Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் பொறுமையோடு காத்திருப்பீர்களா?

நீங்கள் பொறுமையோடு காத்திருப்பீர்களா?

“நீங்களும் பொறுமையோடு இருங்கள்.”—யாக். 5:8.

பாடல்கள்: 78, 139

1, 2. (அ) “எவ்வளவு நாட்களுக்கு?” என்ற கேள்வியை நாம் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கேட்கலாம்? (ஆ) அன்று வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்களின் உதாரணம் நமக்கு எப்படி ஆறுதலாக இருக்கிறது?

உண்மையுள்ள தீர்க்கதரிசிகளான ஏசாயாவும் ஆபகூக்கும், “எவ்வளவு நாட்களுக்கு?” என்ற கேள்வியைக் கேட்டார்கள். (ஏசா. 6:11; ஆப. 1:2) தாவீது ராஜாவும், சங்கீதம் 13-ஐ எழுதியபோது இதே போன்ற கேள்வியை ஐந்து தடவை கேட்டார். (சங். 13:1, 2) இயேசு கிறிஸ்துவும் விசுவாசமில்லாத மக்களிடம் பேசியபோது, “இன்னும் எத்தனை காலம்தான்?” என்று கேட்டார். (மத். 17:17) ஒருவேளை, நாமும் இதேபோல் கேட்கலாம்.

2 எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாமும் இதே போன்ற கேள்வியைக் கேட்கலாம்? நமக்கு ஏதாவது அநியாயம் நடந்திருக்கலாம். அல்லது, வியாதியாலோ முதுமையாலோ நாம் கஷ்டப்படலாம். அல்லது, ‘சமாளிக்க முடியாத அளவுக்குப் படுமோசமாக இருக்கும்’ ஒரு காலத்தில் வாழ்வதால் நாம் மனச்சோர்வடையலாம். (2 தீ. 3:1) அதோடு, நம்மைச் சுற்றியுள்ள மக்களின் கெட்ட மனப்பான்மைகூட நம்மைச் சோர்வடைய வைக்கலாம். நம் சூழ்நிலை எதுவாக இருந்தாலும்சரி, ஆறுதலான ஒரு விஷயம் இருக்கிறது. “எவ்வளவு நாட்களுக்கு?” என்ற கேள்வியைக் கேட்ட உண்மையுள்ள ஊழியர்களை யெகோவா திட்டவில்லை என்பதுதான் அந்த ஆறுதலான விஷயம்.

3. கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும்போது எது நமக்கு உதவும்?

3 கஷ்டமான சூழ்நிலையில் சகித்திருக்க எது நமக்கு உதவும்? “நம் எஜமானுடைய பிரசன்னம்வரை பொறுமையோடு இருங்கள்” என்று இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரரான யாக்கோபு கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் சொன்னார். (யாக். 5:7) அப்படியென்றால், பொறுமையாக இருப்பது நமக்கு உதவும். ஆனால், பொறுமையாக இருப்பது என்றால் என்ன? இந்த அருமையான குணத்தை நாம் எப்படிக் காட்டலாம்?

பொறுமையாக இருப்பது என்றால் என்ன?

4, 5. (அ) பொறுமையாக இருப்பது என்றால் என்ன, நாம் எப்படிப் பொறுமையாக இருக்கலாம்? (ஆ) பொறுமையைப் பற்றி யாக்கோபு என்ன விளக்கம் தருகிறார்? (ஆரம்பப் படம்)

4 கடவுளுடைய சக்தியால் உண்டாகிற ஒரு குணம்தான் பொறுமை என்று பைபிள் சொல்கிறது. கஷ்டமான சூழ்நிலைகளில் பொறுமையாக இருப்பது பாவ இயல்புள்ள மனிதர்களுக்கு அவ்வளவு சுலபம் இல்லை; அதனால், கடவுளுடைய உதவி கண்டிப்பாகத் தேவை. பொறுமை என்பது கடவுள் தரும் பரிசு. நாம் பொறுமையாக இருந்தால், யெகோவா மீதும் மற்றவர்கள் மீதும் அன்பு வைத்திருப்பதைக் காட்டுவோம். நாம் பொறுமையாக இல்லையென்றால், நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள அன்பு குறைந்துவிடும். (1 கொ. 13:4; கலா. 5:22) பொறுமையாக இருப்பது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது? கஷ்டமான சூழ்நிலைகளை நம்பிக்கையான மனநிலையோடு சகித்துக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. (கொலோ. 1:11; யாக். 1:3, 4) எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் யெகோவாவுக்கு உண்மையோடு இருப்பதற்குப் பொறுமை என்ற குணம் நமக்கு உதவும். அநியாயமாக நடத்தப்படும்போது பழிக்குப் பழி வாங்காமல் இருக்கவும் அது உதவும். பொறுமையோடு காத்திருப்பது அவசியம் என்பதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. இந்த முக்கியமான பாடத்தைத்தான் யாக்கோபு 5:7, 8 (வாசியுங்கள்) வசனங்களிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

