Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் உடுத்தும் விதம் கடவுளை மகிமைப்படுத்துகிறதா?

நீங்கள் உடுத்தும் விதம் கடவுளை மகிமைப்படுத்துகிறதா?

“எல்லாக் காரியங்களையும் கடவுளுடைய மகிமைக்கென்றே செய்யுங்கள்.”—1 கொ. 10:31.

பாடல்கள்: 34, 61

1, 2. உடை உடுத்தும் விஷயத்தில், யெகோவாவின் சாட்சிகளுக்கு ஏன் உயர்ந்த தராதரங்கள் இருக்கின்றன? (ஆரம்பப் படம்)

சர்ச் தலைவர்களுடைய ஒரு கூட்டத்தில், அவர்கள் உடை உடுத்தியிருந்த விதத்தைப் பற்றி ஒரு டச் செய்தித்தாள் இப்படிச் சொன்னது: “நிறைய பேர் ஏனோதானோவென்று உடுத்தியிருந்தார்கள், அதுவும் வெயில் அதிகமாக இருந்ததால் அப்படி உடுத்தியிருந்தார்கள்.” அதே செய்தித்தாள், யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மாநாட்டில் இந்த மாதிரி உடுத்தவில்லை என்று சொன்னது. பையன்களும் ஆண்களும் கோட் போட்டு, டை கட்டியிருந்ததாகவும், பெண் பிள்ளைகளும் பெண்களும் போதுமான அளவுக்கு நீளமாக உடுத்தியிருந்ததாகவும், அதே சமயத்தில் அவை நவீனமாக இருந்ததாகவும் சொன்னது. உடை உடுத்தும் விஷயத்தில், யெகோவாவின் சாட்சிகள் எப்போதுமே பாராட்டைப் பெறுகிறார்கள். கடவுளின் ஊழியர்களுக்குப் பொருத்தமான ‘அடக்கத்தையும் தெளிந்த புத்தியையும்’ கிறிஸ்தவர்களின் உடை வெளிப்படுத்த வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 தீ. 2:9, 10) பவுல் பெண்களைப் பற்றி சொல்லியிருந்தாலும் இந்தத் தராதரம் கிறிஸ்தவ ஆண்களுக்கும் பொருந்துகிறது.

2 உடை உடுத்தும் விஷயத்தில், யெகோவாவின் மக்களாகிய நமக்கு உயர்ந்த தராதரங்கள் இருப்பது ரொம்ப முக்கியம்; நாம் வணங்கும் கடவுளுக்கும் அது ரொம்ப முக்கியம். (ஆதி 3:21) இந்த விஷயத்தில், பிரபஞ்சத்தின் பேரரசராகிய யெகோவா, தன்னுடைய மக்களுக்கு சில தராதரங்களை வைத்திருக்கிறார் என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. அதனால், நாம் உடுத்தும் உடை நமக்குப் பிடித்திருந்தால் மட்டும் போதாது, இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசராகிய யெகோவாவுக்கும் பிடித்திருக்க வேண்டும்.

3. இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டத்திலிருந்து, உடை உடுத்துவது பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

3 இஸ்ரவேலர்களைச் சுற்றியிருந்த தேசங்களில் இருந்த மக்கள் மிகவும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து இஸ்ரவேலர்களைப் பாதுகாப்பதற்காக, மோசேயின் திருச்சட்டத்தில் சட்டங்கள் இருந்தன. ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாத விதத்தில் உடை உடுத்துவதை யெகோவா வெறுத்தார் என்பதைத் திருச்சட்டம் காட்டியது. இன்றும், அப்படிப்பட்ட உடைகளை மக்கள் உடுத்துகிறார்கள். (உபாகமம் 22:5-ஐ வாசியுங்கள்.) ஆண்கள் பெண்களைப் போலவும் பெண்கள் ஆண்களைப் போலவும் உடை உடுத்துவதோ, ஆணா பெண்ணா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உடை உடுத்துவதோ யெகோவாவுக்குப் பிடிக்காது என்பதைத் திருச்சட்டத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

4. உடை உடுத்தும் விஷயத்தில் சரியான தீர்மானம் எடுக்க கிறிஸ்தவர்களுக்கு எது உதவும்?

