Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அரசாங்கத்தை நாடுங்கள், பொருளாசையை தவிர்த்திடுங்கள்

கடவுளுடைய அரசாங்கத்தை நாடுங்கள், பொருளாசையை தவிர்த்திடுங்கள்

“[கடவுளுடைய] அரசாங்கத்தைத் தொடர்ந்து நாடிக்கொண்டிருங்கள்; அப்போது, இவையெல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்.”—லூக். 12:31.

பாடல்கள்: 40, 98

1. ஆசைக்கும் தேவைக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?

மனிதனுடைய ஆசைக்கு அளவே இல்லை. நிறைய பொருள்கள் இருந்தால்தான் வாழ முடியும் என்று அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. கொஞ்சம் பொருள்கள் இருந்தாலே நம்மால் வாழ முடியும். இருந்தாலும், இன்று நிறையப் பேரால் ஆசைக்கும் தேவைக்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை. “தேவை” என்பது நமக்கு தேவைப்படும் அடிப்படை விஷயங்களை, அதாவது உணவு, உடை, இருப்பிடத்தை குறிக்கிறது. ஆனால், “ஆசை” என்பது நம்முடைய விருப்பத்துக்காக பொருள்களை வாங்கி குவிப்பதை குறிக்கிறது.

2. மக்கள் எதற்காக ஆசைப்படலாம்?

2 ஏழை நாட்டில் வாழ்கிறவர்களுடைய ஆசைகளும் பணக்கார நாட்டில் வாழ்கிறவர்களுடைய ஆசைகளும் வித்தியாசப்படலாம். உதாரணத்துக்கு, ஏழை நாட்டில் இருக்கிறவர்களுக்கு மொபைல் ஃபோன், பைக், அல்லது சின்னதாக ஒரு வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை இருக்கலாம். ஆனால் பணக்கார நாட்டில் வாழ்கிறவர்களுக்கு விலை உயர்ந்த துணிமணிகள், ஆடம்பரமான வீடு, அல்லது சொகுசான கார் வாங்க வேண்டுமென்ற ஆசை இருக்கலாம். நாம் எங்கு வாழ்ந்தாலும் சரி, நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, ஆசைக்காக பொருள்களை வாங்கும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது.

பொருளாசையை தவிர்த்திடுங்கள்

3. பொருளாசை என்றால் என்ன?

3 பொருளாசை என்பது பொருள்கள்மீது ஒருவருக்கும் இருக்கும் அளவுகடந்த ஆசையை குறிக்கிறது. பொருளாசை பிடித்த ஒருவர் யெகோவாவோடு தனக்கு இருக்கும் பந்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்வதற்கு பதிலாக நிறைய பொருள்களை வாங்க வேண்டும் என்று நினைப்பார். நிறைய பணம், விலை உயர்ந்த பொருள்கள் வைத்திருப்பவர்கள்தான் பொருளாசை பிடித்தவர்கள் என்று சொல்ல முடியாது. ஏழைகள்கூட பொருளாசையில் சிக்கிக்கொள்ளலாம், கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுப்பதை நிறுத்திவிடலாம்.—எபி. 13:5.

4. சாத்தான் எப்படி ‘கண்களின் இச்சையை’ பயன்படுத்தி நம்மை திசைதிருப்புகிறான்?

4 நிறைய பொருள்கள் இருந்தால்தான் சந்தோஷமாக வாழ முடியும் என்று சாத்தான் நம்மை நம்ப வைக்கிறான். அதற்காக இந்த உலகத்தையும் ‘கண்களின் இச்சையையும்’ பயன்படுத்துகிறான். (1 யோ. 2:15-17; ஆதி. 3:6; நீதி. 27:20) நாம் பார்க்கும் விளம்பரங்கள் எல்லாமே பொருளாசையை தூண்டும் விதத்தில்தான் இருக்கின்றன. புதிதாக வரும் பொருள்களை உடனே வாங்க வேண்டும் என்ற ஆசையை அதிகமாக்குகின்றன. நீங்கள் எப்போதாவது ஆசைக்காக பொருள்களை வாங்கியிருக்கிறீர்களா? அல்லது விளம்பரத்தில் பார்த்ததால் வாங்கியிருக்கிறீர்களா? பின்னர் அந்த பொருள் உங்களுக்கு அவ்வளவாக பயன்படாதது போல் உணர்ந்திருக்கிறீர்களா? அப்படி பொருள்களை வாங்கி குவிக்கும்போது அதை பராமரிக்கவே நம் நேரம் சக்தி எல்லாம் போய்விடலாம். யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய முடியாமல் நம் கவனத்தை திசைதிருப்பிவிடலாம். பைபிள் படிக்க... கூட்டங்களுக்கு தயாரிக்க... தவறாமல் ஊழியத்தில் கலந்துகொள்ள... நமக்கு நேரமில்லாமல் போய்விடலாம். அதனால்தான், “இந்த உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோகும்” என்று அப்போஸ்தலன் யோவான் கொடுத்த எச்சரிப்பை நாம் எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.

