Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பழைய சுபாவத்தை அடியோடு களைந்துபோடுவது எப்படி?

பழைய சுபாவத்தை அடியோடு களைந்துபோடுவது எப்படி?

‘பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோடுங்கள்.’—கொலோ. 3:9.

பாடல்கள்: 83, 129

1, 2. யெகோவாவின் சாட்சிகளிடம் மக்கள் எதைக் கவனிக்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகள் ரொம்பவே வித்தியாசப்பட்டவர்களாக இருப்பதை நிறைய பேர் கவனிக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஆன்டன் கில் என்ற ஒரு எழுத்தாளர், நாசி ஜெர்மனியில் இருந்த சாட்சிகளுடைய குணங்களைப் பாராட்டி எழுதினார். “நாசிக்கள் யெகோவாவின் சாட்சிகள்மேல் வெறுப்பைக் கொட்டினார்கள். . . . 1939-க்குள் 6,000 சாட்சிகள் [சித்திரவதை முகாம்களில்] தள்ளப்பட்டிருந்தார்கள்” என்று அவர் எழுதினார். சாட்சிகள் பயங்கரமாகத் துன்புறுத்தப்பட்டபோதும், நம்பகமானவர்களாக நடந்துகொண்டார்கள், அமைதியாக இருந்தார்கள், தங்கள் கடவுளுக்கு உண்மையாக நடந்துகொண்டார்கள், ஒற்றுமையாக இருந்தார்கள் என்றும் அவர் எழுதினார்.

2 சமீபத்தில், யெகோவாவின் சாட்சிகளிடம் ஒரு தனித்துவம் இருப்பதை தென் ஆப்பிரிக்க மக்களும் கவனித்தார்கள். ஒருகாலத்தில், அந்த நாட்டிலிருந்த வித்தியாசப்பட்ட இனங்களைச் சேர்ந்த சாட்சிகள் ஒன்றுகூடி வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் டிசம்பர் 18, 2011, ஞாயிற்றுக்கிழமை அன்று, வித்தியாசப்பட்ட இனங்களைச் சேர்ந்த 78,000-க்கும் அதிகமான சாட்சிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்தும் பக்கத்து நாடுகளிலிருந்தும் ஜோஹெனஸ்பர்க் நகரத்துக்கு வந்திருந்தார்கள்; அங்கிருந்த மிகப் பெரிய ஸ்டேடியத்தில் நடத்தப்பட்ட ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக அவர்கள் வந்திருந்தார்கள். அந்த ஸ்டேடியத்தின் மேனேஜர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார்: “இவ்ளோ ஒழுங்கா நடந்துக்குற ஜனங்கள இதுவர நான் இந்த ஸ்டேடியத்துல பாத்ததே இல்ல. எல்லாருமே கண்ணியமா உடை உடுத்தியிருக்காங்க. நீங்க இந்த ஸ்டேடியத்த ரொம்ப நல்லா சுத்தப்படுத்தியிருக்கீங்க. எல்லாத்தயும்விட முக்கியமா, நீங்க வேறவேற இனத்த சேர்ந்தவங்களா இருந்தாலும் ஒண்ணா இருக்கீங்க.”

3. நம்முடைய சர்வதேச சகோதரத்துவம் எந்த விதத்தில் தனித்துவம் வாய்ந்தது?

3 அப்படியென்றால், நம் சர்வதேச சகோதரத்துவம் தனித்துவம் வாய்ந்தது என்பதை சாட்சிகளாக இல்லாதவர்களாலும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. நாம் ஏன் மற்ற அமைப்புகளிலிருந்து வித்தியாசப்படுகிறோம்? ஏனென்றால், பைபிளின் உதவியோடும் கடவுளுடைய சக்தியின் உதவியோடும் யெகோவாவுக்குப் பிடிக்காத குணங்களை விட்டுவிட கடினமாக முயற்சி செய்கிறோம். நம்முடைய ‘பழைய சுபாவத்தை களைந்துபோட்டு புதிய சுபாவத்தை அணிந்துகொள்கிறோம்.’—கொலோ. 3:9, 10.

4. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்? ஏன்?

