Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாற்றங்கள் மத்தியிலும் மனசமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்

மாற்றங்கள் மத்தியிலும் மனசமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்

‘என்னை நானே தேற்றிக்கொண்டு . . . நிம்மதியாக இருக்கிறேன்.’—சங். 131:2.

பாடல்கள்: 135, 154

1, 2. (அ) திடீர் மாற்றங்கள் நம்மை எப்படிப் பாதிக்கலாம்? (ஆரம்பப் படம்) (ஆ) சங்கீதம் 131 சொல்கிறபடி, மனசமாதானத்தைக் காத்துக்கொள்ள எது உதவும்?

லாயிட்-அலெக்ஸான்ட்ரா தம்பதி, 25 வருஷங்களுக்கும்மேல் பெத்தேலில் சேவை செய்தார்கள். பிறகு, பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். இந்த நியமிப்பைப் பற்றிக் கேட்டதும் அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. லாயிட் இப்படிச் சொல்கிறார்: “பெத்தேலும் அங்க நான் செஞ்ச வேலையும்தான் என்னோட அடையாளம்னு நினைச்சேன். எங்க நியமிப்புல வந்த மாற்றம் நல்லதுக்காகத்தான்னு என் மனசு சொல்லுச்சு. இருந்தாலும், வாரங்களும் மாதங்களும் போகப்போக, ‘நம்மள ஒதுக்கிட்டாங்களோ’னு அடிக்கடி தோணுச்சு.” நியமிப்பில் வந்த மாற்றம் நல்லது என்று லாயிட் நினைப்பார்; ஆனால், அடுத்த நிமிஷமே மனச்சோர்வால் வாடுவார்.

2 எதிர்பார்க்காத மாற்றங்கள் நம் வாழ்க்கையில் திடீரென்று வரலாம். அதனால், நாம் கவலையிலும் சோர்விலும் மூழ்கிவிடலாம். (நீதி. 12:25) மாற்றங்களை ஏற்றுக்கொள்வதும், அதற்குத் தகுந்தபடி நம்மை மாற்றிக்கொள்வதும் கடினமாக இருக்கும்போது, மனசமாதானத்தைக் காத்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்? (சங்கீதம் 131:1-3-ஐ வாசியுங்கள்.) அன்றும் சரி இன்றும் சரி, யெகோவாவின் ஊழியர்கள் சிலருடைய வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் வந்தபோது, அவர்கள் மனசமாதானத்தை எப்படிக் காத்துக்கொண்டார்கள் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

“தேவசமாதானம்” நமக்கு எப்படி உதவும்?

3. யோசேப்பின் வாழ்க்கை எப்படி திடீரென்று மாறியது?

3 யோசேப்பின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். யாக்கோபின் செல்லப் பிள்ளையாக அவர் இருந்தார். அதனால், அவருடைய சகோதரர்கள் அவர்மேல் பொறாமைப்பட்டார்கள். அவருக்கு 17 வயது இருந்தபோது அவர்கள் அவரை அடிமையாக விற்றுவிட்டார்கள். (ஆதி. 37:2-4, 23-28) கிட்டத்தட்ட 13 வருஷங்கள் அவர் எகிப்தில் கஷ்டங்களை அனுபவித்தார்; முதலில் ஓர் அடிமையாகவும், பிறகு ஒரு சிறைக்கைதியாகவும் இருந்தார். தன்னுடைய அன்பான அப்பாவிடமிருந்தும் அவர் ரொம்பத் தூரத்தில் இருந்தார். நம்பிக்கை இழந்துவிடவும் கோபப்படவும் அவருக்கு எல்லா காரணங்களும் இருந்தன! ஆனால், துவண்டுவிடாமல் இருக்க எது அவருக்கு உதவியது?

4. (அ) சிறையில் இருந்தபோது யோசேப்பு என்ன செய்தார்? (ஆ) யோசேப்பு செய்த ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார்?

