Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அரசாங்கம் வரும்போது எவையெல்லாம் ஒழிந்துவிடும்?

கடவுளுடைய அரசாங்கம் வரும்போது எவையெல்லாம் ஒழிந்துவிடும்?

“இந்த உலகமும் அதன் ஆசையும் ஒழிந்துபோகும்; கடவுளுடைய விருப்பத்தை செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.”—1 யோ. 2:17.

பாடல்கள்: 134, 24

1, 2. (அ) இந்தப் பொல்லாத உலகம் எந்த விதத்தில் அந்தக் குற்றவாளியைப் போல இருக்கிறது? (ஆரம்பப் படம்) (ஆ) இந்த உலகம் முடிவுக்கு வந்த பிறகு பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாரும் எதை ஒத்துக்கொள்வார்கள்?

இந்தக் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள். தன்னுடைய சிறைச்சாலை அறையிலிருந்து ஒரு கொடூரமான குற்றவாளி நடந்துவருகிறான். அப்போது, அவனோடு இருக்கிற காவலர்கள் அவனைப் பார்த்து, “செத்தவன் நடந்துவருகிறான்!” என்று சத்தமாகச் சொல்கிறார்கள். ஆனால், அவன் இன்னும் சாகவில்லை, நன்றாகத்தான் இருக்கிறான். பிறகு ஏன் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்? அந்தக் குற்றவாளிக்கு ஏற்கெனவே மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள், கொஞ்ச நேரத்தில் அதை நிறைவேற்றப்போகிறார்கள். அதனால், ஒரு விதத்தில் அவன் ஏற்கெனவே செத்துப்போன மாதிரிதான்! *(அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

2 நாம் வாழ்கிற இந்தப் பொல்லாத உலகமும், சாகப்போகிற அந்தக் குற்றவாளியைப் போலத்தான் இருக்கிறது. ‘இந்த உலகம் ஒழிந்துபோகும்’ என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 2:17) அது நிச்சயம் நடக்கும், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை! ஆனால், இந்த உலகத்தின் முடிவுக்கும், அந்தக் குற்றவாளியின் சாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. அது என்ன? அந்தக் குற்றவாளிக்கு அநியாயமாகத் தண்டனை கொடுத்துவிட்டதாகச் சிலர் நினைக்கலாம். கடைசி நிமிடத்தில்கூட அவனைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் போராட்டம் செய்யலாம். ஆனால், இந்த உலகத்துக்கு முடிவு கட்டுவதாக யெகோவா எடுத்த தீர்மானம் மிகச் சரியானது; ஏனென்றால், யெகோவா பரிபூரணமான ஒரு நீதிபதி! (உபா. 32:4) இந்த உலகத்தின் முடிவு ஒருபோதும் தாமதிக்காது. அது முடிவுக்கு வந்த பிறகு, யெகோவாவின் தீர்ப்பு நீதியானது என்பதை பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாரும் ஒத்துக்கொள்வார்கள். அப்போது, எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டு நாம் நிம்மதியாக இருப்போம்!

3. கடவுளுடைய அரசாங்கம் வரும்போது என்ன 4 விஷயங்கள் ஒழிந்துவிடும்?

3 இந்த ‘உலகத்தோடு’ எவையெல்லாம் ‘ஒழிந்துபோகும்’? இன்று நம்முடைய வாழ்க்கையின் ஒரு பாகமாகவே ஆகிவிட்ட எல்லா கெட்ட விஷயங்களும் ஒழிந்துபோகும். இது, ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியின்’ ஒரு முக்கிய விஷயம்! (மத். 24:14) கடவுளுடைய அரசாங்கம் வரும்போது ஒழிந்துபோகப் போகிற இந்த 4 விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்: பொல்லாத ஜனங்கள், ஊழல் நிறைந்த அமைப்புகள், கெட்ட செயல்கள், மோசமான நிலைமைகள். இவை ஒவ்வொன்றையும் பற்றி சிந்திக்கும்போது, இந்த 3 கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்: (1) இவை இன்று நம்மை எப்படிப் பாதிக்கின்றன? (2) யெகோவா இவற்றை என்ன செய்யப்போகிறார்? (3) இவற்றையெல்லாம் யெகோவா எப்படி மாற்றப்போகிறார்?