4 பழைய சுபாவத்தைக் களைந்துபோட்ட பிறகு, அது மறுபடியும் நம்மை அண்டாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையில், பழைய சுபாவத்தை எப்படிக் களைந்துபோடலாம்... அது ஏன் ரொம்ப முக்கியம்.. என்று முதலில் பார்ப்போம். பிறகு, ஒருவர் மோசமான காரியங்களில் எந்தளவு மூழ்கியிருந்தாலும், எப்படித் தலைகீழ் மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதையும் பார்ப்போம். நிறைய வருஷங்களாக யெகோவாவின் சாட்சிகளாக இருப்பவர்கள்கூட, பழைய சுபாவம் மறுபடியும் அண்டாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம் என்றும் சிந்திப்போம். ஏன்? ஏனென்றால், ஒருகாலத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்த சிலர் கவனமாக இல்லாமல் போய்விட்டார்கள். யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு எப்படி இருந்தார்களோ, அதேபோல் யோசிக்கவும் நடந்துகொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், நாம் இந்த எச்சரிக்கையை ஞாபகத்தில் வைக்க வேண்டும்: “தான் நிற்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறவன் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”—1 கொ. 10:12.

முறைகேடான பாலியல் ஆசைகள் எல்லாவற்றையும் விட்டொழியுங்கள்

5. (அ) பழைய சுபாவத்தை ஏன் உடனே களைந்துபோட வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுங்கள். (ஆரம்பப் படம்) (ஆ) பழைய சுபாவத்தின் பாகமாக இருக்கிற எந்தப் பழக்கவழக்கங்களைப் பற்றி கொலோசெயர் 3:5-9 சொல்கிறது?

5 நீங்கள் போட்டிருக்கும் துணி அழுக்காக இருக்கிறதென்றும், நாற்றம் அடிக்கிறதென்றும் தெரிந்தால் என்ன செய்வீர்கள்? உடனே அதைக் கழற்றிவிடுவீர்கள், இல்லையா? அதேபோல், யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டிருப்பதாக நாம் உணர்ந்தால், உடனே அவற்றை விட்டுவிடுவது அவசியம். அப்படிப்பட்ட கெட்ட பழக்கவழக்கங்களைப் பற்றிச் சொல்லும்போது, “எல்லாவற்றையும் அடியோடு விட்டுவிடுங்கள்” என்று பவுல் எழுதினார். அவற்றில் இரண்டு பழக்கங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்: (1) பாலியல் முறைகேடு, (2) அசுத்தமான நடத்தை.கொலோசெயர் 3:5-9-ஐ வாசியுங்கள்.

6, 7. (அ) பழைய சுபாவத்தைக் களைந்துபோட முயற்சி தேவை என்பதை பவுலின் வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன? (ஆ) சாக்கூரா எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாள்? மாற்றம் செய்ய அவளுக்கு எப்படிப் பலம் கிடைத்தது?

6 பாலியல் முறைகேடு. பைபிளில், “பாலியல் முறைகேடு” என்பது, சட்டப்படி திருமணம் செய்துகொண்ட கணவனை அல்லது மனைவியைத் தவிர வேறு யாருடனாவது பாலியல் உறவு வைத்துக்கொள்வதை உட்படுத்துகிறது. இந்த விஷயத்தில், கிறிஸ்தவர்கள் தங்களுடைய ‘உடல் உறுப்புகளை அழித்துப்போட’ வேண்டும் என்று பவுல் சொன்னார். அப்படியென்றால், கெட்ட ஆசைகளை விட்டொழிக்க நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்வது கஷ்டம்தான், ஆனால் கண்டிப்பாக நம்மால் ஜெயிக்க முடியும்!

