Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 9

அன்பும் நியாயமும்-பூர்வ இஸ்ரவேலில்

அன்பும் நியாயமும்-பூர்வ இஸ்ரவேலில்

“நீதியையும் நியாயத்தையும் அவர் நேசிக்கிறார். இந்தப் பூமி யெகோவாவின் மாறாத அன்பினால் நிறைந்திருக்கிறது.”—சங். 33:5.

பாட்டு 152 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) நாம் எல்லாரும் எதற்காக ஏங்குகிறோம்? (ஆ) நாம் எதைப் பற்றி உறுதியாக இருக்கலாம்?

நாம் எல்லாருமே அன்புக்காக ஏங்குகிறோம். மற்றவர்கள் நம்மை நியாயமாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், யாராவது நம்மைத் திரும்பத் திரும்ப அன்பாகவும் நியாயமாகவும் நடத்தவில்லை என்றால், நமக்கு எப்படி இருக்கும்? நாம் எதற்குமே லாயக்கில்லை என்ற உணர்வு வரலாம்; நம்பிக்கையையும் இழந்துவிடலாம்.

2 அன்புக்காகவும் நியாயத்துக்காகவும் நாம் ஏங்குவது யெகோவாவுக்குத் தெரியும். (சங். 33:5) நம்முடைய கடவுள் நம்மை நேசிக்கிறார் என்பதிலும், நாம் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கலாம். மோசேயின் மூலம் இஸ்ரவேல் தேசத்துக்கு யெகோவா கொடுத்த திருச்சட்டத்தைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. மற்றவர்கள் உங்களை அன்பாகவோ நியாயமாகவோ நடத்தாதபோது மனம் உடைந்துபோயிருக்கிறீர்களா? அப்படியென்றால், தன்னுடைய மக்கள்மேல் யெகோவாவுக்கு அக்கறை இருக்கிறது என்பதை மோசேயின் திருச்சட்டம் * எப்படிக் காட்டுகிறது? இப்போது அதைப் பற்றிப் பார்க்கலாம்.

3. (அ) ரோமர் 13:8-10-ல் சொல்லியிருக்கிறபடி, மோசேயின் திருச்சட்டத்தை ஆராய்ந்து பார்க்கும்போது நாம் எதைப் புரிந்துகொள்வோம்? (ஆ) இந்தக் கட்டுரையில் எந்தெந்த கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?

3 மோசேயின் திருச்சட்டத்தை ஆராய்ந்து பார்க்கும்போது நம் அன்புள்ள கடவுளான யெகோவாவின் கனிவான உணர்வுகளை நம்மால் கவனிக்க முடியும். (ரோமர் 13:8-10-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தில் இருக்கும் சில சட்டங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் பார்ப்போம்: திருச்சட்டம் அன்பை அடிப்படையாகக் கொண்டது என்று எப்படிச் சொல்லலாம்? நியாயமாக நடந்துகொள்ளும்படி மக்களை அது உற்சாகப்படுத்தியது என்று எப்படிச் சொல்லலாம்? அதிகாரத்தில் இருந்தவர்கள் அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது? திருச்சட்டம் குறிப்பாக யாரைப் பாதுகாத்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கும். அதோடு, நம் அன்பான பரலோகத் தந்தையிடம் நெருங்கிப் போவதற்கும் உதவும்.—அப். 17:27; ரோ. 15:4.

அன்பை அடிப்படையாகக் கொண்ட சட்டம்

4. (அ) திருச்சட்டம் அன்பை அடிப்படையாகக் கொண்டது என்று ஏன் சொல்லலாம்? (ஆ) மத்தேயு 22:36-40-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி, எந்தக் கட்டளைகளை இயேசு சிறப்பித்துக்காட்டினார்?

