Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய சட்டங்களும் நியமங்களும் உங்கள் மனசாட்சியைப் பயிற்றுவிக்கட்டும்!

கடவுளுடைய சட்டங்களும் நியமங்களும் உங்கள் மனசாட்சியைப் பயிற்றுவிக்கட்டும்!

“உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றி ஆழமாக யோசிக்கிறேன்.”—சங். 119:99.

பாடல்கள்: 61, 69

1. மிருகங்களிலிருந்து மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டும் ஒரு விஷயம் என்ன?

மனசாட்சி! மனிதர்களுக்கு யெகோவா கொடுத்த விசேஷமான பரிசு அது! மிருகங்களிலிருந்து மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டும் விஷயங்களில் இதுவும் ஒன்று! ஆதாம் ஏவாளுக்கு மனசாட்சி இருந்ததா? அதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால், மனசாட்சி உறுத்தியதால்தான், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது அவர்கள் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.

2. மனசாட்சி எப்படி ஒரு திசைமானியைப் போல் இருக்கிறது? (ஆரம்பப் படம்)

2 மனசாட்சி என்பது நமக்குள் இருக்கும் அறிவு என்று சொல்லலாம். எது சரி எது தவறு என்று அது நமக்குச் சொல்கிறது; நம் வாழ்க்கையை வழிநடத்துகிறது. சரியாகப் பயிற்றுவிக்கப்படாத மனசாட்சியுள்ள ஒருவரை, சரியாக வேலை செய்யாத திசைமானியுள்ள ஒரு கப்பலுக்கு ஒப்பிடலாம். திசைமானி சரியாக இல்லையென்றால், சூறாவளியும் பேரலைகளும் தாக்கும்போது, அந்தக் கப்பல் வழிதவறிப் போய்விட வாய்ப்பிருக்கிறது. ஆனால், திசைமானி நன்றாக வேலை செய்யும்போது, மாலுமியால் கப்பலைச் சரியான வழியில் கொண்டுபோக முடியும். அதேபோல், மனசாட்சியை நாம் சரியாகப் பயிற்றுவித்திருந்தால், அது நம்மைச் சரியான பாதையில் வழிநடத்தும்.

3. மனசாட்சியைச் சரியாகப் பயிற்றுவிக்கவில்லையென்றால் என்ன ஆகும்?

3 நம் மனசாட்சி சரியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், நாம் தவறான காரியங்களைச் செய்யும்போது, அது நம்மை எச்சரிக்காது. (1 தீ. 4:1, 2) அதோடு, “கெட்டதை நல்லது” என்றுகூட நம்பவைத்துவிடும். (ஏசா. 5:20) “உங்களைக் கொலை செய்கிறவர்கள் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வதாக நினைத்துக்கொள்கிற காலம் வரும்” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (யோவா. 16:2) சீஷராகிய ஸ்தேவானைக் கொலை செய்தவர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். (அப். 6:8, 12; 7:54-60) இத்தனை காலமாக, எத்தனையோ மதவாதிகள், கொலை உட்பட மிக மோசமான குற்றங்களைச் செய்திருக்கிறார்கள்; அது கடவுளுக்குச் செய்யும் சேவை என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், கடவுளுடைய சட்டங்களுக்கு எதிராகத்தான் அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். (யாத். 20:13) அவர்களுடைய மனசாட்சி அவர்களைச் சரியாக வழிநடத்தவில்லை என்பதில் சந்தேகமே இல்லை.

4. நம்முடைய மனசாட்சி சரியாக வேலை செய்கிறதா என்பதை நாம் எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?

4 நம்முடைய மனசாட்சி சரியாக வேலை செய்கிறதா என்று நாம் எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்? பைபிளில் இருக்கிற சட்டங்களும் நியமங்களும், “கற்றுக்கொடுப்பதற்கும், கண்டிப்பதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.” (2 தீ. 3:16) அதனால், தவறாமல் நாம் பைபிளைப் படிக்க வேண்டும், படித்ததை ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். பிறகு, என்ன கற்றுக்கொண்டோமோ அதன்படி செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது, யெகோவாவின் யோசனைகளை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிக்க முடியும். அப்போது, அது நமக்குச் சரியான வழிகாட்டியாக இருக்கும் என்பதில் நிச்சயமாக இருக்கலாம். நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிக்க, யெகோவாவுடைய சட்டங்களையும் நியமங்களையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.

