Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புதிய சுபாவத்தை நிரந்தரமாக அணிந்துகொள்வது எப்படி?

புதிய சுபாவத்தை நிரந்தரமாக அணிந்துகொள்வது எப்படி?

“புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.” —கொலோ. 3:10.

பாடல்கள்: 43, 106

1, 2. (அ) நம்மால் புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள முடியும் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) புதிய சுபாவத்தின் எந்தக் குணங்களைப் பற்றி கொலோசெயர் 3:10-14-ல் கற்றுக்கொள்கிறோம்?

பரிசுத்த பைபிளின் புதிய உலக மொழிபெயர்ப்பில், ‘புதிய சுபாவம்’ என்ற வார்த்தைகள் இரண்டு தடவை வருகின்றன. (எபே. 4:24; கொலோ. 3:10) ‘புதிய சுபாவம்’ என்பது, “கடவுளுடைய விருப்பத்தின்படி . . . உருவாக்கப்பட்ட” சுபாவத்தைக் குறிக்கிறது. இந்தப் புதிய சுபாவத்தை நம்மால் அணிந்துகொள்ள முடியுமா? கண்டிப்பாக முடியும். ஏனென்றால், யெகோவா மனிதர்களைத் தன்னுடைய சாயலில் படைத்திருக்கிறார்; அதனால், அவருடைய அருமையான குணங்களை நம்மால் காட்ட முடியும்.—ஆதி. 1:26, 27; எபே. 5:1.

2 நாம் எல்லாரும் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், சிலசமயங்களில் நமக்குக் கெட்ட ஆசைகள் வருகின்றன. நம்முடைய சூழ்நிலைகளும் நம்மைப் பாதிக்கின்றன. இருந்தாலும், யெகோவாவின் உதவியோடு, அவருக்குப் பிடித்த நபர்களாக நம்மால் மாற முடியும். இதைச் செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும். அதற்கு உதவியாக, புதிய சுபாவத்தின் பாகமாக இருக்கும் பல குணங்களைப் பற்றி முதலில் பார்க்கலாம். (கொலோசெயர் 3:10-14-ஐ வாசியுங்கள்.) அதன் பிறகு, ஊழியத்தில் எப்படி அந்தக் குணங்களைக் காட்டலாம் என்று பார்க்கலாம்.

“நீங்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கிறீர்கள்”

3. புதிய சுபாவத்தின் ஒரு குணம் என்ன?

3 பாரபட்சம் காட்டாமல் இருப்பது, புதிய சுபாவத்தின் ஒரு முக்கியமான குணம் என்று பவுல் விளக்கினார். “கிரேக்கர் என்றோ, யூதர் என்றோ, விருத்தசேதனம் செய்தவர் என்றோ, விருத்தசேதனம் செய்யாதவர் என்றோ, அன்னியர் என்றோ, சீத்தியர் என்றோ, அடிமை என்றோ, சுதந்திரமானவர் என்றோ எந்த வேறுபாடும் இல்லை” என்று அவர் எழுதினார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) சபையில் யாருமே தங்களுடைய இனம், தேசம், அல்லது சமூக அந்தஸ்தின் காரணமாக மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கக் கூடாது. ஏன்? ஏனென்றால், கிறிஸ்துவின் சீஷர்களாக நாம் ‘எல்லாரும் ஒன்றாயிருக்கிறோம்.’—கொலோ. 3:11; கலா. 3:28.

4. (அ) யெகோவாவின் ஊழியர்கள் மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும்? (ஆ) எந்தச் சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருப்பது கஷ்டமாக இருக்கலாம்?

4 நாம் புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளும்போது, எல்லா இனங்களையும் பின்னணிகளையும் சேர்ந்தவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துவோம். (ரோ. 2:11) இப்படிச் செய்வது சில நாடுகளில் கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, தென் ஆப்பிரிக்காவில் நடந்த விஷயத்தைக் கவனியுங்கள். ஒருகாலத்தில், அங்கே ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியை அரசாங்கம் ஒதுக்கியது. யெகோவாவின் சாட்சிகள் உட்பட, பெரும்பாலான மக்கள் இப்போதும் அந்தப் பகுதிகளில்தான் வாழ்கிறார்கள். அங்கிருக்கிற சகோதரர்கள் தங்களுடைய ‘இதயக் கதவை அகலமாகத் திறப்பதற்கு’ ஆளும் குழுவினர் அவர்களை உற்சாகப்படுத்த விரும்பினார்கள். அதனால், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஒருவரோடு ஒருவர் நன்றாகப் பேசிப் பழகுவதற்காக, அக்டோபர் 2013-ல் ஒரு விசேஷ ஏற்பாடு செய்ய அனுமதி தந்தார்கள்.—2 கொ. 6:13.

