Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்”

“யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்”

“யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய் . . . உண்மையோடு நடந்துகொள்.”—சங். 37:3.

பாடல்கள்: 133, 63

1. யெகோவா மனிதர்களை என்னென்ன திறமைகளோடு படைத்திருக்கிறார்?

யெகோவா, மனிதர்களை அருமையான திறமைகளோடு படைத்திருக்கிறார். நம் எல்லாருக்கும் யோசிக்கும் திறமையைக் கொடுத்திருக்கிறார். நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்கவும், எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடவும் இந்த யோசிக்கும் திறமை நமக்கு உதவுகிறது. (நீதி. 2:11) அதோடு, அவர் நமக்குப் பலத்தைக் கொடுத்திருக்கிறார். திட்டமிட்டதைச் செய்யவும், நம்முடைய குறிக்கோளை அடையவும் இந்தப் பலம் நமக்கு உதவுகிறது. (பிலி. 2:13) அதுமட்டுமல்லாமல், நமக்குள் இருக்கிற, அதாவது எது சரி, எது தவறு என்பதை உணர்த்துகிற மனசாட்சியை, நமக்குக் கொடுத்திருக்கிறார். பாவம் செய்வதைத் தவிர்க்கவும், தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் இந்த மனசாட்சி நமக்கு உதவுகிறது.—ரோ. 2:15.

2. நம்முடைய திறமைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்?

2 நம்மிடம் இருக்கும் திறமைகளை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். ஏனென்றால், அவர் நம்மை நேசிக்கிறார். அதோடு, இந்தத் திறமைகளைப் பயன்படுத்தும்போது நாம் சந்தோஷமாக இருப்போம் என்பதும் அவருக்குத் தெரியும். உதாரணத்துக்கு, “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்” என்றும், “உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய்” என்றும் எபிரெய வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (நீதி. 21:5; பிர. 9:10) அதோடு, “காலம் சாதகமாக இருக்கும்போதே எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும்” என்றும், “அவரவருக்குக் கிடைத்த வரத்துக்கு ஏற்றபடி, அந்த வரத்தை ஒருவருக்கொருவர் சேவை செய்யப் பயன்படுத்துங்கள்” என்றும் கிரேக்க வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (கலா. 6:10; 1 பே. 4:10) இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மை தரும் விஷயங்களை நாம் செய்ய வேண்டும்; அதற்காக, முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்.

3. மனிதர்களுக்கு என்னென்ன வரம்புகள் இருக்கின்றன?

3 நம்முடைய திறமைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று யெகோவா விரும்பினாலும், நம்முடைய வரம்புகளைப் பற்றியும் அவருக்குத் தெரியும். உதாரணத்துக்கு அபூரணத்தையும், பாவத்தையும், மரணத்தையும் நம்மால் ஒழிக்க முடியாது. (1 ரா. 8:46) அதோடு, நாம் மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் முடியாது; ஏனென்றால், தீர்மானிக்கும் உரிமை நம் எல்லாருக்கும் இருக்கிறது. நமக்கு எவ்வளவு அறிவும் அனுபவமும் இருந்தாலும், யெகோவாவோடு ஒப்பிடும்போது நாம் எல்லாருமே குழந்தைகள்தான்!—ஏசா. 55:9.

பிரச்சினைகளை அனுபவிக்கும்போது, ‘யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்யுங்கள்’

4. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்ப்போம்?

