Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விறுவிறுப்புடன் செயல்படும் தலைவரான கிறிஸ்துவை நம்புங்கள்

விறுவிறுப்புடன் செயல்படும் தலைவரான கிறிஸ்துவை நம்புங்கள்

‘தலைவர் என்று அழைக்கப்படாதீர்கள், கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்.’மத். 23:10.

பாடல்கள்: 108, 99

1, 2. மோசே இறந்த பிறகு யோசுவாவுக்கு என்ன பெரிய வேலை காத்திருந்தது?

யெகோவா சொன்ன வார்த்தைகள் யோசுவாவின் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருந்தன. யெகோவா யோசுவாவிடம், “என் ஊழியன் மோசே இறந்துவிட்டான். இப்போது நீயும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் புறப்பட்டு யோர்தான் ஆற்றைக் கடந்து, நான் கொடுக்கப்போகிற தேசத்துக்குப் போங்கள்” என்று சொல்லியிருந்தார். (யோசு. 1:1, 2) கிட்டத்தட்ட 40 வருஷங்கள் மோசேயின் உதவியாளராக இருந்த யோசுவாவுக்கு இது எவ்வளவு பெரிய மாற்றமாக இருந்திருக்கும்!

2 இஸ்ரவேலர்களை மோசேதான் ரொம்பக் காலமாக வழிநடத்திவந்தார். ஆனால், இப்போது யோசுவா அவர்களை வழிநடத்த வேண்டியிருந்தது. ‘இந்த ஜனங்க என்னை தலைவரா ஏத்துக்குவாங்களா?’ என்று யோசுவா ஒருவேளை யோசித்திருக்கலாம். (உபா. 34:8, 10-12) ஒரு பைபிள் ஆராய்ச்சிப் புத்தகம், யோசுவா 1:1, 2-ஐ மேற்கோள் காட்டி இப்படிச் சொன்னது: “பழங்காலத்திலும் சரி இப்போதும் சரி, ஒரு தேசத்தின் தலைவர் மாறும் சமயம் மிகவும் ஆபத்தான, கஷ்டமான சமயங்களில் ஒன்றாக இருக்கிறது.”

3, 4. தன்மீது நம்பிக்கை வைத்ததற்காக யெகோவா எப்படி யோசுவாவை ஆசீர்வதித்தார், நம் மனதில் என்ன கேள்வி வரலாம்?

3 தனக்குக் கிடைத்த புதிய நியமிப்பை நினைத்து யோசுவா ஒருவேளை பயந்திருக்கலாம். ஆனால், அவர் யெகோவாவின் மேல் நம்பிக்கை வைத்தார்; அவர் கொடுத்த அறிவுரைகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படிந்தார். (யோசு. 1:9-11) தன்மீது நம்பிக்கை வைத்ததற்காக யெகோவா யோசுவாவை ஆசீர்வதித்தார். யோசுவாவையும் இஸ்ரவேலர்களையும் வழிநடத்த அவர் ஒரு தூதரை அனுப்பினார். அந்தத் தூதர், வார்த்தையாக, அதாவது கடவுளுடைய முதல் மகனாக, இருந்திருக்க வேண்டும்.—யாத். 23:20-23; யோவா. 1:1.

4 யோசுவா புதிய தலைவராக ஆனதற்குப் பிறகு வந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இஸ்ரவேல் தேசத்துக்கு யெகோவா உதவினார். இன்றும் பெரிய பெரிய மாற்றங்கள் நடக்கின்றன. அதனால், ‘கடவுளோட அமைப்பு தொடர்ந்து முன்னேறிட்டு இருக்குற இந்த சமயத்துல, நம்மளோட தலைவரான இயேசுமேல நம்பிக்கை வைக்குறதுக்கு நல்ல காரணங்கள் இருக்கா?’ என்று நாம் யோசிக்கலாம். (மத்தேயு 23:10-ஐ வாசியுங்கள்.) இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள, பழங்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டபோதெல்லாம் யெகோவா தன்னுடைய மக்களை எப்படி வழிநடத்தினார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் கடவுளுடைய மக்கள் வழிநடத்தப்படுகிறார்கள்

5. எரிகோவுக்குப் பக்கத்தில் யோசுவா இருந்தபோது, வழக்கத்துக்கு மாறான என்ன சம்பவம் நடந்தது? (ஆரம்பப் படம்)

