Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நோவா, தானியேல், யோபு​—⁠இவர்களைப் போல் யெகோவாவை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

நோவா, தானியேல், யோபு​—⁠இவர்களைப் போல் யெகோவாவை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

“அக்கிரமக்காரர்களால் நீதி நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், யெகோவாவைத் தேடுகிறவர்களால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும்.”—நீதி. 28:5.

பாடல்கள்: 43, 133

1-3. (அ) இந்தக் கடைசி நாட்களில் கடவுளுக்கு உண்மையோடு இருக்க நமக்கு எது உதவும்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

கடைசி நாட்கள் முடியப்போகும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இன்று, கெட்டவர்கள் பெருகிக்கொண்டே போகிறார்கள். அவர்கள் ‘களைகளை போல முளைக்கிறார்கள்.’ (சங். 92:7) அதனால், கடவுளுடைய நீதியான தராதரங்களை நிறையப் பேர் ஒதுக்கித்தள்ளுவதில் ஆச்சரியமே இல்லை. “கெட்ட குணத்தைப் பொறுத்ததில் குழந்தைகளாக இருங்கள்” என்றும், “புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்ததிலோ . . . முதிர்ச்சி அடைந்தவர்களாக இருங்கள்” என்றும் கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்னார். (1 கொ. 14:20) நாம் எப்படி இந்த அறிவுரையைப் பின்பற்றலாம்?

2 இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் இதற்குப் பதில் தருகிறது. “யெகோவாவைத் தேடுகிறவர்களால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும்” என்று அது சொல்கிறது. (நீதி. 28:5) அப்படியென்றால், யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நீதியான வழியில் நடக்கிறவர்களுக்கு யெகோவா ஞானத்தைத் தருவதாக நீதிமொழிகள் 2:7, 9 சொல்கிறது. அதனால், ‘நீதி, நியாயம், நேர்மை என்னவென்று அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், நல்ல வழிகள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறார்கள்.’

3 நோவாவுக்கும் தானியேலுக்கும் யோபுவுக்கும் இப்படிப்பட்ட தெய்வீக ஞானம் இருந்தது. (எசே. 14:14) இன்று கடவுளுடைய மக்களுக்கும் தெய்வீக ஞானம் இருக்கிறது. உங்களுக்கும் இப்படிப்பட்ட ஞானம் இருக்கிறதா? யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்குத் தேவையான ‘எல்லாவற்றையும் புரிந்துவைத்திருக்கிறீர்களா?’ அதற்கு, நீங்கள் அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால், இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்: (1) நோவாவும் தானியேலும் யோபுவும் கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்துகொண்டார்கள்? (2) கடவுளைப் பற்றித் தெரிந்திருந்தது அவர்களுக்கு எப்படி உதவியது? (3) அவர்களைப் போலவே நாமும் எப்படி உறுதியான விசுவாசத்தைக் காட்டலாம்?

நோவா—பொல்லாத உலகத்தில் கடவுளுடைய வழியில் நடந்தார்

4. கடவுளைப் பற்றி நோவா எப்படித் தெரிந்துகொண்டார்? கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டது அவருக்கு எப்படி உதவியது?

4 கடவுளைப் பற்றி நோவா தெரிந்துகொண்டார். மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே, மூன்று வழிகளில் மக்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். (1)  அவருடைய படைப்புகளிலிருந்து. (2) மற்ற உண்மையுள்ள ஊழியர்களிடமிருந்து. (3) யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தபோது கிடைத்த ஆசீர்வாதங்களிலிருந்து. (ஏசா. 48:18) படைப்புகளைக் கவனித்தபோது, கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சிகளை நோவா பார்த்திருப்பார்; கடவுளுடைய குணங்களைப் பற்றியும் அவருக்குத் தெரியவந்திருக்கும். அதனால், யெகோவா சக்திபடைத்தவர் என்றும், அவர்தான் ஒரே உண்மையான கடவுள் என்றும் நோவாவுக்குப் புரிந்திருக்கும். (ரோ. 1:20) இப்படி, கடவுள் இருக்கிறார் என்று நம்புவதோடு மட்டுமல்லாமல், அவர்மேல் உறுதியான விசுவாசத்தையும் நோவா வளர்த்துக்கொண்டார்.

5. மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்பினார், இதை நோவா எப்படித் தெரிந்துகொண்டார்?

5 “சொல்லப்பட்ட விஷயத்தைக் கேட்டால்தான் விசுவாசம் உண்டாகும்” என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், மற்றவர்களிடமிருந்து நாம் கேள்விப்படும் விஷயங்கள், விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும். (ரோ. 10:17) நோவா தன்னுடைய குடும்பத்தாரிடமிருந்து யெகோவாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அவருடைய அப்பா லாமேக்கு, கடவுள்மேல் விசுவாசம் வைத்திருந்தார். அதுவும், ஆதாம் இறப்பதற்கு முன்பே அவர் பிறந்திருந்தார். (ஆரம்பப் படம்) நோவாவின் தாத்தா மெத்தூசலாவும் அவருடைய எள்ளுத்தாத்தா யாரேத்தும்கூட யெகோவாவைப் பற்றிச் சொல்லியிருப்பார்கள். நோவா பிறந்து 366 வருஷங்களுக்குப் பிறகுதான் யாரேத் இறந்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (லூக். 3:36, 37) யெகோவா மனிதர்களைப் படைத்த விஷயத்தையும், அவர்கள் பிள்ளைகளைப் பெற்று, பூமியை நிரப்பி, தனக்குச் சேவை செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்பியதையும், அவர்களும் அவர்களுடைய மனைவிகளும் நோவாவுக்குச் சொல்லியிருப்பார்கள். ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் பேச்சை மீறியதைப் பற்றியும் நோவா கேள்விப்பட்டிருப்பார்; ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் கெட்ட விளைவுகளை அவர் கண்கூடாகப் பார்த்திருப்பார். (ஆதி. 1:28; 3:16-19, 24) கற்றுக்கொண்ட விஷயங்கள் நோவாவின் மனதைத் தொட்டன, அதனால் யெகோவாவுக்குச் சேவை செய்ய அவர் விரும்பினார்.—ஆதி. 6:9.

6, 7. நோவாவுக்கு இருந்த நம்பிக்கை அவருடைய விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தியது?

6 நம்பிக்கை விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. இந்த விஷயத்தில், நோவாவின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவருடைய பெயரின் அர்த்தம், “ஆறுதல்” அல்லது “இளைப்பாறுதல்.” இப்படி, தன்னுடைய பெயரிலேயே நம்பிக்கை பொதிந்திருந்ததை நோவா தெரிந்துகொண்டபோது அவருடைய விசுவாசம் எப்படிப் பலப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். (ஆதி. 5:29, அடிக்குறிப்பு) அவருடைய அப்பா லாமேக்கு, யெகோவாவின் சக்தியால் தூண்டப்பட்டு “யெகோவா சபித்த இந்த மண்ணில் நாம் படாத பாடுபடுகிறோம்; ஆனால், இவன் [அதாவது, நோவா] நமக்கு ஆறுதல் தருவான்” என்று சொன்னார். அதனால், யெகோவா நிலைமைகளை நல்லபடியாக மாற்றுவார் என்ற நம்பிக்கை நோவாவுக்கு இருந்தது. ஒரு ‘சந்ததியின்’ மூலம் பாம்பின் தலை நசுக்கப்படும் என்று ஆபேலும் ஏனோக்கும் நம்பியது போலவே நோவாவும் நம்பினார்.—ஆதி. 3:15.

7 ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் கடவுளுடைய வாக்குறுதியை நோவா முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், அது எதிர்கால நம்பிக்கையைத் தருகிறது என்பதை அவர் புரிந்துகொண்டார். இதேபோன்ற நம்பிக்கையான ஒரு செய்தியைத்தான் ஏனோக்கும் அறிவித்திருந்தார்; அதாவது, பொல்லாதவர்களை யெகோவா அழிக்கப்போவதாக அவர் சொல்லியிருந்தார். (யூ. 14, 15) அர்மகெதோனில் முழுமையாக நிறைவேறப்போகும் ஏனோக்கின் அந்தச் செய்தி, நோவாவின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பலப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

8. கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டது நோவாவை எப்படிப் பாதுகாத்தது?

