Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 8

ஏன் நன்றி காட்ட வேண்டும்?

ஏன் நன்றி காட்ட வேண்டும்?

“நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்.”—கொலோ. 3:15.

பாட்டு 2 யெகோவாவே, உமக்கு நன்றி!

இந்தக் கட்டுரையில்... *

1. குணமாக்கப்பட்ட அந்தச் சமாரியன் எப்படி நன்றி காட்டினான்?

அந்தப் பத்து பேருடைய நிலைமையும் ரொம்ப மோசமாக இருந்தது. அவர்களுக்கு தொழுநோய் பிடித்திருந்தது; அவர்களுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாக இருந்தது. ஒருநாள், பெரிய போதகரான இயேசு தூரத்தில் வந்துகொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். எல்லா விதமான நோய்களையும் அவர் குணப்படுத்தியிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டிருந்ததால், தங்களையும் அவரால் குணப்படுத்த முடியும் என்று நம்பினார்கள். அதனால், “இயேசுவே, போதகரே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்று சத்தமாகச் சொன்னார்கள். அந்தப் பத்து பேரும் முழுமையாகக் குணமாக்கப்பட்டார்கள்! இயேசு காட்டிய தயவுக்காக அவர்களுடைய மனதில் நன்றி பொங்கியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும், அவர்களில் ஒருவன், மனதுக்குள் நன்றி * சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை வெளிப்படையாகவும் சொன்னான். “சத்தமாக” கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் என்ற தூண்டுதல், குணப்படுத்தப்பட்ட அந்தச் சமாரியனுக்கு வந்தது.—லூக். 17:12-19.

2-3. (அ) நாம் ஏன் நன்றி காட்டாமல் போய்விடலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 அந்தச் சமாரியனைப் போலவே, நம்மிடம் தயவாக நடந்துகொள்கிறவர்களிடம் நாமும் நன்றி சொல்ல ஆசைப்படுவோம். ஆனால் சில சமயங்களில், நன்றி சொல்லவோ அதைச் செயலில் காட்டவோ நாம் மறந்துவிடலாம்.

3 நம்முடைய சொல்லிலும் செயலிலும் நன்றி காட்டுவது ஏன் ரொம்ப முக்கியம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். நன்றி காட்டிய சில பைபிள் உதாரணங்களிலிருந்தும் நன்றி காட்டாத சில உதாரணங்களிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்வோம். பிறகு, குறிப்பிட்ட சில வழிகளில் எப்படி நன்றி காட்டலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

நாம் ஏன் நன்றி காட்ட வேண்டும்?

4-5. நாம் நன்றி காட்டுவதற்கான காரணங்கள் என்ன?

4 நன்றி காட்டும் விஷயத்தில் யெகோவா நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். அவர் நன்றி காட்டுவதற்கான ஒரு வழி என்ன? தனக்குப் பிரியமாக நடப்பவர்களை ஆசீர்வதிக்கிறார்! (2 சா. 22:21; சங். 13:6; மத். 10:40, 41) “அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (எபே. 5:1) அதனால், நாம் நன்றி காட்டுவதற்கான முக்கியக் காரணம் யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்ற விரும்புவதுதான்!

5 மற்றவர்களிடம் நன்றி காட்டுவதற்கான இன்னொரு காரணம் என்ன? நன்றி சொல்வதை அல்லது அதைச் செயலில் காட்டுவதை, நன்றாகத் தயாரிக்கப்பட்ட ஓர் உணவுக்கு ஒப்பிடலாம். அந்த உணவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. அதேபோல், மற்றவர்கள் நம்மிடம் நன்றி சொல்லும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. நாம் மற்றவர்களுக்கு நன்றி சொல்லும்போது அவர்களுக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. நாம் ஒருவரிடம் நன்றி சொல்லும்போது, நமக்கு உதவுவதற்காகவோ நமக்குத் தேவையானதைக் கொடுப்பதற்காகவோ அவர் எடுத்த முயற்சிகள் வீண்போகவில்லை என்பதை அவர் புரிந்துகொள்கிறார். அதனால், நமக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் நட்பு இன்னும் பலமாகிறது.

