Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்கள் பொய் மதத்திலிருந்து விலகினார்கள்!

அவர்கள் பொய் மதத்திலிருந்து விலகினார்கள்!

“என் மக்களே . . . அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”—வெளி. 18:4.

பாடல்கள்: 101, 93

1. (அ) கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடைவார்கள் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) என்ன கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்?

உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் மகா பாபிலோனின் கட்டுப்பாட்டுக்குள் போனதாக முந்தின கட்டுரையில் பார்த்தோம். ஆனால், அவர்கள் என்றுமே அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! ஆனால், அது நமக்கு எப்படித் தெரியும்? பொய்மத உலக பேரரசான மகா பாபிலோனைவிட்டு ‘வெளியே வரும்படி’ கடவுள் தன்னுடைய மக்களுக்குக் கட்டளை கொடுக்கிறார். (வெளிப்படுத்துதல் 18:4-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்தவர்கள் மகா பாபிலோனிலிருந்து விடுதலை அடைவார்கள் என்பதை இது காட்டுகிறது. அவர்கள் எப்போது விடுதலை அடைந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், அதற்கு முன்பு, சில கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம். 1914-க்கு முன்பிருந்தே பைபிள் மாணாக்கர்கள் மகா பாபிலோனின் விஷயத்தில் என்ன செய்ய தீர்மானமாக இருந்தார்கள்? முதல் உலகப் போர் சமயத்தில் சகோதரர்கள் எந்தளவு வைராக்கியமாக ஊழியம் செய்தார்கள்? கடவுளுடைய மக்களுக்குத் திருத்தம் தேவைப்பட்டது என்பதற்காக அவர்கள் பாபிலோனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா?

“பாபிலோனின் வீழ்ச்சி”

2. அன்றிருந்த பைபிள் மாணாக்கர்கள் முதல் உலகப் போருக்கு முன்பிருந்தே என்ன செய்ய தீர்மானமாக இருந்தார்கள்?

2 கிறிஸ்தவமண்டலம் பைபிளிலுள்ள உண்மையைப் போதிப்பது இல்லை என்பதை முதல் உலகப் போருக்கு (1914-1918) பல வருடங்களுக்கு முன்பிருந்தே சார்ல்ஸ் டேஸ் ரஸலும் மற்ற பைபிள் மாணாக்கர்களும் உணர்ந்திருந்தார்கள். அதனால், பொய் மதத்தோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள். 1879-லேயே சீயோனின் காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: ‘அரசாங்கங்களை ஆதரிக்கும் ஒவ்வொரு சர்ச்சும் தன்னைக் கிறிஸ்துவின் உண்மையுள்ள மணமகள் என்று சொல்லிக்கொண்டாலும், அவை உண்மையிலேயே மகா பாபிலோனின் ஒரு பாகமாக இருக்கிறது. பைபிள் இந்த மகா பாபிலோனை விலைமகள் என்று அழைக்கிறது.’வெளிப்படுத்துதல் 17:1, 2-ஐ வாசியுங்கள்.

3. தாங்கள் இனிமேலும் பொய் மதத்தின் பாகமல்ல என்பதை பைபிள் மாணாக்கர்கள் எப்படிக் காட்டினார்கள்? (ஆரம்பப் படம்)

3 பொய் மதத்தைத் தொடர்ந்து ஆதரித்துக்கொண்டிருந்தால் தங்களுக்குக் கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்காது என்று கடவுள் பயமுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரிந்திருந்தது. அதனால், தாங்கள் இனிமேலும் சர்ச்சின் அங்கத்தினர்களாக இருக்க விரும்பவில்லை என்று சர்ச்சுக்கு நிறைய பேர் கடிதம் எழுதினார்கள். சிலர், தாங்கள் எழுதிய கடிதங்களை முழு சர்ச்சுக்கும் சத்தமாக வாசித்துக் காட்டினார்கள். அவர்களால் அப்படிச் செய்ய முடியாதபோது, சர்ச்சில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் கடிதம் எழுதினார்கள். அதன் மூலம், பொய் மதத்தோடு தாங்கள் எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதை பைபிள் மாணாக்கர்கள் தெளிவாகக் காட்டினார்கள்! இதைப் பல வருடங்களுக்கு முன்பு செய்திருந்தால், அவர்களுடைய உயிரே போயிருக்கும்! 1800-களின் கடைசியில், நிறைய நாடுகளில், சர்ச்சுகள் அரசாங்கங்களின் ஆதரவை இழக்க ஆரம்பித்திருந்தது. அதனால், பைபிளைப் பற்றி மக்களால் சுதந்திரமாகப் பேச முடிந்தது. ஏன், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தங்களுக்கு இருந்த கருத்து வேறுபாட்டைக்கூட சர்ச் முன்னால் வெளிப்படையாகச் சொல்ல முடிந்தது.

