Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாராளமாகக் கொடுப்பவர்கள் சந்தோஷமானவர்கள்

தாராளமாகக் கொடுப்பவர்கள் சந்தோஷமானவர்கள்

“கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.” —அப். 20:35.

பாடல்கள்: 153, 74

1. யெகோவா தாராள குணமுள்ளவர் என்பதை எது காட்டுகிறது?

யெகோவா மட்டுமே இருந்த ஒரு காலம் உண்டு! பிறகு, புத்திக்கூர்மையுள்ள படைப்புகளான ஆவி சிருஷ்டிகளையும் மனிதர்களையும் படைத்து, உயிர் என்ற பரிசை யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். சந்தோஷமுள்ள கடவுளான அவர், நல்ல நல்ல பரிசுகளை மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்; அதில் பிரியப்படுகிறார். (1 தீ. 1:11; யாக். 1:17) நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றும் அவர் ஆசைப்படுகிறார். அதனால்தான், தாராள குணத்தைக் காட்ட அவர் நமக்குக் கற்றுத்தருகிறார்.—ரோ. 1:20.

2, 3. (அ) தாராள குணத்தைக் காட்டினால் நமக்குச் சந்தோஷம் கிடைக்கும் என்று ஏன் சொல்லலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?

2 கடவுள் தன்னுடைய சாயலில் மனிதர்களைப் படைத்தார். (ஆதி. 1:27) அதாவது, அவருடைய குணங்களை வெளிப்படுத்தும் விதத்தில் மனிதர்களைப் படைத்திருக்கிறார். உண்மையான சந்தோஷத்தையும் யெகோவாவுடைய ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க வேண்டுமென்றால், நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். அதாவது, மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட வேண்டும்; நம்மிடம் இருப்பதைத் தாராளமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். (பிலி. 2:3, 4; யாக். 1:5) ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? ஏனென்றால், அப்படிச் செய்யும் விதத்தில்தான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். அதனால், நாம் பாவிகளாக இருந்தாலும் யெகோவாவைப் பின்பற்ற முடியும்; தாராள குணத்தைக் காட்டவும் முடியும்.

3 தாராள குணத்தைக் காட்டுவதைப் பற்றி பைபிள் சில பாடங்களைக் கற்றுத்தருகிறது. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் பார்ப்போம்: நாம் தாராள குணத்தைக் காட்டும்போது யெகோவா ஏன் சந்தோஷப்படுகிறார்? யெகோவா கொடுத்திருக்கும் வேலையைச் செய்ய இந்தக் குணம் நமக்கு எப்படி உதவும்? இந்தக் குணத்தைக் காட்டும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கும் என்று எப்படிச் சொல்லலாம்? நாம் ஏன் இந்தக் குணத்தைத் தொடர்ந்து காட்ட வேண்டும்?

நாம் தாராள குணத்தைக் காட்டும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார்

4, 5. யெகோவாவும் இயேசுவும் எப்படித் தாராள குணத்தைக் காட்டியிருக்கிறார்கள்? நாம் ஏன் அவர்களைப் பின்பற்ற வேண்டும்?

4 மனிதர்கள் தன்னைப் பின்பற்ற வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். அதனால்தான், நாம் தாராள குணத்தைக் காட்டும்போது அவர் ரொம்பச் சந்தோஷப்படுகிறார். (எபே. 5:1) நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றும் அவர் விரும்புகிறார். அதனால்தான், அற்புதமான விதத்தில் நம்மைப் படைத்திருக்கிறார்; பூமியையும் அதிலிருக்கிற எல்லாவற்றையும் அழகாக உருவாக்கியிருக்கிறார். (சங். 104:24; 139:13-16) நாம் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும்போது, யெகோவாவை மகிமைப்படுத்துகிறோம்!

5 தாராள குணத்தைக் காட்டும்போது நாம் இயேசுவையும் பின்பற்றுகிறோம். இந்த விஷயத்தில், அவர் நமக்கு நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார். “மனிதகுமாரனும் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்குமே வந்தார்” என்று அவரே சொன்னார். (மத். 20:28) “கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த இதே மனப்பான்மை உங்களுக்கும் இருக்கட்டும் . . . தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு [அவர்] ஓர் அடிமையைப் போல் ஆனார்” என்று சொல்லி அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். (பிலி. 2:5, 7) அதனால், ‘இயேசுவ இன்னும் நெருக்கமா என்னால பின்பற்ற முடியுமா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம்.—1 பேதுரு 2:21-ஐ வாசியுங்கள்.