6. நன்றி கலந்த வார்த்தைகளுக்கும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆப்பிள்களுக்கும் என்ன சில ஒற்றுமைகள் இருக்கின்றன?

6 நன்றி காட்டுவதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் ரொம்பவே மதிப்புள்ளவை. “சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் பழங்களுக்குச் சமம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 25:11) தங்கத்தால் செய்யப்பட்ட ஆப்பிள், வெள்ளித் தட்டில் வைக்கப்பட்டிருந்தால் அது எவ்வளவு அழகாக இருக்கும்! எவ்வளவு மதிப்புள்ளதாக இருக்கும்! அப்படி ஒரு பரிசை ஒருவர் உங்களுக்குக் கொடுத்தால் நீங்கள் எப்படி உணருவீர்கள்? மற்றவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்லும்போது, வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிளைப் போலவே, அது மதிப்புள்ளதாக இருக்கிறது. தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு ஆப்பிள் ரொம்பக் காலத்துக்கு அப்படியே இருக்கும்! அதேபோல், உங்களுடைய நன்றி கலந்த வார்த்தைகள் மற்றவர்களுடைய மனதைவிட்டு நீங்காமல் இருக்கும்; தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் அதைப் பொக்கிஷமாக நினைப்பார்கள்.

அவர்கள் நன்றி காட்டினார்கள்

7. சங்கீதம் 69:30-ல் இருக்கிறபடி தாவீதும் எப்படி யெகோவாவுக்கு நன்றி காட்டினார், மற்ற சங்கீதக்காரர்களும் எப்படி நன்றி காட்டினார்கள்?

7 கடந்த காலத்தில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களில் நிறைய பேர் நன்றி காட்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தாவீது! (சங்கீதம் 69:30-ஐ வாசியுங்கள்.) உண்மை வணக்கத்தை அவர் உயர்வாக மதித்தார்; தன்னுடைய நன்றியைச் செயலிலும் காட்டினார். ஆலயத்தைக் கட்டுவதற்காகத் தன்னிடம் இருந்த மதிப்புமிக்க பொருள்களை அவர் கொடுத்தார். ஆசாப்பின் வம்சத்தார், சங்கீதங்கள் மூலமாகவும் புகழ் பாடல்கள் மூலமாகவும் நன்றி காட்டினார்கள். அவர்கள் பாடிய ஒரு பாடலில், யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள்; அவருடைய “அற்புதமான செயல்களை” பார்த்து பிரமித்துப்போனதைப் பற்றி விவரித்தார்கள். (சங். 75:1) யெகோவாவிடமிருந்து பெற்றுக்கொண்ட எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி காட்ட, தாவீதும் ஆசாப்பின் வம்சத்தாரும் ஆசைப்பட்டார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சங்கீதக்காரர்களை நீங்கள் எப்படியெல்லாம் பின்பற்றலாம் என்பதைப் பற்றி யோசியுங்கள்.

நன்றி காட்டும் விஷயத்தைப் பற்றி ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (பாராக்கள் 8-9) *

8-9. தன்னுடைய சகோதர சகோதரிகளுக்கு பவுல் எப்படி நன்றி காட்டினார், அதனால் கிடைத்த பலன் என்ன?