4. முதல் உலகப் போர் சமயத்தில், பைபிள் மாணாக்கர்கள் மகா பாபிலோனை எப்படிக் கருதினார்கள்? விளக்குங்கள்.

4 தாங்கள் பொய் மதத்தை ஆதரிப்பதில்லை என்ற விஷயத்தைக் குடும்பத்தாருக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும், சர்ச் அங்கத்தினர்களுக்கும் மட்டுமே சொன்னால் போதாது என்பதை பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொண்டார்கள். மகா பாபிலோன், மதத்தின் விலைமகள் என்பதை முழு உலகமும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். அதனால், சில ஆயிரக்கணக்கான பைபிள் மாணாக்கர்கள் டிசம்பர் 1917-லிலிருந்து 1918-ன் ஆரம்பம்வரை, ஒரு துண்டுப்பிரதியின் 1,00,00,000 பிரதிகளை வைராக்கியமாகக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அந்தத் துண்டுப்பிரதியில், “பாபிலோனின் வீழ்ச்சி” (ஆங்கிலம்) என்ற கட்டுரை இருந்தது. கிறிஸ்தவமண்டலத்தைப் பற்றிய உண்மைகளை அந்தத் துண்டுப்பிரதி வெளிச்சம்போட்டுக் காட்டியது. அதைப் பார்த்த சர்ச் தலைவர்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! இருந்தாலும், பைபிள் மாணாக்கர்கள் தங்கள் வேலையை நிறுத்தவில்லை. தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும் என்றும் ‘மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டும்’ என்றும் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள். (அப். 5:29) இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? முதல் உலகப் போர் சமயத்தில், இந்தக் கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் பாபிலோனின் கட்டுப்பாட்டுக்குள் போகவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் பொய் மதத்திலிருந்து விலகிக்கொண்டிருந்தார்கள்; அதோடு, மற்றவர்கள் விலகுவதற்கும் உதவி செய்துகொண்டிருந்தார்கள்.

முதல் உலகப் போர் சமயத்தில் அவர்கள் செய்த வைராக்கியமான ஊழியம்

5. முதல் உலகப் போர் சமயத்தில் சகோதரர்கள் வைராக்கியமாக ஊழியம் செய்தார்கள் என்று ஏன் சொல்கிறோம்?

5 முதல் உலகப் போர் சமயத்தில் கடவுளுடைய மக்கள் வைராக்கியமாக ஊழியம் செய்யாததால், கடவுளுடைய தயவை இழந்துவிட்டார்கள் என்று பல வருடங்களுக்கு முன்பு நாம் நம்பினோம். அதனால், மகா பாபிலோன் அவர்களைக் கொஞ்ச காலம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க யெகோவா அனுமதி கொடுத்திருந்தார் என்றும் நம்பினோம். ஆனால், 1914-க்கும் 1918-க்கும் இடைப்பட்ட காலத்தில் கடவுளுக்குச் சேவை செய்த உண்மையுள்ள சகோதர சகோதரிகள் ஒரு விஷயத்தை பிற்பாடு சொன்னார்கள். அதாவது, அந்தச் சமயத்தில், ஊழியம் தொடர்ந்து நடைபெற ஒரு தொகுதியாகத் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ததாகச் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் பைபிள் மாணாக்கர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால், பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சில சம்பவங்களை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

6, 7. (அ) முதல் உலகப் போர் சமயத்தில் பைபிள் மாணாக்கர்களுக்கு என்ன சவால்கள் இருந்தன? (ஆ) பைபிள் மாணாக்கர்கள் வைராக்கியமாக இருந்தார்கள் என்பதை எது காட்டுகிறது?