6. நல்ல சமாரியனைப் பற்றிய கதையைச் சொன்னதன் மூலம் இயேசு நமக்கு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுத்தார்? (ஆரம்பப் படம்)

6 தன்னுடைய மற்றும் தன் மகனுடைய பரிபூரண முன்மாதிரியை நாம் பின்பற்றும்போது, யெகோவா சந்தோஷப்படுகிறார். மக்கள்மேல் உண்மையான அக்கறை காட்டும்போதும், அவர்களுக்கு உதவுவதற்கான வழிகளைத் தேடும்போதும், நாம் அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். இது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதற்கு நல்ல சமாரியனின் கதையை இயேசு சொன்னார். (லூக்கா 10:29-37-ஐ வாசியுங்கள்.) மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, எங்கிருந்து வந்திருந்தாலும் சரி, அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற பாடத்தைத் தன்னுடைய சீஷர்களுக்கு இயேசு சொல்லிக்கொடுத்தார். “நான் அன்பு காட்ட வேண்டிய அந்த மற்றவர்கள் உண்மையில் யார்?” என்று கேட்ட ஒரு யூதனுக்கு பதில் சொல்லத்தான் இயேசு இந்தக் கதையைச் சொன்னார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யெகோவா நம்மைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டுமென்றால், அந்தச் சமாரியனைப் போலவே நாமும் தாராள குணத்தைக் காட்ட வேண்டும்!

7. யெகோவாவின் வழிகள்தான் சரியானவை என்று நம்புவதை நாம் எப்படிக் காட்டலாம்? விளக்குங்கள்.

7 நாம் தாராள குணத்தைக் காட்டுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்று யோசித்துப்பாருங்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் சுயநலமாக நடந்துகொண்டால் ஆதாமும் ஏவாளும் ரொம்பவே சந்தோஷமாக இருப்பார்கள் என்று சாத்தான் சொன்னான். ஏவாள் ஒரு சுயநலவாதி; கடவுளைப்போல் ஆக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். ஆதாமும் சுயநலவாதிதான்; கடவுளைவிட தன்னுடைய மனைவியைப் பிரியப்படுத்துவதுதான் முக்கியம் என்று அவன் நினைத்தான். (ஆதி. 3:4-6) விளைவோ படுமோசமானதாக இருந்தது! சுயநலம் ஒருபோதும் சந்தோஷத்தைத் தராது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. சுயநலமில்லாமல் நடந்துகொள்ளும்போதும், தாராள குணத்தைக் காட்டும்போதும் யெகோவாவின் வழிகள்தான் சரியானவை என்று நம்புவதை நாம் காட்டுகிறோம்.

கடவுள் கொடுத்திருக்கும் வேலையைச் செய்யுங்கள்

8. ஆதாம் ஏவாள் ஏன் மற்றவர்களைப் பற்றியும் யோசித்திருக்க வேண்டும்?

8 ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் மட்டும்தான் இருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் மற்றவர்களைப் பற்றியும் யோசித்திருக்க வேண்டும். ஏனென்றால், பிள்ளைகளைப் பெற்றெடுத்து இந்தப் பூமியை நிரப்ப வேண்டுமென்றும், முழு பூமியையும் ஒரு பூஞ்சோலையாக மாற்ற வேண்டுமென்றும் யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தார். (ஆதி. 1:28) இந்தப் பூமியில் எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா ஆசைப்பட்டதுபோல், தங்களுடைய சந்ததியாரும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று ஆதாம் ஏவாள் ஆசைப்பட்டிருக்க வேண்டும். ஆதாம் ஏவாளும், அவர்களுடைய சந்ததியாரும் ஒன்றுசேர்ந்து உழைத்து இந்தப் பூமி முழுவதையும் பூஞ்சோலையாக மாற்ற வேண்டுமென்று யெகோவா எதிர்பார்த்தார். அது ஒரு பிரமாண்டமான வேலை என்பதில் சந்தேகமே இல்லை!

9. பூமியைப் பூஞ்சோலையாக மாற்றும் வேலை சந்தோஷமாக இருந்திருக்கும் என்று எப்படிச் சொல்லலாம்?