4 உடை உடுத்துவது சம்பந்தமாகச் சரியான தீர்மானம் எடுப்பதற்கு பைபிளில் இருக்கும் நியமங்கள் நமக்கு உதவும். நம்முடைய நாடு, சீதோஷ்ணம், கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் சரி, இந்த நியமங்கள் நம் எல்லாருக்கும் பொருந்தும். எப்படிப்பட்ட உடையை உடுத்தலாம், உடுத்தக்கூடாது என்ற விலாவாரியான பட்டியல் நமக்குத் தேவையில்லை. உடை உடுத்துவது சம்பந்தமாக, பைபிளில் இருக்கும் நியமங்களை நாம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்யும்போது, நமக்குப் பிடித்த விதத்தில் நம்மால் உடுத்த முடியும். எதை உடுத்துவது என்று முடிவெடுக்கும்போது, “நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம்” எதுவென்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உதவும் சில பைபிள் நியமங்களை இப்போது பார்க்கலாம்.—ரோ. 12:1, 2.

“எங்களைக் கடவுளுடைய ஊழியர்கள் என்று சிபாரிசு செய்கிறோம்”

5, 6. நம்முடைய உடை மற்றவர்களை என்ன செய்ய தூண்ட வேண்டும்?

5 இரண்டு கொரிந்தியர் 6:4-ல் (வாசியுங்கள்) இருக்கிற முக்கியமான நியமத்தை வலியுறுத்திக் காட்டும்படி அப்போஸ்தலன் பவுல் தூண்டப்பட்டார். நம்முடைய தோற்றம் மற்றவர்களுக்கு நம்மைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்கிறது; நம்முடைய தோற்றத்தை வைத்து நிறைய பேர் நம்மைப் பற்றி ஓர் அபிப்பிராயத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். (1 சா. 16:7) நாம் கடவுளுடைய ஊழியர்களாக இருப்பதால், நமக்குப் பிடித்த உடையை அல்லது நமக்கு வசதியாக இருக்கிற உடையை உடுத்துவது மட்டுமே சரியாக இருக்காது. பைபிள் நியமங்களைப் பின்பற்றும்போது, இறுக்கமாக உடுத்துவதையோ, உடல் பாகங்கள் தெரியும்படி அல்லது காம உணர்ச்சிகளைத் தூண்டும்படி உடுத்துவதையோ நம்மால் தவிர்க்க முடியும். நம்முடைய அந்தரங்க பாகங்கள் தெரிகிற விதத்திலோ, மற்றவர்கள் தர்மசங்கடப்படும் விதத்திலோ, நம்மைத் தவறான எண்ணத்தோடு பார்க்கும் விதத்திலோ உடுத்தக்கூடாது.

6 நம்முடைய உடை நேர்த்தியாகவும், சுத்தமாகவும், அடக்கமாகவும் இருக்கும்போது, பேரரசராகிய யெகோவாவின் ஊழியர்களான நம்மை மக்கள் இன்னும் அதிகமாக மதிப்பார்கள். நாம் வணங்குகிற கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நம்முடைய அமைப்பின்மீது மரியாதையை வளர்த்துக்கொள்வார்கள், உயிர் காக்கும் நம்முடைய செய்தியைக் காதுகொடுத்துக் கேட்பார்கள்.

7, 8. முக்கியமாக எந்தச் சமயங்களில் நாம் பொருத்தமான உடை உடுத்த வேண்டும்?