5 இஸ்ரவேலர்கள் யோர்தான் ஆற்றைக் கடந்த பிறகு, வெகுசீக்கிரத்திலேயே வழக்கத்துக்கு மாறான ஓர் அனுபவம் யோசுவாவுக்குக் கிடைத்தது. எரிகோ நகரத்துக்குப் பக்கத்தில், கையில் வாளோடு நின்றுகொண்டிருந்த ஒரு மனிதரை யோசுவா பார்த்தார். அவர் அந்த மனிதரிடம், “நீங்கள் எங்கள் பக்கமா, எதிரிகள் பக்கமா?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், தான் ‘யெகோவாவுடைய படையின் அதிபதி’ என்று சொன்னார்; கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தயாராக இருந்த ஒரு தூதர்தான் அவர்! இதைக் கேட்டதும் யோசுவாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. (யோசுவா 5:13-15-ஐ வாசியுங்கள்.) யெகோவா நேரடியாக யோசுவாவிடம் பேசியதுபோல் வேறு பதிவுகளில் சொல்லப்பட்டிருந்தாலும், ஒரு தேவதூதரைப் பயன்படுத்திதான் யெகோவா பேசினார் என்று தெரிகிறது. இதற்கு முன்பும் அவர் இப்படிச் செய்திருக்கிறார்.—யாத். 3:2-4; யோசு. 4:1, 15; 5:2, 9; அப். 7:38; கலா. 3:19.

6-8. (அ) தூதர் கொடுத்த சில அறிவுரைகள் ஏன் முட்டாள்தனமாகத் தோன்றியிருக்கலாம்? (ஆ) அவர் கொடுத்த அறிவுரைகள் ஞானமானவைதான் என்றும், அவை சரியான சமயத்தில்தான் கொடுக்கப்பட்டது என்றும் நமக்கு எப்படித் தெரியும்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

6 எரிகோவைக் கைப்பற்றுவதற்கு யோசுவா என்ன செய்ய வேண்டுமென்று அந்தத் தூதர் தெளிவாகச் சொன்னார். அவர் கொடுத்த சில அறிவுரைகள், நல்ல போர் தந்திரம் போல் ஆரம்பத்தில் தோன்றியிருக்காது. ஏனென்றால், போர்வீரர்கள் எல்லாருக்கும் முதலில் விருத்தசேதனம் செய்யும்படி அந்தத் தூதர் சொன்னார். அப்படிச் செய்தால், கொஞ்ச நாளுக்கு அவர்களால் போர் செய்ய முடியாது! அப்படியென்றால், இந்த நேரத்தில் விருத்தசேதனம் செய்வது சரியாக இருக்குமா?—ஆதி. 34:24, 25; யோசு. 5:2, 8

7 ‘ஒருவேள நம்மளோட எதிரிகள் நம்ம முகாம தாக்கினா நம்ம குடும்பங்களோட கதி என்னாகுறது?’ என்று அந்தப் போர்வீரர்கள் யோசித்திருக்கலாம். ஆனால், கொஞ்சம்கூட எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்தது. எரிகோவின் போர்வீரர்கள், இஸ்ரவேலர்களைத் தாக்குவதற்குப் பதிலாக, அவர்களைப் பார்த்துப் பயந்தார்கள். இதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பயந்து, எரிகோ நகரத்தின் வாசல்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. யாரும் வெளியே போகவும் இல்லை, உள்ளே வரவும் இல்லை.” (யோசு. 6:1) இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டது, கடவுள் கொடுக்கும் வழிநடத்துதல்மீது நம்பிக்கை வைக்க இஸ்ரவேலர்களைத் தூண்டியிருக்கும்.

