Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் வரலாற்றுச் சுவடுகள்

“பிரிட்டனில் இருக்கும் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களே—விழித்தெழுங்கள்!”

“பிரிட்டனில் இருக்கும் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களே—விழித்தெழுங்கள்!”

“பிரிட்டனில் இருக்கும் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களே—விழித்தெழுங்கள்!” என்ற இந்த அவசரமான, தெளிவான வேண்டுகோள் டிசம்பர் 1937-ல் இன்ஃபார்மென்டில் * (லண்டன் பதிப்பில்) இருந்த ஒரு கட்டுரையில் வந்தது. “கடந்த பத்து வருடங்களில் பெரிய அதிகரிப்பு ஒன்றும் இல்லை” என்றும் அந்தக் கட்டுரையின் உபதலைப்பு சொன்னது. முதல் பக்கத்திலிருந்த பத்து வருட ஊழிய அறிக்கை (1928-1937) இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியது.

அளவுக்கதிகமான பயனியர்களா?

அந்தச் சமயத்தில், பிரிட்டனில் இருந்த சபைகள் மந்தமாக இருந்ததால் ஊழிய வேலை சுறுசுறுப்பாக நடக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்பு இருந்த அதே வேகத்தில்தான் ஊழிய வேலைகள் நடைபெற்று வந்தன. அதோடு, 200 பயனியர்கள் ஊழியம் செய்யும் அளவுக்குத்தான் அங்கே இடம் இருக்கிறது என்று கிளை அலுவலகம் தீர்மானித்தது. இந்த பயனியர்கள் எல்லாரும் சபையோடு சேர்ந்து ஊழியம் செய்யாமல், ஒதுக்குப்புறமான இடங்களில் ஊழியம் செய்துவந்தார்கள். அதனால், ஊழியம் செய்ய பிரிட்டனில் இடம் இல்லை என்றும் பயனியர் ஊழியம் செய்ய ஆசைப்படுகிறவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் போக வேண்டும் என்றும் கிளை அலுவலகம் சொன்னது. நிறைய பயனியர்கள் பிரிட்டனைவிட்டு பிரான்சு போன்ற நாடுகளுக்குப் போனார்கள். அவர்களுக்கு அந்த மொழி ஏதோ ஓரளவுதான் தெரிந்திருந்தது அல்லது கொஞ்சம்கூட தெரியாமல் இருந்தது.

‘ஊழியம் செய்ய சொல்லி’ வந்த அழைப்பு

1937-ல் இன்ஃபார்மென்டில் வெளிவந்த ஒரு கட்டுரை, 1938-ல் அடைய வேண்டிய ஒரு குறிக்கோளைப் பற்றி சொன்னது. பத்து லட்சம் மணிநேரங்கள் ஊழியம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் குறிக்கோள்! அந்தக் குறிக்கோளை அடைவது பெரிய சவாலாக இருந்தது. ஒரு மாதத்தில், ஒவ்வொரு பிரஸ்தாபியும் 15 மணிநேரமும், பயனியர்கள் 110 மணிநேரமும் ஊழியம் செய்தால் அந்தக் குறிக்கோளை அவர்களால் அடைய முடியும். ஒருநாளில் 5 மணிநேரம் ஊழியம் செய்வதற்காக வெளி ஊழியத் தொகுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. முக்கியமாக, திங்கள் முதல் வெள்ளிவரை, சாயங்கால நேரத்தில் மறுசந்திப்புகள் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆர்வமுள்ள பயனியர்கள் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்கள்

