Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 12

மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுங்கள்

மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுங்கள்

“நீங்கள் எல்லாரும் . . . அனுதாபத்தை . . . காட்டுங்கள்.”—1 பே. 3:8.

பாட்டு 121 ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்

இந்தக் கட்டுரையில்... *

1. ஒன்று பேதுரு 3:8-ல் சொல்கிறபடி, நம்முடைய உணர்ச்சிகளை மதிக்கிற, நம் நலனில் அக்கறை காட்டுகிற நபர்கள் நம்மைச் சுற்றியிருப்பது நமக்கு ஏன் சந்தோஷத்தைத் தருகிறது?

நம்முடைய உணர்ச்சிகளை மதிக்கிற, நம் நலனில் அக்கறை காட்டுகிற நபர்கள் நம்மைச் சுற்றியிருக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம். நாம் எப்படி யோசிக்கிறோம், எப்படி உணருகிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக, அவர்கள் தங்களை நம்முடைய இடத்தில் வைத்துப்பார்ப்பார்கள். நாம் அவர்களிடம் உதவி கேட்பதற்கு முன்பே நமக்கு என்ன தேவை என்பதை யோசிப்பார்கள், நமக்கு உதவுவார்கள். மற்றவர்கள் நம்மீது ‘அனுதாபம்’ * காட்டும்போது, நாம் ரொம்பவே சந்தோஷப்படுவோம்; நன்றியோடு இருப்போம்.1 பேதுரு 3:8-ஐ வாசியுங்கள்.

2. அனுதாபம் காட்டுவதற்கு நாம் ஏன் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்?

2 கிறிஸ்தவர்களாக, நாம் எல்லாரும் மற்றவர்கள்மீது அனுதாபம் காட்ட வேண்டும். ஆனால், இந்தக் குணத்தைக் காட்டுவது எப்போதுமே சுலபம் கிடையாது. ஏன்? ஒரு காரணம், நாம் எல்லாரும் பாவ இயல்புள்ளவர்கள்! (ரோ. 3:23) நம்மைப் பற்றி மட்டுமே யோசிப்பதுதான் நம்முடைய இயல்பு. அதனால், மற்றவர்களைப் பற்றி யோசிக்க நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அதோடு, நாம் வளர்க்கப்பட்ட சூழலால் அல்லது நம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் அனுதாபம் காட்டுவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதுமட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருக்கும் ஆட்களின் மனப்பான்மையும் நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். நாம் வாழும் இந்தக் கடைசி நாட்களில், நிறைய பேர் மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதே கிடையாது; அவர்கள் “சுயநலக்காரர்களாக” இருக்கிறார்கள். (2 தீ. 3:1, 2) இதுபோன்ற சவால்களைச் சமாளித்து, மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க எது நமக்கு உதவும்?

3. (அ) அனுதாபம் காட்டும் விஷயத்தில் நாம் எப்படி முன்னேறலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 யெகோவாவையும் அவருடைய மகனான இயேசு கிறிஸ்துவையும் போல நடந்துகொள்ளும்போது, அனுதாபம் காட்டும் விஷயத்தில் நாம் முன்னேறலாம். யெகோவா அன்பாகவே இருக்கிறார்; மற்றவர்கள்மீது அக்கறை காட்டும் விஷயத்தில் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். (1 யோ. 4:8) இயேசு, தன்னுடைய அப்பாவின் குணங்களை அப்படியே பின்பற்றினார். (யோவா. 14:9) அவர் பூமியில் இருந்தபோது, மனிதர்கள் எப்படிக் கரிசனையோடு நடந்துகொள்ளலாம் என்பதைக் காட்டினார். இந்தக் கட்டுரையில், யெகோவாவும் இயேசுவும் எப்படி மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி முதலில் பார்ப்போம். பிறகு, நாம் எப்படி அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

யெகோவாவின் முன்மாதிரி

4. தன் ஊழியர்களுடைய உணர்ச்சிகளுக்கு யெகோவா மதிப்புக் கொடுக்கிறார் என்பதை ஏசாயா 63:7-9 எப்படிக் காட்டுகிறது?

