Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் இன்னும் மாற்றம் செய்ய வேண்டுமா?

நீங்கள் இன்னும் மாற்றம் செய்ய வேண்டுமா?

“உங்கள் மனம் புதிதாக்கப்படுவதற்கும், அதன் மூலம் உங்கள் குணாதிசயம் மாற்றப்படுவதற்கும் இடங்கொடுங்கள்.”ரோ. 12:2.

பாடல்கள்: 61, 52

1-3. (அ) ஞானஸ்நானம் எடுத்த பிறகும் நமக்கு எந்த விஷயங்களை மாற்றிக்கொள்வது சவாலாக இருக்கலாம்? (ஆ) மாற்றங்கள் செய்வது நமக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்போது என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ளலாம்? (ஆரம்பப் படம்)

கெவின் பல வருஷங்களாக சூதாட்டம், குடி, சிகரெட், போதை மருந்துக்கு எல்லாம் அடிமையாக இருந்தார். [1] (பின்குறிப்பு) ஆனால், அவர் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டபோது அவருக்கு பிடித்த மாதிரி வாழ ஆசைப்பட்டார். அதற்கு அவர் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. யெகோவாவுடைய உதவியோடும் பைபிளின் உதவியோடும் அவர் அந்த மாற்றங்களைச் செய்தார்.—எபி. 4:12.

2 ஞானஸ்நானம் எடுத்த பிறகும் கெவின் கிறிஸ்தவ குணங்களை இன்னும் அதிகமாக காட்ட நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. (எபே. 4:31, 32) உதாரணத்துக்கு, அவர் தொட்டதற்கெல்லாம் கோபப்படுவார். கோபத்தை அடக்குவது அவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சொல்லப்போனால், கெட்ட பழக்கங்களை விடுவதைவிட கோபத்தை அடக்குவதுதான் அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இந்த குணத்தை மாற்றிக்கொள்ள அவர் யெகோவாவிடம் கெஞ்சி கேட்டார், பைபிளை ஆழமாக படித்தார்.

3 ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நம்மில் நிறையப் பேர் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்திருப்போம். பைபிள் சொல்கிறபடி வாழ நிறைய முயற்சி எடுத்திருப்போம். ஆனால், யெகோவாவையும் இயேசுவையும் போல் இருக்க நாம் இப்போதும் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். (எபே. 5:1, 2; 1 பே. 2:21) உதாரணத்துக்கு, நாம் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிக்கலாம், நமக்கு மனித பயம் இருக்கலாம், மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கொண்டிருக்கலாம், அல்லது வேறு ஏதாவது பலவீனம் நமக்கு இருக்கலாம். அதனால் நாம் இப்படி யோசிக்கலாம்: ‘பெரிய மாற்றங்களை செஞ்ச எனக்கு இந்த சின்ன விஷயத்தை மாத்திக்கிறது ஏன் கஷ்டமா இருக்கு? தொடர்ந்து பைபிள் சொல்றபடி வாழ்றதுக்கு நான் இன்னும் என்ன செய்யலாம்?’

உங்களால் யெகோவாவை சந்தோஷப்படுத்த முடியும்

4. எல்லா சமயங்களிலும் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி இருப்பது நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

4 நமக்கு யெகோவாவை ரொம்ப பிடிக்கும். அதனால், அவருக்கு பிடித்ததை செய்யவே நாம் ஆசைப்படுகிறோம். இருந்தாலும், நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால் எல்லா சமயங்களிலும் நம்மால் அவருக்கு பிடித்ததை செய்ய முடிவதில்லை. அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும், “நன்மை செய்யும் விருப்பம் எனக்குள் இருக்கிறது, ஆனால் நன்மை செய்யத்தான் எனக்கு முடியவில்லை” என்று யோசிக்கலாம்.—ரோ. 7:18; யாக். 3:2.

5. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நாம் என்னென்ன மாற்றங்களைச் செய்தோம்? இருந்தாலும் என்ன பலவீனங்களோடு போராட வேண்டியிருக்கலாம்?

5 ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு யெகோவா வெறுக்கிற பழக்கங்களை நாம் விட்டிருப்போம். (1 கொ. 6:9, 10) ஆனால், நாம் இன்னும் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருக்கிறோம். (கொலோ. 3:9, 10) அதனால் ஞானஸ்நானம் எடுத்து எத்தனை வருஷங்கள் ஆகியிருந்தாலும் நாம் தொடர்ந்து ஏதாவது தவறுகளைச் செய்யலாம். அடிக்கடி நம் மனதில் தவறான ஆசைகளும் எண்ணங்களும் வரலாம். ஒருவேளை நம்மிடம் இருக்கும் பலவீனத்தோடு நாம் பல வருஷங்களாக போராடிக்கொண்டு இருக்கலாம்.