4 யெகோவா எதைச் செய்தாலும் அன்பால் தூண்டப்பட்டுதான் செய்கிறார். அதனால்தான், அவர் கொடுத்த திருச்சட்டமும் அன்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. (1 யோ. 4:8) முக்கியமான இரண்டு கட்டளைகளின் அடிப்படையில்தான் அந்தச் சட்டங்கள் முழுவதையும் யெகோவா கொடுத்தார். கடவுள்மேல் அன்பு காட்ட வேண்டும் என்பதும் மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும் என்பதும்தான் அந்தச் சட்டங்கள். (லேவி. 19:18; உபா. 6:5; மத்தேயு 22:36-40-ஐ வாசியுங்கள்.) அதனால், திருச்சட்டத்தில் அடங்கியிருக்கும் 600-க்கும் அதிகமான சட்டங்கள் ஒவ்வொன்றும் யெகோவாவின் அன்பை வெளிக்காட்டும் என்று எதிர்பார்க்கலாம். சில உதாரணங்களை இப்போது கவனிக்கலாம்.

5-6. தம்பதிகள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார், அவருக்கு எது நன்றாகத் தெரியும்? உதாரணம் கொடுங்கள்.

5 உங்கள் மணத்துணைக்கு உண்மையாக இருங்கள், பிள்ளைகளை அன்பாகக் கவனித்துக்கொள்ளுங்கள். வாழ்நாளெல்லாம் நீடிக்கிற ஆழமான அன்பைத் தம்பதிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (ஆதி. 2:24; மத். 19:3-6) மணத்துணைக்குத் துரோகம் செய்வது படுமோசமான குற்றம், அன்பற்ற ஒரு செயல். மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்ற ஏழாவது கட்டளையை நல்ல காரணத்தோடுதான் யெகோவா கொடுத்திருக்கிறார். (உபா. 5:18) அது ‘கடவுளுக்கு விரோதமான பாவம்,’ துணைக்குச் செய்யும் மிகப் பெரிய கொடுமை. (ஆதி. 39:7-9) இந்தக் கொடுமைக்கு ஆளான ஒரு மணத்துணை, ரொம்பக் காலத்துக்கு இந்த வேதனையைச் சுமந்துகொண்டிருக்கலாம்.

6 தம்பதிகள் தங்கள் துணையை எப்படி நடத்துகிறார்கள் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். இஸ்ரவேலைச் சேர்ந்த மனைவிகள் நன்றாக நடத்தப்பட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார். திருச்சட்டத்தை நேசித்த ஒரு கணவர், தன் மனைவியைக் கண்டிப்பாக நேசித்திருப்பார்; அற்ப காரணங்களுக்காக அவளை விவாகரத்து செய்திருக்க மாட்டார். (உபா. 24:1-4; மத். 19:3, 8) ஒருவேளை ஒரு பெரிய பிரச்சினையின் காரணமாக தன் மனைவியை விவாகரத்து செய்கிறார் என்றால், அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது. அவள் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருக்கிறாள் என்ற தவறான குற்றச்சாட்டை யாரும் அவள்மீது சுமத்தாதபடி அந்தப் பத்திரம் அவளைப் பாதுகாத்தது. விவாகரத்துப் பத்திரம் கொடுப்பதற்கு முன்பு, நகரத்தில் இருந்த பெரியோர்களிடம் அந்தக் கணவர் பேச வேண்டியிருந்தது. அதன் மூலம், அவர்களுடைய திருமண பந்தத்தைக் காத்துக்கொள்வதற்கு உதவ, அந்தப் பெரியோர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. சுயநலத்துக்காக ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்தபோது, யெகோவா எல்லா சமயங்களிலும் தலையிடவில்லை. ஆனால், அவர் அந்தப் பெண்ணின் கண்ணீரைப் பார்த்தார்; அவளுடைய வலியை உணர்ந்தார்.—மல். 2:13-16.