4 தன்னுடைய ஊழியர்களின் உணர்ச்சிகளை யெகோவா மதிக்கிறார் என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். உதாரணத்துக்கு, பூர்வகால இஸ்ரவேலர்கள் நிறைய சோதனைகளைச் சந்தித்தபோது யெகோவா எப்படி உணர்ந்தார் என்று யோசித்துப்பாருங்கள். “அவர்கள் வேதனைப்பட்ட சமயத்திலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 63:7-9-ஐ வாசியுங்கள்.) பிற்பாடு, சகரியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா ஒரு விஷயத்தைச் சொன்னார். அதாவது, மற்றவர்கள் தன்னுடைய மக்களைத் தவறாக நடத்தியபோது, தன்னையே தவறாக நடத்தியதாகச் சொன்னார். “உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” என்று தன் ஊழியர்களிடம் சொன்னார். (சக. 2:8) தன் மக்கள்மீது யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிற வலிமையான ஓர் உதாரணம், இல்லையா?

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை யெகோவா கரிசனையோடு விடுதலை செய்தார் (பாரா 5)

5. கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் தன் ஊழியர்களைக் காப்பாற்றுவதற்கு யெகோவா என்ன செய்தார், ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

5 கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் தன்னுடைய ஊழியர்களைப் பார்க்கும்போது யெகோவாவின் உள்ளத்தில் கரிசனை பொங்குகிறது. ஆனால், அவர் அதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அவர்களுக்கு உதவுவதற்காகச் செயலில் இறங்குகிறார். உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, அவர்களுடைய வலியை அவர் உணர்ந்தார்; அவர்களுக்கு உதவ விரும்பினார். ‘என்னுடைய ஜனங்கள் படுகிற கஷ்டத்தை நான் பார்த்தேன். அவர்கள் கதறுவதைக் கேட்டேன். அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும். நான் கீழே இறங்கிப் போய் எகிப்தியர்களுடைய கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவேன்’ என்று அவர் மோசேயிடம் சொன்னார். (யாத். 3:7, 8) யெகோவாவின் உள்ளத்தில் கரிசனை பொங்கியதால், அடிமைகளாக இருந்த அவர்களை விடுதலை செய்தார். சில நூற்றாண்டுகள் கழித்து, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் எதிரிகள் இஸ்ரவேலர்களைத் தாக்கினார்கள். அப்போது, யெகோவா என்ன செய்தார்? “கொடுமைக்காரர்களின் கொடுமை தாங்காமல் அவர்கள் குமுறியதைக் கேட்டு யெகோவா மனம் உருகினார்.” இந்தச் சமயத்திலும், தன்னுடைய மக்கள்மீது இருந்த அனுதாபத்தால் யெகோவா அவர்களுக்கு உதவினார். எதிரிகளிடமிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவதற்காக நியாயாதிபதிகளை நியமித்தார்.—நியா. 2:16, 18.

6. தவறாக யோசித்த ஒருவருடைய உணர்ச்சிகளுக்கும் யெகோவா மதிப்புக் கொடுத்தார் என்பதைக் காட்டும் ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

