Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவை நம்புங்கள் என்றென்றும் வாழுங்கள்!

யெகோவாவை நம்புங்கள் என்றென்றும் வாழுங்கள்!

“யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு. உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே.”—நீதி. 3:5.

பாடல்கள்: 152, 49

1. எல்லாருக்கும் ஏன் ஆறுதல் தேவை?

ஆறுதல்! இது தேவைப்படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? கவலைகளாலும் ஏமாற்றங்களாலும் ஒருவேளை நம் வாழ்க்கை நிறைந்திருக்கலாம். நோயாலோ வயதாவதாலோ நாம் கஷ்டப்படலாம் அல்லது அன்பானவர்களின் இழப்பு நம்மை வாட்டலாம். நம்மில் சிலர், மற்றவர்களால் தவறாக நடத்தப்படுகிறோம். அதோடு, நாட்கள் போகப்போக நம்மைச் சுற்றியிருக்கிற மக்கள் ரொம்பவே முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள். இந்தளவுக்கு ‘நிலைமை படுமோசமாக இருப்பதால்,’ நாம் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு நாள் போகப்போக, புதிய உலகத்தை நோக்கி ஒருபடி நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்றே சொல்லலாம். (2 தீ. 3:1) இருந்தாலும், யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்ப்பதற்காக நாம் ரொம்ப வருஷங்கள் காத்துக்கொண்டிருக்கலாம்; நம்முடைய கஷ்டங்களும் அதிகமாகிக்கொண்டே வரலாம். அப்படியென்றால், நமக்கு எங்கிருந்துதான் ஆறுதல் கிடைக்கும்?

2, 3. (அ) ஆபகூக்கைப் பற்றி நமக்குத் தெரிந்த சில விவரங்கள் என்ன? (ஆ) ஆபகூக் புத்தகத்தைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

2 ஆபகூக் புத்தகத்தில் இதற்கான பதில் இருக்கிறது. இந்தப் புத்தகத்தில், ஆபகூக்கின் வாழ்க்கையைப் பற்றிய விலாவாரியான தகவல்கள் இல்லையென்றாலும், இது உண்மையிலேயே நமக்கு உற்சாகத்தைத் தருகிற ஒரு புத்தகம்! ஆபகூக் என்ற பெயருக்கு, “இறுக்கமாகக் கட்டிப்பிடித்தல்” என்பது அர்த்தமாக இருக்கலாம். தன்னுடைய ஊழியர்களை ஆறுதல்படுத்துவதற்காக, அவர்களை யெகோவா அன்பாகக் கட்டித் தழுவுவதை இது குறிக்கலாம். அல்லது, யெகோவாவின் ஊழியர்கள் அவரை இறுக்கமாகப் பிடித்துக்கொள்வதையும் இது குறிக்கலாம். யெகோவாவிடம் ஆபகூக் சில கேள்விகளைக் கேட்டதைப் பற்றி இந்தப் புத்தகம் சொல்கிறது. தனக்கும் ஆபகூக்குக்கும் நடந்த உரையாடல் நமக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான், அதைப் பதிவு செய்யும்படி ஆபகூக்கைத் தூண்டினார்.—ஆப. 2:2.

3 நம்பிக்கையிழந்துபோன இந்தத் தீர்க்கதரிசிக்கும் யெகோவாவுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆபகூக் புத்தகத்தில் இருக்கிறது. ஆபகூக்கைப் பற்றிய இந்தத் தகவலை மட்டுமே பைபிள் தந்தாலும், ‘அன்று எழுதப்பட்ட வேதவசனங்களில்’ இந்தப் புத்தகமும் ஒன்று! இது ‘நமக்கு நம்பிக்கை தருகிறது. . . . நம்மை ஆறுதல்படுத்துகிறது, சகித்திருக்க நமக்கு உதவுகிறது.’ (ரோ. 15:4) நம் ஒவ்வொருவருக்கும் ஆபகூக் புத்தகம் எப்படி உதவும்? யெகோவாமீது நம்பிக்கை வைப்பது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்! அதோடு, எவ்வளவு பெரிய பிரச்சினையை அல்லது சோதனையை நாம் சமாளித்துக்கொண்டிருந்தாலும், நம்மால் மனசமாதானத்தோடு இருக்க முடியும் என்ற உறுதியை ஆபகூக் தீர்க்கதரிசனம் தருகிறது.

