Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துல்லியமான தீர்க்கதரிசனத்துக்கு ஒரு மவுன சாட்சி

துல்லியமான தீர்க்கதரிசனத்துக்கு ஒரு மவுன சாட்சி

இத்தாலியில் உள்ள மத்திய ரோமின் பிரமாண்டமான ஆர்ச், உலகெங்கும் இருந்து வருகிற சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கிறது. ரோமர்களின் அபிமானத்தைப் பெற்ற பேரரசர்களில் ஒருவரான டைட்டசை இந்த ஆர்ச் கௌரவிக்கிறது.

டைட்டசின் ஆர்ச்சில், மிக முக்கியமான சரித்திர சம்பவம் ஒன்றைச் சித்தரிக்கிற இரண்டு பெரிய புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆர்ச்சுக்கும் பைபிளுக்கும் வியக்க வைக்கிற ஒரு தொடர்பு இருப்பது நிறைய பேருக்குத் தெரியாது. பைபிள் தீர்க்கதரிசனங்கள் எவ்வளவு துல்லியமானவை என்பதற்கு டைட்டசின் ஆர்ச் ஒரு மவுன சாட்சியாக இருக்கிறது.

கண்டனம் செய்யப்பட்ட நகரம்

முதல் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரோமப் பேரரசின் ஆட்சிப்பகுதி பிரிட்டன் மற்றும் கோல் (Gaul) தொடங்கி (கோல் என்பது தற்போதைய பிரான்சு) எகிப்து வரை இருந்தது. அது வரலாறு காணாத அளவுக்குப் பலம்படைத்ததாகவும் செழிப்பானதாகவும் இருந்தது. ஆனால், அதனுடைய ஒரு தொலைதூரப் பகுதி மட்டும், அதாவது யூதேயா மாகாணம் மட்டும், ரோமுக்கு எப்போதும் பிரச்சினையாகவே இருந்தது.

என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஏன்ஷியன்ட் ரோம் இப்படிச் சொல்கிறது: “ரோமப் பேரரசுக்கு யூதேயா என்றாலே கடும் வெறுப்பாக இருந்தது; அதேபோல், ரோமக் கட்டுப்பாட்டில் இருந்த யூதேயாவுக்கும் ரோமப் பேரரசு என்றாலே கடும் வெறுப்பாக இருந்தது. தங்களுடைய பாரம்பரியங்களைக் கொஞ்சம்கூட மதிக்காத அன்னிய ஆட்சியாளர்களை யூதர்கள் ரொம்பவே வெறுத்தார்கள். அதேசமயம், யூதர்களுடைய முரட்டுப் பிடிவாதத்தை ரோமர்களால் கொஞ்சம்கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை.” ரோமக் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஒரு தலைவர் தங்களை விடுவிப்பார் என்றும், இஸ்ரவேலில் மறுபடியும் பொற்காலத்தை நிலைநாட்டுவார் என்றும் யூதர்களில் பலர் நம்பினார்கள். ஆனால், எருசலேம் சீக்கிரத்தில் அழிக்கப்படும் என்று கி.பி. 33-ல் இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார்.

“உன் எதிரிகள் உன்னைச் சுற்றிலும் கூர்முனை கொண்ட கம்பங்களால் அரண் எழுப்பி, உன்னை வளைத்துக்கொண்டு, எல்லா பக்கங்களிலிருந்தும் உன்னை நெருக்கி, உன்னையும் உன் பிள்ளைகளையும் அடித்து நொறுக்கி, ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி உன்னைத் தரைமட்டமாக்கப்போகும் நாட்கள் வரும்” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 19:43, 44.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட அவருடைய சீஷர்கள் குழம்பிப்போயிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, அவர்களில் ஒருவர் எருசலேம் ஆலயத்தைப் பார்த்தபோது, “போதகரே, பாருங்கள்! எவ்வளவு அழகான கற்கள், எவ்வளவு அழகான கட்டிடங்கள்!” என்று சொன்னார். ஆம், ஆராய்ச்சிகள் காட்டுகிறபடி, ஆலயத்தின் சில கற்கள் 11 மீட்டர் (36 அடி) நீளமும், 5 மீட்டர் (16 அடி) அகலமும், 3 மீட்டர் (10 அடி) உயரமுமாக இருந்தன! ஆனாலும் இயேசு அவர்களிடம், “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்களே, ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாமே தரைமட்டமாக்கப்படும் நாட்கள் வரும்” என்று சொன்னார்.—மாற்கு 13:1; லூக்கா 21:6.

