Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 2

சபையில் யெகோவாவைப் புகழுங்கள்

சபையில் யெகோவாவைப் புகழுங்கள்

“சபை நடுவில் உங்களைப் புகழ்வேன்.”—சங். 22:22.

பாட்டு 104 யெகோவாவைப் போற்றுவோம், வா!

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவாவைப் பற்றி தாவீது எப்படி உணர்ந்தார், அது அவரை என்ன செய்யத் தூண்டியது?

“யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்” என்று தாவீது ராஜா எழுதினார். (சங். 145:3) அவர் யெகோவாமீது ரொம்ப அன்பு வைத்திருந்தார். அந்த அன்புதான், “சபை நடுவில்” யெகோவாவைப் புகழ அவரைத் தூண்டியது. (சங். 22:22; 40:5) நீங்கள் யெகோவாமீது அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதிலும், தாவீதைப் போலவே உணர்கிறீர்கள் என்பதிலும் சந்தேகமே இல்லை. அவர் இப்படிச் சொன்னார்: “எங்கள் மூதாதையான இஸ்ரவேலின் கடவுளே, யெகோவா தேவனே, உங்களுக்கு என்றென்றும் புகழ் சேரட்டும்.”—1 நா. 29:10-13.

2. (அ) நாம் எப்படி யெகோவாவைப் புகழலாம்? (ஆ) சிலருக்கு என்ன சவால் இருக்கிறது, நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 இன்று, யெகோவாவைப் புகழ்வதற்கான ஒரு வழி, சபைக் கூட்டங்களில் பதில் சொல்வது! ஆனால், சகோதர சகோதரிகள் நிறைய பேருக்கு இது சவாலாக இருக்கிறது. பதில் சொல்ல வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்; ஆனால், பயம் அவர்களைத் தடுக்கிறது. அந்தப் பயத்தை எப்படிச் சமாளிக்கலாம்? மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பதில் சொல்வதற்கு என்ன நடைமுறையான ஆலோசனைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்பதற்கு முன்பு, நாம் ஏன் கூட்டங்களில் பதில் சொல்கிறோம் என்பதற்கான நான்கு முக்கியக் காரணங்களைப் பார்க்கலாம்.

கூட்டங்களில் ஏன் பதில் சொல்கிறோம்?

3-5. (அ) எபிரெயர் 13:15 சொல்கிறபடி, நாம் ஏன் கூட்டங்களில் பதில் சொல்கிறோம்? (ஆ) நாம் எல்லாரும் ஒரே மாதிரியான பதிலைச் சொல்ல வேண்டுமா? விளக்குங்கள்.

3 தன்னைப் புகழ்வதற்கான ஒரு வாய்ப்பை யெகோவா நம் எல்லாருக்கும் கொடுத்திருக்கிறார். (சங். 119:108) யெகோவாவுக்குச் செலுத்தும் ‘புகழ்ச்சிப் பலியில்’ நாம் சொல்லும் பதில்களும் உட்படுகின்றன. நமக்காக வேறொருவர் இந்தப் பலியைச் செலுத்த முடியாது. (எபிரெயர் 13:15-ஐ வாசியுங்கள்.) நம் எல்லாரிடமும் யெகோவா ஒரே விதமான பலியை, அல்லது பதிலை, எதிர்பார்க்கிறாரா? இல்லவே இல்லை!