யெகோவாவிடம் பேசுங்கள்

4. ஆபகூக்கின் வேதனைக்கு என்ன காரணம்?

4 ஆபகூக் 1:2, 3-ஐ வாசியுங்கள். ரொம்பவே கஷ்டமான ஒரு காலத்தில் ஆபகூக் வாழ்ந்தார். அவரைச் சுற்றியிருந்த மக்கள் படுமோசமானவர்களாக, வன்முறையில் ஈடுபடுகிறவர்களாக இருந்தார்கள். இது ஆபகூக்குக்கு தாங்க முடியாத வேதனையாக இருந்தது. எங்கு பார்த்தாலும், இஸ்ரவேலர்கள், ஒருவரை ஒருவர் கொடூரமாகவும் அநியாயமாகவும் நடத்தினார்கள். அதனால், ‘இந்த அக்கிரமத்துக்கெல்லாம் என்னைக்கு முடிவு வரும்? இவ்வளவு வருஷங்களாகியும் யெகோவா ஏன் இதுக்கு முடிவு கட்ட மாட்டேங்கறாரு?’ என்று அவர் யோசித்தார். ஆபகூக்கின் நம்பிக்கைச் சுடர் மங்கிவிட்டது! அதனால், ஏதாவது செய்யும்படி யெகோவாவிடம் அவர் கதறினார். தன்னுடைய மக்கள்மீது யெகோவாவுக்கு அக்கறை இல்லை என்று அல்லது அவர் செயலில் இறங்கவே மாட்டார் என்று ஆபகூக் நினைக்க ஆரம்பித்திருக்கலாம். நீங்கள் எப்போதாவது இப்படி நினைத்திருக்கிறீர்களா?

5. ஆபகூக் புத்தகம் நமக்கு என்ன பாடத்தைச் சொல்லித்தருகிறது? (ஆரம்பப் படம்)

5 அப்படியென்றால், யெகோவாமீதும் அவருடைய வாக்குறுதிகள்மீதும் வைத்திருந்த நம்பிக்கையை இழந்ததால்தான் ஆபகூக் அந்தக் கேள்விகளைக் கேட்டாரா? இல்லவே இல்லை! யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்ததால்தான் தன்னுடைய சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் அவரிடம் சொன்னார். ஆபகூக் கவலையிலும் குழப்பத்திலும் இருந்தார். செயலில் இறங்க யெகோவா ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறார் என்றும், இந்தளவு கஷ்டப்படும்படி ஏன் தன்னை விட்டுவிட்டார் என்றும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆபகூக்கின் கவலைகளையெல்லாம் பதிவு செய்யும்படி யெகோவா அவரைத் தூண்டியதிலிருந்து முக்கியமான ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். அதாவது, நம்முடைய கவலைகளையும் சந்தேகங்களையும் யெகோவாவிடம் சொல்வதற்கு நாம் பயப்படக் கூடாது! ஜெபம் செய்யும்படி அவர் நம்மை அன்போடு அழைக்கிறார், நம் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டும்படி நம்மிடம் சொல்கிறார்! (சங். 50:15; 62:8) “யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு. உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே” என்று நீதிமொழிகள் 3:5 நம்மை உற்சாகப்படுத்துகிறது. இந்த வார்த்தைகளின்படி ஆபகூக் செய்தார்.

6. ஜெபம் செய்வது ஏன் முக்கியம்?

