Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘எல்லா விதமான மக்களுக்கும்’ கரிசனை காட்டுங்கள்

‘எல்லா விதமான மக்களுக்கும்’ கரிசனை காட்டுங்கள்

நல்ல செய்தியைப் பிரசங்கிக்க இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது, அவர்கள் சொல்வதை எல்லா சமயத்திலும் மக்கள் கேட்பார்கள் என எதிர்பார்க்கக் கூடாது என்று எச்சரித்தார். (லூக். 10:3, 5, 6) நம்முடைய ஊழியத்திலும் இதுதான் உண்மை. நாம் ஊழியம் செய்யும்போது, சில ஆட்கள் நம்மிடம் ரொம்பக் கோபப்படலாம். அல்லது, முரட்டுத்தனமாகக்கூட நடந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், கரிசனை காட்டுவதும் அவர்களுக்குத் தொடர்ந்து பிரசங்கிப்பதும் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்.

கரிசனையுள்ள ஒரு நபர், மற்றவர்களுடைய தேவைகளையும் பிரச்சினைகளையும் புரிந்துகொள்வார்; அவர்களுக்காகப் பரிதாபப்படுவார். அதோடு, அவர்களுக்கு உதவ வேண்டுமென்றும் ஆசைப்படுவார். அப்படியென்றால், ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் நாம் கரிசனை காட்டவில்லை என்றால் என்ன ஆகும்? நம்முடைய பக்திவைராக்கியத்தை நாம் இழந்துவிடுவோம். அதாவது, அவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டுமென்ற ஆர்வம் நமக்குக் குறைந்துவிடும்; அதனால் அவர்களுக்கு நம்மால் உதவ முடியாமல் போய்விடும். நம்முடைய ஆர்வத்தை, கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்கு ஒப்பிடலாம். அது தொடர்ந்து எரிய வேண்டுமென்றால் விறகுகள் தேவை. அதேபோல, ஊழியத்தில் நம்முடைய ஆர்வம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால், கரிசனை என்ற குணம் நமக்குத் தேவை.—1 தெ. 5:19.

கஷ்டமான சூழ்நிலையிலும் கரிசனை காட்ட நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? இப்போது, மூன்று முன்மாதிரிகளைப் பற்றிப் பார்க்கலாம். அவர்கள்: யெகோவா, இயேசு மற்றும் அப்போஸ்தலன் பவுல்.

யெகோவாவைப் போல கரிசனை காட்டுங்கள்

ஆயிரக்கணக்கான வருஷங்களாக, யெகோவாவைப் பற்றிய மோசமான பொய்களை மக்கள் பரப்பியிருக்கிறார்கள். இருந்தாலும், ‘நன்றிகெட்டவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் [யெகோவா] கருணை காட்டுகிறார்.’ (லூக். 6:35) எப்படி? அவர் எல்லாரிடமும் பொறுமையாக இருக்கிறார். ஏனென்றால், “எல்லா விதமான மக்களும்” மீட்புப் பெற வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். (1 தீ. 2:3, 4) கெட்ட விஷயங்களை யெகோவா வெறுக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், மக்களை ரொம்பவே மதிப்புள்ளவர்களாகப் பார்க்கிறார்; ஒருவர்கூட அழிந்துபோகக் கூடாது என்று அவர் விரும்புகிறார்.—2 பே. 3:9.

பொய்களை மக்கள் நம்பும்படி செய்வதில் சாத்தான் படுகில்லாடி என்பது யெகோவாவுக்குத் தெரியும். (2 கொ. 4:3, 4) நிறைய பேருக்கு, சின்ன வயதிலிருந்தே கடவுளைப் பற்றிய பொய்கள்தான் கற்றுத்தரப்படுகின்றன. அதனால், அவர்கள் யோசிக்கும் விதமும் அவர்களுடைய உணர்வுகளும், சத்தியத்தை ஏற்றுக்கொள்ள ஒரு தடையாக இருக்கலாம். இருந்தாலும், யெகோவா அவர்களுக்கு உதவ ஆவலாக இருக்கிறார். இது நமக்கு எப்படித் தெரியும்?