(பாராக்கள் 7-8) *

7-8. (அ) பெற்றோர்களுக்கு யெகோவா என்ன கட்டளை கொடுத்தார்? (அட்டைப் படம்) (ஆ) நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

7 பிள்ளைகளின் மேலும் யெகோவாவுக்கு அதிக அக்கறை இருக்கிறது என்பதைத் திருச்சட்டம் காட்டுகிறது. பிள்ளைகளின் உடல் ரீதியிலான தேவைகளை மட்டுமல்ல, ஆன்மீக ரீதியிலான தேவைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டளையைப் பெற்றோர்களுக்கு யெகோவா கொடுத்தார். திருச்சட்டத்தைப் புரிந்துகொள்ளவும், அதை மதிக்கவும், யெகோவாவை நேசிக்கவும் பிள்ளைகளுக்கு அவர்கள் கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. இதைச் செய்ய பெற்றோர் தங்களுக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. (உபா. 6:6-9; 7:13) இஸ்ரவேலர்களை யெகோவா தண்டித்ததற்கான ஒரு காரணம், அவர்களில் சிலர், அதிர்ச்சியூட்டும் விதத்தில் தங்களுடைய பிள்ளைகளை ரொம்பவே கொடூரமாக நடத்தியதுதான். (எரே. 7:31, 33) பிள்ளைகளை ஏனோதானோ என்றோ அலட்சியமாகவோ நடத்தாமல், அவர்களை ஒரு சொத்தாக, யெகோவாவிடமிருந்து கிடைத்த ஒரு பரிசாக, அவர்கள் நினைக்க வேண்டும்.—சங். 127:3.

8 பாடங்கள்: தம்பதிகள் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறார்கள் என்பதை யெகோவா கூர்ந்து கவனிக்கிறார். பிள்ளைகளைப் பெற்றோர் நேசிக்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். பிள்ளைகளைப் பெற்றோர் தவறாக நடத்தினால் அவர் கண்டிப்பாகக் கணக்குக் கேட்பார்.

9-11. பேராசைப்படக் கூடாது என்ற சட்டத்தை யெகோவா ஏன் கொடுத்தார்?

9 பேராசைப்படக் கூடாது. பத்துக் கட்டளைகளில் கடைசி கட்டளை, பேராசைப்படக் கூடாது என்பதுதான். அதாவது, மற்றவர்களுக்குச் சொந்தமானவற்றை அடைய வேண்டும் என்ற தவறான ஆசையை வளர்த்துக்கொள்ளக் கூடாது என்பதுதான். (உபா. 5:21; ரோ. 7:7) தன்னுடைய மக்கள் தங்கள் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அதாவது தங்கள் யோசனைகளையும் உணர்ச்சிகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக யெகோவா இந்தக் கட்டளையைக் கொடுத்தார். ஏனென்றால், கெட்ட யோசனைகளிலிருந்தும் உணர்ச்சிகளிலிருந்தும் கெட்ட செயல்கள் பிறக்கின்றன என்பது அவருக்குத் தெரியும். (நீதி. 4:23) ஓர் இஸ்ரவேலன் தன்னுடைய இதயத்தில் கெட்ட ஆசைகள் வளரும்படி அனுமதித்தபோது, அவன் மற்றவர்களை அன்பற்ற விதத்தில் நடத்துவதற்கான வாய்ப்பு இருந்தது. இந்தத் தவறைத்தான் தாவீது ராஜா செய்தார். பொதுவாக, அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால் ஒருசமயத்தில், இன்னொருவரின் மனைவிமீது அவர் ஆசைப்பட்டார். அந்த ஆசை, பாவத்தில் போய் முடிந்தது. (யாக். 1:14, 15) அவர் முறைகேடான உறவுகொண்டார், அந்தப் பெண்ணின் கணவரை ஏமாற்ற முயற்சி செய்தார், கடைசியில் அவரைக் கொன்றேபோட்டார்.—2 சா. 11:2-4; 12:7-11.

