Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் ஏன் ‘அதிகமதிகமாகக் கனி தருகிறோம்?’

நாம் ஏன் ‘அதிகமதிகமாகக் கனி தருகிறோம்?’

“நீங்கள் அதிகமதிகமாகக் கனி தந்து, என்னுடைய சீஷர்கள் என்று நிரூபிக்கும்போது, என் தகப்பன் மகிமைப்படுகிறார்.” —யோவா. 15:8.

பாடல்கள்: 145, 144

1, 2. (அ) தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, தன் சீஷர்களிடம் இயேசு என்ன பேசிக்கொண்டிருந்தார்? (ஆரம்பப் படம்) (ஆ) ஊழியம் செய்வதற்கான காரணங்களை ஞாபகம் வைத்திருப்பது ஏன் முக்கியம்? (இ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, அப்போஸ்தலர்களோடு இயேசு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவர்களை மிகவும் நேசிப்பதாக அவர்களிடம் சொன்னார். அதோடு, போன கட்டுரையில் நாம் கவனித்த திராட்சைக் கொடியைப் பற்றிய உவமையையும் சொன்னார். அதன் மூலம், ‘அதிகமதிகமாகக் கனி’ தருவதற்கு, அதாவது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு, தன் சீஷர்களை உற்சாகப்படுத்தினார்.—யோவா. 15:8.

2 தன்னுடைய சீஷர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமல்ல, அதை ஏன் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இயேசு சொன்னார். அதாவது, தொடர்ந்து ஊழியம் செய்வதற்கான காரணங்களைப் பற்றி அவர்களிடம் சொன்னார். அந்தக் காரணங்களை ஞாபகத்தில் வைக்கும்போதுதான், ‘எல்லா தேசத்தாருக்கும் சாட்சி’ கொடுக்கும் வேலையை நம்மால் சோர்ந்துபோகாமல் செய்ய முடியும். (மத். 24:13, 14) இந்தக் கட்டுரையில், நாம் ஊழியம் செய்வதற்கான நான்கு காரணங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதோடு, நாம் அதிகமதிகமாகக் கனி தருவதற்காக யெகோவா கொடுத்திருக்கும் நான்கு பரிசுகளைப் பற்றியும் பார்ப்போம்.

நாம் யெகோவாவை மகிமைப்படுத்துகிறோம்

3. (அ) யோவான் 15:8-ன்படி, நாம் ஊழியம் செய்வதற்கான மிக முக்கியக் காரணம் என்ன? (ஆ) இயேசுவின் உவமையில் சொல்லப்பட்டிருக்கும் திராட்சைப் பழங்கள் எதைக் குறிக்கின்றன, அது ஏன் பொருத்தமாக இருக்கிறது?

3 நாம் யெகோவாவை மகிமைப்படுத்தவும், அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தவும் விரும்புகிறோம். நாம் ஊழியம் செய்வதற்கான மிக முக்கியமான காரணம், இதுதான்! (யோவான் 15:1, 8-ஐ வாசியுங்கள்.) திராட்சைக் கொடி பற்றிய உவமையில், யெகோவாதான் திராட்சைத் தோட்டக்காரர் என்றும், தான்தான் திராட்சைக் கொடி என்றும், தன்னுடைய சீஷர்கள்தான் கிளைகள் என்றும் இயேசு சொன்னார். (யோவா. 15:5) அப்படியென்றால், அந்த உவமையில் சொல்லப்பட்டிருக்கும் திராட்சைப் பழங்கள் எதைக் குறிக்கின்றன? இயேசுவின் சீஷர்கள் தருகிற கனியை, அதாவது அவர்கள் செய்யும் பிரசங்க வேலையை, குறிக்கின்றன. ‘நீங்கள் அதிகமதிகமாகக் கனி தரும்போது என் தகப்பன் மகிமைப்படுகிறார்’ என்று இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் சொன்னார். திராட்சைக் கொடிகளிலிருந்து சுவையான திராட்சைப் பழங்கள் கிடைக்கும்போது, அந்தக் தோட்டக்காரருக்கு மகிமை சேருகிறது. அதேபோல, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்வதற்கு நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது யெகோவாவுக்கு மகிமை சேருகிறது.—மத். 25:20-23.