5, 6. (அ) கடவுளுடைய மக்கள் ஒற்றுமையாக இருக்க ஒரு நாட்டில் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன? (ஆரம்பப் படம்) (ஆ) அதனால் என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன?

5 வித்தியாசப்பட்ட மொழியை அல்லது இனத்தைச் சேர்ந்த இரண்டு சபைகள் ஒன்றாக நேரம் செலவிடுவதற்கு, சில வாரயிறுதி நாட்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த இரண்டு சபைகளையும் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஒன்றாக ஊழியம் செய்தார்கள், ஒன்றாகக் கூட்டங்களில் கலந்துகொண்டார்கள், ஒருவரை ஒருவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்தார்கள். நூற்றுக்கணக்கான சபைகள் இந்த ஏற்பாட்டினால் பிரயோஜனம் அடைந்தன. நிறைய நல்ல அனுபவங்கள் கிடைத்ததாகக் கிளை அலுவலகத்துக்கு அறிக்கைகள் வந்தன. சாட்சிகளாக இல்லாதவர்கள்கூட அதைப் பாராட்டினார்கள். உதாரணத்துக்கு, ஒரு மத ஊழியர், “நான் யெகோவாவின் சாட்சி கிடையாது. ஆனா, உங்கள மாதிரி இவ்ளோ ஒழுங்கா பிரசங்க வேலைய செய்ய யாராலயும் முடியாதுங்கறத என்னால நிச்சயமா சொல்ல முடியும். எல்லா இனத்த சேர்ந்தவங்களும் ஒற்றுமையா இருக்கீங்க” என்று சொன்னார். அந்த ஏற்பாட்டைப் பற்றி சகோதர சகோதரிகள் என்ன நினைத்தார்கள்?

6 ஸோஸா மொழி பேசும் நோமா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். தன்னுடைய வீடு சின்னதாக இருந்ததால், ஆங்கில சபையைச் சேர்ந்த சாட்சிகளை வீட்டுக்கு அழைக்க முதலில் அவர் ரொம்பவும் தயங்கினார். ஆனால், அவர்களோடு ஊழியம் செய்த பிறகும், அவர்களுடைய வீடுகளுக்குப் போய்வந்த பிறகும் அவருடைய தயக்கமெல்லாம் போய்விட்டது. “அவங்களும் நம்மள மாதிரி சாதாரண ஜனங்கதான்!” என்று அவர் சொன்னார். பிறகு, ஆங்கில சபையைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஸோஸா சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய வந்தபோது, அவர்களில் சிலரை நோமா தன்னுடைய வீட்டுக்கு அழைத்து உபசரித்தார். அவருடைய வீட்டுக்கு வந்திருந்த ஒரு மூப்பர், எந்தச் சங்கடமும் இல்லாமல் ஒரு சின்ன ப்ளாஸ்டிக் பெட்டிமேல் உட்கார்ந்ததைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டார். அந்த ஏற்பாட்டினால், நிறைய சகோதர சகோதரிகளுக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்; அதோடு, வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களோடு பேசிப் பழக தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.

கரிசனையும் கருணையும் காட்டுங்கள்

7. நாம் ஏன் எப்போதுமே கரிசனை காட்ட வேண்டும்?

7 சாத்தானுடைய உலகத்துக்கு ஒரு முடிவு வரும்வரை யெகோவாவின் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். வேலையில்லா திண்டாட்டம், தீராத வியாதிகள், துன்புறுத்தல், இயற்கைப் பேரழிவுகள், உடைமைகளைப் பறிகொடுத்தல் போன்ற பிரச்சினைகள் நம் எல்லாருக்கும் வருகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருக்க நமக்கு ரொம்பவே கரிசனை தேவை. நமக்குக் கரிசனை இருந்தால் மற்றவர்களுக்குக் கருணை காட்டுவோம். (எபே. 4:32) இந்தக் குணங்கள், புதிய சுபாவத்தின் பாகமாக இருக்கின்றன; கடவுளைப் போல நடந்துகொள்ளவும் மற்றவர்களுக்கு ஆறுதல் தரவும் அவை நமக்கு உதவும்.—2 கொ. 1:3, 4.

