Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் எதிரியைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் எதிரியைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

“அவனுடைய சதித்திட்டங்கள் நமக்குத் தெரிந்தவைதானே.”—2 கொ. 2:11.

பாடல்கள்: 133, 27

1. ஆதாம் ஏவாள் பாவம் செய்த பிறகு, நம் எதிரியைப் பற்றிய என்ன விஷயங்களை யெகோவா வெளிப்படுத்தினார்?

பாம்பு பேசாது என்று ஆதாமுக்குத் தெரியும். ஆனால், ஏவாளிடம் ஒரு பாம்பு பேசியதைப் பற்றி அவன் கேள்விப்பட்டபோது, அதற்குப் பின்னால் இருந்தது ஒரு ஆவி சிருஷ்டிதான் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கலாம். (ஆதி. 3:1-6) அந்த ஆவி சிருஷ்டி யார் என்பது ஆதாம் ஏவாளுக்குத் தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும், யாரென்றே தெரியாத ஒருவனோடு சேர்ந்துகொண்டு தங்களுடைய அன்பான பரலோகத் தகப்பனுக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தார்கள். (1 தீ. 2:14) இந்தச் சம்பவம் நடந்த உடனே, அந்தப் பொல்லாத எதிரியைப் பற்றிய நிறைய விஷயங்களை யெகோவா வெளிப்படுத்த ஆரம்பித்தார். அவன் சீக்கிரமாக அழிக்கப்படுவான் என்று வாக்குக் கொடுத்தார். அதேசமயம், பாம்பைப் பயன்படுத்தி ஏவாளிடம் பேசிய அந்த ஆவி சிருஷ்டி, கடவுளை நேசிப்பவர்களை எதிர்ப்பான் என்றும் எச்சரித்தார்.—ஆதி. 3:15.

2, 3. மேசியா வருவதற்கு முன்பு, சாத்தானைப் பற்றிய சில விஷயங்களை மட்டுமே யெகோவா பதிவு செய்ததற்கு என்ன காரணம்?

2 தனக்கு எதிராகக் கலகம் செய்த அந்தத் தேவதூதனுடைய பெயரை யெகோவா நமக்குச் சொல்லவில்லை. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஏதேனில் கலகம் நடந்து கிட்டத்தட்ட 2,500 வருஷங்களுக்குப் பிறகுதான் அந்தக் கலகக்காரன் யாரென்றே யெகோவா வெளிப்படுத்தினார். (யோபு 1:6) அவன் “சாத்தான்” என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறான். அதற்கு “எதிர்ப்பவன்” என்று அர்த்தம். சொல்லப்போனால், எபிரெய வேதாகமத்தில் இருக்கிற 1 நாளாகமம், யோபு, சகரியா ஆகிய மூன்று புத்தகங்களில் மட்டும்தான் சாத்தான் என்ற பெயரைப் பார்க்க முடிகிறது. மேசியா வருவதற்கு முன்பு, இந்த எதிரியைப் பற்றிய சில விஷயங்கள்தான் வெளிப்படுத்தப்பட்டது. ஏன்?

3 எபிரெய வேதாகமத்தில், சாத்தான் மற்றும் அவனுடைய செயல்களைப் பற்றிய நிறையத் தகவல்களை யெகோவா பதிவு செய்யவில்லை. ஏனென்றால், மேசியா யாரென்று தெரிந்துகொள்ளவும் அவரைப் பின்பற்றவும் மக்களுக்கு உதவுவதுதான் எபிரெய வேதாகமத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. (லூக். 24:44; கலா. 3:24) மேசியா வந்த பிறகு, அவரையும் அவருடைய சீஷர்களையும் பயன்படுத்தி, சாத்தான் மற்றும் அவனுடைய தூதர்களைப் பற்றிய நிறையத் தகவல்களை யெகோவா வெளிப்படுத்தினார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) யெகோவா அப்படிச் செய்தது ஏன் பொருத்தமாக இருக்கிறது? ஏனென்றால், இயேசுவையும் பரலோக நம்பிக்கையுள்ளவர்களையும் பயன்படுத்திதான், சாத்தானையும் அவனுடைய ஆதரவாளர்களையும் அவர் அழிக்கப்போகிறார்.—ரோ. 16:20; வெளி. 17:14; 20:10.

