Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளும் உங்கள் எதிர்காலமும்

பைபிளும் உங்கள் எதிர்காலமும்

ஒரு சாயங்காலம் ஓர் இருட்டான பாதையில் நீங்கள் நடந்து போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். சூரியன் மறைந்து வெகு நேரம் ஆகியிருந்தாலும், நீங்கள் வழிதவறி போவதுபோல் உணர மாட்டீர்கள். ஏனென்றால், உங்கள் கையில் அதிக ஒளி தரும் ஒரு டார்ச் லைட் இருக்கிறது. அதைக் கீழ்நோக்கி உங்கள் பாதையில் காட்டும்போது, உங்களுக்கு முன் என்ன இருக்கிறது என்பதை உங்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அதை நேராகக் காட்டும்போது, அதனுடைய ஒளி வெகு தூரம்வரை உங்கள் பாதைக்கு வெளிச்சம் தருகிறது.

பைபிளும் சில விதங்களில் ஒரு டார்ச் லைட்டைப் போலவே இருக்கிறது. இதற்கு முன்பு வந்த கட்டுரைகளில் பார்த்தபடி, கடவுளுடைய வார்த்தை, நம் கண் முன்னால் இருக்கிற பிரச்சினைகளைச் சமாளிக்க, அதாவது நம் தினசரி பிரச்சினைகளைச் சமாளிக்க, உதவும். அதோடு, நம் எதிர்காலத்தைத் தெளிவாகப் பார்க்கவும், அதாவது நிரந்தர சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் வழிநடத்துகிற பாதையைத் தெளிவாகப் பார்க்கவும், அதில் நடக்கவும், நமக்கு உதவும். (சங்கீதம் 119:105) எப்படி?

இரண்டு விதங்களில் பைபிள் நமக்கு எதிர்கால நம்பிக்கையைத் தருகிறது: 1 நம் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க பைபிள் உதவுகிறது, 2 நம் படைப்பாளரோடு என்றென்றும் நண்பராக இருப்பது எப்படி என்பதை பைபிள் கற்றுத்தருகிறது.

1 நம் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது

நம் பிரச்சினைகளைச் சமாளிக்க பைபிள் நம்பகமான ஆலோசனைகளைத் தருகிறது. ஒரு சுயஉதவி புத்தகத்தைவிட பைபிள் மதிப்புள்ளது. ஏனென்றால், நம்முடைய ஆசைகளுக்கு மட்டுமே கவனம் செலுத்தாமல், அவற்றைவிட முக்கியமான ஒரு விஷயத்தைப் பார்க்க பைபிள் நமக்கு உதவுகிறது. அந்த முக்கியமான விஷயத்தைப் பார்க்கும்போதுதான், நம் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது.

உதாரணத்துக்கு, “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்ற பைபிள் ஆலோசனையை எடுத்துக்கொள்ளுங்கள். (அப்போஸ்தலர் 20:35) பண உதவி தேவைப்பட்ட ஒருவருக்கு நீங்கள் உதவி செய்தது உங்கள் ஞாபகத்துக்கு வருகிறதா? அல்லது ஒரு நண்பர் அவருடைய இதயத்தில் இருந்த எல்லாவற்றையும் உங்களிடம் கொட்டியபோது நீங்கள் காதுகொடுத்து கேட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒருவருக்கு உதவி செய்த திருப்தி உங்கள் மனதுக்கு இதமாக இருந்திருக்கும், இல்லையா?

எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும்போது நமக்கு அளவில்லாத சந்தோஷம் கிடைக்கும். “எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் ஒருவருக்கு உதவி செய்யும்போது, நீங்கள் செய்ததைவிட உங்களுக்கு அதிகமாகத் திருப்பி கிடைக்கும்” என்று ஒரு நூலாசிரியர் சொன்னார். நாம் ஒருவருக்கு உதவி செய்யும்போது, அதுவும் திருப்பித்தர முடியாத ஒருவருக்கு உதவி செய்யும்போது, நமக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். அப்போது, ஒரு முக்கியமான விஷயத்தின் பாகமாக நாம் ஆவோம். சொல்லப்போனால், நம் படைப்பாளரோடு சேர்ந்து நாம் வேலை செய்வோம். நாம் செய்யும் கருணைமிக்க செயல்களை அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட கடனாக நினைக்கிறார். (நீதிமொழிகள் 19:17) நாம் ஏழைகளுக்குச் செய்யும் உதவியை அவர் பெரிதாக மதிக்கிறார். பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் வாழ்க்கையைத் தருவதன் மூலம் அவர் அந்தக் கடனைத் திருப்பித்தரப் போவதாக வாக்குக் கொடுக்கிறார். இது எப்பேர்ப்பட்ட எதிர்கால நம்பிக்கை!—சங்கீதம் 37:29; லூக்கா 14:12-14. *