6, 7. (அ) நாம் தவறு செய்பவர்களாக இருந்தாலும் யெகோவாவுடைய நண்பராக இருப்பதற்கு அவர் என்ன ஏற்பாட்டை செய்திருக்கிறார்? (ஆ) யெகோவாவிடம் மன்னிப்பு கேட்க நாம் ஏன் தயங்கக் கூடாது?

6 நாம் தவறு செய்பவர்களாக இருந்தாலும் நம்மால் யெகோவாவுடைய நண்பராக முடியும்; அவருக்கு சேவை செய்யவும் முடியும். இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நாம் தவறு செய்வோம் என்று தெரிந்தே யெகோவா நம்மை அவருடைய நண்பராக தேர்ந்தெடுத்திருக்கிறார். (யோவா. 6:44) நம்மை பற்றி யெகோவா நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார். நம்மிடம் இருக்கும் குறைகளும் பலவீனங்களும்கூட அவருக்கு நன்றாக தெரியும். எப்படிப்பட்ட பலவீனங்களைச் சமாளிப்பது நமக்கு கஷ்டமாக இருக்கும் என்றும் அவருக்கு தெரியும். இருந்தாலும், நாம் அவருடைய நண்பராக இருக்க வேண்டும் என்றே அவர் ஆசைப்படுகிறார்.

7 அதுமட்டுமல்ல, யெகோவா தன்னுடைய ஒரே மகனையே நமக்காக பலியாக கொடுத்திருக்கிறார். இதிலிருந்து அவருக்கு நம்மீது எந்தளவு அன்பு இருக்கிறது என்று தெரிகிறது. (யோவா. 3:16) அதனால், நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் இயேசுவின் மீட்பு பலியின் மூலமாக நாம் யெகோவாவிடம் மன்னிப்பு கேட்கலாம். அவர் நிச்சயம் நம்மை மன்னிப்பார். தொடர்ந்து அவருடைய நண்பராகவும் நம்மை ஏற்றுக்கொள்வார். (ரோ. 7:24, 25; 1 யோ. 2:1, 2) செய்த தவறை உணர்ந்து மனந்திரும்பும் எல்லாருக்காகவும் இயேசு உயிரைக் கொடுத்திருக்கிறார். அதனால், நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் யெகோவாவிடம் மன்னிப்பு கேட்க தயங்க கூடாது. அப்படி தயங்கினால், அழுக்கான கைகளை கழுவ மறுப்பவர்களைப் போல் இருப்போம். யெகோவாவுடைய நண்பராக இருப்பதற்காக அவர் செய்திருக்கும் இந்த அருமையான ஏற்பாட்டுக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!1 தீமோத்தேயு 1:15-ஐ வாசியுங்கள்.

8. நமக்கு இருக்கும் பலவீனங்களை காரணங்காட்டி நாம் ஏன் தவறு செய்யக் கூடாது?

8 நமக்கு இருக்கும் பலவீனங்களைக் காரணம் காட்டி நாம் தவறு செய்யக் கூடாது. தன்னுடைய நண்பர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று யெகோவா சொல்லியிருக்கிறார். (சங். 15:1-5) அதனால், யெகோவாவிடம் நெருங்கி இருப்பதற்கு நாம் அவரையும் அவருடைய மகனையும் போல் இருக்க வேண்டும். நமக்கு வரும் தவறான ஆசைகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். முடிந்தால் அதை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். ஞானஸ்நானம் எடுத்து எத்தனை வருஷங்கள் ஆகியிருந்தாலும் சரி, நாம் தொடர்ந்து மாற்றங்களைச் செய்ய வேண்டும்.—2 கொ. 13:11.

9. தொடர்ந்து நம்மால் மாற்றங்களை செய்ய முடியும் என்று எப்படி சொல்லலாம்?

9 “பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு, கடவுள் அருளுகிற புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்; அதாவது, திருத்தமான அறிவின் மூலம் உங்கள் சுபாவத்தைக் கடவுளுடைய சாயலுக்கு ஏற்ப தொடர்ந்து புதிதாக்குங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கொலோ. 3:9, 10) “தொடர்ந்து புதிதாக்குங்கள்” என்ற வார்த்தை, மாற்றங்களை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. நாம் எவ்வளவு வருஷங்களாக யெகோவாவை சேவித்துக்கொண்டிருந்தாலும் சரி, நம்மால் கிறிஸ்தவ குணங்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய முடியும்; யெகோவாவைப் போல் நடந்துகொள்ளவும் முடியும்.

ஏன் கஷ்டமாக இருக்கிறது?

10. பைபிளின் உதவியோடு தொடர்ந்து மாற்றங்களைச் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன கேள்விகள் நம் மனதில் வரலாம்?