6 தன்னுடைய ஊழியர்கள் யோசிக்கும் விதம் தவறாக இருக்கும்போதுகூட அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு யெகோவா மதிப்புக் கொடுக்கிறார். யோனா தீர்க்கதரிசியின் உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். நினிவே ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்தியைச் சொல்லும்படி கடவுள் அவரை அனுப்பினார். யோனா சொல்வதைக் கேட்டு நினிவே ஜனங்கள் மனம் திருந்தியபோது, அவர்களை அழிக்க வேண்டாம் என்று கடவுள் முடிவு செய்தார். ஆனால், யோனாவுக்கு இது பிடிக்கவில்லை. நினிவே அழிக்கப்படும் என்று, தான் சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறாததைப் பார்த்து அவருக்கு “கோபம் கோபமாக வந்தது.” இருந்தாலும், யோனாவிடம் யெகோவா பொறுமையாக நடந்துகொண்டார். அவர் யோசிக்கும் விதத்தைச் சரி செய்துகொள்ள உதவினார். (யோனா 3:10–4:11) யெகோவா கற்றுக்கொடுத்த பாடத்தை யோனா சீக்கிரத்தில் புரிந்துகொண்டார். நம்முடைய நன்மைக்காக அந்தச் சம்பவங்களைப் பதிவு செய்வதற்கும் யெகோவா அவரைப் பயன்படுத்தினார்.—ரோ. 15:4. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

7. தன்னுடைய ஊழியர்களிடம் யெகோவா நடந்துகொள்ளும் விதம் நமக்கு என்ன உறுதியைத் தருகிறது?

7 தன்னுடைய மக்களிடம் யெகோவா நடந்துகொள்கிற விதம், அவர்களுக்கு அவர் அனுதாபம் காட்டுகிறார் என்ற உறுதியைத் தருகிறது. நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கிற வலியும் வேதனையும் அவருக்கு நன்றாகத் தெரியும். யெகோவாவுக்கு “மனிதனுடைய இதயத்தில் இருப்பது . . . நன்றாகத் தெரியும்” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 6:30) நம்முடைய எல்லா யோசனைகளையும் ஆழமான உணர்ச்சிகளையும் வரம்புகளையும் அவர் புரிந்துகொள்கிறார். அதனால், “தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார்.” (1 கொ. 10:13) இந்த வாக்குறுதி எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

இயேசுவின் முன்மாதிரி

8-10. மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க இயேசுவுக்கு எந்த விஷயங்கள் உதவியிருக்கும்?

8 பூமியில் ஒரு மனிதராக இருந்தபோது, மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு இயேசு ரொம்பவே மதிப்புக் கொடுத்தார். அதற்கு, மூன்று விஷயங்கள் அவருக்கு உதவியாக இருந்திருக்கும். ஒன்று, நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், தன்னுடைய அப்பாவின் குணங்களை அவர் அப்படியே பின்பற்றினார். தன்னுடைய அப்பாவைப் போலவே அவரும் மக்களை நேசித்தார். படைப்பு வேலையில் அவர் தன் அப்பாவுக்கு உதவியபோது, எல்லா படைப்புகளையும் பார்த்து அவர் சந்தோஷப்பட்டாலும், குறிப்பாக “மனுஷர்கள்மேல் [அவருக்கு] கொள்ளைப் பிரியம்” இருந்தது. (நீதி. 8:31) மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதிக்க அன்புதான் அவரைத் தூண்டியது.

9 இரண்டாவது விஷயம், மற்றவர்களுடைய இதயத்தில் என்ன இருந்தது என்று இயேசுவால் புரிந்துகொள்ள முடிந்தது. அதாவது, மக்களின் உள்நோக்கங்களையும் உணர்ச்சிகளையும் அவரால் தெரிந்துகொள்ள முடிந்தது. (மத். 9:4; யோவா. 13:10, 11) மக்கள் வேதனையில் தவித்துக்கொண்டிருந்ததை அவர் புரிந்துகொண்டார்; அவர்கள்மேல் இருந்த அக்கறையால், அவர்களை ஆறுதல்படுத்தினார்.—ஏசா. 61:1, 2; லூக். 4:17-21.