8 கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டது நோவாவுக்கு உதவியது. யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டதால், விசுவாசத்தையும் தெய்வீக ஞானத்தையும் நோவா வளர்த்துக்கொண்டார். இது அவரைப் பாதுகாத்தது; முக்கியமாக, யெகோவாவின் மனதை நோகடிக்கிற எதையும் செய்துவிடாதபடி அவரைப் பாதுகாத்தது. எப்படி? கடவுளுடைய நண்பராக இருக்க வேண்டுமென்று நோவா ஆசைப்பட்டார். அதனால், யெகோவாவை நம்பாதவர்களோடும் அவரை ஒதுக்கித்தள்ளியவர்களோடும் அவர் சகவாசம் வைத்துக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட ஆட்கள், பூமிக்கு வந்த பலம்படைத்த கெட்ட தேவதூதர்களைப் பார்த்து அசந்துபோனார்கள்; அவர்களை வணங்கக்கூட அவர்கள் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் நோவா, அந்தத் தேவதூதர்களைப் பார்த்து ஏமாந்துபோகவில்லை. (ஆதி. 6:1-4, 9) அதோடு, மனிதர்கள்தான் பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்ப வேண்டுமென்று யெகோவா விரும்பினார் என்பது நோவாவுக்குத் தெரிந்திருந்தது. (ஆதி. 1:27, 28) அதனால், அந்தக் கெட்ட தேவதூதர்கள் பூமியிலிருந்த பெண்களோடு உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்றது இயல்புக்கு மாறானது என்பதும், முறையற்ற ஒரு செயல் என்பதும் நோவாவுக்குப் புரிந்தது. அதுவும், அந்தப் பிள்ளைகள் ராட்சதர்களாக ஆனதைப் பார்த்தபோது, அது எந்தளவுக்கு முறையற்ற ஒரு செயல் என்பது அவருக்கு இன்னும் நன்றாகப் புரிந்தது. கடைசியில், பொல்லாதவர்கள் எல்லாரையும் ஒரு பெருவெள்ளத்தினால் அழிக்கப்போவதாக நோவாவிடம் யெகோவா சொன்னார். யெகோவாவின் எச்சரிக்கையில் விசுவாசம் வைத்து நோவா ஒரு பேழையைக் கட்டினார். அதனால், அவரும் அவருடைய குடும்பத்தாரும் உயிர்தப்பினார்கள்.—எபி. 11:7.

9, 10. நோவாவைப் போலவே நாம் எப்படி விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளலாம்?

9 நோவாவைப் போல நம்மால் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும். கடவுளுடைய வார்த்தையைக் கவனமாகப் படிப்பதும், கற்றுக்கொள்கிற விஷயங்களை நேசிப்பதும், அவற்றின்படி வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதும், நல்ல தீர்மானங்கள் எடுப்பதும் முக்கியம். (1 பே. 1:13-15) அப்போது, விசுவாசமும் தெய்வீக ஞானமும் நம்மை சாத்தானுடைய சதித்திட்டங்களிலிருந்தும் இந்த உலகத்தின் செல்வாக்கிலிருந்தும் பாதுகாக்கும். (2 கொ. 2:11) இந்த உலகத்திலுள்ள நிறையப் பேர் வன்முறையையும் ஒழுக்கக்கேட்டையும் விரும்புகிறார்கள்; தங்களுடைய கெட்ட ஆசைகளின்படி நடக்கிறார்கள். (1 யோ. 2:15, 16) இந்தப் பொல்லாத உலகத்துக்கு முடிவு நெருங்கிவிட்டதை அவர்கள் நம்புவதில்லை. நமக்கு உறுதியான விசுவாசம் இல்லையென்றால், நாமும் அவர்களைப் போலவே யோசிக்க ஆரம்பித்துவிடலாம். நம்முடைய நாட்களை நோவாவின் நாட்களோடு இயேசு ஒப்பிட்டபோது, வன்முறையைப் பற்றியோ ஒழுக்கக்கேட்டைப் பற்றியோ அவர் சொல்லவில்லை; கடவுளுக்குச் சேவை செய்வதில் முழு கவனம் செலுத்தாமல்போவதன் ஆபத்தைப் பற்றித்தான் அவர் எச்சரித்தார்.மத்தேயு 24:36-39-ஐ வாசியுங்கள்.