7 ஜப்பானைச் சேர்ந்த சாக்கூரா என்ற சகோதரியின் அனுபவம் இதைத்தான் காட்டுகிறது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) சின்ன வயதில் சாக்கூரா அடிக்கடி தனிமையில் வாடினாள். அதைச் சமாளிப்பதற்காக, 15 வயதிலிருந்தே நிறைய பேருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். மூன்று தடவை அவள் கருக்கலைப்பு செய்துகொண்டாள். “ஆரம்பத்துல, தப்பான உறவு வச்சிக்கிட்டப்போ அன்பும் பாதுகாப்பும் கிடைச்ச மாதிரி தோணுச்சு. ஆனா அந்த பழக்கம் அதிகமாக அதிகமாக பாதுகாப்பே இல்லாத மாதிரி தோணுச்சு” என்று அவள் சொல்கிறாள். 23 வயதுவரை சாக்கூரா இப்படியே வாழ்க்கையை ஓட்டினாள். அதன் பிறகு யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். படித்த விஷயங்கள் அவளுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை விட்டுவிட யெகோவா அவளுக்கு உதவினார். குற்றவுணர்ச்சியையும் அவமானத்தையும் சமாளிக்கக்கூட யெகோவா அவளுக்கு உதவினார். இன்று, சாக்கூரா ஒழுங்கான பயனியராக இருக்கிறாள். இப்போதெல்லாம் அவள் தனிமையில் வாடுவதில்லை. “தினமும் யெகோவாவோட அன்ப ருசிக்கிறதுனால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று அவள் சொல்கிறாள்.

அசுத்தமான பழக்கவழக்கங்களை விட்டொழிப்பது எப்படி?

8. கடவுளுடைய பார்வையில் நம்மை அசுத்தமாக்கும் சில பழக்கங்கள் என்ன?

8 அசுத்தமான நடத்தை. பைபிளில், “அசுத்தமான நடத்தை” என்பது, பாலியல் முறைகேட்டை மட்டும் குறிப்பதில்லை. புகைபிடிப்பது, ஆபாசமான ஜோக்குகளைச் சொல்வது போன்ற விஷயங்களையும் அது குறிக்கிறது. (2 கொ. 7:1; எபே. 5:3, 4) தனியாக இருக்கும்போது செய்யப்படுகிற மோசமான காரியங்களைக்கூட அது குறிக்கிறது. உதாரணத்துக்கு, பாலியல் ஆசைகளைத் தூண்டுகிற புத்தகங்களைப் படிப்பதை அல்லது ஆபாசத்தைப் பார்ப்பதை அது குறிக்கிறது. இவை, அசுத்தமான பழக்கமாகிய சுய இன்பப் பழக்கத்தில் ஒருவரைக் கொண்டுபோய் விட்டுவிடலாம். (கொலோ. 3:5) *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

9. ஒருவர் ‘கட்டுக்கடங்காத காமப்பசியை’ வளர்த்துக்கொண்டால் என்ன ஆகும்?

9 அடிக்கடி ஆபாசத்தைப் பார்க்கிறவர்கள், ‘கட்டுக்கடங்காத காமப்பசியை’ வளர்த்துக்கொள்கிறார்கள்; அவர்கள் செக்ஸுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஆபாசத்துக்கு அடிமையாவது மதுபானத்துக்கோ போதைப்பொருளுக்கோ அடிமையாவதைப் போன்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தால் பயங்கர அவமானம், வேலையில் மந்தம், சந்தோஷமில்லாத குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, தற்கொலை போன்ற மோசமான விளைவுகள் ஏற்படுவதில் ஆச்சரியமே இல்லை. ஆபாசத்துக்கு அடிமையாகியிருந்த ஒருவர், அதிலிருந்து விடுபட்டு ஒரு வருஷமான பிறகுதான், தனக்கு மறுபடியும் சுயமரியாதை வந்ததாகச் சொன்னார்.

10. ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து ரிபேரோ எப்படி விடுபட்டார்?