8 எரிகோ நகரத்தைத் தாக்கக் கூடாது என்று அந்தத் தூதர் யோசுவாவிடம் சொன்னார். அதற்குப் பதிலாக, இஸ்ரவேலின் போர்வீரர்கள், தினமும் ஒரு தடவை என்று ஆறு நாட்களுக்கு அந்த நகரத்தைச் சுற்றி அணிவகுத்துப் போக வேண்டியிருந்தது; ஏழாவது நாள், ஏழு தடவை அப்படிச் செய்ய வேண்டியிருந்தது. ‘இப்படி செஞ்சா நேரமும் சக்தியும்தான் வீணாகும்!’ என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், தான் செய்வது சரிதான் என்பது இஸ்ரவேலின் அதிபதியான யெகோவாவுக்குத் தெரிந்திருந்தது. அவர் கொடுத்த அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்ததால், இஸ்ரவேலர்களின் விசுவாசம் பலமானது மட்டுமல்ல, எரிகோவின் போர்வீரர்களோடு சண்டைபோட வேண்டிய அவசியமும் அவர்களுக்கு வரவில்லை!—யோசு. 6:2-5; எபி. 11:30. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

9. கடவுளுடைய அமைப்பு கொடுக்கும் ஒவ்வொரு அறிவுரைக்கும் நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? உதாரணம் கொடுங்கள்.

9 இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்? சிலசமயங்களில், யெகோவாவுடைய அமைப்பு சில விஷயங்களைப் புதுப்புது வழிகளில் செய்கிறது; ஆனால், ஏன் அப்படிச் செய்கிறது என்று ஒருவேளை நமக்குப் புரியாமல் இருக்கலாம். உதாரணத்துக்கு, தனிப்பட்ட படிப்பிலும், ஊழியத்திலும், கூட்டங்களிலும் எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிப் பார்க்கலாம். அப்படிச் செய்வது நன்றாக இருக்குமா என்று நாம் ஆரம்பத்தில் யோசித்திருக்கலாம். ஆனால், அது எவ்வளவு பிரயோஜனமாக இருக்கிறது என்பது இப்போது நமக்குப் புரிகிறது. இதுபோன்ற மாற்றங்களால் வரும் பலன்களைப் பார்க்கும்போது நம்முடைய விசுவாசம் பலமாகிறது. அதோடு, சகோதர சகோதரிகளோடு நம்மால் இன்னும் ஒற்றுமையாக இருக்க முடிகிறது.

ஆரம்பக் கால கிறிஸ்தவர்களை கிறிஸ்து எப்படி வழிநடத்தினார்?

10. விருத்தசேதனத்தைப் பற்றிய விஷயத்தில் முடிவெடுப்பதற்காக, ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தும்படி எருசலேமிலிருந்த ஆளும் குழுவை உண்மையில் வழிநடத்தியது யார்?

10 விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்தைச் சேர்ந்த கொர்நேலியு என்பவர் கிறிஸ்தவராக மாறி 13 வருஷங்கள் கழித்தும், யூத கிறிஸ்தவர்கள் சிலர், விருத்தசேதனம் கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டுமென்று சொன்னார்கள். (அப். 15:1, 2) அந்தியோகியா நகரத்திலிருந்த சகோதரர்கள் இந்த விஷயத்தைப் பற்றி வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள். அதனால், இதைப் பற்றிக் கேட்பதற்காக, எருசலேமிலிருந்த ஆளும் குழுவிடம் பவுலை அனுப்புவதற்கு மூப்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். ஆனால், உண்மையிலேயே இந்த வழிநடத்துதலைக் கொடுத்தது யார்? ‘அங்கே போகும்படி எனக்கு வெளிப்படுத்தப்பட்டது’ என்று பவுல் சொன்னார். விருத்தசேதனத்தைப் பற்றிய விஷயத்தில் ஆளும் குழு முடிவெடுக்க வேண்டுமென்பதற்காக, கிறிஸ்துதான் இந்த வழிநடத்துதலைக் கொடுத்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது!—கலா. 2:1-3

கிறிஸ்துதான் ஆரம்பக் கால கிறிஸ்தவ சபையின் தலைவராக இருந்தார் (பாராக்கள் 10,11)

11. (அ) விருத்தசேதனம் பற்றிய என்ன கருத்து யூத கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்தது? (ஆ) எருசலேமிலிருந்த மூப்பர்களுக்கு மனத்தாழ்மையோடு ஆதரவு கொடுத்ததை பவுல் எப்படிக் காட்டினார்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