10 பேராசைப்படக் கூடாது என்ற இந்தச் சட்டத்தை ஓர் இஸ்ரவேலன் மீறியபோது அது யெகோவாவுக்குத் தெரிந்திருந்தது. ஏனென்றால், நாம் என்ன யோசிக்கிறோம், எப்படி உணருகிறோம் என்பது அவருக்குத் தெரியும். (1 நா. 28:9) கெட்ட செயல்களைச் செய்யத் தூண்டுகிற யோசனைகளையும் யெகோவாவின் மக்கள் தவிர்க்க வேண்டும் என்ற பாடத்தை இந்தச் சட்டம் கற்றுத்தந்தது. யெகோவா எவ்வளவு ஞானமுள்ள, அன்புள்ள ஒரு தந்தை!

11 பாடங்கள்: நம்முடைய வெளித்தோற்றத்தைவிட உள்ளுக்குள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும், நம் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதையும் யெகோவா பார்க்கிறார். (1 சா. 16:7) நம் யோசனைகள், உணர்வுகள், செயல்கள் என எதுவுமே அவருக்குத் தெரியாமல் போகாது. நம் இதயத்தில் நல்ல விஷயங்கள் இருக்கின்றனவா என்று அவர் பார்க்கிறார்; அந்த நல்ல விஷயங்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறார். கெட்ட யோசனைகள் கெட்ட செயல்களில் போய் முடிவதற்கு முன்பே, அவற்றை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்றும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.—2 நா. 16:9; மத். 5:27-30.

நியாயமாக நடக்க மற்றவர்களை உற்சாகப்படுத்திய சட்டம்

12. திருச்சட்டம் நமக்கு எதைக் கற்றுத்தருகிறது?

12 யெகோவா நியாயத்தை விரும்புகிறார் என்பதையும் திருச்சட்டம் நமக்குக் கற்றுத்தருகிறது. (சங். 37:28; ஏசா. 61:8) மற்றவர்களை நியாயமாக நடத்துகிற விஷயத்தில் அவர் நமக்குச் சிறந்த முன்மாதிரி! அவருடைய சட்டங்களுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிந்தவரை அவர் அவர்களை ஆசீர்வதித்தார். ஆனால், அவருடைய நியாயமான, நீதியான தராதரங்களை ஒதுக்கித்தள்ளியபோது இஸ்ரவேலர்கள் கஷ்டங்களை அனுபவித்தார்கள். பத்துக் கட்டளைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் இன்னும் இரண்டு கட்டளைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

13-14. பத்துக் கட்டளைகளில் இருக்கும் முதல் இரண்டு கட்டளைகள் என்ன, அந்தக் கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிந்தபோது எப்படி நன்மையடைந்தார்கள்?

13 யெகோவாவை மட்டும்தான் வணங்க வேண்டும். பத்துக் கட்டளைகளில் இருக்கும் முதல் இரண்டு கட்டளைகள், யெகோவாவை மட்டுமே இஸ்ரவேலர்கள் வணங்க வேண்டும் என்று சொன்னது. அதோடு, சிலைகளை வணங்கக் கூடாது என்று எச்சரித்தது. (யாத். 20:3-6) தன்னுடைய நன்மைக்காக அல்ல, மக்களின் நன்மைக்காகத்தான் யெகோவா அந்தக் கட்டளைகளைக் கொடுத்தார். அவருடைய மக்கள் அவருக்கு உண்மையாக இருந்தவரை செழிப்பாக இருந்தார்கள். வேறு தேசத்து தெய்வங்களைக் கும்பிட்டபோதோ கஷ்டங்களை அனுபவித்தார்கள்.

