Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்”

“பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்”

இரவு நேரத்தில் நீங்கள் தெருவில் தனியாக நடந்துபோவதாக கற்பனை செய்து பாருங்கள். யாரோ ஒருவர் உங்களை பின்தொடர்ந்து வருவது போல் தெரிகிறது. நீங்கள் நின்றால் அந்த நபரும் நிற்கிறார். நீங்கள் வேகமாக நடந்தால் அவரும் வேகமாக உங்களை பின்தொடருகிறார். பக்கத்தில் இருக்கும் உங்கள் நண்பரின் வீட்டுக்கு நீங்கள் வேகமாக ஓடுகிறீர்கள். நண்பரை பார்த்த பிறகுதான் உங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது. அவருடைய வீட்டுக்குள் போனதும் ரொம்ப பாதுகாப்பாக உணருகிறீர்கள்.

ஒருவேளை இதுபோன்ற அனுபவம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் வேறு ஏதாவது கவலைகள் உங்களுக்கு இருக்கலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ஏதாவது பலவீனத்தோடு போராடிக்கொண்டு இருக்கலாம், எவ்வளவு முயற்சி செய்தும் அதை கட்டுப்படுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். அல்லது ரொம்ப நாட்களாக வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கலாம், எவ்வளவு முயற்சி செய்தும் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகலாம். இல்லையென்றால் வயதாவதால் வரும் கஷ்டங்களை நினைத்து நீங்கள் கவலைப்படலாம், உடல்நலப் பிரச்சினைகளை யோசித்தும் வருத்தப்படலாம்.

நீங்கள் எதை நினைத்து கவலைப்பட்டாலும் சரி, அதை பற்றி மனம்விட்டு பேசவும் அதை சமாளிப்பதற்கு உதவி செய்யவும் உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கு அப்படிப்பட்ட நெருங்கிய நண்பர் இருக்கிறாரா? ஆம், யெகோவா இருக்கிறார். ஆபிரகாமுக்கு யெகோவா நண்பராக இருந்தார் என்று நாம் ஏசாயா 41:8-13-ல் வாசிக்கிறோம். அதேபோல் உங்களுக்கும் அவர் நண்பராக இருப்பார். 10 மற்றும் 13-வது வசனங்களில் யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் இப்படி உறுதியளிக்கிறார்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.”

“உன்னைத் தாங்குவேன்”

யெகோவா சொன்ன இந்த வார்த்தைகள் நம் மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! இந்த வசனத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் யெகோவாவின் கையை பிடித்துக்கொண்டு அவர் பக்கத்தில் நடப்பதை பற்றி இந்த வசனம் சொல்லவில்லை. ஏனென்றால், யெகோவா உங்களுடைய கையை பிடித்து நடந்தால் அவருடைய வலது கையால் உங்களுடைய இடது கையைத்தான் பிடிக்க முடியும். ஆனால், இந்த வசனத்தில் ‘அவருடைய நீதியின் வலது கையினால்’ ‘உங்களுடைய வலது கையைப் பிடிப்பதாக’ சொல்கிறார். ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருந்து உங்களை காப்பாற்றுவதற்காக உங்கள் கையை பிடித்து இழுப்பதுபோல் இது இருக்கிறது. யெகோவா உங்களுடைய வலது கையை பிடித்து, “பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்” என்று உங்களை பலப்படுத்துவதுபோல் இருக்கிறது.

யெகோவாவை உங்களுடைய அன்பான அப்பாவாகவும் நண்பராகவும் பார்க்கிறீர்களா? கஷ்டமான சமயங்களில் அவர் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார் என்று நம்புகிறீர்களா? இதில் சந்தேகமே வேண்டாம். யெகோவா உண்மையிலேயே உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார், உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார். பிரச்சினைகள் வரும்போது அவர் உங்கள் பக்கத்திலேயே இருப்பதை நீங்கள் உணர வேண்டும்... நீங்கள் பயப்படாமல் இருக்க வேண்டும்... என்று யெகோவா விரும்புகிறார். ஏனென்றால் அவர் உங்களை ரொம்ப நேசிக்கிறார். அதனால், நீங்கள் ‘கஷ்டப்படும்போது உங்களுக்கு உடனே கைகொடுக்கிறார்.’—சங். 46:1, NW.

