Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சத்தியத்தைக் கற்றுக்கொடுங்கள்

சத்தியத்தைக் கற்றுக்கொடுங்கள்

“யெகோவாவே . . . சத்தியம்தான் உங்களுடைய வார்த்தையின் சாராம்சம்.”சங். 119:159, 160.

பாடல்கள்: 34, 145

1, 2. (அ) இயேசுவின் வாழ்க்கையில் எந்த வேலை மிகவும் முக்கியமானதாக இருந்தது? (ஆ) ‘கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்க’ நாம் என்ன செய்ய வேண்டும்?

இயேசு கிறிஸ்து ஒரு தச்சனாக இருந்தார், பிற்பாடு ஓர் ஊழியராக ஆனார். (மாற். 6:3; ரோ. 15:8) தச்சு வேலையையும் ஊழியத்தையும், அவர் அருமையாகச் செய்தார். ஒரு தச்சனாக, மரச்சாமான்களைச் செய்வதற்குத் தன்னிடம் இருந்த கருவிகளை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று கற்றுக்கொண்டார். ஓர் ஊழியராக, கடவுளுடைய வார்த்தையிலிருக்கிற உண்மைகளைக் கற்றுக்கொடுக்க, வேதவசனங்களின் பேரில் தனக்கு இருந்த ஆழமான அறிவைப் பயன்படுத்தினார். (மத். 7:28; லூக். 24:32, 45) அவருக்கு 30 வயதானபோது, தச்சு வேலையை விட்டுவிட்டு ஊழிய வேலையை ஆரம்பித்தார். ஏனென்றால், அந்த வேலைதான் ரொம்பவே முக்கியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. கடவுள் தன்னை பூமிக்கு அனுப்பியதற்கு ஒரு காரணம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பதுதான் என்று அவர் சொன்னார். (மத். 20:28; லூக். 3:23; 4:43) அந்த வேலைதான் அவருடைய வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்தது. மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் அதுதான் முக்கியமானதாக இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார்.—மத். 9:35-38.

2 நம்மில் நிறைய பேர் தச்சர்கள் கிடையாது! ஆனால், நாம் எல்லாரும் நல்ல செய்தியை அறிவிக்கும் கடவுளுடைய ஊழியர்கள்! இந்த வேலை ரொம்ப முக்கியமானது. ஏனென்றால், கடவுளே இதில் ஈடுபட்டிருக்கிறார். சொல்லப்போனால், நாம் எல்லாரும் “கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கிறோம்.” (1 கொ. 3:9; 2 கொ. 6:4) ‘சத்தியம்தான் [யெகோவாவுடைய] வார்த்தையின் சாராம்சம்’ என்று சங்கீதக்காரர் சொன்னதை நாம் நிச்சயம் ஒத்துக்கொள்வோம். (சங். 119:159, 160) அதனால், ஊழியத்தில் ‘சத்திய வார்த்தையைச் சரியாய்ப் பயன்படுத்துகிறோமா’ என்று நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். (2 தீமோத்தேயு 2:15-ஐ வாசியுங்கள்.) யெகோவாவைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் கற்றுக்கொடுக்க, முக்கியக் கருவியான பைபிளை நாம் பயன்படுத்துகிறோம். அதைத் திறமையாகப் பயன்படுத்த நாம் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். ஊழியத்தில் வெற்றிபெற யெகோவாவின் அமைப்பு இன்னும் நிறைய கருவிகளைக் கொடுத்திருக்கிறது. கற்பிப்பதற்கான கருவிகள் என்று இவற்றை நாம் சொல்கிறோம். இவற்றைப் பயன்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

3. ஊழியம் செய்யும்போது எது நம் குறிக்கோளாக இருக்க வேண்டும், அதை அடைய அப்போஸ்தலர் 13:48 எப்படி உதவும்?