நினிவே மாநகரத்தில் இருந்த மக்களைப் பற்றி யெகோவா எப்படி உணர்ந்தார் என்று இப்போது பார்க்கலாம். அங்கிருந்த மக்கள் கொடூரமானவர்களாக இருந்தபோதிலும் அவர் யோனாவிடம் இப்படிச் சொன்னார்: “நல்லது கெட்டது தெரியாத 1,20,000-க்கும் அதிகமான மனுஷர்களும் கணக்குவழக்கில்லாத மிருகங்களும் வாழ்கிற நினிவே மாநகரத்துக்காக நான் வருத்தப்படாமல் இருப்பேனா?” (யோனா 4:11) தன்னைப் பற்றித் தெரியாத அந்த ஜனங்களை நினைத்து யெகோவாவுடைய மனம் உருகியது. அதனால்தான், அவர்களை எச்சரிப்பதற்காக யோனாவை அனுப்பினார்.

மக்களைப் பற்றி யெகோவா உணருவதுபோலவே நாமும் உணருகிறோம். அவர்கள் ரொம்பவே மதிப்புள்ளவர்கள்! அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாததுபோல தெரிந்தாலும், யெகோவாவைப் போலவே, மக்களுக்கு அவரைப் பற்றிக் கற்றுத்தர நாமும் ஆர்வமாக இருக்கிறோம்.

இயேசுவைப் போல கரிசனை காட்டுங்கள்

இயேசுவும் தன்னுடைய தகப்பனைப் போலவே மக்களுக்காக மனம் உருகினார். ஏனென்றால், அவர்கள் “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் . . . கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்.” (மத். 9:36) அவர்கள் அப்படி இருந்ததற்கு என்ன காரணம் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. மதத்தலைவர்களால் அவர்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள்; பொய்கள்தான் அவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன. தான் சொன்ன செய்தியைக் கேட்ட நிறைய பேர் தன்னுடைய சீஷர்களாக ஆக மாட்டார்கள் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தும், தொடர்ந்து அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தந்தார்.—மாற். 4:1-9.

உங்கள் செய்தியை ஆரம்பத்தில் யாராவது கேட்கவில்லை என்றால் சோர்ந்துபோகாதீர்கள்

சூழ்நிலைகள் மாறும்போது சத்தியத்தைப் பற்றிய அபிப்பிராயமும் மாறலாம்

நாம் சொல்லும் செய்தியை மக்கள் கேட்காதபோது, அதற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, பைபிளைப் பற்றிய தவறான அபிப்பிராயம் அவர்களுக்கு இருக்கலாம். அல்லது, கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு கெட்ட விஷயங்களைச் செய்பவர்களை அவர்கள் பார்த்திருக்கலாம். வேறுசிலர், நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றிய பொய்யான தகவல்களைக் கேள்விப்பட்டிருக்கலாம். இன்னும் சிலர், யெகோவாவின் சாட்சிகளோடு பேசினால், சொந்தக்காரர்களோ அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோ தங்களைக் கேலி செய்வார்கள் என்று நினைத்து பயப்படலாம்.

வாழ்க்கையில் ஏற்பட்ட சில மோசமான சம்பவங்களால் சிலர் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கலாம். கிம் என்ற மிஷனரி சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நாங்க ஊழியம் செய்ற ஒரு இடத்துல, போர்னால பாதிக்கப்பட்ட நிறைய பேர் இருந்தாங்க. அவங்ககிட்ட இருந்த எல்லாமே பறிபோயிடுச்சு. அதனால, எதிர்காலத்த பத்தி அவங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்ல. அவங்க ரொம்ப நொந்துபோய் இருந்தாங்க. யார்மேலயும் அவங்களுக்கு நம்பிக்கை இல்ல. அங்க ஊழியம் செய்றப்போ எங்களுக்கு எதிர்ப்புதான் வந்துச்சு. ஒரு சமயம், என்னை தாக்கவும் செஞ்சாங்க.”

