Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நன்றியோடு இருங்கள்

கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நன்றியோடு இருங்கள்

“நாம் எல்லாரும் அளவற்ற கருணைக்குமேல் அளவற்ற கருணையைப் பெற்றோம்.” —யோவா. 1:16.

பாடல்கள்: 95, 13

1, 2. (அ) இயேசு சொன்ன உதாரணத்தை விளக்குங்கள். (ஆ) தாராள குணத்தையும் அளவற்ற கருணையையும் புரிந்துகொள்ள இந்த உதாரணம் நமக்கு எப்படி உதவுகிறது?

ஒருநாள் காலையில் திராட்ச தோட்டத்தின் முதலாளி சந்தைக்கு சென்றார். தன் தோட்டத்தில் வேலை செய்ய கூலி ஆட்களை வேலைக்கு எடுத்தார். அவர் கொடுக்கும் கூலிக்கு ஒத்துக்கொண்டு சிலர் வேலைக்கு வந்தார்கள். ஆனால், இன்னும் ஆட்கள் தேவைப்பட்டதால் அந்த முதலாளி நாள் முழுவதும் திரும்ப திரும்ப சந்தைக்கு சென்று ஆட்களை வேலைக்கு எடுத்தார். அவர்களுக்கு நியாயமான கூலியை கொடுப்பதாக ஒத்துக்கொண்டார். கடைசியாக, சாயங்காலத்திலும் சிலரை வேலைக்கு சேர்த்துக்கொண்டார். வேலை முடிந்த பிறகு கூலியை கொடுப்பதற்காக எல்லாரையும் வரச் சொன்னார். நாள் முழுவதும் வேலை செய்தவர்களுக்கும் சரி, ஒருமணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் சரி, அவர் ஒரே கூலியைத்தான் கொடுத்தார். ஆனால், நாள் முழுவதும் வேலை செய்தவர்கள் அதை ஒத்துக்கொள்ளாமல் குறைசொன்னார்கள். அதற்கு அந்த முதலாளி ஒருவனிடம், “என் பணத்தை என் விருப்பப்படி கொடுக்க எனக்கு உரிமை இல்லையா? நான் பெருந்தன்மையோடு கொடுப்பதைப் பார்த்து நீ பொறாமைப்படுகிறாயா?” என்று கேட்டார்.—மத். 20:1-15.

2 இயேசு சொன்ன இந்த உதாரணத்திலிருந்து யெகோவாவுடைய “அளவற்ற கருணையை” பற்றி ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்.  [1] (பின்குறிப்பு) (2 கொரிந்தியர் 6:1-ஐ வாசியுங்கள்.) அது என்ன? கடைசி நேரத்தில் வந்தவர்களுக்கும் அந்த முதலாளி முழுநாள் கூலியை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், அவர்கள்மீது அளவற்ற கருணையை அவர் காட்டினார். பைபிளிலுள்ள “அளவற்ற கருணை” என்ற வார்த்தையை பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் இப்படி சொன்னார்: “ஒரு பரிசை பெற கொஞ்சம்கூட தகுதியில்லாத ஒருவருக்கு அதை கொடுப்பதை இந்த வார்த்தை அர்த்தப்படுத்துகிறது.”

யெகோவாவின் தாராள குணத்துக்கு ஒரு உதாரணம்

3, 4. மனிதர்கள்மீது யெகோவா ஏன் அளவற்ற கருணையை காட்டினார், அதை எப்படி காட்டினார்?

3 யெகோவாவுடைய அளவற்ற கருணையை ‘அன்பளிப்பு’ என்று பைபிள் சொல்கிறது. (எபே. 3:7) ஆனால் அந்த அன்பளிப்பை பெறுவதற்கு நமக்கு கொஞ்சம்கூட தகுதியில்லை. ஏனென்றால், யெகோவா சொல்லும் எல்லா விஷயத்துக்கும் நம்மால் முழுமையாக கீழ்ப்படிய முடிவதில்லை. சொல்லப்போனால், நாம் மரணத்துக்குத்தான் தகுதியானவர்களாக இருக்கிறோம். அதனால்தான், “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை” என்று சாலொமோன் ராஜா சொன்னார். (பிர. 7:20) பல வருஷங்களுக்கு பிறகு அப்போஸ்தலன் பவுலும், “எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைப் பிரதிபலிக்கத் தவறியிருக்கிறார்கள்” என்றும் “பாவத்தின் சம்பளம் மரணம்” என்றும் சொன்னார்.—ரோ. 3:23; 6:23அ.