4. நாம் ஏன் சாத்தானைப் பார்த்து பயந்து நடுங்க வேண்டியதில்லை?

4 அப்போஸ்தலன் பேதுரு, சாத்தானை ‘கர்ஜிக்கிற சிங்கத்துக்கு’ ஒப்பிடுகிறார். அவனை ‘பாம்பு’ என்றும் “ராட்சதப் பாம்பு” என்றும் யோவான் குறிப்பிடுகிறார். (1 பே. 5:8; வெளி. 12:9) ஆனால், சாத்தானைப் பார்த்து நாம் பயந்து நடுங்க வேண்டியதில்லை. ஏனென்றால், அவனுடைய சக்திக்கு ஒரு வரம்பு இருக்கிறது. (யாக்கோபு 4:7-ஐ வாசியுங்கள்.) யெகோவா, இயேசு மற்றும் உண்மையுள்ள தூதர்களுடைய பாதுகாப்பும் நமக்கு இருக்கிறது. அவர்களுடைய உதவியோடு நம்முடைய எதிரியை நம்மால் எதிர்க்க முடியும். இருந்தாலும், இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துகொள்வது அவசியம்: சாத்தானுக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறது? சாத்தான் எப்படி மனிதர்கள்மேல் செல்வாக்கு செலுத்துகிறான்? அவனால் செய்ய முடியாத விஷயங்கள் என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் இப்போது பார்க்கலாம்.

சாத்தானுக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறது?

5, 6. மக்களுடைய மிக முக்கியமான தேவைகளை ஏன் எந்தவொரு அரசாங்கத்தாலும் பூர்த்தி செய்ய முடிவதில்லை?

5 கடவுளுக்கு எதிரான கலகத்தில், நிறைய தேவதூதர்கள் சாத்தானோடு சேர்ந்துகொண்டார்கள். பெருவெள்ளம் வருவதற்கு முன்பு, பூமியிலிருந்த பெண்களோடு உடலுறவு வைத்துக்கொள்ளும்படி அவர்களில் சிலரை சாத்தான் தூண்டினான். இந்தக் கலகக்கார தூதர்கள், இப்போது சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். வானத்து நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை சாத்தான் இழுத்திருக்கிறான் என்று பைபிள் அடையாள அர்த்தத்தில் சொல்கிறது. (ஆதி. 6:1-4; யூ. 6; வெளி. 12:3, 4) அந்தத் தேவதூதர்கள் கடவுளுடைய குடும்பத்தைவிட்டு வெளியேறியபோது, தாங்களாகவே சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் போனார்கள். ஆனால், அந்தத் தூதர்கள் ஒழுங்கமைக்கப்படாமல் இருக்கிறார்கள் என்று நாம் நினைத்துவிட முடியாது. கடவுள் எப்படி ஒரு அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிறாரோ, அதேபோல நம் கண்களுக்குத் தெரியாத ஒரு ஆவி உலகத்தில், சாத்தானும் தனக்கென்று ஒரு அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிறான். தன்னையே அவன் ராஜாவாக ஆக்கிக்கொண்டான்! அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா பேய்களையும் ஒழுங்கமைத்து, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து, இந்த உலகத்தின் ஆட்சியாளர்களாக ஆக்கியிருக்கிறான்.—எபே. 6:12.