11 யூதரல்லாத கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த, ஆளும் குழுவை கிறிஸ்து வழிநடத்தினார். (அப். 15:19, 20) இருந்தாலும், பல வருஷங்களாக யூத கிறிஸ்தவர்கள் தங்கள் மகன்களுக்கு விருத்தசேதனம் செய்துகொண்டிருந்தார்கள். பிறகு, திருச்சட்டத்தை பவுல் மதிப்பதில்லை என்ற வதந்தியை எருசலேமிலிருந்த மூப்பர்கள் கேள்விப்பட்டார்கள். அதனால், திருச்சட்டத்தின் மீது தனக்கு மதிப்பு இருப்பதைக் காட்டும் விதத்தில் பவுல் ஒரு விஷயத்தைச் செய்யும்படி அந்த மூப்பர்கள் சொன்னார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (அப். 21:20-26) அதாவது, நான்கு ஆண்களைக் கூட்டிக்கொண்டு ஆலயத்துக்குப் போகும்படி சொன்னார்கள். இப்படிச் செய்தால் பவுல் திருச்சட்டத்தை மதிக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். ‘இதென்ன முட்டாள்தனமா இருக்கு? நான் ஏன் இதெல்லாம் செய்யணும்? விருத்தசேதனத்த பத்தி யூத கிறிஸ்தவர்கள்தான் சரியா புரிஞ்சிக்கல’ என்று பவுல் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மூப்பர்கள் இதைச் செய்யச் சொன்னார்கள் என்பதை பவுல் புரிந்துகொண்டார். இயேசுவின் மரணத்தோடு திருச்சட்டம் முடிவுக்கு வந்திருந்தபோதிலும், இந்தப் பிரச்சினை அவ்வளவு காலம் தொடரும்படி இயேசு ஏன் அனுமதித்தார் என்ற கேள்வி நம் மனதில் வரலாம்.—கொலோ. 2:13, 14.

12. விருத்தசேதனம் பற்றிய விவாதம் முடிவுக்கு வர கிறிஸ்து ஏன் அவ்வளவு காலம் அனுமதித்தார்?

12 புதிய புரிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ள சிலருக்குக் கொஞ்சக் காலம் எடுக்கலாம். தாங்கள் இனிமேலும் திருச்சட்டத்தின் கீழ் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள, யூத கிறிஸ்தவர்கள் சிலருக்குக் கொஞ்சக் காலம் தேவைப்பட்டது. (யோவா. 16:12) கடவுளோடு தங்களுக்கு இருந்த விசேஷ பந்தத்துக்கு விருத்தசேதனம் ஓர் அடையாளமாக இருக்கிறது என்ற எண்ணம் அவர்களுடைய மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. (ஆதி. 17:9-12) அதுமட்டுமல்ல, யூத சமுதாயத்திலிருந்து வித்தியாசமாக இருந்தால் துன்புறுத்தலைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்று யூத கிறிஸ்தவர்கள் சிலர் பயந்தார்கள். (கலா. 6:12) ஆனால், காலங்கள் போகப்போக அப்போஸ்தலன் பவுலின் கடிதங்கள் மூலம் கிறிஸ்து அவர்களுக்கு இன்னும் அதிகமான வழிநடத்துதல்களைக் கொடுத்தார்.—ரோ. 2:28, 29; கலா. 3:23-25.

தன்னுடைய சபையை கிறிஸ்து இன்றும் வழிநடத்துகிறார்

13. கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்கு ஆதரவு தர எது நமக்கு உதவும்?

13 இன்றும் கிறிஸ்துதான் சபையின் தலைவர்! அதனால், உங்களுக்குப் புரியாத சில மாற்றங்களை அமைப்பு செய்தால், கடந்த காலத்தில் கடவுளுடைய மக்களை கிறிஸ்து எப்படியெல்லாம் வழிநடத்தினார் என்று யோசியுங்கள். யோசுவாவின் காலத்திலும் சரி, அப்போஸ்தலர்களின் காலத்திலும் சரி, கிறிஸ்து ஞானமான வழிநடத்துதல்களைக் கொடுத்தார். கடவுளுடைய மக்களின் விசுவாசத்தை அவை பலப்படுத்தின, ஒற்றுமையாக இருக்கவும் உதவின.—எபி. 13:8.

14-16. நம்முடைய விசுவாசம் பலமாக இருப்பதற்கு இயேசு உதவ விரும்புகிறார் என்பதை, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” தருகிற வழிநடத்துதல் எப்படி நிரூபிக்கிறது?

