Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

“உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் [யெகோவா] அனுமதிக்க மாட்டார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 10:13) அப்படியென்றால், நம்மால் எதைச் சகித்துக்கொள்ள முடியுமென்று யெகோவா முன்கூட்டியே தீர்மானிக்கிறார் என்றும், அதை வைத்து, நாம் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்பட வேண்டுமென்று அவர் முடிவு செய்கிறார் என்றும் அர்த்தமா?

இது உண்மையென்றால், நம்முடைய வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, ஒரு சகோதரருடைய மகன் தற்கொலை செய்துகொள்கிறார். அவருடைய அப்பா இப்படிக் கேட்கிறார்: ‘இந்த துயரத்தை என்னாலயும் என்னோட மனைவியாலயும் சகிக்க முடியும்னு யெகோவா முன்கூட்டியே முடிவு செஞ்சுட்டாரா? அப்படி முடிவு செஞ்சதுனாலதான் இது நடந்துச்சா?’ இந்த உலகத்தில், நம்மில் நிறைய பேர் துன்பதுயரங்களை அனுபவிக்கிறோம். அதற்காக, நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் யெகோவாதான் கட்டுப்படுத்துகிறார் என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?

நம்மால் எதைச் சகித்துக்கொள்ள முடியும் என்பதை யெகோவா முன்கூட்டியே தீர்மானிக்கிறார் என்றும், அதை வைத்து, நாம் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்பட வேண்டுமென்று முடிவு செய்கிறார் என்றும் நம்புவதற்கு பைபிளில் எந்தக் காரணமும் இல்லை. 1 கொரிந்தியர் 10:13-ல் இருக்கிற பவுலின் வார்த்தைகளைக் கவனமாக ஆராய்ந்தால், நம்மால் இந்த முடிவுக்கு வர முடியும்! எதை வைத்து இந்த முடிவுக்கு வரலாம்? அதற்கான 4 காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

முதலாவதாக, சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்ற பரிசை யெகோவா எல்லா மனிதர்களுக்கும் கொடுத்திருக்கிறார். நாமாகவே சொந்தமாகத் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (உபா. 30:19, 20; யோசு. 24:15) யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்தால், யெகோவா நம்மை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கலாம். (நீதி. 16:9) ஆனால், தவறான தீர்மானங்கள் எடுத்தால், அதனுடைய விளைவுகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். (கலா. 6:7) அப்படியென்றால், நமக்கு என்ன சோதனைகள் வர வேண்டுமென்று யெகோவா முன்கூட்டியே தீர்மானித்துவிட்டால், சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

இரண்டாவதாக, ‘எதிர்பாராத சம்பவங்களிலிருந்து’ யெகோவா நம்மைப் பாதுகாப்பது கிடையாது. (பிர. 9:11) நாம் தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருப்பதால் ஏதாவது சோக சம்பவம் நடந்துவிடலாம். ஒரு கோபுரம் இடிந்து விழுந்து, 18 பேர் செத்துப்போன துயர சம்பவத்தைப் பற்றி இயேசு சொன்னார். அவர்களுடைய மரணத்துக்குக் கடவுள் காரணம் இல்லை என்பதை அவர் தெளிவாக எடுத்துக்காட்டினார். (லூக். 13:1-5) ஒரு விபத்து ஏற்படுவதற்கு முன்பே, அதில் யாரெல்லாம் தப்பிப்பார்கள், யாரெல்லாம் இறந்துபோவார்கள் என்று கடவுள் தீர்மானித்துவிடுகிறார் என்று சொல்வது நியாயமாக இருக்குமா?

மூன்றாவதாக, நாம் ஒவ்வொருவரும் யெகோவாவுக்கு உத்தமமாக இருக்க வேண்டும். யெகோவா தன்னுடைய ஊழியர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பதால்தான் அவர்கள் அவருக்குச் சேவை செய்கிறார்கள் என்று சாத்தான் சொன்னான். சோதனைகள் வந்தால் அவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள் என்றும் அவன் சொன்னான். (யோபு 1:9-11; 2:4; வெளி. 12:10) அதனால், சில சோதனைகளிலிருந்து யெகோவா நம்மைப் பாதுகாத்தால், சாத்தான் சொன்னது உண்மையென்று ஆகிவிடும்.

நான்காவதாக, நமக்கு நடக்கும் எல்லாவற்றையும் யெகோவா முன்கூட்டியே தெரிந்துகொள்வதில்லை. அவர் விரும்பினால், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி அவரால் நிச்சயம் தெரிந்துகொள்ள முடியும். (ஏசா. 46:10) ஆனால், முன்கூட்டியே எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் தீர்மானிப்பதில்லை. (ஆதி. 18:20, 21; 22:12) யெகோவா அன்பானவராகவும் நீதியானவராகவும் இருப்பதால், நமக்கிருக்கும் சுதந்திரத்தை, அதாவது சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை, அவர் உயர்வாக மதிக்கிறார்.—உபா. 32:4; 2 கொ. 3:17.