5. பொருள் வாங்குவதிலேயே குறியாக இருப்பவர்களுக்கு என்ன ஆபத்து இருக்கிறது?

5 நாம் யெகோவாவுக்கு அடிமையாக இருப்பதற்குப் பதிலாக பொருளாசைக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். (மத். 6:24) பொருள் சேர்ப்பதிலேயே நாம் குறியாக இருந்தால் சுயநலமாக வாழ்வோம், பணப் பிரச்சினையில் சிக்கிக்கொள்வோம். எல்லாவற்றையும்விட யெகோவாமீதும் அவருடைய அரசாங்கத்தின்மீதும் நமக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். அதனால் வாழ்க்கையே வெறுமையாகிவிடும். கடைசியில், ஏமாற்றமும் வேதனையும்தான் நமக்கு மிஞ்சும். (1 தீ. 6:9, 10; வெளி. 3:17) இப்படிப்பட்டவர்கள் முட்செடிகள் உள்ள நிலத்திற்கு ஒப்பானவர்களை போல் இருக்கிறார்கள். ‘செல்வத்தின் வஞ்சக சக்தியும், மற்ற ஆசைகளும் அவர்களுடைய இருதயத்திற்குள் புகுந்து கடவுளுடைய செய்தியை நெருக்கிப் போடும், அதனால் அது பலன் கொடுக்காமல் போய்விடும்’ என்று இயேசு சொன்னார்.—மாற். 4:14, 18, 19.

6. பாருக்கிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

6 எரேமியாவின் செயலாளரான பாருக்கின் உதாரணத்தை கவனியுங்கள். எருசலேமின் அழிவு நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் பாருக் “பெரிய காரியங்களை” தேட ஆரம்பித்தார். ஆனால், அதெல்லாம் அழியும் என்று யெகோவா அவருக்கு ஞாபகப்படுத்தினார். இருந்தாலும், பாருக்கின் உயிரை மட்டும் காப்பாற்றுவதாக அவர் வாக்குக் கொடுத்தார். (எரே. 45:1-5) எருசலேம் ஒட்டுமொத்தமாக அழியப்போவதால் மக்களுடைய சொத்து சுகங்களை யெகோவா காப்பாற்றுவார் என்று பாருக் எதிர்பார்த்திருக்க முடியாது. (எரே. 20:5) இன்று நாமும் சாத்தானுடைய உலகத்துக்கு அழிவு நெருங்குகிற சமயத்தில் வாழ்கிறோம். இது பொருள்களை வாங்கிக் குவிப்பதற்கான நேரமில்லை. மிகுந்த உபத்திரவத்தின்போது நம்முடைய சொத்துபத்துகளையும் நாம் பொக்கிஷமாக பாதுகாக்கும் பொருள்களையும் யெகோவா காப்பாற்றுவாரென்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது.—நீதி. 11:4; மத். 24:21, 22; லூக். 12:15.

7. நாம் எதைப் பற்றி பார்க்க போகிறோம்? ஏன்?

7 நம்முடைய அடிப்படை தேவைகளை கவனித்துக்கொள்வதற்கும் அதேசமயம் பொருளாசையில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய அடிப்படை தேவைகளை நினைத்து அளவுக்கு அதிகமாக கவலைப்படுவதை நாம் எப்படி தவிர்க்கலாம்? முக்கியமான விஷயங்களுக்கு கவனம் செலுத்த எது நமக்கு உதவும்? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள மலை பிரசங்கத்தில் இயேசு கொடுத்த ஆலோசனைகள் நமக்கு உதவும். (மத். 6:19-21) இப்போது நாம் மத்தேயு 6:25-34-ஐ வாசித்து அதை ஆராய்ந்து பார்க்கலாம். பொருள்களை சேர்ப்பதற்கு பதிலாக கடவுளுடைய அரசாங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க இந்த வசனங்கள் நமக்கு உதவும்.—லூக். 12:31.