பொல்லாத ஜனங்கள்

4. பொல்லாதவர்களால் நாம் எந்தெந்த வழிகளில் பாதிக்கப்படுகிறோம்?

4 பொல்லாத ஜனங்களால் இன்று நாம் எப்படிப் பாதிக்கப்படுகிறோம்? இந்தக் கடைசி நாட்களில், “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். “பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் மேலும் மேலும் மோசமாவார்கள்” என்றும் அவர் சொன்னார். (2 தீ. 3:1-5, 13) இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறி வருவதை உங்களால் பார்க்க முடிகிறதா? பயங்கர ரவுடிகள், இன வெறியர்கள், கொடூரமான குற்றவாளிகள் போன்ற பொல்லாதவர்களால் நம்மில் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட ஆட்களில் சிலர், பகிரங்கமாகத் தவறுகள் செய்கிறார்கள். மற்றவர்கள், ஜனங்களுக்கு நல்லது செய்வது போல நடிக்கிறார்கள்; ஆனால், உண்மையில் அவர்களும் பொல்லாதவர்கள்தான்! ஒருவேளை, குற்றச் செயல்களால் நாம் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், அவை ஏதோவொரு விதத்தில் நம்மைப் பாதிக்கத்தான் செய்கின்றன. உதாரணத்துக்கு, குழந்தைகளையும் வயதானவர்களையும் அப்பாவிகளையும் இந்தப் பொல்லாதவர்கள் கொடுமைப்படுத்துவதைக் கேள்விப்படும்போது நாம் வேதனைப்படுகிறோம். இந்தப் பொல்லாதவர்கள், மிருகத்தனமாகவும் பேய்த்தனமாகவும் நடந்துகொள்கிறார்கள். (யாக். 3:15) நம்மைச் சுற்றி இது போன்ற கெட்ட செய்திகள் இருந்தாலும், யெகோவாவின் வார்த்தை நமக்கு நல்ல செய்தியைச் சொல்கிறது!

5. (அ) பொல்லாதவர்களுக்கு இன்னும் என்ன வாய்ப்பு இருக்கிறது? (ஆ) பொல்லாதவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்?

5 பொல்லாத ஜனங்களை யெகோவா என்ன செய்வார்? பொல்லாதவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கு யெகோவா இப்போது வாய்ப்பு கொடுத்து வருகிறார். (ஏசா. 55:7) தனிப்பட்ட நபர்களுக்கு இன்னும் தீர்ப்புக் கொடுக்கப்படவில்லை, இந்த உலகத்துக்குத்தான் தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்வரை இந்த நபர்கள் தங்களை மாற்றிக்கொள்ளாமல், இந்த உலகத்தைத் தொடர்ந்து ஆதரித்தால் என்ன ஆகும்? பொல்லாதவர்கள் எல்லாரையும் இந்தப் பூமியிலிருந்து ஒழிக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 37:10-ஐ வாசியுங்கள்.) இன்று நிறைய பேர், தாங்கள் செய்யும் தவறுகளை எப்படி மூடிமறைப்பது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்; பெரும்பாலும், அவர்கள் தண்டிக்கப்படுவதே இல்லை. (யோபு 21:7, 9) ஆனால், “மனுஷன் செய்வதையெல்லாம் கடவுள் கவனிக்கிறார். அவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் அவர் பார்க்கிறார். தப்பு செய்கிறவர்கள் எங்கேயும் ஒளிந்துகொள்ள முடியாது. எப்பேர்ப்பட்ட இருட்டிலும் மறைந்துகொள்ள முடியாது” என்று பைபிள் சொல்கிறது. (யோபு 34:21, 22) அதனால், பொல்லாதவர்கள் யெகோவாவிடமிருந்து தப்பிக்கவே முடியாது. எப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களாலும் யெகோவாவை ஏமாற்ற முடியாது. அர்மகெதோனுக்குப் பிறகு, எங்கே தேடினாலும் பொல்லாதவர்களைப் பார்க்க முடியாது. அவர்கள் நிரந்தரமாக அழிக்கப்பட்டிருப்பார்கள்!—சங். 37:12-15.