கடவுளுடைய சட்டங்கள் உங்களைப் பயிற்றுவிக்கட்டும்

5, 6. கடவுளுடைய சட்டங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன?

5 கடவுளுடைய சட்டங்கள் நமக்கு உதவ வேண்டுமென்றால், அவற்றை வெறுமனே படித்தாலோ அவற்றைத் தெரிந்துவைத்திருந்தாலோ மட்டும் போதாது. அவற்றை நாம் நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும். “கெட்டதை வெறுத்துவிடுங்கள், நல்லதை நேசியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ஆமோ. 5:15) இதை எப்படிச் செய்வது? யெகோவா ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறாரோ அதேபோல் நாமும் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: உங்களுக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை என்று வைத்துக்கொள்வோம். அதற்காக டாக்டரிடம் போகிறீர்கள். நீங்கள் சத்தான உணவைச் சாப்பிட வேண்டுமென்றும், இன்னும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றும், வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றும் அவர் சொல்கிறார். நீங்களும் அதன்படி செய்கிறீர்கள். அப்போது நல்ல பலன்கள் கிடைக்கின்றன. இப்போது அந்த டாக்டரின் அறிவுரையைப் பற்றி நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

6 அதேபோல், பாவத்தால் வரும் மோசமான விளைவுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் கடவுள் நமக்குச் சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, பொய் சொல்வதை... ஏமாற்றுவதை... ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதை... வன்முறையில் இறங்குவதை... அல்லது பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவதை... தவிர்க்க வேண்டுமென்று பைபிள் கற்பிக்கிறது. (நீதிமொழிகள் 6:16-19-ஐ வாசியுங்கள்; வெளி. 21:8) பைபிள் கற்பிக்கிறபடி நடந்துகொள்ளும்போது, அதாவது யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது, நமக்கு அருமையான பலன்கள் கிடைக்கின்றன. அந்தப் பலன்களை அனுபவிக்கும்போது, அவர்மீதும் அவருடைய சட்டங்கள்மீதும் நமக்கு அன்பு அதிகமாகிறது.

7. பைபிள் பதிவுகள் நமக்கு எப்படி உதவும்?

7 கடவுளுடைய சட்டங்களை மீறுவதால் ஏற்படுகிற மோசமான விளைவுகளை அனுபவித்த பிறகுதான், சரி எது தவறு எது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமா? இல்லவே இல்லை. கடந்த காலத்தில் தவறு செய்தவர்களுடைய அனுபவங்களிலிருந்தே நாம் அதைக் கற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய அனுபவங்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. “ஞானமுள்ளவர்கள் காதுகொடுத்துக் கேட்டு, நிறைய அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார்கள்” என்று நீதிமொழிகள் 1:5 சொல்கிறது. கடவுளிடமிருந்து வரும் இந்த அறிவுரை எவ்வளவு அருமையானது, இல்லையா? இப்போது, தாவீதின் உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதாலும், பத்சேபாளுடன் விபச்சாரம் செய்ததாலும் அவர் எவ்வளவு துயரங்களை அனுபவித்தார்! (2 சா. 12:7-14) இந்தப் பதிவை வாசிக்கும்போது, உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த எல்லா பிரச்சினைகளையும் தாவீது எப்படி தவிர்த்திருக்கலாம்? அந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தா, நான் என்ன செய்வேன்? தாவீது மாதிரி நடந்துக்குவேனா, இல்ல யோசேப்பு மாதிரி நடந்துக்குவேனா?’ (ஆதி. 39:11-15) பாவத்தால் வரும் பயங்கர விளைவுகளைப் பற்றி யோசித்துப்பார்த்தால், நம்மால் “கெட்டதை” இன்னுமதிகமாக ‘வெறுக்க முடியும்.’

8, 9. (அ) என்ன செய்ய நம்முடைய மனசாட்சி நமக்கு உதவும்? (ஆ) நம்முடைய மனசாட்சியும் பைபிள் நியமங்களும் எப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கிறது?

8 கடவுள் என்னென்ன காரியங்களை வெறுக்கிறாரோ, அந்தக் காரியங்களை நாமும் வெறுக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பதற்கு எந்தச் சட்டமும் இல்லையென்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வது? நாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புவார்? நம்முடைய மனசாட்சி பைபிளால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் நாம் ஞானமான தீர்மானங்களை எடுப்போம்.

