Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சகரியா பார்த்த தரிசனங்கள்—நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

சகரியா பார்த்த தரிசனங்கள்—நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

“என்னிடம் திரும்பி வாருங்கள் . . . அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்.”—சக. 1:3.

பாடல்கள்: 120, 117

1-3. (அ) சகரியா, தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தபோது யெகோவாவின் மக்களுடைய நிலைமை எப்படி இருந்தது? (ஆ) தன்னிடம் திரும்பி வரும்படி யெகோவா ஏன் தன்னுடைய மக்களிடம் சொன்னார்?

பறக்கும் சுருள்... பாத்திரத்துக்குள் ஒரு பெண்... நாரையின் சிறகுகள் போன்ற சிறகுகளோடு காற்றில் பறக்கும் இரண்டு பெண்கள்... இவைதான் சகரியா பார்த்த சுவாரஸ்யமான சில தரிசனங்கள்! (சக. 5:1, 7-9) வியக்க வைக்கும் இந்தத் தரிசனங்களை யெகோவா ஏன் தன்னுடைய தீர்க்கதரிசிக்குக் காட்டினார்? அந்தச் சமயத்தில் இஸ்ரவேலர்களின் நிலைமை எப்படி இருந்தது? அந்தத் தரிசனங்களிலிருந்து இன்று நாம் எப்படிப் பிரயோஜனம் அடையலாம்?

2 அது கி.மு. 537-ம் வருஷம். அப்போது யெகோவாவின் மக்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். ஏனென்றால், 70 வருஷ அடிமைத்தனத்துக்குப் பிறகு அவர்கள் பாபிலோனிலிருந்து விடுதலையாகியிருந்தார்கள்! எருசலேமுக்குத் திரும்பிப் போய், மறுபடியும் ஆலயத்தைக் கட்டி, யெகோவாவை அங்கே வணங்க அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். ஒரு வருஷத்துக்குப் பிறகு, இஸ்ரவேலர்கள் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டார்கள். அப்போது, அவர்கள் அளவில்லாத சந்தோஷத்தில், ‘ரொம்பத் தூரம் கேட்கும் அளவுக்கு சத்தமிட்டார்கள்.’ (எஸ்றா 3:10-13) ஆனால், ஆலயத்தைக் கட்டும் வேலைக்கு எதிர்ப்பு அதிகமாகிக்கொண்டே போனது. அதனால், இஸ்ரவேலர்கள் ரொம்பவும் சோர்ந்துபோய், ஆலயத்தைக் கட்டுவதையே விட்டுவிட்டார்கள். தங்களுக்காக வீடுகளைக் கட்டவும் வயல்களில் பயிர் செய்யவும் ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியே 16 வருஷங்கள் ஓடிவிட்டன; ஆனால், யெகோவாவின் ஆலயம் கட்டி முடிக்கப்படவில்லை. தங்களைப் பற்றியே யோசிப்பதை விட்டுவிட்டு யெகோவாவிடம் திரும்பிவர வேண்டுமென்று மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. பக்திவைராக்கியத்தோடும் தைரியத்தோடும் அவர்கள் தன்னை வணங்க வேண்டுமென்று யெகோவா விரும்பினார்.