6 சொல்லப்போனால், முதல் உலகப் போர் சமயத்தில் பைபிள் மாணாக்கர்கள் சுறுசுறுப்பாகப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும், அவர்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன. பைபிளைப் பயன்படுத்தி ஊழியம் செய்ய தெரியாததுதான் அவர்களுக்கு இருந்த முதல் சவால். ஏனென்றால், புத்தகங்களையும் மற்ற பைபிள் பிரசுரங்களையும் வைத்துதான் அவர்கள் பைபிள் உண்மைகளை விளக்கி வந்தார்கள். அதனால் 1918-ன் ஆரம்பத்தில், நிறைவேறித்தீர்ந்த ரகசியம் (The Finished Mystery) என்ற புத்தகத்தை (ஆங்கிலம்) அரசாங்கம் தடை செய்தபோது, ஊழியம் செய்வது நிறைய சகோதரர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. அதே வருடத்தில் ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற காய்ச்சல் பரவ ஆரம்பித்ததுதான் அவர்களுக்கு இருந்த இரண்டாவது சவால். இந்தக் காய்ச்சல் மற்றவர்களுக்குச் சுலபமாகத் தொற்றிக்கொள்ளக்கூடியதாக இருந்ததால், மற்ற இடங்களுக்குப் போய் ஊழியம் செய்வது சகோதரர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. இந்தச் சவால்கள் மத்தியிலும், தொடர்ந்து ஊழியம் செய்ய பைபிள் மாணாக்கர்கள் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள்.

அந்த பைபிள் மாணாக்கர்கள் வைராக்கியமுள்ளவர்களாக இருந்தார்கள்!(பாராக்கள் 6, 7)

7 ஒரு சிறு தொகுதியாக இருந்த பைபிள் மாணாக்கர்கள், 1914-ல் “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷனை” மக்களுக்குப் போட்டுக்காட்டினார்கள். ஒலியும் ஒளியும் கலந்த கலர் ஸ்லைடுகளையும் படங்களையும் வைத்து அதைப் போட்டுக்காட்டினார்கள். அந்தச் சமயத்தில் அது ஒரு புதிய விஷயமாக இருந்தது! ஆதாமின் படைப்பு முதல் கிறிஸ்துவுடைய ஆட்சியின் முடிவுவரை இருக்கிற விஷயங்கள் அதில் காட்டப்பட்டன. “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” போட்டுக்காட்டப்பட்ட முதல் வருடத்தில், அதாவது 1914-ல், அதை 90,00,000-க்கும் அதிகமான மக்கள் பார்த்தார்கள். இன்று உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கையைவிட அது அதிகம்! 1916-ல், அமெரிக்காவில் 8,09,000-க்கும் அதிகமான மக்கள், பொது கூட்டங்களில் கலந்துகொண்டதாக மற்ற அறிக்கைகள் காட்டுகின்றன. பிறகு, 1918-ல் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 9,50,000-ஆக உயர்ந்தது. அந்த பைபிள் மாணாக்கர்கள் எவ்வளவு வைராக்கியமாக இருந்திருக்கிறார்கள்!

8. முதல் உலகப் போர் சமயத்தில், முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் பைபிள் மாணாக்கர்களை எப்படி உற்சாகப்படுத்தினார்கள்?