7 நாம் உடுத்தும் விதம் நம்முடைய பரிசுத்த கடவுளையும், நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளையும், நாம் ஊழியம் செய்கிற இடத்தில் இருக்கும் ஆட்களையும் பாதிக்கிறது. நாம் உடுத்தும் விதம் யெகோவாவுக்கும் நாம் பிரசங்கிக்கிற செய்திக்கும் புகழ் சேர்க்க வேண்டும். (ரோ. 13:8-10) அதுவும், கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போகும்போது நாம் எப்படி உடுத்துகிறோம் என்பது ரொம்ப முக்கியம். கடவுளை வணங்குகிற மக்களுக்குத் தகுந்தபடி நாம் உடை உடுத்த வேண்டும். (1 தீ. 2:10) ஒரு பகுதியில் நாம் உடுத்தும் உடை இன்னொரு பகுதிக்குப் பொருத்தமாக இருக்காது. அதனால் நாம் எங்கே வாழ்ந்தாலும் சரி, யெகோவாவின் சாட்சிகளாகிய நாம், உள்ளூர் கலாச்சாரத்தை மனதில் வைத்து உடுத்த வேண்டும், அந்தக் கலாச்சாரத்தை அவமதிக்கும் விதத்தில் உடுத்தக்கூடாது.

நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் கடவுளுக்கு மற்றவர்கள் மரியாதை கொடுக்கும் விதத்தில் உங்கள் உடை இருக்கிறதா? (பாராக்கள் 7, 8)

8 ஒன்று கொரிந்தியர் 10:31-ஐ வாசியுங்கள். மாநாடுகளுக்குப் போகும்போது நம்முடைய உடை அடக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். பொதுவாக இன்று மக்கள் வரம்பு மீறி உடுத்துகிறார்கள், நாம் அவர்களைப் போல உடுத்தக்கூடாது. மாநாட்டுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஹோட்டலுக்குப் போகும்போதும் சரி, வெளியே வரும்போதும் சரி, நம்முடைய உடை ஏனோதானோவென்று இருக்கக்கூடாது. சரியான விதத்தில் உடுத்தினால், நாம் யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுவோம். அதோடு, சந்தர்ப்ப சாட்சி கொடுக்க எப்போதும் தயாராக இருப்போம்.

9, 10. உடை உடுத்தும் விஷயத்தில் பிலிப்பியர் 2:4-ஐ நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

9 பிலிப்பியர் 2:4-ஐ வாசியுங்கள். நாம் உடை உடுத்தும் விதம் நம் சகோதர சகோதரிகளை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பற்றி ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்? ஏனென்றால், “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, காமப்பசி . . . ஆகியவற்றைத் தூண்டுகிற உங்கள் உடலுறுப்புகளை மரத்துப்போகச் செய்யுங்கள்” என்ற பைபிள் ஆலோசனையைப் பின்பற்ற கடவுளுடைய மக்கள் கடினமாக முயற்சி செய்கிறார்கள். (கொலோ. 3:2, 5) சில சகோதர சகோதரிகள் தங்களுடைய பழைய ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை விட்டிருந்தாலும், தவறான ஆசைகளை எதிர்த்து இப்போதும் போராடிக்கொண்டிருக்கலாம். உடை உடுத்தும் விஷயத்தில் நாம் கவனமாக இல்லையென்றால், பைபிள் ஆலோசனைகளைப் பின்பற்றுவதும் தவறான ஆசைகளை எதிர்த்துப் போராடுவதும் அவர்களுக்கு இன்னும் கஷ்டமாகி விடலாம். (1 கொ. 6:9, 10) அவர்கள் அப்படிக் கஷ்டப்பட வேண்டும் என்று நாம் விரும்ப மாட்டோம், இல்லையா?

10 சகோதர சகோதரிகளோடு இருக்கும்போது, ஒழுக்கங்கெட்ட நடத்தையைத் தூண்டுகிற மக்களிடமிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம். சபை கூட்டத்தில் இருந்தாலும் சரி, மற்ற இடங்களில் இருந்தாலும் சரி, நாம் உடுத்தும் விதம் ஒழுக்கமான சூழலைக் காத்துக்கொள்ள உதவ வேண்டும். உடையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமக்கு இருப்பது உண்மைதான். இருந்தாலும், மற்றவர்கள் தங்களுடைய யோசனைகளையும், வார்த்தைகளையும், நடத்தையையும் கடவுளுடைய பார்வையில் சுத்தமாக வைத்துக்கொள்ளும் விதத்தில் உடுத்துவது நம் கடமை. (1 பே. 1:15, 16) உண்மையான அன்பு “கேவலமாக நடந்துகொள்ளாது, சொந்த விருப்பங்களை நாடாது.”—1 கொ. 13:4, 5.