3 அதனால், கி.மு. 520-ல் தீர்க்கதரிசியாகிய சகரியாவை அவர் அனுப்பினார்; பாபிலோனிலிருந்து அவர்களை விடுதலை செய்ததற்கான காரணத்தை சகரியாவின் மூலம் அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். சகரியா என்ற பெயரின் அர்த்தமே, “யெகோவா நினைத்துப் பார்த்திருக்கிறார்” என்பதுதான். அந்தப் பெயர் என்ன முக்கியமான உண்மையை உணர்த்தியது? யெகோவா தங்களுக்காகச் செய்திருந்த எல்லாவற்றையும் இஸ்ரவேலர்கள் மறந்துவிட்டபோதிலும், யெகோவா அவர்களை மறக்கவில்லை என்பதை உணர்த்தியது. (சகரியா 1:3, 4-ஐ வாசியுங்கள்.) உண்மை வணக்கத்தை மறுபடியும் நிலைநாட்ட யெகோவா அவர்களுக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தார். அதேசமயத்தில், அரைமனதோடு தன்னை வணங்குவதை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று கடுமையாக எச்சரித்தார். இப்போது, சகரியா பார்த்த ஆறாவது தரிசனத்தையும் ஏழாவது தரிசனத்தையும் பற்றிக் கவனிக்கலாம். இஸ்ரவேலர்களை யெகோவா எப்படிச் செயல்படத் தூண்டினார் என்று தெரிந்துகொள்ளலாம்; அதோடு, இந்த இரண்டு தரிசனங்களும் இன்று நமக்கு எப்படி உதவும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.

திருடர்களுக்கு எதிரான கடவுளுடைய தீர்ப்பு

4. ஆறாவது தரிசனத்தில் சகரியா என்ன பார்த்தார்? அந்தச் சுருள் ஏன் இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தது? (ஆரம்பப் படம் 1)

4 சகரியா புத்தகத்தின் 5-ஆம் அதிகாரம், ஒரு விநோதமான தரிசனத்தோடு ஆரம்பிக்கிறது. (சகரியா 5:1, 2-ஐ வாசியுங்கள்.) காற்றில் ஒரு சுருள் பறந்துவருவதை சகரியா பார்த்தார். அது கிட்டத்தட்ட 30 அடி நீளத்திலும் 15 அடி அகலத்திலும் இருந்தது. அந்தச் சுருள் திறந்திருந்தது, அதில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. (சக. 5:3) அது கடுமையான ஒரு நியாயத்தீர்ப்பு செய்தி. பழங்காலத்தில், சுருளின் ஒரு பக்கத்தில்தான் மக்கள் எழுதினார்கள். ஆனால், அந்தச் செய்தி மிக முக்கியமாக இருந்ததால் சுருளின் இரண்டு பக்கங்களிலுமே அது எழுதப்பட்டிருந்தது.

கிறிஸ்தவர்கள் மத்தியில் எந்த விதமான திருட்டுக்கும் இடமில்லை (பாராக்கள் 5-7)

5, 6. திருட்டை யெகோவா எப்படிக் கருதுகிறார்?

5 சகரியா 5:3, 4-ஐ வாசியுங்கள். மனிதர்கள் எல்லாரும் தங்களுடைய செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். முக்கியமாக, யெகோவாவின் மக்களுடைய விஷயத்தில் இது உண்மையாக இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் அவருடைய பெயரைத் தாங்கியிருக்கிறார்கள். அவர்கள் அவரை நேசிக்கிறார்கள்; திருடுவது அவருடைய பெயருக்கு அவமானத்தைக் கொண்டுவரும் என்று அவர்களுக்குத் தெரியும். (நீதி. 30:8, 9) நல்ல காரணத்துக்காகத் திருடுவதில் தவறில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், எவ்வளவு நல்ல காரணமாகத் தெரிந்தாலும் சரி, ஒரு நபர் ஏதோவொன்றைத் திருடும்போது, யெகோவாவையும் அவருடைய பெயரையும் அவருடைய சட்டத்தையும்விட தன்னுடைய பேராசைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

6 சாபம், “திருடனுடைய வீட்டுக்குள் . . . போய்த் தங்கும்” என்றும், அது “அந்த வீட்டையே எரித்துவிடும்” என்றும் சகரியா 5:3, 4 சொல்வதைக் கவனித்தீர்களா? அப்படியென்றால், தன் மக்களில் யாராவது தவறு செய்துவிட்டால் அதை அம்பலப்படுத்தவும் நியாயந்தீர்க்கவும் யெகோவாவினால் முடியும். போலீஸ்காரர்கள், முதலாளிகள், மூப்பர்கள், அல்லது பெற்றோர்களிடமிருந்து ஒருவர் தன்னுடைய திருட்டை மறைக்கலாம், ஆனால் யெகோவாவிடமிருந்து மறைக்க முடியாது. எப்படிப்பட்ட திருட்டையும் யெகோவா வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துவிடுவார். (எபி. 4:13) “எல்லாவற்றிலும்” நேர்மையாக நடக்கக் கடுமையாக முயற்சி செய்கிறவர்களோடு பழகுவதற்குக் கிடைத்த வாய்ப்புக்காக நாம் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறோம்.—எபி. 13:18.