எல்லாவற்றையும்விட, உண்மைக் கடவுளான யெகோவாவை வணங்குவதன் மூலம் நம் வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று பைபிள் சொல்கிறது. கடவுளுக்குப் புகழையும், மாண்பையும், கீழ்ப்படிதலையும் தரும்படி அவருடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துகிறது. ஏனென்றால், இதையெல்லாம் பெற்றுக்கொள்வதற்கு அவரே தகுதியானவர்! (பிரசங்கி 12:13; வெளிப்படுத்துதல் 4:11) இப்படிச் செய்யும்போது, நம்முடைய படைப்பாளரை நம்மால் சந்தோஷப்படுத்த முடியும். இது எவ்வளவு பெரிய விஷயம்! “ஞானமாக நடந்து என் இதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்று அவரே நம்மிடம் கேட்கிறார். (நீதிமொழிகள் 27:11) பைபிளில் சொல்லியிருக்கிற ஆலோசனைகளின்படி நாம் தீர்மானங்கள் எடுக்கும்போது, நம் அன்புத் தந்தையான யெகோவாவின் இதயத்தை நம்மால் சந்தோஷப்படுத்த முடியும். ஏனென்றால், அவர் நம்மேல் அக்கறையாக இருக்கிறார். அவருடைய ஆலோசனைகளின்படி நடப்பதன் மூலம் நாம் நன்மையடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (ஏசாயா 48:17, 18) இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த படைப்பாளரை வணங்குவதைவிட... அவருடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்தும் விதத்தில் வாழ்வதைவிட... நம் வாழ்க்கைக்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

2 நம் படைப்பாளருடைய நண்பராக இருக்க முடியும்

நம் படைப்பாளரோடு நட்பு வைத்துக்கொள்ளும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று அது சொல்கிறது. (யாக்கோபு 4:8) உண்மையிலேயே, சர்வசக்தியுள்ள படைப்பாளருடைய நண்பர்களாக நம்மால் ஆக முடியுமா என்று நாம் ஒருவேளை யோசிக்கலாம். ஆனால், நாம் ‘அவரைத் தேடினால்,’ அவரை நிச்சயம் ‘கண்டுபிடிக்க முடியும்.’ ஏனென்றால், “அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக” இல்லை என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 17:27) கடவுளுடைய நண்பராவதற்கு முயற்சி செய்யுங்கள் என்று பைபிள் சொல்லும் ஆலோசனை நம் எதிர்காலத்துக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும். எப்படி?

நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், நாமாகவே நம்முடைய எதிரியான மரணத்திடமிருந்து தப்பிக்க முடியாது. (1 கொரிந்தியர் 15:26) ஆனால், கடவுள் என்றென்றும் வாழ்கிறவர். அவருக்கு மரணம் என்பதே கிடையாது. தன்னுடைய நண்பர்களும் மரணமே இல்லாமல் என்றென்றும் வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். தன்னைத் தேடுகிறவர்களுக்கு யெகோவா என்ன கொடுக்க விரும்புகிறார்? நாம் ‘என்றென்றும் வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டும்’ என்று அவர் விரும்புகிறார்.—சங்கீதம் 22:26.

கடவுளோடு அப்படிப்பட்ட நிலையான நட்பை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? அதற்கு, அவருடைய வார்த்தையான பைபிளைப் படித்து, அவரைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். (யோவான் 17:3; 2 தீமோத்தேயு 3:16) பைபிளைப் புரிந்துகொள்ள அவரிடம் உதவி கேளுங்கள். ஏனென்றால், ஞானத்துக்காக ‘கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருந்தால்’ அவர் அதை நிச்சயம் தருவார் என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. * (யாக்கோபு 1:5) பிறகு, கற்றுக்கொண்ட விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். அப்போது, கடவுளுடைய வார்த்தை “[உங்கள்] கால்களுக்கு விளக்காகவும், [உங்கள்] பாதைக்கு வெளிச்சமாகவும்” இருக்கும்!—சங்கீதம் 119:105.

^ பாரா. 8 பூஞ்சோலை பூமியில் முடிவில்லாத வாழ்க்கையைத் தரப்போவதாகப் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள, பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 3-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.

^ பாரா. 13 நீங்கள் பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். இதைப் பற்றி தெரிந்துகொள்ள, www.pr418.com என்ற வெப்சைட்டில் பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவைப் பாருங்கள். (வெளியீடுகள் > வீடியோக்கள் என்ற தலைப்பில் பாருங்கள்)

கடவுள் என்றென்றும் வாழ்கிறவர். தன்னுடைய நண்பர்களும் என்றென்றும் வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்