3 இந்தக் கருவிகளை, பிரசங்கிப்பதற்கான கருவிகள் என்று சொல்லாமல் கற்பிப்பதற்கான கருவிகள் என்று ஏன் சொல்கிறோம்? “பிரசங்கிப்பது” என்றால் ஒரு செய்தியை அறிவிப்பது என்று அர்த்தம். “கற்பிப்பது” என்றால் மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அதை விளக்குவது என்று அர்த்தம். அப்படிப் புரிந்துகொள்ளும்போது, கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்க வேண்டுமென்ற தூண்டுதல் மக்களுக்கு வரும். கொஞ்சக் காலம் மட்டுமே மீந்திருக்கும் இந்தச் சமயத்தில், பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதும் சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதும் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். அப்போதுதான், அவர்களும் இயேசுவின் சீஷர்களாக ஆவார்கள். அப்படியென்றால், ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருக்கிறவர்களை’ தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்; அவர்களும் யெகோவாவை வணங்க நாம் உதவ வேண்டும்.அப்போஸ்தலர் 13:44-48-ஐ வாசியுங்கள்.

4. ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருக்கிறவர்களை’ நாம் எப்படித் தேடிக் கண்டுபிடிக்கலாம்?

4 ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருக்கிறவர்களை’ தேடிக் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்? முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள், பிரசங்கிப்பதன் மூலம் அதைச் செய்தார்கள். “நீங்கள் எந்த நகரத்துக்குப் போனாலும், எந்தக் கிராமத்துக்குப் போனாலும், தகுதியுள்ளவர் யார் என்று தேடிக் கண்டுபிடியுங்கள்” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொல்லியிருந்தார். (மத். 10:11) இன்று நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். பெருமைபிடித்தவர்களும், ஆன்மீக விஷயங்களில் அக்கறை இல்லாதவர்களும் நம் செய்தியைக் கேட்பார்கள் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. நல்மனமுள்ளவர்களையும், மனத்தாழ்மையான ஆட்களையும், சத்தியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களையும் நாம் தேடுகிறோம். இந்த வேலையை, தச்சனாக இருந்தபோது இயேசு செய்ய வேண்டியிருந்த ஒரு வேலையோடு ஒப்பிடலாம். அதாவது, நாற்காலியையோ கதவையோ நுகத்தடியையோ செய்வதற்கு முன்பு, சரியான மரத்தை அவர் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. பிறகு, தன்னிடம் இருந்த கருவிகளையும் தன்னுடைய திறமைகளையும் பயன்படுத்தி அந்தச் சாமான்களைச் செய்ய வேண்டியிருந்தது. அதேபோல், நாமும் நல்மனமுள்ள ஆட்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பிறகு, நம்மிடம் இருக்கும் கருவிகளையும் திறமைகளையும் பயன்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டியிருக்கிறது.—மத். 28:19, 20.

5. கற்றுக்கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கருவியையும் பற்றி நாம் ஏன் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்? விளக்குங்கள். (ஆரம்பப் படங்கள்)

5 நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. தச்சனாக இருந்தபோது, இயேசு பயன்படுத்திய கருவிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அளப்பதற்கும், குறிப்பதற்கும், வெட்டுவதற்கும், துளை போடுவதற்கும், மரத்தை வடிவமைப்பதற்கும், மரத்துண்டுகளைச் சமப்படுத்துவதற்கும், பிறகு அவற்றை ஒன்றாக இணைப்பதற்கும் அவருக்குக் கருவிகள் தேவைப்பட்டிருக்கும். அதேபோல், கற்பிப்பதற்கான ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. அதனால், இந்த முக்கியமான கருவிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.

நாம் யார் என்பதைப் பற்றிச் சொல்லும் கருவிகள்

6, 7. (அ) கான்டாக்ட் கார்டை நீங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறீர்கள்? (ஆ) சபைக் கூட்டங்களுக்கான அழைப்பிதழை நாம் ஏன் பயன்படுத்துகிறோம்?