4 சிறையில் கஷ்டப்பட்ட சமயத்தில், யெகோவா தனக்கு எப்படியெல்லாம் உதவுகிறார் என்ற விஷயத்தின் மீது யோசேப்பு தன் கவனத்தை ஒருமுகப்படுத்தியிருப்பார்! (ஆதி. 39:21; சங். 105:17-19) அவருடைய இளவயதில், எதிர்காலத்தில் நடக்கவிருந்த விஷயங்களை கனவுகளின் மூலம் யெகோவா வெளிப்படுத்தியிருந்தார். அதைப் பற்றியும் யோசேப்பு நினைத்துப் பார்த்திருப்பார்; யெகோவா தன்னோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையை அது கொடுத்திருக்கும். (ஆதி. 37:5-11) அதோடு, யெகோவாவிடம் அடிக்கடி ஜெபம் செய்திருப்பார்; தன் மனதில் இருப்பதையெல்லாம் அவரிடம் கொட்டியிருப்பார். (சங். 145:18) எல்லா சூழ்நிலையிலும் யோசேப்போடு இருப்பதாக நம்பிக்கை அளிப்பதன் மூலம் யெகோவா அவருக்குப் பதில் கொடுத்தார்.—அப். 7:9, 10. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

5. யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்வதில் உறுதியாக இருக்க “தேவசமாதானம்” எப்படி நமக்கு உதவும்?

5 எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் ‘தேவசமாதானத்தை’ நம்மால் அனுபவிக்க முடியும். அது நம் ‘மனதை’ பாதுகாக்கும்; மனஅமைதியோடு இருக்க உதவும். (பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.) கவலைகளும் அழுத்தங்களும் நம்மைத் திணறடிக்கும்போது, சோர்ந்துவிடாமல் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான பலத்தை “தேவசமாதானம்” நமக்குக் கொடுக்கும். இதை அனுபவித்த சகோதர சகோதரிகளுடைய உதாரணத்தை இப்போது பார்க்கலாம்.

மறுபடியும் மனசமாதானத்தை அனுபவிக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள்

6, 7. ஜெபம் செய்வது நமக்கு எப்படி மனசமாதானத்தைத் தரும்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

6 ரயன்-ஜூலியட் தம்பதி தற்காலிக விசேஷ பயனியர்களாகச் சேவை செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், அந்த நியமிப்பு முடிவுக்கு வந்துவிட்டதைக் கேள்விப்பட்டபோது அவர்கள் சோர்ந்துவிட்டார்கள். “உடனடியா யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சோம். அவர்மேல எங்களுக்கு இருக்குற நம்பிக்கைய நிரூபிக்கிறதுக்கு இது ஒரு அருமையான வாய்ப்புனு எங்களுக்கு தெரியும். எங்க சபையில இருந்த நிறைய பேர் சத்தியத்துக்கு புதுசா வந்தவங்க; விசுவாசத்த காட்டுற விஷயத்துல நாங்க அவங்களுக்கு நல்ல முன்மாதிரி வைக்குறதுக்கு உதவுங்கனு யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சோம்” என்று ரயன் சொல்கிறார்.

7 அவர்களுடைய ஜெபத்துக்கு யெகோவா எப்படிப் பதில் தந்தார்? “ஜெபம் செஞ்சு முடிச்ச உடனே எங்க மனசுல இருந்த கவலைகளும் சந்தேகங்களும் பறந்து போயிடுச்சு. தேவசமாதானம் எங்களோட இதயத்தையும் மனதையும் பாதுகாத்துச்சு. தொடர்ந்து நல்ல மனப்பான்மையோடு இருந்தா, யெகோவாவுக்கு பிரயோஜனமான ஆட்களா இருக்க முடியுங்குறத புரிஞ்சிக்கிட்டோம்” என்று ரயன் சொல்கிறார்.

8-10. (அ) கவலைகள் நம்மைத் திணறடிக்கும்போது கடவுளுடைய சக்தி எப்படி உதவும்? (ஆ) யெகோவாவுடைய சேவையில் முழு கவனம் செலுத்தும்போது அவர் நமக்கு எப்படி உதவுவார்?