4 யெகோவா நம்மை வழிநடத்த நாம் எப்போதுமே அனுமதிக்க வேண்டும். அவர் நம்மை ஆதரிப்பார் என்றும், நம்மால் செய்ய முடியாத விஷயங்களை அவர் நமக்காகச் செய்வார் என்றும் நாம் நம்ப வேண்டும். அதே சமயத்தில், பிரச்சினைகளைத் தீர்க்கவும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். (சங்கீதம் 37:3-ஐ வாசியுங்கள்.) ‘யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்வது’ ரொம்ப முக்கியம். அதோடு, ‘உண்மையோடு நடந்துகொள்வதும்’ முக்கியம். யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்த நோவா, தாவீது மற்றும் வேறு சில உண்மையுள்ள ஊழியர்களின் உதாரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர்களால் சில விஷயங்களைச் செய்ய முடியாதபோது, செய்ய முடிந்த விஷயங்களின் மீது அவர்கள் எப்படிக் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்கள் என்றும் பார்க்கலாம்.

அநியாயமும் அக்கிரமமும் நம்மைச் சூழ்ந்திருக்கும்போது...

5. நோவா எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தார்?

5 ‘பூமியெங்கும் வன்முறையும்’ ஒழுக்கக்கேடும் நிறைந்திருந்த ஒரு காலத்தில் நோவா வாழ்ந்தார். (ஆதி. 6:4, 9-13) அந்தப் பொல்லாத உலகத்துக்கு யெகோவா கடைசியில் முடிவு கட்டுவார் என்று நோவாவுக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், மக்கள் செய்த மோசமான விஷயங்களைப் பார்த்து அவர் கண்டிப்பாக வேதனைப்பட்டிருப்பார். அந்தச் சூழ்நிலையில், சில விஷயங்களைத் தன்னால் செய்ய முடியாது என்பதையும், சில விஷயங்களைத் தன்னால் செய்ய முடியும் என்பதையும் நோவா புரிந்துவைத்திருந்தார்.

ஊழியத்தில் எதிர்ப்பு (பாராக்கள் 6-9)

6, 7. (அ) நோவாவால் எவற்றைச் செய்ய முடியவில்லை? (ஆ) நோவாவைப் போல நாமும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறோம்?

6 நோவாவால் எவற்றைச் செய்ய முடியவில்லை? யெகோவா கொடுத்த எச்சரிப்பு செய்தியை நோவா உண்மையோடு பிரசங்கித்தார். ஆனால், தன்னுடைய செய்தியை நிச்சயம் கேட்டே ஆக வேண்டும் என்று மக்களை அவரால் கட்டாயப்படுத்த முடியவில்லை. அதே போல, பெருவெள்ளத்தை சீக்கிரமாக வர வைக்கவும் அவரால் முடியவில்லை. தான் கொடுத்த வாக்குறுதியின்படியே, கெட்ட விஷயங்களை யெகோவா முடிவுக்குக் கொண்டுவருவார் என்றும், அதுவும், சரியான நேரத்தில் அதைச் செய்வார் என்றும் நோவா நம்ப வேண்டியிருந்தது.—ஆதி. 6:17.

7 நாமும் அநியாய அக்கிரமம் நிறைந்த ஓர் உலகத்தில் வாழ்கிறோம். இந்தப் பொல்லாத உலகத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருப்பது நமக்குத் தெரியும். (1 யோ. 2:17) இருந்தாலும், ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ கேட்கும்படி யாரையும் நம்மால் கட்டாயப்படுத்த முடியாது. அதோடு, ‘மிகுந்த உபத்திரவத்தையும்’ நம்மால் சீக்கிரம் கொண்டுவர முடியாது. (மத். 24:14, 21) நோவாவைப் போலவே நமக்கும் உறுதியான விசுவாசம் இருக்க வேண்டும். அதாவது, இந்தப் பொல்லாத உலகத்தை யெகோவா சீக்கிரத்தில் முடிவுக்குக் கொண்டுவருவார் என்ற விசுவாசம் இருக்க வேண்டும். (சங். 37:10, 11) யெகோவா தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு, ஒரு நாள்கூட இந்தப் பொல்லாத உலகத்தை விட்டுவைக்க மாட்டார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.—ஆப. 2:3.