6 கான்டாக்ட் கார்டு. இது சிறிய, ஆனால் வலிமைமிக்க ஒரு கருவி. நம்மைப் பற்றி இது சொல்கிறது. அதோடு, மக்களுடைய கவனத்தை jw.org வெப்சைட்டின் பக்கம் திருப்புகிறது. அந்த வெப்சைட்டைப் பார்ப்பதன் மூலம் அவர்கள் நம்மைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம்; பைபிள் படிப்புக்காகவும் விண்ணப்பிக்கலாம். இதுவரை, 4,00,000-க்கும் அதிகமானவர்கள் அப்படி விண்ணப்பித்திருக்கிறார்கள்; தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இந்த கார்டுகளை உங்கள் கையில் வைத்துக்கொள்ளுங்கள்; மற்றவர்களிடம் பேசும்போது இவற்றைப் பயன்படுத்துங்கள்.

7 கூட்டங்களுக்கான அழைப்பிதழ்கள். “யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க உங்களை வரவேற்கிறோம்!” என்ற வார்த்தைகள், சபைக் கூட்டங்களுக்கான அழைப்பிதழில் இருக்கின்றன. ‘நீங்களும் வந்து படிக்கலாம்,’ ‘நாங்களும் வந்து சொல்லிக்கொடுப்போம்’ என்ற வார்த்தைகளும் அவற்றில் இருக்கின்றன. நம்மைப் பற்றிச் சொல்வதோடு, ‘ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்களை’ நம்மோடு சேர்ந்து பைபிள் படிக்கவும் அது அழைக்கிறது. (மத். 5:3) ஒருவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவர் தாராளமாக நம் கூட்டங்களுக்கு வரலாம். அப்படி வரும்போது, பைபிளிலிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்பதை அவர் புரிந்துகொள்வார்.

8. மக்கள் நம்முடைய கூட்டத்துக்கு ஒரு தடவையாவது வருவது ஏன் முக்கியம்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

8 ஒரு தடவையாவது கூட்டத்துக்கு வரும்படி மற்றவர்களை அழைப்பது ரொம்பவே முக்கியம். அப்போதுதான், பைபிளிலிருக்கும் உண்மைகளை யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதையும், கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவுகிறார்கள் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். அதோடு, பொய் மதங்கள் உண்மைகளைக் கற்றுக்கொடுப்பதில்லை என்பதையும் புரிந்துகொள்வார்கள். (ஏசா. 65:13) அமெரிக்காவில் வாழும் ரே மற்றும் லின்டா தம்பதி, சில வருஷங்களுக்கு முன்பு இந்த வித்தியாசத்தை உணர்ந்தார்கள். அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது; அவரைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள். அதனால், அந்த ஊரிலிருந்த எல்லா சர்ச்சுகளுக்கும் போய்ப் பார்ப்பதென்று முடிவெடுத்தார்கள். ஆனால், ஏதாவது ஒரு சர்ச்சின் அங்கத்தினராக ஆவதற்கு முன்பு, இரண்டு விஷயங்களை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார்கள். ஒன்று, தாங்கள் அங்கத்தினராக ஆக வேண்டுமென்றால், ஏதாவது கற்றுக்கொள்ளும் விதத்தில் அந்தச் சர்ச்சின் போதனைகள் இருக்க வேண்டும். இரண்டு, அந்தச் சர்ச் அங்கத்தினர்களுடைய உடை, கடவுளுடைய ஊழியர்களுக்குத் தகுந்த விதத்தில் இருக்க வேண்டும். இந்த விஷயங்களை உறுதி செய்துகொள்வதற்காக நிறைய சர்ச்சுகளுக்கு அவர்கள் போனார்கள். இப்படியே பல வருஷங்கள் ஓடின; ஏனென்றால், அந்த ஊரில் ஏராளமான சர்ச்சுகள் இருந்தன. ஆனால், அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவும் இல்லை; சர்ச் அங்கத்தினர்களின் உடை அடக்கமாகவும் இல்லை. கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்களுடைய பட்டியலிலிருந்த கடைசி சர்ச்சை போய்ப் பார்த்துவிட்டு, லின்டா வேலைக்குப் போய்விட்டார்; ரே வீடு திரும்பினார். வீட்டுக்குப் போகும் வழியில், ரே ஒரு ராஜ்ய மன்றத்தைப் பார்த்தார். ‘இங்க என்னதான் நடக்குதுனு போய் பார்க்கலாம்’ என்று அவர் நினைத்தார். இதுவரை கிடைத்த அனுபவத்திலேயே அது ஓர் அருமையான அனுபவமாக இருந்தது! ராஜ்ய மன்றத்திலிருந்த எல்லாரும் அன்பாகவும் நட்பாகவும் பழகினார்கள். எல்லாருடைய உடையும் அடக்கமாக இருந்தது. முதல் வரிசையில் போய் ரே உட்கார்ந்தார். அங்கே சொல்லப்பட்ட விஷயங்கள் அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இவருடைய அனுபவத்தைப் பார்க்கும்போது அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. முதல் தடவையாக கூட்டத்துக்கு வரும் ஒரு நபர், “உண்மையாகவே கடவுள் உங்கள் மத்தியில் இருக்கிறார்” என்று சொல்வாரென பவுல் குறிப்பிட்டார். (1 கொ. 14:23-25) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரே கூட்டத்துக்குப் போனார். பிறகு, வார மத்தியில் நடக்கும் கூட்டத்துக்குப் போனார். லின்டாவும் கூட்டத்துக்குப் போக ஆரம்பித்தார். அவர்கள் இரண்டு பேருக்கும் 70 வயதுக்குமேல் ஆகியிருந்தது! இருந்தாலும், அவர்கள் பைபிளைப் படித்தார்கள்; ஞானஸ்நானமும் எடுத்தார்கள்.