6 இன்றுள்ள மனித அரசாங்கங்களைக் கட்டுப்படுத்த சாத்தான் தன்னுடைய அமைப்பைப் பயன்படுத்துகிறான். இதை எப்படி உறுதியாகச் சொல்லலாம்? “இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும்” இயேசுவிடம் அவன் காட்டினான். பிறகு, “இவை எல்லாவற்றின் மீதுள்ள அதிகாரத்தையும் இவற்றின் மகிமையையும் நான் உனக்குத் தருவேன்; ஏனென்றால், இந்த அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இதைக் கொடுப்பேன்” என்று சொன்னான். (லூக். 4:5, 6) இன்றுள்ள அரசாங்கங்கள் அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், நிறைய அரசாங்கங்கள் குடிமக்களுக்கு நல்லது செய்கின்றன. மக்களுக்கு உதவ வேண்டுமென்று சில ஆட்சியாளர்கள் மனதார ஆசைப்படுகிறார்கள். ஆனால், எந்தவொரு மனித ஆட்சியாளராலும் மக்களுடைய மிக முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்யவே முடியாது.—சங். 146:3, 4; வெளி. 12:12.

7. அரசாங்கங்களைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொய் மதத்தையும் வியாபார உலகத்தையும் சாத்தான் எப்படிப் பயன்படுத்துகிறான்? (ஆரம்பப் படம்)

7 பொய் மதத்தையும் வியாபார உலகத்தையும் பயன்படுத்தி, சாத்தானும் அவனுடைய பேய்களும் இந்த ‘உலகம் முழுவதையும்,’ அதாவது எல்லா மனிதர்களையும், ஏமாற்றுகிறார்கள். (வெளி. 12:9) பொய் மதத்தைப் பயன்படுத்தி யெகோவாவைப் பற்றிய பொய்களைச் சாத்தான் பரப்புகிறான்; அவருடைய பெயரை மறைப்பதற்குக்கூட முயற்சி செய்திருக்கிறான். (எரே. 23:26, 27) அதனால், சில நல்மனமுள்ள மக்கள்கூட ஏமாந்துவிடுகிறார்கள். கடவுளை வணங்குவதாக அவர்கள் நினைக்கிறார்கள்; ஆனால், உண்மையில் பேய்களைத்தான் வணங்குகிறார்கள். (1 கொ. 10:20; 2 கொ. 11:13-15) வியாபார உலகத்தைப் பயன்படுத்தியும் சாத்தான் பொய்களைப் பரப்புகிறான். உதாரணத்துக்கு, பணம் பொருள்தான் சந்தோஷத்தைத் தரும் என்று மக்களை நம்ப வைக்கிறான். (நீதி. 18:11) இதை நம்புகிறவர்கள் கடவுளை விட்டுவிட்டு ‘செல்வத்தை’ தேடுகிறார்கள். (மத். 6:24) ஒருகாலத்தில் அவர்கள் கடவுளை நேசித்திருந்தாலும், இப்போது பணம் பொருளை நேசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடவுள்மேல் இருக்கிற அன்பை இழந்துவிடுமளவுக்கு பொருளாசையில் மூழ்கிப்போயிருக்கிறார்கள்.—மத். 13:22; 1 யோ. 2:15, 16.

8, 9. (அ) ஆதாம் ஏவாளும் பொல்லாத தேவதூதர்களும் நடந்துகொண்ட விதத்திலிருந்து, நாம் கற்றுக்கொள்கிற இரண்டு முக்கியமான பாடங்கள் என்ன? (ஆ) இந்த உலகம் சாத்தானுடைய கைக்குள் இருக்கிறது என்பதைத் தெரிந்துவைத்திருப்பது ஏன் முக்கியம்?

8 ஆதாம் ஏவாள் மற்றும் அந்தப் பொல்லாத தேவதூதர்கள் நடந்துகொண்ட விதத்திலிருந்து, இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். முதல் பாடம்: யாராவது ஒருவர் பக்கம்தான் நம்மால் இருக்க முடியும். யெகோவாவின் பக்கம் இருக்கப்போகிறோமா, சாத்தானின் பக்கம் இருக்கப்போகிறோமா என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும். (மத். 7:13) இரண்டாவது பாடம்: சாத்தானோடு சேர்ந்துகொள்கிறவர்கள், தற்காலிக நன்மைகளைத்தான் அனுபவிப்பார்கள். உதாரணத்துக்கு, நன்மை எது தீமை எது என்பதை தாங்களாகவே தீர்மானிப்பதற்கான வாய்ப்பு ஆதாம் ஏவாளுக்குக் கிடைத்தது. மனித அரசாங்கங்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் பேய்களுக்குக் கிடைத்தது. (ஆதி. 3:22) பார்ப்பதற்கு இவையெல்லாம் நன்மைகள்போல் தெரிந்தாலும், விளைவுகள் எப்போதும் மோசமானவைதான்!—யோபு 21:7-17; கலா. 6:7, 8