8 அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய சகோதர சகோதரிகளை உயர்வாக மதித்தார். அவர்களை அவர் பாராட்டிப் பேசியதிலிருந்து இது தெரிகிறது. தன்னுடைய ஜெபத்தில் அவர்களுக்காக நன்றி சொன்னார். அவர்களுக்குக் கடிதம் எழுதியபோதும் தன்னுடைய நன்றியைத் தெரியப்படுத்தினார். ரோமர் 16-ம் அதிகாரத்தின் முதல் 15 வசனங்களில், 27 கிறிஸ்தவர்களின் பெயர்களை பவுல் குறிப்பிட்டிருந்தார். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் “தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள்” என்று அவர்களைப் பற்றி மறக்காமல் எழுதியிருந்தார். பெபேயாள் நிறைய பேருக்கு “ஆதரவாக இருந்தாள்” என்றும், தனக்கும் ஆதரவாக இருந்தாள் என்றும் எழுதியிருந்தார். கடினமாக உழைத்த அந்த அன்பான சகோதர சகோதரிகளை அவர் பாராட்டி எழுதியிருந்தார்.—ரோ. 16:1-15.

9 தன்னுடைய சகோதர சகோதரிகள் பாவ இயல்புள்ளவர்கள் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தாலும், ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தின் முடிவில் அவர்களிடம் இருந்த நல்ல குணங்களைக் குறிப்பிட்டிருந்தார். பவுலின் அந்தக் கடிதம் சபையில் சத்தமாக வாசிக்கப்பட்டபோது, அங்கிருந்த சகோதர சகோதரிகளுக்கு எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்! பவுலோடு அவர்களுக்கு இருந்த நட்பு பலமாகியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் சபையில் இருப்பவர்கள் சொல்கிற, செய்கிற நல்ல விஷயங்களுக்காக நீங்கள் அவர்களுக்குத் தவறாமல் நன்றி சொல்கிறீர்களா?

10. தன்னைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு நன்றி சொல்லியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

10 ஆசியா மைனரில் இருந்த சில சபைகளுக்கு இயேசு சில செய்திகளைச் சொன்னபோது, அங்கிருந்த தன்னுடைய சீஷர்களைப் பாராட்டிப் பேசினார். உதாரணத்துக்கு, தியத்தீரா சபைக்குத் தன்னுடைய செய்தியைச் சொன்னபோது, இப்படி ஆரம்பித்தார்: “உன் செயல்களையும் உன் அன்பையும் உன் விசுவாசத்தையும் உன் ஊழியத்தையும் உன் சகிப்புத்தன்மையையும் அறிந்திருக்கிறேன். ஆரம்பத்தில் செய்ததைவிட இப்போது நீ அதிகமான செயல்களைச் செய்கிறாய் என்பதையும் அறிந்திருக்கிறேன்.” (வெளி. 2:19) அவர்கள் செய்துகொண்டிருந்த அதிகமான செயல்களைப் பற்றி மட்டுமே இயேசு சொல்லவில்லை; அந்த நல்ல செயல்களைச் செய்யத் தூண்டிய குணங்கள் அவர்களிடம் இருந்ததற்காகவும் அவர்களைப் பாராட்டினார். தியத்தீரா சபையிலிருந்த சிலருக்கு அவர் அறிவுரை கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர் சொல்லவந்த செய்தியை உற்சாகமான வார்த்தைகளோடு ஆரம்பித்தார்; உற்சாகமான வார்த்தைகளோடு முடித்தார். (வெளி. 2:25-28) எல்லா சபைகளுக்கும் தலைவரான இயேசுவுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கிறது! நாம் அவருக்காகச் செய்யும் வேலைகளுக்கு அவர் நமக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், அவர் நன்றி சொல்லத் தவறுவதில்லை. மூப்பர்களுக்கு எப்பேர்ப்பட்ட முன்மாதிரி!

அவர்கள் நன்றி காட்டவில்லை

11. எபிரெயர் 12:16 காட்டுகிறபடி, பரிசுத்த காரியங்களை ஏசா எப்படிக் கருதினான்?