4. (அ) நாம் எப்படிக் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறோம்? (ஆ) கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும் பாக்கியத்தைப் பற்றி எப்படி உணருகிறீர்கள்?

4 கடவுளுடைய பெயர் ஏற்கெனவே பரிசுத்தமாகத்தான் இருக்கிறது. நம்முடைய செயல்கள் மூலமாகத்தான் அதை இன்னும் பரிசுத்தமாக்க வேண்டுமென்று கிடையாது. அப்படியென்றால், பிரசங்க வேலையின் மூலம் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறோம் என்று எப்படிச் சொல்லலாம்? அதைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி சொல்வதைக் கவனியுங்கள். ‘பரலோகப் படைகளின் யெகோவா மட்டும்தான் பரிசுத்தமானவர் என்பதை மனதில் வைக்க வேண்டும்’ என்று அவர் சொல்கிறார். (ஏசா. 8:13) அப்படியென்றால், மற்ற எல்லாப் பெயர்களையும்விட கடவுளுடைய பெயரை மகத்துவமானதாகக் கருதும்போதும், அதன் பரிசுத்தத்தன்மையைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவும்போதும் நாம் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறோம்! (மத். 6:9) உதாரணத்துக்கு, யெகோவாவுடைய அருமையான குணங்களைப் பற்றியும், மனிதர்கள் பூஞ்சோலையில் முடிவில்லாமல் வாழ வேண்டும் என்று அவர் விரும்புவதைப் பற்றியும் நாம் மற்றவர்களுக்குச் சொல்கிறோம். அதன் மூலம், யெகோவாவைப் பற்றி சாத்தான் சொன்னதெல்லாம் சுத்தப் பொய் என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுகிறோம். (ஆதி. 3:1-5) அதோடு, யெகோவா மட்டுமே “மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்” என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கிறோம். இப்படி, நாம் யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறோம். (வெளி. 4:11) பதினாறு வருஷங்களாக பயனியர் சேவை செய்யும் சகோதரர் ரியூன் இப்படிச் சொல்கிறார்: “இந்த பிரபஞ்சத்தையே படைச்சவருக்கு சாட்சியா இருக்குற வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு. அதுக்காக நான் ரொம்ப நன்றியோட இருக்கேன். சோர்ந்துபோகாம ஊழியம் செய்றதுக்கு இது எனக்கு உற்சாகத்த தருது.”

யெகோவாவையும் அவருடைய மகனையும் நாம் நேசிக்கிறோம்

5. (அ) ஊழியம் செய்வதற்கான காரணத்தைப் பற்றி யோவான் 15:9, 10 என்ன சொல்கிறது? (ஆ) சகித்திருப்பதன் அவசியத்தைப் பற்றி இயேசு தன் சீஷர்களுக்கு எப்படிப் புரியவைத்தார்?

5 யோவான் 15:9, 10-ஐ வாசியுங்கள். நாம் யெகோவாவையும் இயேசுவையும் நேசிக்கிறோம். இதுதான், நாம் ஊழியம் செய்வதற்கான இரண்டாவது காரணம். (மாற். 12:30; யோவா. 14:15) “என் அன்பில் நிலைத்திருங்கள்” என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார்? ஏனென்றால், உண்மை கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு சகிப்புத்தன்மை தேவை என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். சீஷர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், “நிலைத்திருங்கள்” என்ற வார்த்தையை யோவான் 15:4-10 வசனங்களில் அவர் பல தடவை பயன்படுத்தினார்.

6. கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்க விரும்புகிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

6 கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்க விரும்புகிறோம் என்பதையும், அவருடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறோம் என்பதையும், அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் காட்டலாம். இயேசு, தான் செய்ததைத்தான் நம்மையும் செய்யச் சொல்கிறார். ‘என் தகப்பனுடைய கட்டளைகளின்படி நடந்து அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறேன்’ என்று அவர் சொன்னார். இந்த விஷயத்தில் இயேசு நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்.—யோவா. 13:15.

7. கீழ்ப்படிதல் எப்படி அன்போடு சம்பந்தப்பட்டிருக்கிறது?

7 கீழ்ப்படிதல், அன்போடு சம்பந்தப்பட்டிருப்பதாக இயேசு சொன்னார். “என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவற்றின்படி நடப்பவன்தான் என்மேல் அன்பு காட்டுகிறான்” என்று அவர் சொன்னார். (யோவா. 14:21) தன்னுடைய அப்பாவின் கட்டளைகளைத்தான் இயேசு நமக்குக் கொடுக்கிறார். அதனால், ஊழியம் செய்யும்படி இயேசு கொடுத்த கட்டளைக்கு நாம் கீழ்ப்படியும்போது, நாம் யெகோவாவை நேசிக்கிறோம் என்று அர்த்தம். (மத். 17:5; யோவா. 8:28) யெகோவாவையும் இயேசுவையும் நேசிக்கிறோம் என்பதை நாம் செயலில் காட்டும்போது, அவர்களுடைய அன்பில் நிலைத்திருப்போம்.

நாம் மக்களை எச்சரிக்கிறோம்

8, 9. (அ) நாம் ஊழியம் செய்வதற்கான இன்னொரு காரணம் என்ன? (ஆ) எசேக்கியேல் 3:18, 19 மற்றும் 18:23-ல் சொல்லப்பட்டிருக்கும் யெகோவாவின் வார்த்தைகள், தொடர்ந்து ஊழியம் செய்ய நம்மை எப்படி உற்சாகப்படுத்துகிறது?

8 யெகோவாவுடைய நாளைப் பற்றி நாம் மற்றவர்களை எச்சரிக்க விரும்புகிறோம். இதுதான் நாம் ஊழியம் செய்வதற்கான மூன்றாவது காரணம். நோவா, நீதியை ‘பிரசங்கித்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 2:5-ஐ வாசியுங்கள்.) வரவிருந்த அழிவைப் பற்றி அவர் அந்த மக்களைக் கண்டிப்பாக எச்சரித்திருப்பார். ஏனென்றால், அந்த மக்களைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “பெருவெள்ளம் வருவதற்கு முந்தின காலத்தில், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். நோவா பேழைக்குள் நுழைந்த நாள்வரை அப்படித்தான் இருந்தார்கள். பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை; மனிதகுமாரனுடைய பிரசன்னத்தின்போதும் அப்படியே நடக்கும்.” (மத். 24:38, 39) நோவாவை மக்கள் அசட்டை செய்தாலும் யெகோவாவின் எச்சரிப்புச் செய்தியை அவர் உண்மையோடு பிரசங்கித்தார்.

9 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை இன்று நாம் பிரசங்கிக்கிறோம். இதைச் செய்வதன் மூலம், மனிதர்களுக்காக எதிர்காலத்தில் கடவுள் என்ன செய்யப்போகிறார் என்பதை எல்லாரும் தெரிந்துகொள்ள நாம் வாய்ப்பளிக்கிறோம். நாம் சொல்லும் செய்தியைக் கேட்டு மக்கள் “உயிர்வாழ வேண்டும்” என்று யெகோவாவைப் போலவே நாமும் ரொம்ப ஆசைப்படுகிறோம். (எசே. 18:23) வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் பொது ஊழியத்திலும், கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பொல்லாத உலகத்தை அழிக்கப்போகிறது என்ற எச்சரிப்புச் செய்தியை முடிந்தவரை நிறைய பேருக்கு நாம் சொல்கிறோம்.—எசே. 3:18, 19; தானி. 2:44; வெளி. 14:6, 7.