9 இந்த உலகம் சாத்தானுடைய கைக்குள் இருக்கிறது என்பதைத் தெரிந்துவைத்திருக்கும்போதுதான், அரசாங்கங்களைப் பற்றிய சரியான கண்ணோட்டம் நமக்கு இருக்கும். அதோடு, நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கான உற்சாகமும் நமக்குக் கிடைக்கும். அரசாங்கங்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார் என்பது உண்மைதான். (1 பே. 2:17) அவருடைய தராதரங்கள் மீறப்படாதவரை, நாம் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். (ரோ. 13:1-4) அதேசமயம், நாம் நடுநிலைமையோடு இருக்க வேண்டுமென்றும், எந்த அரசியல் கட்சியையோ தலைவரையோ ஆதரிக்கக் கூடாதென்றும் நமக்குத் தெரியும். (யோவா. 17:15, 16; 18:36) யெகோவாவின் பெயரை மறைக்கவும் அவருடைய நற்பெயரைக் கெடுக்கவும் சாத்தான் முயற்சி செய்வதைப் பார்க்கும்போது, நம் கடவுளான யெகோவாவைப் பற்றிய உண்மைகளை எல்லாருக்கும் சொல்லித்தர வேண்டுமென்ற தூண்டுதல் நமக்குள் ஏற்படுகிறது, இல்லையா? அவருடைய பெயரைத் தாங்கியிருப்பதையும் அதைப் பயன்படுத்துவதையும் நாம் பெருமையாக நினைக்கிறோம். பணம் பொருளைவிட கடவுள்மேல் நமக்கிருக்கும் அன்புதான் ரொம்ப முக்கியம் என்பது நமக்குத் தெரியும்!—ஏசா. 43:10; 1 தீ. 6:6-10.

சாத்தான் எப்படி மனிதர்கள்மேல் செல்வாக்கு செலுத்துகிறான்?

10-12. (அ) தேவதூதர்களைத் தன்னுடைய தூண்டிலில் சிக்க வைப்பதற்காக சாத்தான் என்ன செய்தான்? (ஆ) அந்தத் தேவதூதர்களுடைய கெட்ட செயல்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

10 மற்றவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு சாத்தான் சில திறமையான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறான். தன்னுடைய விருப்பத்தைச் செய்ய வைப்பதற்காக, கவர்ச்சியான இரைகளைக் காட்டி மற்றவர்களைத் தன்னுடைய தூண்டிலில் சிக்க வைக்கிறான். வேறு சமயங்களில், நேரடியாகத் தாக்க முயற்சி செய்கிறான்.

11 நிறைய தேவதூதர்களை சாத்தான் எப்படித் தன்னுடைய தூண்டிலில் சிக்க வைத்தான் என்பதை யோசித்துப்பாருங்கள். எந்த இரையைப் போட்டால் அவர்கள் சிக்குவார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, அவர்களை ரொம்பக் காலமாக அவன் கண்காணித்திருக்கலாம். சில தூதர்கள் அவனுடைய தூண்டிலில் சிக்கி, பூமியிலிருந்த பெண்களோடு உடலுறவு வைத்துக்கொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் ராட்சதர்களாக இருந்தார்கள்; மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள். (ஆதி. 6:1-4) ஒழுக்கக்கேடு என்ற இரையைப் பயன்படுத்தி அந்தத் தூதர்களை அவன் சிக்க வைத்ததோடு, எல்லா மனிதர்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைத் தருவதாகவும் அவர்களிடம் வாக்குக் கொடுத்திருக்கலாம். இப்படி, ‘பெண்ணின் சந்ததியை’ பற்றி யெகோவா சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் தடங்கலை ஏற்படுத்த அவன் திட்டம் போட்டிருக்கலாம். (ஆதி. 3:15) ஆனால், பெருவெள்ளத்தைக் கொண்டு வந்ததன் மூலம் சாத்தான் மற்றும் பேய்களுடைய திட்டங்களை யெகோவா தவிடுபொடியாக்கினார்.