உரையாடலை ஆரம்பிக்க உதவும் கருவிகள்

9, 10. (அ) துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துவது ஏன் சுலபமாக இருக்கிறது? (ஆ) கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? என்ற துண்டுப்பிரதியை எப்படிப் பயன்படுத்தலாம் என்று விளக்குங்கள்.

9 துண்டுப்பிரதிகள். கற்பிப்பதற்கான கருவிகளில், எட்டுத் துண்டுப்பிரதிகள் இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி உரையாடலை ஆரம்பிப்பது ரொம்ப சுலபம். இவற்றில் சில துண்டுப்பிரதிகள், 2013-ல் வெளியிடப்பட்டன; அந்தச் சமயத்திலிருந்து கிட்டத்தட்ட 500 கோடி துண்டுப்பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமே ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டிருப்பதால், ஒரு துண்டுப்பிரதியை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொண்டால் மற்ற துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துவதும் சுலபமாக இருக்கும். அப்படியென்றால், இந்தத் துண்டுப்பிரதிகளில் ஒன்றைப் பயன்படுத்தி எப்படி உரையாடலை ஆரம்பிப்பது?

10 உதாரணத்துக்கு, கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? என்ற துண்டுப்பிரதியை எப்படிக் கொடுக்கலாம் என்று பார்க்கலாம். முதல் பக்கத்திலிருக்கும் கேள்வியைக் காட்டி, ‘கடவுள் இந்த உலகத்தை ஆட்சி செய்வாரா? நீங்க என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்கலாம். பிறகு, அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று பதில்களில், எதை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்று கேளுங்கள். அவர் சொன்ன பதில் சரியா தவறா என்று சொல்வதற்குப் பதிலாக, துண்டுப்பிரதியின் அடுத்த பக்கத்தைத் திருப்பி, “கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?” என்ற பகுதியைக் காட்டுங்கள். பிறகு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தானியேல் 2:44-ஐயும் ஏசாயா 9:6-ஐயும் வாசியுங்கள். கடைசியில், பின் பக்கத்திலிருக்கும் “சிந்தித்துப் பாருங்கள்” என்ற தலைப்பின் கீழிருக்கிற “கடவுளுடைய அரசாங்கத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்ற கேள்வியைக் கேளுங்கள். இதற்கான பதிலை அடுத்த சந்திப்பில் சொல்லலாம். அப்போது, கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! என்ற சிற்றேட்டில் இருக்கும் 7-ம் பாடத்தைப் பயன்படுத்தலாம். பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கான கருவிகளில் இந்தச் சிற்றேடும் ஒன்று!