குற்றவுணர்வால் தவிக்கும்போது...

கடந்த காலத்தில் செய்த தவறை நினைத்து சிலர் இன்னமும் வருத்தப்படுகிறார்கள். கடவுள் தங்களுடைய பாவங்களை மன்னித்துவிட்டாரா என்று யோசிக்கிறார்கள். நீங்களும் ஒருவேளை இப்படி நினைத்தால் உண்மையுள்ள யோபுவை பற்றி யோசித்துப் பாருங்கள். சிறு வயதில் யோபு தவறுகள் செய்ததாக சொன்னார். (யோபு 13:26) சங்கீதக்காரனான தாவீதும், “என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்” என்று யெகோவாவிடம் கெஞ்சினார். (சங். 25:7) தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால் நாம் ‘எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைப் பிரதிபலிக்கத் தவறுகிறோம்’ என்று பைபிள் சொல்கிறது.—ரோ. 3:23.

ஏசாயா 41-வது அதிகாரத்தில் இருக்கும் வார்த்தைகள் இஸ்ரவேலர்களுக்காக எழுதப்பட்டது. அவர்கள் படுமோசமான தவறுகளை செய்ததால் பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாக கொண்டுபோகப்படுவார்கள் என்று யெகோவா சொன்னார். (ஏசா. 39:6, 7) அதேசமயம் மனந்திரும்புகிறவர்களை விடுதலை செய்து மறுபடியும் எருசலேமுக்கு அழைத்துக்கொண்டு வருவதாக வாக்குக் கொடுத்தார். (ஏசா. 41:8, 9; 49:8) இன்றும், தவறு செய்தவர்கள் உண்மையிலேயே மனந்திரும்பி, யெகோவாவுக்கு பிடித்ததை செய்யும்போது அவர்கள்மீது அதே அன்பையும் இரக்கத்தையும் அவர் காட்டுகிறார்.—சங். 51:1.

டகுயா * என்ற சகோதரரின் அனுபவத்தை கவனியுங்கள். ஆபாசப் படங்களை பார்க்கிற பழக்கத்துக்கும் சுயஇன்ப பழக்கத்துக்கும் (masturbation) அவர் அடிமையாக இருந்தார். இந்த பழக்கத்தை விடுவதற்கு அவர் ரொம்ப முயற்சி செய்தார். ஆனால், அவரால் முடியவில்லை. அப்போது அவருக்கு எப்படி இருந்தது? அவர் சொல்கிறார், “நான் எதுக்குமே லாயக்கில்லாதவன் மாதிரி உணர்ந்தேன். ஆனா நான் எப்பெல்லாம் யெகோவாகிட்ட உதவிக்காக ஜெபம் செஞ்சேனோ அப்பெல்லாம் அவர் என்னை பாவ குழியில இருந்து தூக்கிவிட்டார்.” அதை யெகோவா எப்படி செய்தார்? டகுயாவின் சபையிலிருந்த மூப்பர்கள் மூலமாக உதவி செய்தார். அவர் இந்த பழக்கத்தை விடமுடியாமல் கஷ்டப்படும்போது எல்லாம் உடனே தங்களுக்கு ஃபோன் செய்யும்படி மூப்பர்கள் அவரிடம் சொன்னார்கள். “அவங்களுக்கு ஃபோன் பண்ணுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா நான் ஃபோன் பண்ண சமயத்தில எல்லாம் அவங்க என்னை ரொம்ப பலப்படுத்துனாங்க” என்கிறார் டகுயா. அதன்பின் அவரை சந்திக்க மூப்பர்கள் வட்டார கண்காணியை அழைத்துக்கொண்டு போனார்கள். அவர் டகுயாவிடம், “நான் ஏதோ உங்களை ஏதேச்சையா பார்க்க வந்தேனு நினைக்காதீங்க. உங்களை பார்க்க மூப்பர்கள்தான் ஏற்பாடு செஞ்சாங்க. உங்களுக்கு உதவி செய்யணும்னு அவங்க ஆசைப்பட்டாங்க” என்றார். டகுயா சொல்கிறார், “நான்தான் தப்பு பண்ணேன், ஆனா மூப்பர்கள் மூலமா யெகோவாதான் முதல்ல வந்து எனக்கு உதவி செஞ்சார்.” அதன்பின் டகுயா இந்த பழக்கத்தை முழுமையாக விட்டுவிட்டார். ஒழுங்கான பயனியராக ஆனார். இப்போது கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார். இந்த சகோதரருக்கு யெகோவா உதவி செய்தது போல் உங்களுக்கும் நிச்சயம் உதவி செய்வார்.