4 மனிதர்கள்மீது யெகோவா அளவுகடந்த அன்பு வைத்திருப்பதால்தான் அவருடைய ‘ஒரே மகனையே’ நமக்காக தியாகம் செய்தார். யெகோவா நம்மீது காட்டிய அளவற்ற கருணைக்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியுமா? (யோவா. 3:16) “கடவுளுடைய அளவற்ற கருணையால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் [இயேசு] மரணமடைந்தார்;” அதனால் அவருக்கு ‘மகிமையும் மாண்பும் கிரீடமாகச் சூட்டப்பட்டிருக்கிறது’ என்று பவுல் சொன்னார். (எபி. 2:9) இயேசுவின் தியாக மரணத்தால்தான் யெகோவா நமக்கு “முடிவில்லா வாழ்வை” அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.—ரோ. 6:23ஆ.

5, 6. (அ) பாவம் நம்மை ஆட்சி செய்தால் என்ன ஆகும்? (ஆ) கடவுளுடைய அளவற்ற கருணை நம்மை ஆட்சி செய்தால் என்ன ஆகும்?

5 பாவமும் மரணமும் நமக்கு ஏன் வந்தது? ‘ஒருவனுடைய குற்றத்தினால் மரணம் ராஜாவாக ஆட்சி செய்தது’ என்று பைபிள் சொல்கிறது. அதாவது, ஆதாம் கடவுளுக்கு கீழ்ப்படியாததால் அவனுடைய சந்ததியில் வந்த நம் எல்லாருக்கும் பாவமும் மரணமும் வந்தது. (ரோ. 5:12, 14, 17) இருந்தாலும், பாவத்திற்கு பதிலாக கடவுளுடைய அளவற்ற கருணை நம்மை ஆட்சி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்துவின் மீட்புப் பலியில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும். இதைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “பாவங்கள் பெருகப்பெருக அளவற்ற கருணையும் அதைவிட அதிகமாகப் பெருகியது. எதற்காக? பாவமானது மரணத்தோடு சேர்ந்து ராஜாவாக ஆட்சி செய்ததுபோல் அளவற்ற கருணையானது நீதியின் மூலம் ராஜாவாக ஆட்சி செய்வதற்காகவே; அந்த அளவற்ற கருணை நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் முடிவில்லா வாழ்வை அளிக்கிறது.”—ரோ. 5:20, 21.

6 நாம் பாவிகளாக இருந்தாலும் பாவம் நம்மை ஆட்சி செய்ய நாம் அனுமதிக்க வேண்டியதில்லை. நாம் ஏதாவது தவறு செய்யும்போது உடனே யெகோவாவிடம் மன்னிப்பு கேட்கலாம். அதனால்தான், “பாவம் உங்கள் எஜமானாக இருக்க அனுமதிக்காதீர்கள்; ஏனென்றால், நீங்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லாமல் அளவற்ற கருணையின்கீழ் இருக்கிறீர்கள்” என்று பவுல் எச்சரித்தார். (ரோ. 6:14) கடவுளுடைய அளவற்ற கருணை நம்மை ஆட்சி செய்வதால் நமக்கு என்ன நன்மை? “தேவபக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டொழிப்பதற்கு மட்டுமல்லாமல் தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதியுள்ளவர்களாக, தேவபக்தியுள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழ்வதற்கும் [கடவுளுடைய] அளவற்ற கருணை நமக்குக் கற்பிக்கிறது” என்று பவுல் சொன்னார்.—தீத். 2:11, 12.

