Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?”

“இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?”

“யோவானின் மகனான சீமோனே, இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?”—யோவா. 21:15.

பாடல்கள்: 128, 45

1, 2. ராத்திரி முழுவதும் மீன் பிடிக்க முயற்சி செய்த பிறகு, பேதுரு என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டார்?

இயேசுவின் சீஷர்கள் ஏழு பேர், ஒரு ராத்திரி முழுவதும் கலிலேயாக் கடலில் மீன் பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு மீன்கூட கிடைக்கவில்லை. பொழுது விடியும் நேரத்தில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கடற்கரையில் நின்றுகொண்டு அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர், “‘படகின் வலது பக்கத்தில் வலையைப் போடுங்கள், உங்களுக்கு மீன் கிடைக்கும்’ என்று சொன்னார். அவர்களும் வலையைப் போட்டார்கள், ஏராளமான மீன்கள் சிக்கின. அதனால், வலையை அவர்களால் இழுக்கக்கூட முடியவில்லை.”—யோவா. 21:1-6.

2 இயேசு தன் சீஷர்களுக்கு மீனையும் ரொட்டியையும் காலை உணவாகக் கொடுத்தார். பிறகு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே, இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?” என்று இயேசு கேட்டார். மீன் பிடிப்பது பேதுருவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று இயேசுவுக்குத் தெரியும். அப்படியென்றால், தன்னையும் தான் சொல்லித்தந்த விஷயங்களையும்விட மீன் பிடிப்பதுதான் அவருக்கு ரொம்ப பிடித்திருந்ததா என்று பேதுருவிடம் இயேசு கேட்டிருக்கலாம். “எஜமானே, உங்கள்மேல் எனக்குப் பாசம் இருப்பது உங்களுக்கே தெரியும்” என்று பேதுரு பதில் சொன்னார். (யோவா. 21:15) அந்தச் சமயத்திலிருந்து, தான் சொன்னபடி பேதுரு வாழ்ந்து காட்டினார். பிரசங்க வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதன் மூலம் இயேசுமேல் தனக்கு அன்பு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டினார். பிறகு, கிறிஸ்தவ சபையின் ஒரு முக்கியமான அங்கத்தினராகவும் ஆனார்.

3. கிறிஸ்தவர்கள் எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்?

3 பேதுருவிடம் இயேசு சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கிறிஸ்துமேல் நமக்கிருக்கும் அன்பு குறைந்துவிடாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருக்கும் என்றும், நமக்கு நிறைய கவலைகளும் சவால்களும் இருக்கும் என்றும் இயேசுவுக்குத் தெரியும். விதைப்பவரைப் பற்றிய உவமையில், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை” ஏற்றுக்கொள்ளும் சிலர், ஆரம்பத்தில் சில முன்னேற்றங்களைச் செய்வார்கள் என்று இயேசு சொன்னார். ஆனால் பிற்பாடு, ‘இந்த உலகத்தின் கவலைகளும் செல்வத்தின் வஞ்சக சக்தியும் அந்தச் செய்தியை நெருக்கிப் போடும்’ என்று சொன்னார். (மத். 13:19-22; மாற். 4:19) நாம் கவனமாக இல்லை என்றால், வாழ்க்கையின் தினசரி கவலைகள், யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையைக் குறைத்துவிடும். அதனால்தான், இயேசு தன் சீஷர்களை இப்படி எச்சரித்தார்: “பெருந்தீனியாலும் குடிவெறியாலும் வாழ்க்கைக் கவலைகளாலும் உங்கள் இதயம் பாரமடையாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.”—லூக். 21:34.

4. கிறிஸ்துமேல் நமக்கு ஆழமான அன்பு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? (ஆரம்பப் படம்)

4 நம் வாழ்க்கையில் பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம், பேதுருவைப் போல நமக்கும் கிறிஸ்துமேல் அன்பு இருக்கிறது என்பதைக் காட்டலாம். இதை நாம் எப்படித் தொடர்ந்து செய்யலாம்? அவ்வப்போது இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘எனக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கு? யெகோவாவுக்கு சேவை செய்றதுல ரொம்ப சந்தோஷப்படுறேனா இல்லன்னா மத்த விஷயங்கள்ல ஈடுபடுறதுல ரொம்ப சந்தோஷப்படுறேனா?’ இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க, கிறிஸ்துமேல் நமக்கிருக்கும் அன்பைப் பலவீனமாக்கும் 3 விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவை: வேலை, பொழுதுபோக்கு, பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

வேலையைச் சரியான இடத்தில் வையுங்கள்

5. குடும்பத் தலைவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?