8. நோவா எதன்மீது தன்னுடைய கவனத்தை ஒருமுகப்படுத்தினார்? (ஆரம்பப் படம்)

8 நோவாவால் எவற்றைச் செய்ய முடிந்தது? தன்னால் செய்ய முடியாத விஷயங்களை நினைத்து நோவா சோர்ந்துவிடவில்லை. அதற்குப் பதிலாக, தன்னால் செய்ய முடிந்த விஷயங்களின் மீது அவர் கவனத்தை ஒருமுகப்படுத்தினார். யெகோவா கொடுத்த எச்சரிப்பு செய்தியை அவர் உண்மையோடு பிரசங்கித்தார். (2 பே. 2:5) பிரசங்க வேலை செய்ததால், அவர் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். பிரசங்க வேலை செய்ததோடு, பேழையைக் கட்டுவது சம்பந்தமாக யெகோவா கொடுத்த ஆலோசனைகளையும் பின்பற்றினார்.எபிரெயர் 11:7-ஐ வாசியுங்கள்.

9. நோவாவின் உதாரணத்தை நாம் எப்படிப் பின்பற்றுகிறோம்?

9 நோவாவைப் போல, நாமும் “எஜமானுடைய வேலையை” அதிகமதிகமாகச் செய்கிறோம். (1 கொ. 15:58) உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றங்கள் மற்றும் மாநாட்டு மன்றங்களைக் கட்டுவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் நாம் உதவி செய்கிறோம். மாநாடுகளில் வாலண்டியராகச் சேவை செய்கிறோம். கிளை அலுவலகத்தில் அல்லது மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் சேவை செய்கிறோம். மிக முக்கியமாக, ஊழியத்தை நாம் சுறுசுறுப்பாகச் செய்கிறோம்; இது நம்முடைய எதிர்கால நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. “கடவுளோட அரசாங்கம் தரப்போற ஆசீர்வாதத்தை பத்தி மக்கள்கிட்ட பேசுறப்போ, அவங்க எந்த எதிர்கால நம்பிக்கையும் இல்லாம இருக்காங்கனு தெரியுது. அவங்களோட பிரச்சனை எல்லாம் தீரவே தீராதுனு அவங்க நினைச்சுக்கிட்டு இருக்காங்க” என்று ஒரு சகோதரி சொல்கிறார். ஆனால், நமக்கு எதிர்கால நம்பிக்கை இருக்கிறது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது, இந்த நம்பிக்கை இன்னும் பலப்படுகிறது. வாழ்க்கையெனும் ஓட்டத்தில் தொடர்ந்து ஓடுவதற்கும் இந்த நம்பிக்கை உதவுகிறது.—1 கொ. 9:24.

நாம் பாவம் செய்துவிடும்போது...

10. தாவீதின் சூழ்நிலையைப் பற்றி சொல்லுங்கள்.

10 தாவீது ராஜா உண்மையுள்ளவராக இருந்தார். யெகோவாவுக்கு அவரை ரொம்ப பிடித்திருந்தது. (அப். 13:22) ஆனாலும், தாவீது ஒரு பெரிய பாவத்தைச் செய்தார்; பத்சேபாளோடு தவறான உறவுகொண்டார். அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், பத்சேபாளின் கணவன் உரியாவைப் போரில் சாகடிக்கும்படி செய்வதன் மூலம், தான் செய்த பாவத்தை மறைக்க முயற்சி செய்தார். உரியாவைக் கொல்லும்படி தான் எழுதிய கடிதத்தை உரியாவிடமே கொடுத்து அனுப்பினார். (2 சா. 11:1-21) கடைசியில், தாவீது செய்த பாவம் வெட்டவெளிச்சமானது. (மாற். 4:22) அப்போது தாவீது எப்படி நடந்துகொண்டார்?

முன்பு செய்த பாவம் (பாராக்கள் 11-14)

11, 12. (அ) பாவம் செய்த பிறகு தாவீதால் என்ன செய்ய முடியவில்லை? (ஆ) நாம் மனம் திரும்பும்போது யெகோவா என்ன செய்வார்?

