Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காயு எப்படி சகோதரர்களுக்கு உதவினார்?

காயு எப்படி சகோதரர்களுக்கு உதவினார்?

முதல் நூற்றாண்டின் கடைசியில், காயுவும் மற்ற கிறிஸ்தவர்களும் நிறைய சவால்களை எதிர்ப்பட்டார்கள். பொய் போதனைகளைப் பரப்பியவர்கள், சபைகளைப் பலவீனப்படுத்தவும் சபையில் பிரிவினையை ஏற்படுத்தவும் முயற்சி செய்தார்கள். (1 யோ. 2:18, 19; 2 யோ. 7) தியோத்திரேப்பு என்பவன், அப்போஸ்தலன் யோவானைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் ‘படுமோசமாகப் பேசிக்கொண்டு திரிந்தான்.’ அதோடு, பயணம் செய்து வந்த கிறிஸ்தவர்களை உபசரிக்க மறுத்தான்; மற்றவர்களும் தன்னைப் போலவே நடந்துகொள்ளும்படி அவர்களைத் தூண்டுவதற்கு முயற்சி செய்தான். (3 யோ. 9, 10) இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் யோவான் காயுவுக்குக் கடிதம் எழுதினார். சுமார் கி.பி. 98-ல் அப்போஸ்தலன் யோவான் எழுதிய அந்தக் கடிதம்தான், கிரேக்க வேதாகமத்தில் இருக்கும் “யோவான் எழுதிய மூன்றாம் கடிதம்.”

சவால்களுக்கு மத்தியிலும், காயு யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்தார். தன்னுடைய உண்மைத்தன்மையை அவர் எப்படிக் காட்டினார்? இன்று, நாம் ஏன் காயுவின் முன்மாதிரியைப் பின்பற்ற விரும்புகிறோம்? அப்படிப் பின்பற்றுவதற்கு யோவான் எழுதிய கடிதம் நமக்கு எப்படி உதவும்?

அன்பான நண்பனுக்கு ஒரு கடிதம்

மூன்று யோவான் புத்தகத்தின் எழுத்தாளர், தன்னை ‘மூப்பர்’ என்று அறிமுகப்படுத்துகிறார். அந்த அறிமுகமே, அதை எழுதியவர் அப்போஸ்தலன் யோவான்தான் என்பதைத் தெரிந்துகொள்ள, அவருடைய ஆன்மீகப் பிள்ளையான காயுவுக்கு போதுமானதாக இருந்தது. “அன்புள்ள காயு” என்று சொல்லி அவர் தன் கடிதத்தை ஆரம்பிக்கிறார். “உன்மேல் உண்மையாகவே பிரியமாயிருக்கும்” மூப்பர் என்றும் சொல்கிறார். பிறகு, ஆன்மீக ரீதியில் காயு எப்படி நன்றாக இருக்கிறாரோ, அதே போல உடல் ரீதியிலும் நன்றாக இருப்பார் என்று தான் நம்புவதாகச் சொல்கிறார். யோவான் எவ்வளவு அருமையாக தன் அன்பையும் வாழ்த்துதலையும் தெரிவிக்கிறார்!—3 யோ. 1, 2, 4.

சபையின் கண்காணியாக காயு இருந்திருக்க வேண்டும். ஆனால், அதைப் பற்றி யோவான் தன் கடிதத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. தனக்கு முன்பின் தெரியாதவர்களைக்கூட உபசரித்ததற்காக காயுவை யோவான் பாராட்டினார். மற்றவர்களிடமிருந்து கடவுளுடைய ஊழியர்களை வித்தியாசப்படுத்திக் காட்டும் ஒரு அருமையான குணம், உபசரிக்கும் தன்மை! அதனால், காயுவின் உபசரிக்கும் குணத்தை, அவருடைய உண்மைத்தன்மைக்கான ஆதாரமாக யோவான் நினைத்தார்.—ஆதி. 18:1-8; 1 தீ. 3:2; 3 யோ. 5

சகோதரர்களை உபசரித்ததற்காக காயுவை யோவான் பாராட்டியதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, யோவான் இருந்த இடத்துக்கும் சபைகளுக்கும் இடையில் சகோதரர்கள் தவறாமல் பயணம் செய்தார்கள் என்று தெரிகிறது. அதோடு, தாங்கள் எதிர்ப்பட்ட விஷயங்களைப் பற்றி யோவானிடம் அவர்கள் சொன்னார்கள் என்றும் தெரிகிறது. ஒருவேளை, சபைகளைப் பற்றிய விஷயங்கள் யோவானுக்கு இப்படித்தான் தெரிந்திருக்க வேண்டும்.

