Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கனிவான ஒரு வார்த்தை!

கனிவான ஒரு வார்த்தை!

“பெண்ணே!” சிலசமயங்களில், பெண்களை இயேசு இப்படித்தான் கூப்பிட்டார். உதாரணத்துக்கு, 18 வருடங்களாகக் கொஞ்சமும் நிமிர முடியாதளவுக்குக் கூன் விழுந்திருந்த ஒரு பெண்ணைக் குணப்படுத்தியபோது, “பெண்ணே, நீ உன் பலவீனத்திலிருந்து விடுபட்டுவிட்டாய்” என்று இயேசு சொன்னார். (லூக். 13:10-13) பெண்களை இப்படிக் கூப்பிடுவது அந்தக் காலத்தில் வழக்கமாக இருந்தது. தன்னுடைய அம்மாவிடம் பேசும்போதும் இயேசு இதே வார்த்தையைத்தான் பயன்படுத்தினார். பைபிள் காலங்களில், இந்த வார்த்தை கனிவான வார்த்தையாகக் கருதப்பட்டது. (யோவா. 19:26; 20:13) ஆனால், இந்த வார்த்தையைவிட இன்னொரு கனிவான வார்த்தையும் இருந்தது.

அது அன்பான, மென்மையான வார்த்தை! சில பெண்களைப் பற்றி பேசும்போது, அந்த வார்த்தையைப் பைபிள் பயன்படுத்துகிறது. 12 வருடங்களாக இரத்தப்போக்கினால் கஷ்டப்பட்ட ஒரு பெண்ணிடம் பேசியபோது, அந்த வார்த்தையைத்தான் இயேசு பயன்படுத்தினார். அந்தப் பெண்ணின் நிலைமையில் இருப்பவர்கள் தீட்டானவர்கள் என்று கடவுளுடைய சட்டம் சொல்லியிருந்ததால், அவள் இயேசுவை அணுகிய விதம் கடவுளுடைய சட்டத்தோடு ஒத்திருக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு பெண் மற்றவர்களிடமிருந்து தள்ளியிருந்திருக்க வேண்டும் என்று சிலர் விவாதம் செய்யலாம். (லேவி. 15:19-27) ஆனால் அவளைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அநேக மருத்துவர்கள் அளித்த சிகிச்சைகளால் அவள் மிகுந்த வேதனை அடைந்திருந்தாள், தன்னிடம் இருந்ததையெல்லாம் செலவழித்திருந்தாள்; ஆனால், ஒரு பிரயோஜனமும் இருக்கவில்லை; நிலைமை இன்னும் மோசமாகவே ஆகியிருந்தது.” அதனால், அவள் ரொம்ப வேதனையாக இருந்தாள்.—மாற். 5:25, 26.

அந்தப் பெண், கூட்டத்தின் பின்பக்கத்திலிருந்து இயேசுவை நோக்கி போனாள், பிறகு, அவருடைய மேலங்கியின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது! யாருக்கும் தெரியாமல் போய்விடலாம் என்று அவள் நினைத்தபோது, “யார் என்னைத் தொட்டது?” என்று இயேசு கேட்டார். (லூக். 8:45-47) அப்போது, அந்தப் பெண் பயத்தோடும் நடுக்கத்தோடும் அவர்முன் வந்து மண்டியிட்டு, “எல்லா உண்மையையும் சொன்னாள்.”—மாற். 5:33.

அந்தப் பெண்ணின் பயத்தைப் போக்குவதற்காக, “மகளே, தைரியமாயிரு” என்று இயேசு அன்பாகச் சொன்னார். (மத். 9:22) “மகள்” என்பதற்கான எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள், “அன்பையும் மென்மையையும்” குறிப்பதற்கு உருவகமாகப் பயன்படுத்தப்படலாம் என்று பைபிள் அறிஞர்கள் சொல்கிறார்கள். “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. சமாதானமாகப் போ. உன்னைப் பாடுபடுத்திய நோயிலிருந்து விடுபட்டு நலமாயிரு” என்று சொல்லி இயேசு அவளுக்கு நம்பிக்கை அளித்தார்.—மாற். 5:34.

பணக்காரராக இருந்த போவாசும் (இவர் இஸ்ரவேலைச் சேர்ந்தவர்) மோவாபியப் பெண்ணான ரூத்தை “மகளே” என்றுதான் கூப்பிட்டார். தனக்குத் தெரியாத ஒருவருடைய வயலில் பார்லி கதிர்களைப் பொறுக்குவதை நினைத்து ரூத்துக்குத் தயக்கமாக இருந்திருக்கலாம். அப்போது, “மகளே, கேள்” என்று போவாஸ் சொன்னார். பிறகு, தன்னுடைய வயலில் அவள் கதிர்களைப் பொறுக்கிக்கொள்ளலாம் என்று சொன்னார். அப்போது அவள் போவாஸ் முன்னால் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து, ‘வேறு தேசத்துப் பெண்ணான என்மீது ஏன் இவ்வளவு அக்கறையும் கருணையும் காட்டுகிறீர்கள்?’ என்று கேட்டாள். அதற்கு அவர், “நீ உன் மாமியாருக்காக [நகோமிக்காக] செய்தது . . . எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது. உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக” என்று சொல்லி அவளுக்கு நம்பிக்கை அளித்தார்.—ரூத் 2:8-12.

கிறிஸ்தவ மூப்பர்களுக்கு இயேசுவும் போவாசும் நல்ல முன்மாதிரிகள்! சில சமயங்களில், ஒரு சகோதரிக்கு பைபிளின் அடிப்படையில் உதவி செய்யவும் அவரை உற்சாகப்படுத்தவும் இரண்டு மூப்பர்கள் அவரைப் போய் பார்க்கலாம். அந்தச் சமயத்தில், யெகோவாவுடைய வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்துவிட்டு, அந்தச் சகோதரி சொல்லும் விஷயத்தைக் கவனமாகக் கேட்கலாம். அப்படிச் செய்யும்போது, அந்தச் சகோதரிக்கு பைபிளிலிருந்து நம்பிக்கையையும் ஆறுதலையும் அவர்களால் தர முடியும்.—ரோ. 15:4.