ஒழுக்கக்கேடு, பெருமை மற்றும் அமானுஷ்ய சக்திகள்மேல் இருக்கிற ஆர்வம் ஆகியவற்றை இரையாகப் பயன்படுத்த சாத்தான் முயற்சி செய்கிறான் (பாராக்கள் 12, 13)

12 இந்தச் சம்பவத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்? ஒழுக்கக்கேடும் பெருமையும் மிகவும் கவர்ச்சியான இரைகள் என்பதை நாம் மறக்கக் கூடாது. சாத்தானோடு சேர்ந்துகொண்ட தூதர்கள், யெகோவாவோடு பரலோகத்தில் பல வருஷங்களாக இருந்தவர்கள்! அப்படியிருந்தும், கெட்ட ஆசைகள் தங்களுக்குள் வேர்விட அவர்கள் அனுமதித்தார்கள். காலப்போக்கில், அந்த ஆசைகள் அவர்களுக்குள் இன்னும் அதிகமானது. இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நாம் எவ்வளவு காலம் யெகோவாவுக்குச் சேவை செய்திருந்தாலும் சரி, கெட்ட ஆசைகள் நமக்குள்ளும் வேர்விடலாம். (1 கொ. 10:12) அதனால்தான், நம்முடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்று நாம் எப்போதும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஒழுக்கங்கெட்ட எண்ணங்களோ பெருமையோ நமக்குள் இருப்பது தெரியவந்தால், அதை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும்.—கலா. 5:26; கொலோசெயர் 3:5-ஐ வாசியுங்கள்.

13. சாத்தான் பயன்படுத்தும் இன்னொரு இரை என்ன? அதில் சிக்காமலிருக்க நாம் என்ன செய்யலாம்?

13 அமானுஷ்ய சக்திகள்மேல் மக்களுடைய ஆர்வத்தைத் தூண்டுவதுதான், சாத்தான் பயன்படுத்தும் இன்னொரு இரை! இன்று, பொய் மதம் மற்றும் பொழுதுபோக்கின் மூலம் பேய்கள்மேல் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு சாத்தான் முயற்சி செய்கிறான். உதாரணத்துக்கு, திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ் மற்றும் வேறுசில பொழுதுபோக்குகள், ஆவிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சுவாரஸ்யமானதாகக் காட்டுகின்றன. இந்தத் தூண்டிலில் சிக்காமலிருக்க நாம் என்ன செய்யலாம்? எது நல்ல பொழுதுபோக்கு, எது கெட்ட பொழுதுபோக்கு என்பதற்கான பட்டியலைக் கடவுளுடைய அமைப்பு தர வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக, யெகோவாவுடைய நியமங்களின் அடிப்படையில் சரியான தீர்மானங்கள் எடுக்க நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிக்க வேண்டும். (எபி. 5:14) கடவுள்மேல் நமக்கிருக்கும் அன்பு “போலியாக” இருக்கக் கூடாது; அப்போதுதான், நாம் ஞானமான தீர்மானங்கள் எடுப்போம். (ரோ. 12:9) ஆனால், போலித்தனமாக நடந்துகொள்கிற ஒரு நபர், சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக இருப்பார். அதனால், பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘எந்த பைபிள் நியமங்கள கடைப்பிடிக்கணும்னு நான் மத்தவங்ககிட்ட சொல்றேனோ, அந்த நியமங்கள முதல்ல நான் கடைப்பிடிக்கிறேனா? நான் எந்த பொழுதுபோக்குல ஈடுபடறேங்குறத, என்னோட மறுசந்திப்புகளும் என்கூட பைபிள் படிக்கிறவங்களும் பார்த்தா என்னை பத்தி என்ன நினைப்பாங்க?’ எந்த பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று நாம் மற்றவர்களுக்குச் சொல்லித்தருகிறோமோ, அந்த நியமங்களை முதலில் நாம் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான், சாத்தானுடைய தூண்டிலில் அவ்வளவு எளிதில் சிக்கிவிட மாட்டோம்.—1 யோ. 3:18.