14 இன்று, நமக்குத் தேவையான வழிநடத்துதலை “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலம் சரியான சமயத்தில் பெற்றுக்கொள்கிறோம். (மத். 24:45) இயேசுவுக்கு நம்மீது அக்கறை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. நான்கு பிள்ளைகளுக்கு அப்பாவான மார்க் இப்படிச் சொல்கிறார்: “குடும்பங்கள தாக்குறது மூலமா சாத்தான் சபைகள பலவீனமாக்குறான். ஒவ்வொரு வாரமும் குடும்ப வழிபாட்ட நடத்துங்கனு சொன்னதிலிருந்து, ‘குடும்ப தலைவர்களே, உங்க குடும்பத்த நீங்க பத்தரமா பாத்துக்கோங்க’னு சொல்றது தெளிவா தெரியுது.”

15 கிறிஸ்து நம்மை எப்படி வழிநடத்துகிறார் என்பதைக் கவனிக்கும்போது, நம்மால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, நம்முடைய விசுவாசம் பலமாக இருப்பதற்கு அவர் உதவ விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பேட்ரிக் என்ற மூப்பர் சொல்வதைக் கவனியுங்கள். “வார இறுதி நாட்கள்ல சின்ன சின்ன தொகுதிகளா ஊழியத்துக்கு கூடிவாங்கனு சொன்னப்போ ஆரம்பத்துல சிலருக்கு கஷ்டமா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். ஆனால், சபையிலிருக்கும் ஒவ்வொருவர்மேலும் இயேசுவுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை இது காட்டுவதாக அவர் சொல்கிறார். எப்படி? கூச்ச சுபாவமுள்ள சில சகோதர சகோதரிகளுக்கு அல்லது ஊழியத்தில் அவ்வளவாகக் கலந்துகொள்ளாதவர்களுக்கு இந்த மாற்றம் உதவியாக இருக்கிறது. அவர்களுடைய சேவையும் முக்கியமானதுதான், பிரயோஜனமானதுதான் என்ற உணர்வை இது அவர்களுக்குத் தந்திருக்கிறது. அவர்களுடைய விசவாசத்தை இது பலப்படுத்தியிருக்கிறது.

16 இன்று உலகத்தில் நடைபெறும் மிக முக்கிய வேலையான பிரசங்க வேலையில் மும்முரமாக ஈடுபடவும் கிறிஸ்து நமக்கு உதவுகிறார். (மாற்கு 13:10-ஐ வாசியுங்கள்.) சமீபத்தில் மூப்பராக நியமிக்கப்பட்ட ஆன்ட்ரே என்ற சகோதரர், அமைப்பிடமிருந்து புதிதாக வரும் எல்லா வழிநடத்துதல்களின்படியும் நடக்க முயற்சி செய்கிறார். “கிளை அலுவலகங்கள்ல இருக்குற ஊழியர்களோட எண்ணிக்கைய குறைக்குறது ஒரு விஷயத்த புரியவைக்குது. நாம எப்பேர்ப்பட்ட காலத்துல வாழ்றோங்குறதையும், ஊழிய வேலைய இன்னும் எவ்வளவு மும்முரமா செய்யணுங்குறதையும் புரியவைக்குது” என்று அவர் சொல்கிறார்.

கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்கு நாம் எப்படி ஆதரவு காட்டலாம்?

17, 18. மாற்றங்களை ஏற்றுக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை யோசித்துப் பார்ப்பது ஏன் நல்லது?

17  நம்முடைய ராஜாவான இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதல்கள், இன்றும் சரி எதிர்காலத்திலும் சரி நமக்குப் பிரயோஜனமாக இருக்கும். சமீபத்தில் வந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டதால் உங்களுக்குக் கிடைத்த நன்மைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கூட்டங்களிலும் ஊழியத்திலும் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், உங்கள் குடும்பத்துக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருந்திருக்கின்றன என்பதைப் பற்றி உங்கள் குடும்ப வழிபாட்டில் கலந்துபேசுங்கள்.

