Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எழுதப்பட்டுள்ள விஷயங்களுக்கு கவனம் செலுத்துவீர்களா?

எழுதப்பட்டுள்ள விஷயங்களுக்கு கவனம் செலுத்துவீர்களா?

“அவர்களுக்கு நடந்ததெல்லாம் . . . இந்த உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்கிற நம்மை எச்சரிப்பதற்காக எழுதப்பட்டிருக்கின்றன.”—1 கொ. 10:11.

பாடல்கள்: 11, 61

1, 2. யூதாவின் 4 ராஜாக்களுடைய உதாரணங்களைப் பற்றி நாம் ஏன் சிந்திக்கப் போகிறோம்?

ஒரு பாதை வழியாக ஒருவர் நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று வழுக்கி விழுவதைப் பார்க்கிறீர்கள். இப்போது, நீங்கள் அந்தப் பாதை வழியாக நடந்துபோகும்போது என்ன செய்வீர்கள்? கவனமாக நடந்து போவீர்கள், இல்லையா? அதே போல, மற்றவர்கள் செய்த தவறுகளைப் பார்க்கும்போது, நம்மால் அதே தவறுகளைச் செய்யாமல் இருக்க முடியும். பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிற சிலருடைய தவறுகளிலிருந்தும் நம்மால் பாடம் கற்றுக்கொள்ள முடியும்.

2 போன கட்டுரையில் நாம் பார்த்த யூதாவின் அந்த 4 ராஜாக்களும் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு சேவை செய்தார்கள். ஆனாலும், அவர்கள் பெரிய தவறுகளையும் செய்தார்கள். அவர்களுடைய அனுபவங்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த அனுபவங்களை ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால், நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அவர்கள் செய்த தவறுகளிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? அவர்கள் செய்த அதே தவறுகளை நாம் எப்படிச் செய்யாமல் இருக்கலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.ரோமர் 15:4-ஐ வாசியுங்கள்.

மனித ஞானத்தால் வரும் ஆபத்து

3-5. (அ) யெகோவாவுக்கு முழு இதயத்தோடு சேவை செய்தாலும், ஆசா என்ன தவறு செய்தார்? (ஆ) பாஷாவுக்கு எதிரான சண்டையில் ஆசா ஏன் மனிதர்களை நம்பியிருந்தார்?

3 முதலில் ஆசாவைப் பற்றி பார்க்கலாம். 10 லட்சம் எத்தியோப்பியர்கள் யூதாவைத் தாக்க வந்தபோது, அவர் யெகோவாவையே நம்பியிருந்தார். ஆனால் இஸ்ரவேல் ராஜாவான பாஷா, யூதா ராஜ்யத்தின் எல்லைக்குப் பக்கத்திலிருந்த இஸ்ரவேல் ராஜ்யத்தின் முக்கிய நகரமான ராமாவைக் கட்ட ஆரம்பித்தபோது, ஆசா யெகோவாவை நம்பியிருக்கவில்லை. (2 நா. 16:1-3) தன்னுடைய ஞானத்தையே நம்பியிருந்தார்! பாஷாவைத் தாக்குவதற்காக சீரியா ராஜாவான பெனாதாத்துக்கு லஞ்சம் கொடுத்தார். சீரியர்கள் இஸ்ரவேலின் நகரங்களைத் தாக்கியபோது, பாஷா “ராமா நகரத்தைக் கட்டுவதை உடனடியாக நிறுத்திவிட்டார்.” (2 நா. 16:5) மேலோட்டமாகப் பார்த்தால், ஆசா செய்தது சரியாகத் தோன்றலாம்.

