Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் தவறு செய்துவிட்டீர்களா?

நீங்கள் தவறு செய்துவிட்டீர்களா?

டானுக்கும் மார்கெரெட்டுக்கும் * தங்கள் மகள் குடும்பத்தோடு வீட்டுக்கு வந்தது சந்தோஷமாக இருந்தது. அவர்கள் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன், ஓய்வுபெற்ற சமையல் கலை நிபுணரான மார்கெரெட் தன் இரண்டு பேரன்களுக்கும் பிடித்த, மக்ரோனி சீஸ் (macaroni and cheese) என்ற உணவைச் சமைத்தார்.

சாப்பிடுவதற்காக எல்லாரும் உட்கார்ந்திருந்தபோது, மார்கெரெட் தான் சமைத்த அந்த உணவை டேபிளின் நடுவில் கொண்டுவந்து வைத்தார். அவர் அந்தப் பாத்திரத்தின் மூடியைத் திறந்தபோது, அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், அதில் சூடான சீஸ் சாஸ் (cheese sauce) மட்டுமே இருந்தது! மார்கெரெட், அந்த உணவின் முக்கிய பொருளான மக்ரோனியைப் போட மறந்துவிட்டார்! *

நாம் எந்த வயதினராக இருந்தாலும் சரி, நமக்கு எவ்வளவு அனுபவம் இருந்தாலும் சரி, நாம் எல்லாருமே தவறுகள் செய்துவிடுகிறோம். நாம் ஒருவேளை யோசிக்காமல் பேசிவிடலாம், சரியான விஷயத்தைத் தவறான நேரத்தில் செய்துவிடலாம், அல்லது, ஏதாவது ஒன்றை மறந்துவிடலாம். தவறுகள் ஏன் நடக்கின்றன? தவறு செய்துவிடும்போது நாம் என்ன செய்யலாம்? தவறுகளைக் தவிர்க்க முடியுமா? தவறுகளைப் பற்றிய சரியான கண்ணோட்டம் நமக்கு இருந்தால், இந்தக் கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடிக்க முடியும்.

தவறைக் கடவுள் பார்க்கும் விதமாகப் பார்க்கிறீர்களா?

ஒரு விஷயத்தை நன்றாகச் செய்ததற்காக, மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது அதை ஏற்றுக்கொள்கிறோம். அந்தப் பாராட்டைப் பெற நாம் தகுதியானவர் என்றும் நினைக்கிறோம். அதேபோல், தவறு செய்துவிடும்போதும் அதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைத் தெரியாமல் செய்திருந்தாலும் சரி, அதை மற்றவர்கள் கவனிக்காமல் போயிருந்தாலும் சரி, அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதற்கு நமக்கு மனத்தாழ்மை தேவை.

நம்மைப் பற்றி நாம் அளவுக்கு அதிகமாக நினைத்தால், நாம் ஒன்றும் அவ்வளவு பெரிய தவறைச் செய்யவில்லை என்று சொல்லிவிடலாம். பழியை மற்றவர்கள்மேல் போட்டுவிடலாம். அல்லது, அதை நாம் செய்யவே இல்லை என்றும் சாதிக்கலாம். இப்படிச் செய்வதால், மோசமான விளைவுகள்தான் ஏற்படும். அதோடு, அந்தப் பிரச்சினையும் தீராது, மற்றவர்களும் அநியாயமாகக் குற்றம்சாட்டப்படலாம். ஒருவேளை, செய்த தவறிலிருந்து நாம் இப்போது தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் கடைசியில், “நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்” என்பதை மறந்துவிடக் கூடாது.—ரோமர் 14:12.

நாம் செய்யும் தவறுகளை, கடவுள் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறார். கடவுள் “இரக்கமும் கரிசனையும் உள்ளவர்” என்று சங்கீத புத்தகம் சொல்கிறது. “அவர் எப்போதும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்க மாட்டார். என்றென்றும் கோபத்தோடு இருக்க மாட்டார்” என்றும் சொல்கிறது. மனிதர்கள் அபூரணர்கள் என்றும், நாம் பிறப்பிலேயே தவறு செய்யும் இயல்புள்ளவர்கள் என்றும் அவருக்குத் தெரியும். அதனால்தான், “நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 103:8, 9, 14.