6 தன்னுடைய பரலோக அப்பாவும் நண்பருமான யெகோவாமீது ஆபகூக் நம்பிக்கை வைத்திருந்தார்; யெகோவாவிடம் நெருங்கிப்போவதற்கு முதல்படி எடுத்தார். தன்னுடைய சூழ்நிலையை மட்டுமே நினைத்து அவர் கவலைப்படவும் இல்லை, தானாகவே நிலைமையைச் சரிசெய்ய முயற்சி செய்யவும் இல்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய உணர்வுகளையும் கவலைகளையும் சொல்லி ஜெபம் செய்தார். நமக்கு அருமையான முன்மாதிரி, இல்லையா? ஜெபத்தைக் கேட்கிறவரான யெகோவா, தன்னிடம் ஜெபம் செய்யும்படியும், நம்முடைய கவலைகளையெல்லாம் தன்னிடம் கொட்டும்படியும் நம்மிடம் சொல்கிறார். இப்படிச் செய்வதன் மூலம், அவர்மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையைக் காட்டும்படி சொல்கிறார். (சங். 65:2) இதைச் செய்தால், நம் ஜெபத்துக்கு அவர் எப்படிப் பதில் தருகிறார் என்பதை நம்மால் பார்க்க முடியும். அவர் நம்மை ஆறுதல்படுத்தும்போதும் வழிநடத்தும்போதும், அவருடைய அன்பான அரவணைப்பை நம்மால் உணர முடியும். (சங். 73:23, 24) நாம் எப்பேர்ப்பட்ட சோதனையை அனுபவித்தாலும், நம் சூழ்நிலையை யெகோவா புரிந்துகொள்கிறார்; அவர் அப்படிப் புரிந்துகொண்டதை நமக்கும் தெரியப்படுத்துகிறார். யெகோவாமீது நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான மிகச் சிறந்த வழிகளில், ஜெபம் செய்வதும் ஒன்று!

யெகோவா பேசுவதைக் கேளுங்கள்

7. தன்னுடைய கவலைகளை ஆபகூக் சொன்னபோது, யெகோவா என்ன செய்தார்?

7 ஆபகூக் 1:5-7-ஐ வாசியுங்கள். தன்னுடைய கவலைகளை யெகோவாவிடம் சொன்னதற்குப் பிறகு, அதற்கு யெகோவா என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றி ஆபகூக் யோசித்திருக்கலாம். ஓர் அன்பான அப்பாவாக, ஆபகூக்கின் உணர்வுகளை யெகோவா புரிந்துகொண்டார். அவர் கஷ்டப்படுவதும், உதவி கேட்டு தன்னிடம் கெஞ்சுவதும் யெகோவாவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், அவரை யெகோவா கண்டிக்கவில்லை; அதற்குப் பதிலாக, உண்மையில்லாத யூதர்களைத் தண்டிக்கப்போவதாகச் சொன்னார். ஒருவேளை, யெகோவாவிடமிருந்து அந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட முதல் நபர் ஆபகூக்காக இருந்திருக்கலாம்.

8. யெகோவாவின் பதிலை ஆபகூக் எதிர்பார்க்கவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?

8 செயலில் இறங்க தான் தயாராக இருப்பதாக யெகோவா ஆபகூக்கிடம் விளக்கினார். வன்முறையும் அக்கிரமமும் நிறைந்த யூதர்களைத் தண்டிக்கப்போவதாகச் சொன்னார். “உங்களுடைய காலத்தில்” நடக்கப்போகிறது என்று சொன்னதன் மூலம், ஆபகூக்கின் வாழ்நாள் காலத்தில் அல்லது அவரைச் சுற்றியிருந்த இஸ்ரவேலர்களின் வாழ்நாள் காலத்தில் அந்த நியாயத்தீர்ப்பை நிறைவேற்றப்போவதாக யெகோவா சொன்னார். ஆனால், இப்படியொரு பதிலை ஆபகூக் எதிர்பார்க்கவே இல்லை! ஏனென்றால், கல்தேயர்கள் (பாபிலோனியர்கள்) மிருகத்தனமானவர்கள். யெகோவாவின் தராதரங்களைப் பற்றித் தெரிந்திருந்த இஸ்ரவேலர்களைவிட அவர்கள் வன்முறையான ஆட்கள்! அப்படியென்றால், தன்னுடைய மக்களைத் தண்டிப்பதற்காகப் பொய்த் தெய்வங்களைக் கும்பிட்ட அந்தக் கொடூரமான தேசத்தை யெகோவா ஏன் பயன்படுத்தினார்? அது யூதர்களுடைய கஷ்டங்களை இன்னும் அதிகமாக்கத்தானே செய்யும்? ஆபகூக் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