வேலையில்லாமல் கஷ்டப்படும்போது...

இன்று வேலையில்லாமல் நிறையப் பேர் திண்டாடுகிறார்கள். நிறைய கம்பெனிகள் ஏறி இறங்கியும் வேலை கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அதனால், நிறையப் பேர் அவர்களுடைய சுயமரியாதையை இழந்து விடுகிறார்கள். ஒருவேளை நீங்கள் இப்படி கஷ்டப்பட்டால் யெகோவா உங்களுக்கு எப்படி உதவி செய்வார்? நீங்கள் விரும்புகிற வேலையை உடனே உங்களுக்கு கொடுப்பார் என்று சொல்ல முடியாது. ஆனால், தாவீது சொன்ன வார்த்தைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்துவார். “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை” என்று தாவீது சொன்னார். (சங். 37:25) யெகோவாவுக்கு நீங்கள் ரொம்ப விசேஷமாக இருக்கிறீர்கள். யெகோவா தன்னுடைய ‘நீதியின் வலது கையால் உங்களை தாங்குவார்’; அவரை தொடர்ந்து சேவிக்க உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் தருவார்.

நீங்கள் வேலையை இழக்கும்போது யெகோவா உங்களுக்கு எப்படி உதவி செய்வார்?

கொலம்பியாவில் வாழும் சாரா என்ற சகோதரியின் அனுபவத்தை கவனியுங்கள். அவர் புகழ்பெற்ற ஒரு கம்பெனியில் வேலை செய்தார், கைநிறைய சம்பாதித்தார். ஆனால், யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய விரும்பியதால் அந்த வேலையை விட்டுவிட்டு பயனியர் செய்ய ஆரம்பித்தார். அவர் நினைத்த மாதிரி ஒரு பகுதிநேர வேலையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், ஒரு சின்ன ஐஸ்கிரீம் கடையை ஆரம்பித்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை மூடிவிட்டார். அவர் சொல்கிறார், “நான் கஷ்டப்பட்ட இந்த மூனு வருஷமும் யெகோவா என்கூட இருந்ததை நான் உணர்ந்தேன். அதனாலதான் இந்த சூழ்நிலைய என்னால சகிக்க முடிஞ்சது.” தனக்கு என்ன தேவை என்றும் அடுத்த நாளை பற்றி எப்படி கவலைப்படாமல் இருப்பது என்றும் சாரா கற்றுக்கொண்டார். (மத். 6:33, 34) கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவர் வேலை செய்த கம்பெனியின் முதலாளி மறுபடியும் அவரை அழைத்து அதே வேலையை கொடுத்தார். ஆனால் சாரா தனக்கு பகுதிநேர வேலையை தரும்படி கேட்டார். அதோடு, கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போவதற்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே அந்த வேலைக்கு வருவதாக சொன்னார். சாரா முன்பு போல் கைநிறைய சம்பாதிக்கவில்லை என்றாலும் அவரால் இப்போது பயனியர் செய்ய முடிகிறது. அந்த கஷ்டமான சமயங்களில் யெகோவா தனக்கு ஆதரவாக இருந்ததை புரிந்துகொண்டதாக சாரா சொல்கிறார்.

வயதாவதை நினைத்து கவலைப்படும்போது...