நம் தேவைகளை யெகோவா கவனித்துக்கொள்வார்

8, 9. (அ) நம்முடைய தேவைகளைப் பற்றி நாம் ஏன் அளவுக்கு அதிகமாக கவலைப்படக் கூடாது? (ஆ) நம்முடைய தேவைகளை இயேசு நன்றாக புரிந்துவைத்திருக்கிறார் என்று எப்படி சொல்லலாம்?

8 மத்தேயு 6:25-ஐ வாசியுங்கள். என்ன சாப்பிடுவோம், என்ன குடிப்போம், என்ன துணிமணிகளை போட்டுக்கொள்வோம் என்ற கவலை சீடர்களுக்கு இருந்தது. இயேசு இதை புரிந்துகொண்டதால்தான், ‘உயிருக்காக கவலைப்படுவதை நிறுத்துங்கள்’ என்று சொன்னார். இதற்காக ஏன் கவலைப்படக் கூடாது என்பதையும் சீடர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதெல்லாம் அவர்களுடைய அடிப்படை தேவைகளாக இருந்தாலும் இதை நினைத்து அவர்கள் அளவுக்கு அதிமாக கவலைப்பட்டால் வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை மறந்து விடுவார்கள் என்று இயேசுவுக்கு தெரியும். சீடர்கள்மீது இயேசுவுக்கு அக்கறை இருந்ததால்தான் மலை பிரசங்கத்தில் இன்னும் நான்கு முறை இதே எச்சரிப்பை கொடுத்தார்.—மத். 6:27, 28, 31, 34.

9 நாம் என்ன சாப்பிடுவோம், என்ன குடிப்போம், என்ன துணிமணிகளை போட்டுக்கொள்வோம் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று இயேசு ஏன் சொன்னார்? இதெல்லாம் நம்முடைய அடிப்படை தேவைகள்தானே? இதை வாங்குவதற்கான பணம் இல்லையென்றால் நமக்கு கவலையாகத்தானே இருக்கும்? நமக்கு கவலையாக இருக்கும் என்று இயேசுவுக்கும் தெரியும். நம்முடைய அடிப்படை தேவைகளை பற்றி இயேசுவுக்கு நன்றாக தெரியும். அதுமட்டுமல்ல, “கடைசி நாட்களில்” தன் சீடர்கள் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்வார்கள் என்றும் அவருக்கு தெரியும். (2 தீ. 3:1) ஏனென்றால், இன்று நிறையப் பேருக்கு வேலை கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. விலைவாசியும் உயர்ந்துகொண்டே போகிறது. நிறைய இடங்களில் மக்கள் வறுமையில் வாடுவதால் அவர்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. இருந்தாலும், ‘உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் அதிக முக்கியம்’ என்று இயேசு புரிந்துவைத்திருந்தார்.

10. எதைப் பற்றி முக்கியமாக ஜெபம் செய்ய வேண்டும் என்று இயேசு தன் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தார்?

10 கொஞ்சம் முன்புதான் இயேசு, ‘எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாருங்கள்’ என்று ஜெபம் செய்யும்படி சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தார். (மத். 6:11) இன்னொரு சமயத்திலும், ‘அந்தந்த நாளுக்குத் தேவையான ஆகாரத்தை அந்தந்த நாளில் எங்களுக்குத் தாருங்கள்’ என்று ஜெபம் செய்யும்படி சொன்னார். (லூக். 11:3) ஆனால், நம் அடிப்படை தேவைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் இயேசு இதை சொல்லவில்லை. நம்முடைய தேவைகளைவிட கடவுளுடைய அரசாங்கத்திற்காக ஜெபம் செய்வதுதான் ரொம்ப முக்கியம் என்று அவர் சொன்னார். (மத். 6:10; லூக். 11:2) இருந்தாலும், சீடர்கள் தங்கள் தேவைகளை நினைத்து கவலைப்படாமல் இருப்பதற்காக யெகோவா தன் படைப்புகளை எவ்வளவு நன்றாக கவனித்துக்கொள்கிறார் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்.