9. ஆபகூக் கேட்ட வேறுசில கேள்விகள் என்ன?

9 ஆபகூக் 1:12-14, 17-ஐ வாசியுங்கள். பாபிலோனியர்களைப் பயன்படுத்தி, தன்னைச் சுற்றியிருந்த படுமோசமான ஜனங்களை யெகோவா தண்டிப்பார் என்பது ஆபகூக்குக்குத் தெரிந்திருந்தபோதிலும், குழப்பத்திலிருந்து அவர் மீளவில்லை. ஆனாலும், அவர் மனத்தாழ்மையோடு இருந்தார்; தொடர்ந்து யெகோவாமீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சொல்லப்போனால், யெகோவா தனக்கு எப்போதுமே “கற்பாறை” போல இருப்பார் என்று சொன்னார். (உபா. 32:4; ஏசா. 26:4) கடவுள் அன்பானவர், தயவானவர் என்பதில் அவருக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால், யெகோவாவிடம் வேறுசில கேள்விகளையும் கேட்க அவர் பயப்படவில்லை. யூதாவின் நிலைமை இன்னும் மோசமாகும்படியும், அவருடைய மக்கள் படுகிற கஷ்டங்கள் இன்னும் அதிகமாகும்படியும் யெகோவா ஏன் விட்டுவிட்டார்? உடனடியாக அவர் ஏன் செயல்படவில்லை? நாலாபக்கமும் இருந்த வன்முறையைப் பார்த்துக்கொண்டு அவர் ஏன் ‘பேசாமல் இருக்கிறார்’? அவர் ‘பரிசுத்தமான கடவுள்,’ இல்லையா? ‘மிகவும் பரிசுத்தமான அவருடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே!’

10. சிலசமயங்களில் நாம் எப்படி ஆபகூக்கைப் போல உணரலாம்?

10 சிலசமயங்களில் நாமும் ஆபகூக்கைப் போலவே உணரலாம். எப்படி? யெகோவா பேசுவதை நாம் கேட்கிறோம். முழு நம்பிக்கையோடு அவருடைய வார்த்தையைப் படிக்கிறோம்; அது நமக்கு ஒரு பிடிப்பைத் தருகிறது. அவருடைய அமைப்பு சொல்லித்தருகிற விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்பதன் மூலம், அவருடைய வாக்குறுதிகளைத் தெரிந்துகொள்கிறோம். இதையெல்லாம் செய்தாலும், ‘நம்மளோட கஷ்டங்களெல்லாம் என்னைக்கு தீரும்?’ என்று நாம் யோசிக்கலாம். அப்படியென்றால், ஆபகூக் அடுத்ததாகச் செய்த ஒரு விஷயத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

யெகோவாவுக்காகக் காத்திருங்கள்

11. என்ன செய்ய ஆபகூக் உறுதியாக இருந்தார்?