8. சபையில் இருக்கிறவர்களிடம் கரிசனையும் கருணையும் காட்டும்போது என்ன பலன்கள் கிடைக்கும்? ஒரு உதாரணம் கொடுங்கள்.

8 வேறொரு நாட்டிலிருந்து குடிமாறி வந்தவர்களோ வசதிவாய்ப்பு இல்லாதவர்களோ நம் சபையில் இருந்தால், அவர்களுக்கு நாம் எப்படி அதிக கருணை காட்டலாம்? அவர்களை அன்பாக வரவேற்க வேண்டும், அவர்களுடைய நண்பர்களாக ஆக வேண்டும், அவர்களும் சபையில் முக்கியமானவர்கள்தான் என்று உணர வைக்க வேண்டும். (1 கொ. 12:22, 25) டானிகார்ல் என்பவருடைய அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து ஜப்பானுக்குக் குடிமாறிப் போனார். அவர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்ததால், அவரோடு வேலை செய்தவர்கள் அவரைச் சரியாக நடத்தவில்லை. ஒருநாள், அவர் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்துக்குப் போயிருந்தார். “அங்கிருந்த முக்கால்வாசி பேர் ஜப்பானை சேர்ந்தவங்கதான். ஆனாலும், நல்லா பழக்கமானவங்க மாதிரி எனக்கு அன்பா வரவேற்பு கொடுத்தாங்க” என்று அவர் சொன்னார். அங்கிருந்த சகோதரர்கள் அவரிடம் கருணையோடு நடந்துகொண்டதால், அவரால் யெகோவாவிடம் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள முடிந்தது; கடைசியில் ஞானஸ்நானமும் எடுக்க முடிந்தது. இப்போது அவர் ஒரு மூப்பராக இருக்கிறார். அவரும் அவருடைய மனைவி ஜெனிஃபரும் சபையில் இருப்பதற்காக மற்ற மூப்பர்கள் சந்தோஷப்படுகிறார்கள். “அவரும் அவரோட மனைவியும் பயனியர் ஊழியம் செஞ்சிட்டு ரொம்ப எளிமையா வாழ்றாங்க. கடவுளோட அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்குற விஷயத்துல நல்ல முன்மாதிரியா இருக்காங்க” என்று அந்த மூப்பர்கள் சொல்கிறார்கள்.—லூக். 12:31.

9, 10. ஊழியத்தில் கரிசனை காட்டுவதால் பலன்கள் கிடைக்கின்றன என்பதற்கு உதாரணங்கள் கொடுங்கள்.

9 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்போது, “எல்லாருக்கும் நன்மை செய்ய” நமக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. (கலா. 6:10) நிறைய சாட்சிகள், வேறொரு இடத்திலிருந்து குடிமாறி வந்திருப்பவர்கள்மேல் இருக்கிற கரிசனையால், அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். (1 கொ. 9:23) அவர்களுடைய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. உதாரணத்துக்கு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிஃபானி என்ற ஒரு பயனியர் சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். பிரிஸ்பேன் நகரத்திலிருந்த ஸ்வாஹிலி சபைக்கு உதவி செய்வதற்காக அவர் ஸ்வாஹிலி மொழியைக் கற்றுக்கொண்டார். அது அவருக்கு ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்தது; ஆனாலும், அவருடைய வாழ்க்கையை அது இன்னுமதிக அர்த்தமுள்ளதாக ஆக்கியது. அவர் இப்படிச் சொல்கிறார்: “உங்க ஊழியம் சுவாரஸ்யமா இருக்கணும்னா, வேற மொழி சபையோடு சேர்ந்து ஊழியம் செய்யுங்க. அப்படி செய்றப்போ, உங்க ஊர்ல இருந்துகிட்டே வேற ஊர்ல ஊழியம் செய்ற மாதிரி இருக்கும். அதுமட்டுமில்ல, சர்வதேச சகோதரத்துவத்த உங்களால ருசிக்க முடியும், நம்ம மத்தியில இருக்குற அற்புதமான ஒற்றுமையைக் கண்கூடா பார்க்க முடியும்.”