8 மனசமாதானத்தை அனுபவிக்க கடவுளுடைய சக்தி நமக்கு உதவும். அதோடு, வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிற வசனங்களை மனதுக்குக் கொண்டுவரவும் அந்தச் சக்தி நமக்கு உதவும். (யோவான் 14:26, 27-ஐ வாசியுங்கள்.) பிலிப்பு-மேரி தம்பதியின் அனுபவத்தைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட 25 வருஷங்கள் அவர்கள் பெத்தேலில் சேவை செய்தார்கள். அவர்கள் இரண்டு பேருடைய அம்மாக்களும், நான்கு மாதத்துக்குள், ஒருவருக்குப் பின் ஒருவராக இறந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, பிலிப்புவின் சொந்தக்காரர் ஒருவரும் இறந்துவிட்டார். டெமென்ஷியா என்ற நோயால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மேரியின் அப்பாவையும் அவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

9 பிலிப்பு இப்படிச் சொல்கிறார்: “இதெல்லாத்தையும் நான் நல்லபடியா சமாளிச்சிட்டு இருக்கிறதாத்தான் நினைச்சேன். ஆனா, ஏதோ ஒரு குறை இருக்குறது எனக்கு தெரிய வந்துச்சு. ஒரு காவற்கோபுர படிப்பு கட்டுரையில கொலோசெயர் 1:11-ஐ படிச்சேன். நான் சகிச்சிக்கிட்டுதான் இருந்தேன், ஆனா ‘எல்லாத்தையும் பொறுமையோடும் சந்தோஷத்தோடும்’ சகிச்சிக்கிட்டு இல்லைனு புரிஞ்சிக்கிட்டேன். சந்தோஷங்குறது நம்மளோட சூழ்நிலைய பொறுத்து கிடையாதுங்குறதயும், கடவுளோட சக்தி நம்ம வாழ்க்கையில எந்தளவு செயல்படுதோ, அத பொறுத்துதான் இருக்குங்குறதயும் இந்த வசனம் எனக்கு ஞாபகப்படுத்துச்சு.”

10 யெகோவாவுடைய சேவையில் தங்களுடைய முழு கவனத்தையும் செலுத்தியதால், அவருடைய ஆசீர்வாதங்களை பிலிப்பு-மேரி தம்பதி நிறைய விதங்களில் அனுபவித்தார்கள். அவர்கள் பெத்தேலை விட்டுப்போனவுடனே, முன்னேறுகிற பைபிள் படிப்புகள் கிடைத்தன. ஒரு வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை படிப்பு நடத்தச் சொல்லி அந்த பைபிள் மாணாக்கர்கள் அவர்களைக் கேட்டுக்கொண்டார்கள். “எங்க சந்தோஷமே அவங்கதான்! எல்லாமே நல்லபடியாதான் போகும்னு யெகோவா எங்ககிட்ட சொல்ற மாதிரி இருந்துச்சு” என்று மேரி சொல்கிறார்.

யெகோவா உங்களை ஆசீர்வதிக்க வாய்ப்புக் கொடுங்கள்

வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நாம் எப்படி யோசேப்பைப் பின்பற்றலாம்? (பாராக்கள் 11-13)

11, 12. (அ) யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு யோசேப்பு எப்படித் தன்னால் முடிந்த சிறந்ததைச் செய்தார்? (ஆ) யோசேப்பை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?

11 வாழ்க்கை திடீரென்று மாறும்போது, நாம் கவலையில் மூழ்கிவிடலாம்; நம்முடைய பிரச்சினைகள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரியலாம். யோசேப்புக்கும் கவலையில் மூழ்கிவிடுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், பிரச்சினைகள் மத்தியிலும் தன்னால் முடிந்த சிறந்ததை அவர் செய்தார். போத்திபாருக்காக கடினமாக உழைத்தார். அதேபோல், சிறையில் இருந்தபோதும் கடினமாக உழைத்தார்; காவலர்களுடைய தலைவர் சொன்ன எல்லா வேலைகளையும் செய்தார்.—ஆதி. 39:21-23.