11, 12. பறவைகளின் தேவைகளை யெகோவா கவனித்துக்கொள்ளும் விதத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆரம்பப் படம்)

11 மத்தேயு 6:26-ஐ வாசியுங்கள். ‘வானத்துப் பறவைகளை நாம் கூர்ந்து கவனிக்க’ வேண்டும். பறவைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் பழங்கள், கொட்டைகள், பூச்சி, புழுக்கள் என எல்லாவற்றையும் அவை சாப்பிடும். ஒருவேளை பறவைகள் மனிதனை போல் உருவத்தில் பெரியதாக இருந்தால் மனிதன் சாப்பிடுவதைவிட அவை எக்கச்சக்கமாக சாப்பிடும். இருந்தாலும், அவை விதைப்பதும் இல்லை, பயிர் செய்வதும் இல்லை. அவற்றுக்கு தேவையான எல்லாவற்றையும் யெகோவா கொடுக்கிறார். (சங். 147:9) அதற்காக அவர் உணவை பறவைகளுடைய வாயில் வைப்பதில்லை. அவைதான் உணவைத் தேடிப்போய் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், அவை ஒருநாளும் சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருந்ததில்லை.

12 பறவைகளுடைய தேவைகளையே யெகோவா தேவன் நன்றாக கவனித்துக்கொள்கிறார் என்றால் மனிதர்களுடைய தேவைகளை இன்னும் எந்தளவு நன்றாக கவனித்துக்கொள்வார்! இந்த விஷயத்தில் இயேசுவுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. [1] (பின்குறிப்பு) (1 பே. 5:6, 7) இருந்தாலும், பறவைகளைப் போலவே நாமும் நம் அடிப்படை தேவைகளுக்காக உழைக்க வேண்டியிருக்கிறது. அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். ஒருவேளை, சாப்பாடு வாங்குவதற்கு நம்மிடம் போதுமான பணம் இல்லையென்றாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. மற்றவர்கள் மூலமாக யெகோவா நமக்கு உதவி செய்வார். பறவைகள் தங்குவதற்குக்கூட யெகோவா உதவி செய்கிறார். எப்படி? கூடு கட்டுவதற்கான அறிவையும், அதற்கு தேவையான பொருள்களையும் யெகோவா பறவைகளுக்கு கொடுத்திருக்கிறார். அதேபோல், நாமும் தங்குவதற்கு ஏற்ற ஒரு வீட்டை கண்டுபிடிக்க அவர் நிச்சயம் நமக்கு உதவி செய்வார்.

13. பறவைகளைவிட நாம் அதிக மதிப்புள்ளவர்கள் என்பதை எது காட்டுகிறது?

13 பறவைகளின் தேவைகளை யெகோவா எவ்வளவு நன்றாக கவனித்துக்கொள்கிறார் என்பதை சொல்லிவிட்டு, “அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா?” என்று சீடர்களிடம் இயேசு கேட்டார். (லூக்கா 12:6, 7-ஐ ஒப்பிடுங்கள்.) சீக்கிரத்தில் மனிதர்களுக்காக தன் உயிரை கொடுக்கப்போவதை மனதில் வைத்துதான் இயேசு அப்படி கேட்டிருப்பார். பறவைகளுக்காகவோ மற்ற உயிரினங்களுக்காகவோ இயேசு தன் உயிரை கொடுக்கவில்லை. நாம் முடிவில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தன் உயிரை தியாகம் செய்தார்.—மத். 20:28.

14. அளவுக்கு அதிகமாக கவலைப்படுவதால் என்ன நடக்கலாம்?

14 மத்தேயு 6:27-ஐ வாசியுங்கள். கவலைப்படுவதால் யாரும் தன் ஆயுளில் ஒரு நொடியைக் கூட்ட முடியாது என்று இயேசு ஏன் சொன்னார்? நம்முடைய அன்றாட தேவைகளைப் பற்றி அளவுக்கு அதிகமாக கவலைப்பட்டால் நம் வாழ்நாள் நீடிக்காது. சொல்லப்போனால், நம் ஆரோக்கியம்தான் பாதிக்கப்படும். அதனால், நாம் சீக்கிரமே இறந்து விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

15, 16. (அ) காட்டுப் பூக்களை யெகோவா கவனித்துக்கொள்வதில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆரம்பப் படம்) (ஆ) நம்மையே என்ன கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?