அளவற்ற கருணை ‘பலவிதங்களில் வெளிக்காட்டப்படுகிறது’

7, 8. கடவுளுடைய அளவற்ற கருணை ‘பலவிதங்களில் வெளிக்காட்டப்படுகிறது’ என்பதன் அர்த்தம் என்ன? (ஆரம்பப் படம்)

7 பேதுரு இப்படி எழுதினார்: “பலவிதங்களில் வெளிக்காட்டப்படுகிற கடவுளுடைய அளவற்ற கருணையைப் பெற்றிருக்கும் நீங்கள் அதன் சிறந்த நிர்வாகிகளாக இருக்கிறீர்கள்; ஆகவே, அவரவர் பெற்ற வரத்திற்கு ஏற்றபடி, அந்த வரத்தை ஒருவருக்கொருவர் சேவை செய்யப் பயன்படுத்துங்கள்.” (1 பே. 4:10) கடவுளுடைய அளவற்ற கருணை ‘பலவிதங்களில் வெளிக்காட்டப்படுகிறது’ என்பதன் அர்த்தம் என்ன? வாழ்க்கையில் நமக்கு எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சரி அதை சகிப்பதற்கு யெகோவா உதவி செய்வார். (1 பே. 1:6) அதை சமாளிப்பதற்கு நமக்கு என்ன தேவையோ அதை அவர் கொடுப்பார்.

8 “அவருடைய நிறைவிலிருந்து நாம் எல்லாரும் அளவற்ற கருணைக்குமேல் அளவற்ற கருணையைப் பெற்றோம்” என்று யோவான் எழுதினார். (யோவா. 1:16) அளவற்ற கருணையை யெகோவா பலவிதங்களில் வெளிக்காட்டியிருக்கிறார். அதனால் நமக்கு நிறைய ஆசீர்வாதங்களும் கிடைக்கிறது. அதில் சில ஆசீர்வாதங்களை இப்போது பார்க்கலாம்.

9. யெகோவாவின் அளவற்ற கருணையினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது, அதற்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

9 பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கிறது. அளவற்ற கருணையினால்தான் யெகோவா நம் பாவங்களை மன்னிக்கிறார். ஆனால் அந்த மன்னிப்பை பெறுவதற்கு நாம் உண்மையிலேயே மனந்திரும்ப வேண்டும். அந்த தவறை மறுபடியும் செய்யாமல் இருக்க வேண்டும். (1 யோவான் 1:8, 9-ஐ வாசியுங்கள்.) நம் பாவங்களை யெகோவா எப்படி மன்னிக்கிறார் என்று பரலோக நம்பிக்கையுள்ள தன் சகோதரர்களிடம் பவுல் இப்படி விளக்கினார்: “[கடவுள்] நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுவித்து, தமது அன்புக்குரிய மகனுடைய அரசாங்கத்திற்குக் கொண்டுவந்தார். அந்த மகன் செலுத்திய மீட்புவிலையினால் விடுதலையை, அதாவது பாவ மன்னிப்பை, நாம் பெறுகிறோம்.” (கொலோ. 1:13, 14) யெகோவாவுடைய கருணைக்கு நாம் நன்றியோடு இருப்பதால்தான் நாம் அவரை சந்தோஷமாக புகழ்கிறோம். யெகோவா நம் பாவங்களை மன்னிப்பதால் இன்னும் நிறைய ஆசீர்வாதங்களை நம்மால் அனுபவிக்க முடிகிறது.

10. கடவுளுடைய அளவற்ற கருணையால் நமக்கு என்ன பாக்கியம் கிடைத்திருக்கிறது?

10 கடவுளுடைய நண்பராக முடிகிறது. நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால் யெகோவாவுடைய எதிரிகளாக இருக்கிறோம். என்றாலும், “நாம் கடவுளுக்கு எதிரிகளாக இருந்தபோதே அவரது மகனுடைய மரணத்தின் மூலம் அவருடன் சமரசம் செய்யப்பட்டோம்” என்று பவுல் சொன்னார். (ரோ. 5:10) இயேசுவின் மீட்பு பலி மூலமாக நாம் யெகோவாவுடன் சமரசமாக முடியும். அதாவது அவருடைய நண்பராக முடியும். இது கடவுளுடைய அளவற்ற கருணையோடு எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்று பவுல் தன் பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களிடம் இப்படி விளக்கினார்: “விசுவாசத்தினால் நாம் இப்போது நீதிமான்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளோடு சமாதானத்தை அனுபவிப்போமாக. நாம் இப்போது அனுபவிக்கிற அளவற்ற கருணையைக் கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தின் மூலமே பெற முடிந்திருக்கிறது.” (ரோ. 5:1, 2) யெகோவாவுடைய நண்பராக இருப்பது உண்மையிலேயே நமக்கு கிடைத்த பெரிய பாக்கியம் இல்லையா!

