Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

எளிமையான ஆரம்பம், செழுமையான முடிவு!

எளிமையான ஆரம்பம், செழுமையான முடிவு!

லிபர்ட்டி என்ற ஒரு சின்ன ஊரில், ஒரேவொரு அறையுள்ள ஒரு மர வீட்டில்தான் நான் பிறந்தேன். அந்த ஊர், அமெரிக்காவில் இருக்கும் இண்டியானாவில் இருக்கிறது. நான் பிறந்தபோது, என் அப்பா அம்மாவுக்கு ஏற்கெனவே ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தார்கள். எனக்கு அடுத்ததாக, இரண்டு தம்பிகளும் ஒரு தங்கையும் பிறந்தார்கள்.

நான் பிறந்த மர வீடு

பள்ளிப்படிப்பு சமயத்தில், எந்த மாற்றமும் இல்லை. முதல் வகுப்பில் சேர்ந்தபோது பார்த்த அதே முகங்களைத்தான் படிப்பு முடியும்வரை பார்க்க வேண்டியிருந்தது. என் ஊரிலிருந்த முக்கால்வாசி நபர்களுடைய பெயர்கள் எனக்குத் தெரிந்திருந்தது. அவர்களுக்கும் என் பெயர் தெரிந்திருந்தது.

ஏழு பிள்ளைகளில் நானும் ஒருவன். விவசாயத்தைப் பற்றிச் சின்ன வயதிலேயே நான் நிறைய கற்றுக்கொண்டேன்

என் ஊரைச் சுற்றியும் சின்னச் சின்ன பண்ணைகள் இருந்தன. சோளம்தான் அதிகமாகப் பயிர் செய்யப்பட்டது. நான் பிறந்தபோது, என் ஊரிலிருந்த ஒரு விவசாயியிடம் அப்பா வேலை செய்துகொண்டிருந்தார். டீனேஜில், டிராக்டர் ஓட்டுவதற்கும் சில பண்ணை வேலைகளைச் செய்வதற்கும் கற்றுக்கொண்டேன்.

எனக்கு ஒரு இளமையான அப்பா கிடைக்கவே இல்லை. நான் பிறந்தபோது என் அப்பாவுக்கு 56 வயது! அம்மாவுக்கு, 35! இருந்தாலும், என் அப்பா பலத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருந்தார். கடினமாக உழைப்பதென்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம்; எங்களுக்கும் அதைக் கற்றுக்கொடுத்தார். அவர் நிறைய சம்பாதிக்கவில்லை என்றாலும், எங்களுக்குத் தேவையான வீடு, உடை, போதுமான சாப்பாடு என்று எல்லாமே இருக்கும்படி பார்த்துக்கொண்டார். அதோடு, அப்பா எங்களோடு நிறைய நேரம் செலவிட்டார். இறக்கும்போது அவருக்கு 93 வயது! அம்மா இறக்கும்போது 86 வயது! இரண்டு பேருமே யெகோவாவின் சாட்சிகளாக ஆகவில்லை. ஆனால், என்னுடைய தம்பி ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனார். 1972-லிருந்து மூப்பராக சேவை செய்து வருகிறார்.

ஆரம்பக் காலம்

அம்மாவுக்குக் கடவுள்பக்தி அதிகம்! ஒவ்வொரு ஞாயிறன்றும், பாப்டிஸ்ட் சர்ச்சுக்கு எங்களை அழைத்துக்கொண்டு போவார். என்னுடைய 12 வயதில், திரித்துவத்தைப் பற்றி முதல்முதலில் கேள்விப்பட்டேன். “அதெப்படி மா, இயேசுவால அப்பாவாவும் மகனாவும் இருக்க முடியும்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அதெல்லாம் ரகசியம் பா! நம்மளால அத புரிஞ்சுக்க முடியாது” என்று சொன்னார். அது எனக்கு ரகசியமாகத்தான் இருந்தது! இருந்தாலும், எனக்குக் கிட்டத்தட்ட 14 வயது இருந்தபோது, அந்த ஊரிலிருந்த ஒரு ஆற்றில் ஞானஸ்நானம் எடுத்தேன். மூன்று முறை என்னை முக்கியெடுத்தார்கள். பிதாவுக்காக ஒரு முறை, மகனுக்காக ஒரு முறை, பரிசுத்த ஆவிக்காக ஒரு முறை!