கடவுள் ஓர் இரக்கமுள்ள அப்பாவைப் போல இருக்கிறார். தவறுகளை அவர் பார்க்கும் விதமாக அவருடைய பிள்ளைகளும் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். (சங்கீதம் 130:3) நாம் தவறு செய்யும்போதும் சரி, மற்றவர்கள் தவறு செய்யும்போதும் சரி, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி கடவுளுடைய வார்த்தை நமக்கு நிறைய ஆலோசனைகளையும் புத்திமதிகளையும் தருகிறது.

தவறு செய்துவிடும்போது நீங்கள் என்ன செய்யலாம்?

பெரும்பாலும், ஒருவர் தவறு செய்யும்போது, யார்மேல் பழிபோடலாம் என்றும், தன்னுடைய பேச்சையோ செயலையோ எப்படி நியாயப்படுத்தலாம் என்றும் அவர் யோசிக்கலாம். இதற்கு, அவர் நிறைய நேரமும் சக்தியும் செலவு செய்யலாம். ஒருவேளை, நீங்கள் யாரையாவது காயப்படுத்தும்போது, அவரிடம் போய் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது? அந்தத் தவறைத் திருத்திக்கொண்டு, உங்களுடைய நட்பை ஏன் காத்துக்கொள்ளக் கூடாது? நீங்கள் செய்த தவறு, மற்றவர்களுக்கோ உங்களுக்கோ கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? அதுபோன்ற சமயங்களில், உங்கள்மேல் கோபப்பட்டுக்கொள்வதற்குப் பதிலாகவோ, மற்றவர்கள்மேல் குற்றம்சாட்டுவதற்குப் பதிலாகவோ, அந்தத் தவறைச் சரிசெய்ய உங்களால் முடிந்ததை ஏன் செய்யக் கூடாது? மற்றவர்களைக் குற்றம்சாட்டுவதிலேயே குறியாக இருந்தால், தேவையில்லாத மன உளைச்சல்தான் ஏற்படும்; பிரச்சினையும் அதிகமாகும். அதனால், தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதைச் சரிசெய்து, வேறு விஷயத்தின்மேல் கவனம் செலுத்த ஆரம்பியுங்கள்.

வேறு யாராவது தவறு செய்யும்போது, நாம் அவர்கள்மேல் சுலபமாக எரிச்சல் அடைந்து விடுகிறோம். ஆனால், “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 7:12) அவர் கொடுத்த இந்த ஆலோசனையைப் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நீங்கள் ஏதாவது ஒரு தவறு செய்யும்போது, அதுவும் சின்னதாக ஒரு தவறு செய்யும்போது, மற்றவர்கள் உங்களைக் கரிசனையோடு நடத்த வேண்டும் என்றோ, செய்த தவறை அவர்கள் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட வேண்டும் என்றோ விரும்புவீர்கள், இல்லையா? அதேபோல், நீங்களும் மற்றவர்களை ஏன் கரிசனையோடு நடத்தக் கூடாது?—எபேசியர் 4:32.

தவறுகளைக் குறைப்பதற்கு என்ன பைபிள் நியமங்கள் உதவும்?

“தவறாக மதிப்பிடுவதும், போதுமான அறிவுத்திறன் இல்லாததும், கவனக்குறைவாக இருப்பதும்தான்” தவறுகள் ஏற்படுவதற்கான காரணங்களாக இருக்கின்றன என்று ஒரு டிக்ஷனரி சொல்கிறது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், இது போன்ற காரணங்களால் நாம் ஒவ்வொருவரும் தவறு செய்துவிடுகிறோம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், பைபிளில் இருக்கிற சில அடிப்படையான நியமங்களைத் தெரிந்துகொண்டால், நம்முடைய தவறுகளைக் குறைக்கலாம்.

நீதிமொழிகள் 18:13-ல் இருக்கிற ஒரு நியமம் என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். “ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம். அது அவமானத்தைத்தான் தேடித்தரும்” என்று அது சொல்கிறது. ஒரு விஷயத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதற்கு எப்படிப் பிரதிபலிப்போம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், நாம் கோபப்பட்டு எதையும் பேசிவிட மாட்டோம், அவசரப்பட்டு எதையும் செய்துவிடவும் மாட்டோம். ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். அப்படிச் செய்யும்போது, எதையும் தவறாக மதிப்பிட மாட்டோம். இதன் மூலம், தவறுகளையும் தவிர்ப்போம்.