சமயத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற உடை

11, 12. உடை உடுத்தும் விஷயத்தில் நாம் எப்படி நியாயமாக நடந்துகொள்ளலாம்?

11 எப்படிப்பட்ட உடையை உடுத்த வேண்டும் என்று கடவுளுடைய ஊழியர்கள் தீர்மானம் எடுக்கும்போது, ‘சகல எண்ணங்களுக்கும் சகல செய்கைகளுக்கும் ஒரு காலம் உண்டு’ என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். (பிர. 3:1, 17) வித்தியாசமான சீதோஷ்ண நிலை, பருவ காலங்கள், நாம் வாழ்கிற இடம், சூழ்நிலைமைகள் ஆகியவற்றுக்குத் தகுந்த மாதிரி நாம் உடுத்தலாம். எது எப்படியிருந்தாலும், யெகோவாவின் தராதரங்கள் எப்போதும் மாறாது.—மல். 3:6.

12 சீதோஷ்ண நிலை கொஞ்சம் சூடாக இருக்கும்போது, மரியாதையாகவும் அடக்கமாகவும் உடுத்துவது நமக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். உடம்பு தெரியும் விதத்தில் ரொம்ப இறுக்கமாகவோ தொளதொளவென்றோ உடை உடுத்தாமல் இருக்கும்போது நம் சகோதர சகோதரிகள் தர்மசங்கடமாக உணர மாட்டார்கள். (யோபு 31:1) கடற்கரையிலோ நீச்சல் குளத்திலோ இருக்கும்போது நம்முடைய நீச்சல் உடை அடக்கமாக இருக்க வேண்டும். (நீதி. 11:2, 20) உலகத்தில் இருக்கும் நிறைய பேர் உடம்பு தெரியும் விதத்தில் நீச்சல் உடை போடுகிறார்கள். ஆனால், நாம் தேர்ந்தெடுக்கும் உடை நம்முடைய பரிசுத்த கடவுளான யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும்.

13. ஒன்று கொரிந்தியர் 10:32, 33-ல் இருக்கிற ஆலோசனையின்படி நாம் ஏன் உடுத்த வேண்டும்?

13 நாம் எப்படிப்பட்ட உடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு இன்னொரு முக்கியமான பைபிள் நியமம் இருக்கிறது. மற்றவர்களுடைய மனசாட்சியைப் புண்படுத்தும் விதத்தில் உடுத்தாமல் இருக்க நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 10:32, 33-ஐ வாசியுங்கள்.) யெகோவாவை வணங்குகிறவர்களாக இருந்தாலும் சரி, வணங்காதவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய மனசாட்சியைப் புண்படுத்தும் விதத்தில் உடை உடுத்தாமல் இருப்பது நம் கடமை. “நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்களுக்கு நன்மை உண்டாகும்படி, அதாவது அவர்களைப் பலப்படுத்தும்படி, அவர்களுக்குப் பிரியமாக நடக்க வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்; ‘கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்கவில்லை’ என்று அதற்கான காரணத்தையும் எழுதினார். (ரோ. 15:2, 3) தன்னுடைய சொந்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட கடவுளுடைய விருப்பத்துக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும்தான் இயேசு முக்கியத்துவம் கொடுத்தார். நாமும் இயேசுவைப் போல் இருக்க வேண்டும். அதனால் நமக்குப் பிடித்த உடை, மற்றவர்கள் நம் செய்தியைக் கேட்பதற்குத் தடையாக இருந்தால், அந்த உடையை நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம்.