ஊழியத்துக்கு மறுபடியும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், நிறைய சகோதர சகோதரிகள் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். ‘ஊழியம் செய்ய சொல்லி தலைமை அலுவலகம் எல்லாரையும் உற்சாகப்படுத்துச்சு. இதுக்காகத்தான் நாங்க ரொம்ப காலமா ஏங்கிக்கிட்டு இருந்தோம். சீக்கிரத்திலேயே அருமையான பலன்களும் கிடைச்சது’ என்று ஹில்டா பஜெட் * என்ற சகோதரி சொன்னார். “ஒரு நாள்ல 5 மணிநேரம் ஊழியம் செய்ய சொன்னது அருமையான ஒரு ஏற்பாடு! ஒரு நாள் முழுதும் எஜமானோட சேவைய செய்றதுல கிடைக்கிற சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்காது . . . நாங்க சோர்வா திரும்பி வந்தாலும் சந்தோஷமா இருப்போம்!” என்று இ. எஃப். வாலிஸ் என்ற சகோதரி சொன்னார். ஊழியம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட அந்த அழைப்பின் அவசரத் தன்மையை உணர்ந்த இளம் ஸ்டீஃபன் மில்லர், உடனே செயல்பட ஆரம்பித்தார். வாய்ப்பு இருக்கும்போதே அப்படிச் செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தார்! நாள் முழுவதும் தொகுதி தொகுதியாக சைக்கிளில் போய் ஊழியம் செய்ததும், கோடைக்காலத்தின்போது, சாயங்கால நேரங்களில் பதிவு செய்யப்பட்ட பேச்சுகளை மற்றவர்களுக்குப் போட்டுக்காட்டியதும் அவருக்கு ஞாபகம் இருக்கிறது. விளம்பர அட்டைகளை மாட்டிக்கொண்டு ஆர்வமாக அணிவகுப்பும் நடத்தினார்கள், தெருக்களில் பத்திரிகை ஊழியம் செய்தார்கள்.

இன்ஃபார்மென்ட் இன்னொரு புதிய வேண்டுகோளை விடுத்தது. “1000 பயனியர் தேவை!” என்பதுதான் அந்த வேண்டுகோள். பயனியர்கள் இனிமேல் தனியாக ஊழியம் செய்யாமல் சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய வேண்டும், சபைக்கு உதவ வேண்டும், சபையை உற்சாகப்படுத்த வேண்டும் என்று பிராந்தியம் சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட ஒரு புதிய ஆலோசனையில் சொல்லப்பட்டிருந்தது. “பயனியர் ஊழியம் செய்றதுக்கு நிறைய சகோதரர்கள் தயாரானாங்க” என்று ஜாய்ஸ் எல்லிஸ் (நீ பார்பர்) சொல்கிறார். “அந்த சமயத்தில எனக்கு 13 வயசுதான். ஆனாலும் பயனியர் ஊழியம் செய்யணும்னு ஆசைப்பட்டேன்” என்றும் அவர் சொல்கிறார். ஜூலை 1940-ல், தன்னுடைய 15-ஆம் வயதில் அவர் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார். பீட்டர் என்ற சகோதரர், (பிறகு ஜாய்ஸின் கணவராக ஆனார்) பயனியர் ஊழியம் செய்ய வேண்டும் என்ற அழைப்பைக் கேட்டு, அதைச் செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார். ஜூன் 1940-ல், தன்னுடைய 17-வது வயதில், பயனியர் ஊழியம் செய்வதற்காக அவர் 105 கி.மீ. (65 மைல்) தூரம் சைக்கிளிலேயே ஸ்கார்பரோவுக்குப் போனார்.

புதிதாகப் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்த ஸிரில் மற்றும் கிட்டி ஜான்ஸன் நிறைய தியாகங்களைச் செய்தார்கள். முழு நேர சேவைக்காகத் தங்களுடைய வீட்டையும் பொருள்களையும் விற்க தீர்மானித்தார்கள். முதலில், ஸிரில் தன்னுடைய வேலையை விட்டார். பிறகு, ஒரு மாதத்திற்குள், பயனியர் ஊழியத்தை ஆரம்பிக்கத் தயாரானார். “எங்களால பயனியர் ஊழியம் செய்ய முடியும்னு நம்புனோம். அதை மனப்பூர்வமா, சந்தோஷமா செஞ்சோம்” என்று அவர் சொல்கிறார்.