10 உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவ பத்தி நான் உண்மையிலேயே தெரிஞ்சு வச்சிருக்கேங்கறத என் வாழ்க்கை காட்டுதா? யெகோவாவோட நீதியான வழியில நடக்கற அளவுக்கும், அத பத்தி மத்தவங்களுக்கு சொல்லிக்கொடுக்கற அளவுக்கும் எனக்கு விசுவாசம் இருக்கா?’ இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதில்கள், நீங்கள் நோவாவைப் போலவே உண்மைக் கடவுளுடைய வழியில் நடக்கிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

தானியேல்—பொய் வணக்கம் நிறைந்த பாபிலோனில் தெய்வீக ஞானத்தைக் காட்டினார்

11. (அ) கடவுள்மேல் இளம் தானியேல் அன்பு வைத்திருந்தது, அவருடைய பெற்றோரைப் பற்றி என்ன காட்டுகிறது? (ஆ) தானியேல் காட்டிய எந்தக் குணத்தை நீங்களும் காட்ட விரும்புகிறீர்கள்?

11 கடவுளைப் பற்றி தானியேல் தெரிந்துகொண்டார். யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் நேசிக்கும்படி தானியேலின் அப்பா அம்மா அவருக்குக் கற்றுக்கொடுத்திருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் தானியேல் அதைத்தான் செய்தார். வயதான காலத்தில்கூட, வசனங்களைக் கவனமாக ஆராய்ந்து படித்தார். (தானி. 9:1, 2) யெகோவாவைப் பற்றி அவர் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். இஸ்ரவேலர்களுக்காக யெகோவா என்னவெல்லாம் செய்திருந்தார் என்பதையும் அவர் தெரிந்துவைத்திருந்தார். தானியேல் 9:3-19-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் அவருடைய ஜெபம் இதைக் காட்டுகிறது. மனத்தாழ்மையோடும் உண்மை மனதோடும் அவர் செய்த அந்த ஜெபத்தை வாசித்துப் பாருங்கள், அதைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பாருங்கள். பிறகு, ‘தானியேல பத்தி இந்த ஜெபத்திலிருந்து நான் என்ன கத்துக்கறேன்’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

12-14. (அ) தானியேல் எப்படித் தெய்வீக ஞானத்தைக் காட்டினார்? (ஆ) தானியேலின் தைரியத்தையும் உத்தமத்தையும் யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?

12 கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டது தானியேலுக்கு உதவியது. பொய் வணக்கம் நிறைந்த பாபிலோனில் கடவுளுக்குச் சேவை செய்வது உண்மையுள்ள யூதர்களுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. உதாரணத்துக்கு, “நான் உங்களை அனுப்பியிருக்கிற நகரத்தில் சமாதானமாக இருங்கள்” என்று யூதர்களிடம் யெகோவா சொல்லியிருந்தார். (எரே. 29:7) அதோடு, தன்னை மட்டும்தான் முழு இதயத்தோடு வணங்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். (யாத். 34:14) தானியேலால் எப்படி இந்த இரண்டு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய முடிந்தது? முதலில் யெகோவாவுக்கும், அதற்குப் பிறகு மனித ஆட்சியாளர்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள தெய்வீக ஞானம் அவருக்கு உதவியது. நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு இயேசுவும் இதே விஷயத்தைக் கற்றுக்கொடுத்தார்.—லூக். 20:25.