14. கடவுளுக்குப் புகழ் சேர்க்கிற விதத்தில் உடுத்த பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்கலாம்?

14 தங்களுடைய பிள்ளைகள் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க கிறிஸ்தவ பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், இது அவர்களுடைய கடமை. அவர்களும் பிள்ளைகளும் அடக்கமான உடை உடுத்துவதன் மூலம் கடவுளைச் சந்தோஷப்படுத்த வேண்டும். (நீதி. 22:6; 27:11) நம் பரிசுத்த கடவுளுக்கும் அவருடைய தராதரங்களுக்கும் பிள்ளைகள் மதிப்பு கொடுக்க வேண்டுமென்றால், பெற்றோர் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். அதற்கு, பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும். பொருத்தமான உடையை எங்கே, எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று அவர்களுக்கு அன்பாகச் சொல்லித்தர வேண்டும். தங்களுக்குப் பிடித்த உடையை மட்டுமே பிள்ளைகள் தேர்ந்தெடுக்கக்கூடாது; யெகோவாவின் பிரதிநிதிகளாக, அவருக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் உடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்கள் சுதந்திரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்

15. ஞானமான தீர்மானங்கள் எடுக்க எது நமக்கு உதவும்?

15 கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் ஞானமான தீர்மானங்கள் எடுக்க பைபிள் நடைமுறையான ஆலோசனைகளைத் தருகிறது. இருந்தாலும், உடை உடுத்தும் விஷயத்தில் நமக்கென்று சில விருப்பங்கள் இருக்கலாம். இந்த விஷயத்தில் நம் எல்லாருக்கும் வித்தியாசமான ரசனை இருக்கலாம். நம் வசதியைப் பொறுத்து உடைகளை வாங்கலாம். எப்படியிருந்தாலும் சரி, நம்முடைய உடை சுத்தமாக, அடக்கமாக, சூழ்நிலைக்கும் உள்ளூர் கலாச்சாரத்துக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

16. நன்றாக உடுத்துவதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் ஏன் வீண்போகாது?

16 அடக்கமான, பொருத்தமான உடையைக் கண்டுபிடிப்பது எப்போதுமே சுலபம் இல்லை. இன்று மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் உடைகள்தான் நிறைய கடைகளில் இருக்கின்றன. அதனால், மிகவும் இறுக்கமாக இல்லாத, அடக்கமான உடைகளைத் தேடிக் கண்டுபிடிக்க நமக்கு நிறைய நேரமும் முயற்சியும் தேவைப்படலாம். அப்படி அழகான, பொருத்தமான உடைகளை நாம் தேடிக் கண்டுபிடித்து உடுத்துவதைப் பார்க்கும்போது நம் சகோதர சகோதரிகள் சந்தோஷப்படுவார்கள். உடை உடுத்தும் விஷயத்தில், கடவுளுக்கு மகிமை சேர்ப்பதற்காக நாம் நிறைய தியாகங்கள் செய்திருக்கலாம். அப்படிக் கடவுளுக்கு மகிமை சேர்ப்பதால் வரும் திருப்தியோடு ஒப்பிடும்போது அந்தத் தியாகங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை.

17. ஒரு சகோதரர் தாடி வைக்கலாமா வேண்டாமா என்பது எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?