பயணம் செய்த கிறிஸ்தவர்கள், சக விசுவாசிகளோடு தங்குவதற்குத்தான் ஆசைப்பட்டிருப்பார்கள். ஏனென்றால், அப்போதிருந்த சத்திரங்களுக்கு நல்ல பெயர் இருக்கவில்லை, அங்கே சரியான கவனிப்பும் இருந்திருக்காது, ஒழுக்கங்கெட்ட காரியங்கள் சர்வசாதாரணமாக அங்கே நடந்தன. அதனால், ஞானமுள்ள பயணிகள், தங்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கினார்கள். பயணம் செய்த கிறிஸ்தவர்களோ, தங்கள் சக கிறிஸ்தவர்களின் வீடுகளில் தங்கினார்கள்.

“கடவுளுடைய பெயருக்காக அவர்கள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள்”

உபசரிக்கும் குணத்தைக் காட்டும்படி யோவான் மறுபடியும் காயுவை உற்சாகப்படுத்தினார். “அவர்களை [பயண செய்த கிறிஸ்தவர்களை] கடவுளுக்குப் பிரியமான விதத்தில் வழியனுப்பி வை” என்று யோவான் சொன்னார். விருந்தாளிகளை வழியனுப்பி வைப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? அவர்களுடைய அடுத்த கட்ட பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. அதோடு, அவர்கள் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருவதற்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்து அனுப்புவதையும் அர்த்தப்படுத்துகிறது. காயுவோடு தங்கியவர்கள், அவருடைய அன்பையும் விசுவாசத்தையும் பற்றி யோவானிடம் சொன்னதிலிருந்து, முன்பு வந்திருந்த விருந்தாளிகளுக்கு காயு இவற்றையெல்லாம் ஏற்கெனவே செய்திருந்தார் என்பது தெரிகிறது.—3 யோ. 3, 6.

அந்த விருந்தாளிகள், மிஷனரிகளாகவோ யோவானுடைய தூதுவர்களாகவோ பயணக் கண்காணிகளாகவோ இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும், அவர்கள் எல்லாரும் நல்ல செய்திக்காகப் பயணம் செய்தவர்கள்! “கடவுளுடைய பெயருக்காக அவர்கள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள்” என்று யோவான் சொன்னார். (3 யோ. 7) இதிலிருந்து, அந்தச் சகோதரர்கள் கிறிஸ்தவ சபையின் பாகமாக இருந்தார்கள் என்றும், வரவேற்பைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர்களாக இருந்தார்கள் என்றும் தெரிகிறது. அதனால்தான், “அப்படிப்பட்டவர்களை வரவேற்று உபசரிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. நாம் அவர்களை உபசரிக்கும்போது, சத்தியத்துக்காக உழைக்கிற சக வேலையாட்களாக இருப்போம்” என்று யோவான் எழுதினார்.—3 யோ. 8.

கஷ்ட காலத்தில் கைகொடுப்பது

வெறுமனே நன்றி சொல்ல மட்டும் காயுவுக்கு யோவான் கடிதம் எழுதவில்லை. காயு எதிர்ப்பட்ட ஒரு முக்கியமான பிரச்சினையைச் சமாளிக்க உதவுவதற்காகவும்தான் அவருக்குக் கடிதம் எழுதினார். கிறிஸ்தவ சபையில் இருந்த தியோத்திரேப்பு என்பவன், பயணம் செய்த கிறிஸ்தவர்களை, ஏதோவொரு காரணத்திற்காக உபசரிக்க விரும்பவில்லை. அதோடு, மற்றவர்களையும் உபசரிக்க விடாமல் அவன் தடுக்கப் பார்த்தான்.—3 யோ. 9, 10.

