Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் எல்லா பிரசுரங்களையும் படிக்கிறீர்களா?

நீங்கள் எல்லா பிரசுரங்களையும் படிக்கிறீர்களா?

‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதிக்கிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.ஏசா. 48:17.

பாடல்கள்: 117, 114

1, 2. (அ) யெகோவாவின் சாட்சிகள் பைபிள் படிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? (ஆ) பைபிளில் எந்த பகுதி உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?

யெகோவாவின் சாட்சிகளாக நம் எல்லாருக்குமே பைபிள் படிப்பது என்றால் ரொம்ப பிடிக்கும். அது நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது. அருமையான ஆலோசனைகளும் அதில் இருக்கிறது. (ரோ. 15:4) கடவுள் சொன்ன விஷயங்கள் பைபிளில் இருப்பதால் அதை “கடவுளுடைய வார்த்தை” என்று நம்புகிறோம்.—1 தெ. 2:13.

2 நம் ஒவ்வொருவருக்கும் பைபிளில் ஏதாவது ஒரு புத்தகம் ரொம்ப பிடிக்கும். சிலருக்கு இயேசுவுடைய வாழ்க்கையைப் பற்றி படிப்பதென்றால் பிடிக்கும். அதில் இயேசு யெகோவாவின் குணங்களை அவ்வளவு அழகாக வெளிக்காட்டியிருப்பதை பார்க்க முடியும். (யோவா. 14:9) சிலருக்கு தீர்க்கதரிசன புத்தகங்களைப் படிக்க பிடிக்கும். உதாரணத்துக்கு, வெளிப்படுத்துதல் புத்தகம் “சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களை” விளக்குவதால் சிலர் அதை ஆர்வமாக படிப்பார்கள். (வெளி. 1:1) இன்னும் சிலருக்கு, சங்கீத புத்தகத்தைப் படிப்பது மனதுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும். நீதிமொழிகள் புத்தகத்தில் உள்ள முத்தான அறிவுரைகள் சிலருக்கு பிரயோஜனமாக இருக்கும். அப்படியென்றால் பைபிள் எல்லாருக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்பது எவ்வளவு உண்மை!

3, 4. (அ) நமக்கு கிடைக்கும் பிரசுரங்களைப் பற்றி நாம் எப்படி உணர்கிறோம்? (ஆ) நம் பிரசுரங்கள் வேறு யாருக்காகவும் தயாரிக்கப்படுகிறது?

3 நமக்கு பைபிளை ரொம்ப பிடிக்கும் என்பதால் பைபிள் சம்பந்தப்பட்ட பிரசுரங்களையும் நாம் விரும்பி படிக்கிறோம். நம்முடைய பத்திரிகைகள், புத்தகங்கள், சிற்றேடுகள், வீடியோக்கள் என எல்லாவற்றையும் யெகோவாதான் நமக்கு கொடுக்கிறார். யெகோவாவிடம் நெருங்கி இருக்கவும் ‘விசுவாசத்தில் உறுதியாக’ இருக்கவும் இவையெல்லாம் நமக்கு உதவுகின்றன.—தீத். 2:2.

4 யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற நம் எல்லாரையும் மனதில் வைத்துத்தான் நம் பிரசுரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இருந்தாலும், சில கட்டுரைகள் குறிப்பிட்ட சிலருக்காக தயாரிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, சில கட்டுரைகள் இளம் பிள்ளைகளுக்காக எழுதப்படுகிறது. சில கட்டுரைகள் பெற்றோருக்காக எழுதப்படுகிறது. அதுமட்டுமல்ல, பொதுமக்களுக்காக நிறைய கட்டுரைகளும் வீடியோக்களும் நம் வெப்சைட்டில் இருக்கின்றன. எல்லா மக்களுக்கும் தேவையான ஏராளமான ஆலோசனைகளை யெகோவா கொடுக்கிறார். இதை பார்க்கும்போது, ‘சேனைகளின் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்கள் நிறைந்த விருந்தாயிருக்கும்’ என்ற வசனம் நம் ஞாபகத்துக்கு வருகிறது.—ஏசா. 25:6.

5. யெகோவா எதை பார்த்து சந்தோஷப்படுவார்?