6. பொல்லாதவர்கள் ஒழிந்த பிறகு யார் மட்டுமே இருப்பார்கள், இதை ஏன் ஒரு சந்தோஷமான செய்தி என்று சொல்லலாம்?

6 பொல்லாதவர்கள் ஒழிந்த பிறகு யார் இருப்பார்கள்? யெகோவா இப்படி வாக்குக் கொடுக்கிறார்: “தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.” பிறகு அதே சங்கீதத்தில், “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. (சங். 37:11, 29) இங்கே சொல்லப்பட்டிருக்கிற ‘தாழ்மையானவர்களும்,’ ‘நீதிமான்களும்’ யார்? யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்கிற, அவருக்குக் கீழ்ப்படிகிற மனத்தாழ்மையுள்ள ஆட்கள்தான் அந்தத் தாழ்மையானவர்கள்! யெகோவாவுடைய பார்வையில் எது சரியோ, அதைச் சந்தோஷமாகச் செய்கிறவர்கள்தான் அந்த நீதிமான்கள்! இன்று இந்த உலகத்தில், நீதிமான்களைவிட பொல்லாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் புதிய உலகத்தில், தாழ்மையானவர்களும் நீதிமான்களும் மட்டும்தான் இருப்பார்கள்; அவர்கள் இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார்கள்!

ஊழல் நிறைந்த அமைப்புகள்

7. ஊழல் நிறைந்த அமைப்புகளால் நாம் எப்படிப் பாதிக்கப்படுகிறோம்?

7 ஊழல் நிறைந்த அமைப்புகள் இன்று நம்மை எப்படிப் பாதிக்கின்றன? இந்த உலகத்தில் நடக்கிற அநியாய அக்கிரமங்களுக்கு பெரும்பாலும் தனி நபர்கள் காரணம் அல்ல, அமைப்புகள்தான் காரணம்! மத அமைப்புகள் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றுகின்றன. உதாரணத்துக்கு, கடவுளைப் பற்றிய உண்மை, பைபிளின் நம்பகத்தன்மை, பூமி மற்றும் மனிதர்களுக்கான எதிர்கால நம்பிக்கை போன்ற விஷயங்களில் மக்களை ஏமாற்றுகின்றன. ஊழல் நிறைந்த அரசாங்கங்கள், போர்களையும் இனக் கலவரங்களையும் தூண்டிவிடுகின்றன. ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அடக்கி ஒடுக்குகின்றன. இது போன்ற அரசாங்கங்கள், பாரபட்சம் காட்டுவதன் மூலமும் லஞ்சம் வாங்குவதன் மூலமும் செழித்தோங்குகின்றன. பேராசை பிடித்த அமைப்புகள் சுற்றுச்சூழலை நாசப்படுத்துகின்றன, இயற்கை வளங்களை அழிக்கின்றன. அதோடு, ஏமாளிகளை ஏமாற்றி சிலரை மட்டும் பணக்காரர்களாக ஆக்குவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை ஏழ்மையில் தவிக்க விடுகின்றன. இந்த உலகத்தில் இன்று நடக்கிற பெரும்பாலான துன்ப துயரங்களுக்கு ஊழல் நிறைந்த அமைப்புகள்தான் காரணம் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

8. இன்று நிறைய மக்களின் பார்வையில் பலமானதாகத் தோன்றுகிற அமைப்புகளுக்கு என்ன ஆகும் என்று பைபிள் சொல்கிறது?

8 ஊழல் நிறைந்த அமைப்புகளை யெகோவா என்ன செய்வார்? பொய் மத அமைப்புகள் எல்லாவற்றையும் மகா பாபிலோன் எனப்படுகிற விபச்சாரி என்று பைபிள் சொல்கிறது. இந்தப் பொய் மத அமைப்புகளை அரசியல் அமைப்புகள் தாக்கும்போது, மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும். (வெளி. 17:1, 2, 16; 18:1-4) இந்த மத அமைப்புகள் அடியோடு அழிக்கப்படும். அப்படியென்றால், ஊழல் நிறைந்த மற்ற அமைப்புகளுக்கு என்ன ஆகும்? அந்த அமைப்புகள் பலமாகவும் உறுதியாகவும் இருப்பதால், பைபிள் அவற்றை மலைகளுக்கும் தீவுகளுக்கும் ஒப்பிட்டுப் பேசுகிறது. (வெளிப்படுத்துதல் 6:14-ஐ வாசியுங்கள்.) ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிக்காத அந்த அரசாங்கங்களும் மற்ற எல்லா அமைப்புகளும் அழிக்கப்படும் என்றும் பைபிள் சொல்கிறது. இது மிகுந்த உபத்திரவத்தின் கடைசியில் நடக்கும். (எரே. 25:31-33) அதற்குப் பிறகு, ஊழல் நிறைந்த அமைப்புகளே இருக்காது!