14 கானானியர்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். உண்மையுள்ள, உயிருள்ள கடவுளை வணங்குவதற்குப் பதிலாக உயிரற்ற சிலைகளை அவர்கள் வணங்கினார்கள். அதன் மூலம், தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக்கொண்டார்கள். (சங். 115:4-8) அசிங்கமான பாலியல் செயல்களில் ஈடுபடுவதும், குழந்தைகளைக் கொடூரமாகப் பலி கொடுப்பதும் அவர்களுடைய வணக்கத்தின் பாகமாக இருந்தன. யெகோவாவை ஒதுக்கித்தள்ளிவிட்டு சிலைகளை வணங்கத் தீர்மானித்தபோது, இஸ்ரவேலர்களும் தங்களை இழிவுபடுத்திக்கொண்டார்கள். இது அவர்களுடைய குடும்ப உறவுகளைப் பாதித்தது. (2 நா. 28:1-4) அதிகாரத்தில் இருந்தவர்கள் யெகோவாவின் நீதியான தராதரங்களை ஒதுக்கித்தள்ளினார்கள், தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள், பலவீனமானவர்களையும் பாதுகாப்பற்றவர்களையும் அடக்கி ஒடுக்கினார்கள். (எசே. 34:1-4) எந்தப் பாதுகாப்பும் இல்லாத பெண்களையும் பிள்ளைகளையும் தவறாக நடத்தியவர்களைத் தண்டிக்கப்போவதாக யெகோவா எச்சரித்தார். (உபா. 10:17, 18; 27:19) அதேசமயத்தில், தன்னுடைய மக்கள் தனக்கு உண்மையாக இருந்தபோதும், மற்றவர்களை நியாயமாக நடத்தியபோதும் அவர்களை ஆசீர்வதித்தார்.—1 ரா. 10:4-9.

யெகோவா நம்மை நேசிக்கிறார்; நாம் அநியாயமாக நடத்தப்பட்டால், அது அவருக்கு நிச்சயம் தெரியும் (பாரா 15)

15. யெகோவாவைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

15 பாடங்கள்: யெகோவாவை வணங்குவதாகச் சொல்லிக்கொள்கிறவர்கள், அவருடைய தராதரங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு அவருடைய மக்களுக்குக் கெடுதல் செய்தால், நாம் யெகோவாவைக் குற்றப்படுத்த முடியாது. யெகோவா நம்மை நேசிக்கிறார்; நாம் அநியாயமாக நடத்தப்பட்டால், அது அவருக்கு நிச்சயம் தெரியும். ஒரு குழந்தை படுகிற கஷ்டத்தைப் பார்த்து ஒரு தாய் எவ்வளவு வேதனைப்படுகிறாளோ, அதைவிட அதிகமாக நம்முடைய கஷ்டத்தைப் பார்த்து யெகோவா வேதனைப்படுகிறார். (ஏசா. 49:15) அவர் உடனடியாகத் தலையிடுவதில்லை என்றாலும், மற்றவர்களை மோசமாக நடத்துபவர்கள் மனம் திருந்தாமல் இருந்தால், சரியான நேரத்தில் அவர்களைத் தண்டிப்பார்.

திருச்சட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருந்தது?

16-18. திருச்சட்டத்தில் எதைப் பற்றிய சட்டங்கள் இருந்தன, அதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?

16 ஓர் இஸ்ரவேலன் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நிறைய சட்டங்கள் திருச்சட்டத்தில் இருந்தன. அதனால், நியமிக்கப்பட்டிருந்த பெரியோர்கள் யெகோவாவின் மக்களுக்கு நீதியான தீர்ப்பைக் கொடுப்பது ரொம்ப முக்கியமாக இருந்தது. ஆன்மீக விஷயங்களை மட்டுமல்ல, சண்டை சச்சரவுகள், குற்றச்செயல்கள் போன்ற விஷயங்களை விசாரிக்கிற பொறுப்பும் அந்தப் பெரியோர்களுக்கு இருந்தது. அதைப் பற்றிய சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

