Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

துன்புறுத்தப்பட்டபோது சீஷரான ஸ்தேவானால் எப்படி அந்தளவு மனசமாதானத்தோடு இருக்க முடிந்தது?

தன்னை வெறுக்கும் ஒரு கும்பலின் நடுவில் ஸ்தேவான் நின்றுகொண்டிருக்கிறார். அவரைச் சுற்றியிருந்தவர்கள் இஸ்ரவேல் தேசத்திலிருந்த உச்ச நீதிமன்றத்தின், அதாவது நியாயசங்கத்தின், நீதிபதிகள். அந்த 71 நீதிபதிகளும் அந்தத் தேசத்திலேயே மிகவும் அதிகாரம் படைத்தவர்கள். தலைமைக் குருவான காய்பாதான் இவர்களைக் கூடிவரச் சொல்லியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னால் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட சமயத்திலும், இவர்தான் நியாயசங்கத்தை தலைமைதாங்கினார். (மத். 26:57, 59; அப். 6:8-12) இப்போது, பொய் சாட்சி சொல்ல ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்கிறார்கள். அந்தச் சமயத்தில், ஆச்சரியமான ஒரு விஷயத்தை அவர்கள் கவனிக்கிறார்கள். ஸ்தேவானின் முகம் ‘ஒரு தேவதூதரின் முகம்போல் இருக்கிறது!’—அப். 6:13-15.

பயமுறுத்துகிற ஒரு சூழ்நிலையிலும் ஸ்தேவானால் எப்படி மனசமாதானத்தோடும் சாந்தத்தோடும் இருக்க முடிந்தது? நியாயசங்கத்துக்கு இழுத்துவரப்படுவதற்கு முன்பு, கடவுளுடைய சக்தி நிறைந்தவராக, கடவுளுடைய வேலையை அவர் மும்முரமாகச் செய்துகொண்டிருந்தார். (அப். 6:3-7) இப்போதும் அதே சக்திதான் அவருக்கு உதவுகிறது; ஆறுதல்படுத்துகிறவராகவும் நினைப்பூட்டுபவராகவும் அது செயல்படுகிறது. (யோவா. 14:16, அடிக்குறிப்பு) அப்போஸ்தலர் 7-ம் அதிகாரத்தில் இருக்கிறபடி, எபிரெய வேதாகமத்திலிருந்து கிட்டத்தட்ட 20-க்கும் அதிகமான பகுதிகளை மேற்கோள் காட்டி, அவர் தைரியமாக தன் தரப்பு வாதத்தை முன்வைக்கிறார். கடவுளுடைய சக்திதான் இந்த வசனங்களை அவருக்கு ஞாபகப்படுத்தியது. (யோவா. 14:26) அதோடு, கடவுளுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதை அவர் ஒரு தரிசனத்தில் பார்க்கிறார். இதுவும் ஸ்தேவானின் விசுவாசத்தை ரொம்பவே பலப்படுத்துகிறது.—அப். 7:54-56, 59, 60.

இதுபோன்ற மிரட்டல்களும் துன்புறுத்தல்களும் நமக்கும் ஒருநாள் வரலாம். (யோவா. 15:20) கடவுளுடைய வார்த்தையைத் தினமும் படித்தால்... ஊழியத்தை மும்முரமாகச் செய்தால்... கடவுளுடைய சக்தி நம்மில் செயல்படும். அதோடு, எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கான பலமும் கிடைக்கும்; மனஅமைதியையும் நம்மால் காத்துக்கொள்ள முடியும்.—1 பே. 4:12-14.