அதோடு, “எருசலேமைப் படைகள் சுற்றிவளைத்திருப்பதை நீங்கள் பார்க்கும்போது அதற்கு அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள். அப்போது, யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும். எருசலேமுக்குள் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள் எருசலேமுக்குள் நுழையாதிருக்க வேண்டும்” என்று சொன்னார். (லூக்கா 21:20, 21) இயேசு சொன்ன இந்த விஷயம் நிறைவேறியதா?

அந்த நகரத்தின் அழிவு

முப்பத்தி மூன்று வருஷங்கள் ஓடியும், யூதர்கள் ரோம ஆட்சியின் கோரப் பிடியில்தான் இருந்தார்கள். ஆனால் கி.பி. 66-ல், யூதேயாவில் இருந்த ரோம நிதி அதிகாரியான கெஸையஸ் ப்ளோரஸ் ஆலயத்தின் பொக்கிஷ அறையிலிருந்த பணத்தைக் கைப்பற்றினார். யூதர்களால் அதற்குமேலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, கோபத்தில் கொதித்தெழுந்தார்கள். சீக்கிரத்திலேயே, யூதப் போராளிகள் எருசலேமுக்குள் புகுந்து, அங்கிருந்த ரோமக் காவல்படை வீரர்களை வெட்டிக் கொன்றுவிட்டு, ரோமர்களிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டதாக அறிவித்தார்கள்.

எருசலேமில் வெடித்த அந்தக் கலகத்தை அடக்குவதற்காகச் சுமார் மூன்று மாதம் கழித்து செஸ்டியஸ் கேலஸ், 30,000-க்கும் அதிகமான வீரர்களோடு எருசலேமை நோக்கிப் படையெடுத்தார். அவர்கள் சட்டென்று நகரத்துக்குள் புகுந்து ஆலயப் பிரகாரத்தின் மதிலை வலுவிழக்கச் செய்தார்கள். அதன்பிறகு, என்ன காரணமோ தெரியவில்லை, அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த யூதக் கலகக்காரர்கள், அந்தப் படைவீரர்களை உடனே துரத்த ஆரம்பித்தார்கள். ரோமப் படையும் யூதக் கலகக்காரர்களும் நகரத்தைவிட்டு வெளியேறிய பின்பு, கிறிஸ்தவர்கள் இயேசுவின் எச்சரிப்புக்குக் கீழ்ப்படிந்து, எருசலேமைவிட்டு யோர்தானுக்கு அப்பால் இருந்த மலைகளுக்குத் தப்பியோடினார்கள்.—மத்தேயு 24:15, 16.

அதற்கு அடுத்த வருஷம், படைத்தளபதி வெஸ்பேஸியன் மற்றும் அவருடைய மகன் டைட்டசின் தலைமையில் ரோமப்படை யூதேயாவுக்கு எதிராக மறுபடியும் படையெடுத்தது. ஆனால், பேரரசர் நீரோ கி.பி. 68-ல் இறந்துபோன பிறகு, ஆட்சிப்பொறுப்பை ஏற்க வெஸ்பேஸியன் ரோமுக்குத் திரும்பிப் போனார். யூதேயாவைக் கைப்பற்றும் பொறுப்பை, சுமார் 60,000 படைவீரர்களோடு இருந்த தன்னுடைய மகன் டைட்டசின் பொறுப்பில் விட்டுவிட்டுப் போனார்.