10 பைபிள் சொல்கிறபடி வாழவும் தொடர்ந்து மாற்றங்களைச் செய்யவும் நாம் எல்லாருமே கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஆனால், யெகோவா நினைத்தால் நமக்கு உதவி செய்யலாமே? நல்ல குணங்களை காட்டுவதை நமக்கு சுலபமாக்கலாமே?

11-13. நமக்கிருக்கும் பலவீனங்களை மாற்றிக்கொள்ள நாம் முயற்சி எடுக்க வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?

11 யெகோவாவுக்கு நிறைய சக்தி இருக்கிறது. அவரால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு இந்த பிரபஞ்சமே ஒரு பெரிய அத்தாட்சி. உதாரணமாக, சூரியனுக்கு இருக்கும் சக்தியை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு வினாடியும் சூரியனிலிருந்து எக்கச்சக்கமான வெப்பமும் வெளிச்சமும் வருகிறது. ஆனால், பூமியில் இருக்கிற உயிரினங்கள் எல்லாம் உயிர் வாழ்வதற்கு சிறிதளவு வெளிச்சமும் வெப்பமும் இருந்தாலே போதும். (சங். 74:16; ஏசா. 40:26) அதுமட்டுமல்ல, யெகோவா தேவனால் அவருடைய மக்களை பலப்படுத்தவும் முடியும். சோர்ந்துபோய் இருக்கிறவர்களுக்கு அவருடைய சக்தியை கொடுப்பதாக பைபிள் சொல்கிறது. (ஏசா. 40:29) அப்படியென்றால், நம்முடைய பலவீனங்களை சுலபமாக எதிர்த்து போராடவும் கெட்ட ஆசைகளைத் தவிர்க்கவும் யெகோவா ஏன் நமக்கு உதவி செய்வதில்லை?

12 சொந்தமாக தீர்மானம் எடுக்கும் உரிமையை யெகோவா நமக்கு கொடுத்திருக்கிறார். அவருக்கு கீழ்ப்படியலாமா வேண்டாமா என்பதை நாமாகவே தீர்மானிக்க வேண்டுமென்று விரும்புகிறார். இருந்தாலும், நாம் அவருக்கு கீழ்ப்படிய கடினமாக முயற்சி செய்யும்போது அவரை நேசிக்கிறோம், அவருக்கு பிடித்ததைச் செய்ய ஆசைப்படுகிறோம் என்பதைக் காட்டுகிறோம். அதுமட்டுமல்ல, நம்மை ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு இல்லை என்று சாத்தான் சவால்விட்டிருக்கிறான். ஆனால், நாம் யெகோவாவுக்கு கீழ்ப்படியும்போது அவர் நம்மை ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதை காட்டுகிறோம். அவருக்கு கீழ்ப்படிவதற்கு நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அவர் உயர்வாக மதிக்கிறார். (யோபு 2:3-5; நீதி. 27:11) ஒருவேளை பலவீனங்களை எதிர்த்து போராடுவதை யெகோவா நமக்கு சுலபமாக்கினால் அவருக்கு உண்மையாக இருக்க நாம் கடினமாக முயற்சி செய்கிறோம் என்று எப்படி சொல்ல முடியும்? சாத்தான் போட்ட சவால் பொய் என்று எப்படி நிரூபிக்க முடியும்?

13 யெகோவாவைப் போல் நடந்துகொள்ள நாம் “முழு முயற்சி” எடுக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். (2 பேதுரு 1:5-7-ஐ வாசியுங்கள்; கொலோ. 3:12) நம் எண்ணங்களையும் ஆசைகளையும் கட்டுப்படுத்த நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். (ரோ. 8:5; 12:9) இப்படி கடினமாக முயற்சி எடுத்து வாழ்க்கையில் மாற்றங்கள் செய்யும்போது அதை பார்த்து நமக்கே ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

தொடர்ந்து மாற்றம் செய்ய பைபிள் உதவும்

14, 15. யெகோவாவுக்கு பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்? (“பைபிளும் ஜெபமும் அவர்கள் வாழ்க்கையை மாற்றியது” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

14 யெகோவாவுக்கு பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அதை நாமே சொந்தமாக தீர்மானிப்பதற்கு பதிலாக யெகோவா சொல்கிறபடி செய்ய வேண்டும். “இந்த உலகத்தின் பாணியின்படி நடப்பதை விட்டுவிடுங்கள்; உங்கள் மனம் புதிதாக்கப்படுவதற்கும், அதன் மூலம் உங்கள் குணாதிசயம் மாற்றப்படுவதற்கும் இடங்கொடுங்கள்; அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்” என்று ரோமர் 12:2 சொல்கிறது. அதனால், யெகோவா என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெரிந்துகொள்வதற்கு அவர் கொடுக்கும் உதவியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, நாம் பைபிளை படித்து அதை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும், கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்ய வேண்டும். (லூக். 11:13; கலா. 5:22, 23) இப்படியெல்லாம் செய்தால் யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொள்வோம், அவரைப் போலவே யோசிக்க கற்றுக்கொள்வோம். சொல்லிலும் செயலிலும்கூட அவருக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்வோம். இருந்தாலும், நம் பலவீனங்களை எதிர்த்து போராட நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.—நீதி. 4:23.