17 ஓர் இஸ்ரவேலன் கொலை செய்தபோது, அவனுக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்கப்படவில்லை. மரண தண்டனை கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பு, அந்த நகரத்தில் இருந்த பெரியோர்கள் அந்த விஷயத்தை நன்றாக விசாரித்தார்கள். (உபா. 19:2-7, 11-13) அதோடு, மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் அவர்கள் தீர்ப்பு கொடுத்தார்கள். சொத்து தகராறு போன்ற பொது பிரச்சினைகள் உட்பட, கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள்வரை எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்ப்பு கொடுத்தார்கள். (யாத். 21:35; உபா. 22:13-19) அந்தப் பெரியோர்கள் நியாயமாக நடந்துகொண்டபோதும், இஸ்ரவேலர்கள் திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தபோதும் எல்லாரும் நன்மையடைந்தார்கள், முழு தேசமும் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தது.—லேவி. 20:7, 8; ஏசா. 48:17, 18.

18 பாடங்கள்: நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா முக்கியமானதாக நினைக்கிறார். மற்றவர்களோடு பழகும்போது நியாயமாகவும் அன்பாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். நாம் என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை அவர் கவனிக்கிறார்; வீட்டில் தனியாக இருக்கும்போதுகூட நாம் என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை அவர் கவனிக்கிறார்.—எபி. 4:13.

19-21. (அ) பெரியோர்களும் நியாயாதிபதிகளும் கடவுளுடைய மக்களை எப்படி நடத்த வேண்டியிருந்தது? (ஆ) யெகோவா என்ன சட்டங்களைக் கொடுத்திருந்தார், நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?

19 சுற்றியிருந்த தேசங்களால் தன்னுடைய மக்கள் கறைபட்டுவிடாதபடி அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று யெகோவா நினைத்தார். அதனால், பெரியோர்களும் நியாயாதிபதிகளும் திருச்சட்டத்தைப் பாரபட்சம் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தார். இருந்தாலும், தீர்ப்பு சொல்பவர்கள், மக்களைக் கடுமையாகவோ கறாராகவோ நடத்தக் கூடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்குப் பதிலாக, அவர்கள் நியாயத்தை நேசிக்க வேண்டியிருந்தது.—உபா. 1:13-17; 16:18-20.

20 தன்னுடைய மக்கள்மேல் யெகோவாவுக்குக் கரிசனை இருந்தது. அதனால்தான், யாரும் அநியாயமாக நடத்தப்படக் கூடாது என்பதற்காக நிறைய சட்டங்களை அவர் கொடுத்திருந்தார். உதாரணத்துக்கு, திருச்சட்டம் நடைமுறையில் இருந்தபோது, ஒருவர்மேல் பொய்க் குற்றம் சுமத்துவதற்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைவாகத்தான் இருந்தன. யார் தன்மீது குற்றம் சுமத்தியிருக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் உரிமை குற்றம் சுமத்தப்பட்டவருக்கு இருந்தது. (உபா. 19:16-19; 25:1) அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுவதற்கு, குறைந்தது இரண்டு பேராவது சாட்சி சொல்ல வேண்டியிருந்தது. (உபா. 17:6; 19:15) தான் செய்த குற்றத்தை ஒரே ஒரு சாட்சிதான் பார்த்திருக்கிறார் என்பதற்காக, தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம் என்று ஓர் இஸ்ரவேலன் நினைக்க முடியாது. ஏனென்றால், அவன் செய்த குற்றத்தை யெகோவா பார்த்திருக்கிறார். குடும்பங்களில், தகப்பன்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், அந்த அதிகாரத்துக்கு வரம்புகள் இருந்தன. சில குடும்பத் தகராறுகளில், நகரத்தின் பெரியோர்கள் தலையிட்டு கடைசியாகத் தீர்ப்பு கொடுக்க வேண்டியிருந்தது.—உபா. 21:18-21.