13 முப்பது நாட்களுக்கு ராஜாவைத் தவிர எந்தவொரு தெய்வத்திடமோ மனிதனிடமோ யாரும் வேண்டிக்கொள்ளக் கூடாது என்ற கட்டளை கொடுக்கப்பட்டபோது தானியேல் என்ன செய்தார் என்பதை யோசித்துப் பாருங்கள். (தானியேல் 6:7-10-ஐ வாசியுங்கள்.) அவர் நினைத்திருந்தால், ‘வெறும் 30 நாளுக்குத்தானே!’ என்று சாக்குப்போக்கு சொல்லியிருக்கலாம். ஆனால், மனிதனுடைய சட்டத்தைவிட கடவுளுடைய வணக்கத்துக்குத்தான் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். அவர் நினைத்திருந்தால், யாரும் பார்க்காத ஒரு இடத்தில்கூட ஜெபம் செய்திருக்கலாம். ஆனால், தினமும் தான் ஜெபம் செய்வதை நிறையப் பேர் பார்த்துவந்த விஷயம் அவருக்குத் தெரிந்திருந்தது. தான் யெகோவாவை வணங்குவதை விட்டுவிட்டதாக அவர்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக, ஆபத்தையும் பொருட்படுத்தாமல், அதே இடத்திலேயே தொடர்ந்து ஜெபம் செய்தார்.

14 தைரியத்தோடும் உத்தமத்தோடும் தானியேல் எடுத்தத் தீர்மானத்தை யெகோவா ஆசீர்வதித்தார். அற்புதமான விதத்தில், சிங்கங்களிடமிருந்து தானியேலைக் காப்பாற்றினார். அதனால், மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தில் இருந்த எல்லா மக்களும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள்!—தானி. 6:25-27.

15. நாம் எப்படி தானியேலைப் போல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளலாம்?

15 தானியேலைப் போல நம்மால் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும். உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு, கடவுளுடைய வார்த்தையை வாசித்தால் மட்டுமே போதாது; அதைப் புரிந்துகொள்ளவும் வேண்டும். (மத். 13:23) யெகோவா என்ன நினைக்கிறார் என்றும், எப்படி உணருகிறார் என்றும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால், வாசிக்கிற விஷயங்களைப் பற்றி நாம் ஆழமாக யோசிக்க வேண்டும். அடிக்கடி ஜெபம் செய்வதும் முக்கியம், அதுவும் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது அது ரொம்பவே முக்கியம். நாம் ஞானத்தையும் பலத்தையும் கேட்கும்போது யெகோவா அவற்றைத் தாராளமாகக் கொடுப்பார் என்று நாம் நம்பிக்கையாக இருக்கலாம்.—யாக். 1:5.

யோபு—எல்லா நிலைமையிலும் தெய்வீக நியமங்களின்படி நடந்தார்

16, 17. யெகோவாவைப் பற்றி யோபு எப்படித் தெரிந்துகொண்டார்?

16 யெகோவாவைப் பற்றி யோபு தெரிந்துகொண்டார். யோபு ஓர் இஸ்ரவேலர் கிடையாது. ஆனால், ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் அவருடைய தூரத்துச் சொந்தங்களாக இருந்தார்கள். யெகோவா தன்னைப் பற்றியும் மனிதர்களுக்காகத் தான் செய்ய நினைத்திருந்ததைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். அந்த அருமையான சத்தியங்களை ஏதோவொரு விதத்தில் யோபுவும் தெரிந்துகொண்டார். (யோபு 23:12) “உங்களைப் பற்றி என் காதுகளால் கேட்டிருக்கிறேன்” என்று அவர் யெகோவாவிடம் சொன்னார். (யோபு 42:5) அதோடு, யோபு தன்னைப் பற்றி மற்றவர்களிடம் சரியாகப் பேசியதாக யெகோவாவே சொன்னார்.—யோபு 42:7, 8.

யோபுவைப் போலவே நாமும் படைப்புகளைக் கவனித்து, யெகோவாவின் குணங்களைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ளும்போது, நம் விசுவாசம் பலப்படும் (பாரா 17)

17 படைப்புகளைப் பார்த்தும் யெகோவாவின் குணங்களைப் பற்றி யோபு தெரிந்துகொண்டார். (யோபு 12:7-9, 13) கடவுளோடு ஒப்பிடும்போது மனிதர்கள் எந்தளவுக்கு அற்பமானவர்கள் என்பதை யோபுவுக்குக் கற்றுத்தர எலிகூவும் யெகோவாவும் படைப்புகளை உதாரணமாகப் பயன்படுத்தினார்கள். (யோபு 37:14; 38:1-4) யெகோவாவின் வார்த்தைகள் யோபுவின் மனதைத் தொட்டன. அதனால், “உங்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டேன். நினைப்பதையெல்லாம் செய்ய உங்களால் முடியும் என்று தெரிந்துகொண்டேன்” என்று அவர் மனத்தாழ்மையோடு சொன்னார். அதோடு, “மண்ணிலும் சாம்பலிலும் உட்கார்ந்து வருத்தப்படுகிறேன்” என்றும் சொன்னார்.—யோபு 42:2, 6.