4 நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான திறமைகளும் சூழ்நிலைகளும் இருக்கின்றன என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். நம்மால் முடிந்த ஒரு பலியைச் செலுத்தும்போது யெகோவா அதை உயர்வாக மதிக்கிறார். இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குச் செலுத்திய வெவ்வேறு விதமான பலிகளைப் பற்றி யோசித்துப்பாருங்கள். சிலரால் ஓர் ஆட்டுக்குட்டியை அல்லது ஓர் ஆட்டை பலியாகக் கொடுக்க முடிந்தது. ஆனால் ஏழைகளாக இருந்தவர்கள், ‘இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ’ பலியாகக் கொடுத்தார்கள். ஓர் இஸ்ரவேலரால் இந்த இரண்டையுமே கொடுக்க முடியாதபோது, அவர் கொடுத்த ‘ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு நைசான மாவை’ யெகோவா ஏற்றுக்கொண்டார். (லேவி. 5:7, 11) அந்த மாவு, விலை குறைந்ததாக இருந்தாலும் ‘நைசான மாவாக’ இருந்தவரை யெகோவா அந்தப் பலியை உயர்வாக மதித்தார்.

5 நம்முடைய அன்பான கடவுள் நாம் செலுத்தும் பலியை இன்றும் உயர்வாக மதிக்கிறார். நாம் பதில் சொல்லும்போது, அப்பொல்லோவைப் போலத் திறமையாகப் பேச வேண்டும் என்றோ பவுலைப் போல பக்குவமாகப் பேச வேண்டும் என்றோ யெகோவா எதிர்பார்ப்பது இல்லை. (அப். 18:24; 26:28) நம்மால் முடியாத ஒரு பதிலைச் சொல்ல வேண்டும் என்றும் அவர் எதிர்பார்ப்பது இல்லை. இரண்டு சிறிய காசுகளைக் கொடுத்த ஏழை விதவையை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? தன்னால் முடியாததை அல்ல, தன்னால் முடிந்த மிகச் சிறந்ததை அவள் கொடுத்ததால் யெகோவாவின் பார்வையில் தங்கமானவளாக இருந்தாள்.—லூக். 21:1-4.

பதில் சொல்வதால் நமக்கும் நன்மை, அதைக் கேட்பவர்களுக்கும் நன்மை (பாராக்கள் 6-7) *

6. (அ) எபிரெயர் 10:24, 25-ன்படி, மற்றவர்கள் சொல்லும் பதிலைக் கேட்டு நாம் எப்படி உற்சாகமடைகிறோம்? (ஆ) மற்றவர்கள் சொல்கிற உற்சாகமான பதில்களை மதிக்கிறீர்கள் என்பதை எப்படிக் காட்டலாம்?

6 பதில் சொல்வதன் மூலம் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறோம். (எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.) கூட்டங்களில் வித்தியாசமான பதில்களைக் கேட்பது நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. ஒரு சின்னப் பிள்ளை தன் மனதிலிருந்து சொல்லும் எளிமையான பதிலை நாம் ரசிக்கிறோம். சமீபத்தில் தெரிந்துகொண்ட பைபிள் உண்மையை ஒருவர் உற்சாகம் பொங்கச் சொல்லும்போது, நாம் சந்தோஷப்படுகிறோம். கூச்ச சுபாவமுள்ளவரோ நம் மொழியைப் புதிதாகக் கற்றுக்கொள்பவரோ ‘தைரியத்தை வரவழைத்துக்கொண்டு’ பதில் சொல்லும்போது, நாம் உற்சாகமடைகிறோம். (1 தெ. 2:2) இவர்களுடைய முயற்சிகளை மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? கூட்டங்கள் முடிந்ததும் அவர்கள் சொன்ன உற்சாகமான பதில்களுக்கு நன்றி சொல்லலாம். அதோடு, நம்முடைய பதில்கள் மூலமும் மற்றவர்களை மதிக்கிறோம் என்பதைக் காட்டலாம். இப்படி, நாம் உற்சாகத்தைப் பெறுவதோடு, மற்றவர்களையும் உற்சாகப்படுத்தலாம்.—ரோ. 1:11, 12.

7. பதில் சொல்லும்போது நாம் எப்படி நன்மையடைகிறோம்?