கடவுளுடைய அளவற்ற கருணையினால்... நற்செய்தியை கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது (பாரா 11)

11. ‘வேறே ஆடுகள்’ கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக இருக்க பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எப்படி உதவி செய்கிறார்கள்?

11 கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக இருக்க முடிகிறது. முடிவு காலத்தில் “ஞானவான்கள்,” அதாவது பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், ‘அநேகரை நீதிக்குட்படுத்துவார்கள்’ என்று தானியேல் தீர்க்கதரிசி எழுதினார். (தானியேல் 12:3-ஐ வாசியுங்கள்.) அதை அவர்கள் எப்படி செய்கிறார்கள்? நற்செய்தியை பிரசங்கிப்பதோடு லட்சக்கணக்கான ‘வேறே ஆடுகளுக்கு’ யெகோவா எதிர்பார்க்கும் விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறார்கள். (யோவா. 10:16) யெகோவாவின் பார்வையில் நீதிமான்களாக இருக்கவும் உதவி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு உதவி செய்தாலும் யெகோவாவுடைய அளவற்ற கருணையினால்தான் இது சாத்தியமாகிறது. அதை பவுல் இப்படி விளக்கினார்: “கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையினால் அவர்கள் விடுவிக்கப்பட்டு, நீதிமான்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்; இது கடவுளுடைய அளவற்ற கருணையினால் கிடைக்கும் ஓர் அன்பளிப்பாகும்.”—ரோ. 3:23, 24.

ஜெபம் என்ற பரிசை பெற்றிருக்கிறோம் (பாரா 12)

12. ஜெபம் எப்படி கடவுளுடைய அளவற்ற கருணையின் வெளிக்காட்டாக இருக்கிறது?

12 ஜெபத்தின் மூலமாக யெகோவாவிடம் நெருங்கி போக முடிகிறது. யெகோவாவுடைய அளவற்ற கருணையினால்தான் நம்மால் அவரிடம் தயக்கமில்லாமல் பேச முடிகிறது. யெகோவாவுடைய சிம்மாசனத்தை பவுல் ‘கடவுளுடைய அளவற்ற கருணையின் சிம்மாசனம்’ என்று சொன்னார். அந்த சிம்மாசனத்தை ‘தயக்கமில்லாமல் அணுகலாம்’ என்றும் சொன்னார். (எபி. 4:16ஆ) நாம் எப்போது வேண்டுமானாலும் யெகோவாவிடம் பேச முடியும். இது நமக்கு கிடைத்த பெரிய பாக்கியம்! இயேசு மூலமாக “நாம் கடவுளிடம் தயக்கமில்லாமல் பேச முடிகிறது; அவர் மீதுள்ள விசுவாசத்தால் கடவுளை நம்பிக்கையோடு அணுகவும் முடிகிறது” என்று பவுல் சொன்னார். (எபே. 3:12) இந்த பாக்கியத்தைக் கொடுத்ததற்காக நாம் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!

சரியான சமயத்தில் உதவி கிடைக்கிறது (பாரா 13)

13. கடவுளுடைய அளவற்ற கருணையினால் நமக்கு எப்படி “தக்க சமயத்தில்” உதவி கிடைக்கிறது?

13 சரியான நேரத்தில் நமக்கு உதவி கிடைக்கிறது. உதவிக்காக நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது அவருடைய அளவற்ற கருணையினால் “தக்க சமயத்தில்” நமக்கு உதவி செய்வார் என்று பவுல் சொன்னார். (எபி. 4:16அ) நம் வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்ப்படும்போது உதவிக்காக யெகோவாவிடம் கெஞ்சி கேட்கலாம். நமக்கு உதவ வேண்டும் என்ற கட்டாயம் யெகோவாவுக்கு இல்லையென்றாலும் அவர் நிச்சயம் நமக்கு உதவி செய்வார். பெரும்பாலும் நம் சகோதர சகோதரிகளை பயன்படுத்தி நமக்கு உதவி செய்வார். அதனால்தான், “‘யெகோவாவே எனக்குத் துணை; நான் பயப்பட மாட்டேன், மனுஷன் எனக்கு என்ன செய்துவிட முடியும்?’ என்று நாம் மிகுந்த தைரியத்துடன்” சொல்கிறோம்.—எபி. 13:6.