12 ஒருநாள், சிறைக்கைதிகள் இரண்டு பேரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு யோசேப்புக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் பார்வோனின் அரண்மனையில் வேலை செய்தவர்கள். அவர்களிடம் யோசேப்பு தயவாக நடந்துகொண்டதால், தங்களுடைய கவலைகளைப் பற்றியும், முந்தினநாள் ராத்திரி தாங்கள் கண்ட குழப்பமான கனவைப் பற்றியும் யோசேப்பிடம் மனம் திறந்து சொன்னார்கள். (ஆதி. 40:5-8) அவர்களோடு பேசியது தன்னுடைய விடுதலைக்கு வழி செய்யுமென்று யோசேப்பு அப்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், இரண்டு வருஷங்களுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியாக ஆனார். பார்வோனுக்கு அடுத்ததாக இவர்தான் அதிகாரம் படைத்தவராக இருந்தார்.—ஆதி. 41:1, 14-16, 39-41.

13. எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

13 யோசேப்பைப் போல, கட்டுப்படுத்த முடியாத சில சூழ்நிலைகளில் நாமும் மாட்டிக்கொள்ளலாம். ஆனால், நாம் பொறுமையாக இருக்கும்போதும், நம்மால் முடிந்த சிறந்ததைச் செய்யும்போதும் யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார். (சங். 37:5) ஒருவேளை, நாம் குழப்பத்திலும் கவலையிலும் இருக்கலாம். ஆனாலும், நாம் “நம்பிக்கை இல்லாமல் விட்டுவிடப்படுவதில்லை” அல்லது நாம் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. (2 கொ. 4:8, அடிக்குறிப்பு) ஏனென்றால், யெகோவா நிச்சயம் நம்மோடு இருப்பார். அதுவும், ஊழியத்தில் நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்தினால் அவர் நம்மை கைவிடவே மாட்டார்.

ஊழியத்தில் முழு கவனம் செலுத்துங்கள்

14-16. தன்னுடைய வாழ்க்கை மாறியபோதும் நற்செய்தியாளரான பிலிப்பு எப்படி ஊழியத்துக்கு முழு கவனம் செலுத்தினார்?

14 வாழ்க்கையில் மாற்றங்கள் வந்தபோதிலும் ஊழியத்தில் முழு கவனம் செலுத்திய ஒருவர்தான் நற்செய்தியாளரான பிலிப்பு. ஒருசமயம், எருசலேமில் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த புதிய நியமிப்பை அவர் சந்தோஷமாகச் செய்துகொண்டிருந்தார். (அப். 6:1-6) திடீரென்று சூழ்நிலை தலைகீழாக மாறியது. ஸ்தேவான் கொலை செய்யப்பட்ட பிறகு, கிறிஸ்தவர்களுக்குப் பயங்கரமான துன்புறுத்தல் வந்தது. அதனால், அவர்கள் எருசலேமைவிட்டுத் தப்பியோட வேண்டியிருந்தது. இருந்தாலும், யெகோவாவின் சேவையைச் சுறுசுறுப்பாகச் செய்ய பிலிப்பு விரும்பியதால், அவர் சமாரியாவுக்குப் போனார். ஏனென்றால், அங்கிருந்த மக்கள் அதுவரை நல்ல செய்தியைக் கேட்டதே இல்லை!—மத். 10:5; அப். 8:1, 5

15 கடவுளுடைய சக்தி தன்னை வழிநடத்திய இடங்களுக்கெல்லாம் போக பிலிப்பு தயாராக இருந்தார். அதனால், நல்ல செய்தி இன்னமும் போய் எட்டாத இடங்களில் பிரசங்கிக்க அவரை யெகோவா பயன்படுத்தினார். யூதர்களில் நிறைய பேர், சமாரியர்களை மட்டமாகப் பார்த்தார்கள்; அவர்களை மோசமாகவும் நடத்தினார்கள். ஆனால், பிலிப்புக்கு அவர்களைப் பற்றிய எந்தத் தப்பெண்ணமும் இருக்கவில்லை. நல்ல செய்தியை அவர்களிடம் ஆர்வமாகப் பிரசங்கித்தார்; அவர்களும் பிலிப்பு சொன்னதை “கூர்ந்து கேட்டார்கள்.”—அப். 8:6-8.