11 நன்றி காட்டாமல் போன சிலரைப் பற்றி நாம் பைபிளில் வாசிக்கிறோம்; அவர்கள் அப்படி நடந்துகொண்டது வருத்தமான விஷயம்! ஏசாவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். யெகோவாவை நேசித்த, அவரை உயர்வாக மதித்த ஒரு பெற்றோரால் வளர்க்கப்பட்டிருந்தாலும் பரிசுத்த காரியங்களை அவன் அலட்சியம் செய்தான். (எபிரெயர் 12:16-ஐ வாசியுங்கள்.) தனக்கு நன்றி இல்லை என்பதை அவன் எப்படிக் காட்டினான்? கொஞ்சம்கூட யோசிக்காமல், சிறிதளவு கூழுக்காகத் தன்னுடைய மூத்த மகன் உரிமையைத் தன்னுடைய தம்பி யாக்கோபிடம் விற்றுவிட்டான். (ஆதி. 25:30-34) பிற்பாடு, தான் எடுத்த தீர்மானத்தை நினைத்து அவன் ரொம்பவே வருத்தப்பட்டான். ஆனால், மூத்த மகன் உரிமைக்கான ஆசீர்வாதத்தை அவன் உயர்வாக மதிக்காததால், அந்த உரிமை தனக்குக் கிடைக்காததைப் பற்றிக் குறை சொல்ல அவனுக்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை.

12-13. தங்களுக்கு நன்றி இல்லை என்பதை இஸ்ரவேலர்கள் எப்படிக் காட்டினார்கள், அதனால் என்ன ஆனது?

12 நன்றி காட்டுவதற்கு இஸ்ரவேலர்களுக்கு நிறைய காரணங்கள் இருந்தன. எகிப்தியர்கள்மீது பத்து வாதைகளைக் கொண்டுவந்த பிறகு, அடிமைகளாக இருந்த அவர்களை யெகோவா விடுதலை செய்தார். எகிப்தியப் படை முழுவதையும் செங்கடலில் மூழ்கடித்ததன் மூலம் அவர்களை ஒரு பெரிய அழிவிலிருந்து காப்பாற்றினார். அப்போது, அவர்களுடைய இதயம் நன்றியால் பொங்கியது; யெகோவாவைப் புகழ்ந்து அவர்கள் வெற்றிப் பாடலைப் பாடினார்கள். ஆனால், அவர்கள் தொடர்ந்து நன்றியோடு இருந்தார்களா?

13 புதுப்புது சவால்களைச் சந்தித்தபோது, தங்களுக்காக யெகோவா செய்த நல்ல விஷயங்கள் எல்லாவற்றையும் இஸ்ரவேலர்கள் மறந்துவிட்டார்கள். தங்களுக்கு நன்றி இல்லை என்பதைக் காட்டினார்கள். (சங். 106:7) எப்படி? “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.” ஆனால் உண்மையில், யெகோவாவுக்கு எதிராகத்தான் அவர்கள் முணுமுணுத்தார்கள். (யாத். 16:2, 8) தன்னுடைய சொந்த ஜனங்கள் நன்றி இல்லாமல் நடந்துகொண்டதைப் பார்த்து யெகோவா வருத்தப்பட்டார். பிற்பாடு, யோசுவாவையும் காலேபுவையும் தவிர, அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் அந்த வனாந்தரத்திலேயே செத்துப்போவார்கள் என்று முன்னறிவித்தார். (எண். 14:22-24; 26:65) இந்த மோசமான உதாரணங்களைப் பின்பற்றாமல் நல்ல உதாரணங்களை எப்படிப் பின்பற்றலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

இன்றே நன்றி சொல்லுங்கள்

14-15. (அ) தம்பதிகள் எப்படி ஒருவருக்கொருவர் நன்றி காட்டலாம்? (ஆ) நன்றி காட்ட பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தரலாம்?