5 பைபிளையும் நம் புத்தகங்களையும் படிக்க இன்னும் நேரம் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று நாம் யோசிக்கலாம். இருந்தாலும், அதையெல்லாம் தவறாமல் படிக்க நாம் முயற்சி செய்யும்போது அதை பார்த்து யெகோவா நிச்சயம் சந்தோஷப்படுவார். (எபே. 5:15, 16) ஒருவேளை, சில பிரசுரங்களை நாம் நேரம் எடுத்து படிப்பதுபோல் மற்ற பிரசுரங்களைப் படிக்க முடியாமல் போகலாம். ஆனால், இதில் ஒரு ஆபத்து இருக்கிறது. அது என்ன?

6. நமக்கு பிரயோஜனமாக இருக்கிற சில விஷயங்களை தவறவிடுவதற்கு எது காரணமாக இருக்கலாம்?

6 சிலசமயம் பைபிளிலுள்ள சில பகுதிகளைப் படிக்கும்போது அது நம் சூழ்நிலைக்கு ஒத்துவராது என்று நாம் நினைக்கலாம். சில புத்தகங்கள் பிள்ளைகளுக்காக அல்லது பெற்றோருக்காக எழுதப்பட்டிருந்தால் ‘இதெல்லாம் எனக்கு பொருந்தாது’ என்று யோசிக்கலாம். அதனால் அந்த விஷயங்களை நாம் மேலோட்டமாக வாசிக்கலாம். இல்லையென்றால் அதை வாசிக்காமலேயே விட்டுவிடலாம். அப்படி செய்தால் நமக்கு பிரயோஜனமான சில விஷயங்களை நாம் தவறவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆபத்தை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? நமக்கு கிடைக்கும் எல்லா பிரசுரங்களும் யெகோவாவிடம் இருந்துதான் வருகிறது என்பதை நாம் எப்போதும் மனதில் வைக்க வேண்டும். ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதிக்கிற உன் தேவனாகிய கர்த்தர் நானே’ என்று யெகோவாவே சொல்கிறார். (ஏசா. 48:17) முழு பைபிளிலிருந்தும் எல்லா பிரசுரங்களிலிருந்தும் நன்மையடைய உதவும் மூன்று ஆலோசனைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பைபிளிலிருந்து நன்மையடைய...

7. பைபிளை நாம் எப்படி வாசிக்க வேண்டும், ஏன்?

7 ‘இதிலிருந்து நான் என்ன கத்துக்கலாம்’ என்ற எண்ணத்தோடு படியுங்கள். பைபிளிலிருக்கும் சில பகுதிகள் குறிப்பிட்ட ஒரு நபருக்காக அல்லது சில ஜனங்களுக்காக எழுதப்பட்டது. இருந்தாலும் “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன” என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:16) அதனால், நாம் பைபிளிலுள்ள எந்த பகுதியை படித்தாலும் ‘இதிலிருந்து நான் என்ன கத்துக்கலாம்’ என்றே எப்போதும் யோசிக்க வேண்டும். ஒரு சகோதரர் இப்படி சொல்கிறார்: “ஒவ்வொரு பைபிள் பதிவுல இருந்தும் நிறைய பாடங்களை கத்துக்க முடியுங்கிறதை நான் எப்போவுமே மனசுல வைச்சுக்குவேன். இப்படி செய்றதனால அந்த பதிவுல இருக்கிற ஆழமான விஷயங்களை என்னால கண்டுபிடிக்க முடியுது.” நாமும் பைபிளை வாசிக்கும்போது இந்த சகோதரரைப் போல் யோசிக்க வேண்டும். அப்படி யோசிக்க உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். அந்த பதிவிலுள்ள பாடங்களைப் புரிந்துகொள்ள ஞானத்தைத் தரும்படியும் அவரிடம் கேட்க வேண்டும்.—எஸ்றா 7:10; யாக்கோபு 1:5-ஐ வாசியுங்கள்.

பைபிள் படிப்பில் இருந்து நீங்கள் முழுமையாக நன்மையடைகிறீர்களா? (பாரா 7)

8, 9. (அ) பைபிளை படிக்கும்போது என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ளலாம்? (ஆ) மூப்பர்களிடம் எதிர்பார்க்கப்படும் தகுதிகளிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

8 கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். பைபிளை படிக்கும்போது உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த பதிவுல இருந்து யெகோவாவை பத்தி நான் என்ன கத்துக்குறேன்? கத்துக்கிட்ட விஷயங்களை என் வாழ்க்கையில எப்படி கடைப்பிடிக்கலாம்? இது மத்தவங்களுக்கு எப்படி பிரயோஜனமா இருக்கும்?’ இப்படி யோசித்தால், பைபிளிலிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வோம். இதை எப்படி செய்யலாம் என்பதற்கு இப்போது ஒரு உதாரணத்தை பார்க்கலாம். மூப்பர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று நாம் பைபிளில் வாசிக்கிறோம். (1 தீமோத்தேயு 3:2-7-ஐ வாசியுங்கள்.) நம்மில் நிறைய பேர் மூப்பர்களாக இல்லாததால் ‘இந்த வசனம் எனக்கு பொருந்தாது’ என்று நாம் யோசிக்கலாம். இருந்தாலும், மேலே பார்த்த மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டால் இந்த வசனங்கள் நமக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள முடியும்.