7. பறக்கும் சுருளிலுள்ள சாபத்தை நாம் எப்படித் தவிர்க்கலாம்?

7 எல்லா வகையான திருட்டும் யெகோவாவின் கோபத்தைக் கிளறுகிறது. யெகோவாவின் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களைத் தெரிந்துகொண்டு அவற்றைப் பின்பற்றுவது, அதாவது அவருடைய பெயருக்குக் களங்கம் வராத விதத்தில் வாழ்வது, நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம். அப்படி வாழும்போது, கீழ்ப்படியாத ஆட்களுக்கு யெகோவா கொடுக்கும் தண்டனையிலிருந்து நாம் தப்பிப்போம்.

“தினமும்” உங்கள் வாக்கைக் காப்பாற்றுங்கள்

8-10. (அ) சத்தியம் செய்வது அல்லது உறுதிமொழி கொடுப்பது என்றால் என்ன? (ஆ) சிதேக்கியா ராஜா எந்த உறுதிமொழியை மீறினார்?

8 அடுத்ததாக, அந்தப் பறக்கும் சுருள் கடவுளுடைய பெயரில் “பொய் சத்தியம்” செய்கிறவர்களுக்கு ஒரு எச்சரிப்புச் செய்தியைச் சொன்னது. (சக. 5:4) ஒருவர் சத்தியம் செய்யும்போது அல்லது உறுதிமொழி கொடுக்கும்போது, ஒரு விஷயம் உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறார்; அல்லது, ஏதோவொன்றைக் கண்டிப்பாகச் செய்வார் என்றோ செய்ய மாட்டார் என்றோ வாக்குறுதி கொடுக்கிறார்.

9 யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்வது அல்லது உறுதிமொழி கொடுப்பது, சாதாரண விஷயமே அல்ல. எருசலேமை ஆட்சி செய்த கடைசி ராஜாவான சிதேக்கியாவின் அனுபவம் இதைத்தான் காட்டுகிறது. அவர் பாபிலோனின் ராஜாவுக்கு அடிபணிந்து நடப்பதாக யெகோவாவின் பெயரில் உறுதிமொழி கொடுத்தார். ஆனால், அந்த வாக்கைக் காப்பாற்றாமல் போய்விட்டார். அதனால், யெகோவா இப்படிச் சொன்னார்: “அவனுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்த ராஜாவின் தேசமான பாபிலோனில் அவன் சாவான். அந்த ராஜாவுக்குக் கொடுத்த உறுதிமொழியை அவன் மதிக்காமல், ஒப்பந்தத்தை மீறினான்.”—எசே. 17:16.

10 சிதேக்கியா ராஜா யெகோவாவின் பெயரில் உறுதிமொழி கொடுத்திருந்தார், அதனால் அவர் அதை மீறக் கூடாதென்று யெகோவா எதிர்பார்த்தார். (2 நா. 36:13) ஆனால், சிதேக்கியா தன்னுடைய வாக்கை மீறி, பாபிலோனிலிருந்து விடுதலையாவதற்கு எகிப்தின் உதவியைக் கேட்டார். இருந்தாலும், எகிப்தினால் அவருக்கு உதவி செய்ய முடியவில்லை.—எசே. 17:11-15, 17, 18.

11, 12. (அ) நாம் கொடுக்கிற வாக்குகளிலேயே மிகவும் முக்கியமானது எது? (ஆ) நம்முடைய அர்ப்பணிப்புக்கு ஏற்றபடி நாம் எப்படித் தினமும் வாழ வேண்டும்?