11 ஆபகூக் 2:1-ஐ வாசியுங்கள். யெகோவாவுடன் பேசியது ஆபகூக்குக்கு மனசமாதானத்தைத் தந்தது. யெகோவா செயலில் இறங்கும்வரை அவருக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதற்கு அது உதவியது. “அழிவு நாளுக்காக நான் பொறுமையோடு காத்திருக்கிறேன்” என்று சொல்வதன் மூலம், தன்னுடைய தீர்மானத்தை திரும்பவும் ஆபகூக் சொன்னார். (ஆப. 3:16) யெகோவா செயலில் இறங்கும்வரை, அவருடைய உண்மை ஊழியர்கள் வேறுசிலரும் பொறுமையோடு காத்திருந்தார்கள். நம்மாலும் அதேபோல் செய்ய முடியும் என்பதை அவர்களுடைய முன்மாதிரி நிரூபிக்கிறது; இது நமக்கு உற்சாகத்தைத் தருகிறது.—மீ. 7:7; யாக். 5:7, 8.

12. ஆபகூக்கிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

12 ஆபகூக்கின் தீர்மானத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? (1) நமக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் யெகோவாவிடம் ஜெபம் செய்வதை நிறுத்தவே கூடாது. (2) தன்னுடைய வார்த்தையின் மூலமும் அமைப்பின் மூலமும் யெகோவா சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். (3) யெகோவா செயலில் இறங்கும்வரை பொறுமையோடு காத்திருக்க வேண்டும்; சரியான சமயத்தில் நம்முடைய வலியையும் வேதனையையும் நீக்குவார் என்று நம்ப வேண்டும். ஆபகூக்கைப் போல நடந்துகொண்டால் நமக்கு என்ன நன்மை? நாம் மனசமாதானத்தோடு இருக்க முடியும்; சகித்திருக்கவும் முடியும். நாம் எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளை அனுபவித்தாலும், நமக்கு இருக்கிற நம்பிக்கையின் மூலம், நம்மால் பொறுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும். நம்முடைய பரலோகத் தகப்பன் செயலில் இறங்குவார் என்பதில் நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.—ரோ. 12:12.

13. ஆபகூக்கை யெகோவா எப்படி ஆறுதல்படுத்தினார்?

13 ஆபகூக் 2:3-ஐ வாசியுங்கள். யெகோவா செயலில் இறங்கும்வரை காத்திருப்பதென்று ஆபகூக் எடுத்த தீர்மானத்தைப் பார்த்து யெகோவா சந்தோஷப்பட்டிருப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். ஆபகூக் அனுபவித்த கஷ்டம் என்னவென்று சர்வ வல்லவரான யெகோவாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், அந்தத் தீர்க்கதரிசியை யெகோவா ஆறுதல்படுத்தினார். அதோடு, அவருடைய நியாயமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதாகவும் உறுதியளித்தார். எல்லா கவலைகளிலிருந்தும் ஆபகூக்குக்குச் சீக்கிரத்தில் விடுதலை கிடைக்கவிருந்தது! “பொறுமையா இரு; என்மேல நம்பிக்கை வை. ரொம்ப காலம் ஆகுற மாதிரி தெரிஞ்சாலும், உன் ஜெபத்துக்கு நான் பதில் சொல்வேன்” என்று யெகோவா சொன்னதைப் போல் அது இருந்தது. தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றப்போகிற காலத்தை ஏற்கெனவே தான் தீர்மானித்துவிட்டதை அவர் ஆபகூக்குக்கு ஞாபகப்படுத்தினார். அதனால், தொடர்ந்து காத்திருக்கும்படி ஆபகூக்கை அவர் உற்சாகப்படுத்தினார். அப்படிச் செய்தால், கடைசியில் ஆபகூக் ஏமாந்துபோக மாட்டார்.

நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்க நாம் ஏன் தீர்மானமாக இருக்க வேண்டும்? (பாரா 14)

14. சோதனைகள் நம்மைத் தாக்கும்போது நாம் என்ன செய்ய உறுதியாக இருக்க வேண்டும்?