16 அடுத்து, மற்ற தேசத்து மக்கள் அதிகமாகக் குடியிருந்த நகரங்களான அஸ்தோத் மற்றும் செசரியாவுக்குப் போய்ப் பிரசங்கிக்கும்படி கடவுளுடைய சக்தி பிலிப்புவை வழிநடத்தியது. (அப். 8:39, 40) அவருடைய வாழ்க்கை மறுபடியும் மாறியது. இப்போது, ஒரு குடும்பஸ்தனாக அவர் அங்கேயே தங்கிவிட்டார். தன்னுடைய வாழ்க்கை மாறியபோதும் அவர் ஊழியத்தில் முழு கவனம் செலுத்தினார். அவரையும் அவருடைய குடும்பத்தையும் யெகோவா தொடர்ந்து ஆசீர்வதித்தார்.—அப். 21:8, 9.

17, 18. வாழ்க்கையில் சில மாற்றங்கள் வரும்போது, ஊழியத்தில் முழு கவனம் செலுத்துவது நமக்கு எப்படி உதவுகிறது?

17 மாற்றங்களின் மத்தியிலும் சந்தோஷத்தையும் நம்பிக்கையான மனப்பான்மையையும் தக்கவைத்துக்கொள்ள, ஊழியத்தில் முழு கவனம் செலுத்துவது உதவுவதாக முழுநேர ஊழியர்கள் நிறைய பேர் சொல்கிறார்கள். ஒஸ்பார்ன்-பொலைட் தம்பதியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர்கள் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். பெத்தேலை விட்டு வெளியே வந்த சமயத்தில், பகுதிநேர வேலையும் தங்குவதற்கு ஒரு வீடும் கிடைப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்காது என்று அவர்கள் நினைத்தார்கள். “நாங்க எதிர்பார்த்த மாதிரி அவ்வளவு சீக்கிரம் வேலை கிடைக்கவே இல்லை” என்று ஒஸ்பார்ன் சொல்கிறார். அவருடைய மனைவி பொலைட் இப்படிச் சொல்கிறார்: “மூணு மாசத்துக்கு எங்களுக்கு வேலையே கிடைக்கல. எங்ககிட்ட எந்த சேமிப்பும் இல்லை. சமாளிக்குறது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு.”

18 எது அவர்களுக்கு உதவியது? “சபையில இருந்தவங்களோட சேர்ந்து ஊழியம் செஞ்சது, மனச ஒருமுகப்படுத்துறதுக்கும் நம்பிக்கையான மனப்பான்மைய தக்கவைச்சிக்குறதுக்கும் ரொம்ப உதவியா இருந்துச்சு” என்று ஒஸ்பார்ன் சொல்கிறார். வீட்டில் உட்கார்ந்துகொண்டு கவலைப்படுவதற்குப் பதிலாக ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட அவர்கள் முடிவு செய்தார்கள். இப்படிச் செய்தது அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. “நிறைய இடங்கள்ல வேலை தேடுனோம். கடைசியில ஒரு வேலை கிடைச்சுது” என்று ஒஸ்பார்ன் சொல்கிறார்.

யெகோவாவை முழுமையாக நம்புங்கள்

19-21. (அ) மனசமாதானத்தோடு இருக்க எது உதவும்? (ஆ) திடீர் மாற்றத்துக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்வது எப்படி உதவியாக இருக்கும்?

19 இதுவரை பார்த்ததுபோல், நம்முடைய சூழ்நிலையை நல்லபடியாக பயன்படுத்தும்போதும், யெகோவாவின் மேல் முழு நம்பிக்கை வைக்கும்போதும், நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் சரி, நம்மால் மனசமாதானத்தோடு இருக்க முடியும். (மீகா 7:7-ஐ வாசியுங்கள்.) வாழ்க்கையில் வரும் மாற்றங்களுக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ளும்போது, உண்மையில் யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம்தான் பலப்படுகிறது என்பதை காலப்போக்கில் புரிந்துகொள்வோம். கஷ்டமான சூழ்நிலைகள் வரும்போது யெகோவாவை உண்மையிலேயே நம்பியிருப்பது என்றால் என்ன என்பதை, தங்களுடைய நியமிப்பில் ஏற்பட்ட மாற்றம் தங்களுக்குக் கற்றுத்தந்ததாக பொலைட் சொல்கிறார். “யெகோவாவோட எனக்கு இருக்கிற பந்தம் இப்போ இன்னும் பலமாகியிருக்கு” என்று அவர் சொல்கிறார்.