வயதாவதை நினைத்து நிறையப் பேர் கவலைப்படுகிறார்கள். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வசதியாக வாழ்வதற்கு போதுமான பணம் இருக்குமா என்று யோசிக்கிறார்கள். எதிர்காலத்தில் வரப்போகும் உடல்நலப் பிரச்சினைகளை பற்றியும் யோசிக்கிறார்கள். “முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்” என்று சங்கீதக்காரன் யெகோவாவிடம் கெஞ்சினார். ஒருவேளை தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கலாம்.—சங். 71:9, 18.

எதிர்காலத்தை நினைத்து கவலைப்படாமல் இருக்க வயதானவர்கள் என்ன செய்ய வேண்டும்? கடவுள்மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அதோடு, அவர்களுடைய அடிப்படை தேவைகளை யெகோவா நிச்சயம் கொடுப்பார் என்று முழுமையாக நம்ப வேண்டும். கைநிறைய சம்பாதித்தபோது அவர்கள் வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இப்போது, எளிமையாக வாழவும் இருப்பதை வைத்து திருப்தியாக இருக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம். அதுமட்டுமல்ல, ஆரோக்கியமாக இருப்பதற்கு இறைச்சியைவிட காய்கறிகளை சாப்பிடுவது நல்லது என்று அவர்கள் நினைக்கலாம். (நீதி. 15:17) நீங்கள் யெகோவாவை சேவிப்பதிலேயே கவனம் செலுத்தினால் வயதாகும்போது உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் யெகோவா நிச்சயம் கொடுப்பார்.

ஹோசே மற்றும் ரோஸ் தம்பதி, டோனி மற்றும் வெண்டி தம்பதி

ஹோசே மற்றும் ரோஸ் தம்பதியின் அனுபவத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்கள் 65 வருஷங்களாக யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்தார்கள். அந்த சமயத்தில் நிறைய கஷ்டங்களை சமாளித்தார்கள். உதாரணத்துக்கு, உடம்பு முடியாத ரோஸின் அப்பாவை இரவும் பகலும் அவர்கள் கவனித்துக்கொண்டார்கள். அதோடு, சகோதரர் ஹோசேவுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, கீமோதெரப்பியும் கொடுக்கப்பட்டது. இந்த கஷ்டமான சமயங்களில் யெகோவா எப்படி தன் வலது கையால் அவர்களை தாங்கினார்? டோனி மற்றும் வெண்டி என்ற தம்பதியின் மூலம் யெகோவா அவர்களுக்கு உதவி செய்தார். அந்த தம்பதிக்கு சொந்தமாக ஒரு வீடு இருந்தது. முழுநேர ஊழியர்கள் தங்குவதற்கு அந்த வீட்டை வாடகை இல்லாமல் இலவசமாக கொடுக்க அவர்கள் விரும்பினார்கள். டோனி பள்ளியில் படித்தபோது சகோதரர் ஹோசேயும் அவருடைய மனைவியும் தவறாமல் ஊழியத்துக்கு போவதை அவர் அடிக்கடி பார்த்திருக்கிறார். ஊழியத்தில் அவர்கள் காட்டிய ஆர்வத்தை பார்த்து அசந்துபோனார். தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கே அர்ப்பணித்த அந்த வயதான தம்பதிக்கு டோனியும் வெண்டியும் தங்கள் வீட்டை கொடுத்தார்கள். கடந்த 15 வருஷங்களாக அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். இப்போது ஹோசேவுக்கும் ரோஸுக்கும் சுமார் 85 வயதாகிறது. டோனியையும் வெண்டியையும் யெகோவா கொடுத்த பரிசாக அவர்கள் நினைக்கிறார்கள்.

“பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்” என்று யெகோவா உங்களுக்கும் உறுதியளிக்கிறார். தன்னுடைய “நீதியின் வலதுகரத்தினால்” உங்களையும் தாங்குவதாக சொல்கிறார். அப்படியென்றால், யெகோவாவின் வலது கையை பிடிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

^ பாரா. 11 சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.