மக்கள் தன்னை மோசமாக நடத்தியபோதும் கிம் எப்படி கரிசனையோடு நடந்துகொண்டார்? நீதிமொழிகள் 19:11-ன்படி செய்ய அவர் எப்போதுமே முயற்சி செய்கிறார். “விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும்” என்று அது சொல்கிறது. தான் ஊழியம் செய்யும் பகுதியில் இருக்கும் மக்கள் எந்தளவு கஷ்டத்தை அனுபவித்திருப்பார்கள் என்பதை அவர் யோசித்துப்பார்க்கிறார். அவர்கள்மீது கரிசனை காட்ட அது அவருக்கு உதவுகிறது. சொல்லப்போனால், அந்தப் பகுதியில் இருக்கும் எல்லாருமே அவரை எதிர்ப்பதில்லை. சில நல்ல மறுசந்திப்புகளும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.

நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘ஊழியத்துல பார்க்குற ஜனங்களோட இடத்துல நான் இருந்திருந்தா, யெகோவாவின் சாட்சிகள் வந்து என்கிட்ட பேசுனப்போ நான் என்ன செஞ்சிருப்பேன்?’ ஒருவேளை, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய பொய்களை நாம் கேள்விப்பட்டிருந்தால் நாமும் அவர்களிடம் கோபமாகப் பேசியிருப்போம் அல்லது அவர்களை எதிர்த்திருப்போம்; சாட்சிகள் நம்மை கரிசனையோடு நடத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்த்திருப்போம். நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அதேபோல நாமும் மற்றவர்களை நடத்த வேண்டுமென்று இயேசு சொல்லியிருக்கிறார். அதனால், மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்; பொறுமையாக இருக்க வேண்டும். அப்படிச் செய்வது நமக்குக் கஷ்டமாக இருந்தாலும் அதைச் செய்ய வேண்டும்.—மத். 7:12.

பவுலைப் போல கரிசனை காட்டுங்கள்

தன்னை அடித்துத் துன்புறுத்திய ஆட்களிடமும் பவுல் கரிசனையோடு நடந்துகொண்டார். ஏனென்றால், தானும் முன்பு அப்படி நடந்துகொண்டது அவருக்குத் தெரியும். “முன்பு நான் துன்புறுத்துகிறவனாகவும், கடவுளை நிந்திக்கிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன். ஆனாலும், அறியாமையின் காரணமாக நான் விசுவாசமில்லாமல் நடந்துகொண்டதால் அவர் என்மேல் இரக்கம் காட்டினார்” என்று அவர் சொன்னார். (1 தீ. 1:13) யெகோவாவும் இயேசுவும் தனக்கு எந்தளவு இரக்கம் காட்டியிருக்கிறார்கள் என்பது பவுலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவருடைய ஊழியத்தைத் தடுக்க நினைத்தவர்களுடைய உணர்வுகளை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஏனென்றால், அவரும் ஒருகாலத்தில் அவர்களைப் போலத்தான் இருந்தார்.

பொய் போதனைகளில் ஊறிப்போயிருந்த ஆட்களையும் பவுல் சந்தித்தார். அப்போது அவர் எப்படி உணர்ந்தார்? ஒருசமயம், அவர் அத்தேனே நகரத்தில் இருந்தபோது, “அந்த நகரம் முழுவதும் சிலைகள் இருந்ததைப் பார்த்து எரிச்சலடைந்தார்” என்று அப்போஸ்தலர் 17:16 சொல்கிறது. இருந்தாலும், தனக்கு எரிச்சலூட்டிய விஷயத்தை வைத்தே அவர் அந்த மக்களுக்குக் கற்பித்தார். (அப். 17:22, 23) ஊழியம் செய்யும் விதத்தை ஆட்களுக்குத் தகுந்தபடி அவர் மாற்றிக்கொண்டார். “எப்படியாவது சிலரை மீட்புக்கு வழிநடத்த வேண்டும்” என்பதற்காக, வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த ஆட்களிடம் பேச வெவ்வேறு விதமான முறைகளைப் பயன்படுத்தினார்.—1 கொ. 9:20-23.