5 நாம் ஏன் யெகோவாவுக்காகக் காத்திருக்க வேண்டும்? நம் சூழ்நிலையை ஒரு விவசாயியின் சூழ்நிலைக்கு யாக்கோபு ஒப்பிடுகிறார். ஒரு விவசாயி கஷ்டப்பட்டு பயிர் செய்தாலும், அவரால் வானிலையைக் கட்டுப்படுத்தவோ பயிர்களை வேகமாக வளர வைக்கவோ முடியாது. “நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைப்பதற்காக” அவர் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். அதேபோல், யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கும் சமயத்தில், நம்மால் கட்டுப்படுத்த முடியாத நிறைய விஷயங்கள் நடக்கலாம். (மாற். 13:32, 33; அப். 1:7) அப்போது, விவசாயியைப் போலவே நாமும் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.

6. மீகா தீர்க்கதரிசியின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 நம்மைப் போலவே மீகா தீர்க்கதரிசியும் கஷ்டமான சூழ்நிலைகளைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆகாஸ் ராஜா ஆட்சி செய்த காலத்தில் அவர் வாழ்ந்தார். ஆகாஸ் மிகவும் கெட்ட ராஜாவாக இருந்தான். அதனால், தேசத்தில் பயங்கர அநியாயமும் அக்கிரமமும் நடந்துவந்தது. அங்கிருந்த மக்கள் ‘கெட்ட காரியங்கள் செய்வதில் கெட்டிக்காரர்களாக’ இருக்கும் அளவுக்கு நிலைமை படுமோசமாக இருந்ததென்று பைபிள் சொல்கிறது. (மீகா 7:1-3-ஐ வாசியுங்கள்.) அந்த நிலைமையைத் தன்னால் மாற்ற முடியாதென்று மீகாவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், அவர் என்ன செய்தார்? “நான் யெகோவாவுக்காக எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன். என்னை மீட்கும் கடவுளுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன். என் கடவுள் என் வேண்டுதலைக் கேட்பார்” என்று அவர் சொன்னார். (மீ. 7:7) மீகாவைப் போலவே நாமும் ‘பொறுமையோடு காத்திருக்க’ வேண்டும்.

7. நாம் ஏன் வெறுமனே கடமைக்காகக் காத்திருக்கக் கூடாது?

7 மீகாவைப் போலவே நாமும் விசுவாசத்தைக் காட்டினால், யெகோவாவுக்காக ஆவலோடு காத்திருப்போம். மரண தண்டனைக்காகச் சிறையில் காத்திருக்கும் ஒரு கைதியின் நிலைமையில் நாம் இல்லை. அவன் அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருப்பதில்லை, வேறு வழியில்லாமல்தான் காத்திருக்கிறான். ஆனால், நம்முடைய நிலைமையே வேறு! நாம் யெகோவாவுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். ஏனென்றால், அவர் தன்னுடைய வாக்குறுதியைச் சரியான காலத்தில் நிறைவேற்றி, நமக்கு முடிவில்லாத வாழ்வைத் தருவாரென்று நாம் நம்புகிறோம். அதனால், நாம் ‘பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறோம்.’ (கொலோ. 1:11, 12) நாம் காத்திருக்கும் சமயத்தில், யெகோவா தாமதிப்பதாகக் குறைசொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால், அவர் மனதை நாம் புண்படுத்திவிடுவோம்.—கொலோ. 3:12.

பொறுமைக்குச் சிறந்த உதாரணங்கள்

8. அன்று வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

8 மிகவும் ஆவலோடு காத்திருக்க எது உதவும்? அன்று வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காக அவர்கள் பொறுமையோடு காத்திருந்தார்கள். (ரோ. 15:4) அவர்கள் எவ்வளவு காலம் காத்திருந்தார்கள், ஏன் ஆவலோடு காத்திருந்தார்கள், பொறுமையைக் காட்டியதற்காக யெகோவா அவர்களை எப்படி ஆசீர்வதித்தார் என்றெல்லாம் சிந்தித்துப் பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும்.