4 ஆனால், ஆசா செய்ததைப் பற்றி யெகோவா என்ன நினைத்தார்? ஆசா யெகோவாவை நம்பாமல் இருந்ததால், அவரைத் திருத்துவதற்காக தீர்க்கதரிசியான அனானியை யெகோவா அனுப்பினார். (2 நாளாகமம் 16:7-9-ஐ வாசியுங்கள்.) “இப்போதுமுதல் நீங்கள் நிறைய போர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அனானி ஆசாவிடம் சொன்னார். ஆசா, ராமாவைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது என்னவோ, உண்மைதான்! ஆனால் அதற்குப் பிறகு, தன்னுடைய ஆட்சி காலம் முழுவதும், அவரும் அவருடைய மக்களும் நிறைய போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

5 ஆசாவை நினைத்து யெகோவா சந்தோஷப்பட்டார் என்று போன கட்டுரையில் பார்த்தோம். ஆசா ஒரு அபூரண மனிதராக இருந்தாலும், தனக்கு முழு இதயத்தோடு அவர் சேவை செய்ததை யெகோவா பார்த்தார். (1 ரா. 15:14) இருந்தாலும், தான் எடுத்த தவறான தீர்மானங்களால் வந்த விளைவுகளை ஆசாவால் தடுக்க முடியவில்லை. யெகோவாவை நம்பாமல், ஆசா ஏன் தன்னையும் மற்றவர்களையும் நம்பியிருந்தார்? போர் தந்திரங்களைப் பயன்படுத்தினால் போரில் ஜெயித்துவிடலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது, மற்றவர்களுடைய தவறான ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி செய்திருக்கலாம்.

6. ஆசா செய்த தவறிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஒரு உதாரணம் கொடுங்கள்.

6 ஆசா செய்த தவறிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? எல்லா சூழ்நிலைகளிலும் நாம் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும், நம்முடைய ஞானத்தை நம்பியிருக்கக் கூடாது. சின்னப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பெரிய பிரச்சினையாக இருந்தாலும் சரி, உதவிக்காக யெகோவாவிடம் கேட்கிறோமா? நமக்கு சரியென்று தோன்றுகிற வழியில் பிரச்சினையைச் சரி செய்ய முயற்சி செய்வதன் மூலம், நம்மையே நம்பியிருக்கிறோமா? அல்லது, முதலில் பைபிள் என்ன சொல்கிறது என்று பார்த்துவிட்டு, அதன் அடிப்படையில் நம்முடைய பிரச்சினையைச் சரி செய்ய முயற்சி செய்கிறோமா? உதாரணத்துக்கு, சபைக் கூட்டத்துக்கோ மாநாட்டுக்கோ நீங்கள் போக முடியாதபடி உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களைத் தடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது என்ன செய்வீர்கள்? இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரிந்துகொள்ள யெகோவாவிடம் உதவி கேட்பீர்களா? பல நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு ஒரு வேலை கிடைப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது என்ன செய்வீர்கள்? வேலை போனாலும் பரவாயில்லை என்று வாராவாரம் கூட்டங்களுக்குப் போக வேண்டியிருப்பதை உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களா? நம்முடைய பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி, சங்கீதக்காரனின் இந்த அறிவுரையை நாம் மறந்துவிடக் கூடாது: “உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு. அவரையே சார்ந்திரு, அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்.”—சங். 37:5.

கெட்ட சகவாசத்தால் வரும் ஆபத்து

7, 8. யோசபாத் என்ன தவறுகள் செய்தார், அதனால் என்ன ஆனது? (ஆரம்பப் படம்)

7 ஆசாவின் மகன் யோசபாத் ராஜாவின் உதாரணத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். யெகோவாவுக்குப் பிடித்த நிறைய நல்ல குணங்கள் அவரிடம் இருந்தன. அவர் யெகோவாவை நம்பியபோது, நிறைய நல்ல விஷயங்களைச் செய்தார். அதே சமயத்தில், தன்னுடைய வாழ்க்கையில் சில மோசமான தீர்மானங்களையும் எடுத்தார். உதாரணத்துக்கு, பொல்லாத ராஜாவான ஆகாபின் மகளை தன்னுடைய மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார். பிறகு, மிகாயா தீர்க்கதரிசி கொடுத்த எச்சரிக்கையையும் மீறி சீரியர்களோடு போர் செய்வதற்காக ஆகாபோடு கூட்டுச் சேர்ந்தார். அந்தப் போரில், சீரியர்கள் யோசபாத்தைத் தாக்கினார்கள், அவரைக் கொலை செய்யவும் முயற்சி செய்தார்கள். (2 நா. 18:1-32) பிறகு, அவர் எருசலேமுக்குத் திரும்பியபோது, தீர்க்கதரிசியான யெகூ அவரிடம் இப்படிக் கேட்டார்: “மோசமான ஆட்களுக்கு நீங்கள் உதவி செய்தது சரியா? யெகோவாவை வெறுக்கிற ஆட்கள்மீது அன்பு காட்டியது சரியா?”2 நாளாகமம் 19:1-3-ஐ வாசியுங்கள்.