நாம் மக்களை நேசிக்கிறோம்

10. (அ) ஊழியம் செய்வதற்கான காரணத்தைப் பற்றி மத்தேயு 22:39 என்ன சொல்கிறது? (ஆ) பிலிப்பி நகரத்திலிருந்த சிறைக்காவலனுக்கு பவுலும் சீலாவும் எப்படி உதவினார்கள்?

10 மக்கள்மேல் நமக்கிருக்கும் அன்புதான் நாம் ஊழியம் செய்வதற்கான நான்காவது காரணம். (மத். 22:39) இந்த அன்புதான் சோர்ந்துபோகாமல் ஊழியம் செய்ய நம்மைத் தூண்டுகிறது. சூழ்நிலைகள் மாறும்போது மக்களுடைய மனநிலை மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். உதாரணத்துக்கு, பிலிப்பி நகரத்தில் இருந்தபோது பவுலையும் சீலாவையும் எதிரிகள் சிறையில் போட்டார்கள். ஆனால், நடுராத்திரியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சிறைக் கதவுகள் திறந்துகொண்டன. கைதிகள் தப்பித்துவிட்டார்களோ என்று பயந்துபோய், சிறைக்காவலன் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தான். ஆனால், பவுல் அவனைத் தடுத்து நிறுத்தி, “உன்னை நீயே எதுவும் செய்துகொள்ளாதே!” என்று சத்தமாகச் சொன்னார். அப்போது அவன், “மீட்புப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு பவுலும் சீலாவும், ‘எஜமானாகிய இயேசுவை நம்பு, அப்போது நீ மீட்புப் பெறுவாய்’ என்று சொன்னார்கள்.—அப். 16:25-34.

யெகோவாவையும் இயேசுவையும் மக்களையும் நேசிப்பதால் நாம் பிரசங்கிக்கிறோம் (பாராக்கள் 5, 10)

11, 12. (அ) சிறைக்காவலனுடைய அனுபவத்திலிருந்து, நம்முடைய பிரசங்க வேலையைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) நாம் ஏன் தொடர்ந்து மக்களுக்குப் பிரசங்கிக்கிறோம்?

11 அந்தச் சிறைக்காவலனுடைய அனுபவத்திலிருந்து, நம்முடைய பிரசங்க வேலையைப் பற்றி நாம் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகுதான் அவனுடைய மனப்பான்மை மாறியது; அப்போதுதான் அவன் உதவியும் கேட்டான். அதேபோல், சிலர் ஆரம்பத்தில் பைபிள் செய்தியைக் கேட்க விரும்புவதில்லை. ஆனால், அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது சோகமான சம்பவம் நடக்கும்போது, தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொள்கிறார்கள்; யாராவது உதவமாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு, வேலை பறிபோகும்போது அல்லது விவாகரத்து ஆகும்போது, சிலர் இடிந்துபோய்விடுகிறார்கள். வேறுசிலர், தீராத வியாதியால் அல்லது பாசமானவர்களை மரணத்தில் பறிகொடுத்த துக்கத்தால் கஷ்டப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, வாழ்க்கையைப் பற்றிய சில கேள்விகளை அவர்கள் கேட்க ஆரம்பிக்கலாம்; ஆனால், முன்பு இதைப் பற்றி அவர்கள் யோசித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்! ஆனால் சூழ்நிலைகள் மாறும்போது, ‘மீட்புப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று அவர்கள் கேட்கலாம். நாம் சொல்லும் நம்பிக்கையான செய்தியை தங்கள் வாழ்க்கையில் முதல் தடவையாக காதுகொடுத்துக் கேட்க அவர்கள் விரும்பலாம்.