7 பதில் சொல்லும்போது நாமும் நன்மையடைகிறோம். (ஏசா. 48:17) எப்படி? முதலாவது, பதில் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பதால், நன்றாகத் தயாரிக்க வேண்டும் என்ற தூண்டுதல் நமக்கு வருகிறது. அப்படித் தயாரிக்கும்போது, கடவுளுடைய வார்த்தையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்போது, கற்றுக்கொண்ட விஷயங்களை வாழ்க்கையில் இன்னும் நன்றாகக் கடைப்பிடிப்போம். இரண்டாவது, பதில் சொல்வதால் கூட்டத்தை இன்னும் நன்றாக அனுபவிக்க முடிகிறது. மூன்றாவது, பதில் சொல்வதற்கு நன்றாகத் தயாரித்திருப்பதால், கூட்டங்கள் முடிந்து பல நாட்களுக்குப் பிறகும்கூட அந்தக் குறிப்புகளை ஞாபகம் வைத்திருக்க முடிகிறது.

8-9. (அ) மல்கியா 3:16-ன்படி, நாம் பதில் சொல்லும்போது யெகோவா எப்படி உணர்கிறார்? (ஆ) சிலருக்கு என்ன பயம் இருக்கலாம்?

8 நம் விசுவாசத்தைப் பற்றிப் பேசும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். நாம் சொல்லும் பதில்களை யெகோவா கேட்கிறார் என்பதிலும் பதில் சொல்வதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் உயர்வாக மதிக்கிறார் என்பதிலும் நாம் நிச்சயமாக இருக்கலாம். (மல்கியா 3:16-ஐ வாசியுங்கள்.) அவரைப் பிரியப்படுத்துவதற்காக நாம் கடினமாக முயற்சி செய்யும்போது அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். இந்த விதத்தில் அவர் நம்மை மதிப்பதைக் காட்டுகிறார்.—மல். 3:10.

9 கூட்டங்களில் பதில் சொல்வதற்கு இவை நல்ல காரணங்கள், இல்லையா? இருந்தாலும், கையைத் தூக்க சிலர் பயப்படலாம். நீங்களும் அப்படிப் பயப்படுகிறீர்களா? அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள்! சில பைபிள் நியமங்களையும், உதாரணங்களையும், நடைமுறையான ஆலோசனைகளையும் இப்போது கவனியுங்கள். கூட்டங்களில் அதிகமாகப் பதில் சொல்ல இவை நமக்கு உதவும்.

பயத்தை எப்படிச் சமாளிக்கலாம்?

10. (அ) நம்மில் நிறைய பேருக்கு என்ன பயம் இருக்கிறது? (ஆ) பதில் சொல்வதை நினைத்து பயப்படுவது ஒரு நல்ல அறிகுறி என்று ஏன் சொல்லலாம்?

10 பதில் சொல்வதற்குக் கையைத் தூக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்குப் படபடப்பாக இருக்கிறதா? உண்மை என்னவென்றால், பதில் சொல்கிற நிறைய பேருக்கு ஒருவிதமான பயம் இருக்கத்தான் செய்கிறது! உங்களுடைய பயத்தைச் சமாளிப்பதற்கு முன்பு, அந்தப் பயத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சொல்ல நினைத்ததை மறந்துவிடுவீர்கள் என்றோ தவறாகச் சொல்லிவிடுவீர்கள் என்றோ பயப்படுகிறீர்களா? மற்றவர்களைப் போல அருமையான பதில்களைச் சொல்ல முடியாது என்று கவலைப்படுகிறீர்களா? இப்படிப்பட்ட பயத்தை ஒரு நல்ல அறிகுறி என்று சொல்லலாம். ஏனென்றால், நீங்கள் மனத்தாழ்மையாக இருக்கிறீர்கள் என்பதையும் உங்களைவிட மற்றவர்களை உயர்வாக நினைக்கிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது. இந்தக் குணம் யெகோவாவின் பார்வையில் அருமையானது! (சங். 138:6; பிலி. 2:3) இருந்தாலும், நீங்கள் அவரைப் புகழ வேண்டும் என்றும் கூட்டத்துக்கு வந்திருக்கும் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். (1 தெ. 5:11) அவர் உங்கள்மீது அன்பு வைத்திருப்பதால், உங்களுக்குத் தேவையான தைரியத்தை நிச்சயம் கொடுப்பார்.