11 சிதேக்கியாவின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நாம் வாக்குக் கொடுக்கும்போது யெகோவா கவனித்துக் கேட்கிறார்; அவருக்குப் பிரியமாக நடப்பதற்கு நம்முடைய வாக்கை நாம் காப்பாற்ற வேண்டும். (சங். 76:11) நாம் கொடுக்கிற வாக்குகளிலேயே மிகவும் முக்கியமானது, யெகோவாவுக்கு நம் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக நாம் கொடுக்கும் வாக்குதான். நம்மையே அவருக்கு அர்ப்பணிக்கும்போது, நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, அவருக்குத் தொடர்ந்து சேவை செய்வோம் என்று வாக்குக் கொடுக்கிறோம்.

12 யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கை நாம் எப்படிக் காப்பாற்றலாம்? நமக்கு “தினமும்” பெரிய அளவிலும் சின்ன அளவிலும் சோதனைகள் வருகின்றன. அந்தச் சோதனைகளைச் சமாளிக்கும் விதத்தின் மூலம், யெகோவாவுடன் நமக்கு இருக்கும் பந்தம் எந்தளவுக்கு உறுதியானது என்பதைக் காட்டுகிறோம். (சங். 61:8) உதாரணத்துக்கு, வேலை செய்யும் இடத்தில் அல்லது பள்ளியில் யாராவது உங்களைக் காதலிப்பதுபோல் நடந்துகொண்டால் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு அதில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை என்பதைக் காட்டுவீர்களா? யெகோவாவுக்குக் கீழ்ப்படியத்தான் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுவீர்களா? (நீதி. 23:26) ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் நீங்கள் மட்டும்தான் யெகோவாவை வணங்குபவராக இருக்கலாம். அப்படியென்றால், தொடர்ந்து கிறிஸ்தவ வழியில் நடப்பதற்கு யெகோவாவிடம் உதவி கேட்கிறீர்களா? நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், யெகோவாவின் அன்புக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் தினமும் அவருக்கு நன்றி சொல்கிறீர்களா? தினமும் பைபிளை வாசிக்க நேரம் ஒதுக்குகிறீர்களா? ஒரு விதத்தில் பார்த்தால், யெகோவாவுக்கு நம் வாழ்க்கையை அர்ப்பணித்தபோது இதையெல்லாம் செய்வதாகத்தான் வாக்குக் கொடுத்தோம். நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, முழுமூச்சோடு அவரை வணங்கும்போது, அவரை நேசிக்கிறோம் என்பதையும் அவருக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம். நம் வணக்கமுறை நம் வாழ்க்கைமுறையாக இருக்கிறது. நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதால், அருமையான எதிர்காலத்தைத் தருவதாக அவர் வாக்குக் கொடுக்கிறார்.—உபா. 10:12, 13.

13. சகரியா பார்த்த ஆறாவது தரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

13 சகரியா பார்த்த ஆறாவது தரிசனத்திலிருந்து நாம் எதைப் புரிந்துகொள்கிறோம்? நாம் யெகோவாவை நேசித்தால், கொடுத்த வாக்கை மீறவோ திருடவோ மாட்டோம் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அதோடு, இஸ்ரவேலர்கள் நிறைய தவறுகள் செய்திருந்தாலும், யெகோவா தன்னுடைய வாக்கைக் காப்பாற்றினார் என்றும், அவர்களைக் கைவிடாமல் இருந்தார் என்றும் தெரிந்துகொள்கிறோம். இஸ்ரவேலர்களை எதிரிகள் சூழ்ந்திருந்ததால் அவர்கள் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்ததை யெகோவா புரிந்துகொண்டார். நாமும் நம்முடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதை யெகோவா தன்னுடைய உதாரணத்தின் மூலம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். நம்முடைய வாக்கைக் காப்பாற்ற அவர் நமக்கு உதவுவார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் நமக்கு உதவி செய்வதற்கான ஒரு வழி, பூமியிலுள்ள எல்லா அக்கிரமத்துக்கும் சீக்கிரத்தில் முடிவுகட்டப்போவதாக நம்பிக்கை தருவதாகும். இந்த நம்பிக்கையைப் பற்றி சகரியாவின் அடுத்த தரிசனத்தில் நாம் வாசிக்கலாம்.

யெகோவா அக்கிரமத்தை ஒழித்துக்கட்டுகிறார்

14, 15. (அ) ஏழாவது தரிசனத்தில் சகரியா எதைப் பார்த்தார்? (ஆரம்பப் படம் 2) (ஆ) பாத்திரத்துக்குள் இருந்த பெண் யார்? தேவதூதர் ஏன் அந்தப் பாத்திரத்தை மூடினார்?

14 சகரியா அந்தப் பறக்கும் சுருளைப் பார்த்த பிறகு, ஒரு தேவதூதர் அவரிடம், “நிமிர்ந்து பார்” என்று சொன்னார். அப்போது சகரியா, அளப்பதற்கான ஒரு பாத்திரத்தைப் பார்த்தார். (சகரியா 5:5-8-ஐ வாசியுங்கள்.) எப்பா என்ற அந்தப் பாத்திரத்துக்கு ஈயத்தால் செய்யப்பட்ட வட்டமான மூடி இருந்தது. அந்த மூடி திறக்கப்பட்டபோது, ‘அந்தப் பாத்திரத்துக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருந்ததை’ சகரியா பார்த்தார். “இவள்தான் அக்கிரமக்காரி!” என்று அந்தத் தேவதூதர் சகரியாவிடம் சொன்னார். அவள் வெளியே வர முயற்சி செய்ததைப் பார்த்து சகரியா எந்தளவுக்கு மிரண்டுபோயிருப்பார்! ஆனால், அந்தத் தேவதூதர் உடனடியாக அவளைப் பாத்திரத்துக்குள்ளே தள்ளி, கனமான அந்த மூடியால் மூடினார். இப்படிச் செய்வதன் மூலம் அவர் எதை அர்த்தப்படுத்தினார்?

15 யெகோவா தன்னுடைய மக்கள் மத்தியில் எந்த விதமான அக்கிரமத்தையும் அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கையை இந்தத் தரிசனம் நமக்குத் தருகிறது. யெகோவா ஏதாவது அக்கிரமத்தைப் பார்த்தால், அதை ஒழித்துக்கட்ட உடனடியாகச் செயல்படுவார். (1 கொ. 5:13) கனமான மூடியால் அந்தப் பாத்திரத்தை உடனடியாக மூடியதன் மூலம் அந்தத் தேவதூதர் இதைத்தான் அர்த்தப்படுத்தினார்.

உண்மை வணக்கம் சுத்தமாக இருக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார் (பாராக்கள் 16-18)

16. (அ) அந்தப் பாத்திரத்துக்கு என்ன ஆனது? (ஆரம்பப் படம் 3) (ஆ) சிறகுகளோடு வந்த பெண்கள் அந்தப் பாத்திரத்தை எங்கே கொண்டுபோனார்கள்?

16 அடுத்ததாக, நாரையின் சிறகுகள் போன்ற பலமான சிறகுகளோடு இரண்டு பெண்கள் பறந்துவருவதை சகரியா பார்த்தார். (சகரியா 5:9-11-ஐ வாசியுங்கள்.) அந்த இரண்டு பெண்களும், பாத்திரத்துக்குள் இருந்த பெண்ணிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருந்தார்கள். தங்களுடைய பலமான சிறகுகளால் அந்த “அக்கிரமக்காரி” இருந்த பாத்திரத்தை அவர்கள் தூக்கிக்கொண்டு போனார்கள். அவளை எங்கே கொண்டுபோனார்கள்? “சினேயார் தேசத்துக்கு,” அதாவது பாபிலோனுக்கு, கொண்டுபோனார்கள். ஏன் அங்கே கொண்டுபோனார்கள்?

17, 18. (அ) பாபிலோன்தான் ‘அக்கிரமக்காரி இருக்க வேண்டிய இடம்’ என்று ஏன் சொல்லலாம்? (ஆ) எதைச் செய்ய நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

17 ‘அக்கிரமக்காரியை’ கொண்டுபோவதற்கு பாபிலோன் ஏன் பொருத்தமான இடமாக இருந்ததென்று சகரியாவின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்குப் புரிந்திருக்கும். பாபிலோன் அக்கிரமம் நிறைந்த நகரமாக இருந்தது; அது ஒழுக்கக்கேட்டிலும் பொய் வணக்கத்திலும் ஊறிப்போயிருந்தது. அங்கே வாழ்ந்த சமயத்தில் சகரியாவும் மற்ற யூதர்களும், பொய் மத பழக்கவழக்கங்களால் கறைபடாமல் இருக்க தினமும் கடினமாக முயற்சி செய்தார்கள். அதனால் இந்தத் தரிசனம், உண்மை வணக்கம் சுத்தமாக இருக்கும்படி யெகோவா பார்த்துக்கொள்வார் என்ற உத்தரவாதத்தைத் தந்தது.

18 உண்மை வணக்கத்தைச் சுத்தமாக வைக்க வேண்டிய பொறுப்பு யூதர்களுக்கும் இருந்ததை அந்தத் தரிசனம் அவர்களுக்கு நினைப்பூட்டியது. கடவுளுடைய மக்கள் மத்தியில் அக்கிரமத்துக்கு இடம் தரவே முடியாது! ஒருபோதும் அதற்கு இடம் தரப்படாது! இன்று, யெகோவா நம்மை அவருடைய சுத்தமான அமைப்புக்குள் கொண்டுவந்திருக்கிறார். அங்கே அவருடைய அன்பையும் பாதுகாப்பையும் நாம் அனுபவிக்கிறோம். அமைப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. யெகோவாவின் மக்கள் மத்தியில் அக்கிரமம் துளிகூட இருக்கக் கூடாது!

சுத்தமான மக்கள் யெகோவாவுக்குப் பெருமை சேர்க்கிறார்கள்

19. சகரியா பார்த்த சுவாரஸ்யமான தரிசனங்கள் இன்று நமக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன?

19 சகரியா பார்த்த ஆறாவது தரிசனமும் ஏழாவது தரிசனமும், கெட்டது செய்கிறவர்களுக்கு இந்தக் கடுமையான எச்சரிக்கையைத் தருகின்றன: அக்கிரமம் தொடருவதற்கு யெகோவா அனுமதிக்க மாட்டார்! அதனால், அவருடைய ஊழியர்களாக நாமும் அக்கிரமத்தை வெறுக்க வேண்டும். அந்தத் தரிசனங்கள் நமக்கு ஒரு உறுதியையும் தருகின்றன; அதாவது, நம்முடைய அன்பான தகப்பனைப் பிரியப்படுத்துவதற்கு நாம் முயற்சி செய்யும்போது, அவர் சாபத்தைக் கொடுக்காமல் பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் கொடுப்பார் என்ற உறுதியைத் தருகின்றன. அக்கிரமம் நிறைந்த இந்த உலகத்தில் சுத்தமாக இருப்பது கஷ்டம்தான்; ஆனால், யெகோவாவின் உதவியோடு நம்மால் சுத்தமாக இருக்க முடியும்! உண்மை வணக்கம் நிலைத்திருக்கும் என்று நாம் எப்படி நிச்சயமாக இருக்கலாம்? மிகுந்த உபத்திரவம் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், யெகோவா தன்னுடைய அமைப்பைப் பாதுகாப்பார் என்று நமக்கு எப்படித் தெரியும்? இதைப் பற்றியெல்லாம் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.