12 அதனால், நாம் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும். அப்போதுதான், மக்களுக்கு ஆறுதல் தேவைப்படும் சமயத்தில், நம்மால் அவர்களுக்கு உதவ முடியும்; அவர்களும் நாம் தரும் ஆறுதலை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள். (ஏசா. 61:1) ஷர்லட் என்ற சகோதரி 38 வருஷங்களாக பயனியர் சேவை செய்துவருகிறார். “ஜனங்களுக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்ல. நாம சொல்ற நல்ல செய்தி, அவங்களுக்கு கண்டிப்பா தேவை” என்று அவர் சொல்கிறார். 34 வருஷங்களாக பயனியர் சேவை செய்துவரும் ஏவர் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என்னைக்கும் இல்லாத அளவுக்கு இன்னைக்கு ஜனங்க உணர்ச்சி ரீதியில ரொம்ப தளர்ந்து போயிருக்காங்க. அவங்களுக்கு உதவணும்னு நான் ஆசைப்படறேன். அவங்கமேல இருக்குற அக்கறைதான் பிரசங்கிக்க என்னை தூண்டுது.” மக்கள்மேல் இருக்கிற அன்பால் நாம் பிரசங்கிக்கிறோம்; நாம் பிரசங்கிப்பதற்கு இது ஒரு அருமையான காரணம், இல்லையா?

சோர்ந்துபோகாமல் ஊழியம் செய்ய நமக்கு உதவுகிற பரிசுகள்

13, 14. (அ) எந்தப் பரிசைப் பற்றி யோவான் 15:11 சொல்கிறது? (ஆ) இயேசு அனுபவிக்கிற சந்தோஷத்தை நாம் எப்படி அனுபவிக்கலாம்? (இ) ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய, சந்தோஷம் என்ற பரிசு எப்படி நமக்கு உதவும்?

13 தன்னுடைய அப்போஸ்தலர்கள் தொடர்ந்து பலன் தருவதற்கு உதவுகிற பரிசுகளைப் பற்றி, தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி இயேசு சொன்னார். அந்தப் பரிசுகள் எவை, இன்று எப்படி அவை நமக்கு உதவும்?

14 முதலாவது பரிசு: சந்தோஷம். பிரசங்கிப்பது பாரமான ஒரு வேலையா? இல்லவே இல்லை! திராட்சைக் கொடியைப் பற்றிய உவமையைச் சொன்ன பிறகு, பிரசங்கிப்பது நமக்குச் சந்தோஷத்தைத் தருமென்று இயேசு சொன்னார். (யோவான் 15:11-ஐ வாசியுங்கள்.) அது உண்மையா? அந்த உவமையில், தன்னை திராட்சைக் கொடிக்கும், தன்னுடைய அப்போஸ்தலர்களை கிளைகளுக்கும் இயேசு ஒப்பிட்டுச் சொன்னதை ஞாபகம் வையுங்கள். கொடியோடு சேர்ந்திருந்தால்தான் கிளைகளுக்குத் தேவையான தண்ணீரும், ஊட்டச்சத்தும் கிடைக்கும். அதேபோல், இயேசுவோடு நாம் சேர்ந்திருந்தால்தான்... அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றினால்தான்... நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். இயேசு அனுபவிக்கிற சந்தோஷத்தை, அதாவது கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதால் கிடைக்கிற சந்தோஷத்தை, நம்மால் அனுபவிக்க முடியும். (யோவா. 4:34; 17:13; 1 பே. 2:21) ஹானி என்ற சகோதரி, 40 வருஷங்களுக்கும்மேல் பயனியர் சேவை செய்துவருகிறார். “ஊழியத்துக்குப் போயிட்டு வர்றப்போ கிடைக்கிற சந்தோஷமே தனிதான். சோர்ந்துபோகாம சேவை செய்றதுக்கு அந்த சந்தோஷம்தான் எனக்கு உற்சாகத்த தருது” என்று அவர் சொல்கிறார். நம் செய்தியை நிறைய பேர் கேட்கவில்லையென்றாலும், சந்தோஷம் என்ற பரிசு, தொடர்ந்து ஊழியம் செய்ய நமக்கு உதவும்.—மத். 5:10-12.