வேறொரு நாட்டிலிருந்து குடிமாறி வந்திருக்கிறவர்களுக்கு உதவி செய்ய எது கிறிஸ்தவர்களைத் தூண்டுகிறது? (பாரா 10)

10 ஜப்பானில் உள்ள ஒரு தம்பதியும் அவர்களுடைய மகள் சாக்கிக்கோவும் டிஃபானி மாதிரியே செய்தார்கள். சாக்கிக்கோ இப்படிச் சொல்கிறார்: “1990-கள்ல நாங்க ஊழியம் செஞ்சப்போ, பிரேசில்ல இருந்து குடிமாறி வந்த நிறைய பேர பார்த்தோம். வெளிப்படுத்துதல் 21:3, 4; சங்கீதம் 37:10, 11, 29 மாதிரியான வசனங்கள அவங்களோட போர்ச்சுகீஸ் மொழி பைபிள்ல காட்டுனப்போ, அவங்க நல்லா கேட்டாங்க; சிலசமயத்துல அவங்க கண்ணுல தண்ணியே வந்துருச்சு.” சாக்கிக்கோவும் அவருடைய பெற்றோரும் அந்த மக்கள்மேல் இருந்த கரிசனையால், அவர்களுக்கு சத்தியத்தைக் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள்; அதனால், குடும்பமாக போர்ச்சுகீஸ் மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். பிற்பாடு, ஒரு போர்ச்சுகீஸ் மொழி சபை உருவாவதற்கு அவரும் அவருடைய பெற்றோரும் உதவினார்கள். இத்தனை வருஷங்களாக, குடிமாறி வந்த நிறைய பேர் யெகோவாவின் சாட்சிகளாக ஆவதற்கு அவர்கள் உதவியிருக்கிறார்கள். “போர்ச்சுகீஸ் மொழிய கத்துக்குறது ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனாலும், எங்களுக்கு கிடைச்சிருக்குற ஆசீர்வாதங்கள பார்க்குறப்போ, அந்தக் கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்ல. யெகோவாவுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல” என்று சாக்கிக்கோ சொல்கிறார்.அப்போஸ்தலர் 10:34, 35-ஐ வாசியுங்கள்.

மனத்தாழ்மை காட்டுங்கள்

11, 12. (அ) நாம் எதற்காகப் புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள வேண்டும்? (ஆ) எப்போதும் மனத்தாழ்மையோடு இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

11 மனிதர்கள் நம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக அல்ல, நாம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள வேண்டும். பரிபூரணமாக இருந்த ஒரு தேவதூதன்கூட பெருமை வந்ததால் பாவம் செய்தான். (எசேக்கியேல் 28:17-ஐ ஒப்பிடுங்கள்.) அப்படியென்றால், பெருமையைத் தவிர்ப்பது பாவ இயல்புள்ள மனிதர்களுக்கு இன்னும் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்! ஆனாலும், நம்மால் மனத்தாழ்மை காட்ட முடியும்! அதற்கு எது உதவும்?

12 இரண்டு விஷயங்கள் நமக்கு உதவும்! முதலாவதாக, பைபிளைத் தினமும் வாசிக்கவும் தியானிக்கவும் வேண்டும். (உபா. 17:18-20) குறிப்பாக, இயேசுவின் போதனைகளைப் பற்றியும் மனத்தாழ்மை காட்டுவதில் அவர் வைத்த அருமையான முன்மாதிரியைப் பற்றியும் நாம் தியானித்துப் பார்க்க வேண்டும். (மத். 20:28) இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவும் அளவுக்கு மனத்தாழ்மை காட்டினார். (யோவா. 13:12-17) இரண்டாவதாக, கடவுளுடைய சக்தியைக் கேட்டு நாம் ஜெபம் செய்ய வேண்டும். மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தைத் தவிர்க்க அது உதவும்.—கலா. 6:3, 4; பிலி. 2:3.

13. மனத்தாழ்மை காட்டுவதால் என்ன பலன்கள் கிடைக்கின்றன?