14. யெகோவாவுடைய அளவற்ற கருணையினால் நம் மனதுக்கு எப்படி ஆறுதல் கிடைக்கிறது?

14 நம் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது. மனவேதனையில் நாம் தவியாய் தவிக்கும்போது யெகோவா நம்மை ஆறுதல்படுத்துகிறார். இது நமக்கு கிடைத்திருக்கிற பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது! (சங். 51:17) தெசலோனிக்கேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டபோது பவுல் இப்படி எழுதினார்: “நம்மீது அன்பு காட்டி அளவற்ற கருணையினால் நிரந்தர ஆறுதலையும் அருமையான நம்பிக்கையையும் அளித்திருக்கிற நம் தகப்பனாகிய கடவுளும், நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவும், உங்கள் இருதயங்களை ஆறுதல்படுத்தி, . . . உங்களைப் பலப்படுத்துவார்களாக.” (2 தெ. 2:16, 17) யெகோவா நம்மீது அன்பு வைத்திருக்கிறார்... நம்மீது அக்கறையாக இருக்கிறார்... என்பதை தெரிந்துகொள்ளும்போது நம் மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

15. யெகோவாவுடைய அளவற்ற கருணையினால் நமக்கு என்ன நம்பிக்கை கிடைத்திருக்கிறது?

15 முடிவில்லா வாழ்வுக்கான நம்பிக்கை கிடைக்கிறது. நாம் பாவிகளாக இருப்பதால் யெகோவா நமக்கு உதவி செய்யவில்லை என்றால் நமக்கு எந்த எதிர்கால நம்பிக்கையும் இல்லை. (சங்கீதம் 49:7, 8-ஐ வாசியுங்கள்.) ஆனால், யெகோவா நமக்கு ஒரு அருமையான எதிர்கால நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி இயேசு இப்படி சொன்னார்: “மகனைக் கண்டு அவர்மீது விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனும் முடிவில்லா வாழ்வைப் பெற வேண்டும் என்பதும், கடைசி நாளில் நான் அவனை உயிர்த்தெழுப்ப வேண்டும் என்பதும் என் தகப்பனின் சித்தமாக இருக்கிறது.” (யோவா. 6:40) யெகோவாவுடைய அளவற்ற கருணையினால்தான் முடிவில்லாமல் வாழ்வதற்கான நம்பிக்கை நமக்கு கிடைத்திருக்கிறது. பவுல் இதை உணர்ந்ததால்தான், “எல்லா விதமான ஆட்களுக்கும் மீட்பளிக்கிற கடவுளுடைய அளவற்ற கருணை வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்று சொன்னார்.—தீத். 2:11.

அளவற்ற கருணையை சாக்காக வைத்து பாவம் செய்யாதீர்கள்

16. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் சிலர் கடவுளுடைய அளவற்ற கருணையை எப்படி சாக்காக வைத்து பாவம் செய்தார்கள்?

16 யெகோவாவுடைய அளவற்ற கருணையினால் நமக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கிறது. இருந்தாலும் அதை ஒரு சாக்காக வைத்து நாம் பாவம் செய்யக் கூடாது. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களில் சிலர் ‘வெட்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவதற்கு கடவுளுடைய அளவற்ற கருணையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டார்கள்.’ (யூ. 4) என்ன தவறு செய்தாலும் யெகோவா மன்னித்துவிடுவார் என்று அவர்கள் தப்புக்கணக்கு போட்டார்கள். அதனால், அவர்களோடு சேர்ந்து மற்ற சகோதரர்களையும் தவறு செய்ய தூண்டினார்கள். இன்றும் யாராவது அப்படி செய்தால் ‘அளவற்ற கருணையை அருளும் கடவுளுடைய சக்தியை அவமதிக்கிறவர்களாக’ இருப்பார்கள்.—எபி. 10:29.

17. பேதுரு என்ன எச்சரிப்பை கொடுத்தார்?