கி.பி. 70-ஆம் வருஷம் ஜூன் மாதம், யூதேயாவைச் சுற்றியிருந்த மரங்களை வெட்டும்படி டைட்டஸ் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அவர்கள் அந்த மரங்களை வெட்டி, கூர்முனை கொண்ட கம்பங்களைச் செய்து எருசலேமைச் சுற்றி 7 கிலோமீட்டர் (4.5 மைல்) தூரத்துக்கு அரண் எழுப்பினார்கள். செப்டம்பர் மாதத்துக்குள், ரோமர்கள் அந்த நகரத்தையும் அதன் ஆலயத்தையும் சூறையாடி, தீ வைத்துக் கொளுத்தினார்கள். ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி அவற்றைத் தரைமட்டமாக்கினார்கள்; இதெல்லாம் இயேசு முன்னறிவித்தது போலவே நடந்தது. (லூக்கா 19:43, 44) குறைந்தபட்ச எண்ணிக்கையாக, “எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் இரண்டரை லட்சம் பேரிலிருந்து ஐந்து லட்சம் பேர்வரை உயிரிழந்திருக்க வேண்டும்” என்பதை ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது.

ஒரு மாபெரும் வெற்றி

கி.பி. 71-ல், வெற்றிவீரராக இத்தாலிக்குத் திரும்பிவந்த டைட்டசை ரோமக் குடிமக்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு வரவேற்றார்கள். அந்த வெற்றியைக் கொண்டாட முழு நகரமே ஆவலோடு திரண்டுவந்தது. இத்தாலியின் தலைநகரத்தில் நடத்தப்பட்ட மிகப் பிரமாண்டமான, கோலாகலமான வெற்றி ஊர்வலமாக அது இருந்தது.

கைப்பற்றப்பட்ட ஏராளமான செல்வங்கள் ரோமின் தெருக்களில் அணிவகுத்து வந்தன. கைப்பற்றப்பட்ட கப்பல்களையும், போர்க் காட்சிகளைச் சித்தரித்துக் காட்டுகிற பெரிய பெரிய அலங்கார வண்டிகளையும், எருசலேம் ஆலயத்திலிருந்து சூறையாடப்பட்ட பொருள்களையும் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்.

கி.பி. 79-ல், டைட்டஸ் தன் அப்பா வெஸ்பேஸியனுக்குப் பிறகு பேரரசராக ஆனார். ஆனால், இரண்டே வருஷங்களில் திடீரென்று அவர் இறந்துபோனார். அவருக்குப் பிறகு, அவருடைய சகோதரரான டொமிஷியன், பேரரசராக ஆனார். பிறகு, டைட்டசைக் கௌரவப்படுத்துவதற்காகப் பிரமாண்டமான ஒரு ஆர்ச்சை அவர் கட்டினார்.

டைட்டசின் ஆர்ச் இன்று!

இன்று ரோமில் இருக்கும் டைட்டசின் ஆர்ச்

ஒவ்வொரு வருஷமும் ரோமைச் சுற்றிப்பார்க்க வரும் லட்சக்கணக்கான மக்கள், டைட்டசின் ஆர்ச்சைப் பார்த்து வியந்துபோகிறார்கள். சிலர், அதைப் பிரமாண்டமான கலைவேலைப்பாடாகப் பார்க்கிறார்கள். இன்னும் சிலர், பலம்படைத்த ரோமப் பேரரசைக் கௌரவிக்கும் நினைவுச்சின்னமாகப் பார்க்கிறார்கள். வேறு சிலர், எருசலேம் மற்றும் அதன் ஆலயத்தின் வீழ்ச்சியைச் சித்தரிக்கும் கல்லறைக் கல்வெட்டாகப் பார்க்கிறார்கள்.

ஆனால், பைபிளை ஆராய்ந்து படிக்கிறவர்கள், டைட்டசின் ஆர்ச்சை அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கிறார்கள். பைபிள் தீர்க்கதரிசனங்கள் நம்பகமானவை, துல்லியமானவை என்பதற்கும், அவை கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதற்கும் இந்த ஆர்ச் ஒரு மவுன சாட்சியாக இருக்கிறது.—2 பேதுரு 1:19-21.