8 தனக்கு நடந்த சம்பவத்திலிருந்தும், தீர்க்கதரிசி கொடுத்த எச்சரிக்கையிலிருந்தும் யோசபாத் பாடம் கற்றுக்கொண்டாரா? இல்லை! அவர் யெகோவாமீது இன்னும் அன்பு வைத்திருந்தாலும், அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், யெகோவாவின் எதிரியாக இருந்த ஒருவரிடம் அவர் மறுபடியும் நட்பு வைத்துக்கொண்டார். ஆகாபின் மகன் அகசியா ராஜாதான் அந்தப் புது நண்பர்! யோசபாத்தும் அகசியாவும் சேர்ந்து கப்பல்களைக் கட்டினார்கள். ஆனால், அந்தக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கு முன்பே அவை சேதமடைந்துவிட்டன!—2 நா. 20:35-37.

9. யெகோவாவை வணங்காதவர்களோடு நெருங்கிய நட்பு வைத்துக்கொண்டால் என்ன ஆகலாம்?

9 யோசபாத்துக்கு நடந்த விஷயத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யோசபாத் ஒரு நல்ல ராஜாவாக இருந்தார், சரியானதைச் செய்தார். அவர் “யெகோவாவை முழு இதயத்தோடு” வணங்கினார். (2 நா. 22:9) அப்படியிருந்தும், யெகோவாவை வணங்காத ஆட்களோடு அவர் நேரம் செலவு செய்தார். அதனால், அவர் மோசமான பிரச்சினைகளை எதிர்ப்பட்டார். ஏன், கொலை செய்யப்படும் சூழ்நிலையைக்கூட அவர் எதிர்ப்பட்டார்! “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மையாக இருக்கிறது! (நீதி. 13:20) யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அதற்காக யெகோவாவை வணங்காதவர்களோடு நாம் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால், நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்வோம்.

10. (அ) கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள், யோசபாத்திடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) எதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

10 ஒருவேளை நமக்குக் கல்யாணம் செய்துகொள்ளும் ஆசையிருந்தால் யோசபாத்திடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? ‘எனக்கு ஏத்த துணை யெகோவாவின் சாட்சிகள்ல கிடைக்க மாட்டாங்க’ என்று நினைத்துக்கொண்டு, யெகோவாவை வணங்காத ஒருவர்மீது நாம் காதல் உணர்வுகளை வளர்த்துக்கொள்ளலாம். அல்லது, ‘உனக்கு வயசாயிட்டே போகுது, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ’ என்று நம்முடைய சொந்தக்காரர்கள் சொல்லலாம். அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் விதத்தில் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். ஆனால், சரியான துணை நமக்குக் கிடைக்கவில்லை என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? யோசபாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை யோசித்துப் பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும். யெகோவாவின் வழிநடத்துதலுக்காக அவர் எப்போதும் ஜெபம் செய்தார். (2 நா. 18:4-6) ஆனால், யெகோவாவை நேசிக்காத ஆகாபிடம் நட்பு வைத்துக்கொள்ள ஆரம்பித்தவுடன், யெகோவாவின் எச்சரிக்கைகளை அவர் அசட்டை செய்தார். “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன” என்பதை யோசபாத் மறந்திருக்கக் கூடாது. (2 நா. 16:9) யெகோவா நமக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறார் என்பதை நாமும் மறந்துவிடக் கூடாது. நாம் என்ன சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அன்புக்கும் அரவணைப்புக்கும் நாம் ஏங்குவது யெகோவாவுக்குத் தெரியாதா? அந்தத் தேவையை அவர் பூர்த்திசெய்ய மாட்டாரா? அதைச் சரியான சமயத்தில் அவர் பூர்த்திசெய்வார் என்று நம்புங்கள்!