10 ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தை விடுவது நிறைய பேருக்கு ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால், இந்தப் போராட்டத்தில் நம்மால் ஜெயிக்க முடியும். பிரேசிலைச் சேர்ந்த ரிபேரோ என்பவரின் அனுபவத்தைக் கவனியுங்கள். டீனேஜ் வயதில் அவர் வீட்டைவிட்டுப் போய்த் தனியாக வாழ ஆரம்பித்தார்; பேப்பரை மறுசுழற்சி செய்யும் ஒரு தொழிற்சாலையில் அவருக்கு வேலை கிடைத்தது. அங்கே ஆபாசப் படங்கள் நிறைந்த பத்திரிகைகளை அவர் பார்த்தார். “கொஞ்சம் கொஞ்சமா நான் அதுக்கு அடிமையாயிட்டேன். என்கூட வாழ்ந்துட்டிருந்த பொண்ணு எப்ப வீட்டிலிருந்து கிளம்புவா, நான் எப்ப ஆபாச வீடியோக்கள பார்க்கலாம்னு காத்துட்டிருப்பேன்” என்று அவர் சொல்கிறார். ஒரு நாள், அவர் வேலை பார்க்கும் இடத்தில், மறுசுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கு இடையில், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் இருந்தது. உடனே, அவர் அதை எடுத்து வாசித்தார். பிறகு, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். ஆனாலும், ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட அவருக்கு ரொம்பக் காலம் எடுத்தது. எது அவருக்கு உதவியது? “நான் ஜெபம் செஞ்சேன், பைபிள படிச்சேன், படிச்ச விஷயங்கள நல்லா யோசிச்சு பார்த்தேன். அதனால, கடவுளோட குணங்கள இன்னும் அதிகமா மதிக்க ஆரம்பிச்சேன். கடைசியில, ஆபாசத்த பார்க்கணுங்கற ஆசையவிட யெகோவாமேல இருந்த அன்பு அதிகமாயிடுச்சு” என்று அவர் சொல்கிறார். பைபிளின் உதவியோடும் கடவுளுடைய சக்தியின் உதவியோடும், அவர் தன் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்து, ஞானஸ்நானம் எடுத்தார். இப்போது சபையில் ஒரு மூப்பராக இருக்கிறார்.

11. ஆபாசத்தைப் பார்க்காமல் இருக்க ஒருவருக்கு எது உதவும்?

11 ரிபேரோ வெறுமனே பைபிளை வாசித்ததால் மட்டும் ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபடவில்லை என்பதைக் கவனியுங்கள். வாசித்த விஷயங்களைப் பற்றி அவர் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டியிருந்தது. அதையெல்லாம் இதயத்தில் பதியவைக்க வேண்டியிருந்தது. யெகோவாவிடம் ஜெபம் செய்யவும் அவருடைய உதவிக்காகக் கெஞ்சிக் கேட்கவும் வேண்டியிருந்தது. இதையெல்லாம் செய்ததால் கடவுள்மேல் அவருக்கு இருந்த அன்பு அதிகமானது. கடைசியில், ஆபாசத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அடியோடு போய்விட்டது. ஆபாசத்தைப் பார்க்காமல் இருக்க, நாமும் யெகோவாமேல் ஆழமான அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும், கெட்டதை வெறுக்க வேண்டும்.சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள்.

கோபத்தையும் பழிப்பேச்சையும் பொய்யையும் விட்டுவிடுங்கள்

12. கோபத்தையும் பழிப்பேச்சையும் விட்டுவிட ஸ்டீஃபனுக்கு எது உதவியது?

12 சிலர் சட்டென்று கோபப்படுகிறார்கள். கோபத்தில் மற்றவர்களுடைய மனதைப் புண்படுத்தும் விதத்திலோ அவர்களை அவமானப்படுத்தும் விதத்திலோ பேசிவிடுகிறார்கள். அதனால், அவர்களுடைய முழு குடும்பத்துக்கும் வேதனைதான் மிஞ்சுகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீஃபன் என்ற ஒரு அப்பா, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபித்துக்கொண்டு, கன்னாபின்னாவென்று பேசிவிடுவார். “என் மனைவியும் நானும் மூணு தடவை பிரிஞ்சிட்டோம். விவாகரத்து பண்றதுக்குக்கூட ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சிட்டோம்” என்று அவர் சொல்கிறார். பிறகு, அவர்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். படித்த விஷயங்களின்படி வாழ ஸ்டீஃபன் முயற்சி செய்தார். யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு அவருக்குக் கோபம் தலைக்கேறுமாம். வெடிக்கத் தயாராக இருக்கிற ஒரு வெடிகுண்டு போல உணருவாராம். ஆனால் அவர் பைபிளிலுள்ள அறிவுரைகளின்படி நடக்க ஆரம்பித்த பிறகு, நிலைமை முன்னேறியதாம். “இப்ப குடும்பத்துல எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். யெகோவாவோட உதவியால நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன்” என்று அவர் சொல்கிறார். இப்போது, ஸ்டீஃபன் உதவி ஊழியராக இருக்கிறார். அவருடைய மனைவி பல வருஷங்களாக ஒழுங்கான பயனியராக இருக்கிறார். “ஸ்டீஃபன் ரொம்ப அமைதியான பிரதர், கடினமா வேலை செய்வாரு, ரொம்ப மனத்தாழ்மையா இருப்பாரு” என்று அவருடைய சபையிலுள்ள மூப்பர்கள் சொன்னார்கள். அவர் கோபப்பட்டுப் பார்த்ததே இல்லை என்றும் சொன்னார்கள். ஸ்டீஃபன் அடியோடு மாறியதற்குக் காரணம் அவருடைய சொந்த முயற்சி அல்ல என்று அவரே ஒத்துக்கொள்கிறார். “என் குணத்த முழுசா மாத்திக்கறதுக்கு யெகோவா உதவி செஞ்சாரு. அவரோட உதவிய நான் ஏத்துக்கலன்னா இவ்ளோ அருமையான ஆசீர்வாதங்கள் கண்டிப்பா கிடைச்சிருக்காது” என்று அவர் சொல்கிறார்.