9. புதிய பூமி நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் என்பதில் நாம் எப்படி உறுதியாக இருக்கலாம்?

9 ஊழல் நிறைந்த அரசாங்கங்களை எது மாற்றீடு செய்யும்? அர்மகெதோனுக்குப் பிறகு, எந்த அமைப்பாவது இந்தப் பூமியில் இருக்குமா? “நீதி குடியிருக்கிற புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. (2 பே. 3:13) பழைய வானம் மற்றும் பூமி என்பது, ஊழல் நிறைந்த அரசாங்கங்களையும், அவற்றின் பிடியில் இருக்கிற மக்களையும் குறிக்கிறது. இவை ஒழிந்த பிறகு, “புதிய வானமும் புதிய பூமியும்” உண்டாகும். புதிய வானம் என்பது, புதிய அரசாங்கத்தைக் குறிக்கிறது. அந்த அரசாங்கத்தில், இயேசு கிறிஸ்துவும் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யும் 1,44,000 பேரும் இருப்பார்கள். புதிய பூமி என்பது, கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் தலைமையின் கீழ் ஆளப்படும் அரசாங்கம், குழப்பத்தின் கடவுளாக இல்லாத யெகோவாவின் குணாதிசயங்களை அப்படியே வெளிக்காட்டும். (1 கொ. 14:33) அதனால், “புதிய பூமி” நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை! எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள நல்ல ஆண்கள் அங்கே இருப்பார்கள். (சங். 45:16) கிறிஸ்துவும் 1,44,000 பேரும் அவர்களை வழிநடத்துவார்கள். ஊழல் நிறைந்த எல்லா அமைப்புகளும் அழிக்கப்பட்ட பிறகு, ஒன்றிணைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் ஏற்படுத்தப்படும். அந்த அரசாங்கத்தை எதுவும் கறைப்படுத்த முடியாது. இவையெல்லாம் நிறைவேறப்போகிற அந்தக் காலத்தைப் பற்றி கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்!

கெட்ட செயல்கள்

10. நீங்கள் வாழும் பகுதியில் என்னென்ன கெட்ட செயல்கள் இன்று சர்வசாதாரணமாக நடக்கின்றன, அவற்றால் நீங்களும் உங்கள் குடும்பமும் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்?

10 கெட்ட செயல்கள் இன்று நம்மை எப்படிப் பாதிக்கின்றன? ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது, நேர்மையில்லாமல் நடந்துகொள்வது, கொடூரமாகத் தாக்குவது ஆகியவை இந்த உலகத்தில் இன்று சர்வசாதாரணமாகிவிட்டன! இந்த உலகத்தில் இருக்கிற பொழுதுபோக்கு அம்சங்கள், இவற்றையெல்லாம் கவர்ச்சியாகக் காட்டுகின்றன; எது சரி, எது தவறு என்பதற்கான யெகோவாவின் தராதரங்களை கேலிக்கூத்தாக்குகின்றன. (ஏசா. 5:20) இந்த மாதிரியான கெட்ட விஷயங்களிலிருந்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாக்க கடினமாகப் போராட வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால், யெகோவாவின் தராதரங்களை மதிக்காத இந்த உலகத்தில், உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாருமே யெகோவாவோடு உள்ள பந்தத்தைக் காத்துக்கொள்ள கடினமாகப் போராட வேண்டியிருக்கிறது.