10 மூன்றாவது விஷயம், தன்னைச் சுற்றியிருந்தவர்கள் பட்ட சில கஷ்டங்களை இயேசுவும் அனுபவித்திருக்கிறார். உதாரணத்துக்கு, ஏழ்மையான ஒரு குடும்பத்தில் அவர் வளர்க்கப்பட்டார். தன்னுடைய வளர்ப்புத் தந்தையான யோசேப்போடு சேர்ந்து வேலை செய்தபோது, கடினமாக உழைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார். (மத். 13:55; மாற். 6:3) இயேசு தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிப்பதற்குக் கொஞ்சம் முன்பு, யோசேப்பு இறந்துபோனதாகத் தெரிகிறது. அதனால், அன்பான ஒருவரை இழப்பதால் வரும் வேதனையை அவர் அனுபவித்திருப்பார். ஒரே விதமான மத நம்பிக்கைகள் இல்லாத குடும்ப அங்கத்தினர்கள் மத்தியில் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. (யோவா. 7:5) சாதாரண மக்களின் கஷ்டங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள, இந்தச் சூழ்நிலைகளும் மற்ற சூழ்நிலைகளும் இயேசுவுக்கு உதவியிருக்கும்.

காது கேட்காத மனிதனைக் குணப்படுத்துவதற்கு முன்பு, அவனை கூட்டத்தைவிட்டு இயேசு தனியாகக் கூட்டிக்கொண்டு போகிறார் (பாரா 11)

11. மக்கள்மீது இயேசுவுக்கு இருந்த அக்கறை எந்தச் சமயத்தில் இன்னும் தெளிவாகத் தெரிந்தது? விளக்குங்கள். (அட்டைப் படம்)

11 இயேசு அற்புதங்களைச் செய்தபோது, மக்கள்மேல் அவருக்கு இருந்த அக்கறை இன்னும் தெளிவாகத் தெரிந்தது. வெறும் கடமைக்காக இயேசு அந்த அற்புதங்களைச் செய்யவில்லை. வேதனையில் தவித்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது, அவருடைய ‘மனம் உருகியது.’ (மத். 20:29-34; மாற். 1:40-42) உதாரணத்துக்கு, காது கேட்காத ஒருவனைக் குணப்படுத்துவதற்காக அவனைக் கூட்டத்திலிருந்து தனியாகக் கூட்டிக்கொண்டு போனபோதும், விதவையின் மகனை உயிர்த்தெழுப்பியபோதும் இயேசுவின் உணர்ச்சிகள் எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். (மாற். 7:32-35; லூக். 7:12-15) அவர்களைப் பார்த்து இயேசு பரிதாபப்பட்டார், அவர்களுக்கு உதவ விரும்பினார்.

12. மார்த்தாள்மீதும் மரியாள்மீதும் இயேசு அனுதாபம் காட்டியதை யோவான் 11:32-35-லிருந்து எப்படித் தெரிந்துகொள்கிறோம்?

12 மார்த்தாள்மீதும் மரியாள்மீதும் இயேசு அனுதாபப்பட்டார். தங்களுடைய சகோதரன் லாசரு இறந்த துக்கத்தில் துவண்டுபோயிருந்த அவர்களைப் பார்த்து, இயேசு “கண்ணீர்விட்டார்.” (யோவான் 11:32-35-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய நெருங்கிய நண்பன் தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பதற்காக மட்டுமே அவர் கண்ணீர்விடவில்லை. ஏனென்றால், இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் தன்னுடைய நண்பனை உயிர்த்தெழுப்பவிருந்தார். பிறகு ஏன் அவர் கண்ணீர்விட்டார்? தன்னுடைய நண்பர்களின் இதயத்தில் இருந்த வலியைப் புரிந்துகொண்டதால்தான் அவர் கண்ணீர்விட்டார்.

13. இயேசு மற்றவர்கள்மீது அனுதாபம் காட்டியதைப் பற்றிப் படிப்பது நமக்கு ஏன் உற்சாகத்தைத் தருகிறது?