அரசாங்கத் தடைகள், கூடப்படிக்கிறவர்களிடமிருந்து வரும் அழுத்தங்கள், குடும்ப எதிர்ப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி சாத்தான் நம்மை நேரடியாகத் தாக்குகிறான் (பாரா 14)

14. சாத்தான் எப்படி நம்மை நேரடியாகத் தாக்கலாம், அவனை நாம் எப்படி எதிர்த்து நிற்கலாம்?

14 நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கக் கூடாது என்பதற்காக, சாத்தான் நம்மை நேரடியாகத் தாக்கவும் பயமுறுத்தவும் முயற்சி செய்கிறான். உதாரணத்துக்கு, நம்முடைய பிரசங்க வேலையைத் தடை செய்யும்படி அவன் அரசாங்கங்களைத் தூண்டலாம். பைபிள் நியமங்களின்படி நாம் நடக்கும்போது, நம்மைக் கேலி செய்யும்படி நம்மோடு வேலை செய்பவர்களையும் கூடப்படிப்பவர்களையும் அவன் தூண்டலாம். (1 பே. 4:4) அதுமட்டுமல்ல, சத்தியத்தில் இல்லாத நம் குடும்பத்தார், நாம் கூட்டங்களுக்குப் போவதை நல்ல உள்நோக்கத்தோடு தடுத்தாலும், அப்படிச் செய்வதற்கு சாத்தான் அவர்களைத் தூண்டலாம். (மத். 10:36) அவனுடைய தாக்குதல்களை நாம் எப்படி உறுதியோடு எதிர்த்து நிற்கலாம்? இதுபோன்ற தாக்குதல்கள் வரும்போது நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், சாத்தான் நமக்கு எதிராகப் போர் செய்கிறான் என்பது நமக்குத் தெரியும். (வெளி. 2:10; 12:17) அதோடு, சாத்தானுடைய தாக்குதல்களுக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. அதாவது, எல்லாம் சாதகமாக இருக்கும்போதுதான் நாம் யெகோவாவுக்குச் சேவை செய்வோம் என்றும், கஷ்டங்கள் வந்தால் அவரை விட்டுவிடுவோம் என்றும் அவன் சொல்கிறான். (யோபு 1:9-11; 2:4, 5) அவனுடைய தாக்குதல்களை எதிர்த்து நிற்பதற்குத் தேவையான பலத்தைத் தரும்படி நாம் யெகோவாவிடம் தொடர்ந்து கேட்க வேண்டும். அவர் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதை மனதில் வைக்க வேண்டும்.—எபி. 13:5.

சாத்தானால் என்ன செய்ய முடியாது?

15. நாம் செய்ய விரும்பாத ஒரு விஷயத்தைச் செய்யும்படி சாத்தானால் நம்மைக் கட்டாயப்படுத்த முடியுமா?

15 நாம் செய்ய விரும்பாத ஒரு விஷயத்தைச் செய்யும்படி சாத்தானால் நம்மைக் கட்டாயப்படுத்த முடியாது. (யாக். 1:14) இன்று நிறைய பேர், தாங்கள் சாத்தானின் பக்கம் இருப்பதை உணராமல் இருக்கிறார்கள். ஆனால், பைபிளிலிருக்கும் உண்மைகளைக் கற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கிறது. அதாவது, தாங்கள் யெகோவாவின் பக்கமா சாத்தானின் பக்கமா என்று தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கிறது. (அப். 3:17; 17:30) நாம் யெகோவாவின் பக்கம் இருப்பதற்குத் தீர்மானமாக இருக்கும்போது, சாத்தானால் நம்முடைய உண்மைத்தன்மையைக் கெடுத்துப்போட முடியாது.—யோபு 2:3; 27:5.