9 யெகோவா நம்மை நேசிக்கிறார்; அதனால்தான் நம்முடைய மனசாட்சியை வழிநடத்துவதற்காக நியமங்களைக் கொடுத்திருக்கிறார். “யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன்” என்று அவர் சொல்கிறார். (ஏசா. 48:17, 18) பைபிள் நியமங்களை ஆழமாக யோசித்து, அவை சரியானவை என்பதை நாம் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம்முடைய மனசாட்சியைச் சரிசெய்யவும், வழிநடத்தவும் முடியும்; ஞானமான தீர்மானங்களையும் எடுக்க முடியும்.

கடவுளுடைய நியமங்கள் உங்களை வழிநடத்தட்டும்!

10. நியமங்கள் என்றால் என்ன, இயேசு எப்படி நியமங்களைப் பயன்படுத்திக் கற்றுக்கொடுத்தார்?

10 நியமங்கள் என்றால் அடிப்படை உண்மைகள் என்று அர்த்தம். நம் யோசனைகளை வழிநடத்தவும், நல்ல தீர்மானங்களை எடுக்கவும் அவை நமக்கு உதவுகின்றன. யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதையும், குறிப்பிட்ட சில சட்டங்களை அவர் ஏன் கொடுத்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள அவருடைய நியமங்கள் உதவுகின்றன. ஒருவருடைய மனப்பான்மைக்கும் செயலுக்கும் தகுந்த விளைவுகள் இருக்கும் என்பதைத் தன்னுடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுக்க இயேசு நியமங்களைப் பயன்படுத்தினார். உதாரணத்துக்கு, கோபம் வன்முறையிலும், ஒழுக்கங்கெட்ட எண்ணங்கள் முறைகேடான உறவிலும் கொண்டுபோய் விட்டுவிடலாம் என்று இயேசு சொன்னார். (மத். 5:21, 22, 27, 28) யெகோவாவின் நியமங்கள் நம்மை வழிநடத்த இடம்கொடுக்கும்போது, நம்முடைய மனசாட்சி நன்றாகப் பயிற்றுவிக்கப்படும். அதோடு, கடவுளை மகிமைப்படுத்தும் விதத்தில் நாம் தீர்மானங்களை எடுப்போம்.—1 கொ. 10:31.

முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவர் மற்றவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்புக் கொடுப்பார் (பாராக்கள் 11, 12)

11. ஒவ்வொருவருடைய மனசாட்சியும் எப்படி வேறுபடலாம்?

11 கிறிஸ்தவர்களாகிய நாம், பைபிளைப் பயன்படுத்தி நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவித்தாலும், குறிப்பிட்ட ஒரு விஷயத்தில், ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒவ்வொரு தீர்மானம் எடுக்கலாம். உதாரணத்துக்கு, மதுபானம் அருந்தும் விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம். மதுபானம் அருந்துவது தவறு என்று பைபிள் சொல்லவில்லை. ஆனால், போதை தலைக்கேறுமளவுக்குக் குடிக்கக் கூடாது என்று நம்மை எச்சரிக்கிறது. (நீதி. 20:1; 1 தீ. 3:8) ஒருவருக்கு அளவாகக் குடிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதற்காக, வேறு எந்த விஷயத்தையும் அவர் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று அர்த்தமா? இல்லை. அளவாகக் குடிப்பதில் தவறில்லை என்று அவருடைய மனசாட்சி சொன்னாலும், மற்றவர்களுடைய மனசாட்சியையும் அவர் மதிக்க வேண்டும்.

12. மற்றவர்களுடைய மனசாட்சியை மதிப்பதற்கு ரோமர் 14:21 நமக்கு எப்படி உதவுகிறது?