18, 19. யெகோவாவை நன்றாகத் தெரிந்துவைத்திருந்ததை யோபு எப்படிக் காட்டினார்?

18 கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டது யோபுவுக்கு உதவியது. தெய்வீக நியமங்களை யோபு நன்றாகப் புரிந்துகொண்டார். அவர் யெகோவாவை உண்மையிலேயே தெரிந்துவைத்திருந்தார்; அதனால், நீதியான வழியில் நடந்தார். உதாரணத்துக்கு, மற்றவர்களிடம் அன்பு காட்டாவிட்டால் கடவுள்மேல் தனக்கு அன்பு இருப்பதாகச் சொல்ல முடியாது என்பதை யோபு புரிந்துவைத்திருந்தார். (யோபு 6:14) மற்றவர்களைவிடத் தன்னை உயர்ந்தவராக அவர் நினைக்கவில்லை. பணக்காரர்களோ ஏழைகளோ, எல்லாரையும் தன்னுடைய குடும்பத்தாரைப் போலவே நடத்தினார். “தாயின் வயிற்றில் என்னை உருவாக்கியவர்தானே அவர்களையும் உருவாக்கினார்?” என்று சொன்னார். (யோபு 31:13-22) செல்வமும் செல்வாக்கும் படைத்தவராக இருந்த சமயத்தில்கூட, அவர் பெருமையாக நடந்துகொள்ளவில்லை; மற்றவர்களை மட்டமாகப் பார்க்கவில்லை. இன்று செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்கள் நடந்துகொள்கிற விதத்துக்கும் அவர் நடந்துகொண்ட விதத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்!

19 யெகோவாவைவிட வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்க யோபு விரும்பவில்லை, பணம் பொருளுக்குக்கூட அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அப்படிச் செய்வது, ‘உண்மைக் கடவுளை’ ஒதுக்கித்தள்ளுவதுபோல் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. (யோபு 31:24-28-ஐ வாசியுங்கள்.) கல்யாணம் என்பது, கணவனும் மனைவியும் செய்துகொள்ளும் புனிதமான ஒரு ஒப்பந்தம் என்பதைக்கூட யோபு புரிந்துவைத்திருந்தார். சொல்லப்போனால், கெட்ட எண்ணத்தோடு எந்தப் பெண்ணையும் பார்க்கப்போவதில்லை என்று தனக்குத்தானே ஒப்பந்தம் செய்துகொண்டார். (யோபு 31:1) இது மிகவும் குறிப்பிடத்தக்கது; ஏனென்றால், யோபு வாழ்ந்த காலத்தில், ஒன்றுக்கும் அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ள யெகோவா அனுமதித்தார். யோபு விரும்பியிருந்தால், அவரும் இன்னொரு கல்யாணம் செய்திருக்கலாம். ஆனால், யெகோவா முதல்முதலில் ஆதாமுக்கு ஒரே மனைவியைத்தான் தந்தார் என்பது யோபுவுக்குத் தெரிந்திருந்தது; அதனால், தானும் ஒரே மனைவியுடன் வாழ அவர் தீர்மானித்திருக்கலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (ஆதி. 2:18, 24) சொல்லப்போனால், கிட்டத்தட்ட 1,600 வருஷங்களுக்குப் பிறகு, இயேசுவும் அதே நியமத்தைத்தான் கற்றுக்கொடுத்தார். அதாவது, ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியமத்தைக் கற்றுக்கொடுத்தார்.—மத். 5:28; 19:4, 5.