9 “யெகோவாவை பத்தி நான் என்ன கத்துக்குறேன்?” மூப்பர்களிடம் யெகோவா எவ்வளவு உயர்ந்த தராதரங்களை எதிர்பார்க்கிறார் என்பதை இந்த வசனங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, சபையை அவர் எந்தளவு நேசிக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், ‘கடவுள் தம் சொந்த மகனுடைய இரத்தத்தால் சபையை வாங்கியிருக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (அப். 20:28) அதனால், மூப்பர்கள் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். சபையில் இருப்பவர்களை அவர்கள் அன்பாக கவனித்துக்கொள்ளவில்லை என்றால் யெகோவாவுக்கு அவர்கள் கணக்குக்கொடுக்க வேண்டும். சபையிலுள்ள எல்லாரும் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (ஏசா. 32:1, 2) இந்த வசனங்களை வாசிக்கும்போது யெகோவாவுக்கு நம்மீது எந்தளவு அக்கறை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

10, 11. (அ) மூப்பர்களுக்கான தகுதிகளைப் பற்றி வாசிக்கும்போது அதை நம்முடைய வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கலாம்? (ஆ) இந்த விஷயங்கள் மற்றவர்களுக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கும்?

10 “என் வாழ்க்கையில எப்படி கடைப்பிடிக்கலாம்?” நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால் உங்களிடம் எதிர்பார்க்கப்படும் தகுதிகளைப் பற்றி அடிக்கடி யோசித்துப் பார்த்து மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் “கண்காணியாவதற்கு” முயற்சி செய்கிற ஒருவராக இருந்தால் இந்த தகுதிகளை வளர்த்துக்கொள்ள நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். (1 தீ. 3:1) இருந்தாலும், மூப்பர்களுக்கு சொல்லப்பட்ட தகுதிகள் நமக்கும் பிரயோஜனமாக இருக்கிறது. உதாரணத்துக்கு நாம் எல்லாருமே நியாயமானவர்களாக, தெளிந்த புத்தியுள்ளவர்களாக நடக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (பிலி. 4:5; 1 பே. 4:7) அதுமட்டுமல்ல, மூப்பர்கள் சபைக்கு “முன்மாதிரிகளாக” இருக்கும்போது அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம், அவர்களுடைய ‘விசுவாசத்தைப் பின்பற்றலாம்.’—1 பே. 5:3; எபி. 13:7.

11 “மத்தவங்களுக்கு எப்படி பிரயோஜனமா இருக்கும்?” ஆர்வம் காட்டும் நபர்களுக்கும் நம்மிடம் பைபிள் படிப்பவர்களுக்கும் இந்த வசனங்களைக் காட்டலாம். மற்ற மதத் தலைவர்களிலிருந்து மூப்பர்கள் எப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு விளக்கலாம். அதுமட்டுமல்ல, சபைக்காக மூப்பர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்கவும் இந்த வசனங்கள் நமக்கு உதவுகிறது. அப்படி யோசித்தால் நாம் அவர்களுக்கு மரியாதை கொடுப்போம். (1 தெ. 5:12) மூப்பர்களுக்கு நாம் எந்தளவு மரியாதை கொடுக்கிறோமோ அந்தளவுக்கு அவர்களுடைய பொறுப்பை சந்தோஷமாக செய்வார்கள்.—எபி. 13:17.

12, 13. (அ) நாம் எப்படி ஆராய்ச்சி செய்ய வேண்டும்? (ஆ) ஒரு பதிவிலுள்ள ஆழமான விஷயங்களைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சி செய்வது எப்படி உதவும் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுங்கள்.

12 ஆராய்ச்சி செய்யுங்கள். பைபிளை படிக்கும்போது இந்த கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்:

  • இந்த பைபிள் புத்தகத்தை எழுதியது யார்?

  • இது எங்கே, எப்போது எழுதப்பட்டது?

  • இதை எழுதியபோது என்ன முக்கியமான சம்பவங்கள் நடந்தன?