12 “இறைச்சி சாப்பிடுவதோ திராட்சமது குடிப்பதோ வேறெதாவது செய்வதோ உங்கள் சகோதரனுடைய விசுவாசத்தைப் பலவீனமாக்கினால், அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று பவுல் எழுதினார். (ரோ. 14:21) இதன் மூலம், மற்றவர்களுடைய மனசாட்சியையும் நாம் மதிக்க வேண்டும் என்பதை பவுல் காட்டினார். அதனால், குடிப்பதற்கு நமக்கு உரிமை இருந்தாலும், அது இன்னொருவருடைய மனசாட்சியை உறுத்துமா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி உறுத்தினால், நம் உரிமையை விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை, சத்தியத்துக்கு வருவதற்கு முன்பு ஒரு சகோதரர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்திருக்கலாம். சத்தியத்துக்கு வந்த பின்பு, அறவே குடிக்கக் கூடாதென்று அவர் முடிவெடுத்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒருவர் திரும்பவும் அந்தப் பழக்கத்தில் விழுந்துவிடுவதற்கு நாம் எந்த விதத்திலும் காரணமாகிவிடக் கூடாது. (1 கொ. 6:9, 10) அவர் நம்முடைய வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கும்போது, அவர் வேண்டாம் என்று சொல்லியும் அவரைக் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவோமா? கண்டிப்பாக அப்படிச் செய்ய மாட்டோம்.

13. மற்றவர்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தீமோத்தேயு எப்படி அவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்புக் கொடுத்தார்?

13 விருத்தசேதனம் செய்வதை யூதர்கள் முக்கியமானதாக நினைத்தார்கள். தீமோத்தேயு அவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டியிருந்ததால், தன்னுடைய இளவயதில் விருத்தசேதனம் செய்துகொண்டார். தனக்கு ரொம்ப வலியெடுக்கும் என்று தெரிந்தும் அவர் அதற்கு ஒத்துக்கொண்டார். பவுலைப் போலவே தீமோத்தேயுவும் யாருடைய மனசாட்சியையும் புண்படுத்த விரும்பவில்லை. (அப். 16:3; 1 கொ. 9:19-23) நீங்களும் மற்றவர்களுக்கு உதவுவதற்காக சில விஷயங்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா?

‘முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுங்கள்’

14, 15. (அ) நாம் எப்படி முதிர்ச்சியானவர்களாக ஆகலாம்? (ஆ) முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் மற்றவர்களை எப்படி நடத்துவார்கள்?

14 ‘கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை போதனைகளோடு’ நின்றுவிடாமல், நாம் “முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும்.” (எபி. 6:1, 2) சத்தியத்தில் நிறைய வருஷங்கள் இருக்கிறோம் என்பதற்காக நாம் முதிர்ச்சியானவர்கள் என்று சொல்ல முடியாது. முதிர்ச்சியானவர்களாக ஆவதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும்! அறிவிலும் புரிந்துகொள்ளுதலிலும் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதற்கு, பைபிளைத் தவறாமல் ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும். (சங். 1:1-3) அப்படிப் படிக்கும்போது, யெகோவாவுடைய சட்டங்களையும் நியமங்களையும் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

15 கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிக முக்கியமான சட்டம் எது? அதுதான் அன்பைப் பற்றிய சட்டம்! “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். (யோவா. 13:35) அன்பை ‘ராஜ சட்டம்’ என்றும், அன்பு “திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது” என்றும் பைபிள் சொல்கிறது. (யாக். 2:8; ரோ. 13:10) அன்பு மிக முக்கியமானது என்று சொல்லப்பட்டிருப்பதை நினைத்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 4:8) ஆனால், கடவுளைப் பொறுத்தவரையில், அன்பு என்பது வெறுமனே ஒரு உணர்வு அல்ல. தன்னுடைய செயல்கள் மூலமாக அவர் அதை நிரூபித்துக் காட்டுகிறார். “தன்னுடைய ஒரே மகன் மூலம் நமக்கு வாழ்வு கிடைப்பதற்காகக் கடவுள் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினார்; இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது” என்று யோவான் எழுதினார். (1 யோ. 4:9) யெகோவாமீதும் இயேசுமீதும் நம் சகோதரர்கள்மீதும் மற்ற மக்கள்மீதும் அன்பு காட்டும்போது, நாம் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் என்று நிரூபிப்போம்.—மத். 22:37-39.

கடவுளுடைய நியமங்களின்படி யோசிக்கும்போது நம்முடைய மனசாட்சி இன்னும் நம்பகமானதாக ஆகும் (பாரா 16)

16. நாம் முதிர்ச்சியை நோக்கி முன்னேற முன்னேற, நியமங்களின் மீது நமக்கு இருக்கிற மதிப்பு அதிகமாகும் என்று எப்படிச் சொல்லலாம்?