11 தாவீதால் என்ன செய்ய முடியவில்லை? தான் செய்த பாவத்தை அவரால் துடைக்க முடியவில்லை. சொல்லப்போனால், தான் செய்த பாவத்தின் விளைவை, அவர் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியிருந்தது. (2 சா. 12:10-12, 14) அதனால், அவருக்கு விசுவாசம் தேவைப்பட்டது. உண்மையாக மனம் திரும்பும்போது யெகோவா தன்னை மன்னிப்பார் என்றும், தான் செய்த பாவத்தின் விளைவுகளைச் சகித்திருக்க உதவுவார் என்றும் நம்ப வேண்டியிருந்தது.

12 நாம் எல்லாரும் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால் பாவம் செய்துவிடுகிறோம். சில சமயங்களில், நாம் பெரிய பாவங்களைச் செய்துவிடலாம். அவற்றில் சிலவற்றை நம்மால் துடைக்கவே முடியாது, அவற்றின் விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும். (கலா. 6:7) ஆனால், நாம் மனம் திரும்பும்போது, நாம் வேதனையான சூழ்நிலையில் இருந்தாலும் யெகோவா நமக்கு ஆதரவாக இருப்பார்; அதுவும், நாம் செய்த தவறால் நாம் கஷ்டத்தை அனுபவிக்கும்போது அவர் நமக்கு ஆதரவாக இருப்பார்.ஏசாயா 1:18, 19-ஐயும், அப்போஸ்தலர் 3:19-ஐயும் வாசியுங்கள்.

13. யெகோவாவோடு இருந்த பந்தத்தில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்ய தாவீது என்ன செய்தார்?

13 தாவீதால் என்ன செய்ய முடிந்தது? யெகோவாவோடு இருந்த பந்தத்தில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்ய தாவீது விரும்பினார். அதற்கு அவர் என்ன செய்தார்? யெகோவா தனக்கு உதவி செய்ய அவர் அனுமதித்தார். உதாரணத்துக்கு, தீர்க்கதரிசியான நாத்தான் மூலம் யெகோவா தன்னைத் திருத்தியபோது, தாவீது அதை ஏற்றுக்கொண்டார். (2 சா. 12:13) அதோடு, அவர் ஜெபம் செய்தார்; தான் செய்த பாவங்களை யெகோவாவிடம் ஒத்துக்கொண்டார். யெகோவாவின் தயவு தனக்கு மறுபடியும் வேண்டுமென்று தாவீது விரும்பியதை இது காட்டியது. (சங். 51:1-17) தான் செய்த பாவத்தை நினைத்து குற்ற உணர்ச்சியில் மூழ்கிவிடுவதற்குப் பதிலாக, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட மோசமான பாவங்களை அவர் மறுபடியும் செய்யவே இல்லை. பல வருடங்களுக்குப் பிறகு, தாவீது உண்மையுள்ளவராக இறந்தார். அதனால்தான், யெகோவாவுடைய ஞாபகத்தில் அவர் இன்னும் இருக்கிறார்.—எபி. 11:32-34.

14. தாவீதின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 தாவீதின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் ஒரு மோசமான பாவம் செய்துவிட்டால் உண்மையிலேயே மனம் திரும்ப வேண்டும், யெகோவாவிடம் அதை ஒத்துக்கொள்ள வேண்டும், அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். (1 யோ. 1:9) அதோடு, மூப்பர்களிடமும் அதைப் பற்றி பேச வேண்டும். ஏனென்றால், யெகோவாவோடு உள்ள பந்தத்தில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்ய அவர்களால் நமக்கு உதவ முடியும். (யாக்கோபு 5:14-16-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் உதவியை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நம்மை மன்னிப்பதாக அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதியில் நமக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்ட முடியும். அதுமட்டுமல்லாமல், நம்முடைய தவறுகளிலிருந்து நம்மால் பாடம் கற்றுக்கொள்ள முடியும்; தொடர்ந்து நம்பிக்கையோடு யெகோவாவுக்குச் சேவை செய்யவும் முடியும்.—எபி. 12:12, 13.