இப்படி ஆராய்ச்சி செய்து படித்தால் அந்த பதிவில் உள்ள ஆழமான விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

13 உதாரணத்துக்கு, நீங்கள் எசேக்கியேல் 14:13, 14-ஐ வாசிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த வசனம் இப்படி சொல்கிறது: “மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன். அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” எசேக்கியேல் இதை கி.மு. 612-ல் எழுதினார். அப்போது, நோவாவும் யோபுவும் இறந்து பல வருஷங்கள் ஆகியிருந்தது. அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததால் அவர்களை அவர் ஞாபகத்தில் வைத்திருந்தார். ஆனால் தானியேல் அந்த சமயத்தில் உயிரோடு இருந்தார். அவருக்கு ஒருவேளை 20 வயதுதான் இருந்திருக்கும். இருந்தாலும் நோவா, யோபுவைப் போல் தானியேலும் நீதியாக நடந்தார் என்று யெகோவா சொல்கிறார். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் பார்க்கிறார், அதை உயர்வாக மதிக்கிறார். அதுமட்டுமல்ல, இளைஞர்கள் எடுக்கும் முயற்சிகளையும் அவர் உயர்வாக மதிக்கிறார்.—சங். 148:12-14.

வித்தியாசமான பிரசுரங்களிலிருந்து நன்மையடைய...

14. இளைஞர்களுக்காக தயாரிக்கப்படும் புத்தகங்கள் அவர்களுக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கிறது, அதை படிப்பதால் மற்றவர்களுக்கும் என்ன நன்மை? (ஆரம்பப் படம்)

14 இளைஞர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள். பைபிளிலுள்ள எல்லா பகுதிகளும் நமக்கு பிரயோஜனமாக இருப்பதுபோல் அமைப்பு வெளியிடும் எல்லா புத்தகங்களும் நமக்கு பிரயோஜனமாக இருக்கிறது. இதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம். சில வருஷங்களாக, நம் அமைப்பு நிறைய பிரசுரங்களை இளைஞர்களுக்காக தயாரித்திருக்கிறார்கள். [1](பின்குறிப்பு) நண்பர்களிடமிருந்து வரும் தொல்லைகளையும் டீனேஜ் வயதில் வரும் பிரச்சினைகளையும் சமாளிக்க நல்ல நல்ல ஆலோசனைகள் அதில் இருக்கின்றன. ஆனால், இளைஞர்களுக்காக தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் நம் எல்லாருக்குமே எப்படி பிரயோஜனமாக இருக்கிறது? இதை படிக்கும்போது இளைஞர்களுக்கு வரும் பிரச்சினைகளைப் பற்றி நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு ஏற்ற விதத்தில் அவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் முடிகிறது.

15. இளைஞர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள் ஏன் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கிறது?

15 இளைஞர்களுக்கு வரும் நிறைய பிரச்சினைகள் நமக்கும் வரலாம். உதாரணத்துக்கு, நாமும் நம் நம்பிக்கைகளைப் பற்றி தைரியமாக பேச வேண்டியிருக்கலாம். கோபத்தை அடக்க வேண்டியிருக்கலாம். அதோடு, நண்பர்களிடமிருந்து வரும் தொல்லைகளை சமாளிக்கவும் மோசமான பொழுதுபோக்கை தவிர்க்கவும் வேண்டியிருக்கலாம். அதனால், ஒரு புத்தகம் இளைஞர்களுக்காக எழுதப்பட்டாலும் அது எல்லா கிறிஸ்தவர்களுக்குமே பிரயோஜனமாக இருக்கிறது. ஏனென்றால், அதிலுள்ள விஷயங்களும் பைபிள் அடிப்படையில்தான் இருக்கிறது.

16. நம் பிரசுரங்கள் வேறு என்ன செய்யவும் இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறது?