5 மீன் பிடிப்பது பேதுருவுக்கு ஒரு பொழுதுபோக்காக இருக்கவில்லை. அதுதான் அவருடைய வாழ்வாதாரமாக இருந்தது. இன்றும், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யெகோவா குடும்பத் தலைவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். (1 தீ. 5:8) இந்தப் பொறுப்பை நிறைவேற்ற அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் இந்தக் கடைசி நாட்களில், நம் வேலையாலேயே நமக்கு நிறைய கவலைகள் வரலாம்.

6. வேலையால் இன்று மக்கள் ஏன் சோர்ந்துவிடுகிறார்கள்?

6 இன்று வேலை குறைவாகவே இருக்கிறது; ஆனால், வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆட்களோ நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால், மக்கள் வேலைக்காகப் போட்டி போடுகிறார்கள். நிறைய பேர், கொஞ்சம் சம்பளத்துக்கு அதிக நேரம் வேலை செய்கிறார்கள். இதுவரை இல்லாதளவுக்கு, கொஞ்சம் வேலையாட்களை வைத்து நிறைய உற்பத்தி செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் இன்று முயற்சி செய்கிறார்கள். அதனால், வேலையாட்கள் உடல் ரீதியிலும், மன ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும் சோர்ந்துவிடுகிறார்கள். தங்கள் முதலாளி சொல்வதுபோல் செய்யவில்லை என்றால், வேலை பறிபோய்விடுமோ என்று நிறைய பேர் பயப்படுகிறார்கள்.

7, 8. (அ) முதலில் நாம் யாருக்கு உண்மையாக இருக்கிறோம்? (ஆ) தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார்?

7 கிறிஸ்தவர்களாகிய நாம் முதலில் யெகோவாவுக்குத்தான் உண்மையாக இருக்கிறோம், நம் முதலாளிகளுக்கு அல்ல! (லூக். 10:27) அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவும், ஊழியத்துக்கு உதவியாக இருக்கவும் நாம் வேலைக்குப் போகிறோம். ஆனால், நாம் கவனமாக இல்லை என்றால் நம் வணக்கத்துக்கு வேலை ஒரு தடையாக ஆகிவிடலாம். தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு சகோதரரின் அனுபவத்திலிருந்து நாம் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். அந்தச் சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நான் கம்ப்யூட்டர் சரி செய்ற வேலைய பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்த வேலை ரொம்ப சுவாரஸ்யமா இருந்தாலும் நான் ரொம்ப நேரம் வேலை செய்ய வேண்டியிருந்துச்சு. போகப் போக, ஆன்மீக விஷயங்களுக்கு எனக்கு நேரமே இல்லாம போயிடுச்சு. கடவுளோட அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்கணும்னா, என்னோட வேலைய நான் மாத்தணும்னு கடைசியா புரிஞ்சுக்கிட்டேன்.” பிறகு, அந்தச் சகோதரர் என்ன செய்தார்?

8 “கிட்டத்தட்ட ஒரு வருஷமா திட்டம் போட்டேன் . . . அப்புறம், தெருவுல ஐஸ் க்ரீம் விக்கலாம்னு முடிவு செஞ்சேன். ஆரம்பத்துல, பணத்துக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததால, நான் ரொம்ப சோர்ந்து போயிட்டேன். முன்னாடி என்கூட வேலை செஞ்சவங்கள சந்திக்குறப்போ, அவங்க என்னை பார்த்து கிண்டலா சிரிப்பாங்க. ஏசி ரூம்ல இருந்து கம்ப்யூட்டர்ல வேலை பார்க்குறத விட்டுட்டு ஏன் இப்படி ஐஸ் க்ரீம் விக்கிறேன்னு கேட்பாங்க. இதையெல்லாம் சமாளிக்க யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன். அதோட, ஆன்மீக விஷயங்களுக்கு நிறைய நேரம் செலவு செய்யணுங்கிற என்னோட குறிக்கோள அடையவும் நான் ஜெபம் செஞ்சேன். சீக்கிரத்திலயே என்னோட சூழ்நிலை மாறுச்சு. என்னோட வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரியான ஐஸ் க்ரீம் பிடிக்கும்னு நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன். அதனால, அவங்களுக்கு ஏத்த மாதிரி திறமையா ஐஸ் க்ரீம் தயாரிக்க ஆரம்பிச்சேன். நான் தயாரிக்கிற எல்லா ஐஸ் க்ரீமும் அந்தந்த நாள்லயே வித்துபோயிடும். கம்ப்யூட்டர்ல வேலை பார்த்தப்போ சம்பாதிச்சதைவிட என்னால அதிகமா சம்பாதிக்க முடிஞ்சது. முன்ன மாதிரி சோர்வோ கவலையோ எனக்கு இப்போ இல்ல; அதனால, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எல்லாத்தையும்விட, இப்போ யெகோவாகிட்ட நெருங்கி இருக்கிற மாதிரி உணர்றேன்” என்று அவர் சொல்கிறார்.மத்தேயு 5:3, 6-ஐ வாசியுங்கள்.