இன்னொரு பைபிள் நியமம் இப்படிச் சொல்கிறது: “கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.” (ரோமர் 12:18) மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கும் கடினமாக முயற்சி செய்யுங்கள். மற்றவர்களோடு வேலை செய்யும்போது, கனிவோடும் மரியாதையோடும் நடந்துகொள்ளுங்கள். அவர்களைப் பாராட்டுங்கள், உற்சாகப்படுத்துங்கள். அப்போதுதான், மற்றவர்கள் யோசிக்காமல் பேசியதையோ செய்ததையோ பெரிதுபடுத்தாமல் இருக்க முடியும், அவற்றைச் சுலபமாக மன்னிக்க முடியும். படுமோசமான தவறுகளைக்கூட அன்பாகச் சரிசெய்து கொள்ள முடியும்.

தவறுகளிலிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியுமா என்று யோசியுங்கள். நீங்கள் பேசியதற்கும் செய்ததற்கும் சாக்குப்போக்குச் சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக, நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இதைக் கருதுங்கள். பொறுமையையும், கனிவையும், சுயக்கட்டுப்பாட்டையும் நீங்கள் இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறதா என்று யோசியுங்கள். அதேபோல், சாந்தம், சமாதானம், அன்பு போன்ற குணங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறதா என்று பாருங்கள். (கலாத்தியர் 5:22, 23) அடுத்த தடவை என்ன செய்யக் கூடாது என்பதையாவது நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். செய்த தவறை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள்; அதேசமயத்தில், பொறுப்பில்லாமலும் இருக்காதீர்கள். நகைச்சுவை உணர்வோடு நடந்துகொள்வது மன உளைச்சலைக் குறைக்க நிச்சயம் உதவும்.

உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

தவறைப் பற்றிய சரியான கண்ணோட்டம் நமக்கு இருந்தால், தவறுகள் செய்துவிடும்போது, நாம் சரியாக நடந்துகொள்வோம்; அதனால், நமக்கு நிறைய நன்மைகளும் கிடைக்கும். அப்போது, நாமும் சரி, மற்றவர்களும் சரி, சமாதானமாக இருப்போம். நம்முடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள கடினமாக முயற்சி செய்யும்போது, நாம் ஞானமுள்ளவர்களாகவும் மற்றவர்களுக்குப் பிடித்தவர்களாகவும் இருப்போம். நாம் ஒரேயடியாக சோர்ந்துவிடவும் மாட்டோம், நம்மைப் பற்றி தவறாக நினைத்துக்கொள்ளவும் மாட்டோம். மற்றவர்களும் தங்களுடைய தவறுகளோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்கும்போது, நாம் அவர்கள்மேல் இன்னும் அதிகமாக அன்பு காட்டுவோம். மிக முக்கியமாக, கடவுளைப் போல அன்பு காட்டவும், தாராளமாக மன்னிக்கவும் நாம் கற்றுக்கொள்வோம்.—கொலோசெயர் 3:13.

மேலே சொல்லப்பட்ட மார்கெரெட்டின் தவறு, குடும்பத்தோடு அனுபவித்த அந்த அருமையான தருணத்தைக் கெடுத்துவிட்டதா? இல்லவே இல்லை! மார்கெரெட் உட்பட, அவருடைய குடும்பத்தில் இருந்த எல்லாரும் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டார்கள். மக்ரோனி இல்லாத அந்த உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். பல வருஷங்களுக்குப் பிறகு, இந்த மறக்கமுடியாத அனுபவத்தை அந்த இரண்டு பேரன்களும் தங்கள் பிள்ளைகளிடம் சொன்னார்கள். சொல்லப்போனால், மார்கெரெட் செய்தது ஒரு சின்ன தவறுதான்! ▪

^ பாரா. 2 பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 3 வேகவைக்கப்பட்ட மக்ரோனியோடு சீஸ் சாஸை கலந்து செய்யும் ஒரு உணவுதான் மக்ரோனி சீஸ்.