1952—என்னுடைய 17 வயதில், ராணுவத்தில் சேருவதற்கு முன்பு

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, குத்துச்சண்டை வீரனாக இருந்த ஒரு பையன் எனக்கு நண்பனாக இருந்தான். குத்துச்சண்டையைக் கற்றுக்கொள்ளும்படி அவன் என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தான். அதனால், நான் அதற்கான பயிற்சியில் இறங்கினேன். கோல்டன் க்ளோவ்ஸ் என்ற குத்துச்சண்டை அமைப்பின் உறுப்பினராகவும் ஆனேன். ஆனால், எனக்குக் குத்துச்சண்டை அவ்வளவாக வராததால், ஒருசில போட்டிகளோடு விலகிக்கொண்டேன். பிறகு, அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்கான அழைப்பு எனக்கு வந்தது. அதில் சேர்ந்தபின் என்னை ஜெர்மனிக்கு அனுப்பினார்கள். நான் ஒரு ராணுவத் தலைவனாக வருவேன் என்ற நம்பிக்கையில், என் மேலதிகாரிகள் என்னை ராணுவ அகாடமிக்கு அனுப்பினார்கள். வாழ்நாள் முழுவதும் நான் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். எனக்கு அதில் இஷ்டமில்லாததால் என்னுடைய இரண்டு வருட பணியை முடித்துவிட்டு, 1956-ல் ராணுவத்திலிருந்து வெளியேறினேன். அதற்குப் பிறகு கொஞ்சக் காலத்திலேயே, வேறொரு வித்தியாசமான படையில் நான் சேர்ந்தேன். அதைப் பற்றி சொல்கிறேன், கேளுங்கள்!

1954-1956—இரண்டு வருஷங்கள் அமெரிக்க ராணுவத்தில் இருந்தேன்

புதிய வாழ்க்கை!

சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு, ஒரு ஆண்மகன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயம் எனக்கு இருந்தது. திரைப்படங்களும் சுற்றியிருந்தவர்களும்தான் அதற்குக் காரணம்! பைபிளைப் பற்றிப் பேசுவதெல்லாம் ஒரு ஆணுக்கு அழகில்லை என்று நினைத்தேன். ஆனால், என் வாழ்க்கையை மாற்றவிருந்த சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்! ஒரு நாள், என்னுடைய அழகான சிவப்பு காரில் போய்க்கொண்டிருந்தபோது இரண்டு இளம் பெண்கள் என்னைக் கைகாட்டி கூப்பிட்டார்கள். அவர்கள் என் அக்கா கணவருடைய தங்கைகள்; அவர்கள் யெகோவாவின் சாட்சிகள்! அவர்களிடமிருந்து காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை ஏற்கெனவே வாங்கிப் படித்திருக்கிறேன். ஆனால், காவற்கோபுரத்தை புரிந்துகொள்வது கஷ்டமாக இருந்தது. இந்த முறை அவர்களுடைய வீட்டில் நடந்த புத்தகப் படிப்புக்கு என்னை அழைத்தார்கள். கொஞ்சப் பேர் மட்டுமே கலந்துகொள்ளும் அந்தக் கூட்டத்தில், பைபிளைப் பற்றிக் கலந்துபேசுவார்கள். கூட்டத்துக்கு வருவதைப் பற்றி யோசிப்பதாகச் சொன்னேன். அவர்கள் சிரித்துக்கொண்டே, “சத்தியமா வருவீங்க தானே?” என்றார்கள். “சத்தியமா வர்றேன்” என்று சொன்னேன்.

ஆனால், ‘ஏன்தான் அப்படிச் சொன்னேனோ’ என்று நினைத்தேன். இருந்தாலும், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அன்று ராத்திரி நடந்த கூட்டத்துக்குப் போனேன். அங்கிருந்த பிள்ளைகளைப் பார்த்தபோது, ‘பைபிள பத்தி நல்லா தெரிஞ்சு வைச்சிருக்காங்களே’ என்று ஆச்சரியப்பட்டேன். நானும்கூட அம்மாவோடு ஒவ்வொரு ஞாயிறன்றும் சர்ச்சுக்குப் போயிருக்கிறேன்; ஆனால், பைபிளைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. அதனால், அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். உடனடியாக பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டேன். நான் தெரிந்துகொண்ட முதல் விஷயமே, எல்லாம் வல்ல கடவுளுடைய பெயர் யெகோவா என்பதுதான். ரொம்ப வருஷங்களுக்கு முன்பு, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அம்மாவிடம் கேட்டபோது, “அவங்களா, யெகோவான்னு யாரோ ஒரு வயசானவர வணங்குறாங்க” என்று அவர் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால் இப்போது, என் மனக்கண்கள் திறந்ததுபோல் இருந்தது.