பைபிளின் மீது ஆர்வத்தை வளர்க்க உதவும் கருவிகள்

11. நம்முடைய பத்திரிகைகள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன, இவற்றைப் பற்றி நாம் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

11 பத்திரிகைகள். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள்தான் உலகிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டு வினியோகிக்கப்படும் பத்திரிகைகள்! வெவ்வேறு நாடுகளிலிருக்கும் மக்கள் இவற்றைப் படிப்பதால், எல்லாருடைய ஆர்வத்தையும் தூண்டும் விதத்தில் அட்டைப்படக் கட்டுரைகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியமோ, அதன்மீது கவனம் செலுத்த மக்களுக்கு உதவுவதற்கு நாம் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு முன்பு, குறிப்பாக யாரை மனதில் வைத்து இவை தயாரிக்கப்படுகின்றன என்பதை முதலில் நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

12. (அ) யாரை மனதில் வைத்து விழித்தெழு! பத்திரிகை தயாரிக்கப்படுகிறது, அதன் குறிக்கோள் என்ன? (ஆ) இந்தக் கருவியைப் பயன்படுத்தியதால் சமீபத்தில் கிடைத்த அனுபவத்தைச் சொல்லுங்கள்.

12 விழித்தெழு! பத்திரிகை, பைபிளைப் பற்றி கொஞ்சம் மட்டுமே தெரிந்த அல்லது அதைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஆட்களுக்காகத் தயாரிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள், கிறிஸ்தவ போதனைகளைப் பற்றிக் கேள்விப்படாதவர்களாக இருக்கலாம்; மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கலாம். அல்லது தங்களுடைய வாழ்க்கைக்கு பைபிள் உதவும் என்று அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்காமல் இருந்திருக்கலாம். கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தைத் தருவதுதான் இந்த பத்திரிகையின் ஒரு முக்கியக் குறிக்கோள். (ரோ. 1:20; எபி. 11:6) பைபிள் “உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான்” என்ற விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவும் அது உதவுகிறது. (1 தெ. 2:13) 2018-ல், இந்தத் தலைப்புகளில் விழித்தெழு! பத்திரிகைகள் வெளியிடப்பட்டன: (1) “சந்தோஷப் பாதையில் செல்ல...” (2) “குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்” (3) “உயிர் உதிரும்போது...”.

13. (அ) யாரை மனதில் வைத்து காவற்கோபுர பத்திரிகையின் பொது இதழ் தயாரிக்கப்படுகிறது? (ஆ) இந்தக் கருவியைப் பயன்படுத்தியதால் சமீபத்தில் கிடைத்த அனுபவத்தைச் சொல்லுங்கள்.

13 காவற்கோபுர பத்திரிகையின் பொது இதழ், கடவுள்மீதும் பைபிள்மீதும் மரியாதை வைத்திருக்கும் ஆட்களுக்கு, பைபிள் போதனைகளை விளக்குவதற்காகத் தயாரிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள், பைபிளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கலாம்; ஆனால், அதன் போதனைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். (ரோ. 10:2; 1 தீ. 2:3, 4) 2018-ல் வெளியிடப்பட்ட காவற்கோபுர பத்திரிகையின் பொது இதழ்கள் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்கின்றன: (1) “பைபிள் நம் காலத்துக்கு ஒத்துவருமா?” (2) “எதிர்காலம் எப்படி இருக்கும்?” (3) “கடவுளுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறதா?

செயல்படத் தூண்டும் கருவிகள்

14. (அ) கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் நான்கு வீடியோக்கள் எதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன? (ஆ) இந்த வீடியோக்களைப் பயன்படுத்தியதால் சமீபத்தில் கிடைத்த அனுபவத்தைச் சொல்லுங்கள்.