21 பாடங்கள்: யெகோவா ஒருபோதும் அநியாயமாக நடந்துகொள்ள மாட்டார். இப்படி, அவர் நமக்குச் சிறந்த முன்மாதிரி வைக்கிறார். (சங். 9:7) தன்னுடைய தராதரங்களை உண்மையோடு கடைப்பிடிக்கிறவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார். அதேசமயத்தில், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்கிறார். (2 சா. 22:21-23; எசே. 9:9, 10) சிலர் பொல்லாத விஷயங்களைச் செய்துவிட்டு தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டதுபோல் நமக்குத் தோன்றலாம். ஆனால், தனக்குரிய நேரத்தில் யெகோவா அவர்களை நிச்சயம் தண்டிப்பார். (நீதி. 28:13) அவர்கள் மனம் திருந்தவில்லை என்றால், “உயிருள்ள கடவுளுடைய கைகளில் சிக்கிக்கொள்வது பயங்கரமாக இருக்கும்” என்பதைச் சீக்கிரத்திலேயே புரிந்துகொள்வார்கள்.—எபி. 10:30, 31.

திருச்சட்டம் குறிப்பாக யாரைப் பாதுகாத்தது?

தகராறுகளைத் தீர்த்து வைக்கும்போது, மூப்பர்களும் யெகோவாவைப் போலவே அன்பாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டியிருந்தது (பாரா 22) *

22-24. (அ) திருச்சட்டம் குறிப்பாக யாரைப் பாதுகாத்தது, யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) யாத்திராகமம் 22:22-24-ல் என்ன எச்சரிக்கை இருக்கிறது?

22 தங்களையே பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தவர்களை, அதாவது அப்பா இல்லாத பிள்ளைகளையும் விதவைகளையும் மற்ற தேசத்துக்காரர்களையும் திருச்சட்டம் பாதுகாத்தது. “உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனின் வழக்கிலோ அப்பா இல்லாத பிள்ளையின் வழக்கிலோ நீங்கள் நீதியைப் புரட்டக் கூடாது. ஒரு விதவையின் சால்வையை அடமானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று இஸ்ரவேலில் இருந்த நியாயாதிபதிகளிடம் சொல்லப்பட்டிருந்தது. (உபா. 24:17) தங்களையே பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்கள்மேல் யெகோவா தனிப்பட்ட அக்கறை காட்டினார். அவர்களைத் தவறாக நடத்திய எல்லாரையும் தண்டித்தார்.யாத்திராகமம் 22:22-24-ஐ வாசியுங்கள்.

23 இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொள்ளக் கூடாது என்ற சட்டத்தைக் கொடுத்ததன் மூலம் குடும்ப அங்கத்தினர்கள் மத்தியில் பாலியல் குற்றங்கள் நடக்காதபடி திருச்சட்டம் பாதுகாத்தது. (லேவி. 18:6-30) இஸ்ரவேலைச் சுற்றியிருந்த தேசங்களில் இதுபோன்ற குற்றங்கள் சர்வசாதாரணமாக நடந்தன. ஆனால், அந்தக் குற்றத்தை அவர்கள் கண்டும்காணாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் யெகோவாவின் மக்களோ, இதுபோன்ற செயல்களை, யெகோவாவைப் போலவே அருவருப்பாகக் கருத வேண்டியிருந்தது.

24 பாடங்கள்: யெகோவா யாருக்கெல்லாம் பொறுப்பு கொடுத்திருக்கிறாரோ, அவர்கள் எல்லாரும் தங்கள் கண்காணிப்பின்கீழ் இருப்பவர்களின் மேல் உண்மையான அக்கறை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்களை யெகோவா வெறுக்கிறார். எல்லாருக்குமே, முக்கியமாக தங்களையே பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும்கூட, பாதுகாப்பும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

திருச்சட்டம்—‘வரப்போகிற நன்மைகளின் நிழல்’

25-26. (அ) அன்பும் நியாயமும் சுவாசத்தையும் உயிரையும் போல் இருக்கின்றன என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) இந்தத் தொடர் கட்டுரையின் அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