14 குடும்பத்தில் இருப்பவர்களுக்கு. குடும்பத்தில், ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக்கொண்டால் முழு குடும்பமுமே பிரயோஜனமடையும். தம்பதிகள் எந்தளவு ஒருவருக்கொருவர் நன்றி காட்டுகிறார்களோ அந்தளவு அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் அதிகமாகும். தவறு செய்யும்போது ஒருவரையொருவர் மன்னிப்பதும் சுலபமாக இருக்கும். மனைவியைப் பாராட்டும் ஒரு கணவர், அவள் சொல்கிற, செய்கிற நல்ல செயல்களைக் கவனிப்பது மட்டுமல்லாமல், ‘எழுந்து நின்று அவளைப் புகழவும்’ செய்கிறார். (நீதி. 31:10, 28) ஞானமான ஒரு மனைவி, குறிப்பிட்ட எந்த விஷயத்துக்காகத் தன் கணவருக்கு நன்றியோடு இருக்கிறாள் என்பதை அவரிடம் சொல்கிறாள்.

15 இப்போது பெற்றோரின் விஷயத்துக்கு வரலாம். பெற்றோர்களே, நன்றி காட்ட உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லித்தரலாம்? நீங்கள் சொல்கிற, செய்கிற விஷயங்களை உங்கள் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால், பிள்ளைகள் உங்களுக்காக ஏதாவது செய்யும்போது அவர்களுக்கு நன்றி சொல்வதன் மூலம் நல்ல முன்மாதிரி வையுங்கள். அதேபோல், உங்கள் பிள்ளைகளுக்காக மற்றவர்கள் ஏதாவது செய்யும்போது, அவர்களுக்கு நன்றி சொல்ல கற்றுக்கொடுங்கள். நன்றி காட்டுவது என்பது இதயத்திலிருந்து வருகிற ஒரு விஷயம் என்பதையும், நன்றி சொல்வது நன்மையைத் தரும் என்பதையும் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவுங்கள். க்லாடி என்ற இளம் பெண் இப்படிச் சொல்கிறார்: “எங்க அம்மாவுக்கு 32 வயசு இருந்தப்போ, மூணு பிள்ளைங்களையும் தனியா வளர்க்க வேண்டிய நிலைமை வந்துச்சு. எனக்கு 32 வயசானப்பதான், அந்த வயசுல அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கனு புரிஞ்சிக்க முடிஞ்சுது. அதனால, என்னையும் என்னோட அண்ணனையும் தம்பியையும் வளர்க்கறதுக்கு அவங்க செஞ்ச எல்லா தியாகத்துக்கும் நான் ரொம்ப நன்றி சொன்னேன். நான் சொன்னது அவங்க மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்ததாவும், அதை அடிக்கடி நினைச்சு பார்க்குறதாவும், அப்படி நினைச்சு பார்க்குறப்பெல்லாம் அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறதாவும் அவங்க என்கிட்ட சமீபத்துல சொன்னாங்க.”

நன்றி காட்ட உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் (பாரா 15) *

16. நன்றி சொல்வது மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிற ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

16 சபையில் இருப்பவர்களுக்கு. நம் சகோதர சகோதரிகளுக்கு நன்றி சொல்லும்போது நாம் அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். ஹோர்ஹே என்ற சகோதரரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவருக்கு 28 வயது, மூப்பராகவும் சேவை செய்கிறார். அவருடைய உடல்நிலை ரொம்பவே மோசமானதால், ஒரு மாதம்வரை அவரால் கூட்டங்களுக்குப் போக முடியவில்லை. கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்த பிறகும் அவரால் எந்த நியமிப்பையும் செய்ய முடியவில்லை. அவர் இப்படிச் சொல்கிறார்: “என்னோட நிலைமைய நினைச்சு பார்த்தப்போ நான் எதுக்குமே லாயக்கில்லனு நினைச்சேன். நியமிப்புகள செய்ய முடியாதத நினைச்சும் ரொம்ப கவலைப்பட்டேன். ஒரு தடவை, கூட்டம் முடிஞ்சதுக்கு அப்புறம், ஒரு சகோதரர் என்கிட்ட வந்து, ‘எங்க குடும்பத்துக்கு நீங்க ஒரு நல்ல முன்மாதிரியா இருந்திருக்கீங்க. அதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி! கடந்த சில வருஷங்களா நீங்க கொடுத்த பேச்சுகளை கேட்டு நாங்க எவ்வளவு சந்தோஷப்பட்டோம்னு உங்களுக்கே தெரியாது. அது எங்க விசுவாசத்தை பலப்படுத்தியிருக்கு’னு சொன்னாரு. அவர் சொன்னத கேட்டதும் எனக்கு அழுகையே வந்துருச்சு, என்னால பேசவே முடியல. அவர் சொன்னது அந்த சமயத்துல எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு.”

