Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்தப் பூமியில் உங்களால் என்றென்றும் வாழ முடியும்

இந்தப் பூமியில் உங்களால் என்றென்றும் வாழ முடியும்

எவ்வளவு அருமையான எதிர்பார்ப்பு! நம்முடைய படைப்பாளர் இதே பூமியில் நமக்கு முடிவில்லாத வாழ்வைத் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இருந்தாலும், நிறைய பேரால் இதை நம்ப முடிவதில்லை. ‘எல்லாரும் ஒரு நாள் சாகத்தானே வேணும். பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்புன்னு ஒன்னு இருக்கத்தானே செய்யும்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். வேறு சிலர், ‘என்னென்னைக்கும் வாழ முடியும், ஆனா இந்த பூமியில இல்ல, இறந்து பரலோகத்துக்கு போன பிறகுதான் அது முடியும்’ என்று நினைக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வதற்கு முன்பு, பின்வரும் மூன்று கேள்விகளுக்கு பைபிள் தரும் பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்: மனிதன் படைக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, அவன் எவ்வளவு காலம் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிகிறது? கடவுள் என்ன நோக்கத்துக்காகப் பூமியையும் மனிதர்களையும் படைத்தார்? மனிதர்கள் ஏன் இறந்துபோகிறார்கள்?

மனிதர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்

பூமியில் உள்ள கடவுளுடைய படைப்புகளிலேயே தனித்தன்மை வாய்ந்த படைப்பு என்றால், அது மனிதர்கள்தான். ஏன் அப்படிச் சொல்கிறோம்? மனிதர்கள் மட்டும்தான் கடவுளுடைய “சாயலில்,” ‘அவரைப் போலவே’ படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:26, 27) இதன் அர்த்தம் என்ன? கடவுளுக்கு இருக்கும் அன்பு, நீதி போன்ற குணங்களோடு மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.

அதுமட்டுமல்ல, மனிதர்கள் யோசிக்கும் திறனோடு படைக்கப்பட்டிருக்கிறார்கள். நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறிகிற திறனோடும், கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்வதற்கான ஆசையோடும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான், இந்தப் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும், இயற்கையின் அதிசயங்களையும் அவர்களால் ரசிக்க முடிகிறது. அதோடு ஓவியம், இசை, கவிதை ஆகியவற்றையும் ரசிக்க முடிகிறது. இதையெல்லாம்விட முக்கியமாக, படைப்பாளரை வணங்கும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே இருக்கிறது. இப்படிப்பட்ட விஷயங்களெல்லாம், மனிதர்களுக்கும் பூமியிலுள்ள மற்ற உயிரினங்களுக்கும் இருக்கிற மிகப் பெரிய வித்தியாசத்தை நன்றாக எடுத்துக்காட்டுகிறது.

அப்படியென்றால் இதை யோசித்துப்பாருங்கள்: ஒருசில வருஷங்களுக்கு மட்டுமே மனிதர்கள் உயிர்வாழ வேண்டுமென்று கடவுள் நினைத்திருந்தால், அவர்களுக்கு இவ்வளவு அருமையான குணங்களைக் கொடுத்திருப்பாரா? அவற்றை இன்னும் மெருகூட்டுவதற்கான திறனையும் கொடுத்திருப்பாரா? மனிதர்களுக்குக் கடவுள் இப்படிப்பட்ட குணங்களையும் திறன்களையும் கொடுத்ததற்கான காரணம் அவர்கள் இதே பூமியில் என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான்!

கடவுளுடைய நோக்கம்

‘இந்த பூமியில என்னென்னைக்கும் வாழணும்னு எல்லாம் மனுஷங்கள கடவுள் படைக்கல’ என்று சிலர் சொல்கிறார்கள். பரலோகத்தில் என்றென்றும் வாழ யாரெல்லாம் தகுதிபெறுவார்கள் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கான இடம்தான் பூமி என்று அவர்கள் சொல்கிறார்கள். இது ஒருவேளை உண்மையாக இருந்தால், இன்று நடக்கிற அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் கடவுளே காரணம் என்று ஆகிவிடும், இல்லையா? சொல்லப்போனால், கடவுளுடைய குணங்களுக்கு அது நேர்மாறாகத்தான் இருக்கும். கடவுளைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை. அவர் நம்பகமான கடவுள், அநியாயமே செய்யாதவர். அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.”—உபாகமம் 32:4.

பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி பைபிள் இப்படித் தெளிவாகச் சொல்கிறது: “வானம் யெகோவாவுக்குச் சொந்தம். ஆனால், இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.” (சங்கீதம் 115:16) ஆம், கடவுள் இந்தப் பூமியை ஒரு அழகான வீடாக, அதேசமயத்தில் நிரந்தரமான வீடாக மனிதர்களுக்கென்று படைத்திருக்கிறார். அதோடு, நாம் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும், என்றென்றும் சந்தோஷமாக இருப்பதற்கும் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இந்தப் பூமியில் படைத்திருக்கிறார்.—ஆதியாகமம் 2:8, 9.