14 வீடியோக்கள். இயேசுவின் காலத்தில் கைக் கருவிகள்தான் இருந்தன. ஆனால், இன்றிருக்கும் தச்சர்கள் மின் கருவிகளையும் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு, மின்சாரத்தினால் இயங்கும் ரம்பம், துளை போடும் கருவிகள், ஸாண்டிங் மெஷின்கள் (sanders) போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, அச்சிடப்பட்ட பிரசுரங்கள் தவிர இப்போது நமக்கு அருமையான வீடியோக்களும் இருக்கின்றன. கற்பிப்பதற்கான கருவிகளில், பைபிளை ஏன் படிக்க வேண்டும்?, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்?, யெகோவாவின் சாட்சிகள்—நாங்கள் யார்? ஆகிய நான்கு வீடியோக்கள் இருக்கின்றன. இவற்றில் இருக்கிற சிறிய வீடியோக்கள், இரண்டு நிமிடத்துக்கும் குறைவாக இருப்பதால் அவற்றை முதல் சந்திப்பிலேயே காட்டுவது நல்ல பலன்களைத் தரும். பெரிய வீடியோக்களை, மறுசந்திப்பிலும் நிறைய நேரம் எடுத்து நம்மிடம் பேசுபவர்களிடமும் காட்டலாம். இவற்றை அருமையான கருவிகள் என்று சொல்லலாம். ஏனென்றால், பைபிளை படிக்கவும், கூட்டங்களுக்குப் போகவும் அவை மக்களைத் தூண்டுகின்றன.

15. சொந்த மொழியில் வீடியோக்களைப் பார்ப்பதால் என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன? உதாரணம் கொடுங்கள்.

15 இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். நம் சகோதரி ஒருவர், மைக்ரோனேசியாவிலிருந்து குடிமாறி வந்திருக்கும் ஒரு பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் யாப்பீஸ் மொழி பேசுபவர். அதனால், பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அந்த மொழியிலேயே நம் சகோதரி காட்டினார். அந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பித்த உடனே, “இது என்னோட மொழியிலேயே இருக்கே. என்னால நம்பவே முடியல! இவர் பேசுறத கேக்குறப்போ இவரும் என்னோட தீவ சேர்ந்தவராதான் இருக்கணும்னு தோணுது. இவர் என்னோட மொழியில பேசுறாரு!” என்று அந்தப் பெண் சொன்னார். அதோடு, தன்னுடைய மொழியில் இருக்கும் எல்லா கட்டுரைகளையும் வீடியோக்களையும் jw.org-ல் பார்க்கப்போவதாகவும் சொன்னார். (அப்போஸ்தலர் 2:8, 11-ஐ ஒப்பிடுங்கள்.) அமெரிக்காவில் வாழும் இன்னொரு சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவருடைய அண்ணன் மகன் வேறொரு கண்டத்தில் வாழ்கிறார். மேலே சொல்லப்பட்ட அதே வீடியோவை அவருடைய சொந்த மொழியில் பார்ப்பதற்காக, அதனுடைய லிங்க்கை நம் சகோதரி அனுப்பினார். அந்த வீடியோவைப் பார்த்த நம் சகோதரியின் அண்ணன் மகன், “இந்த உலகம் சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்லப்பட்ட விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. பைபிள் படிப்புக்காக நான் விண்ணப்பித்திருக்கிறேன்” என்று அந்தச் சகோதரிக்கு இ-மெயில் அனுப்பினார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் அவர் வாழ்கிறார்!

சத்தியத்தைக் கற்றுக்கொடுக்க உதவும் கருவிகள்

16. இந்தச் சிற்றேடுகள் எதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன: (அ) கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் (ஆ) கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! (இ) இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?

16 சிற்றேடுகள். நன்றாக வாசிக்கத் தெரியாத அல்லது சொந்த மொழியில் பைபிள் பிரசுரங்கள் இல்லாத ஒருவருக்கு எப்படி பைபிள் சத்தியங்களைச் சொல்லிக்கொடுப்பது? கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் என்ற சிற்றேட்டை நாம் பயன்படுத்தலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவும் இன்னொரு அருமையான கருவி, கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! என்ற சிற்றேடு. இதன் பின்பக்கத்தில் இருக்கும் 14 தலைப்புகளைக் காட்டி, ஆர்வமுள்ள நபர் எதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்று கேட்கலாம். பிறகு, அந்தப் பாடத்தை அவரோடு சேர்ந்து படிக்கலாம். மறுசந்திப்பில் இந்தச் சிற்றேட்டைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்? என்ற இன்னொரு கருவியும் நம்மிடம் இருக்கிறது. நம்முடைய அமைப்பைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பதற்காக இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பைபிள் படிப்பிலும் இதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ள, மார்ச் 2017 நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகத்தைப் பாருங்கள்.