11. பைபிளில் இருக்கிற என்னென்ன விஷயங்கள் நமக்கு உதவும்?

11 பைபிள் என்ன சொல்கிறது என்பதை ஞாபகப்படுத்திப்பாருங்கள். நாம் என்ன சொல்கிறோம், அதை எப்படிச் சொல்கிறோம் என்பதில் நாம் எல்லாரும் தவறு செய்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. (யாக். 3:2) நாம் பரிபூரணர்களாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பது கிடையாது; நம் சகோதர சகோதரிகளும் அப்படி எதிர்பார்ப்பது கிடையாது. (சங். 103:12-14) நாம் எல்லாரும் ஒரே குடும்பத்தைப் போல இருக்கிறோம்; நம் சகோதர சகோதரிகள் நம்மை நேசிக்கிறார்கள். (மாற். 10:29, 30; யோவா. 13:35) சிலசமயங்களில், நாம் சொல்ல நினைக்கும் பதிலை நம்மால் சரியாகச் சொல்ல முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

12-13. நெகேமியா மற்றும் யோனாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

12 பயத்தைச் சமாளிக்க உதவும் சில பைபிள் உதாரணங்களைப் பற்றிப் பார்க்கலாம். நெகேமியா, பலம்படைத்த ஒரு ராஜாவின் அரண்மனையில் சேவை செய்துகொண்டிருந்தார். எருசலேமின் மதில்களும் அதன் நுழைவாசல்களும் மோசமான நிலைமையில் இருந்ததைக் கேள்விப்பட்டதால் அவர் ரொம்பவே கவலையாக இருந்தார். (நெ. 1:1-4) அவருடைய கவலைக்கு என்ன காரணம் என்று ராஜா கேட்டபோது, அவருக்கு எவ்வளவு படபடப்பாக இருந்திருக்கும்! அப்போது, நெகேமியா உடனடியாக ஜெபம் செய்துவிட்டு, ராஜாவுக்குப் பதில் சொன்னார். அதைக் கேட்ட ராஜா, கடவுளுடைய மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்தார். (நெ. 2:1-8) இப்போது, யோனாவைப் பற்றிப் பார்க்கலாம். நினிவேயில் வாழும் மக்களிடம் போய்ப் பேசும்படி யெகோவா சொன்னபோது, எதிர் திசையில் ஓடிப்போகுமளவுக்கு யோனா பயந்தார். (யோனா 1:1-3) ஆனால், யெகோவாவின் உதவியோடு அவர் தன் நியமிப்பைச் செய்தார். அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நினிவே மக்கள் ரொம்பவே நன்மையடைந்தார்கள். (யோனா 3:5-10) பதில் சொல்வதற்கு முன்பு ஜெபம் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை நெகேமியாவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். நமக்கு எவ்வளவு பயம் இருந்தாலும் அதைச் சமாளிக்கவும் தனக்குத் தொடர்ந்து சேவை செய்யவும் யெகோவா உதவுவார் என்பதை யோனாவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். சபையில் இருக்கும் சகோதர சகோதரிகள் நினிவேயில் இருந்தவர்களைப் போல பயமுறுத்துகிறார்களா என்ன?

13 கூட்டங்களில் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பதில் சொல்ல என்ன நடைமுறையான ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்? சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

14. நாம் ஏன் கூட்டங்களுக்கு நன்றாகத் தயாரிக்க வேண்டும், அதை எப்படிச் செய்யலாம்?

