட்சிகள்தான் நற்செய்தியை சொல்கிறார்கள் என்று நாம் எப்படி உறுதியாக சொல்கிறோம்? (ஆ) யாருடைய உதவியால் இந்த வேலையை தொடர்ந்து செய்கிறோம்?

17 உண்மையிலேயே, இன்று யார் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்கிறார்கள்? யெகோவாவின் சாட்சிகள்தான்! அதை எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறோம்? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி சொல்வதால் நாம் சரியான செய்தியை பிரசங்கிக்கிறோம். மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நற்செய்தியை சொல்வதால் சரியான வழிகளில் நாம் பிரசங்கிக்கிறோம். பணத்துக்காக செய்யாமல் அன்பினால் இந்த வேலையை செய்வதால் சரியான நோக்கத்தோடு பிரசங்கிக்கிறோம். எல்லா தேசத்து மக்களுக்கும் நற்செய்தியை சொல்வதால் நாம் இந்த வேலையை பெரியளவில் செய்கிறோம். அதோடு, முடிவு வரும்வரைக்கும் இந்த வேலையை நாம் தொடர்ந்து செய்யப்போகிறோம்.

18 கடைசி நாட்களில் யெகோவாவின் சாட்சிகள் செய்யும் இந்த பிரம்மாண்டமான வேலையை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது! ஆனால், இதற்கெல்லாம் யார் காரணம்? “உங்களை மனமுவந்து செயல்பட வைப்பதற்காகக் கடவுள்தான் தமக்குப் பிரியமானபடி உங்களிடையே செயல்பட்டு வருகிறார்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (பிலி. 2:13) இயேசு கொடுத்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து இந்த வேலையை தொடர்ந்து செய்ய யெகோவா நமக்கு நிச்சயம் பலம் கொடுப்பார்.—2 தீ. 4:5.