ஆபிரகாம் தன்னுடைய பேரப்பிள்ளைகளான ஏசாவும் யாக்கோபும் பிறப்பதற்கு நிறைய வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது (பாராக்கள் 9, 10)

9, 10. ஆபிரகாமும் சாராளும் எவ்வளவு காலம் யெகோவாவுக்காகக் காத்திருந்தார்கள்?

9 ஆபிரகாம் மற்றும் சாராளுடைய உதாரணத்தைக் கவனியுங்கள். அவர்கள் ‘விசுவாசமும் பொறுமையும்’ காட்டியதால் “கடவுளுடைய வாக்குறுதிகளை” பெற்றுக்கொண்டார்கள். “ஆபிரகாம் பொறுமையாகக் காத்திருந்த பின்பு” ஒரு பெரிய தேசத்துக்குத் தகப்பனாக ஆகும் ஆசீர்வாதத்தைப் பெறுவாரென்று யெகோவா வாக்குறுதி தந்திருந்தார். (எபி. 6:12, 15) ஆபிரகாம் ஏன் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது? ஏனென்றால், கடவுளுடைய வாக்குறுதி நிறைவேறுவதற்குக் காலம் தேவைப்பட்டது. கி.மு. 1943, நிசான் 14-ல் ஆபிரகாமும் சாராளும் அவர்களுடைய வீட்டார் எல்லாரும் யூப்ரடிஸ் ஆற்றைக் கடந்து, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போனார்கள். ஆனால், ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கு பிறப்பதற்கு 25 வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது; தன்னுடைய பேரப்பிள்ளைகள் ஏசாவும் யாக்கோபும் பிறப்பதற்கு இன்னும் 60 வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.—எபி. 11:9.

10 வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் எவ்வளவு பெரிய நிலம் ஆபிரகாமுக்குக் கிடைத்தது? யெகோவா ‘அங்கே அவருக்கு எந்தவொரு நிலத்தையும் சொத்தாகக் கொடுக்கவில்லை, ஓரடி நிலத்தைக்கூட கொடுக்கவில்லை; ஆனால் அவருக்குக் குழந்தை இல்லாதபோதே, அந்தத் தேசத்தை அவருக்கும் அவருக்குப் பிறகு அவருடைய சந்ததிக்கும் சொத்தாகக் கொடுக்கப்போவதாய் வாக்குறுதி தந்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (அப். 7:5) ஆபிரகாம் யூப்ரடிஸ் ஆற்றைக் கடந்து 430 வருஷங்களான பிறகுதான், அங்கே வாழவிருந்த அவருடைய சந்ததி ஒரு தேசமாக ஆனது.—யாத். 12:40-42; கலா. 3:17.

11. ஆபிரகாம் ஏன் ஆவலோடு காத்திருந்தார், பொறுமை காட்டியதற்காக அவர் எப்படி ஆசீர்வதிக்கப்படுவார்?

11 யெகோவா தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்பியதால்தான் ஆபிரகாம் ஆவலோடு காத்திருந்தார். அவர் யெகோவாமேல் விசுவாசம் வைத்தார். (எபிரெயர் 11:8-12-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய எல்லா வாக்குறுதிகளுமே ஆபிரகாமின் காலத்தில் நிறைவேறவில்லை; ஆனாலும், அவர் சந்தோஷமாகக் காத்திருந்தார். பூஞ்சோலை பூமியில் உயிரோடு வரும்போது அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றி பைபிள் நிறைய தடவை குறிப்பிட்டிருந்ததைத் தெரிந்துகொள்ளும்போது அவர் எவ்வளவு ஆச்சரியப்படுவார்! * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) மேசியாவைப் பற்றிய யெகோவாவின் வாக்குறுதி நிறைவேறுவதில் தனக்கு இருந்த முக்கியமான பங்கைத் தெரிந்துகொள்ளும்போதும் அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்! அந்த ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருந்தது கொஞ்சம்கூட வீண்போகவில்லை என்றுதான் அவர் நினைப்பார்.

12, 13. யோசேப்பு ஏன் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது, அவர் எப்படி நம்பிக்கையான மனநிலையோடு இருந்தார்?