இதுதான் சத்தியம் என்று புரிந்ததால் சீக்கிரமாக முன்னேற்றம் செய்தேன். மார்ச் 1957-ல், அதாவது முதல்முதலில் கூட்டத்துக்குப் போக ஆரம்பித்த ஒன்பது மாதத்தில் ஞானஸ்நானம் எடுத்தேன். அப்போது, வாழ்க்கையைப் பற்றிய என் கண்ணோட்டம் மாறியிருந்தது. ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டுமென்று பைபிளிலிருந்து தெரிந்துகொண்டது சந்தோஷமாக இருந்தது. இயேசு, பாவத்தின் சுவடே இல்லாத பரிபூரண ஆணாக இருந்தார். மற்ற ஆண்களைவிட அதிக பலமும் சக்தியும் அவருக்கு இருந்தது. இருந்தாலும், அவர் அடிதடியில் ஈடுபடவில்லை. அதற்குப் பதிலாக, தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருப்பதுபோல், “ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.” (ஏசா. 53:2, 7) இயேசுவை உண்மையாகப் பின்பற்றும் ஒரு சீஷர், “எல்லாரிடமும் மென்மையாக” நடந்துகொள்ள வேண்டுமென்று தெரிந்துகொண்டேன்.—2 தீ. 2:24.

அடுத்த வருஷம், அதாவது 1958-ல், பயனியர் சேவையை ஆரம்பித்தேன். ஆனால், க்ளோரியாவைக் கல்யாணம் செய்ய நான் முடிவெடுத்திருந்ததால் கொஞ்சக் காலத்துக்கு அதை நிறுத்த வேண்டியிருந்தது. என்னை புத்தகப் படிப்புக்குக் கூப்பிட்ட அந்த இரண்டு பெண்களில் ஒருத்திதான் க்ளோரியா! அவளைக் கல்யாணம் செய்ததற்காக நான் ஒருநாள்கூட வருத்தப்பட்டதே இல்லை. அப்போதும் சரி இப்போதும் சரி, அவள் ஒரு வைரமாக ஜொலிக்கிறாள். விலைமதிப்புள்ள எந்த வைரத்தையும்விட அவள் எனக்கு மிகவும் மதிப்புள்ளவள்! அவள் என் வாழ்வில் வந்ததற்காக ரொம்பச் சந்தோஷப்படுகிறேன். இப்போது அவளைப் பற்றி அவளே உங்களுக்குச் சொல்வாள்:

“என்கூட பிறந்தவங்க 16 பேர். என் அம்மா ஒரு யெகோவாவின் சாட்சி. எனக்கு 14 வயசு இருந்தப்போ அவங்க இறந்துட்டாங்க. அதுக்கப்புறம், அப்பா பைபிள் படிக்க ஆரம்பிச்சார். என் அக்கா, உயர்நிலை பள்ளியில கடைசி வருஷம் படிச்சிட்டு இருந்தாங்க. அம்மா இல்லாததால, நானும் அக்காவும் ஒருநாள்விட்டு ஒருநாள் பள்ளிக்கு போறதுக்கு பள்ளி முதல்வர்கிட்ட அப்பா அனுமதி கேட்டார். அதுக்கு முதல்வர் ஒத்துக்கிட்டாருனா, தம்பி தங்கச்சிகள கவனிச்சுக்குறதுக்கு யாராவது ஒருத்தர் எப்பவும் வீட்டுல இருக்க முடியும். அதுமட்டுமில்ல, அப்பா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர்றதுக்குள்ள, எல்லாருக்காகவும் சாப்பாடு செஞ்சு வைக்கவும் முடியும். பள்ளி முதல்வரோட அனுமதி கிடைச்சுது! என் அக்காவோட படிப்பு முடியுற வரைக்கும் இந்த மாதிரிதான் செஞ்சோம். ரெண்டு சாட்சிகளோட குடும்பங்கள் எங்க வீட்டுக்கு வந்து, பைபிள் படிப்பு எடுத்தாங்க. நாங்க மொத்தம் 11 பிள்ளைங்க யெகோவாவின் சாட்சிகளா ஆனோம். எனக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி! ஆனா, ஊழியம் செய்றதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். கூச்ச சுபாவத்துலிருந்து வெளிய வர்றதுக்கு என்னோட கணவர் சாம் எனக்கு கொஞ்ச கொஞ்சமா உதவி செஞ்சாரு.”