“வானம் யெகோவாவுக்குச் சொந்தம். ஆனால், இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.”—சங்கீதம் 115:16

மனிதர்களுக்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றியும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது. கடவுள் முதல் மனிதத் தம்பதியிடம், “ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள். . . . எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்று சொன்னார். (ஆதியாகமம் 1:28) அழகிய தோட்டமாக இருந்த தங்களுடைய வீட்டைப் பராமரிக்கவும், இந்த முழு பூமியையும் அதேபோல மாற்றவும் அவர்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு இருந்தது. இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஆம், அவர்களுக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் பரலோகத்தில் அல்ல, ஆனால் இதே பூமியில் என்றென்றுமாக வாழ்கிற வாய்ப்பு காத்துக்கொண்டிருந்தது.

நாம் ஏன் சாகிறோம்?

நாம் ஏன் சாகிறோம் என்ற கேள்விக்கு பைபிள் பதில் தருகிறது. கடவுளுடைய ஆவி சிருஷ்டிகளில் ஒருவன், அதாவது பிசாசாகிய சாத்தான், ஏதேன் தோட்டத்தில் கடவுள் செய்த ஏற்பாடுகளைக் கெடுக்க முயற்சி செய்தான். எப்படி?

கடவுளுக்கு எதிரான கலகத்தில் தன்னோடு சேர்ந்துகொள்ளும்படி ஆதாம் ஏவாளை சாத்தான் தூண்டினான். நன்மையான ஏதோவொன்றை, அதாவது நல்லது எது கெட்டது எது என்று முடிவு செய்யும் உரிமையை, கடவுள் அவர்களுக்குக் கொடுக்காமல் இருக்கிறார் என்று அவர்களை நினைக்க வைத்தான். அதனால், அவர்கள் சாத்தான் பக்கம் சேர்ந்துகொண்டு கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். விளைவு? கடவுள் சொல்லியிருந்தபடியே பிற்பாடு அவர்கள் செத்துப்போனார்கள். பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்கிற வாய்ப்பை இழந்தார்கள்.—ஆதியாகமம் 2:17; 3:1-6; 5:5.

ஆதாம் ஏவாள் செய்த கலகம் எல்லா மனிதர்களையும் இன்றுவரை பாதித்திருக்கிறது. கடவுளுடைய வார்த்தை இப்படிச் சொல்கிறது: “ஒரே மனிதனால் [அதாவது, ஆதாமினால்] பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, . . . மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோமர் 5:12) ஆம், நம்முடைய முதல் பெற்றோரிடமிருந்து பாவமும் மரணமும் நமக்கு வந்திருக்கிறது. அதனால்தான் நாம் சாகிறோம். நாம் இறந்துபோவதற்கு விதியோ அல்லது நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத கடவுளுடைய ஏதோவொரு ‘திட்டமோ’ காரணமல்ல.

இந்தப் பூமியில் என்றென்றும் வாழ முடியும்

ஏதேனில் நடந்த கலகம், மனிதர்களுக்கும் பூமிக்குமான கடவுளுடைய நோக்கத்தைக் குலைத்துப்போடவில்லை. கடவுள் அன்பானவராகவும் நீதியானவராகவும் இருப்பதால், பாவம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக ஓர் ஏற்பாட்டைச் செய்தார். அதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படி விளக்குகிறார்: “பாவத்தின் சம்பளம் மரணம்; நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு.” (ரோமர் 6:23) ‘கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் [அதாவது, இயேசு கிறிஸ்துமேல்] விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்தார்.’ (யோவான் 3:16) இயேசுவும் தன் உயிரை மீட்புவிலையாகத் தந்ததன் மூலம் ஆதாம் இழந்ததையெல்லாம் திரும்ப மீட்டார். a

பூஞ்சோலை பூமி பற்றிய கடவுளுடைய வாக்குறுதி சீக்கிரத்தில் நிறைவேறப்போகிறது. இயேசு சொன்ன இந்த அறிவுரையைப் பின்பற்றினால் நீங்கள் அந்தப் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழலாம்: “இடுக்கமான வாசல் வழியாகப் போங்கள்; ஏனென்றால், அழிவுக்குப் போகிற வாசல் அகலமானது, அதன் பாதை விசாலமானது; நிறைய பேர் அதன் வழியாகப் போகிறார்கள். ஆனால், முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற வாசல் இடுக்கமானது, அதன் பாதை குறுகலானது; சிலர்தான் அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.” (மத்தேயு 7:13, 14) ஆம், உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

a மீட்புவிலையால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் 27-வது பாடத்தைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். www.pr418.com வெப்சைட்டில் இருந்து இதை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.