15. (அ) எந்தப் பரிசைப் பற்றி யோவான் 14:27 சொல்கிறது? (ஆ)  தொடர்ந்து பலன் தருவதற்கு சமாதானம் என்ற பரிசு எப்படி நமக்கு உதவும்?

15 இரண்டாவது பரிசு: சமாதானம். (யோவான் 14:27-ஐ வாசியுங்கள்.) தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களிடம், “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குத் தருகிறேன்” என்று சொன்னார். தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு இயேசுவின் சமாதானம் நமக்கு எப்படி உதவும்? தொடர்ந்து பிரசங்கிக்கும்போது, யெகோவாவையும் இயேசுவையும் சந்தோஷப்படுத்துகிறோம் என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது; அந்த உணர்வு நமக்கு சமாதானத்தைத் தருகிறது. (சங். 149:4; ரோ. 5:3, 4; கொலோ. 3:15) உல்ஃப் என்ற சகோதரர் 45 வருஷங்களாகப் பயனியர் சேவை செய்துவருகிறார். “ஊழியம் செய்றப்போ எனக்கு களைப்பாதான் இருக்கும். ஆனா, அதுதான் உண்மையான திருப்திய தருது, வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தயும் கொடுக்குது” என்று அவர் சொல்கிறார். நமக்குக் கிடைக்கிற இந்த நிலையான சமாதானத்துக்காக நாம் நன்றியோடு இருக்கிறோம், இல்லையா?

16. (அ) எந்தப் பரிசைப் பற்றி யோவான் 15:15 சொல்கிறது? (ஆ) தொடர்ந்து இயேசுவின் நண்பர்களாக இருக்க, அப்போஸ்தலர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?

16 மூன்றாவது பரிசு: இயேசுவுடன் இருக்கும் நட்பு. தன்னுடைய அப்போஸ்தலர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று தான் ஆசைப்படுவதாக இயேசு அவர்களிடம் சொன்ன பிறகு, சுயநலமில்லாத அன்பைக் காட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார். (யோவா. 15:11-13) அதோடு, “நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன்” என்றார். இயேசுவுக்கு நண்பராக இருக்கும் வாய்ப்பு எப்பேர்ப்பட்ட ஒரு பரிசு! ஆனால், தொடர்ந்து இயேசுவின் நண்பர்களாக இருப்பதற்கு, அப்போஸ்தலர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? “நிலைத்திருக்கிற கனியை” கொடுக்க வேண்டியிருந்தது! அதாவது, தொடர்ந்து அவர்கள் கனிகொடுக்க வேண்டியிருந்தது! (யோவான் 15:14-16-ஐ வாசியுங்கள்.) வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் சோர்ந்துபோகாமல் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்கு முன்பே, தன் அப்போஸ்தலர்களிடம், “‘பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’ என்று பிரசங்கியுங்கள்” என்று இயேசு சொல்லியிருந்தார். (மத். 10:7) இப்போது, அதாவது அவர் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, சோர்ந்துபோகாமல் ஊழியம் செய்யும்படி அப்போஸ்தலர்களை உற்சாகப்படுத்தினார். (மத். 24:13; மாற். 3:14) இந்தக் கட்டளையின்படி செய்வது அவ்வளவு சுலபமில்லை என்பது இயேசுவுக்குத் தெரியும். அப்படியென்றால், அப்போஸ்தலர்களால் தொடர்ந்து ஊழியம் செய்ய முடியுமா? தொடர்ந்து அவருடைய நண்பர்களாக இருக்க முடியுமா? கண்டிப்பாக முடியும். எப்படி? அதற்கு உதவுகிற இன்னொரு பரிசைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

17, 18. (அ) எந்தப் பரிசைப் பற்றி யோவான் 15:7 சொல்கிறது? (ஆ) அந்தப் பரிசு இயேசுவின் அப்போஸ்தலர்களுக்கு எப்படி உதவியது? (இ) எந்தப் பரிசுகள் இன்று நமக்கு உதவுகின்றன?