14 ஒவ்வொரு கூட்டத்துக்கும் தயாரியுங்கள். நன்றாகத் திட்டமிட்டு, முன்கூட்டியே தயாரித்தால் உங்களால் தைரியமாகப் பதில் சொல்ல முடியும். (நீதி. 21:5) நம் எல்லாருக்கும் ஒரே விதமான சூழ்நிலை இருப்பதில்லை. கணவனை இழந்த எல்வீஸ் என்ற சகோதரிக்கு 80 வயதுக்குமேல் ஆகிறது. வாரத்தின் ஆரம்பத்திலேயே அவர் காவற்கோபுர படிப்புக்குத் தயாரிக்க ஆரம்பிக்கிறார். “முன்கூட்டியே தயாரிச்சாதான் கூட்டங்கள சந்தோஷமா அனுபவிக்க முடியுது” என்று அவர் சொல்கிறார். முழுநேர வேலை செய்யும் ஜாய் என்ற சகோதரி காவற்கோபுரத்தைத் தயாரிப்பதற்காக சனிக்கிழமைகளில் நேரத்தை ஒதுக்குகிறார். “அப்போதான் படிச்ச விஷயங்கள் மறக்காம ஞாபகத்துல இருக்கும்” என்கிறார். மூப்பராகவும் பயனியராகவும் சேவை செய்யும் ஐக் என்ற சகோதரர் எப்போதும் பிஸியாகவே இருப்பார். அவர் இப்படிச் சொல்கிறார்: “ஒரே சமயத்துல படிக்கறதுக்கு பதிலா, வார முழுசும் கொஞ்ச கொஞ்ச நேரம் படிக்குறது எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கு.”

15. கூட்டங்களுக்கு நீங்கள் எப்படி நன்றாகத் தயாரிக்கலாம்?

15 கூட்டங்களுக்காகத் தயாரிக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? படிப்பதற்கு முன்பு ஒவ்வொரு தடவையும் கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள். (லூக். 11:13; 1 யோ. 5:14) நீங்கள் படிக்கப்போகிற கட்டுரையின் தலைப்பு, உபதலைப்புகள், படங்கள், மறுபார்வை கேள்விகள் மற்றும் பெட்டிகளைப் பார்ப்பதற்கு ஒருசில நிமிடங்களை ஒதுக்குங்கள். ஒவ்வொரு பாராவையும் படிக்கும்போது, உங்களால் முடிந்தளவுக்கு நிறைய வசனங்களை வாசியுங்கள். பாராக்களில் இருக்கும் தகவல்களை ஆழமாக யோசியுங்கள். நீங்கள் பதில் சொல்ல விரும்பும் குறிப்புகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எந்தளவு தயாரிக்கிறீர்களோ அந்தளவு நன்மையடைவீர்கள். அதோடு, பதில் சொல்வதும் உங்களுக்குச் சுலபமாக இருக்கும்.—2 கொ. 9:6.

16. உங்களுக்கு உதவ என்னென்ன கருவிகள் இருக்கின்றன, அவற்றை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்?

16 முடிந்தால், உங்களுக்குத் தெரிந்த மொழியில் இருக்கும் எலக்ட்ரானிக் வடிவில் இருக்கிற கருவிகளைப் பயன்படுத்துங்கள். கூட்டங்களுக்குத் தயாரிப்பதற்காகத் தன்னுடைய அமைப்பின் மூலம் யெகோவா நமக்கு எலக்ட்ரானிக் வடிவில் இருக்கிற கருவிகளைக் கொடுத்திருக்கிறார். கூட்டங்களில் படிப்பதற்கான பிரசுரங்களை JW லைப்ரரி ® அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மொபைல் ஃபோனில் டவுன்லோட் செய்யலாம். அப்போது, எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் அந்தப் பிரசுரங்களை நம்மால் வாசிக்கவோ, அதன் ஆடியோ பதிவைக் கேட்கவோ முடியும். சிலர், வேலை செய்யும் இடத்திலோ பள்ளியிலோ மதிய இடைவேளையின்போது JW லைப்ரரி ® அப்ளிகேஷனைப் பயன்படுத்தித் தயாரிக்கிறார்கள். சிலர், பயணம் செய்யும்போதும் அப்படித் தயாரிக்கிறார்கள். கட்டுரையில் இருக்கும் ஒரு குறிப்பை இன்னும் நன்றாக ஆராய்ச்சி செய்ய நீங்கள் விரும்பினால், உவாட்ச்டவர் லைப்ரரியை அல்லது உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியைபயன்படுத்தலாம்.