20. யெகோவாவையும் அவருடைய தராதரங்களையும் பற்றித் தெரிந்துகொள்வது, சரியான நண்பர்களையும் பொழுதுபோக்குகளையும் தேர்ந்தெடுக்க நமக்கு எப்படி உதவும்?

20 யோபுவைப் போல நம்மால் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும். நாம் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்; அதன் அடிப்படையில்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, ‘வன்முறையை விரும்புகிற எவனையும் யெகோவா வெறுக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது; ஏமாற்றுப் பேர்வழிகளோடு நேரம் செலவிடக் கூடாது என்றும் அது சொல்கிறது. (சங்கீதம் 11:5; 26:4-ஐ வாசியுங்கள்.) இப்போது, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவா என்ன நினைக்கிறாருன்னு இந்த ரெண்டு வசனங்களும் காட்டுது? வாழ்க்கையில எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கறேங்கற விஷயத்துலயும், இன்டர்நெட்ட பயன்படுத்தற விஷயத்திலயும், நண்பர்களயும் பொழுதுபோக்கயும் தேர்ந்தெடுக்கற விஷயத்திலயும் இத எப்படி மனசுல வச்சுக்கறது?’ இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதில்கள், யெகோவாவை எந்தளவுக்கு நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். இந்தப் பொல்லாத உலகத்தின் வலையில் சிக்காமல் இருக்க நாம் விரும்புகிறோம். அதனால், நம்முடைய “பகுத்தறியும் திறன்களை” நாம் பயிற்றுவிக்க வேண்டும். அதாவது, நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வித்தியாசத்தையும், ஞானமானதுக்கும் ஞானமற்றதுக்கும் உள்ள வித்தியாசத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.—எபி. 5:14; எபே. 5:15.

21. நம்முடைய பரலோகத் தகப்பனைப் பிரியப்படுத்துவதற்குத் தேவையான “எல்லாவற்றையும் புரிந்துகொள்ள” எது நமக்கு உதவும்?

21 யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள நோவாவும் தானியேலும் யோபுவும் முழுமுயற்சி செய்தார்கள். அவரைப் பிரியப்படுத்துவதற்குத் தேவையான “எல்லாவற்றையும் புரிந்துகொள்ள” அவர் அவர்களுக்கு உதவினார். அவர்களுடைய உதாரணம் எதைக் காட்டுகிறது? எல்லாவற்றையும் யெகோவாவின் வழியில் செய்வது வெற்றியைத் தேடித்தரும் என்பதைக் காட்டுகிறது. (சங். 1:1-3) அதனால், ‘நோவா, தானியேல், யோபு மாதிரி நானும் யெகோவாவ நல்லா தெரிஞ்சு வச்சிருக்கேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையில், அவர்களைவிட நம்மால்தான் இன்னும் நன்றாக யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், நமக்குத்தான் தன்னைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களை யெகோவா தெரியப்படுத்தியிருக்கிறார். (நீதி. 4:18) அதனால், பைபிளைக் கவனமாகப் படியுங்கள். படித்த விஷயங்களை ஆழமாக யோசியுங்கள். கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள். அப்போது, இந்தப் பொல்லாத உலகத்தின் வலையில் நீங்கள் சிக்க மாட்டீர்கள். அதற்குப் பதிலாக, தெய்வீக ஞானத்தோடு நடந்துகொள்வீர்கள்; உங்களுடைய பரலோகத் தகப்பனிடம் இன்னும் அதிகமாக நெருங்கி வருவீர்கள்.—நீதி. 2:4-7.

^ பாரா. 5 நோவாவின் கொள்ளுத்தாத்தா ஏனோக்கும், “உண்மைக் கடவுளுடைய வழியில் தொடர்ந்து நடந்துவந்தார்.” ஆனால், நோவா பிறப்பதற்கு 69 வருஷங்களுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.—ஆதி. 5:23, 24.

^ பாரா. 19 நோவாவும் விரும்பியிருந்தால், இன்னொரு கல்யாணம் செய்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போன கொஞ்சக் காலத்திலேயே ஆண்கள் பல பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்திருந்தும், நோவா அப்படிச் செய்யவில்லை.—ஆதி. 4:19.