9. வேலையை எப்படிச் சரியான இடத்தில் வைக்கலாம்?

9 நம் கடின உழைப்பை யெகோவா பாராட்டுகிறார். கடின உழைப்பு எப்போதும் பலன் தரும். (நீதி. 12:14) ஆனால், யெகோவாவின் சேவையைவிட நம் வேலை மிக முக்கியமானதாக ஆகிவிடக் கூடாது. பொருள் சம்பந்தப்பட்ட நம் அடிப்படைத் தேவைகளைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.” (மத். 6:33) ஆனால், வேலையைச் சரியான இடத்தில்தான் வைத்திருக்கிறோம் என்று நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் செய்ற வேலை எனக்கு ரொம்ப சுவாரஸ்யமா, சந்தோஷமா இருக்கிறதாவும், ஆனா, கடவுளுக்கு செய்ற சேவை சலிப்பானதா, சாதாரண ஒரு விஷயமா இருக்கிறதாவும் நினைக்கிறேனா?’ இந்தக் கேள்வியைப் பற்றி யோசித்துப் பார்ப்பது, நாம் உண்மையிலேயே எதை நேசிக்கிறோம் என்பதைக் காட்டிவிடும்.

10. என்ன முக்கியமான பாடத்தை இயேசு சொல்லித்தந்தார்?

10 நம் வாழ்க்கையில் எது முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இயேசு நமக்குச் சொல்லித்தந்தார். ஒரு சமயம், மரியாள் மார்த்தாள் என்ற சகோதரிகளின் வீட்டுக்கு இயேசு போனார். இயேசுவுக்காக மார்த்தாள் உடனே உணவு சமைக்க ஆரம்பித்தாள். ஆனால் மரியாள், இயேசுவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது, மரியாள் தனக்கு உதவி செய்யவில்லை என்று மார்த்தாள் குறை சொன்னாள். அதற்கு இயேசு மார்த்தாளிடம், “அவள் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்று சொன்னார். (லூக். 10:38-42) இங்கே இயேசு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லித்தந்தார். அதாவது, நம் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதற்கும், நாம் கிறிஸ்துமேல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கும் நாம் “மிகச் சிறந்ததை” தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லித்தந்தார். யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம்தான் நம் வாழ்க்கையில் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்!

ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு விஷயத்தில் சமநிலையோடு இருங்கள்

11. ஓய்வு எடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

11 நம் வாழ்க்கை எப்போதும் பரபரப்பாக இருப்பதால், சில நேரங்களில் நமக்கு ஓய்வு தேவைப்படுகிறது. “சாப்பிட்டு, குடித்து, கடின உழைப்பால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது எதுவுமே இல்லை” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 2:24) தன் சீஷர்களுக்கு ஓய்வு தேவை என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ஒரு சமயம், அவருடைய சீஷர்கள் பிரசங்க வேலையைப் பெரியளவில் செய்துவிட்டு களைப்பாக வந்தார்கள். அப்போது, “தனிமையான ஒரு இடத்துக்குப் போய், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள்” என்று இயேசு அவர்களிடம் சொன்னார்.—மாற். 6:31, 32.

12. பொழுதுபோக்கு விஷயத்தில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்? உதாரணம் கொடுங்கள்.