விசுவாசிகளாக இல்லாதவர்களோடு பிணைக்கப்படாதீர்கள் (பாரா 10)

தலைக்கனம் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்

11, 12. (அ) எசேக்கியாவின் இதயத்தில் இருப்பதை எது வெளிப்படுத்தியது? (ஆ) யெகோவா ஏன் எசேக்கியாவை மன்னித்தார்?

11 எசேக்கியாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அவருடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு யெகோவா அவருக்கு உதவினார். (2 நாளாகமம் 32:31-ஐ வாசியுங்கள்.) எசேக்கியாவின் உடல்நிலை மிகவும் மோசமானபோது, அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று யெகோவா சொன்னார். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒரு அடையாளத்தையும் தந்தார். படிக்கட்டில் விழுந்த நிழல் பத்துப்படிகள் பின்னால் போகும்படி யெகோவா செய்தார். பிறகு, அந்த அடையாளத்தைப் பற்றி கூடுதலான விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று பாபிலோன் ராஜா ஆசைப்பட்டதாகத் தெரிகிறது. அதனால், அந்த ராஜா எசேக்கியாவிடம் ஆட்களை அனுப்பினார். (2 ரா. 20:8-13; 2 நா. 32:24) அந்த ஆட்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா எசேக்கியாவிடம் சொல்லவில்லை. அவர் என்ன செய்வார் என்று பார்ப்பதற்காக யெகோவா அவரை “விட்டுவிட்டார்” என்று பைபிள் சொல்கிறது. பாபிலோனிலிருந்து வந்த அந்த ஆட்களுக்கு, தன்னிடம் இருந்த எல்லா பொக்கிஷங்களையும் எசேக்கியா காட்டினார். அவர் செய்த இந்த முட்டாள்தனமான செயல், அவருடைய ‘இதயத்தில் என்ன இருந்தது’ என்பதைக் காட்டியது.

12 எசேக்கியாவுக்கு எப்படித் தலைக்கனம் வந்தது என்பதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. அவருக்குத் தலைக்கனம் வந்ததால், “கடவுள் செய்த உதவிக்கு அவர் நன்றி காட்டவில்லை.” ஒருவேளை, அசீரியர்களை ஜெயித்ததாலோ, தன்னை யெகோவா குணப்படுத்தியதாலோ எசேக்கியாவுக்குத் தலைக்கனம் வந்திருக்கலாம். அவருக்கு இருந்த செல்வச் செழிப்பும் பேர் புகழும்கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். முழு இதயத்தோடு அவர் யெகோவாவுக்குச் சேவை செய்திருந்தாலும், ஒரு சமயத்தில் அவர் தலைக்கனத்தோடு நடந்துகொண்டது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், பிறகு எசேக்கியா “தாழ்மையாக நடந்துகொண்டார்.” அதனால், யெகோவா அவரை மன்னித்தார்.—2 நா. 32:25-27; சங். 138:6.

13, 14. (அ) என்ன மாதிரியான சூழ்நிலையில் நம் இதயத்தில் இருப்பது வெளிப்பட்டுவிடும்? (ஆ) மற்றவர்கள் நம்மைப் புகழும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

13 எசேக்கியா செய்த தவறிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அசீரியர்களைத் தோற்கடிக்கவும், நோயிலிருந்து குணமாகவும் எசேக்கியாவுக்கு யெகோவா உதவி செய்தார். அதற்குப் பிறகுதான் எசேக்கியாவுக்குத் தலைக்கனம் வந்தது. இப்போது, நம்முடைய விஷயத்துக்கு வரலாம். நமக்கு நல்லது நடக்கும்போதும், மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போதும் நாம் என்ன செய்வோம்? நாம் நடந்துகொள்ளும் விதம் நம் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதைக் காட்டிவிடும். உதாரணத்துக்கு, ஒரு சகோதரர், நன்றாகத் தயாரித்து ஒரு பெரிய கூட்டத்துக்கு முன்னால் பேச்சு கொடுப்பதாக வைத்துக்கொள்ளலாம். நிறைய பேர் வந்து அவரைப் பாராட்டுகிறார்கள். அப்போது அவர் எப்படி நடந்துகொள்வார்?