14 யெகோவா செயலில் இறங்கும்வரை நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும், அவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கவும் வேண்டும். அப்போது, நமக்கு நம்பிக்கை பிறக்கும்; எப்பேர்ப்பட்ட சோதனைகள் நம்மைத் தாக்கினாலும், மனசமாதானத்தோடு இருப்போம். கடவுள் நமக்குத் தெரியப்படுத்தாத “காலங்களையோ வேளைகளையோ” பற்றி நாம் யோசிக்க வேண்டாம் என்று இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார். (அப். 1:7) செயலில் இறங்குவதற்கான சரியான சமயம் எதுவென்று யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அதனால், நாம் சோர்ந்துபோய்விடக் கூடாது; மனத்தாழ்மையோடும் பொறுமையோடும் இருக்க வேண்டும்; கடவுள்மீது விசுவாசம் வைக்க வேண்டும். அப்படிக் காத்திருக்கிற காலத்தில், நேரத்தை ஞானமாகப் பயன்படுத்த வேண்டும், யெகோவாவின் சேவையில் நம்மால் முடிந்த சிறந்ததைச் செய்ய வேண்டும்.—மாற். 13:35-37; கலா. 6:9.

தன்னை நம்புகிறவர்களுக்கு யெகோவா வாழ்வு தருகிறார்

15, 16. (அ) ஆபகூக் புத்தகத்தில் என்னென்ன வாக்குறுதிகள் இருக்கின்றன? (ஆ) அந்த வாக்குறுதிகள் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகின்றன?

15 “உண்மையாக இருப்பதன் மூலம் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்றும், “பூமி முழுவதும் யெகோவாவின் மகிமையைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்றும் யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கிறார். (ஆப. 2:4, 14) பொறுமையோடும் யெகோவாமீது நம்பிக்கையோடும் இருப்பவர்களுக்கு முடிவில்லாத வாழ்வைத் தருவதாகவும் அவர் வாக்குறுதி கொடுக்கிறார்.

16 ஆபகூக் 2:4-லிருக்கிற வாக்குறுதி ரொம்பவே முக்கியமானது! அதனால்தான், தன்னுடைய கடிதங்களில் மூன்று தடவை அதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டிருக்கிறார். (ரோ. 1:17; கலா. 3:11; எபி. 10:38) நாம் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தை அனுபவித்தாலும் சரி, தொடர்ந்து யெகோவாமேல் நம்பிக்கை வைத்தால் அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்ப்போம். நம்முடைய எதிர்கால நம்பிக்கையின்மீது நம் கண்களைப் பதிய வைக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்.

17. யெகோவாமீது நம்பிக்கை வைத்தால், அவர் நமக்கு என்ன செய்வதாக உறுதியளிக்கிறார்?

17 கடைசி நாட்களில் வாழ்கிற நம் எல்லாருக்கும் ஆபகூக் புத்தகத்தில் வலிமையான பாடம் இருக்கிறது. தன்னை நம்புகிற ஒவ்வொரு நீதிமானுக்கும் முடிவில்லாத வாழ்வைத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார். அதனால், நமக்கு எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளும் கவலைகளும் இருந்தால்கூட, கடவுள்மீது வைத்திருக்கிற நம்பிக்கையை நாம் பலப்படுத்திக்கொண்டே இருக்கலாம். ஆபகூக்கிடம் யெகோவா சொன்னது, நமக்கு ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகிறது. அதாவது, அவர் நம்மை ஆதரிப்பார், காப்பாற்றுவார்! தன்மீது நம்பிக்கை வைக்கும்படியும், தன்னுடைய அரசாங்கம் இந்தப் பூமியை எப்போது ஆள வேண்டும் என்று யெகோவா ஏற்கெனவே தீர்மானித்திருக்கிறாரோ, அந்தக் காலம் வரும்வரை பொறுமையாகக் காத்திருக்கும்படியும் அவர் நம்மை அன்போடு கேட்டுக்கொள்கிறார். அப்போது, இந்தப் பூமி முழுவதிலும் யெகோவாவை வணங்குகிற, சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த மக்கள்தான் இருப்பார்கள்.—மத். 5:5; எபி. 10:36-39.