12 பொழுதுபோக்கில் ஈடுபடும்போது நமக்கு ஓய்வு கிடைக்கும். ஆனால், பொழுதுபோக்கு நம் வாழ்க்கையின் மிக முக்கியமான இடத்தைப் பிடித்து விடாமல் இருப்பதற்கு நாம் கவனமாக இருக்க வேண்டும். “சாப்பிடுவோம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்ற மனப்பான்மை முதல் நூற்றாண்டைச் சேர்ந்த நிறைய பேருக்கு இருந்தது. (1 கொ. 15:32) இந்த மனப்பான்மை இன்றும் நிறைய இடங்களில் பரவலாக இருக்கிறது. உதாரணத்துக்கு, மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருந்தார். ஆனால், பொழுதுபோக்கில் ஈடுபடுவது அவருக்கு ரொம்ப பிடித்திருந்ததால் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொள்வதை அவர் நிறுத்திவிட்டார். பிற்பாடு, பொழுதுபோக்கில் ஈடுபடுவதிலேயே குறியாக இருந்ததால்தான் தனக்கு நிறைய பிரச்சினைகள் வந்தன என்று அவர் புரிந்துகொண்டார். அதனால், மறுபடியும் பைபிள் படிக்க ஆரம்பித்தார். கொஞ்சக் காலத்திலேயே, ஊழியத்துக்கும் போக ஆரம்பித்தார். ஞானஸ்நானம் எடுத்த பிறகு அவர் இப்படிச் சொன்னார்: “இந்த உலகத்துல உள்ள பொழுதுபோக்குல கிடைக்கிற சந்தோஷத்தவிட யெகோவாவுக்கு சேவை செய்றதுலதான் அதிக சந்தோஷம் கிடைக்குங்குறத நான் புரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அதுக்குள்ள நிறைய காலம் வீணாயிடுச்சு. அது ஒண்ணுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு!”

13. (அ) பொழுதுபோக்கில் அதிகமாக ஈடுபடுவது சரியல்ல என்பதற்கு ஒரு உதாரணம் கொடுங்கள். (ஆ) பொழுதுபோக்கு விஷயத்தில் சமநிலையோடு இருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?

13 பொழுதுபோக்கில் ஈடுபடுவது நமக்குப் புத்துணர்ச்சியையும் புதுத்தெம்பையும் தர வேண்டும். அப்படியென்றால், நாம் எவ்வளவு நேரம் பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும்? இப்போது இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். நிறைய பேருக்கு கேக் மற்றும் இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால், இவற்றை எப்போதும் சாப்பிட்டுக்கொண்டிருந்தால், நம் உடல்நிலை மோசமாகிவிடும். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், சத்தான உணவைச் சாப்பிட வேண்டும். அதே போல, நாம் எப்போதும் பொழுதுபோக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால், யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தம் பாதிக்கப்படும். பொழுதுபோக்கு விஷயத்தில் நாம் சமநிலையோடு இருக்கிறோம் என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? கிறிஸ்தவ கூட்டங்கள், ஊழியம், பைபிள் வாசிப்பு, குடும்ப வழிபாடு போன்ற ஆன்மீக விஷயங்களுக்கு ஒரு வாரத்தில் நாம் எவ்வளவு மணி நேரங்கள் செலவு செய்தோம் என்பதை எழுதி வைக்கலாம். பிறகு, விளையாட்டு, டிவி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் நாம் எவ்வளவு மணி நேரங்கள் செலவு செய்தோம் என்பதையும் எழுதி வைக்கலாம். இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? நாம் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருக்குமா?எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.

14. தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க எது நமக்கு உதவும்?

14 பைபிள் நியமங்களிலுள்ள யெகோவாவின் ஆலோசனைகளை மீறாதபடி தனிப்பட்ட நபர்களும் குடும்பத் தலைவர்களும் தங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) தரமான பொழுதுபோக்கு “கடவுள் தரும் பரிசு.” (பிர. 3:12, 13) பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கிறது. (கலா. 6:4, 5) எந்த மாதிரியான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்தாலும், நாம் கவனமாக இருக்க வேண்டும். “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்” என்று இயேசு சொன்னார். (மத். 6:21) இயேசுமேல் நமக்கு அன்பு இருந்தால், வேறு எதையும்விட கடவுளுடைய அரசாங்கத்துக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை நம்முடைய யோசனை, பேச்சு மற்றும் செயல் மூலம் காட்டுவோம்.—பிலி. 1:9, 10.

பொருளாசையை எதிர்த்துப் போராடுங்கள்

15, 16. (அ) ஒரு கிறிஸ்தவர் எப்படிப் பொருளாசையில் சிக்கிக்கொள்ளலாம்? (ஆ) பொருளாசையைப் பற்றி இயேசு என்ன ஞானமான ஆலோசனையைக் கொடுத்தார்?