8 முதல் உலகப் போர் சமயத்தில், பைபிள் மாணாக்கர்களுக்குப் பிரசுரங்களைக் கொடுப்பதற்கும், அவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் கடினமாக உழைத்தார்கள். பைபிள் மாணாக்கர்களை அப்படி அன்பாக உற்சாகப்படுத்தியதால், தொடர்ந்து ஊழியம் செய்வதற்குத் தேவையான சக்தி அவர்களுக்குக் கிடைத்தது. அந்தச் சமயத்தில், வைராக்கியமாக ஊழியம் செய்த ரிச்சர்ட் எச். பார்பர் இப்படிச் சொன்னார்: “சில பயணக் கண்காணிகளை வைச்சு எல்லாருக்கும் காவற்கோபுரத்தை கொடுக்க முடிஞ்சது. அந்த சமயத்துல, அதை கனடாவுல தடை செஞ்சிருந்தாங்க; அங்கயும் அதை எங்களால வெற்றிகரமா அனுப்ப முடிஞ்சது. நிறைவேறித்தீர்ந்த ரகசியம் புத்தகத்த என்னோட நண்பர்கள்கிட்ட இருந்து பறிமுதல் செஞ்சிருந்தாங்க. அதனால, அந்த புத்தகத்தோட பாக்கெட் சைஸ் பிரதிய அவங்களுக்கு அனுப்புற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. வட அமெரிக்காவுல இருக்கிற நகரங்கள்ல மாநாடுகளை நடத்த சொல்லியும் எத்தனை பேர உற்சாகப்படுத்த முடியுமோ அத்தனை பேர உற்சாகப்படுத்த சொல்லியும் சகோதரர் ரதர்ஃபர்ட் சொல்லியிருந்தார்.”

சில திருத்தங்கள் தேவைப்பட்டன

9. (அ) 1914-க்கும் 1919-க்கும் இடைப்பட்ட காலத்தில் கடவுளுடைய மக்களுக்கு ஏன் சில திருத்தங்கள் தேவைப்பட்டன? (ஆ) அவர்களுக்குத் திருத்தங்கள் தேவைப்பட்டன என்பதற்காக நாம் என்ன நினைத்துவிடக் கூடாது?

9 பைபிள் மாணாக்கர்கள் திருத்திக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருந்தன. அரசாங்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று யெகோவா சொல்லியிருந்ததன் அர்த்தம் அவர்களுக்கு முழுமையாகப் புரியவில்லை. (ரோ. 13:1) அதனால்தான், போர் நடந்த சமயத்தில் ஒரு தொகுதியாக அவர்களால் நடுநிலைமையோடு இருக்க முடியவில்லை. உதாரணத்துக்கு ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். மே 30, 1918 அன்று மக்கள் எல்லாரும் சமாதானத்துக்காக ஜெபம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி சொல்லியிருந்தார். அப்போது, பைபிள் மாணாக்கர்களையும் அப்படி ஜெபம் செய்யும்படி காவற்கோபுரம் உற்சாகப்படுத்தியது. சில சகோதரர்கள் போருக்குப் பணம் கொடுத்தும் உதவினார்கள். அதில் சிலர், போர் வீரர்களாக ஆனதோடு, போருக்கும் போனார்கள். பைபிள் மாணாக்கர்கள் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது உண்மைதான். அதற்காக அவர்கள் மகா பாபிலோனின் கட்டுப்பாட்டுக்குள் போனார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. முதல் உலகப் போர் சமயத்தில், அவர்கள் பொய் மத உலகப் பேரரசிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாக விலகியிருந்தார்கள் என்பதுதான் உண்மை!லூக்கா 12:47, 48-ஐ வாசியுங்கள்.

10. உயிருக்கு பைபிள் மாணாக்கர்கள் எப்படி மரியாதை காட்டினார்கள்?

10 கிறிஸ்தவ நடுநிலைமையைப் பற்றி இன்று நாம் புரிந்துவைத்திருக்கும் அளவுக்கு அன்றிருந்த பைபிள் மாணாக்கர்கள் புரிந்து வைத்திருக்கவில்லை. ஆனால், மற்றவர்களைக் கொலை செய்வது தவறு என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், முதல் உலகப் போரில் கலந்துகொண்ட சில சகோதரர்கள், போர்க் கருவிகளை வைத்திருந்தாலும் மற்றவர்களைக் கொல்வதற்கு அதைப் பயன்படுத்தவில்லை. அப்படிக் கொலை செய்ய மறுத்த சிலர் சாகடிக்கப்பட வேண்டும் என்பதற்காக போர் முனையில் நிறுத்தப்பட்டார்கள்.