14 “கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின்பு, ‘நாங்கள் ஒன்றுக்கும் உதவாத அடிமைகள்; செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்று இயேசு சொன்னதை நாம் எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். (லூக். 17:10) எசேக்கியாவுக்குத் தலைக்கனம் வந்தபோது, யெகோவா தனக்கு எப்படியெல்லாம் உதவி செய்தார் என்பதை அவர் மறந்துவிட்டார். நாம் நன்றாகப் பேச்சு கொடுத்ததற்காக யாராவது நம்மைப் பாராட்டினால், நாம் எப்படித் தாழ்மையாக நடந்துகொள்ளலாம்? யெகோவா நமக்குச் செய்திருப்பதை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அவரைப் பற்றியும், அவர் நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதைப் பற்றியும் நாம் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். அவர் நமக்கு பைபிளையும், அவருடைய சக்தியையும் கொடுத்ததால்தான் நம்மால் நன்றாகப் பேச்சு கொடுக்க முடிந்தது!

தீர்மானங்கள் எடுக்கும்போது கவனமாக இருங்கள்

15, 16. யோசியா எப்படி அவருடைய சாவை அவரே தேடிக்கொண்டார்?

15 கடைசியாக, யோசியா ராஜாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அவர் ஒரு நல்ல ராஜாவாக இருந்தார். ஆனால், அவர் செய்த ஒரு தவறால், அவருடைய சாவை அவரே தேடிக்கொண்டார். (2 நாளாகமம் 35:20-22-ஐ வாசியுங்கள்.) அவர் அப்படி என்ன தவறு செய்தார்? காரணமே இல்லாமல், எகிப்து ராஜாவான நேகோவை எதிர்த்து போர் செய்யப் போனார். போர் செய்ய விருப்பம் இல்லை என்று நேகோ சொல்லியும் போர் செய்யப் போனார். ஆனால், நேகோ சொன்னது “கடவுள் சொன்ன செய்தி” என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், யோசியா ஏன் போர் செய்யப் போனார்? அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை.

16 நேகோ சொன்னது, யெகோவாவின் செய்திதானா என்று தெரிந்துகொள்வதற்கு யோசியா என்ன செய்திருக்கலாம்? யெகோவாவின் உண்மையுள்ள தீர்க்கதரிசிகளில் ஒருவரான எரேமியாவிடம் இதைப் பற்றி கேட்டிருக்கலாம். ஆனால், அவர் கேட்கவில்லை. (2 நா. 35:23, 25) இன்னொரு விஷயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். நேகோ எருசலேமுக்கு எதிராகப் போர் செய்வதற்காக கர்கேமிசுக்குப் போய்க்கொண்டிருக்கவில்லை. வேறொரு தேசத்துக்கு எதிராகப் போர் செய்வதற்காகத்தான் அவர் போய்க்கொண்டிருந்தார். யெகோவாவையோ அவருடைய மக்களையோ அவமானப்படுத்த வேண்டும் என்பது நேகோவின் நோக்கமாக இருக்கவில்லை. நேகோவை எதிர்த்து போர் செய்யப் போவதற்கு முன்பு, இந்த எல்லா விஷயங்களையும் யோசியா நன்றாக யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நாம் ஒரு பிரச்சினையில் இருக்கும்போது, நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான், தீர்மானம் எடுக்க வேண்டும்.

17. நமக்குப் பிரச்சினைகள் வரும்போது, யோசியா செய்தது போன்ற ஒரு தவறை நாம் எப்படிச் செய்யாமல் இருக்கலாம்?