17 சகோதரர்கள் தாடி வைத்துக்கொள்வது பொருத்தமானதா? மோசேயின் திருச்சட்டத்தின்படி ஆண்கள் தாடி வைக்க வேண்டியிருந்தது. ஆனால், மோசேயின் திருச்சட்டத்தைக் கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. (லேவி. 19:27; 21:5; கலா. 3:24, 25) சில கலாச்சாரங்களில், நேர்த்தியாக வெட்டப்பட்ட தாடி மரியாதைக்குரியதாக இருக்கலாம், அந்தக் கலாச்சாரத்தில் அது ஏற்றுக்கொள்ளப்படலாம், நாம் சொல்லும் செய்தியைக் கேட்பதற்கு அது தடையாக இல்லாமல் இருக்கலாம். சொல்லப்போனால், நியமிக்கப்பட்ட சில சகோதரர்கள் தாடி வைத்திருக்கிறார்கள். வேறு சிலரோ, தாடி வைக்காமல் இருப்பதற்கு முடிவு செய்யலாம். (1 கொ. 8:9, 13; 10:32) ஆனால் மற்ற கலாச்சாரங்களில் அல்லது இடங்களில், தாடி வைக்கும் பழக்கம் இருக்காது. அப்படிப்பட்ட கலாச்சாரங்களில், யெகோவாவின் சாட்சிகள் தாடி வைத்துக்கொண்டால், அது சரியாக இருக்காது. ஒருவேளை ஒரு சகோதரர் அப்படித் தாடி வைத்துக்கொண்டால், அது கடவுளுக்கு மகிமை சேர்க்காது. அதோடு, அவர் ‘குற்றம்சாட்டப்படாதவராகவும்’ இருக்க முடியாது.—1 தீ. 3:2, 7; ரோ. 15:1-3.

18, 19. மீகா 6:8 நமக்கு எப்படி உதவும்?

18 எதை உடுத்த வேண்டும், உடுத்தக்கூடாது என்று யெகோவா நமக்கு விலாவாரியான பட்டியலைக் கொடுப்பதில்லை. அதற்காக நாம் அவருக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். பைபிள் நியமங்களின் அடிப்படையில் நியாயமான தீர்மானங்கள் எடுப்பதற்கு அவர் நமக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அதனால், உடை உடுத்தும் விஷயத்தில் தீர்மானம் எடுக்கும்போதுகூட, நம் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாக [அடக்கமாக, NW] இருக்க விரும்புகிறோம் என்பதைக் காட்டலாம்.—மீ. 6:8.

19 யெகோவா தூய்மையானவர் என்றும், பரிசுத்தமானவர் என்றும், அவருடைய தராதரங்கள் மட்டும்தான் நம்மைச் சரியாக வழிநடத்த முடியும் என்றும் நாம் அடக்கத்தோடு ஒத்துக்கொள்கிறோம். நாம் அடக்கமாகவும் மனத்தாழ்மையாகவும் இருக்க வேண்டுமென்றால், அவருடைய தராதரங்களைப் பின்பற்ற வேண்டும். அதுமட்டுமல்ல, அடக்கமாக இருக்கும்போது மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கும் கருத்துகளுக்கும் மரியாதை கொடுக்க முடியும்.

20. நாம் உடுத்தும் விதத்தைப் பார்த்து மற்றவர்கள் என்ன செய்ய தூண்டப்பட வேண்டும்?

20 நாம் யெகோவாவுடைய ஊழியர்கள் என்பதை நம்முடைய உடை காட்ட வேண்டும். யெகோவாவுக்கு உயர்ந்த தராதரங்கள் இருக்கின்றன, அவற்றை நாம் சந்தோஷமாகப் பின்பற்ற விரும்புகிறோம். நன்றாகத் தோற்றமளிப்பதற்காகவும் நல்ல நடத்தையோடு இருப்பதற்காகவும் பொதுவாக நம் சகோதர சகோதரிகளைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால், பைபிளில் இருக்கும் உயிர் காக்கும் செய்தியை நேர்மையான மக்கள் காதுகொடுத்துக் கேட்பதற்கு அது உதவியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, யெகோவாவை மகிமைப்படுத்துவதோடு அவருடைய இதயத்தையும் அது சந்தோஷப்படுத்துகிறது. என்ன மாதிரியான உடையை உடுத்தலாம் என்று ஞானமாகத் தீர்மானிக்கும்போது, “மகிமையையும் மகத்துவத்தையும்” அணிந்துகொண்டிருக்கும் கடவுளுக்கு நாம் தொடர்ந்து மகிமை சேர்ப்போம்.—சங். 104:1, 2.