17. (அ) பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு புத்தகத்தின் நோக்கம் என்ன? (ஆ) ஒருவர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டாலும் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும், ஏன்?

17 புத்தகங்கள். சிற்றேட்டைப் பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பித்த பிறகு, எப்போது வேண்டுமானாலும் பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? என்ற புத்தகத்திலிருந்து படிப்பை ஆரம்பிக்கலாம். பைபிளின் அடிப்படைப் போதனைகளைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது. பைபிள் மாணாக்கர் நல்ல முன்னேற்றம் செய்தால் அல்லது இந்தப் புத்தகத்திலிருந்து படிப்பு முடிந்துவிட்டால், கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள் என்ற புத்தகத்திலிருந்து படிப்பைத் தொடரலாம். பைபிள் நியமங்களை தினமும் எப்படிக் கடைப்பிடிப்பது என்று அந்தப் புத்தகம் சொல்லிக்கொடுக்கிறது. இந்தப் புத்தகங்களை முடிப்பதற்கு முன்பே ஞானஸ்நானம் எடுத்துவிட்டாலும் அவர் தொடர்ந்து படிக்க வேண்டும். பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவும், யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்கவும் இது அவருக்கு உதவும்.கொலோசெயர் 2:6, 7-ஐ வாசியுங்கள்.

18. (அ) சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கும் போதகர்களான நமக்கு 1 தீமோத்தேயு 4:16 என்ன அறிவுரை தருகிறது, அதன்படி செய்தால் என்ன பலன் கிடைக்கும்? (ஆ) கற்பிப்பதற்கான கருவிகளை என்ன குறிக்கோளோடு பயன்படுத்த வேண்டும்?

18 முடிவில்லாத வாழ்க்கைக்கு வழிநடத்தும் ‘சத்தியத்தின் செய்தியாகிய நல்ல செய்தியை’ மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பு யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்கு இருக்கிறது. (கொலோ. 1:5; 1 தீமோத்தேயு 4:16-ஐ வாசியுங்கள்.) இந்தப் பொறுப்பைச் செய்யத்தான் நமக்கு கற்பிப்பதற்கான கருவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (“ கற்பிப்பதற்கான கருவிகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) இந்தக் கருவிகளை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு நாம் தொடர்ந்து முயற்சி செய்யலாம். எந்தக் கருவியை எப்போது பயன்படுத்தலாம் என்று நாமே முடிவு செய்துகொள்ளலாம். வெறுமனே பிரசுரங்களைக் கொடுப்பது மட்டுமே நம்முடைய நோக்கம் கிடையாது. நம்முடைய செய்தியின் மேல் ஆர்வம் இல்லாதவர்களுக்கு நாம் பிரசுரங்களைக் கொடுப்பதில்லை. நல்மனமுள்ள, மனத்தாழ்மையுள்ள, கடவுளைப் பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிற, ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையுள்ள’ ஆட்களை சீஷர்களாக்குவதுதான் நம்முடைய குறிக்கோள்!—அப். 13:48; மத். 28:19, 20.

^ பாரா. 5 ஆகஸ்ட் 1, 2010 காவற்கோபுரத்தில் (ஆங்கிலம்) வெளிவந்த “தச்சர்” என்ற கட்டுரையையும் “தச்சருடைய கருவிகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.

^ பாரா. 16 ஒரு நபருக்கு வாசிக்கத் தெரியவில்லை என்றால், கடவுள் சொல்வதைக் கேளுங்கள் என்ற சிற்றேட்டில் இருக்கிற படங்களைப் பார்க்கும்படி அவரிடம் சொல்லலாம். இந்தச் சிற்றேட்டில் பெரும்பாலும் படங்கள்தான் இருக்கின்றன.