17 நான்காவது பரிசு: ஜெபத்துக்குக் கிடைக்கும் பதில். “நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேளுங்கள், கேட்டபடியே உங்களுக்கு நடக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவா. 15:7, 16) இயேசு கொடுத்த அந்த வாக்குறுதி, அப்போஸ்தலர்களை நிச்சயம் பலப்படுத்தியிருக்கும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆனால், இயேசு எதற்காக அந்த வாக்குறுதியைக் கொடுக்கிறார் என்பதையும், அவர் சீக்கிரத்தில் சாகப்போகிறார் என்பதையும் அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இயேசு இறந்தவுடன், அவர்கள் நிர்க்கதியாய் ஆகிவிடுவார்களா? இல்லை! ஏனென்றால், அவர்களுடைய ஜெபத்துக்குப் பதில் கொடுக்கவும், பிரசங்க வேலையில் அவர்களுக்கு உதவவும் யெகோவா தயாராக இருந்தார்! இயேசு இறந்த கொஞ்ச நாட்களுக்குள், தங்களுக்குத் தைரியம் தரும்படி கேட்டு அப்போஸ்தலர்கள் செய்த ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுத்தார்.—அப். 4:29, 31.

உதவி கேட்டு நாம் செய்யும் ஜெபத்துக்கு, யெகோவா பதில் தருகிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம் (பாரா 18)

18 இன்றும் நம் ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுக்கிறார். நாம் சோர்ந்துபோகாமல் ஊழியம் செய்யும்போது, இயேசுவின் நண்பர்களாக இருக்க முடியும். சிலசமயங்களில், ஊழியம் செய்ய நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்; அப்போது, உதவி கேட்டு நாம் செய்யும் ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுக்கத் தயாராக இருக்கிறார். (பிலி. 4:13) அந்தப் பதில்களுக்காகவும், இயேசுவின் நண்பராக இருக்கும் வாய்ப்புக்காகவும் நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! தொடர்ந்து கனி கொடுப்பதற்கு, யெகோவா தருகிற இந்தப் பரிசுகள் நமக்கு உதவும்.—யாக். 1:17.

19. (அ) நாம் ஏன் தொடர்ந்து பிரசங்கிக்கிறோம்? (ஆ) கடவுள் கொடுத்திருக்கிற வேலையைச் செய்து முடிக்க எவை நமக்கு உதவும்?

19 நாம் ஏன் சோர்ந்துபோகாமல் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும் என்பதற்கான நான்கு காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்த்தோம். அவை: (1) நாம் யெகோவாவை மகிமைப்படுத்தவும், அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தவும் விரும்புகிறோம். (2) நாம் யெகோவாவையும் இயேசுவையும் நேசிக்கிறோம். (3) யெகோவாவுடைய நாளைப் பற்றி நாம் மற்றவர்களை எச்சரிக்க விரும்புகிறோம். (4) மக்களை நாம் நேசிக்கிறோம். அதோடு, கடவுள் கொடுத்திருக்கும் வேலையைச் செய்து முடிக்க நமக்கு உதவுகிற நான்கு பரிசுகளைப் பற்றியும் பார்த்தோம். அவை: (1) சந்தோஷம் (2) சமாதானம் (3) இயேசுவுடன் நமக்கு இருக்கிற நட்பு (4) நம்முடைய ஜெபத்துக்கான பதில். ‘அதிகமதிகமாகக் கனி தருவதற்காக’ நாம் கடினமாக உழைப்பதைப் பார்க்கும்போது, யெகோவா ரொம்பச் சந்தோஷப்படுகிறார்!

^ பாரா. 17 அப்போஸ்தலர்களுடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுப்பார் என்று இயேசு பல தடவை அவர்களிடம் சொன்னார்.—யோவா. 14:13; 15:7, 16; 16:23.