11. பைபிள் மாணாக்கர்கள் போரில் சண்டைபோட மறுத்ததால் அரசாங்கங்கள் என்ன செய்தன?

11 கடவுளுக்கு உண்மையாக இருந்த சகோதரர்களைப் பார்த்து சாத்தானுக்குப் பயங்கர கோபம் வந்தது. அதனால், அவன் ‘சட்டத்தின் பெயரில் பிரச்சினையை’ உண்டாக்கினான். (சங். 94:20, NW) போரில் சண்டைபோட மறுப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைப் போட அரசாங்கம் முயற்சி செய்ததாக, சகோதரர்கள் ரதர்ஃபர்ட் மற்றும் வான் ஆம்பர்க்கிடம் அமெரிக்க ராணுவத்தின் தளபதியான ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் பெல் சொன்னார். பைபிள் மாணாக்கர்களை மனதில் வைத்துதான் அவர் அப்படிச் சொன்னார். அவர் கோபமாகச் சகோதரர் ரதர்ஃபர்டிடம் இப்படிச் சொன்னார்: “வில்சன் [அமெரிக்க ஜனாதிபதி] தடுத்து நிறுத்துனதுனால அந்த சட்டத்தை அமல்படுத்த முடியல. ஆனா, உங்கள எப்படி சிக்க வைக்கணும்னு எங்களுக்கு தெரியும், அதை நாங்க கண்டிப்பா செய்யதான் போறோம்.”

12, 13. (அ) பொறுப்பிலிருந்த 8 சகோதரர்களுக்கு ஏன் நீண்ட கால சிறைத்தண்டனை கிடைத்தது? (ஆ) சிறையில் அடைக்கப்பட்டதால் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற அவர்களுடைய தீர்மானம் மாறிவிட்டதா? விளக்குங்கள்.

12 பைபிள் மாணாக்கர்களைத் தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்குக் கடைசியாக ஒரு வழி கிடைத்தது. உவாட்ச் டவர் சொஸைட்டியைப் பிரதிநிதித்துவம் செய்த சகோதரர்கள் ரதர்ஃபர்ட் மற்றும் வான் ஆம்பர்க்கோடு சேர்த்து மொத்தம் 8 பேரை அந்த அரசாங்கம் கைது செய்தது. ஜெர்மானிய போர் வீரர்களைவிட இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று இந்த வழக்கை கையாண்ட நீதிபதி சொன்னார். அவர்கள் அரசாங்கத்தையும், ராணுவத்தையும், எல்லா சர்ச்சுகளையும் அவமதித்தார்கள் என்றும் அதற்காக அவர்கள் பயங்கரமாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார்.  [1] (பின்குறிப்பு) இந்த 8 பைபிள் மாணாக்கர்களும் ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டாவில் இருக்கிற சிறையில் அடைக்கப்படும்படி அவர்களுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால், போர் முடிவுக்கு வந்த பிறகு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்; அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்களும் நீக்கப்பட்டன.

13 சிறையில் இருந்தபோதுகூட, கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதில் அந்த 8 பேரும் தீர்மானமாக இருந்தார்கள். இது நமக்கு எப்படித் தெரியும்? தங்களை விடுதலை செய்யும்படி கேட்டு அமெரிக்க ஜனாதிபதிக்கு அவர்கள் கடிதம் எழுதினார்கள். கொலை செய்யக்கூடாது என்று பைபிள் சொல்வதாக அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள் வேண்டுமென்றே அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் அவருடைய தயவை இழந்துவிடுவார்கள் என்றும், அதனால் அழிக்கப்படுவார்கள் என்றும் அந்தக் கடிதத்தில் விளக்கியிருந்தார்கள். இந்தக் காரணத்துக்காகத்தான், அவர்கள் யாரையும் கொல்ல முடியாது என்றும் கொல்லவும் மாட்டார்கள் என்றும் அந்தக் கடிதத்தில் விளக்கியிருந்தார்கள். ஜனாதிபதிக்கு இப்படியொரு கடிதத்தை எழுத அவர்களுக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்! யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற தீர்மானத்தை அவர்கள் ஒருபோதும் மாற்றியிருக்க மாட்டார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கடைசியில் விடுதலை!