16 நாம் முதிர்ச்சியை நோக்கி முன்னேற முன்னேற, நியமங்களின் மீது நமக்கு இருக்கும் மதிப்பு அதிகமாகிக்கொண்டே போகும். சட்டங்கள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குப் பொருந்தும்; ஆனால், நியமங்களோ வித்தியாசமான நிறைய சூழ்நிலைகளுக்குப் பொருந்தும். உதாரணத்துக்கு, கெட்டவர்களோடு நட்பு வைத்துக்கொள்வது எவ்வளவு ஆபத்தானது என்று சின்னப் பிள்ளைகளுக்குப் புரியாமல் இருக்கலாம். அதனால், அவர்களைப் பாதுகாக்க பெற்றோர்கள் சில சட்டங்களைப் போட வேண்டியிருக்கலாம். (1 கொ. 15:33) ஆனால், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது, பைபிள் வசனங்களின் அடிப்படையில் யோசிக்கக் கற்றுக்கொள்வார்கள். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த நியமங்கள் அவர்களுக்கு உதவும். (1 கொரிந்தியர் 13:11-ஐயும், 14:20-ஐயும் வாசியுங்கள்.) பைபிளின் அடிப்படையில் யோசிக்க நாம் எந்தளவுக்குக் கற்றுக்கொள்கிறோமோ, அந்தளவுக்கு நம் மனசாட்சி நம்பகமானதாக ஆகும். குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புவார் என்பதையும் நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வோம்.

17. ஞானமான தீர்மானங்கள் எடுப்பதற்குத் தேவையான எல்லா உதவிகளும் நமக்கு இருக்கின்றன என்று எப்படிச் சொல்லலாம்?

17 யெகோவாவுக்குப் பிடித்த தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான எல்லா உதவிகளும் நமக்கு இருக்கின்றன. “எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு எல்லா திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும் பெற்றவர்களாக” இருப்பதற்குத் தேவையான சட்டங்களும் நியமங்களும் பைபிளில் இருக்கின்றன. (2 தீ. 3:16, 17) யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள பைபிள் நியமங்கள் நமக்கு உதவுகின்றன. ஆனால், அந்த நியமங்களைக் கண்டுபிடிக்க நம் பங்கில் முயற்சி தேவைப்படுகிறது. (எபே. 5:17) நம்முடைய உதவிக்கு, உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ், யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு, உவாட்ச்டவர் லைப்ரரி, உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி, JW லைப்ரரி அப்ளிகேஷன் போன்றவை இருக்கின்றன. இவற்றையெல்லாம் பயன்படுத்தினால், நம்முடைய தனிப்பட்ட படிப்பிலிருந்தும் குடும்ப வழிபாட்டிலிருந்தும் நாம் பிரயோஜனமடையலாம்.

பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி ஆசீர்வாதங்களை அள்ளித் தருகிறது

18. யெகோவாவின் சட்டங்கள் மற்றும் நியமங்களின்படி நடந்துகொள்ளும்போது என்ன பலன்கள் கிடைக்கும்?

18 யெகோவாவின் சட்டங்களையும் நியமங்களையும் நேசிக்கும்போது, நம் வாழ்க்கைத் தரம் உயரும். “உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்! நாளெல்லாம் அதைப் பற்றியே ஆழமாக யோசிக்கிறேன். உங்கள் கட்டளைகளை எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன். அதனால், என்னுடைய எதிரிகளைவிட ஞானமாக நடந்துகொள்கிறேன். உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றி ஆழமாக யோசிக்கிறேன். அதனால், என்னுடைய எல்லா போதகர்களையும்விட விவேகமாக நடந்துகொள்கிறேன். உங்களுடைய ஆணைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். அதனால், பெரியவர்களைவிட புத்தியோடு நடந்துகொள்கிறேன்” என்று சங்கீதம் 119:97-100 சொல்கிறது. நேரமெடுத்து கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் பற்றி ஆழமாக யோசிக்கும்போது, நாம் இன்னும் ஞானத்தோடும் புரிந்துகொள்ளுதலோடும் நடந்துகொள்வோம். நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிப்பதற்குக் கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் பயன்படுத்தும்போது, ‘கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு முழு வளர்ச்சி அடைவோம்.’—எபே. 4:13.