தியோத்திரேப்புவுடன் தங்க வாய்ப்பிருந்தும், உண்மைக் கிறிஸ்தவர்கள் அவனோடு தங்க நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவன் சபையில் முதலிடத்தில் இருக்க விரும்பினான், அப்போஸ்தலன் யோவான் சொன்ன எதையுமே மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு, யோவானையும் மற்றவர்களையும் பற்றி படுமோசமாகப் பேசினான். அவனை ஒரு பொய் போதகன் என்று யோவான் சொன்னதே இல்லை; இருந்தாலும், அவருடைய அதிகாரத்தை அவன் எதிர்த்தான். புகழுக்காக அவன் ஆசைப்பட்டான், கிறிஸ்தவ மனப்பான்மையும் அவனுக்கு இருக்கவில்லை. அதனால், அவனுடைய உண்மைத்தன்மை கேள்விக்குறியானது. அவனுடைய உதாரணம், சபையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்யும் லட்சிய வெறிபிடித்த, கர்வம் நிறைந்த ஆட்களை ஞாபகப்படுத்துகிறது. அதனால், ‘கெட்டதை பின்பற்றாதே’ என்று காயுவிடம் யோவான் சொன்னார். அந்த அறிவுரை நமக்கும் பொருந்துகிறது.—3 யோ. 11.

நல்லதைச் செய்ய அருமையான காரணம்

யோவான் குறிப்பிட்ட தேமேத்திரியு என்ற கிறிஸ்தவர், தியோத்திரேப்புவைப் போல இருக்கவில்லை. அவர் ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தார். “தேமேத்திரியுவைப் பற்றி . . . உயர்வாகப் பேசியிருக்கிறார்கள் . . . அவரைப் பற்றி எங்களுக்கும் நல்ல அபிப்பிராயம் இருக்கிறது. நாங்கள் சொல்வது உண்மை என்று உனக்கே தெரியும்” என்று யோவான் எழுதினார். (3 யோ. 12) தேமேத்திரியுவுக்கு காயுவின் உதவி தேவைப்பட்டிருக்கலாம். அதனால் மூன்று யோவான் புத்தகம், தேமேத்திரியுவைப் பற்றி யோவான் எழுதிய அறிமுகக் கடிதமாகவும் சிபாரிசுக் கடிதமாகவும் இருந்திருக்கலாம். இந்தக் கடிதத்தை தேமேத்திரியுவே காயுவிடம் கொடுத்ததாகத் தெரிகிறது. யோவானின் தூதுவர்களில் ஒருவராக இருந்த, அல்லது ஒருவேளை பயணக் கண்காணியாக இருந்த தேமேத்திரியு, யோவான் எழுதிய விஷயங்களை வலியுறுத்தினார் என்று சொல்லலாம்.

காயு ஏற்கெனவே உபசரிக்கும் குணத்தைக் காட்டிவந்தாலும், தொடர்ந்து அப்படிக் காட்டும்படி யோவான் ஏன் அவரிடம் சொன்னார்? காயுவை இன்னும் தைரியப்படுத்த வேண்டும் என்று யோவான் நினைத்தாரா? உபசரிக்கும் குணத்தைக் காட்டியவர்களைச் சபையிலிருந்து நீக்க தியோத்திரேப்பு முயற்சி செய்வதைப் பார்த்து காயு தயங்குவாரோ என்று யோவான் நினைத்தாரா? எதுவாக இருந்தாலும், “நல்லதைச் செய்கிறவன் கடவுளின் பக்கம் இருக்கிறான்” என்று சொல்லி காயுவுக்கு யோவான் நம்பிக்கையளித்தார். (3 யோ. 11) தொடர்ந்து நன்மை செய்ய இது ஒரு அருமையான காரணம்!

தொடர்ந்து உபசரிக்கும் குணத்தைக் காட்ட, யோவானின் கடிதம் காயுவைத் தூண்டியதா? பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் மூன்று யோவான் புத்தகம் இடம் பிடித்திருக்கிறது, ‘நல்லதையே பின்பற்றுவதற்காக’ அது மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், உபசரிக்கும் குணத்தைக் காட்ட அந்தக் கடிதம் காயுவை நிச்சயம் தூண்டியிருக்கும்!

மூன்று யோவான் புத்தகத்திலிருந்து பாடங்கள்

அன்றிருந்த நம் அன்புச் சகோதரன் காயுவைப் பற்றி கூடுதலாக வேறு எதுவும் தெரியவில்லை. ஆனால், அவருடைய வாழ்க்கையைப் பற்றி இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் கொஞ்ச விஷயங்கள், நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித்தருகின்றன.