13 நீதிமொழிகள் 22:4-ஐ வாசியுங்கள். நாம் மனத்தாழ்மை காட்ட வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். மனத்தாழ்மை காட்டுவதால் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. நாம் மனத்தாழ்மையோடு இருந்தால், சபையில் சமாதானமும் ஒற்றுமையும் பெருகும். அதோடு, யெகோவாவின் அளவற்ற கருணையும் நமக்குக் கிடைக்கும். அப்போஸ்தலன் பேதுரு இப்படி எழுதினார்: “எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள். ஏனென்றால், தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.”—1 பே. 5:5.

சாந்தமாக இருங்கள், பொறுமையைக் காட்டுங்கள்

14. சாந்தமாக இருப்பதிலும் பொறுமையைக் காட்டுவதிலும் தலைசிறந்த உதாரணம் யார்?

14 இந்த உலகத்தில், சாந்தமும் பொறுமையும் பலவீனத்திற்கான அடையாளம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், அது கொஞ்சம்கூட உண்மை இல்லை! இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக சக்திபடைத்த கடவுளாகிய யெகோவாவின் அருமையான குணங்கள் இவை! சாந்தத்தையும் பொறுமையையும் காட்டுவதில் அவர்தான் தலைசிறந்த உதாரணம்! (2 பே. 3:9) ஆபிரகாமுக்கும் லோத்துவுக்கும் தேவதூதர்கள் மூலம் பதில் சொன்னபோது, யெகோவா எந்தளவுக்குப் பொறுமை காட்டினார் என்று யோசித்துப் பாருங்கள். (ஆதி. 18:22-33; 19:18-21) அதோடு, கீழ்ப்படியாமல்போன இஸ்ரவேல் தேசத்தாரிடம் 1,500 வருஷங்களுக்கும் அதிகமாக யெகோவா எப்படிப் பொறுமையாக நடந்துகொண்டார் என்று நினைத்துப் பாருங்கள்.—எசே. 33:11.

15. சாந்தமாக இருப்பதிலும் பொறுமையைக் காட்டுவதிலும் இயேசு எப்படி முன்மாதிரியாக இருக்கிறார்?

15 இயேசு ‘சாந்தமாக’ இருந்தார். (மத். 11:29) சீஷர்கள் தவறு செய்தபோதும் அவர்களிடம் ரொம்பப் பொறுமையோடு நடந்துகொண்டார். பூமியில் அவர் ஊழியம் செய்தபோது, எதிரிகள் அடிக்கடி அவரைக் குறைசொன்னார்கள், அநியாயமாக அவர்மேல் குற்றம்சுமத்தினார்கள். ஆனால், மரணம்வரை அவர் சாந்தமாக இருந்தார், பொறுமையைக் காட்டினார். சித்திரவதைக் கம்பத்தில் பயங்கர வலியில் தவித்த சமயத்தில்கூட, தன்னைக் கொன்றுபோட நினைத்த எதிரிகளை மன்னிக்கும்படி தன் தகப்பனிடம் கேட்டார். “இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை” என்று சொன்னார். (லூக். 23:34) வலியிலும் வேதனையிலும்கூட அவர் சாந்தமாக இருந்தார், பொறுமையைக் காட்டினார்.1 பேதுரு 2:21-23-ஐ வாசியுங்கள்.

16. நாம் எப்படி சாந்தமாக இருக்கலாம், பொறுமையைக் காட்டலாம்?

16 சாந்தமாக இருப்பதற்கும் பொறுமையைக் காட்டுவதற்குமான ஒரு வழியைப் பற்றி பவுல் தன்னுடைய சக கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். “ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்” என்று அவர் எழுதினார். (கொலோ. 3:13) மற்றவர்களை மன்னிக்க வேண்டுமென்றால் நாம் சாந்தமாக இருக்க வேண்டும், பொறுமையைக் காட்ட வேண்டும். சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க இது உதவியாக இருக்கும்.

17. சாந்தமாக இருப்பதும், பொறுமையைக் காட்டுவதும் ஏன் முக்கியம்?