பிப்ரவரி 1959-ல் எனக்கும் க்ளோரியாவுக்கும் கல்யாணம் ஆனது. நாங்கள் சந்தோஷமாக பயனியர் சேவை செய்தோம். உலகத் தலைமை அலுவலகத்தில் சேவை செய்ய வேண்டுமென்று ரொம்ப ஆசைப்பட்டோம். அந்த வருஷம் ஜூலை மாதத்தில் பெத்தேலுக்கு விண்ணப்பித்தோம். பெத்தேலிலிருந்த சகோதரர் சைமன் க்ரேக்கர் எங்கள் விண்ணப்பத்தைப் பார்த்துவிட்டு எங்களிடம் பேசினார். தம்பதிகளை இப்போதைக்கு பெத்தேலில் எடுப்பதில்லை என்று அவர் சொன்னார். இருந்தாலும், பெத்தேலில் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை எங்கள் மனதைவிட்டுப் போகவில்லை. ஆனால், எங்கள் கனவு நனவாக ரொம்ப வருஷங்கள் ஆனது.

தேவை அதிகமுள்ள இடத்துக்கு எங்களை அனுப்பும்படி உலகத் தலைமை அலுவலகத்துக்கு எழுதினோம். அதற்கு, அர்கான்சாஸில் இருக்கும் பைன் ப்ளஃபுக்குப் போகும்படி சொன்னார்கள். அப்போது, அங்கே இரண்டு சபைகள்தான் இருந்தன. ஒரு சபையில் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களும், இன்னொன்றில் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்த சபைக்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம். அங்கே வெறும் 14 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள்.

இனவெறியாலும் பாகுபாட்டாலும் ஏற்பட்ட பிரச்சினைகள்

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் ஏன் இப்படியொரு பிரிவினை இருந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அந்தச் சமயத்தில் எங்களுக்கு வேறு வழியில்லை. ஏனென்றால், இரண்டு இனத்தைச் சேர்ந்தவர்களும் கூடிவருவது அப்போது சட்டப்படி குற்றம்! அதோடு, கலவரங்கள் ஏற்படும் ஆபத்துகளும் இருந்தன. அதனால், இரண்டு இனத்தைச் சேர்ந்தவர்களும் கூடிவந்தால், மற்றவர்கள் ராஜ்ய மன்றத்தை அடித்து நொறுக்கிவிடுவார்களோ என்று சகோதரர்கள் பயந்தார்கள். ஏனென்றால், அதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்தன. வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இடங்களில் பிரசங்கித்த கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்; பெரும்பாலான சமயங்களில் அடிக்கப்பட்டார்கள். அதனால், பிரசங்க வேலையைத் தடை இல்லாமல் செய்வதற்காக நாங்கள் அந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தோம். என்றாவது ஒருநாள் இந்த நிலைமைகள் மாறும் என்று காத்திருந்தோம்.

ஊழியம் செய்வது எங்களுக்கு எப்போதுமே சுலபமாக இருந்ததில்லை. கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கும் பகுதிகளில் ஊழியம் செய்தாலும், சிலசமயங்களில் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களுடைய வீட்டைத் தெரியாமல் தட்டிவிடுவோம். அதுபோன்ற சமயங்களில், அவர்களிடம் பைபிளிலிருந்து ஏதாவது சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போவதா அல்லது மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த வீட்டுக்குப் போய்விடுவதா என்று சட்டென முடிவெடுக்க வேண்டியிருந்தது. இந்த மாதிரியான சம்பவங்கள் அப்போது அடிக்கடி நடக்கும்.