16, 17. (அ) சாத்தானாலும் பேய்களாலும் செய்ய முடியாத வேறுசில விஷயங்கள் என்ன? (ஆ) சத்தமாக ஜெபம் செய்வதற்கு நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை?

16 சாத்தானாலும் பேய்களாலும் செய்ய முடியாத வேறுசில விஷயங்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, நம் மனதிலும் இதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை அவர்களால் தெரிந்துகொள்ள முடியும் என்பதாக பைபிளில் எங்கேயும் சொல்லப்படவில்லை. யெகோவாவாலும் இயேசுவாலும் மட்டும்தான் அதைத் தெரிந்துகொள்ள முடியும். (1 சா. 16:7; மாற். 2:8) அப்படியென்றால், சத்தமாக ஜெபம் செய்வதற்கும் பேசுவதற்கும் நாம் பயப்பட வேண்டுமா? ஒருவேளை, நாம் என்ன பேசுகிறோம் என்பதைக் கேட்டுவிட்டு, சாத்தானும் பேய்களும் நமக்கு எதிராகச் செயல்படுவார்களோ என்று நாம் பயப்பட வேண்டுமா? அவசியமே இல்லை! இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: சாத்தான் நம்மைப் பார்த்துவிடுவான் என்பதற்காக, நாம் யெகோவாவுடைய சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபடாமல் இருக்கிறோமா? இல்லை! அப்படியென்றால், சாத்தான் கேட்டுவிடுவான் என்பதற்காக நாம் ஏன் சத்தமாக ஜெபம் செய்யாமல் இருக்க வேண்டும்? முன்பு வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள்கூட, நிறைய தடவை சத்தமாக ஜெபம் செய்திருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. தங்களுடைய ஜெபத்தை சாத்தான் கேட்டுவிடுவானோ என்று அவர்கள் பயந்ததாக எந்தப் பதிவும் இல்லை. (1 ரா. 8:22, 23; யோவா. 11:41, 42; அப். 4:23, 24) யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி பேசவும் நடந்துகொள்ளவும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது, அவருடைய பாதுகாப்பு நமக்கு இருக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். சாத்தானால் நமக்கு எந்த விதமான நிரந்தர பாதிப்பும் ஏற்படாதபடி அவர் பார்த்துக்கொள்வார்.சங்கீதம் 34:7-ஐ வாசியுங்கள்.

17 நம்முடைய எதிரியைப் பற்றி நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக, அவனைப் பார்த்து பயந்து நடுங்க வேண்டிய அவசியமில்லை. நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், யெகோவாவின் உதவியோடு சாத்தானை நம்மால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். (1 யோ. 2:14) நாம் அவனை எதிர்த்து நின்றால், அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான். (யாக். 4:7; 1 பே. 5:9) இன்று, சாத்தானுடைய குறி முக்கியமாக இளைஞர்கள்மீது இருக்கிறது. சாத்தானுடைய தாக்குதல்களை இளைஞர்கள் எப்படி எதிர்த்து நிற்கலாம்? அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 2 சில தேவதூதர்களுடைய பெயர்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. (நியா. 13:18; தானி. 8:16; லூக். 1:19; வெளி. 12:7) சொல்லப்போனால், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் யெகோவா பெயர் வைத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (சங். 147:4) சாத்தான் உட்பட எல்லா தேவதூதர்களுக்கும் யெகோவா பெயர் வைத்திருப்பார் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

^ பாரா. 3 சாத்தான் என்ற பட்டப்பெயர், பைபிளின் மூலப்பிரதியில், எபிரெய வேதாகமத்தில் 18 தடவையும் கிரேக்க வேதாகமத்தில் 30-க்கும் அதிகமான தடவையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.