15 மத்தேயு 6:28-30-ஐ வாசியுங்கள். அழகாக உடை உடுத்த யாருக்குத்தான் பிடிக்காது! அதுவும் ஊழியத்துக்கும், கூட்டத்துக்கும், மாநாட்டுக்கும் நன்றாக உடை உடுத்த நாம் எல்லாருமே ஆசைப்படுவோம். ஆனால், நாம் ‘உடைக்காக கவலைப்பட’ வேண்டுமா? யெகோவா தன் படைப்பை கவனித்துக்கொள்ளும் விதத்தைப் பற்றி இயேசு திரும்பவும் நமக்கு ஞாபகப்படுத்துகிறார். இந்த முறை ‘காட்டுப் பூக்களை’ பற்றி சொல்கிறார். அவை நூல் நூற்பதும் இல்லை, நெசவு செய்வதும் இல்லை. ஆனால், அவை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கின்றன! ‘சகல மேன்மையும் பெற்றிருந்த சாலொமோன்கூட இவற்றில் ஒன்றைப் போலாவது உடுத்தியதில்லை’ என்று இயேசு சொன்னார்.

16 இதை சொன்ன பிறகு இயேசு, “விசுவாசமில்லாதவர்களே, . . . காட்டுப் புல்லுக்கே கடவுள் இப்படி உடுத்துவிக்கிறார் என்றால், உங்களுக்கு உடுத்துவிப்பது எவ்வளவு நிச்சயம்!” என்று சொன்னார். நிச்சயமாக யெகோவா தன்னுடைய மக்களை கவனித்துக்கொள்வார். அதை நம்ப சீடர்களுக்கு பலமான விசுவாசம் தேவைப்பட்டது. (மத். 8:26; 14:31; 16:8; 17:20) யெகோவா தங்களை கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆனால், நம்மைப் பற்றி என்ன? நமக்கும் அந்தளவு பலமான விசுவாசம் இருக்கிறதா? யெகோவா நம்மை கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறதா?

17. யெகோவாவோடு நமக்கிருக்கும் நட்பை இழக்க எது காரணமாக இருக்கலாம்?

17 மத்தேயு 6:31, 32-ஐ வாசியுங்கள். யெகோவாவைப் பற்றி தெரியாத ஜனங்கள்தான் பணம், பொருள் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஆனால், நாம் அப்படி இருந்தால் யெகோவாவோடு நமக்கு இருக்கும் அருமையான நட்பை நாம் இழந்துவிடுவோம். அதற்கு பதிலாக, கடவுளுடைய அரசாங்கத்துக்கு நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தால் நம்முடைய தேவைகளை யெகோவா தாராளமாக கவனித்துக்கொள்வார். நமக்கு தேவபக்தி இருந்தால் “உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே போதும் என்ற திருப்தியுடன்” நாம் வாழ்வோம்.—1 தீ. 6:6-8.

கடவுளுடைய அரசாங்கத்துக்கு நீங்கள் முதலிடம் கொடுக்கிறீர்களா?

18. நம்மைப் பற்றி யெகோவா என்ன தெரிந்துவைத்திருக்கிறார், நமக்காக அவர் என்ன செய்வார்?

18 மத்தேயு 6:33-ஐ வாசியுங்கள். கடவுளுடைய அரசாங்கத்துக்கு நாம் முதலிடம் கொடுத்தால் நம் தேவைகளை எல்லாம் யெகோவா கவனித்துக்கொள்வார். இதை நாம் ஏன் உறுதியாக நம்பலாம் என்பதற்கான காரணத்தை இயேசு இப்படி விளக்கினார். “இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார்” என்று சொன்னார். நமக்கு என்ன தேவை என்று நாம் யோசிப்பதற்கு முன்பே யெகோவாவுக்கு தெரியும். (பிலி. 4:19) நம்மிடம் இருக்கும் எந்த துணி பழையதாகி போகும், என்ன உணவு நமக்கு தேவைப்படும், தங்குவதற்கு எப்படிப்பட்ட இடம் வேண்டும் என்பதையெல்லாம் அவர் தெரிந்துவைத்திருக்கிறார். நமக்கு என்ன தேவையோ அதை யெகோவா நிச்சயம் கொடுப்பார்.

19. எதிர்காலத்தை நினைத்து நாம் ஏன் கவலைப்படக் கூடாது?