நாங்கள் பயனியர்களாக இருந்தாலும், வாழ்க்கையை ஓட்டுவதற்காக சம்பாதிக்க வேண்டியிருந்தது. ஆனால், எங்களுக்கு மிகக் குறைவான சம்பளம்தான் கிடைத்தது. க்ளோரியா, வீட்டுவேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். அவளுடைய வேலைகளைச் சீக்கிரம் முடிப்பதற்காக, நானும் அவளோடு சேர்ந்து வேலை செய்வதற்கு, ஒரு வீட்டிலிருந்தவர்கள் என்னை அனுமதித்தார்கள். அவர்கள் கொடுக்கும் மதிய உணவை நானும் க்ளோரியாவும் பகிர்ந்துகொள்வோம். பிறகு, அங்கிருந்து கிளம்பிவிடுவோம். இன்னொரு குடும்பத்துக்கு, க்ளோரியா ஒவ்வொரு வாரமும் இஸ்திரி போட்டுக்கொடுப்பாள். நான் தோட்ட வேலைகளையும் வீட்டைச் சுற்றியிருந்த வேலைகளையும் செய்தேன்; ஜன்னல்களையும் கழுவினேன். வெள்ளை இனத்தைச் சேர்ந்த இன்னொருவருடைய வீட்டிலும் நாங்கள் ஜன்னல்களைக் கழுவினோம். க்ளோரியா உள்பக்கமாக கழுவுவாள்; நான் வெளியே கழுவுவேன். இதைச் செய்து முடிக்க ஒரு நாள் ஆகிவிடும்! அதனால், மதிய உணவை அவர்களே கொடுத்துவிடுவார்கள். வீட்டுக்குள்ளே சாப்பிட க்ளோரியாவை மட்டும் அனுமதித்தார்கள். ஆனால், அவள் தனியாகத்தான் சாப்பிட வேண்டியிருந்தது. நானோ வண்டி நிறுத்தும் இடத்தில் சாப்பிட வேண்டியிருந்தது. ஆனால், நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தச் சாப்பாடு நல்ல ருசியாக இருந்தது. அவர்கள் நல்ல ஜனங்கள்தான்; ஆனால், சுற்றியிருந்தவர்களைப் பார்த்து அவர்களும் அப்படி நடந்துகொண்டார்கள். ஒருசமயம், நாங்கள் ஒரு பெட்ரோல் பங்குக்குப் போயிருந்தோம். அப்போது க்ளோரியா கழிவறையைப் பயன்படுத்த வேண்டியிருந்ததால், அங்கே வேலை செய்த ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்தவரிடம் அனுமதி கேட்டேன். அதற்கு அவர், ‘அது பூட்டியிருக்கிறது’ என்று கோபமாகச் சொல்லிவிட்டார்.

நீங்காத நினைவுகள்

இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ரொம்பச் சந்தோஷமாக இருந்தோம்; ஊழியத்தையும் நன்றாக அனுபவித்தோம். பைன் ப்ளஃபுக்கு வந்த புதிதில், சபை ஊழியராக இருந்த ஒரு சகோதரருடைய வீட்டில் தங்கினோம். அவருடைய மனைவி சத்தியத்தில் இல்லாததால், க்ளோரியா அவருடைய மனைவிக்கு பைபிள் படிப்பு ஆரம்பித்தாள். அவர்களுடைய மகளுக்கும் மருமகனுக்கும் நான் ஆரம்பித்தேன். பிறகு, அம்மாவும் மகளும் யெகோவாவுக்குச் சேவை செய்ய முடிவெடுத்தார்கள்; ஞானஸ்நானமும் எடுத்தார்கள்.

வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்த சபையிலும் எங்களுக்கு நல்ல நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்களைச் சாப்பாட்டுக்காக வீட்டுக்குக் கூப்பிடுவார்கள். ஆனால், நாங்களும் அவர்களும் ஒன்றாக இருப்பதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக இருட்டிய பிறகுதான் அவர்களுடைய வீட்டுக்குப் போவோம். ஏனென்றால், இனவெறியையும் கலவரங்களையும் தூண்டிவிட்டுக்கொண்டிருந்த கு க்ளக்ஸ் க்லான் (KKK) என்ற அமைப்பு அப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஒருநாள், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உடுத்துவதைப் போன்ற ஒரு உடையைப் போட்டுக்கொண்டு ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார். அதில் அவருக்கு அவ்வளவு பெருமை! சுற்றிலும் மோசமான சம்பவங்கள் நடந்தாலும், நம் சகோதரர்கள் தொடர்ந்து அன்பு காட்டினார்கள். மாநாட்டுக்குப் போக ஒரு தடவை பணம் தேவைப்பட்டதால், காரை விற்க முடிவு செய்தோம்; அதை வாங்கிக்கொள்வதாக ஒரு சகோதரர் சொன்னார். ஒரு மாதம் கழித்து என்ன நடந்தது தெரியுமா? நாங்கள் கால்கடுக்க வெயிலில் ஊழியம் செய்துவிட்டு... பைபிள் படிப்புகளை எல்லாம் முடித்துவிட்டு... ரொம்பக் களைப்பாக வீட்டுக்கு வந்தோம். அப்போது நாங்கள் பார்த்ததை எங்களால் நம்பவே முடியவில்லை! நாங்கள் விற்ற அந்தக் கார் எங்கள் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தது! அதன் முன்பக்க கண்ணாடியில் ஒரு சின்ன பேப்பர் இருந்தது. அதில், “உங்கள் காரை மறுபடியும் உங்களுக்கே பரிசாகக் கொடுக்கிறேன். உங்கள் சகோதரன்” என்று எழுதியிருந்தது.