மற்ற சூழ்நிலைகளில்...

உடல்நல பிரச்சினை (பாரா 15)

15. அன்னாளின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

15 கஷ்டமான சூழ்நிலைகள் மத்தியிலும் யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்த மற்ற உண்மையுள்ள ஊழியர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, ஒரு சமயத்தில் அன்னாள் குழந்தை இல்லாமல் இருந்தார். அந்தச் சூழ்நிலையை அவரால் மாற்ற முடியவில்லை. இருந்தாலும், யெகோவா தனக்கு ஆறுதல் அளிப்பார் என்று நம்பினார். அதனால், தொடர்ந்து யெகோவாவை அவருடைய ஆலயத்தில் வணங்கினார்; தன்னுடைய உணர்வுகளையெல்லாம் யெகோவாவிடம் கொட்டினார். (1 சா. 1:9-11) அன்னாள் நமக்கு எவ்வளவு அருமையான முன்மாதிரி! நமக்கு ஏதாவது உடல்நல பிரச்சினையோ, வேறு ஏதாவது கஷ்டமான சூழ்நிலையோ வந்தால் அவற்றை நம்மால் மாற்ற முடியாது. அப்படிப்பட்ட சமயங்களில், நம்முடைய கவலைகளையெல்லாம் யெகோவாமீது வைத்துவிட வேண்டும்; அவர் நம்மை கவனித்துக்கொள்வார் என்று நம்ப வேண்டும். (1 பே. 5:6, 7) சபை கூட்டங்களிலிருந்தும் யெகோவாவின் அமைப்பு தருகிற மற்ற ஆன்மீக ஏற்பாடுகளிலிருந்தும் நன்மை அடைய, நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டும்.—எபி. 10:24, 25.

யெகோவாவைவிட்டு விலகிப்போகிற பிள்ளை (பாரா 16)

16. சாமுவேலின் உதாரணத்திலிருந்து பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

16 யெகோவாவுக்கு உண்மையோடு இருக்கிற பெற்றோர்களின் பிள்ளைகள், யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டால் அந்தப் பெற்றோர்கள் என்ன செய்யலாம்? தீர்க்கதரிசியான சாமுவேலின் உதாரணத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையோடு இருக்க, தன்னுடைய வளர்ந்த பிள்ளைகளை சாமுவேலால் கட்டாயப்படுத்த முடியவில்லை. (1 சா. 8:1-3) இந்த விஷயத்தை அவர் யெகோவாவிடம் விட்டுவிட வேண்டியிருந்தது. இருந்தாலும், தான் கடவுளுக்கு உண்மையோடு இருக்கவும், தன்னுடைய பரலோக அப்பாவைச் சந்தோஷப்படுத்தவும் தன்னால் முடிந்ததையெல்லாம் சாமுவேல் செய்தார். (நீதி. 27:11) இன்று நிறைய கிறிஸ்தவ பெற்றோர்கள், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். இயேசுவின் உதாரணத்தில் இருக்கிற ஊதாரி மகனுடைய அப்பாவைப் போலவே, யெகோவாவும், மனம் திரும்புகிற பாவிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார் என்று கிறிஸ்தவ பெற்றோர்கள் நம்புகிறார்கள். (லூக். 15:20) அதே சமயத்தில், தாங்கள் யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையோடு இருக்கவும் கடினமாக உழைக்கிறார்கள். தங்களுடைய நல்ல முன்மாதிரியால் யெகோவாவைவிட்டு விலகிப்போன தங்களுடைய பிள்ளைகள் திரும்பி வருவார்கள் என்றும் நம்புகிறார்கள்.

பணப் பிரச்சினை (பாரா 17)

17. ஏழை விதவையின் உதாரணம் நமக்கு ஏன் உற்சாகத்தைத் தருகிறது?