11. சோதோம், கொமோராவுக்கு யெகோவா தீர்ப்பு கொடுத்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

11 கெட்ட செயல்களை யெகோவா என்ன செய்வார்? சோதோம், கொமோரா நகரங்களில் நடந்த கெட்ட செயல்களை யெகோவா என்ன செய்தார் என்று நினைத்துப் பாருங்கள். (2 பேதுரு 2:6-8-ஐ வாசியுங்கள்.) லோத்து ஒரு நீதிமானாக இருந்தார். அவரைச் சுற்றியிருந்த ஜனங்கள் செய்த கெட்ட செயல்களால், அவரும் அவருடைய குடும்பத்தாரும் வாட்டி வதைக்கப்பட்டார்கள். அங்கே நடந்துகொண்டிருந்த கெட்ட செயல்களை ஒழிப்பதற்காக, அந்த முழு பகுதியையும் யெகோவா ஒன்றுமில்லாமல் ஆக்கினார். இன்றுள்ள கெட்ட ஜனங்களுக்கு ‘வரப்போகும் முடிவு எப்படியிருக்கும் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக’ அவர் அப்படிச் செய்தார். இந்த உலகத்துக்கு முடிவு கட்டும்போது, அன்றிருந்த ஒழுக்கங்கெட்ட செயல்கள் எல்லாவற்றையும் அழித்தது போல, இன்றுள்ள ஒழுக்கங்கெட்ட செயல்களையும் அழிப்பார்.

12. பூஞ்சோலை பூமியில் நீங்கள் என்னென்ன வேலைகளைச் செய்ய ஆசைப்படுகிறீர்கள்?

12 கெட்ட செயல்களை எது மாற்றீடு செய்யும்? பூஞ்சோலை பூமியில், சந்தோஷம் தருகிற ஏராளமான வேலைகளை நாம் மும்முரமாகச் செய்வோம். உதாரணத்துக்கு, இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவோம், நமக்காகவும் நம் அன்பானவர்களுக்காகவும் வீடுகளைக் கட்டுவோம். உயிர்த்தெழுந்து வரப்போகிற லட்சக்கணக்கான மக்களுக்கு, யெகோவாவைப் பற்றியும் மனிதர்களுக்காக அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைப் பற்றியும் சொல்லிக்கொடுப்போம். (ஏசா. 65:21, 22; அப். 24:15) புதிய உலகத்தில், சந்தோஷம் தருகிற, யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிற ஏராளமான வேலைகள் நமக்கு இருக்கும்!

மோசமான நிலைமைகள்

13. சாத்தான் மற்றும் ஆதாம் ஏவாள் செய்த கலகத்தால் இன்று எந்தளவு நிலைமைகள் மோசமாகியிருக்கின்றன?

13 மோசமான நிலைமைகள் இன்று நம்மை எப்படிப் பாதிக்கின்றன? இந்த உலகம், பொல்லாத ஜனங்களாலும் ஊழல் நிறைந்த அமைப்புகளாலும் கெட்ட செயல்களாலும் நிறைந்திருப்பதால், இன்று நிலைமைகள் மிகவும் மோசமாகிவிட்டன. போர், வறுமை, இனவெறி, வியாதி, மரணம் ஆகியவற்றால் நாம் எல்லாருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம். சாத்தான் மற்றும் ஆதாம் ஏவாள் யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்ததால்தான் நிலைமைகள் இன்று இந்தளவு மோசமாகியிருக்கின்றன. அவர்கள் செய்த கலகத்தால் வந்த விளைவுகளிலிருந்து நம்மில் யாராலும் தப்பிக்க முடியவில்லை.

14. மோசமான நிலைமைகளை யெகோவா என்ன செய்யப்போகிறார்? உதாரணம் கொடுங்கள்.

14 மோசமான நிலைமைகளை யெகோவா என்ன செய்வார்? சில உதாரணங்களைக் கவனியுங்கள். போர்களுக்கு முடிவு கட்டப்போவதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார். (சங்கீதம் 46:8, 9-ஐ வாசியுங்கள்.) அதோடு, அவர் வியாதியையும் நீக்கிவிடுவார். (ஏசா. 33:24) மரணத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவார். (ஏசா. 25:8) வறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பார். (சங். 72:12-16) இன்று நம்முடைய வாழ்க்கையைப் பரிதாப நிலைக்குள் தள்ளுகிற மற்ற மோசமான நிலைமைகள் எல்லாவற்றையும் யெகோவா முடிவுக்குக் கொண்டுவருவார். சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் ஆதிக்கத்தையும் ஒழிப்பார்.—எபே. 2:2.