20 முன்பு பார்த்த மேரி என்ற சகோதரி, இப்போதும் பயனியர் சேவை செய்துகொண்டே தன் அப்பாவையும் கவனித்துக்கொள்கிறார். “ரொம்ப கவலையா இருக்கிற சமயத்துல, கவலைபடுறத நிறுத்திட்டு ஜெபம் செய்யணும்னும், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணணும்னும் கத்துக்கிட்டேன். இன்னொரு முக்கியமான பாடத்தையும் கத்துக்கிட்டேன். அதாவது, யெகோவா கையில எல்லாத்தையும் விட்டுடணும்! இது எதிர்காலத்துலயும் எனக்கு ரொம்ப உதவியா இருக்குங்குறதுல சந்தேகமே இல்ல” என்று அவர் சொல்கிறார்.

21 வாழ்க்கையில் வந்த மாற்றங்கள், எதிர்பார்க்காத விதங்களில் தங்களுடைய விசுவாசத்தைச் சோதித்ததாக லாயிட்-அலெக்ஸான்ட்ரா தம்பதி சொல்கிறார்கள். இருந்தாலும், இந்தச் சோதனைகள் தங்களுக்கு உண்மையிலேயே உதவியதை அவர்களால் உணர முடிந்தது. “எங்களுக்கு வந்த விசுவாச பரீட்சைகள், எங்களுக்கு உண்மையான விசுவாசம் இருக்காங்குறதையும், கஷ்டமான சமயங்கள்ல தேவையான ஆறுதலையும் பலத்தையும் தர்ற அளவுக்கு எங்களோட விசுவாசம் பலமா இருக்காங்குறதயும் சோதிச்சுது. இன்னும் நல்ல நபர்களாக அது எங்கள மாத்துச்சு” என்று அவர்கள் சொல்கிறார்கள்.

எதிர்பார்க்காத மாற்றங்கள் எதிர்பார்க்காத ஆசீர்வாதங்களைத் தரலாம்! (பாராக்கள் 19-21)

22. நம்மால் முடிந்த சிறந்ததைச் செய்தால் எதை நினைத்து நாம் நிச்சயமாக இருக்கலாம்?

22 மாற்றங்கள், மாற்ற முடியாதவை! அதுவும், நாம் வாழும் இந்தக் காலத்தில் அது ரொம்பவே உண்மை! ஒருவேளை, யெகோவாவின் சேவையில் நமக்கு வேறொரு நியமிப்பு கிடைக்கலாம்; நமக்கு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம்; குடும்பத்தில் இருக்கும் ஒருவரை கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம். என்ன நடந்தாலும் சரி, யெகோவாவுக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது என்பதையும், சரியான நேரத்தில் அவர் உங்களுக்கு உதவுவார் என்பதையும் உறுதியாக நம்புங்கள். (எபி. 4:16; 1 பே. 5:6, 7) இப்போது இருக்கும் சூழ்நிலையில் உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள். உங்கள் அப்பாவான யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்; அவரையே நம்பியிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இதையெல்லாம் செய்தால், வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் வந்தாலும் யெகோவா தரும் தேவசமாதானம் உங்களோடு இருக்கும்.

^ பாரா. 4 பல வருஷங்களுக்குப் பிறகு, தன் மூத்த மகனுக்கு மனாசே என்று யோசேப்பு பெயர் வைத்தார். அதற்கான காரணத்தை இப்படிச் சொன்னார்: “என்னுடைய எல்லா பிரச்சினைகளையும் . . . நான் மறக்கும்படி கடவுள் செய்தார்.” தன்னை ஆறுதல்படுத்துவதற்காக யெகோவா கொடுத்த பரிசுதான் அந்த மகன் என்று யோசேப்பு புரிந்துகொண்டார்.—ஆதி. 41:51, அடிக்குறிப்பு.