9 பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றவும், யெகோவாவுடைய விருப்பத்தைச் செய்யவும், பரிபூரணமான அந்த மனிதர்கள் யெகோவாவோடு சேர்ந்து நெருக்கமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. அப்படிச் செய்திருந்தால், யெகோவாவோடு சேர்ந்து அவர்களும் ஓய்வை அனுபவித்திருக்கலாம். (எபி. 4:9-11) அந்த வேலை எவ்வளவு சந்தோஷத்தையும் திருப்தியையும் தந்திருக்கும்! ஆதாம் ஏவாள், சுயநலமில்லாமல் மற்றவர்கள்மேல் அக்கறை காட்டியிருந்தால் யெகோவா அவர்களை எந்தளவு ஆசீர்வதித்திருப்பார்!

10, 11. பிரசங்கித்து சீஷராக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

10 இன்று, யெகோவா நமக்கு விசேஷமான ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். பிரசங்கிப்பதும் சீஷராக்குவதும்தான் அந்த வேலை! அந்த வேலையைச் செய்ய வேண்டுமென்றால், மக்கள்மீது நாம் உண்மையான அக்கறை காட்ட வேண்டும். சொல்லப்போனால், சரியான உள்நோக்கம் இருந்தால்தான், அதாவது யெகோவாமேலும் மக்கள்மேலும் அன்பு இருந்தால்தான், நம்மால் அந்த வேலையைத் தொடர்ந்து செய்ய முடியும்.

11 தன்னையும் முதல் நூற்றாண்டிலிருந்த மற்ற கிறிஸ்தவர்களையும், ‘கடவுளுடைய சக வேலையாட்கள்’ என்று பவுல் சொன்னார். ஏனென்றால், பிரசங்கிக்கும் வேலையையும் கற்றுக்கொடுக்கும் வேலையையும் அவர்கள் செய்தார்கள். (1 கொ. 3:6, 9) இன்று நம்மாலும் ‘கடவுளுடைய சக வேலையாட்களாக’ இருக்க முடியும். எப்படி? கடவுள் கொடுத்திருக்கும் பிரசங்க வேலையைச் செய்வதற்காக நம்முடைய நேரம்... சக்தி... வளம்... என எல்லாவற்றையும் தாராளமாக செலவு செய்வதன் மூலம்தான்! இது நமக்குக் கிடைத்திருக்கும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்!

சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும் (பாரா 12)

12, 13. சீஷராக்கும் வேலையில் கிடைக்கும் பலன்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

12 பிரசங்கிப்பதிலும் சீஷராக்குவதிலும் நம்முடைய நேரத்தையும் சக்தியையும் தாராளமாக செலவு செய்யும்போது, நமக்கு அளவில்லாத சந்தோஷம் கிடைக்கிறது. பைபிள் படிப்புகளை நடத்தும் சகோதர சகோதரிகளின் அனுபவமும் இதைத்தான் காட்டுகிறது. நம்மோடு சேர்ந்து பைபிளைப் படிப்பவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளும்போதும், உண்மையான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளும்போதும், மாற்றங்களைச் செய்யும்போதும், சத்தியத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போதும் நாம் சந்தோஷத்தில் பூரித்துப்போகிறோம். இயேசுவுக்கும் அந்தச் சந்தோஷம் கிடைத்தது. அவரால் அனுப்பப்பட்ட 70 சீஷர்கள், “சந்தோஷத்தோடு திரும்பி வந்து” தங்களுக்குக் கிடைத்த நல்ல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, அவர் ரொம்பச் சந்தோஷப்பட்டார்.—லூக். 10:17-21.

13 பைபிளின் செய்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதைப் பார்க்கும்போது, உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகள் ரொம்பச் சந்தோஷப்படுகிறார்கள். ஆனாவின் அனுபவத்தைக் கவனியுங்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இவர் கல்யாணமாகாத ஓர் இளம் சகோதரி; யெகோவாவுக்கு நிறைய செய்ய வேண்டுமென்று இவர் ஆசைப்பட்டார். அதனால், தேவை அதிகமுள்ள ஓர் இடத்துக்கு, அதாவது கிழக்கு ஐரோப்பாவுக்குக் குடிமாறிப் போனார். ஆனா இப்படி எழுதினார்: “இங்கே நிறைய பைபிள் படிப்புகள் கிடைக்கின்றன. அது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. நான் செய்யும் சேவை எனக்குச் சந்தோஷத்தை அள்ளித் தருகிறது. ஊழியம் முடித்து வீட்டுக்குப் போன பிறகுகூட, என் பிரச்சினைகளைப் பற்றி யோசிப்பதற்கு நேரமே இல்லை. ஏனென்றால், என்னோடு படிப்பவர்களைப் பற்றியே, அதாவது அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியே நான் யோசிப்பேன். அவர்களை எப்படி உற்சாகப்படுத்தலாம், அவர்களுக்கு எப்படி நடைமுறையான உதவி செய்யலாம் என்றெல்லாம் யோசிப்பேன். ‘வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது’ என்பது நூற்றுக்குநூறு உண்மை!”—அப். 20:35.