பயனியர் வீடுகள் திறக்கப்பட்டன

பயனியர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனதால், அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று பொறுப்பிலுள்ள சகோதரர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். 1938-ல் மண்டல ஊழியராக (இப்போது, வட்டாரக் கண்காணிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்) சேவை செய்துகொண்டிருந்த ஜிம் கார் என்பவர், அங்கிருந்த நகரங்களில் பயனியர் வீடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற அறிவுரையைப் பின்பற்றினார். செலவுகளைக் குறைப்பதற்காக பயனியர்கள் ஒரு தொகுதியாகச் சேர்ந்து, பயனியர் ஊழியம் செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டார்கள். ஷெஃபீல்ட் என்ற இடத்தில், ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள்; பொறுப்பிலுள்ள சகோதரர் ஒருவர் அதைப் பார்த்துக்கொண்டார். உள்ளூரில் இருந்த சபைகள், பணம் மற்றும் டேபிள் சேர் ஆகியவற்றைக் கொடுத்தார்கள். “இந்த ஏற்பாட்டுல வெற்றி கிடைக்கணும்னு எல்லாரும் ஒண்ணா உழைச்சாங்க” என்று ஜிம் சொல்கிறார். கடினமாக உழைக்கிற 10 பயனியர்கள் அங்கே இருந்தார்கள். ஆன்மீக விஷயங்களை அவர்கள் தவறாமல் செய்தார்கள். ‘ஒவ்வொரு நாள் காலையிலயும் சாப்பிடறப்போ தினவசனத்தை வாசிப்பாங்க. அப்புறம், அந்த ஊர்ல இருந்த வேற வேற இடங்கள்ல ஊழியம் செய்றதுக்காக பயனியர்கள் போனாங்க’ என்று ஜிம் சொல்கிறார்.

புதிய பயனியர்கள் பிரிட்டனுக்கு வர ஆரம்பித்தார்கள்

“பயனியர் தேவை!” என்ற அழைப்பைப் பிரஸ்தாபிகளும் பயனியர்களும் ஏற்றுக்கொண்டதால், 1938-ல் மொத்தம் பத்து லட்சம் மணிநேரங்கள் அவர்களால் ஊழியம் செய்ய முடிந்தது. ஊழியம் சம்பந்தப்பட்ட வேலைகளில் அதிகரிப்பு இருந்ததாக அறிக்கைகள் காட்டுகின்றன. 5 வருடங்களில், பிரிட்டனில் இருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 3 மடங்காக உயர்ந்தது. ஊழியம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், அதற்குப் பிறகு வந்த போர்க் காலங்களைச் சமாளிப்பதற்கு யெகோவாவின் மக்கள் பலம் பெற்றார்கள்.

அர்மகெதோன் போர் ரொம்ப பக்கத்தில் இருக்கிற இந்தச் சமயத்தில், பிரிட்டனில் இருக்கும் பயனியர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. கடந்த பத்து வருடங்களில், பயனியர்களின் எண்ணிக்கை நிறைய சமயங்களில் உச்சநிலையைத் தொட்டிருக்கிறது. அக்டோபர் 2015-ல் பயனியர்களின் எண்ணிக்கை 13,224-ஆக உயர்ந்தது; இது புதிய உச்சநிலை. பயனியர் ஊழியம் செய்வதுதான் வாழ்க்கையின் மிகச் சிறந்த பாதை என்பது பிரிட்டனில் இருக்கும் இந்த பயனியர்களுக்கு நன்றாகத் தெரியும்!

^ பாரா. 3 பிறகு, நம் ராஜ்ய ஊழியம் என்று அழைக்கப்பட்டது.

^ பாரா. 8 அக்டோபர் 1, 1995 காவற்கோபுரத்தில் பக். 19-24-ல் சகோதரி ஹில்டா பஜெடின் அனுபவம் இருக்கிறது.