இன்னொரு அனுபவத்தையும் என்னால் மறக்கவே முடியாது. 1962-ல், நியு யார்க்கில் இருக்கிற சௌத் லான்சிங்கில் நடக்கவிருந்த ராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. அந்தப் பள்ளி, சபைக் கண்காணிகளுக்கும், வட்டாரக் கண்காணிகளுக்கும், மாவட்டக் கண்காணிகளுக்கும் ஒருமாதப் பயிற்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்டது. அப்போது எனக்கு வேலை இல்லாததால், கொஞ்சப் பணம்தான் இருந்தது. அந்தச் சமயத்தில், பைன் ப்ளஃபிலிருந்த ஒரு தொலைப்பேசி நிறுவனம் என்னோடு நேர்முகத் தேர்வு நடத்தியிருந்தது. அங்கே எனக்கு வேலை கிடைத்தால், அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் கறுப்பு இனத்தைச் சேர்ந்த முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்! எனக்கு வேலை தருவதாகவும் அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். நியு யார்க் போவதற்கு என் கையில் பணம் இல்லாததால், அந்த வேலையில் சேரலாம் என்றும் ராஜ்ய ஊழியப் பள்ளிக்கு போக வேண்டாம் என்றும் நினைத்தேன். என்னால் வர முடியவில்லை என்று சொல்லி பெத்தேலுக்குக் கடிதம் எழுதத் தயாரானேன். அப்போது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது!

ஒருநாள் விடியற்காலையில், எங்கள் சபையில் இருந்த ஒரு சகோதரி எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார்; பிறகு, அந்தச் சகோதரி ஒரு கவரை நீட்டினார். அதில் நிறைய பணம் இருந்தது! நான் நியு யார்க்குக்குப் போக வேண்டும் என்பதற்காக, அவரும் அவருடைய இளம் பிள்ளைகளும் காலையில் சீக்கிரமே எழுந்து பருத்தி காட்டில் பல நாட்கள் களைபிடுங்கும் வேலை செய்திருக்கிறார்கள்! “அந்த பள்ளிக்கு போய் நிறைய கத்துட்டு வாங்க; எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க” என்று அவர் சொன்னார். இத்தனைக்கும் அவருடைய கணவர் சத்தியத்தில் இல்லை! பிறகு, நான் அந்த நிறுவனத்திடம், ‘இன்னும் 5 வாரம் கழிச்சு வேலைக்கு வரட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. ஏனென்றால், நியு யார்க்குக்குப் போவதென்று ஏற்கெனவே முடிவு எடுத்திருந்தேன். அந்த வேலையில் சேராததை நினைத்து நான் சந்தோஷப்பட்டேன்.

பைன் ப்ளஃபில் கிடைத்த அனுபவங்களை க்ளோரியா சொல்கிறாள், கேளுங்கள்: “அந்த பிராந்தியம் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. எனக்கு 15-லிருந்து 20 பைபிள் படிப்புகள் இருந்துச்சு. அதனால, காலையில வீட்டுக்கு வீடு ஊழியத்துக்கு போவோம். அப்புறம், ஒருநாள் முழுசும் பைபிள் படிப்புகள நடத்துவோம். சிலசமயத்துல, ராத்திரி 11 மணி வரைக்கும் பைபிள் படிப்பு நடக்கும்! ஊழியம் ரொம்ப சுவராஸ்யமா இருந்துச்சு. எனக்கு அங்கேயே இருக்கத்தான் பிடிச்சிருந்துச்சு. உண்மைய சொல்லணும்னா, பைன் ப்ளஃப்ல செஞ்சிட்டிருந்த ஊழியத்த விட்டுட்டு, வட்டார சேவைக்கு போக எனக்கு இஷ்டமே இல்ல. ஆனா, யெகோவாவுக்கு வேற திட்டம் இருந்துச்சு.” உண்மைதான், யெகோவா தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றினார்.

வட்டாரச் சேவையில்...

பைன் ப்ளஃபில் இருந்தபோது, விசேஷ பயனியர் சேவைக்கு விண்ணப்பித்தோம். அது கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பினோம். ஏனென்றால், டெக்ஸஸ் மாகாணத்திலிருந்த ஒரு சபைக்குப் போய் நாங்கள் உதவ வேண்டுமென்று எங்கள் மாவட்டக் கண்காணி ஆசைப்பட்டார்; அதோடு, அங்கே நாங்கள் விசேஷ பயனியர்களாக சேவை செய்ய வேண்டுமென்றும் அவர் விரும்பினார். அந்த யோசனை எங்களுக்கும் பிடித்திருந்தது. அதனால், அந்த நியமிப்புக்காக நாங்கள் காத்திருந்தோம்... காத்திருந்தோம்... காத்துக்கொண்டே இருந்தோம். ஆனால் பதிலே வரவில்லை. எங்கள் தபால் பெட்டி காலியாகத்தான் இருந்தது. கடைசியில், ஒரு கடிதம் வந்தது! நாங்கள் வட்டாரச் சேவைக்கு நியமிக்கப்பட்டிருந்தோம்! அது ஜனவரி 1965! நாங்கள் நியமிக்கப்பட்டபோது, இப்போது அமெரிக்க கிளை அலுவலகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிற சகோதரர் லியோன் வீவரும் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார்.

வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்வதை நினைத்துப் பயந்தேன். அதற்குக் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்பு, மாவட்டக் கண்காணியாக இருந்த சகோதரர் ஜேம்ஸ் ஏ. தாம்ஸன், நான் வட்டாரக் கண்காணியாவதற்கு தகுதி பெற்றிருக்கிறேனா என்று பார்த்தார். வட்டாரக் கண்காணிக்குத் தேவையான சில திறமைகளைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, நான் எந்தெந்த அம்சங்களில் முன்னேற வேண்டுமென்று சொன்னார். நான் வட்டாரச் சேவையை ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே, அவர் கொடுத்த ஆலோசனை எவ்வளவு அவசியமானது என்பதை உணர்ந்தேன். நான் நியமிக்கப்பட்டபோது, சகோதரர் தாம்ஸன்தான் மாவட்டக் கண்காணி! அந்த உண்மையுள்ள சகோதரரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

உண்மையுள்ள சகோதரர்கள் செய்த உதவியை உயர்வாக மதிக்கிறேன்

அந்தக் காலத்திலெல்லாம் வட்டாரக் கண்காணிகளுக்கு அவ்வளவாகப் பயிற்சி கொடுக்கப்படவில்லை. அனுபவமுள்ள ஒரு வட்டாரக் கண்காணியுடன் சேர்ந்து, அவர் எப்படிச் சேவை செய்கிறார் என்பதை ஒரு வாரத்துக்குக் கவனித்தேன். பிறகு, நான் வேறொரு சபையைச் சந்தித்தேன். அப்போது, அவரும் என்னோடு வந்து, நான் எப்படிச் சேவை செய்கிறேன் என்பதைக் கவனித்தார். எனக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிநடத்துதலையும் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார். “அவரு கண்டிப்பா நம்மளவிட்டு போய்தான் ஆகணுமா?” என்று க்ளோரியாவிடம் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. பிறகு, நான் தொடர்ந்து மற்ற சபைகளைச் சந்திக்க ஆரம்பித்தேன். சீக்கிரத்திலேயே ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன்! அதாவது, நமக்கு உதவ எப்போதுமே அருமையான சகோதரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு இடம்கொடுக்க வேண்டும். அப்போது வட்டாரக் கண்காணியாக இருந்த ஜே. ஆர். ப்ரவுன் மற்றும் பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரெட் ரஸ்க் ஆகியவர்களிடமிருந்து கிடைத்த உதவியை நான் எப்போதுமே மறக்க மாட்டேன்.

அந்த நாட்களில் இனவெறி பரவலாக இருந்தது. ஒரு தடவை, டென்னெஸீ மாகாணத்தில் இருந்த ஒரு சபையைச் சந்தித்தபோது, KKK அமைப்பின் அணிவகுப்பு அந்த ஊரில் நடந்துகொண்டிருந்தது. இன்னொரு தடவை, நாங்கள் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, இடையில் ஒரு ஹோட்டலுக்குப் போனோம். நான் கழிவறைக்குப் போனபோது, ஒரு ஆள் பின்தொடர்ந்தான். அந்த ஆள், இனவெறியைத் தூண்டும் விதத்தில் தன் கையில் பச்சை குத்திக்கொண்டிருந்தான்; பார்ப்பதற்குப் பயங்கரக் கோபமாக இருந்தான். அப்போது, வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் உள்ளே வந்தார். அவர் எங்கள் இரண்டு பேரையும்விட உயரமாகவும் குண்டாகவும் இருந்தார். அவர் என்னிடம், “பிரதர் ஹெர்ட், ஒண்ணும் பிரச்சினை இல்லையே?” என்று கேட்டார். அவரைப் பார்த்ததும், வந்த வேகத்தில் அந்த ஆள் திரும்பிவிட்டான். இனவெறிக்கு முக்கியக் காரணம் ஒருவருடைய தோல் நிறம் அல்ல; நமக்குள் இருக்கும் பாவம்தான் என்பதை அனுபவத்தில் புரிந்துகொண்டேன்! அதுமட்டுமல்ல, நம்முடைய சகோதரர்களுடைய நிறம் எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் எப்போதும் நம்முடைய சகோதரர்கள்தான் என்பதையும், நமக்காக அவர்கள் உயிரையே கொடுப்பார்கள் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