நம் பிராந்தியத்திலிருக்கும் எல்லா வீடுகளையும் சந்திக்கும்போது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் கேட்பதற்கு நாம் மக்களுக்கு வாய்ப்பளிக்கிறோம் (பாரா 14)

14. மக்கள் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றாலும் நாம் எப்படிச் சந்தோஷமாக ஊழியம் செய்யலாம்?

14 மக்கள் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றாலும் நம்மால் சந்தோஷமாக ஊழியம் செய்ய முடியும். ஏனென்றால், நல்ல செய்தியைக் கேட்க அவர்களுக்கு நாம் வாய்ப்பு கொடுக்கிறோம். எசேக்கியேலிடம் யெகோவா என்ன செய்யச் சொன்னாரோ, அதையேதான் நம்மிடமும் எதிர்பார்க்கிறார். “அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ நீ என்னுடைய செய்தியை அவர்களிடம் சொல்ல வேண்டும்” என்று அவரிடம் யெகோவா சொன்னார். (எசே. 2:7; ஏசா. 43:10) அதனால், மக்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி, நாம் எடுக்கிற முயற்சிகளை யெகோவா மறக்க மாட்டார்! (எபிரெயர் 6:10-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய ஊழியத்தைப் பற்றி ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “நாம் நட்டிருக்கிறோம், தண்ணீர் ஊற்றியிருக்கிறோம், அவர்களுடைய ஆர்வத்தை யெகோவா வளர வைப்பார் என்று நம்பிக்கையோடு ஜெபிக்கிறோம்.”—1 கொ. 3:6.

நாம் எப்படிச் சந்தோஷமாக இருக்கலாம்?

15. மக்கள் நன்றி காட்டினால்தான் தாராள குணத்தைக் காட்ட வேண்டுமா? விளக்குங்கள்.

15 தாராள குணத்தைக் காட்டுவது நமக்குச் சந்தோஷத்தைத் தருமென்பதால், நாம் அந்தக் குணத்தைக் காட்ட வேண்டுமென்று இயேசு ஆசைப்படுகிறார். அதனால்தான், “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார். (லூக். 6:38) நாம் காட்டும் தாராள குணத்துக்கு எல்லாரும் நன்றி காட்டுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், மக்கள் நன்றி காட்டாததுபோல் தெரிந்தாலும் கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தாராள குணத்தோடு நீங்கள் செய்யும் ஒரு செயல், எவ்வளவு நன்மைகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கே தெரியாது.

16. நாம் யாருக்கெல்லாம் தாராள குணத்தைக் காட்ட வேண்டும், ஏன்?

16 மனதாரக் கொடுப்பவர்கள், பதிலுக்கு ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். “விருந்து கொடுக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமானவர்களையும் கால் ஊனமானவர்களையும் பார்வை இல்லாதவர்களையும் அழையுங்கள். அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது” என்று இயேசு சொன்னார். (லூக். 14:13, 14) “தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றும், “ஏழைக்கு கரிசனையோடு உதவுகிறவன் சந்தோஷமானவன்” என்றும் பைபிள் சொல்கிறது. (நீதி. 22:9; சங். 41:1) மற்றவர்களுக்கு உதவ நாம் உண்மையிலேயே விரும்புவதால், நாம் தாராள குணத்தைக் காட்ட வேண்டும்.

17. எந்தெந்த விதங்களில் தாராள குணத்தைக் காட்டுவது நமக்குச் சந்தோஷத்தைத் தரும்?