நாம் எந்தெந்த விதங்களில் ‘உபசரிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளலாம்’?

முதலாவதாக, சத்தியத்தைப் பற்றிய அறிவு நமக்குக் கிடைத்திருப்பதற்காக, பயணம் செய்து வந்த அந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு நாம் ஓரளவு கடன்பட்டிருக்கிறோம். ஏனென்றால், அந்த அறிவை நமக்குத் தெரியப்படுத்துவதற்காக, அவர்கள் பயணம் செய்தார்கள். இன்று, கிறிஸ்தவ சபையில் இருக்கிற எல்லாரும் நல்ல செய்திக்காக ரொம்ப தூரம் பயணம் செய்வதில்லைதான். ஆனால், காயு மாதிரியே நாமும், வட்டாரக் கண்காணி மற்றும் அவருடைய மனைவியைப் போல பயணம் செய்கிற கிறிஸ்தவர்களுக்கு நம்மால் முடிந்த ஆதரவையும் உற்சாகத்தையும் தரலாம். அல்லது, தேவை அதிகமுள்ள இடங்களில் ஊழியம் செய்வதற்காக வருகிற உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ நடைமுறையான உதவிகளைச் செய்யலாம். அதனால், நாம் ‘உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்வது’ நல்லது.—ரோ. 12:13; 1 தீ. 5:9, 10.

இரண்டாவதாக, இன்று சபைகளில் யாராவது எப்போதாவது அதிகாரத்தை எதிர்த்தால், நாம் ஆச்சரியப்படக் கூடாது. யோவான் மற்றும் பவுலுடைய அதிகாரத்துக்கு எதிராகச் சவால் விடப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது. (2 கொ. 10:7-12; 12:11-13) சபையில் இருக்கிற சிலரால் இது போன்ற பிரச்சினைகள் வந்தால், நாம் என்ன செய்ய வேண்டும்? பவுல் தீமோத்தேயுவுக்கு இப்படி அறிவுரை கொடுத்தார்: “நம் எஜமானின் ஊழியன் சண்டைபோடக் கூடாது; அதற்குப் பதிலாக, எல்லாரிடமும் மென்மையாக நடந்துகொள்கிறவனாகவும், கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவனாகவும், தீமையைப் பொறுத்துக்கொள்கிறவனாகவும், கலகம் செய்கிறவர்களுக்குச் சாந்தத்தோடு அறிவுரை சொல்கிறவனாகவும் இருக்க வேண்டும்.” யாராவது நம்மைக் கோபமூட்டும்போது நாம் சாந்தமாக இருந்தால், கலகம் செய்கிறவர்கள் படிப்படியாக தங்கள் யோசனைகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்போது, “அவர்கள் மனம் திருந்தி சத்தியத்தைத் திருத்தமாகத் தெரிந்துகொள்வதற்குக் கடவுள் ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்.”—2 தீ. 2:24, 25.

மூன்றாவதாக, எதிர்ப்பின் மத்தியிலும் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்கிற நம் சக கிறிஸ்தவர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்களுடைய உண்மையான சேவையை நாம் பாராட்ட வேண்டும். காயுவை அப்போஸ்தலன் யோவான் உற்சாகப்படுத்தினார். அதோடு, காயு சரியானதைத்தான் செய்கிறார் என்பதை அவருக்கு உறுதிப்படுத்தினார். அதே போல, இன்றுள்ள மூப்பர்களும் யோவானுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். சகோதர சகோதரிகள் ‘களைத்துப்போகாமல்’ இருப்பதற்காக, அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.—ஏசா. 40:31; 1 தெ. 5:11.

கிரேக்கில் எழுதப்பட்ட யோவானுடைய இந்தக் கடிதத்தில் வெறும் 219 வார்த்தைகள்தான் இருக்கின்றன. காயுவுக்கு அப்போஸ்தலன் யோவான் எழுதிய இந்தப் புத்தகம்தான் பைபிளிலேயே மிகச் சிறிய புத்தகம்! ஆனாலும், இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு இது மதிப்புள்ளதாக இருக்கிறது.