15 பொருளாசை இருப்பதால்தான், இன்று நிறைய பேருக்கு நவீன பாணிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. புதுப்புது ஃபோன், கம்ப்யூட்டர் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். வேறு எதையும்விட பணத்துக்கும் பொருளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு கிறிஸ்தவராக உங்களுக்கு எது மிக முக்கியமானதாக இருக்கிறது? உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கூட்டங்களுக்கு தயாரிக்கிறதவிட புது காரை பத்தியோ, புதுப்புது ஃபேஷனை பத்தியோ யோசிக்கிறதுலயே என்னோட நேரம் எல்லாம் போயிடுதா? ஜெபம் செய்றதுக்கும் பைபிள் வாசிக்கிறதுக்கும் அவ்வளவா நேரம் கிடைக்காத அளவுக்கு தினசரி விஷயங்கள்ல மூழ்கிடுறேனா?’ நாம் கவனமாக இல்லை என்றால், கிறிஸ்துமேல் அன்பு காட்டுவதைவிட பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்மேல் ஆசை வைப்பது நமக்கு ரொம்ப முக்கியமானதாக ஆகிவிடும். “எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள்” என்று இயேசு சொன்னதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். (லூக். 12:15) இயேசு ஏன் இந்த எச்சரிப்பைக் கொடுத்தார்?

16 “யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது” என்று இயேசு சொன்னார். அதோடு, “ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்றும் சொன்னார். பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறியாக இருக்கும் ஒருவரால், யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க முடியாது. “ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான்” என்று இயேசு சொன்னார். (மத். 6:24) நாம் பாவம் செய்யும் இயல்புள்ளவர்கள் என்பதால், பொருளாசை உட்பட ‘பாவ ஆசைகள்’ எல்லாவற்றையும் எதிர்த்து நாம் கடினமாகப் போராட வேண்டும்.—எபே. 2:3.

17. (அ) பொருள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சமநிலையோடு இருப்பது சிலருக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது? (ஆ) பொருளாசையை எதிர்த்துப் போராட எது நமக்கு உதவும்?

17 நிறைய பேர் தங்கள் ஆசைகளிலும் இன்பங்களிலும் மூழ்கியிருப்பதால், பொருள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சமநிலையோடு இருப்பது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 2:14-ஐ வாசியுங்கள்.) அவர்கள் தெளிவாக யோசிக்காததால், எது சரி, எது தவறு என்பதைக் கண்டுபிடிப்பது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. (எபி. 5:11-14) அதனால், பொருள்மேல் இருக்கிற ஆசை அவர்களுக்கு அதிகமாகிக்கொண்டே போகிறது. அந்த ஆசையை அவர்களால் திருப்தி செய்துகொள்ளவே முடிவதில்லை. (பிர. 5:10) ஆனால், இதை எதிர்த்துப் போராட நம்மால் ஒரு விஷயத்தைச் செய்ய முடியும். அதாவது, கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசிக்க முடியும். அப்படிச் செய்யும்போது, நம்மால் பொருளாசையைத் தவிர்க்க முடியும். (1 பே. 2:2) யெகோவாவின் ஞானத்தைப் பற்றி இயேசு ஆழமாக யோசித்தார். அதனால், சாத்தானுடைய சோதனைகளை எதிர்த்து அவரால் போராட முடிந்தது. இன்று, நாமும் பொருளாசையை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், பைபிள் நியமங்களை நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். (மத். 4:8-10) அப்படிச் செய்யும்போது, பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களைவிட நமக்கு இயேசுமேல் அதிக அன்பு இருக்கிறது என்பதைக் காட்டுவோம்.

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு எது முக்கியமானதாக இருக்கிறது? (பாரா 18)

18. நீங்கள் என்ன செய்ய தீர்மானமாக இருக்கிறீர்கள்?

18 “இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?” என்று பேதுருவிடம் கேட்டதன் மூலம், யெகோவாவுக்குச் சேவை செய்வதுதான் வாழ்க்கையில் மிக முக்கியமாக இருக்க வேண்டும் என்பதைப் பேதுருவுக்கு இயேசு ஞாபகப்படுத்தினார். “கற்பாறை” என்பதுதான் பேதுருவுடைய பெயரின் அர்த்தம். பேதுருவுடைய குணங்களை ஒரு கற்பாறைக்கு ஒப்பிடலாம். (அப். 4:5-20) இயேசுமேல் இருக்கும் அன்பு பலமாக இருக்க வேண்டும் என்று நாமும் ஆசைப்படுகிறோம். அதனால் வேலை, பொழுதுபோக்கு, பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆகியவற்றை நம் வாழ்க்கையில் சரியான இடத்தில் வைப்பது ரொம்ப முக்கியம். அப்போது, “எஜமானே, உங்கள்மேல் எனக்குப் பாசம் இருப்பது உங்களுக்கே தெரியும்” என்று சொன்ன பேதுருவைப் போல நாமும் சொல்லலாம்.

^ பாரா. 14பயனுள்ள பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறீர்களா?” என்ற கட்டுரையை அக்டோபர் 15, 2011 காவற்கோபுரத்தில் பக். 9-12, பாரா. 6-15-ஐப் பாருங்கள்.