17 இயேசுவின் காலத்தில் வாழ்ந்த ஏழை விதவை, இன்னொரு நல்ல உதாரணம்! (லூக்கா 21:1-4-ஐ வாசியுங்கள்.) ஆலயத்தில் நடந்த ஊழலை அவரால் தடுக்க முடியவில்லை; தான் ஏழையாக இருப்பதையும் அவரால் மாற்ற முடியவில்லை. (மத். 21:12, 13) ஆனால், யெகோவாமீது அவருக்கு நம்பிக்கை இருந்ததால், உண்மை வணக்கத்தை ஆதரிக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். அவருக்குத் தாராள குணம் இருந்ததால், தன் பிழைப்புக்காக வைத்திருந்த ‘இரண்டு சிறிய காசுகளையும்’ காணிக்கையாகப் போட்டுவிட்டார். விசுவாசமுள்ள அந்தப் பெண் யெகோவாவை முழுமையாக நம்பினார். யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுத்தால், தன்னுடைய தேவைகளை யெகோவா நிச்சயம் கவனித்துக்கொள்வார் என்று நம்பினார். அதே போல, நாமும் கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுத்தால், நம்முடைய தேவைகளையும் யெகோவா நிச்சயம் கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறோம்.—மத். 6:33.

18. சரியான மனப்பான்மையைக் காட்டிய ஒரு சகோதரரின் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

18 இவர்களைப் போல் இன்றும் நிறைய சகோதர சகோதரிகள் யெகோவாமீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தங்களால் செய்ய முடியாதவற்றின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்குப் பதிலாக, தங்களால் செய்ய முடிந்தவற்றின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்கள். மால்கெம் என்ற சகோதரரைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர் 2014-ல் இறந்துபோனார்; சாகும்வரை அவர் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். அவரும் அவருடைய மனைவியும் யெகோவாவுக்குப் பல வருடங்களாக சேவை செய்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டமான சமயங்களும் இருந்தன, சந்தோஷமான சமயங்களும் இருந்தன. “வாழ்க்கைங்கிறது நிச்சயமில்லாதது. அடுத்து என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது . . . யெகோவாவ முழுமையா சார்ந்திருக்கிறவங்கள அவர் ஆசீர்வதிக்கிறார்” என்று அவர் சொன்னார். சகோதரர் மால்கெம் நமக்குச் சொல்லும் ஆலோசனை இதுதான்: “யெகோவாவோட சேவையை சுறுசுறுப்பா, பலன் தர்ற விதத்துல செய்ய எப்பவும் ஜெபம் செய்யுங்க. நம்மால செய்ய முடிஞ்ச விஷயத்துல கவனம் செலுத்தணும்; செய்ய முடியாததை பத்தி கவலைப்படக் கூடாது.” *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

19. (அ) 2017-ஆம் வருடத்திற்கான வசனம் பொருத்தமானது என்று ஏன் சொல்லலாம்? (ஆ) 2017-ஆம் வருடத்திற்கான வசனத்தை உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்படிக் கடைப்பிடிக்கப் போகிறீர்கள்?

19 இந்தப் பொல்லாத உலகம் “மேலும் மேலும்” மோசமாகிக்கொண்டே போகிறது; எதிர்காலத்தில், நிலைமைகள் இதைவிட மோசமாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம். (2 தீ. 3:1, 13) நம்முடைய பிரச்சினைகளை நினைத்து கவலையில் மூழ்கிவிடாமல் இருப்பது, முன்பைவிட இப்போது ரொம்ப முக்கியம். நாம் யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும்; நம்மால் செய்ய முடிந்தவற்றின்மீது நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். அதனால்தான், 2017-ஆம் வருடத்திற்கான வசனம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அந்த வசனம் இதுதான்: “யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்.”—சங். 37:3.

2017-ஆம் வருடத்திற்கான வசனம்: