Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ரதங்களும் கிரீடமும் உங்களைப் பாதுகாக்கின்றன

ரதங்களும் கிரீடமும் உங்களைப் பாதுகாக்கின்றன

“உங்கள் கடவுளான யெகோவா சொல்வதைக் கேட்டு நடந்தால் அதைத் தெரிந்துகொள்வீர்கள்.”—சக. 6:15.

பாடல்கள்: 17, 136

1, 2. சகரியா ஏழாவது தரிசனத்தைப் பார்த்து முடித்தபோது, எருசலேமில் இருந்த யூதர்களின் நிலைமை எப்படி இருந்தது?

சகரியா ஏழாவது தரிசனத்தைப் பார்த்து முடித்தபோது, நிறைய விஷயங்கள் அவர் மனதில் ஓடியிருக்கும். நேர்மையற்ற மக்களைத் தண்டிக்கப்போவதாக யெகோவா கொடுத்த வாக்குறுதி அவரைப் பலப்படுத்தியிருக்கும். ஆனால், அப்போதும் நிறையப் பேர் அநியாயமும் அக்கிரமமும் செய்துகொண்டுதான் இருந்தார்கள். அதோடு, யெகோவாவின் ஆலயம் கட்டி முடிக்கப்படாமல் இருந்தது. யெகோவா கொடுத்த வேலையை யூதர்கள் ஏன் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிட்டார்கள்? தாங்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்தார்களா?

2 எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த யூதர்கள் யெகோவாவின் வணக்கத்தார் என்பது சகரியாவுக்குத் தெரிந்திருந்தது. பாபிலோனில் இருந்த தங்கள் வீட்டையும் தொழிலையும் விட்டுவரும்படி ‘அவர்களுடைய மனதை உண்மைக் கடவுள் தூண்டியிருந்தார்.’ (எஸ்றா 1:2, 3, 5) நன்றாகப் பழக்கப்பட்ட தேசத்தை விட்டுவிட்டு அவர்கள் வந்திருந்தார்கள், அதுவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் அதுவரை எருசலேமைப் பார்த்ததே இல்லை. யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதை அந்த யூதர்கள் அவ்வளவு முக்கியமாக நினைத்ததால்தான், கிட்டத்தட்ட 1,600 கிலோமீட்டர் (1,000 மைல்) தூரத்துக்குக் கரடுமுரடான, ஆபத்தான பாதையில் பயணம் செய்து வந்திருந்தார்கள்.

3, 4. திரும்பிவந்த யூதர்கள் என்ன பிரச்சினைகளைச் சந்தித்தார்கள்?

3 பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு அவர்கள் செய்த நீண்ட பயணத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தாங்கள் குடியிருக்கப்போகும் தேசத்தைப் பற்றி யோசிப்பதற்கும் பேசுவதற்கும் அவர்களுக்கு நிறைய நேரம் இருந்தது. எருசலேமும் அதன் ஆலயமும் ஒருகாலத்தில் எவ்வளவு அழகாக இருந்தன என்பதை வயதானவர்கள் அவர்களுக்குச் சொல்லியிருந்தார்கள். (எஸ்றா 3:12) நீங்கள் அவர்களோடு பயணம் செய்வதாகக் கற்பனை செய்து பாருங்கள். முதன்முதலில் எருசலேமைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? கட்டிடங்கள் பாழடைந்திருக்கின்றன... அவற்றில் புதர் மண்டியிருக்கிறது... நகரத்தின் மதில்கள் இடிந்து கிடக்கின்றன... வாசல்கதவுகளும் கோபுரங்களும் இருந்த மதில் பகுதிகளில் பெரிய இடைவெளிகள் இருக்கின்றன. இந்த நிலைமையில் இருக்கும் மதில்களை, பாபிலோனின் மாபெரும் மதில்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பீர்களா? இதையெல்லாம் பார்த்து சோர்ந்துபோவீர்களா? ஆனால், யூதர்கள் சோர்ந்துபோகவில்லை. ஏன்? ஏனென்றால், அவ்வளவு நீண்ட பயணத்தின்போது யெகோவா அவர்களுக்கு உதவி செய்திருந்தார், அவர்களைப் பாதுகாத்திருந்தார். அவர்கள் எருசலேமுக்கு வந்ததுமே, ஆலயம் இருந்திருந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தினமும் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த ஆரம்பித்தார்கள். (எஸ்றா 3:1, 2) அவர்கள் பக்திவைராக்கியத்தோடு வேலை செய்யத் தயாராக இருந்தார்கள். எதுவுமே அவர்களைச் சோர்வடைய வைக்காது என்பதுபோல் தோன்றியது.

4 ஆலயத்தை மட்டுமல்லாமல், தங்களுடைய நகரங்களையும் வீடுகளையும்கூட யூதர்கள் திரும்பக் கட்ட வேண்டியிருந்தது. தங்களுடைய குடும்பங்களுக்கு உணவு தேவைப்பட்டதால் அவர்கள் பயிர்செய்யவும் வேண்டியிருந்தது. (எஸ்றா 2:70) இப்படி, அவர்களுக்கு ஏகப்பட்ட வேலை இருந்தது. ஆனால் கொஞ்ச நாளிலேயே, எதிரிகள் வந்து அவர்களுடைய வேலையை நிறுத்தப் பார்த்தார்கள். 15 வருஷங்களுக்கு எதிர்ப்பு தொடர்ந்ததால், யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சோர்ந்துபோனார்கள். (எஸ்றா 4:1-4) கி.மு. 522-ஆம் வருஷத்தில் இன்னொரு பெரிய பிரச்சினை வந்தது. எருசலேமில் நடந்த எல்லா கட்டுமான வேலைகளையும் நிறுத்தும்படி பெர்சிய ராஜா அப்போது கட்டளை கொடுத்தார். அந்த நகரத்தைத் திரும்பக் கட்டுவதற்கு வாய்ப்பே இல்லாததுபோல் தெரிந்தது.—எஸ்றா 4:21-24.

5. யெகோவா எப்படித் தன் மக்களுக்கு உதவினார்?

5 தன்னுடைய மக்களுக்குப் பலமும் தைரியமும் தேவை என்பதை யெகோவா புரிந்துகொண்டார். அதனால், சகரியாவுக்குக் கடைசியாக ஒரு தரிசனத்தைக் காட்டினார். அதில், தன்னுடைய மக்களை நேசிப்பதாகவும், தனக்குச் சேவை செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சிகளை உயர்வாக மதிப்பதாகவும் உறுதி அளித்தார். அதோடு, தான் கொடுத்த வேலையை மறுபடியும் செய்ய ஆரம்பித்தால் அவர்களைப் பாதுகாப்பதாகவும் வாக்குக் கொடுத்தார். ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதைப் பற்றிச் சொன்னபோது, “உங்கள் கடவுளான யெகோவா சொல்வதைக் கேட்டு நடந்தால் அதைத் தெரிந்துகொள்வீர்கள்” என்றார்; அதாவது, அது நிறைவேறுவதை அவர்கள் பார்ப்பார்கள் என்றார்.—சக. 6:15.

தேவதூதர்களின் படை

6. (அ) சகரியாவின் எட்டாவது தரிசனம் எப்படி ஆரம்பமானது? (ஆரம்பப் படம்) (ஆ) குதிரைகள் ஏன் வித்தியாசமான நிறங்களில் இருந்தன?

6 சகரியா பார்த்த எட்டாவது தரிசனம், அதாவது கடைசி தரிசனம், விசுவாசத்தை மிக அதிகமாகப் பலப்படுத்தும் ஒரு தரிசனம் என்று சொல்லலாம். (சகரியா 6:1-3-ஐ வாசியுங்கள்.) சகரியா பார்த்ததை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள். “செம்பினாலான இரண்டு மலைகளுக்கு இடையிலிருந்து” குதிரைகள் பூட்டப்பட்ட நான்கு ரதங்கள் வந்தன. ஒவ்வொரு ரதத்தின் குதிரைகளும் வித்தியாசமான நிறங்களில் இருந்தன; அதனால், அந்த ரதங்களை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிந்தது. “இவையெல்லாம் என்ன?” என்று சகரியா கேட்டார். (சக. 6:4) நாமும் இதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். ஏனென்றால், இந்தத் தரிசனம் நமக்கும் பிரயோஜனமாக இருக்கிறது.

இன்றும் யெகோவா தன்னுடைய மக்களைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் தேவதூதர்களைப் பயன்படுத்துகிறார்

7, 8. (அ) இரண்டு மலைகள் எதைக் குறிக்கின்றன? (ஆ) அந்த மலைகள் ஏன் செம்பினால் செய்யப்பட்டிருந்தன?

7 பைபிளில் மலைகள் என்பது ராஜ்யங்களை, அதாவது அரசாங்கங்களை, குறிக்கலாம். சகரியா பார்த்த மலைகள், தானியேல் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு மலைகளைப் போலவே இருக்கின்றன. அவற்றில் ஒன்று, என்றுமே அழியாத யெகோவாவின் சர்வலோகப் பேரரசாட்சியைக் குறிக்கிறது; மற்றொன்று, இயேசுவை ராஜாவாகக் கொண்ட மேசியானிய அரசாங்கத்தைக் குறிக்கிறது. (தானி. 2:35, 45) 1914-ஆம் வருஷத்தில் இயேசு ராஜாவானார். அதுமுதல் அந்த இரண்டு மலைகளும், பூமி சம்பந்தப்பட்ட கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் விசேஷ பங்கை வகித்துவருகின்றன.

8 அந்த மலைகள் ஏன் செம்பினால் செய்யப்பட்டிருந்தன? செம்பு மிகவும் விலைமதிப்புள்ள, பளபளப்பான ஒரு உலோகம். இஸ்ரவேலர்கள் எருசலேமில் வழிபாட்டுக் கூடாரத்தைக் கட்டுவதற்கும், பிற்பாடு ஆலயத்தைக் கட்டுவதற்கும் செம்பைப் பயன்படுத்த வேண்டுமென்று யெகோவா தேவன் சொல்லியிருந்தார். (யாத். 27:1-3; 1 ரா. 7:13-16) அவருடைய சர்வலோகப் பேரரசாட்சியும் மேசியானிய அரசாங்கமும் தரத்தில் மிகவும் உயர்ந்திருப்பதை வலியுறுத்துவதற்காக அந்த மலைகள் செம்பினால் செய்யப்பட்டிருந்தன. அவை மனிதர்களுக்குப் பாதுகாப்பையும் நிறைய ஆசீர்வாதங்களையும் கொடுக்கப்போகின்றன.

9. ரதங்களை ஓட்டியவர்கள் யாரை அடையாளப்படுத்துகிறார்கள், அவர்களுடைய நியமிப்பு என்ன?

9 ரதங்களும் அவற்றை ஓட்டியவர்களும் அடையாளப்படுத்துவது யாரை? தேவதூதர்களை! ஒருவேளை வெவ்வேறு தொகுதிகளைச் சேர்ந்த தேவதூதர்களை அடையாளப்படுத்தலாம். (சகரியா 6:5-8-ஐ வாசியுங்கள்.) “முழு பூமிக்கும் எஜமானாக இருக்கிறவரிடமிருந்து” ஒரு விசேஷ நியமிப்பைப் பெற்றுக்கொண்டு அவர்கள் புறப்படுகிறார்கள். கடவுளுடைய மக்களைப் பாதுகாப்பதற்காகத் தேவதூதர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். முக்கியமாக, ‘வட தேசமாகிய’ பாபிலோனிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக அனுப்பப்படுகிறார்கள். இந்தத் தரிசனத்தின் மூலம் யெகோவா தன் மக்களுக்கு எதைத் தெரியப்படுத்தினார்? அவர்கள் இனி ஒருபோதும் பாபிலோனுக்கு அடிமையாக மாட்டார்கள் என்பதைத் தெரியப்படுத்தினார். சகரியாவின் காலத்தில் ஆலயத்தைக் கட்டிக்கொண்டிருந்த மக்களுக்கு இது எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்! எதிரிகளால் தங்களைத் தடுத்து நிறுத்தவே முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

10. ரதங்களையும் அவற்றை ஓட்டியவர்களையும் பற்றி சகரியா பார்த்த தரிசனம் இன்று நமக்கு எப்படி உதவி செய்கிறது?

10 இன்றும் யெகோவா தன்னுடைய மக்களைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் தேவதூதர்களைப் பயன்படுத்துகிறார். (மல். 3:6; எபி. 1:7, 14) மகா பாபிலோனின் அடிமைத்தனத்தில் சிக்கியிருந்த யெகோவாவின் மக்கள் 1919-ல் அடையாள அர்த்தத்தில் விடுதலையானார்கள். அதுமுதல், உண்மை வணக்கம் வளருவதையும் பரவுவதையும் தடுப்பதற்கு எதிரிகள் தீவிரமாக முயற்சி செய்திருக்கிறார்கள். (வெளி. 18:4) ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. தேவதூதர்கள் யெகோவாவின் அமைப்பைப் பாதுகாக்கிறார்கள். அதனால், யெகோவாவின் மக்கள் மறுபடியும் பொய் மதத்துக்கு அடிமையாகிவிடுவார்களோ என்று நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை. (சங். 34:7) அதற்குப் பதிலாக, நாம் சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யலாம். அந்த இரண்டு மலைகளும் நம்மைப் பத்திரமாகப் பாதுகாக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள சகரியாவின் தீர்க்கதரிசனம் நமக்கு உதவுகிறது.

11. கடவுளுடைய மக்களுக்கு எதிராக வரவிருக்கும் தாக்குதலை நினைத்து நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை?

11 ரொம்பச் சீக்கிரத்தில், சாத்தானுடைய உலகத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து கடவுளுடைய மக்களை அழிக்க முயற்சி செய்யும். (எசே. 38:2, 10-12; தானி. 11:40, 44, 45; வெளி. 19:19) எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தில், அவை இந்தப் பூமியை மேகம்போல் மூடுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை குதிரைகள்மேல் வரும், கடவுளுடைய மக்களை அழிப்பதற்காகக் கோபத்தோடு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. (எசே. 38:15, 16) * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) நாம் அவற்றை நினைத்துப் பயப்பட வேண்டுமா? வேண்டியதில்லை! ஏனென்றால், நம் பக்கம் யெகோவாவின் படை இருக்கிறது. மிகுந்த உபத்திரவத்தின்போது யெகோவாவின் தூதர்கள் அவருடைய மக்களைப் பாதுகாப்பார்கள்; ஆனால், யெகோவாவின் ஆட்சியை எதிர்க்கிற எல்லாரையும் அழித்துவிடுவார்கள். (2 தெ. 1:7, 8) அது எப்பேர்ப்பட்ட நாளாக இருக்கும்! யெகோவாவின் பரலோகப் படையைத் தலைமைதாங்கி நடத்தப்போவது யார்?

ராஜாவாகவும் குருவாகவும் இருப்பவருக்கு யெகோவா கிரீடம் சூட்டுகிறார்

12, 13. (அ) அடுத்ததாக என்ன செய்யும்படி சகரியாவிடம் யெகோவா சொன்னார்? (ஆ) தளிர் என்று அழைக்கப்படுகிறவர் இயேசு கிறிஸ்துதான் என்று நமக்கு எப்படித் தெரியும்?

12 அந்த எட்டு தரிசனங்களையும் சகரியா மட்டும்தான் பார்த்தார். ஆனால், அதன் பிறகு அவர் செய்ததை மற்றவர்கள் பார்த்தார்கள்; கடவுளுடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டியவர்களை அது உற்சாகப்படுத்தியது. (சகரியா 6:9-12-ஐ வாசியுங்கள்.) எல்தாயும் தொபையாவும் யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்தார்கள். அவர்களிடமிருந்து வெள்ளியையும் தங்கத்தையும் பெற்றுக்கொள்ளும்படி யெகோவா சகரியாவிடம் சொன்னார். அவற்றை வைத்து ஒரு “கிரீடம்” செய்யும்படியும் சொன்னார். (சக. 6:11) யூதா கோத்திரத்தையும் தாவீதின் வம்சத்தையும் சேர்ந்த ஆளுநரான செருபாபேலுக்காகவா அந்தக் கிரீடத்தைச் செய்யச் சொன்னார்? இல்லை. தலைமைக் குருவாகிய யோசுவாவின் தலையில் அந்தக் கிரீடத்தை வைக்கும்படி யெகோவா சொன்னார். அதைப் பார்த்த எல்லாருமே ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.

13 கிரீடம் வைக்கப்பட்டதால் தலைமைக் குருவான யோசுவா ராஜாவாக ஆகிவிட்டாரா? இல்லை. யோசுவா தாவீதின் வம்சத்தில் வராததால், ராஜாவாக ஆகும் தகுதி அவருக்கு இருக்கவில்லை. என்றென்றுமே ராஜாவாகவும் குருவாகவும் இருக்கப்போகிற ஒருவர் வரவிருந்ததை அடையாளப்படுத்தவே அவருடைய தலையில் கிரீடம் வைக்கப்பட்டது. அவரைத் தளிர் என்று பைபிள் அழைக்கிறது. அந்தத் தளிர்தான் இயேசு கிறிஸ்து.—ஏசா. 11:1; மத். 2:23, அடிக்குறிப்பு.

14. ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் இருக்கிற இயேசு என்ன வேலை செய்கிறார்?

14 ராஜாவாகவும், அதேசமயத்தில் தலைமைக் குருவாகவும் இயேசு இருக்கிறார். யெகோவாவுடைய தூதர்களின் படையை அவர் தலைமைதாங்கி நடத்துகிறார். வன்முறை நிறைந்த இந்த உலகத்தில் கடவுளுடைய மக்களைப் பாதுகாப்பாக உணர வைப்பதற்கு அவர் கடினமாக உழைக்கிறார். (எரே. 23:5, 6) ரொம்பச் சீக்கிரத்தில், யெகோவாவின் ஆட்சியையும் யெகோவாவின் மக்களையும் ஆதரித்து கிறிஸ்து போர் செய்வார்; அப்போது தேசங்களை ஜெயிப்பார். (வெளி. 17:12-14; 19:11, 14, 15) ஆனால் அதற்கு முன்பு, தளிர் என்று அழைக்கப்படுகிற இயேசு ஒரு பெரிய வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது.

அவர் ஆலயத்தைக் கட்டுவார்

15, 16. (அ) கடவுளுடைய மக்கள் இன்று நிலைநாட்டப்பட்டும் புடமிடப்பட்டும் இருப்பது எப்படி, யாரால்? (ஆ) கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் இந்தப் பூமி எப்படி இருக்கும்?

15 ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் மட்டும் இயேசு நியமிக்கப்படவில்லை; ‘யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்கும்’ நியமிக்கப்பட்டார். (சகரியா 6:13-ஐ வாசியுங்கள்.) 1919-ல், மகா பாபிலோனாகிய பொய் மதத்திலிருந்து கடவுளுடைய மக்களை விடுவித்ததன் மூலம் அவர் இந்தக் கட்டுமான வேலையைச் செய்தார். அவர் சபையை மறுபடியும் நிலைநாட்டி, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமித்தார். பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களின் இந்தத் தொகுதி, மாபெரும் ஆன்மீக ஆலயத்தின் பூமிக்குரிய பாகத்தில் நடக்கும் முக்கியமான வேலையை வழிநடத்துகிறது. (மத். 24:45) கடவுளுடைய மக்களை இயேசு புடமிட்டும் வந்திருக்கிறார்; இப்படி, சுத்தமான முறையில் கடவுளை வணங்க அவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.—மல். 3:1-3.

16 இயேசுவும், அவரோடு சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருக்கப்போகிற 1,44,000 பேரும் ஆயிரம் வருஷங்களுக்கு ஆட்சி செய்வார்கள். அந்தச் சமயத்தில், பரிபூரணத்தை அடைய உண்மையுள்ள மனிதர்களுக்கு அவர்கள் உதவி செய்வார்கள். அவர்கள் இந்த வேலையை முடிக்கும்போது, யெகோவாவின் உண்மை வணக்கத்தார் மட்டும்தான் இந்தப் பூமியில் இருப்பார்கள். கடைசியில், உண்மை வணக்கம் முழுமையாக நிலைநாட்டப்பட்டிருக்கும்!

நீங்களும் கட்டுமான வேலையைச் செய்யுங்கள்

17. அடுத்ததாக யூதர்களுக்கு யெகோவா என்ன உறுதியைத் தந்தார், அவருடைய செய்தி அவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?

17 சகரியாவின் செய்தி அந்தக் காலத்திலிருந்த யூதர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது? ஆலயத்தைக் கட்டி முடிப்பதற்காக யெகோவா அவர்களுக்கு உதவி செய்வதாகவும் பாதுகாப்புத் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருந்தார். அவருடைய வாக்கு அவர்களுக்கு நம்பிக்கை அளித்தது. இருந்தாலும், கொஞ்சம் பேரால் எப்படி இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய முடியுமென்று அவர்கள் யோசித்திருக்கலாம். அதனால், அவர்களுடைய பயத்தையும் சந்தேகத்தையும் போக்குவதற்காக சகரியா அடுத்ததாக ஒரு விஷயத்தைச் சொன்னார். அதாவது, அவர்களுக்கு உதவி செய்ய வந்த எல்தாய், தொபையா, யெதாயா போன்றவர்களோடு மற்றவர்களும் “வந்து யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார்கள்” என்று யெகோவா சொன்னதாக அவர் சொன்னார். (சகரியா 6:15-ஐ வாசியுங்கள்.) தாங்கள் செய்த வேலையை யெகோவா ஆதரித்தார் என்பதில் யூதர்களுக்குச் சந்தேகமே இருக்கவில்லை. அதனால், தைரியத்தோடு மறுபடியும் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள். அதுவும், பெர்சிய ராஜா அந்த வேலையை அதிகாரப்பூர்வமாகத் தடை செய்திருந்தபோதிலும் அவர்கள் அதைச் செய்தார்கள். அந்தத் தடை, அவர்களுடைய பாதையில் இருந்த ஒரு பெரிய மலையைப் போல இருந்தது. ஆனால், சீக்கிரத்தில் யெகோவா அதை நீக்கிவிட்டார். கடைசியில், கி.மு. 515-ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. (எஸ்றா 6:22; சக. 4:6, 7) யெகோவா சொன்ன அந்த வார்த்தைகள், அதைவிட பெரிய அளவில் இன்று நடந்துகொண்டிருக்கும் ஒன்றையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.

நாம் யெகோவாமேல் காட்டுகிற அன்பை அவர் ஒருபோதும் மறக்க மாட்டார்! (பாராக்கள் 18, 19)

18. சகரியா 6:15 இன்று எப்படி நிறைவேறுகிறது?

18 இன்று லட்சக்கணக்கான மக்கள் யெகோவாவை வணங்குகிறார்கள். தங்களிடம் உள்ள நேரம், சக்தி, உடைமை போன்ற “மதிப்புமிக்க பொருள்களை” சந்தோஷமாக அவருக்குக் கொடுக்கிறார்கள். இந்த விதத்தில், யெகோவாவின் மாபெரும் ஆன்மீக ஆலயத்தை ஆதரிக்கிறார்கள். (நீதி. 3:9) உண்மையோடு நாம் தரும் ஆதரவை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். எல்தாயும் தொபையாவும் யெதாயாவும், வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்துவந்து கொடுத்ததையும், அவற்றை வைத்து சகரியா ஒரு கிரீடம் செய்ததையும் நினைத்துப் பாருங்கள். உண்மை வணக்கத்துக்காக அவர்கள் கொடுத்த நன்கொடையின் “நினைவாக” அந்தக் கிரீடம் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. (சக. 6:14) யெகோவா நம்முடைய வேலையையும், அவர்மேல் நாம் காட்டுகிற அன்பையும் ஒருபோதும் மறக்க மாட்டார்.—எபி. 6:10.

19. சகரியா பார்த்த தரிசனங்கள், என்ன செய்வதற்கு நம்மைத் தூண்ட வேண்டும்?

19 இந்தக் கடைசி நாட்களில், யெகோவாவின் மக்கள் ஒரு பெரிய வேலையைச் செய்திருக்கிறார்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்தாலும் கிறிஸ்துவின் வழிநடத்துதலாலும் அவர்களால் அதைச் செய்ய முடிந்திருக்கிறது. உறுதியான, பாதுகாப்பான, என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு அமைப்பின் பாகமாக இருப்பதற்காக நாம் சந்தோஷப்படுகிறோம். உண்மை வணக்கம் சம்பந்தப்பட்ட யெகோவாவின் விருப்பம் நிறைவேறும் என்று நமக்குத் தெரியும். அதனால், யெகோவாவின் மக்கள் மத்தியில் இருப்பதைப் பாக்கியமாக நினையுங்கள்; ‘உங்கள் கடவுளான யெகோவா சொல்வதைக் கேட்டு நடங்கள்.’ அப்போது, நம்முடைய ராஜாவும் தலைமைக் குருவுமான இயேசுவும், தேவதூதர்களும் உங்களைப் பாதுகாப்பார்கள். உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்போது, உலகத்துக்கு மிஞ்சியிருக்கும் இந்தக் காலத்திலும், இனிவரும் காலத்திலும் யெகோவா உங்களைப் பத்திரமாகப் பாதுகாப்பார்!

^ பாரா. 11 கூடுதலான தகவலுக்கு, மே 15, 2015 காவற்கோபுரம், பக்கங்கள் 29-30-ல் வந்த “வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.