யெகோவாவின் அமைப்பு செய்யும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் உதவுகிறீர்களா? (பாராக்கள் 17, 18)

18 யெகோவாவின் அமைப்பு கொடுக்கும் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியும்போது நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்தால், அந்த அறிவுரைகளின்படி நடப்பது சுலபமாக இருக்கும்; சந்தோஷமும் கிடைக்கும். இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். முன்புபோல் நிறைய பிரசுரங்களை நாம் இப்போது அச்சடிப்பதில்லை. அதனால், நாம் நிறைய பணத்தை மிச்சப்படுத்தியிருக்கிறோம். இன்றிருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், நிறைய பேருக்கு நல்ல செய்தியைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடிந்திருக்கிறது. எலக்ட்ரானிக் வடிவில் வரும் பிரசுரங்களையும், ஆடியோ-வீடியோக்களையும் நம்மால் இன்னும் அதிகமாகப் பயன்படுத்த முடியுமா? இப்படிச் செய்வது கிறிஸ்துவை ஆதரிப்பதற்கான ஒரு வழி! அமைப்பின் வளங்களை நாம் ஞானமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்!

19. கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்கு நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

19 கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படியும்போது, சகோதர சகோதரிகளுடைய விசுவாசம் பலமாவதற்கும் ஒற்றுமை அதிகமாவதற்கும் நம்மால் உதவ முடியும். உலகம் முழுவதிலும் இருக்கிற பெத்தேல் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதைப் பற்றி ஆன்ட்ரே இப்படிச் சொல்கிறார்: “மாற்றங்கள ஏத்துக்கிட்ட பெத்தேல் ஊழியர்களோட மனப்பான்மைய பார்க்குறப்போ, அவங்கமேல இருக்கிற மரியாதையும் கிறிஸ்துவோட வழிநடத்துதல் மேல இருக்கிற நம்பிக்கையும் எனக்கு அதிகமாகுது. அவங்களுக்கு கிடைச்ச நியமிப்ப சந்தோஷமா செய்றது மூலமா யெகோவாவோட பரம ரதம் போற வேகத்துக்கு ஈடுகொடுக்க முயற்சி செய்றாங்க.”

நம்முடைய தலைவர்மேல் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள்

20, 21. (அ) நம் தலைவரான கிறிஸ்துவை நாம் ஏன் நம்பலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்?

20 நம் தலைவரான இயேசு கிறிஸ்து சீக்கிரத்தில் ‘ஜெயித்து முடிப்பார்,’ ‘பிரமிப்பான காரியங்களையும்’ செய்வார். (வெளி. 6:2; சங். 45:4) புதிய உலகத்தில் வாழ்வதற்காக அவர் இப்போதே நம்மைத் தயார்படுத்துகிறார். அதாவது, உயிர்த்தெழுந்து வரும் ஆட்களுக்குக் கற்றுக்கொடுக்கவும், பூமியைப் பூஞ்சோலையாக மாற்றவும் இப்போதே நம்மைத் தயார்படுத்துகிறார்.

21 நம்முடைய ராஜாவும் தலைவருமான இயேசு கிறிஸ்துவை முழுமையாக நம்பும்வரை, நாம் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. என்ன நடந்தாலும் சரி, அவர் நிச்சயம் நம்மைப் புதிய உலகத்துக்கு வழிநடத்துவார். (சங்கீதம் 46:1-3-ஐ வாசியுங்கள்.) மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதுவும், எதிர்பார்க்காத விதங்களில் அவை நம்மைப் பாதிக்கும்போது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மனசமாதானத்தையும் பலமான விசுவாசத்தையும் நாம் எப்படிக் காத்துக்கொள்ளலாம்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 8 எரிகோவின் இடிபாடுகளில், அந்த நகர மக்கள் சாப்பிடாமல் விட்டுவைத்த ஏராளமான தானியங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் எரிகோ நகரத்தைக் கொஞ்ச நாட்கள்தான் முற்றுகை போட்டார்கள் என்றும், அந்த நகரத்தைக் கொள்ளையடிக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் பைபிள் சொல்வது உண்மை என்பதை இது நிரூபிக்கிறது. அது அறுவடைக் காலமாக இருந்ததால், இஸ்ரவேலர்கள் அந்தத் தேசத்தைக் கைப்பற்றுவதற்கு அது சரியான சமயமாக இருந்தது. ஏனென்றால், அங்கிருந்த வயல்களில் அமோக விளைச்சல் இருந்தது.—யோசு. 5:10-12.

^ பாரா. 11 மார்ச் 15, 2003 காவற்கோபுரம், பக்கம் 24-லிருக்கும் “பவுல் மனத்தாழ்மையுடன் சோதனையை சந்திக்கிறார்” என்ற பெட்டியைப் பாருங்கள்.