13. கோபம் ஏன் ஆபத்தானது? பைபிள் எதைப் பற்றி நம்மை எச்சரிக்கிறது?

13 கோபப்படுவதையும், மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவதையும், கூச்சல் போடுவதையும் தவிர்க்க வேண்டுமென்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (எபே. 4:31) இவை பெரும்பாலும் வன்முறையில்தான் முடியும். கோபப்படுவதும் வன்முறையில் ஈடுபடுவதும் சகஜம்தான் என்று உலகத்தில் நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், அப்படி நடந்துகொள்வது நம் படைப்பாளரை அவமதிக்கிறது. அதனால், நம்முடைய சகோதரர்களில் நிறைய பேர் இதையெல்லாம் விட்டுவிட்டு, புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள வேண்டியிருந்தது.சங்கீதம் 37:8-11-ஐ வாசியுங்கள்.

14. வன்முறையில் ஈடுபடுகிற ஒருவரால் சாந்தமானவராக மாற முடியுமா?

14 ஹான்ஸ் என்ற சகோதரருடைய அனுபவத்தைக் கவனிக்கலாம். அவர் ஆஸ்திரியாவில் இருக்கிற ஒரு சபையில் மூப்பராக சேவை செய்கிறார். “அவர மாதிரி சாந்தமான ஒரு பிரதரை பார்க்கவே முடியாது” என்று அந்தச் சபையுடைய மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சொன்னார். ஆனால், ஹான்ஸ் ஆரம்பத்திலிருந்தே சாந்தமானவர் கிடையாது. டீனேஜ் வயதிலேயே போதை தலைக்கேறும் அளவுக்கு அவர் குடிக்க ஆரம்பித்துவிட்டார், வன்முறையிலும் இறங்கினார். ஒரு தடவை, அவர் குடிபோதையில் இருந்தபோது, கோபத்தில் தன் காதலியைக் கொலையே செய்துவிட்டார். அதனால், அவருக்கு 20 வருஷம் சிறைத்தண்டனை கிடைத்தது. ஆனால், சிறை வாழ்க்கை அவருடைய சுபாவத்தை மாற்றவில்லை. ஒருநாள், அவரைச் சந்தித்துப் பேசும்படி அவருடைய அம்மா ஒரு மூப்பரைக் கேட்டுக்கொண்டார். பிறகு ஹான்ஸ், பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். “என்னோட குணத்த மாத்திக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, ஏசாயா 55:7-ல்ல ‘கெட்டவர்கள் கெட்ட வழிகளை விட்டுவிடட்டும்’னு வாசிச்சப்போ எனக்கு ஒரு உந்துவிப்பு கிடைச்சுது. அதேமாதிரி, சிலர் கெட்ட பழக்கங்களவிட்டு திருந்தியிருந்தத பத்தி 1 கொரிந்தியர் 6:11-ல்ல வாசிச்சப்போ எனக்கு உற்சாகமா இருந்துச்சு. வருஷக்கணக்கா யெகோவா அவரோட சக்திய கொடுத்து, என் குணத்த மாத்திக்க பொறுமையா உதவி செஞ்சாரு” என்று அவர் சொல்கிறார். அவர் சிறையில் இருந்தபோதே ஞானஸ்நானம் பெற்றார். 171/2 வருஷங்களாக சிறையில் இருந்த பிறகு விடுதலை செய்யப்பட்டார். “யெகோவா எனக்கு நிறைய கருணை காட்டியிருக்காரு, என்னை தாராளமா மன்னிச்சிருக்காரு. இதுக்கெல்லாம் அவருக்கு ரொம்ப நன்றியோட இருக்கேன்” என்று அவர் சொல்கிறார்.