17. கொலோசெயர் 3:15-ல் சொல்லியிருக்கிறபடி, யெகோவாவின் தாராள குணத்துக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

17 தாராள குணம்படைத்த நம் கடவுளுக்கு. யெகோவா நமக்கு ஏராளமான ஆன்மீக உணவைக் கொடுத்திருக்கிறார். கூட்டங்கள், பத்திரிகைகள், வெப்சைட்டுகள் ஆகியவற்றின் மூலமாக நமக்கு நல்ல ஆலோசனைகள் கிடைக்கின்றன. ஒரு சகோதரர் கொடுக்கும் பேச்சைக் கேட்டுவிட்டு அல்லது ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு அல்லது பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘இது எனக்காகவே கொடுத்த மாதிரி இருக்கு’ என்று நினைத்திருக்கிறீர்களா? இவற்றையெல்லாம் நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (கொலோசெயர் 3:15-ஐ வாசியுங்கள்.) ஒரு வழி, இந்த நல்ல பரிசுகள் எல்லாவற்றுக்கும் தவறாமல் ஜெபத்தில் நன்றி சொல்வது!—யாக். 1:17.

ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்வது, நன்றி காட்டுவதற்கான ஒரு சிறந்த வழி (பாரா 18)

18. ராஜ்ய மன்றங்களை நாம் மதிக்கிறோம் என்பதை எந்தெந்த வழிகளில் காட்டலாம்?

18 யெகோவாவுக்கு நன்றி காட்டுவதற்கான இன்னொரு வழி, வணங்குவதற்காக நாம் கூடிவரும் இடங்களைச் சுத்தமாக வைப்பது! ராஜ்ய மன்றங்களைச் சுத்தம் செய்வதிலும், பராமரிப்பு வேலைகளைச் செய்வதிலும் நாம் தவறாமல் கலந்துகொள்கிறோம். அதோடு, சபையில் ஆடியோ வீடியோ கருவிகளைக் கையாளும் சகோதரர்களும் அவற்றைக் கவனமாகக் கையாளுகிறார்கள். ராஜ்ய மன்றங்களைச் சரியாகப் பராமரிக்கும்போது, அவை ரொம்பக் காலத்துக்கு நல்ல நிலைமையில் இருக்கும்; பெரிய பெரிய ரிப்பேர் வேலைகளையும் அவ்வளவாகச் செய்ய வேண்டியிருக்காது. இந்த விதத்தில், நம்மால் நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும். இதன் மூலம், உலகம் முழுவதும் நிறைய ராஜ்ய மன்றங்களைக் கட்டவும் புதுப்பிக்கவும் முடியும்.

19. ஒரு வட்டாரக் கண்காணி மற்றும் அவருடைய மனைவியின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