17 யெகோவா ரொம்ப இரக்கமுள்ள கடவுளாக இருப்பதால் நாம் என்ன தவறு செய்தாலும் அவர் உடனே நம்மை மன்னித்துவிடுவார் என்று சாத்தான் நம்மை நினைக்க வைக்கிறான். உண்மைதான், நாம் மனந்திரும்பும்போது யெகோவா நம்மை மன்னிக்க தயாராக இருக்கிறார். இருந்தாலும், அந்த தவறை திரும்பவும் செய்யாமல் இருக்க நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பேதுருவை இப்படி எழுதும்படி யெகோவா தூண்டினார்: “அன்பானவர்களே, இவற்றை முன்கூட்டியே அறிந்திருக்கிற நீங்கள், நெறிகெட்டவர்களுடைய தவறான கருத்துகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு நிலைதடுமாறிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; நம்முடைய எஜமானரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணையிலும் அவரைப் பற்றிய அறிவிலும் பெருகிக்கொண்டே இருங்கள்.”—2 பே. 3:17, 18.

அளவற்ற கருணையினால் வரும் பொறுப்புகள்

18. நமக்கு என்ன பொறுப்புகள் இருக்கிறது?

18 யெகோவாவுடைய அளவற்ற கருணைக்கு நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். அதனால், நாம் பெற்றிருக்கிற வரங்களை யெகோவாவுக்கு புகழ் சேர்ப்பதற்காகவும் மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்த வேண்டும். இதை எப்படி செய்யலாம்? “நமக்கு அருளப்பட்ட அளவற்ற கருணையின்படி நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமான வரங்களைப் பெற்றிருக்கிறோம்; இதனால், அவரவருக்கு அளிக்கப்பட்ட விசுவாசத்தின்படியே, . . . ஊழியம் செய்கிறவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்யட்டும்; கற்பிக்கிறவர்கள் தொடர்ந்து கற்பிக்கட்டும்; அறிவுரை சொல்கிறவர்கள் தொடர்ந்து அறிவுரை சொல்லட்டும்; . . . இரக்கம் காட்டுகிறவர்கள் உற்சாகமாய் இரக்கம் காட்டட்டும்” என்று பவுல் சொன்னார். (ரோ. 12:6-8) யெகோவாவின் அளவற்ற கருணையை அனுபவிக்கும்போது நமக்கு சில பொறுப்புகளும் வருகிறது. அதாவது ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடவும், பைபிளை பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும், சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தவும், நமக்கு எதிராக பாவம் செய்தவர்களை மன்னிக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

19. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

19 யெகோவாவின் அளவில்லாத அன்பை ருசிப்பதால் நாம் என்ன செய்ய தூண்டப்படுகிறோம்? “கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி” கொடுக்க தூண்டப்படுகிறோம். (அப். 20:24) இந்த வேலையை எப்படி செய்வது என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

^ [1] (பாரா 2) அளவற்ற கருணை: இது கரிஸ்மா என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பு. ஏற்றுக்கொள்ளக்கூடியது மற்றும் அழகானது என்ற அர்த்தத்தை தருகிறது. அன்பான பரிசை, அல்லது ஒருவருக்கு எதையாவது அன்பாக கொடுப்பதை விவரிப்பதற்காக இந்த வார்த்தை பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. கடவுளுடைய அளவற்ற கருணை என்ற வார்த்தை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கடவுள் தாராளமாகக் கொடுக்கிற பரிசைக் குறிக்கிறது. மனிதர்களுக்குக் கடவுள் அள்ளி அள்ளி கொடுக்கிறார், அவர்கள்மீது அளவற்ற அன்பையும் கருணையையும் காட்டுகிறார் என்பதுதான் இந்த வார்த்தையின் அர்த்தம். “தயவு,” “அன்பான பரிசு” என்றும் இந்த வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. அளவற்ற கருணையை யாராலும் சம்பாதிக்க முடியாது, அதைப் பெற்றுக்கொள்ள ஒருவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அளவற்ற கருணையை ஒருவர் பெற்றுக்கொள்வதற்கு ஒரே காரணம், கொடுப்பவரின் தாராள குணம்தான்.—2கொ 6:1; எபே 1:7.