25 அன்பும் நியாயமும் சுவாசத்தையும் உயிரையும் போல இருக்கின்றன. சுவாசமில்லாமல் உயிரும், உயிரில்லாமல் சுவாசமும் இந்தப் பூமியில் இருக்க முடியாது. யெகோவா நம்மை நியாயமாகத்தான் நடத்துகிறார் என்று நாம் உறுதியாக நம்பும்போது, அவர்மீது நமக்கு இருக்கும் அன்பு அதிகமாகிறது. கடவுளையும் அவருடைய நீதியான தராதரங்களையும் நேசிக்கும்போது, மற்றவர்களை நேசிக்க வேண்டும், அவர்களை நியாயமாக நடத்த வேண்டும் என்ற தூண்டுதல் வருகிறது.

26 யெகோவாவுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் இருந்த பந்தத்துக்குத் திருச்சட்டம் உயிர் கொடுத்தது. ஆனால், திருச்சட்டத்தை இயேசு முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, கடவுளுடைய மக்கள் அதற்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் இருக்கவில்லை; மேலான ஒரு சட்டத்தால் அது மாற்றீடு செய்யப்பட்டது. (ரோ. 10:4) அதனால்தான், “வரப்போகிற நன்மைகளின் . . . நிழல்” என்று அப்போஸ்தலன் பவுல் அதைப் பற்றிச் சொன்னார். (எபி. 10:1) அவர் சொன்ன அந்த நன்மைகளில் சிலவற்றைப் பற்றியும், அன்புக்கும் நியாயத்துக்கும் கிறிஸ்தவ சபையிலிருக்கிற முக்கியமான பங்கைப் பற்றியும் இந்தத் தொடர் கட்டுரையின் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 73 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்

^ பாரா. 5 நம்மீது யெகோவா அக்கறையாக இருக்கிறார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்? இதைப் பற்றி விளக்கும் நான்கு தொடர் கட்டுரைகளில் இதுதான் முதல் கட்டுரை. மற்ற மூன்று கட்டுரைகளும் மே 2019 காவற்கோபுர இதழில் வெளியாகும். அந்தக் கட்டுரைகளின் தலைப்புகள்: “அன்பும் நியாயமும்—கிறிஸ்தவ சபையில்,” “அன்பும் நியாயமும்—அக்கிரமம் நடக்கும்போது,” “குழந்தை பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்.”

^ பாரா. 2 வார்த்தைகளின் விளக்கம்: மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த 600-க்கும் அதிகமான சட்டங்கள், “திருச்சட்டம்,” “மோசேயின் திருச்சட்டம்,” “கட்டளைகள்” என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அதோடு, பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களும்கூட (ஆதியாகமம் முதல் உபாகமம் வரை) பெரும்பாலும் திருச்சட்டம் என்றே அழைக்கப்படுகின்றன. சில சமயங்களில், முழு எபிரெய வேதாகமத்தைக் குறிப்பிடுவதற்காகவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

^ பாரா. 60 அட்டைப் படம்: பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அன்பாகச் சொல்லிக்கொடுத்து வளர்க்கும்போது அவர்கள் பாதுகாப்பாக உணருவார்கள்; அவர்கள் அப்படி உணர வேண்டும் என்பதுதான் யெகோவாவின் விருப்பம்.

படங்களின் விளக்கம்: இஸ்ரவேலைச் சேர்ந்த ஓர் அம்மா, உணவைத் தயாரிக்கும்போது தன் மகள்களோடு சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அப்பா, ஆடுகளைப் பராமரிப்பதைப் பற்றி தன் மகனுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

^ பாரா. 64 படங்களின் விளக்கம்: உள்ளூர் வியாபாரியால் தவறாக நடத்தப்பட்ட விதவைக்கும், அவளுடைய மகனுக்கும் நகர வாசலில் இருக்கும் பெரியோர்கள் அன்பாக உதவுகிறார்கள்.