19 நமக்காகக் கடினமாக உழைக்கிறவர்களுக்கு. சவால்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒருவரைப் பாராட்டும்போது, அவர் அந்தச் சவால்களைப் பார்க்கும் விதமே மாறிவிடும். ஒரு வட்டாரக் கண்காணி மற்றும் அவருடைய மனைவியின் உதாரணத்தைக் கவனியுங்கள். குளிர் காலத்தில், ஒரு நாள் முழுவதும் ஊழியம் செய்துவிட்டு, தாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அவர்கள் ரொம்பவே களைப்பாக வந்தார்கள். ரொம்பவே குளிராக இருந்ததால், தான் போட்டிருந்த ‘கோட்டை’ கழற்றாமலேயே அந்தச் சகோதரி தூங்கிவிட்டார். அடுத்த நாள் காலையில், பயண சேவையைத் தொடர்ந்து செய்வது தனக்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதாக தன் கணவரிடம் சொன்னார். அதே நாள் காலையில் கிளை அலுவலகத்திடமிருந்து அந்தச் சகோதரியின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் செய்துவரும் ஊழியத்தையும் அவர் காட்டும் சகிப்புத்தன்மையையும் பாராட்டி அதில் எழுதியிருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்தில் தங்குவது எவ்வளவு கஷ்டம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் அந்தக் கடிதத்தில் சொல்லியிருந்தார்கள். அவருடைய கணவர் இப்படிச் சொல்கிறார்: “அவள பாராட்டி எழுதியிருந்தத படிச்சப்போ அவ ரொம்ப சந்தோஷப்பட்டா. அதுக்கு அப்புறம், பயண சேவைய விடுறத பத்தி அவ பேசவே இல்லை. உண்மைய சொல்லணும்னா, நான் எப்பெல்லாம் சோர்ந்துபோய் இந்த சேவையை விட்டுடலாம்னு நினைச்சேனோ அப்பெல்லாம் அவதான் என்னை உற்சாகப்படுத்துனா.” இந்தத் தம்பதி, கிட்டத்தட்ட 40 வருஷங்கள் பயண சேவை செய்தார்கள்!

20. ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?

20 நாம் நன்றியுள்ளவர்கள் என்பதை நம்முடைய சொல்லிலும் செயலிலும் காட்ட ஒவ்வொரு நாளும் முயற்சி செய்யலாம். இந்த நன்றிகெட்ட உலகத்தில், நம்முடைய இதயப்பூர்வமான வார்த்தைகள் அல்லது செயல்கள், யாராவது ஒருவருக்கு ரொம்பவே தேவைப்படலாம். தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் அழுத்தங்களையும் சமாளிக்க அது அவருக்கு உதவலாம். நாம் நன்றி சொல்லும்போது, நிலையான நட்பு உருவாகும். முக்கியமாக, தாராள குணம்படைத்த, நன்றியுணர்வுள்ள நம் பரலோகத் தந்தையான யெகோவாவைப் பின்பற்றுகிறவர்களாக இருப்போம்.

பாட்டு 148 ஒரே மகனையே தந்தீர்கள்

^ பாரா. 5 நன்றி காட்டுவதைப் பற்றி யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் சமாரியாவைச் சேர்ந்த தொழுநோயாளியிடமிருந்தும் நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? இவர்களுடைய உதாரணங்களையும் இன்னும் சிலருடைய உதாரணங்களையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். நன்றி காட்டுவது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றியும், எந்தெந்த வழிகளில் நன்றி காட்டலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

^ பாரா. 1 வார்த்தைகளின் விளக்கம்: யாராவது ஒருவருக்கு அல்லது ஏதோவொரு விஷயத்துக்கு நன்றியோடு இருப்பது என்பது, அவரை அல்லது அந்த விஷயத்தை உயர்வாக மதிப்பதைக் காட்டுகிறது. இதயத்திலிருந்து பொங்கிவரும் நன்றியுணர்வை இது குறிக்கலாம்.

^ பாரா. 55 படங்களின் விளக்கம்: பவுல் எழுதிய கடிதம் ரோம சபையில் வாசிக்கப்படுகிறது; அந்தக் கடிதத்தில் தங்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்து, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் பெபேயாளும் வேறு சிலரும் சந்தோஷப்படுகிறார்கள்.

^ பாரா. 57 படங்களின் விளக்கம்: நல்ல முன்மாதிரியாக இருக்கிற வயதான ஒரு சகோதரிக்கு நன்றி காட்ட, தன் மகளுக்கு ஓர் அம்மா உதவுகிறார்.