15. பழைய சுபாவத்தில் வேறு எதுவும் அடங்கும்? பைபிள் அதைப் பற்றி என்ன சொல்கிறது?

15 பொய் சொல்வதும் பழைய சுபாவத்தில் அடங்கும். நிறைய பேர், வரி செலுத்தாமல் இருப்பதற்காகவோ தாங்கள் செய்யும் தவறுகளை மூடி மறைப்பதற்காகவோ பொய் சொல்கிறார்கள். ஆனால், யெகோவா ‘சத்தியத்தின் கடவுள்.’ (சங். 31:5) அதனால், அவரை வணங்குகிற எல்லாரும் ‘உண்மை பேச’ வேண்டுமென்றும், ‘பொய் சொல்ல’ கூடாதென்றும் அவர் எதிர்பார்க்கிறார். (எபே. 4:25; கொலோ. 3:9) அப்படியென்றால், நமக்குத் தர்மசங்கடமாகவோ கஷ்டமாகவோ இருந்தால்கூட நாம் உண்மையைத்தான் பேச வேண்டும்.—நீதி. 6:16-19.

அவர்களால் எப்படி மாற முடிந்தது?

16. பழைய சுபாவத்தைக் களைந்துபோட எது நமக்கு உதவும்?

16 பழைய சுபாவத்தை நம்முடைய சொந்த சக்தியால் களைந்துபோட முடியாது. சாக்கூரா, ரிபேரோ, ஸ்டீஃபன், ஹான்ஸ் ஆகிய எல்லாரும் தங்களை மாற்றிக்கொள்ள கடினமாகப் போராட வேண்டியிருந்தது. கடவுளுடைய சக்தி மற்றும் கடவுளுடைய வார்த்தையின் வல்லமைதான் அவர்களுக்கு உதவியது. (லூக். 11:13; எபி. 4:12) கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அவருடைய சக்தியிலிருந்தும் நாமும் பிரயோஜனமடைய வேண்டுமென்றால், தினமும் பைபிளைப் படிக்க வேண்டும், படிக்கிற விஷயங்களைத் தியானிக்க வேண்டும், அவற்றின்படி நடப்பதற்குத் தேவையான ஞானத்துக்காகவும் பலத்துக்காகவும் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். (யோசு. 1:8; சங். 119:97; 1 தெ. 5:17) சபைக் கூட்டங்களுக்காகத் தயாரித்து அவற்றில் கலந்துகொள்ளும்போதுகூட, நாம் கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அவருடைய சக்தியிலிருந்தும் பிரயோஜனம் அடைகிறோம். (எபி. 10:24, 25) யெகோவாவின் அமைப்பு செய்திருக்கிற மற்ற ஏற்பாடுகளையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; அதாவது, பத்திரிகைகள், JW பிராட்காஸ்டிங், JW லைப்ரரி, jw.org வெப்சைட் போன்றவற்றையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.—லூக். 12:42.

நாம் எப்படிப் பழைய சுபாவத்தைக் களைந்துபோடலாம்? (பாரா 16)

17. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காகக் கிறிஸ்தவர்கள் எந்தெந்த கெட்ட பழக்கவழக்கங்களை அடியோடு களைந்துபோட வேண்டுமென்று இந்தக் கட்டுரையில் பார்த்தோம். ஆனால், அவற்றைக் களைந்துபோட்டால் மட்டும் போதாது, புதிய சுபாவத்தை நாம் நிரந்தரமாக அணிந்துகொள்ளவும் வேண்டும். அதை எப்படிச் செய்யலாம் என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 7 இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 8 ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகத்தின் பிற்சேர்க்கையில், பக்கங்கள் 249-251-ல், “சுய இன்பப் பழக்கத்தை விட்டொழித்தல்” என்ற தலைப்பின்கீழ் பாருங்கள்.