17 இயேசு சொன்ன வார்த்தைகளை, அதாவது “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்ற வார்த்தைகளை, பவுல் குறிப்பிட்டபோது, பணம் பொருளை மற்றவர்களுக்குக் கொடுப்பதை பற்றி மட்டுமே சொல்லவில்லை. மற்றவர்களை உற்சாகப்படுத்துவது... பைபிளிலிருந்து அறிவுரைகளைச் சொல்வது... நடைமுறையான உதவிகளைச் செய்வது... ஆகியவற்றின் மூலமும் நாம் மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கலாம். (அப். 20:31-35) நம்முடைய நேரத்தையும் சக்தியையும் கொடுப்பது மட்டுமல்ல, மற்றவர்களிடம் அன்பு காட்டுவதும் அவர்களைக் கவனித்துக்கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதைத் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் பவுல் காட்டினார்.

18. தாராளமாகக் கொடுப்பதைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

18 கொடுப்பது மனிதர்களுக்குச் சந்தோஷத்தைத் தருவதாக மனிதனுடைய நடத்தை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளைச் செய்பவர்கள் கவனித்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு நல்லது செய்யும்போது தங்களுக்குச் சந்தோஷம் கிடைப்பதாக மக்கள் உணர்கிறார்கள் என்று ஒரு கட்டுரை சொல்கிறது. அதோடு, மற்றவர்களுக்கு உதவும்போது தங்களுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைப்பதாக மக்கள் உணர்கிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நல்ல ஆரோக்கியமும் சந்தோஷமும் வேண்டுமென்றால் பொது சேவை செய்யும்படி சில நிபுணர்கள் மக்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு ஆச்சரியத்தைத் தருவதில்லை; ஏனென்றால், மற்றவர்களுக்குக் கொடுப்பது நமக்குச் சந்தோஷத்தைத் தருமென்று நம் அன்பான படைப்பாளரான யெகோவா ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.—2 தீ. 3:16, 17.

தொடர்ந்து தாராள குணத்தைக் காட்டுங்கள்

19, 20. தாராள குணத்தைக் காட்ட வேண்டுமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

19 நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலான மக்கள் சுயநலவாதிகளாக இருப்பதால், தொடர்ந்து தாராள குணத்தைக் காட்டுவது நமக்குச் சவாலாக இருக்கலாம். ஆனால், முக்கியமான இரண்டு கட்டளைகளை இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் நாம் யெகோவாமேல் அன்பு காட்ட வேண்டும் என்பதும், நம்மேல் நாம் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும் என்பதும்தான் அந்த இரண்டு கட்டளைகள். (மாற். 12:28-31) யெகோவாமேல் அன்பு காட்டுகிறவர்கள், அவரைப் பின்பற்றுவார்கள் என்று இந்தக் கட்டுரையில் பார்த்தோம். யெகோவாவும் இயேசுவும் தாராள குணம் படைத்தவர்கள்; நாமும் அவர்களைப் போலவே இருக்க வேண்டுமென்று அவர்கள் நம்மை உற்சாகப்படுத்துகிறார்கள். ஏனென்றால், அப்படிச் செய்வதுதான் நமக்கு உண்மையான சந்தோஷத்தைத் தருமென்று அவர்களுக்குத் தெரியும். கடவுளுடைய சேவையிலும் மற்றவர்களுக்கு உதவுவதிலும் தாராள குணத்தைக் காட்டும்போது, நம்மால் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க முடியும். அதோடு, நாமும் நன்மைகளை அனுபவிப்போம்; மற்றவர்களும் நன்மைகளை அனுபவிப்பார்கள்.

20 நீங்கள் ஏற்கெனவே தாராள குணத்தை நன்றாகக் காட்டிவருகிறீர்கள். மற்றவர்களுக்கு, அதுவும் நம் சகோதர சகோதரிகளுக்கு, தாராளமாக உதவி செய்துவருகிறீர்கள்! (கலா. 6:10) நீங்கள் தொடர்ந்து அப்படிச் செய்தால் மற்றவர்கள் உங்களுக்கு எப்போதும் நன்றியோடு இருப்பார்கள்; உங்கள்மேல் பாச மழை பொழிவார்கள். அது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும். “தாராள குணமுள்ளவன் செழிப்பான். மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறவன் புத்துணர்ச்சி அடைவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 11:25) நம் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் சுயநலமில்லாமல் கொடுக்கவும், தயவையும் தாராள குணத்தையும் காட்டவும் நிறைய வழிகள் இருக்கின்றன. அதில் சில வழிகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 13 பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.