கூட்டத்துக்குத் தயாரிக்க எப்போது நேரம் ஒதுக்குகிறீர்கள்? (பாராக்கள் 14-16) *

17. (அ) நிறைய பதில்களைத் தயாரிப்பது ஏன் நல்லது? (ஆ) யெகோவாவின் நண்பனாகு!—பதில் சொல்றதுக்கு நல்லா தயாரிக்கணும் என்ற வீடியோவிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

17 முடிந்தால், ஒவ்வொரு கட்டுரையிலும் நிறைய பதில்களைத் தயாரியுங்கள். ஏனென்றால், நீங்கள் கையைத் தூக்கியவுடன் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. நீங்கள் கையைத் தூக்கும்போது, மற்றவர்களும் தங்கள் கையைத் தூக்கலாம்; அதனால், படிப்பை நடத்துபவர் அவர்களில் ஒருவரைக் கேட்கலாம். கூட்டத்தை நேரத்துக்குள் முடிப்பதற்காக, அதிகமான பதில்களைக் கேட்க வேண்டாம் என்று நடத்துபவர் முடிவெடுக்கலாம். அதனால், அவர் உங்களை ஆரம்பத்திலேயே கேட்கவில்லை என்பதற்காகப் புண்பட்டுவிடாதீர்கள் அல்லது சோர்ந்துவிடாதீர்கள்! நீங்கள் நிறைய பதில்களைத் தயாரித்திருந்தால், பதில் சொல்வதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். ஒருவேளை, வசனத்தை வாசிப்பதற்காகவும் நீங்கள் தயாரிக்கலாம். ஆனால், முடிந்தவரை உங்கள் சொந்த வார்த்தைகளில் பதில் சொல்வதற்குத் தயாரியுங்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

18. நாம் ஏன் சுருக்கமாகப் பதில் சொல்ல வேண்டும்?

18 சுருக்கமாகப் பதில் சொல்லுங்கள். பெரும்பாலான சமயங்களில், எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்லப்படும் பதில்களே மற்றவர்களை உற்சாகப்படுத்துகின்றன. அதனால், 30 நொடிகளுக்குள் பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள். (நீதி. 10:19; 15:23) பல வருஷங்களாகக் கூட்டங்களில் பதில் சொல்கிறீர்கள் என்றால், சுருக்கமாகப் பதில் சொல்வதன் மூலம் நல்ல முன்மாதிரி வைப்பது ரொம்ப முக்கியம். உங்கள் பதிலில் நிறைய தகவல்களைச் சொன்னால், அதுவும் அதிக நேரமெடுத்துச் சொன்னால், நீங்கள் சொல்லுமளவுக்கு தங்களால் சொல்ல முடியவில்லை என்று நினைத்து மற்றவர்கள் பயப்பட வாய்ப்பிருக்கிறது. அதோடு, நீங்கள் சுருக்கமாகப் பதில் சொன்னால், நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, கேள்வி கேட்கப்பட்டவுடன் பதில் சொல்வதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், எளிமையான நேரடியான பதிலைச் சொல்லுங்கள். பாராவில் இருக்கும் எல்லா குறிப்புகளையும் சொல்லிவிடாதீர்கள். அந்தப் பாராவில் இருக்கும் முக்கியக் குறிப்பு கலந்து பேசப்பட்ட பிறகு, மற்ற குறிப்புகளை நீங்கள் சொல்லலாம்.—“ எப்படிப் பதில் சொல்லலாம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