12 ஆபிரகாமின் கொள்ளுப் பேரனான யோசேப்பும்கூட பொறுமையோடு காத்திருந்தார். அவருக்குப் பயங்கரமான அநியாயங்கள் நடந்தன. கிட்டத்தட்ட 17 வயதில், அவருடைய அண்ணன்கள் அவரை அடிமையாக விற்றுவிட்டார்கள். அதற்குப் பிறகு, அவருடைய எஜமானின் மனைவியைக் கற்பழிக்க முயற்சி செய்ததாகப் பொய்க் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார். (ஆதி. 39:11-20; சங். 105:17, 18) அவர் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியராக இருந்தபோதிலும், ஆசீர்வாதத்தைப் பெறுவதற்குப் பதிலாகத் தண்டனையைப் பெற்றதுபோல் தோன்றியது. ஆனால், 13 வருஷங்களுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. அவர் சிறையிலிருந்து விடுதலையாகி, பெரிய அதிகாரியானார்; எகிப்து ராஜாவுக்கு அடுத்ததாக அவருக்குத்தான் அதிகமான அதிகாரம் இருந்தது.—ஆதி. 41:14, 37-43; அப். 7:9, 10.

13 தனக்கு நடந்த அநியாயங்களை நினைத்து யோசேப்பு மனக்கசப்படைந்தாரா? யெகோவா தன்னைக் கைவிட்டுவிட்டதாக நினைத்தாரா? இல்லை. அவர் பொறுமையோடு காத்திருந்தார். அப்படிக் காத்திருக்க எது அவருக்கு உதவியது? யெகோவாமேல் இருந்த விசுவாசம்தான் உதவியது. யெகோவாவின் கட்டுப்பாட்டை மீறி எதுவும் நடக்காது என்பதை அவர் புரிந்துகொண்டார். அதனால்தான், “பயப்படாதீர்கள். உங்களைத் தண்டிக்க நான் என்ன கடவுளா? நீங்கள் எனக்குக் கெட்டது செய்ய நினைத்தும், அதை நல்லதாக மாற்றி பலருடைய உயிரைக் காப்பாற்ற கடவுள் நினைத்தார். அதைத்தான் இன்று செய்துவருகிறார்” என்று அவருடைய சகோதரர்களிடம் சொன்னார். (ஆதி. 50:19, 20) யெகோவாவின் ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருப்பது வீண்போகாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

14, 15. (அ) தாவீதுடைய பொறுமையை ஏன் பாராட்ட வேண்டும்? (ஆ) பொறுமையோடு காத்திருக்க தாவீதுக்கு எது உதவியது?

14 தாவீது ராஜாவுக்கும் நிறைய அநியாயங்கள் நடந்தன. இளம் வயதிலேயே அவரை இஸ்ரவேல் தேசத்துக்கு ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்தார். ஆனால், அவருடைய கோத்திரத்துக்கு ராஜாவாக ஆவதற்கே அவர் 15 வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. (2 சா. 2:3, 4) அதுவும், சவுல் ராஜா அவரைக் கொன்றுபோட முயற்சி செய்துகொண்டிருந்ததால் கொஞ்சக் காலத்துக்கு அவரிடமிருந்து ஓடி ஒளிய வேண்டியிருந்தது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அப்போது அவர் நாடோடியாக அலைய வேண்டியிருந்தது; வேறு தேசத்திலோ வனாந்தரத்தில் இருந்த குகைகளிலோ தங்க வேண்டியிருந்தது. ஒரு போரில் சவுல் கொல்லப்பட்ட பிறகும்கூட, இஸ்ரவேல் தேசம் முழுவதுக்கும் ராஜாவாக ஆக தாவீது கிட்டத்தட்ட ஏழு வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.—2 சா. 5:4, 5.

15 தாவீது ஏன் பொறுமையோடு காத்திருந்தார்? “எத்தனை நாளைக்குத்தான்” என்று ஐந்து முறை அவர் கேட்ட அதே சங்கீதத்தில்தான் அதற்கான பதில் இருக்கிறது. “நீங்கள் மாறாத அன்பு காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் தருகிற மீட்பினால் என் இதயம் சந்தோஷப்படும். யெகோவா என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்திருப்பதால் அவரைப் புகழ்ந்து பாடுவேன்” என்று அவர் சொன்னார். (சங். 13:5, 6) யெகோவா தன்னை நேசித்தார் என்றும், எப்போதுமே தனக்கு உண்மையாக இருப்பார் என்றும் தாவீதுக்குத் தெரிந்திருந்தது. அவ்வளவு காலமாக யெகோவா எப்படியெல்லாம் தனக்கு உதவி செய்திருந்தார் என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். அதோடு, பிரச்சினைகளை யெகோவா சரிசெய்யப்போகும் காலத்துக்காக அவர் ஆவலோடு காத்திருந்தார். யெகோவாவின் ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருப்பது வீண்போகாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

யெகோவா, தான் செய்யாததை மற்றவர்கள் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதில்லை

16, 17. பொறுமையோடு காத்திருப்பதில் யெகோவாவும் இயேசுவும் எப்படிச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார்கள்?