16 யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை இளைஞர்கள் பலப்படுத்திக்கொள்வதற்காகவும் நிறைய கட்டுரைகள் தயாரிக்கப்படுகின்றன. (பிரசங்கி 12:1, 13-ஐ வாசியுங்கள்.) இந்த கட்டுரைகள் பெரியவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ஜூலை 2009 விழித்தெழு!-வில் இளைஞர் கேட்கின்றனர் . . . ஆர்வமாய் பைபிள் வாசிப்பதற்கு நான் என்ன செய்யலாம்?” என்ற கட்டுரை வெளிவந்தது. பைபிளை நன்றாக படிப்பதற்கு உதவும் நிறைய குறிப்புகள் அதில் இருந்தது. அதிலிருந்த ஒரு பகுதியை பைபிளில் பத்திரமாக வைக்கும்படி அந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது. இந்த கட்டுரை பெரியவர்களுக்கு எப்படி பிரயோஜனமாக இருந்தது? கல்யாணமான ஒரு சகோதரி இப்படி சொல்கிறார்: “நான் ஆரம்பத்துல பைபிளை கடமைக்காக படிச்சேன். ஆனா இந்த கட்டுரையில இருந்த ஆலோசனைகளை நான் நல்லா யோசிச்சு பார்த்தேன். அந்த கட்டுரையில இருந்த ஒரு பெட்டி எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருந்தது. இப்பெல்லாம் நான் பைபிளை ரொம்ப ஆர்வமா படிக்கிறேன். பைபிள்ல இருக்கிற எல்லா புத்தகங்களும் எப்படி ஒன்னோட ஒன்னு சம்பந்தப்பட்டிருக்குனு இப்போதான் எனக்கு நல்லா புரியுது. பைபிளை வாசிக்கிறது இவ்ளோ நல்லா இருக்கும்னு நான் நினைச்சே பார்க்கல.”

17, 18. பொதுமக்களுக்காக தயாரிக்கப்படும் கட்டுரைகள் நமக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கிறது? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

17 பொதுமக்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள். 2008-லிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்காக காவற்கோபுர படிப்பு இதழ் வெளிவருகிறது, பொதுமக்களுக்காக காவற்கோபுர பொது இதழ் வெளிவருகிறது. ஆனால், பொது இதழ் நமக்கும் பிரயோஜனமாக இருக்கிறது. இதை புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைப் பாருங்கள்: நீங்கள் ஊழியத்தில் பார்த்த ஒருவர் கூட்டங்களுக்கு வருகிறார். அவரை பார்க்கும்போது உங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். பொதுப்பேச்சை அவர் கேட்கும்போது அது அவருக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும் என்று யோசித்து நீங்கள் ரொம்ப சந்தோஷப்படுவீர்கள். அதுமட்டுமல்ல, பொதுமக்களை மனதில் வைத்து அந்த பேச்சு கொடுக்கப்பட்டதற்காக நீங்கள் ரொம்ப சந்தோஷப்படுவீர்கள். அந்த பேச்சை கேட்ட பிறகு அந்த விஷயத்தின்மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை இன்னும் அதிகமாகலாம்.

18 பொதுமக்களுக்காக எழுதப்படும் கட்டுரைகளை படிக்கும்போதும் நாம் அதேபோல் யோசிக்கலாம். உதாரணத்துக்கு, பொது இதழிலும் jw.org-லும் வெளிவரும் கட்டுரைகள், பைபிள் விஷயங்களை சுலபமாக புரிந்துகொள்ளும் விதத்தில் தயாரிக்கப்படுகிறது. அதில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளும் ரொம்ப எளிமையாக இருக்கிறது. இந்த கட்டுரைகளில் இருக்கும் விஷயங்கள் நமக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், அதை படிக்கும்போது பைபிள் விஷயங்களை நாம் இன்னும் நன்றாக புரிந்துகொள்வோம். அதன்மீது நமக்கு இருக்கும் மரியாதை இன்னும் அதிகமாகும். அதோடு, நம் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் புதுப்புது வழிகளில் விளக்கவும் நாம் கற்றுக்கொள்வோம். அதேபோல், விழித்தெழு! பத்திரிகையும் படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்புவதற்கும் நம் நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கும் உதவுகிறது.—1 பேதுரு3:15-ஐ வாசியுங்கள்.

19. நாம் எப்படி யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கலாம்?

19 இதுவரை பார்த்ததிலிருந்து, நமக்கு தேவையான ஏராளமான ஆலோசனைகளை யெகோவா கொடுக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. (மத். 5:3) அதை எல்லாவற்றையும் நாம் தொடர்ந்து படித்து அதன்படி நடக்க முயற்சி செய்யலாம். அப்படி செய்யும்போது நமக்கு நிறைய நன்மை கிடைக்கும். யெகோவாவுக்கும் ரொம்ப நன்றியோடு இருப்போம்.—ஏசா. 48:17.

^ [1] (பாரா 14) இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் (ஆங்கிலம்) பகுதி 1, 2-ஐ பாருங்கள். இப்போது ஆன்லைனில் மட்டுமே கிடைக்கிற “இளைஞர் கேட்கும் கேள்விகள்” கட்டுரைகளையும் (ஆங்கிலம்) பாருங்கள்.