அப்படியென்றால், “உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் [யெகோவா] அனுமதிக்க மாட்டார்” என்று பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன? சோதனைகளுக்கு முன்பு அல்ல, சோதனைகளை அனுபவிக்கும்போது யெகோவா என்ன செய்கிறார் என்பதைத்தான் பவுல் இங்கே விளக்கிக்கொண்டிருக்கிறார். யெகோவாவை நம்பியிருந்தால், நாம் எப்படிப்பட்ட சோதனைகளை அனுபவித்துக்கொண்டிருந்தாலும் அவர் நம்மைத் தாங்குவார். (சங். 55:22) பவுல் இப்படிச் சொன்னதற்கான 2 காரணங்களை இப்போது பார்க்கலாம்.

முதலாவதாக, நாம் அனுபவிக்கிற சோதனைகள், “மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற” சோதனைகள்தான்! சாத்தானுடைய உலகத்தில் இருக்கும்வரை, நம் எல்லாருக்கும் கஷ்டமான சூழ்நிலைகள் வரும், ஏன் பேரிடியும்கூட நம்மைத் தாக்கும்! ஆனால், யெகோவாவை நம்பியிருக்கும்போது, அவற்றை நம்மால் சமாளிக்க முடியும். அதோடு, யெகோவாவுக்கு உண்மையாக இருக்கவும் முடியும். (1 பே. 5:8, 9) ஒன்று கொரிந்தியர் 10-ஆம் அதிகாரத்தின் ஆரம்பத்தில், இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் அனுபவித்த சில சோதனைகளைப் பற்றி பவுல் எழுதினார். (1 கொ. 10:6-11) யெகோவாவை நம்பியிருந்தவர்கள் அந்தச் சோதனைகளைச் சகித்தார்கள். ஆனால், சில இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் யெகோவாவை நம்பாததால் அவருக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டார்கள்.

இரண்டாவதாக, “கடவுள் நம்பகமானவர்.” யெகோவா தன்னுடைய ஊழியர்களை எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டார் என்பதைக் கவனிக்கும்போது, “தன்னை நேசித்து தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடம்” அவர் மாறாத அன்பு காட்டுகிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (உபா. 7:9) தன்னுடைய வாக்குறுதிகளை யெகோவா எப்போதுமே காப்பாற்றுகிறார் என்பது நமக்குத் தெரியும். (யோசு. 23:14) அதனால், 2 விஷயங்களை நாம் உறுதியாக நம்பலாம். (1) நம்மால் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு யெகோவா எந்த சோதனையையும் அனுமதிக்க மாட்டார். (2) சோதனையிலிருந்து “விடுபடுவதற்கு” அவர் வழிசெய்வார்.

“நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் [யெகோவா] நமக்கு ஆறுதல் தருகிறார்”

தன்னை நம்பியிருப்பவர்களை சோதனையிலிருந்து விடுவிக்க யெகோவா என்ன செய்கிறார்? நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் சோதனையை அவரால் நீக்கிவிட முடியும் என்பது உண்மைதான். ஆனால், “அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் [யெகோவா] வழிசெய்வார்” என்று பவுல் சொன்னார். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? பெரும்பாலான சமயங்களில், நாம் தொடர்ந்து உண்மையோடு இருப்பதற்காக நம்மைப் பலப்படுத்துவதன் மூலம் யெகோவா நம்மை விடுவிக்கிறார். அவர் நம்மை விடுவிப்பதற்கான சில வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்:

  • “நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் [யெகோவா] நமக்கு ஆறுதல் தருகிறார்.” (2 கொ. 1:3, 4) தன்னுடைய சக்தி மற்றும் உண்மையுள்ள அடிமையின் மூலம், நம்முடைய மனதையும் இதயத்தையும் உணர்ச்சிகளையும் அவரால் கட்டுப்படுத்த முடியும்; நம்மை ஆறுதல்படுத்தவும் முடியும்.—மத். 24:45; யோவா. 14:16, அடிக்குறிப்பு; ரோ. 15:4.

  • தன்னுடைய சக்தியின் மூலம் யெகோவாவால் நம்மை வழிநடத்த முடியும். (யோவா. 14:26) பைபிள் பதிவுகளையும் நியமங்களையும் ஞாபகத்துக்குக் கொண்டுவரவும், அதன் மூலம் ஞானமான தீர்மானங்கள் எடுக்கவும் கடவுளுடைய சக்தி நமக்கு உதவும்.

  • நமக்கு உதவி செய்வதற்காக யெகோவாவால் தூதர்களைப் பயன்படுத்த முடியும்.—எபி. 1:14.

  • நம்முடைய சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி யெகோவாவால் நமக்கு உதவி செய்ய முடியும். அவர்களுடைய சொல்லும் செயலும் நம்மைப் பலப்படுத்தும்.—கொலோ. 4:11.

1 கொரிந்தியர் 10:13-லுள்ள பவுலின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நாம் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்பட வேண்டும் என்று யெகோவா தீர்மானிப்பதில்லை. நம் வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது, நாம் யெகோவாவை நம்பியிருந்தால் நம்மால் எப்படிப்பட்ட சோதனையையும் சகிக்க முடியும். நாம் அவருக்கு உண்மையோடு இருக்க வேண்டும் என்பதற்காக, யெகோவா நம்மை எப்போதும் விடுவிப்பார்.