16 யெகோவா, தான் செய்யாத ஒன்றை மற்றவர்கள் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதில்லை. ஆவலோடு காத்திருப்பதில் அவர்தான் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். (2 பேதுரு 3:9-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, யெகோவா நியாயமில்லாமல் நடந்துகொண்டதாக ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு ஏதேன் தோட்டத்தில் சாத்தான் குற்றம்சாட்டினான். யெகோவா, தன்னுடைய பெயர் முழுமையாகப் பரிசுத்தமாக்கப்படும் காலத்துக்காக “பொறுமையோடு காத்திருக்கிறார்.” அதனால், ‘அவருக்காக ஆவலோடு காத்திருக்கிறவர்களுக்கு’ அருமையான ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.—ஏசா. 30:18.

17 ஆவலோடு காத்திருப்பதில் இயேசுவும் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். அவர் பூமியில் இருந்தபோது, சாகும்வரை உண்மையுள்ளவராக இருந்தார். கி.பி. 33-ல், தன்னுடைய மீட்புவிலையின் மதிப்பைப் பரலோகத்தில் யெகோவாவிடம் சமர்ப்பித்தார். ஆனால், ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிப்பதற்கு அவர் 1914-வரை காத்திருக்க வேண்டியிருந்தது. (அப். 2:33-35; எபி. 10:12, 13) அதுமட்டுமல்ல, எல்லா எதிரிகளையும் ஒழித்துக்கட்டுவதற்குத் தன்னுடைய ஆயிர வருஷ அரசாட்சியின் முடிவுவரை அவர் காத்திருக்க வேண்டும். (1 கொ. 15:25) அது ரொம்பவே அதிகமான காலம்தான், ஆனாலும் பொறுமையோடு காத்திருப்பதற்கான ஆசீர்வாதங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும்!

நமக்கு எது உதவி செய்யும்?

18, 19. பொறுமையோடு காத்திருக்க எது நமக்கு உதவும்?

18 நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டுமென்று, அதுவும் ஆவலோடு காத்திருக்க வேண்டுமென்று, யெகோவா விரும்புவதில் சந்தேகமே இல்லை. அப்படிக் காத்திருக்க எது நமக்கு உதவும்? கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்வது உதவும். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பொறுமை என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற ஒரு குணம். (எபே. 3:16; 6:18; 1 தெ. 5:17-19) அதனால், பொறுமையோடு சகித்திருப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள்.

19 அதோடு, யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காகப் பொறுமையோடு காத்திருக்க ஆபிரகாம், யோசேப்பு, தாவீது ஆகியவர்களுக்கு எது உதவியது என்று யோசித்துப் பாருங்கள். யெகோவாமீது இருந்த நம்பிக்கையும் விசுவாசமும்தான் அவர்களுக்கு உதவியது. அவர்கள் தங்களையும் தங்களுடைய விருப்பங்களையும் பற்றி மட்டுமே யோசிக்கவில்லை. அவர்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் யோசிக்கும்போது, நாமும் பொறுமையோடு காத்திருக்க விரும்புவோம்.

20. என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்?

20 நமக்குப் பிரச்சினைகள் வந்தாலும், ‘பொறுமையோடு காத்திருக்க’ நாம் தீர்மானமாக இருக்கிறோம். “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு, யெகோவாவே?” என்று சிலசமயம் நாம் கேட்கலாம். (ஏசா. 6:11) இருந்தாலும், கடவுளுடைய சக்தியின் உதவியோடு, எரேமியா தீர்க்கதரிசியைப் போலவே நாமும், “யெகோவாதான் என்னுடைய பங்கு. அதனால், நான் அவருக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்” என்று சொல்லலாம்.—புல. 3:21, 24.

^ பாரா. 11 ஆதியாகம புத்தகத்தில் இருக்கிற கிட்டத்தட்ட 15 அதிகாரங்கள் ஆபிரகாமின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கின்றன. அதோடு, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் 70 தடவைக்கு மேல் ஆபிரகாமைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

^ பாரா. 14 சவுல் இரண்டு வருஷங்களுக்குமேல் ஆட்சி செய்த பிறகு, யெகோவா அவரை ஒதுக்கிவிட்டார். ஆனால் சாகும்வரை, அதாவது இன்னும் 38 வருஷங்களுக்கு, ஆட்சி செய்ய அவர் அனுமதிக்கப்பட்டார்.—1 சா. 13:1; அப். 13:21.