போர், வியாதி, மரணம் ஆகியவை இல்லாத ஒரு உலகத்தில் வாழ்வதைப் பற்றி கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்! (பாரா 15))

15. அர்மகெதோனுக்குப் பிறகு எவையெல்லாம் இருக்காது?

15 போர், வியாதி, மரணம் ஆகியவை இல்லாத ஒரு உலகத்தில் வாழ்வதைப் பற்றி கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்! ராணுவங்களோ, போர்க் கருவிகளோ, போர் நினைவுச் சின்னங்களோ அங்கே இருக்காது. ஆஸ்பத்திரிகளும், டாக்டர்களும், நர்ஸ்களும், சவக் கிடங்குகளும், கல்லறைகளும் நமக்குத் தேவைப்படாது. எந்தக் குற்றச்செயல்களும் அங்கே நடக்காது. அதனால், போலீசோ, எச்சரிக்கை எழுப்பும் ஒலிக் கருவிகளோ, பூட்டுகளோ தேவைப்படாது. நமக்கு வேதனை தரும் எல்லா மோசமான நிலைமைகளும் நிரந்தரமாக இல்லாமல் போய்விடும்.

16, 17. (அ) அர்மகெதோனில் தப்பிப்பவர்கள் எப்படி உணருவார்கள்? உதாரணம் கொடுங்கள். (ஆ) இந்த உலகம் முடிவுக்கு வரும்போது நீங்கள் என்றென்றும் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

16 மோசமான நிலைமைகள் ஒழிக்கப்பட்ட பிறகு நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதைக் கற்பனை செய்வது கொஞ்சம் கஷ்டம்தான். ஏன்? இதை யோசித்துப் பாருங்கள்: பரபரப்பான ஒரு ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் வாழ்கிற மக்களுக்கு அந்தச் சத்தம் பழகிப்போயிருக்கும். குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கிற இடத்தில் வாழ்கிறவர்களுக்கு அந்த நாற்றம் பழகிப்போயிருக்கும். அதே போல, மோசமான நிலைமைகளுக்கு மத்தியில் நாம் ரொம்ப காலம் வாழ்ந்துவருவதால், அதனால் ஏற்பட்டிருக்கிற வேதனைகளும் நமக்குப் பழகிப்போயிருக்கும். சொல்லப்போனால், அதைப் பற்றி யோசிப்பதையே நாம் நிறுத்தியிருப்போம். மோசமான நிலைமைகள் எல்லாவற்றுக்கும் யெகோவா முற்றுப்புள்ளி வைக்கும்போது, நாம் நிம்மதியாக உணருவோம்!

17 நாம் அனுபவிக்கிற எல்லா வேதனைகளுக்கும் என்ன ஆகும்? சங்கீதம் 37:11 இப்படிச் சொல்கிறது: “அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.” இந்த விஷயம் உங்கள் மனதைத் தொடுகிறதா? நீங்கள் இப்படிச் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார்! வேதனையான இந்தக் காலகட்டத்தில், யெகோவாவோடும், அவருடைய அமைப்போடும் நெருங்கியிருக்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். உங்களுடைய எதிர்கால நம்பிக்கை விலைமதிப்புள்ளது! அதைப் பற்றி ஆழமாக யோசியுங்கள். இந்த நம்பிக்கையை நிஜமானதாக வைத்துக்கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் இதைப் பற்றி சொல்லுங்கள். (1 தீ. 4:15, 16; 1 பே. 3:15) அப்படிச் செய்தால், இந்த உலகம் முடிவுக்கு வரும்போது, நீங்கள் அழிந்துவிட மாட்டீர்கள்; என்றென்றும் வாழ்வீர்கள், காலமெல்லாம் சந்தோஷமாக இருப்பீர்கள்!

^ பாரா. 1 பல வருஷங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் சில பகுதிகளிலிருந்த சிறைச்சாலைகளில் இந்தப் பழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. அதைப் பற்றித்தான் இந்தப் பாரா விவரிக்கிறது.