பலவீனங்களை எதிர்த்து போராட உதவும் வசனங்களையும் கட்டுரைகளையும் பத்திரமாக எடுத்து வைத்து அதை அடிக்கடி படிக்கலாம் (பாரா 15)

15 தினமும் பைபிளை படிப்பதோடு நாம் காவற்கோபுரம், விழித்தெழு! போன்ற பிரசுரங்களையும் ஆராய்ச்சி செய்து படிக்க வேண்டும். யெகோவாவுக்கு பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ள... பலவீனங்களை எதிர்த்து போராட... அந்த பத்திரிகைகள் உதவி செய்யும். ஒருவேளை, நம் சூழ்நிலைக்கு பொருத்தமான வசனங்களும் கட்டுரைகளும் அந்த பத்திரிகைகளில் இருக்கலாம். அதையெல்லாம் நாம் பத்திரமாக எடுத்து வைத்தால் அடிக்கடி அதை படிக்க முடியும்.

16. யெகோவாவுக்கு பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ள கொஞ்ச நாள் ஆனாலும் நாம் ஏன் சோர்ந்துவிடக் கூடாது?

16 யெகோவாவுக்கு பிடித்த குணங்களை உடனே வளர்த்துக்கொள்ள முடியாது, அதற்கு கொஞ்ச நாள் ஆகலாம். அதனால், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். பைபிள் சொல்கிறபடி செய்வது ஆரம்பத்தில் நமக்கு கஷ்டமாக இருக்கலாம், அதற்காக நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம். இருந்தாலும், யெகோவாவைப் போல் யோசிக்கவும் நடந்துகொள்ளவும் நாம் எந்தளவு முயற்சி செய்கிறோமோ அந்தளவு அது நமக்கு சுலபமாக இருக்கும்.—சங். 37:31; நீதி. 23:12; கலா. 5:16, 17.

அருமையான எதிர்காலத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள்

17. யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் நமக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் கிடைக்கும்?

17 எதிர்காலத்தில் நாம் யெகோவாவை என்றென்றும் சேவிப்போம். தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருக்க மாட்டோம். அப்போது நாம் எந்த பலவீனத்தோடும் போராட வேண்டியிருக்காது. அதோடு, யெகோவாவுடைய குணங்களைக் காட்டுவதும் நமக்கு சுலபமாக இருக்கும். இந்த அருமையான எதிர்காலத்துக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும், மீட்புப் பலி என்ற அருமையான பரிசை யெகோவா நமக்கு கொடுத்திருப்பதால் இப்போதும் நம்மால் அவரை வணங்க முடிகிறது. நாம் பாவிகளாக இருந்தாலும், வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய நாம் தொடர்ந்து முயற்சி செய்யும்போது... பைபிள் சொல்கிறபடி நடக்கும்போது... அவருக்கு பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியும்.

18, 19. தொடர்ந்து மாற்றங்களைச் செய்ய பைபிள் நமக்கு உதவும் என்று எப்படி உறுதியாக நம்பலாம்?

18 ஆரம்பத்தில் பார்த்த கெவின் கோபத்தை அடக்க கடினமாக முயற்சி செய்தார். பைபிளில் படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்த்து வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்தார். சகோதர சகோதரிகள் கொடுத்த ஆலோசனையையும் கேட்டு நடந்தார். மாற்றங்களைச் செய்ய அவருக்கு சில வருஷங்கள் ஆனது. பிறகு அவர் ஒரு உதவி ஊழியராக சேவை செய்தார். கடந்த 20 வருஷங்களாக அவர் ஒரு மூப்பராக சேவை செய்கிறார். இருந்தாலும் தனக்கு இருக்கும் பலவீனத்தோடு அவர் இன்றுவரை போராடிக்கொண்டு இருக்கிறார்.

19 வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய பைபிள் நமக்கு உதவி செய்கிறது என்று கெவினின் உதாரணத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். அதனால், பைபிள் சொல்கிறபடி வாழ நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்தால், நாம் யெகோவாவிடம் நெருங்கி போவோம். (சங். 25:14) நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பதைப் பார்க்கும்போது, தொடர்ந்து மாற்றங்கள் செய்ய பைபிள் நமக்கு உதவும் என்று உறுதியாக நம்புவோம்.—சங். 34:8.

^ [1] (பாரா1) இவருடைய பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.