நம்மை எதிர்ப்பவர்களிடமோ தவறான நம்பிக்கைகள் வைத்திருப்பவர்களிடமோ பேசும்போது, நாம் பவுலைப் பின்பற்றலாம். அவர்களைப் பற்றி நமக்குத் தெரிந்த விஷயங்களை வைத்தே, “விடிவுகாலம் வரப்போகிறது” என்ற நல்ல செய்தியை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். (ஏசா. 52:7) டாரத்தி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நாங்க ஊழியம் செய்ற இடத்துல இருக்குற ஜனங்க, கடவுள் ரொம்ப கொடுமைக்காரர்னும் தப்பு செய்றவங்கள தண்டிக்கிறவர்னும் நம்புறாங்க. அவங்ககிட்ட பேசுறப்போ, கடவுள்மேல அவங்களுக்கு இருக்குற நம்பிக்கைக்காக முதல்ல அவங்கள பாராட்டுவேன். அப்புறம், யெகோவாவோட அருமையான குணங்களயும் எதிர்காலத்த பத்தி அவர் கொடுத்திருக்குற வாக்குறுதிகளயும் பைபிள்ல இருந்து காட்டுவேன்.”

“தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்”

முடிவு நெருங்க நெருங்க, மக்களுடைய மனநிலை ‘மேலும் மேலும் மோசமாகும்’ என்று நாம் எதிர்பார்க்கலாம். (2 தீ. 3:1, 13) இருந்தாலும், கரிசனை காட்டுவதை நிறுத்திவிடவும் கூடாது; அவர்களுடைய செயலால் நம்முடைய சந்தோஷத்தை இழந்துவிடவும் கூடாது. ‘தீமையை எப்போதும் நன்மையால் வெல்வதற்கு’ தேவையான பலத்தை யெகோவா நமக்குக் கொடுப்பார். (ரோ. 12:21) நம்மையும் நம்முடைய செய்தியையும் கேலி செய்கிற தலைக்கனமுள்ள ஆட்களை ஊழியத்தில் அடிக்கடி சந்திப்பதாக ஜெசிக்கா என்ற பயனியர் சகோதரி சொல்கிறார். “அந்த மாதிரி சமயங்கள்ல எனக்கு ரொம்ப எரிச்சல் வரும். அப்போ நான் உடனே மனசுக்குள்ள ஜெபம் செய்வேன். ‘இந்த நபர நீங்க பார்க்குற மாதிரி பார்க்குறதுக்கு உதவி செய்யுங்க’னு யெகோவாகிட்ட கேட்பேன்” என்று அவர் சொல்கிறார். இப்படிச் செய்வது, தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதைப் பற்றி யோசிக்கவும் ஜெசிக்காவுக்கு உதவியிருக்கிறது.

சத்தியத்துக்காக ஏங்குகிறவர்களைக் கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம்

சிலர் காலப்போக்கில் நம் உதவியை ஏற்றுக்கொண்டு, சத்தியத்தைக் கற்றுக்கொள்வார்கள்

நம்மோடு ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகளையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டும். ஜெசிக்கா இப்படிச் சொல்கிறார்: “யாருக்காவது இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டுச்சுனா, அத பத்தியே பேசிட்டு இருக்காம, உற்சாகமான விஷயங்கள பத்தி பேசுவேன். உதாரணத்துக்கு, சிலர் நம்மள எதிர்த்தாலும், ஊழியம் செய்றதுனால கிடைக்கிற நன்மைகள பத்தி பேசுவேன்.”

ஊழியம் செய்வது சிலசமயங்களில் நமக்குக் கஷ்டமாக இருக்கும் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், அவரைப் போலவே நாமும் இரக்கத்தைக் காட்டும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். (லூக். 6:36) ஆனால், மக்களிடம் அவர் எப்போதுமே கரிசனையோடும் பொறுமையோடும் இருக்கப்போவதில்லை. சரியான நேரத்தில் அவர் இந்த உலகத்துக்கு முடிவு கொண்டுவருவார். அதுவரை, நாம் அவசரத்தன்மையோடு ஊழியம் செய்ய வேண்டியிருக்கிறது. (2 தீ. 4:2) அதனால், நாம் தொடர்ந்து ஆர்வத்தோடு ஊழியம் செய்யலாம்! ‘எல்லா விதமான மக்களிடமும்’ உண்மையான கரிசனையைக் காட்டலாம்!