17 தீர்மானம் எடுப்பதற்கு முன்பு, எந்த பைபிள் நியமங்கள் நமக்கு உதவும் என்றும், அதை நம்முடைய வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். சில சமயங்களில், நம்முடைய பிரசுரங்களை வைத்து நாம் இன்னும் கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கலாம். அல்லது ஒரு மூப்பரிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கலாம். அப்போது, வேறு சில பைபிள் நியமங்களையும் யோசித்துப் பார்க்க அந்த மூப்பர் உதவுவார். இப்போது இதைக் கற்பனை செய்து பாருங்கள்: ஒரு சகோதரி, குறிப்பிட்ட ஒரு நாளில் ஊழியத்துக்குப் போகலாம் என்று நினைக்கிறார். (அப். 4:20) ஆனால், யெகோவாவின் சாட்சியாக இல்லாத அவருடைய கணவர், அன்று ஊழியத்துக்குப் போக வேண்டாம் என்று சொல்கிறார். இரண்டு பேரும் நேரம் செலவு செய்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதாகவும், அதனால் அவரை வெளியே கூட்டிக்கொண்டு போக ஆசைப்படுவதாகவும் அவர் சொல்கிறார். இப்போது, ஞானமான ஒரு தீர்மானம் எடுப்பதற்காக அந்தச் சகோதரி பைபிள் வசனங்களை எடுத்துப் பார்க்க வேண்டும். கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை அந்தச் சகோதரி யோசித்துப் பார்க்க வேண்டும். அதோடு, சீஷர்களை உருவாக்க வேண்டுமென்ற இயேசுவின் கட்டளையையும் அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். (மத். 28:19, 20; அப். 5:29) அதுமட்டுமல்ல, மனைவி கணவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதையும், வளைந்துகொடுக்க வேண்டும் என்பதையும் அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். (எபே. 5:22-24; பிலி. 4:5) அந்தச் சகோதரியின் கணவர், தன்னுடைய மனைவி ஊழியத்துக்கே போகக் கூடாது என்று சொல்கிறாரா, அல்லது அந்த ஒருநாள் மட்டும் மனைவியோடு சேர்ந்து நேரம் செலவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா? யெகோவாவின் ஊழியர்களான நாம், வளைந்துகொடுப்பவர்களாகவும், யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் எடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

முழு இதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள், சந்தோஷமாக இருங்கள்!

18. யூதாவின் 4 ராஜாக்களுடைய உதாரணங்களை ஆழமாக யோசித்துப் பார்த்ததிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

18 யூதாவின் 4 ராஜாக்கள் செய்த ஏதோவொரு தவறை சில சமயங்களில் நாமும் செய்துவிடலாம். (1) நம்முடைய ஞானத்தையோ மனித ஞானத்தையோ நம்பிவிடலாம். (2) கெட்ட ஆட்களோடு சகவாசம் வைத்துக்கொள்ளலாம். (3) நமக்குத் தலைக்கனம் வந்துவிடலாம். (4) கடவுளுடைய விருப்பம் என்னவென்று தெரிந்துகொள்ளாமலேயே தீர்மானங்கள் எடுத்துவிடலாம். இருந்தாலும், யெகோவா அந்த 4 ராஜாக்களிடம் இருந்த நல்லதைப் பார்த்தார். அதே போல, நம்மிடம் இருக்கிற நல்லதையும் பார்க்கிறார். நாம் அவரை எந்தளவு நேசிக்கிறோம் என்பதையும், முழு இதயத்தோடு அவருக்குச் சேவை செய்ய எந்தளவு ஆசைப்படுகிறோம் என்பதையும் அவர் பார்க்கிறார். அதனால், மோசமான தவறுகளைச் செய்யாமல் இருப்பதற்கு, இந்த 4 ராஜாக்களின் உதாரணங்களைக் கொடுத்திருக்கிறார். இந்த பைபிள் பதிவுகளை நாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும், இவர்களைப் பற்றிய பதிவை நமக்குக் கொடுத்ததற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்!