14. பைபிளிலிருந்து, 1914-1919 வரை என்ன நடந்தது என்று விளக்குங்கள்.

14 மல்கியா 3:1-3 வரை இருக்கிற வசனங்கள், 1914-க்கும் 1919-ன் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பைபிள் மாணாக்கர்களுக்கு என்ன நடந்தது என்று விளக்குகிறது. (வாசியுங்கள்.) ‘ஆண்டவர்’ யெகோவாவும், ‘உடன்படிக்கையின் தூதன்’ இயேசு கிறிஸ்துவும், பரலோக நம்பிக்கையுள்ளவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் “லேவியின் புத்திரரை” சோதனையிட வந்தார்கள். யெகோவா அவர்களைத் திருத்தி, சுத்திகரித்த பிறகு, புதிய நியமிப்பைப் பெற அவர்கள் தயாராக இருந்தார்கள். 1919-ல், கடவுளுடைய ஊழியர்களை வழிநடத்தவும் அவர்களுக்குப் போதிக்கவும் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ இயேசு நியமித்தார். (மத். 24:45) இப்படி, மகா பாபிலோனிலிருந்து கடவுளுடைய மக்கள் கடைசியில் விடுதலை ஆனார்கள். அந்தச் சமயத்திலிருந்து, அவர்கள் கடவுளுடைய சித்தத்தைப் பற்றி அதிகதிகமாகத் தெரிந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்மீது அவர்களுக்கு இருக்கிற அன்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது. கடவுளுடைய ஆசீர்வாதம் அவர்களுக்கு இருப்பதை நினைத்து அவர்கள் ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள்!  [2]—பின்குறிப்பு.

15. மகா பாபிலோனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை ஆனதற்காக நாம் எப்படி நன்றியோடு இருக்கலாம்?

15 மகா பாபிலோனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை ஆனதற்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். உண்மை வணக்கத்தை அழிக்க வேண்டுமென்ற முயற்சியில் சாத்தான் வெற்றி அடையவில்லை. மகா பாபிலோனின் கட்டுப்பாட்டிலிருந்து யெகோவா நமக்கு ஏன் விடுதலை கொடுத்திருக்கிறார் என்பதை நாம் எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். எல்லா மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். (2 கொ. 6:1) நேர்மையுள்ள லட்சக்கணக்கான மக்களைப் பொய் மதம் இன்னும் ஆட்டிப்படைக்கிறது; அவர்களுக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது! அதனால், அன்றிருந்த உண்மையுள்ள சகோதரர்களைப் பின்பற்ற நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம், நேர்மையுள்ள மக்கள் பொய் மதத்திலிருந்து விடுதலை ஆவதற்கு நாம் உதவலாம்!

^ [1] (பாரா 12) ஏ. ஹெச். மேக்மில்லன் எழுதிய வளர்ந்து வரும் விசுவாசம் (Faith on the March) என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கம் 99-ஐப் பாருங்கள்.

^ [2] (பாரா 14) யூதர்கள் பாபிலோனின் சிறையிருப்பில் இருந்ததற்கும், விசுவாசதுரோகம் ஆரம்பித்த பிறகு கிறிஸ்தவர்களுக்கு நடந்தவற்றிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இருந்தாலும், யூதர்கள் சிறையிருப்பில் இருந்தது, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு நடந்தவற்றிற்கு அடையாளமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதனால், யூதர்களுடைய பாபிலோன் சிறையிருப்பில் உட்பட்டிருந்த ஒவ்வொரு அம்சத்துக்கும் தீர்க்கதரிசன அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யக் கூடாது. ஏனென்றால், இவை இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, யூதர்கள் 70 வருடங்கள் பாபிலோனின் சிறையிருப்பில் இருந்தார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் அதைவிட அதிக வருடங்கள் பாபிலோனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தார்கள்.