19 மத்தேயு 6:34-ஐ வாசியுங்கள். இயேசு மறுபடியும் தன் சீடர்களிடம், “ஒருபோதும் கவலைப்படாதீர்கள்” என்று சொன்னார். நம்முடைய அன்றாட தேவைகளை யெகோவா நிச்சயம் கவனித்துக்கொள்வார். அதனால் ‘நாளைக்கு என்ன நடக்கும்’ என்று நினைத்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அப்படி கவலைப்பட ஆரம்பித்தால் நாம் கடவுளை நம்பியிருப்பதற்கு பதிலாக சுயபுத்தியில் சார்ந்திருப்போம். இதனால், யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்தை இழந்துவிடுவோம். அப்படி நடக்காமல் இருக்க, நாம் எப்போதும் யெகோவாவையே முழுமையாக நம்பியிருக்க வேண்டும்.—நீதி. 3:5, 6; பிலி. 4:6, 7.

உங்களுடைய தேவைகளை எல்லாம் யெகோவா பார்த்துக்கொள்வார்

யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய உங்கள் வாழ்க்கையை எளிமையாக்க முடியுமா? (பாரா 20)

20. (அ) யெகோவாவின் சேவையில் நீங்கள் எப்படிப்பட்ட குறிக்கோள்களை வைக்கலாம்? (ஆ) உங்கள் வாழ்க்கையை எளிமையாக்க நீங்கள் என்ன செய்யலாம்?

20 பணம், பொருள் சம்பாதிப்பதற்கே நம் நேரம், சக்தியை எல்லாம் பயன்படுத்தினால் யெகோவாவுடைய சேவையில் நம்மால் அதிகத்தை செய்ய முடியாது. இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமாக இருக்கும்? யெகோவாவுக்கு உங்களிடம் இருக்கும் மிகச் சிறந்ததை கொடுப்பதற்கு இதுதான் சரியான நேரம்! ‘பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படுகிற சபைக்கு உங்களால் மாறிப்போக முடியுமா? உங்களால் பயனியர் செய்ய முடியுமா? நீங்கள் ஏற்கெனவே பயனியராக இருந்தால் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள முடியுமா? அதற்காக நீங்கள் விண்ணப்பித்திருக்கிறீர்களா? வாரத்தில் சில நாட்கள் பெத்தேலில் அல்லது மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் உங்களால் வேலை செய்ய முடியுமா? கட்டுமான வேலையில் வாலண்டியராக சேவை செய்ய முடியுமா?’ என்றெல்லாம் யோசித்து பாருங்கள். யெகோவாவுடைய சேவையில் அதிக நேரம் செலவு செய்ய நீங்கள் எப்படி எளிமையாக வாழலாம் என்றும் யோசித்துப் பாருங்கள். “ வாழ்க்கையை எப்படி எளிமையாக்கலாம்?” என்ற பெட்டியில் உள்ள ஆலோசனைகளைப் பாருங்கள். உங்களுக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அதற்கு தேவையான மாற்றங்களை செய்யுங்கள்.

21. யெகோவாவிடம் நெருங்கி இருக்க எது உங்களுக்கு உதவும்?

21 கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று இயேசு நமக்கு சொல்லிக்கொடுத்தார். நாம் அவர் சொன்னதை செய்யும்போது நம்முடைய தேவைகளை பற்றி அளவுக்கு அதிகமாக கவலைப்பட மாட்டோம். யெகோவா நம் தேவைகளை கவனித்துக்கொள்வார் என்பதில் முழு நம்பிக்கை வைப்போம். அதனால், யெகோவாவிடம் இன்னும் நெருங்கிப் போவோம். நம்மிடம் பணம் இருந்தாலும் ஆசைப்படுவதை எல்லாம் வாங்க வேண்டும் என்று நாம் நினைக்க மாட்டோம். இப்போதே நாம் எளிமையாக வாழ்ந்தால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும். அதோடு, அவர் வாக்குக் கொடுத்திருக்கும் ‘உண்மையான வாழ்வையும்’ பெற முடியும்.—1 தீ. 6:19.

^ [1] (பாரா 12) சிலசமயம் ஒரு கிறிஸ்தவருக்கு போதுமான உணவு கிடைக்காமல் போவதை யெகோவா ஏன் அனுமதிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள செப்டம்பர் 15, 2014 காவற்கோபுரத்தில் பக்கம் 22-ல் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையை பாருங்கள்.