யெகோவாவை நம்புங்கள், சந்தோஷமாக இருங்கள்

18. யெகோவாவின் வார்த்தைகள் ஆபகூக்கின் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?

18 ஆபகூக் 3:16-19-ஐ வாசியுங்கள். யெகோவாவின் வார்த்தைகள் ஆபகூக்கின் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த காலத்தில் தன்னுடைய மக்களுக்கு யெகோவா செய்த அற்புதமான காரியங்களை அவர் ஆழமாக யோசித்துப் பார்த்தார். அதனால், யெகோவாமீது அவருக்கு இருந்த நம்பிக்கை இன்னும் பலமானது. சீக்கிரத்தில் யெகோவா செயலில் இறங்குவார் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்குப் பிறந்தது. தான் இன்னும் கொஞ்சக் காலத்துக்குக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்பது அந்தத் தீர்க்கதரிசிக்குத் தெரிந்திருந்தபோதிலும், அது அவருக்கு ஆறுதலைத் தந்தது. அதற்குப் பிறகு, அவருக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. தன்னை யெகோவா காப்பாற்றுவார் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது. 18-ம் வசனத்தில் அது தெரிகிறது! எத்தனையோ மனிதர்கள் தங்களுடைய நம்பிக்கையை உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருப்பதை பைபிளில் நாம் வாசிக்கிறோம். அப்படிப்பட்ட அருமையான வார்த்தைகளில் ஆபகூக்கின் வார்த்தைகளும் ஒன்று! சில அறிஞர்கள், இந்த வசனத்தில் ஆபகூக் இதைத்தான் அர்த்தப்படுத்தியிருப்பார் என்று நம்புகிறார்கள்: “கர்த்தரை நினைத்து சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பேன்; கடவுளை நினைத்து ஆனந்தமாக சுற்றி வருவேன்.” நம் எல்லாருக்கும் இது ஓர் அருமையான பாடம், இல்லையா? எதிர்கால நம்பிக்கைகளைப் பற்றி வெறுமனே வாக்குறுதிகளை மட்டும் யெகோவா கொடுக்கவில்லை; அந்த வாக்குறுதிகளை சீக்கிரத்தில் நிறைவேற்றுவதாகவும் உறுதியளிக்கிறார்.

19. ஆபகூக்கைப் போலவே நம்மையும் யெகோவா எப்படி ஆறுதல்படுத்துவார்?

19 ஆபகூக் புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிற முக்கியமான பாடம் இதுதான்: நாம் யெகோவாமீது நம்பிக்கை வைக்க வேண்டும்! (ஆப. 2:4) அப்படித் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால், அவரோடு நமக்கிருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (1) தொடர்ந்து ஜெபம் செய்யவும், கவலைகள் எல்லாவற்றையும் அவரிடம் கொட்டவும் வேண்டும். (2) தன்னுடைய வார்த்தையின் மூலம் யெகோவா சொல்வதைக் கவனமாகக் கேட்கவும், தன்னுடைய அமைப்பின் மூலம் அவர் தரும் வழிநடத்துதல்களைப் பின்பற்றவும் வேண்டும். (3) தன்னுடைய வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றும்வரை உண்மையோடு இருக்க வேண்டும், பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். இதைத்தான் ஆபகூக் செய்தார்! யெகோவாவோடு பேச ஆரம்பித்தபோது அவர் ரொம்பவே வேதனையில் இருந்தார்; ஆனால் பேசி முடித்தபோது அவருக்கு உற்சாகமும் சந்தோஷமும் கிடைத்தன. ஆபகூக்கைப் போலவே நாம் நடந்துகொண்டால், நம்முடைய பரலோக அப்பா யெகோவாவின் அன்பான அரவணைப்பின் மூலம் நாம் ஆறுதலை அனுபவிப்போம். படுமோசமான இந்த உலகத்தில் இதைவிட சிறந்த ஓர் ஆறுதல் நமக்குக் கிடைக்குமா?