17 நாம் மற்றவர்களிடம் சாந்தத்தோடும் பொறுமையோடும் நடந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். நாம் புதிய உலகத்தில் வாழ வேண்டுமென்றால், இந்தக் குணங்களைக் காட்டுவது அவசியம். (மத். 5:5; யாக். 1:21) நாம் சாந்தமாக இருக்கும்போதும், பொறுமையைக் காட்டும்போதும் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறோம்; அப்படிச் செய்ய மற்றவர்களுக்கும் உதவுகிறோம்.—கலா. 6:1; 2 தீ. 2:24, 25.

அன்பு காட்டுங்கள்

18. பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்வதற்கும் அன்புக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

18 இதுவரை நாம் பார்த்த எல்லா குணங்களுக்கும் அன்பு என்ற குணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, ஏழைகளைவிட பணக்காரர்களை ரொம்ப மதிப்பு மரியாதையோடு நடத்திய சகோதரர்களுக்கு சீஷராகிய யாக்கோபு அறிவுரை சொல்ல வேண்டியிருந்தது. அப்படி நடந்துகொள்வது, “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்ற கடவுளுடைய கட்டளையை மீறுவதாக இருக்கும் என்று அவர் விளக்கினார். அதோடு, “தொடர்ந்து பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றால், பாவம் செய்கிறீர்கள்” என்றும் சொன்னார். (யாக். 2:8, 9) மக்கள்மேல் நமக்கு அன்பு இருந்தால், அவர்களுடைய படிப்பையோ இனத்தையோ சமூக அந்தஸ்தையோ காரணங்காட்டி அவர்களைத் தாழ்வாக நினைக்க மாட்டோம். பாரபட்சம் இல்லாதவர்கள்போல் நாம் நடிக்கக் கூடாது; உண்மையிலேயே, பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்.

19. நாம் அன்பு காட்டுவது ஏன் முக்கியம்?

19 “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது.” (1 கொ. 13:4) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைத் தொடர்ந்து அறிவிப்பதற்கு, பொறுமையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் காட்டுவது அவசியம். (மத். 28:19) சபையில் இருக்கிற எல்லா சகோதர சகோதரிகளோடும் ஒத்துப்போவதற்குக்கூட இந்தக் குணங்கள் உதவும். நாம் எல்லாருமே அப்படிப்பட்ட அன்பைக் காட்டும்போது, சபை ஒற்றுமையாக இருக்கும்; அப்போது யெகோவாவுக்குப் புகழ் சேரும்! இந்த ஒற்றுமையைப் பார்த்து, மற்றவர்கள் உண்மை வணக்கத்திடம் கவர்ந்திழுக்கப்படுவார்கள். அதனால், புதிய சுபாவத்தைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்லி முடிப்பது பொருத்தமாக இருக்கிறது: “இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பைக் காட்டுங்கள். எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்.”—கொலோ. 3:14.

‘உங்கள் மனப்பான்மையை புதுப்பித்துக்கொண்டே இருங்கள்’

20. (அ) என்ன கேள்விகளை நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்? (ஆ) என்ன அருமையான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது?

20 ‘பழைய சுபாவத்தை அடியோடு களைந்துபோடுவதற்கு நான் இன்னும் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்?’ என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும், உதவிக்காகக் கெஞ்சிக் கேட்க வேண்டும். எப்பாடுபட்டாவது கெட்ட யோசனைகளையும் செயல்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான், ‘கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவோம்.’ (கலா. 5:19-21) ‘யெகோவாவ பிரியப்படுத்துறதுக்காக நான் யோசிக்கிற விதத்த தொடர்ந்து சரிசெய்றேனா?’ என்றும் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். (எபே. 4:23, 24) நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், புதிய சுபாவத்தை நிரந்தரமாக அணிந்துகொள்ள கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அதுவும், காலமெல்லாம் இப்படிச் செய்துகொண்டே இருக்க வேண்டும். எல்லாருமே புதிய சுபாவத்தை அணிந்துகொண்டு, யெகோவாவின் அருமையான குணங்களைப் பரிபூரணமாகக் காட்டும் சமயத்தில், வாழ்க்கை எவ்வளவு அற்புதமாக இருக்கும்!

^ பாரா. 3 பைபிள் காலங்களில், சீத்தியர்களை மக்கள் இழிவாகப் பார்த்தார்கள்; ஏனென்றால், அவர்கள் நாகரிகமில்லாத, காட்டுமிராண்டித்தனமான ஆட்கள் என்று நினைத்தார்கள்.