19. நடத்துபவர் உங்களுக்கு எப்படி உதவலாம், அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

19 எந்தப் பாராவுக்கான பதிலைச் சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை நடத்துபவரிடம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இப்படிச் செய்ய நினைத்தால், கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே நடத்துபவரிடம் சொல்லிவிடுங்கள். அந்த பாரா வரும்போது, உங்கள் கையை உடனடியாகத் தூக்குங்கள், அதுவும் நடத்துபவருக்கு நன்றாகத் தெரியும் விதத்தில் உயரமாகத் தூக்குங்கள்.

20. கூட்டங்களில் கலந்துகொள்வது நண்பர்களோடு சேர்ந்து விருந்து சாப்பிடுவதுபோல் இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்?

20 கூட்டங்களில் கலந்துகொள்வதை நண்பர்களோடு சேர்ந்து விருந்து சாப்பிடுவதற்கு ஒப்பிடலாம். இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். சபையில் இருக்கும் சகோதர சகோதரிகள் ஒன்றாகச் சேர்ந்து விருந்து சாப்பிடுவதற்குத் திட்டமிடுகிறார்கள். உங்களையும் ஏதோ ஒரு உணவை சமைத்துவரச் சொல்கிறார்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆரம்பத்தில் படபடப்பாக இருந்தாலும், எல்லாருக்கும் பிடித்த உணவைச் சமைக்க நீங்கள் விரும்புவீர்கள். அதேபோல், கூட்டங்கள் என்ற விருந்துக்கு யெகோவா நம்மை அழைக்கிறார். மேஜை நிறைய நல்ல நல்ல விஷயங்களை நமக்காகத் தயாரித்து வைத்திருக்கிறார். (சங். 23:5; மத். 24:45) உங்களால் முடிந்த மிகச் சிறந்த, எளிய ஒரு பரிசைக் கொண்டுவரும்போது அவர் சந்தோஷப்படுகிறார். அதனால், நிறைய பதில்களைச் சொல்வதற்கு நன்றாகத் தயாரியுங்கள். அப்படிச் செய்தால் யெகோவாவின் மேஜையிலிருந்து சாப்பிடுவதோடு சபையில் இருப்பவர்களுக்கும் உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுக்க முடியும்.

பாட்டு 138 யெகோவா என்பதே உங்கள் பெயர்

^ பாரா. 5 சங்கீதக்காரரான தாவீதைப் போலவே நாமும் யெகோவாவை நேசிக்கிறோம், அவரைப் புகழ ஆசைப்படுகிறோம். சபைக் கூட்டங்களுக்கு வரும்போது யெகோவாமீது இருக்கிற அன்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு விசேஷ வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், கூட்டங்களில் பதில் சொல்வது நம்மில் சிலருக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கும் அப்படி இருக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் பயப்படுவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவும் அதைச் சமாளிக்கவும் இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

^ பாரா. 17 jw.org-ல் யெகோவாவின் நண்பனாகு!—பதில் சொல்றதுக்கு நல்லா தயாரிக்கணும் என்ற வீடியோவை பைபிள் போதனைகள் > பிள்ளைகள் என்ற தலைப்பில் பாருங்கள்.

^ பாரா. 63 படங்களின் விளக்கம்: சபையில் நடத்தப்படும் காவற்கோபுர படிப்பில் எல்லாரும் உற்சாகமாகக் கலந்துகொள்கிறார்கள்.

^ பாரா. 65 படங்களின் விளக்கம்:முன்பு காட்டப்பட்ட படத்தில் இருப்பவர்கள், வெவ்வேறு சூழ்நிலைகளிலும் காவற்கோபுர படிப்புக்குத் தயாரிக்க நேரம் ஒதுக்குகிறார்கள்.