செழுமையான முடிவு

நாங்கள் 12 வருஷங்கள் வட்டாரச் சேவையும், 21 வருஷங்கள் மாவட்டச் சேவையும் செய்தோம். இத்தனை வருஷங்களில், நிறைய ஆசீர்வாதங்களை அனுபவித்திருக்கிறோம்; நல்ல அனுபவங்கள் நிறைய கிடைத்திருக்கிறது. ஆகஸ்ட் 1997-ல் எங்களுடைய பல வருட கனவு நனவானது. அதாவது, அமெரிக்க பெத்தேலில் சேவை செய்வதற்கான அழைப்பு வந்தது! நாங்கள் பெத்தேலுக்கு விண்ணப்பித்து 38 வருஷங்கள் கழித்து இந்த அழைப்பு வந்தது! இது எங்களுக்குக் கிடைத்த இன்னொரு ஆசீர்வாதம்! அடுத்த மாதத்திலிருந்தே நாங்கள் பெத்தேல் சேவையை ஆரம்பித்தோம். பெத்தேலில் முக்கியப் பொறுப்பில் இருந்த சகோதரர்கள் எங்களைக் கொஞ்ச நாட்களுக்குத்தான் பெத்தேலுக்குக் கூப்பிடுகிறார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், நான் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று!

என் மனைவி க்ளோரியா அப்போதும் சரி, இப்போதும் சரி, ஒரு வைரமாக ஜொலிக்கிறாள்!

முதலில் ஊழிய இலாகாவில் நியமிக்கப்பட்டேன். அங்கே நான் நிறைய கற்றுக்கொண்டேன். நாடு முழுவதும் இருக்கும் மூப்பர்களும் வட்டாரக் கண்காணிகளும் நிறைய சிக்கலான, கஷ்டமான கேள்விகளைக் கேட்டு எழுதுவார்கள். அதற்கெல்லாம் ஊழிய இலாகாவில் இருக்கும் சகோதரர்கள் பதில் அனுப்புவார்கள். அவர்கள் ரொம்பப் பொறுமையோடு பயிற்சி கொடுத்ததற்காக நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன். மறுபடியும் அங்கே வேலை செய்ய நியமிக்கப்பட்டால், அங்கிருக்கும் சகோதரர்களிடமிருந்து இன்னும் நிறைய கற்றுக்கொள்வேன்.

எனக்கும் க்ளோரியாவுக்கும் பெத்தேல் வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது. பொதுவாகவே காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் பழக்கம் எங்களுக்கு இருக்கிறது. இந்தப் பழக்கம் பெத்தேல் வாழ்க்கைக்குக் கைகொடுக்கிறது. பெத்தேலுக்குப்போய் கிட்டத்தட்ட ஒரு வருஷத்தில், ஆளும் குழுவின் ஊழிய இலாகாவில் உதவியாளராக சேவை செய்ய ஆரம்பித்தேன். பிறகு, 1999-ல் ஆளும் குழுவின் அங்கத்தினராக நியமிக்கப்பட்டேன். இந்த நியமிப்பில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமான ஒரு விஷயம், கிறிஸ்தவ சபையின் தலைவர் இயேசு கிறிஸ்துதான், எந்த மனிதரும் அல்ல என்பதுதான்!

1999 முதல், ஆளும் குழுவில் சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது

என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ஆமோஸ் தீர்க்கதரிசியைப் போல்தான் உணருகிறேன். ஏழைகள் மட்டுமே சாப்பிட்ட காட்டத்திப் பழங்களை குத்திவிடுபவராக இருந்த அந்த சாதாரண மேய்ப்பரின் மேல் யெகோவாவின் பார்வை பட்டது. அவரை ஒரு தீர்க்கதரிசியாக யெகோவா நியமித்தார்; அளவில்லாத ஆசீர்வாதத்தைப் பொழிந்தார். (ஆமோ. 7:14, 15) அதேபோல், இண்டியானாவிலிருந்த லிபர்ட்டியில் சாதாரண ஒரு விவசாயியின் மகனாக இருந்த என்மீதும் யெகோவாவின் பார்வை பட்டது. அவர் எனக்கு ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார்; அத்தனையையும் இங்கே சொல்லித்தீர்க்க முடியாது! (நீதி. 10:22) என் வாழ்க்கை எளிமையாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் இப்போது, கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு செழுமையாக இருக்கிறது!