13 இயேசு மற்றவர்கள்மீது அனுதாபம் காட்டியதைப் பற்றிப் படிப்பது நம்மை உற்சாகப்படுத்துகிறது. அவர் மற்றவர்களைக் கரிசனையோடு நடத்தியதால் நாம் அவரை நேசிக்கிறோம். (1 பே. 1:8) இப்போது கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக அவர் ஆட்சி செய்வதை நினைக்கும்போது, நமக்கு உற்சாகமாக இருக்கிறது. சீக்கிரத்தில், அவர் எல்லா கஷ்டங்களுக்கும் முடிவுகட்டுவார். அவர் ஏற்கெனவே இந்தப் பூமியில் ஒரு மனிதராக வாழ்ந்திருந்ததால், சாத்தானுடைய ஆட்சியால் ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் சரி செய்வதற்கு அவர்தான் மிகச் சிறந்த நபர். ‘நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்படக்கூடிய’ ஒரு ராஜா நமக்கு இருப்பது எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்!—எபி. 2:17, 18; 4:15, 16.

யெகோவா மற்றும் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்

14. எபேசியர் 5:1, 2 நம்மை என்ன செய்யத் தூண்டுகிறது?

14 யெகோவா மற்றும் இயேசுவின் முன்மாதிரியைப் பற்றி யோசித்துப்பார்க்கும்போது, இன்னும் அதிகமாக அனுதாபம் காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் நமக்கு வருகிறது, இல்லையா? (எபேசியர் 5:1, 2-ஐ வாசியுங்கள்.) மற்றவர்களின் இதயத்தில் என்ன இருக்கிறது என்று அவர்களைப் போல நம்மால் தெரிந்துகொள்ள முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் தேவைகளையும் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்யலாம். (2 கொ. 11:29) நம்மைச் சுற்றியிருக்கும் சுயநலமான மக்களைப் போல் நாம் இருப்பதில்லை. “[நம்முடைய] நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை [காட்டுகிறோம்]”.—பிலி. 2:4.

(பாராக்கள் 15-19) *

15. குறிப்பாக யார் அனுதாபத்தைக் காட்ட வேண்டும்?

15 குறிப்பாக, சபை மூப்பர்கள் அனுதாபம் காட்டுவது ரொம்பவே முக்கியம். தங்களுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆடுகளைக் குறித்து அவர்கள் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். (எபி. 13:17) மூப்பர்கள் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்றால், அனுதாபம் காட்ட வேண்டியது அவசியம். இந்தக் குணத்தை அவர்கள் எப்படிக் காட்டலாம்?

16. அனுதாபமுள்ள ஒரு மூப்பர் என்ன செய்வார், அப்படிச் செய்வது ஏன் முக்கியம்?

16 அனுதாபமுள்ள ஒரு மூப்பர், சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளோடு நேரம் செலவிடுவார். அவர்கள் மனதில் இருப்பதைப் புரிந்துகொள்வதற்காக, கேள்விகளைக் கேட்பார்; அவர்கள் சொல்வதைக் கவனமாகவும் பொறுமையாகவும் காதுகொடுத்து கேட்பார். அதுவும், தன் மனதில் இருப்பதை கொட்ட நினைத்தும், சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தவிப்பவர்களிடம் அப்படி அனுதாபத்தோடு நடந்துகொள்வது ரொம்ப முக்கியம். (நீதி. 20:5) ஒரு மூப்பர் தன்னுடைய நேரத்தை மனப்பூர்வமாகச் செலவு செய்யும்போது, சகோதர சகோதரிகளுக்கும் அவருக்கும் இடையில் இருக்கிற நம்பிக்கையும் நட்பும் அன்பும் பலமாகின்றன.—அப். 20:37.

17. மூப்பர்களிடம் இருக்கும் மற்ற எல்லா குணத்தையும்விட எந்தக் குணத்தைச் சகோதர சகோதரிகள் உயர்வாக நினைக்கிறார்கள்? ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

17 மூப்பர்களிடம் இருக்கும் மற்ற எல்லா குணத்தையும்விட அனுதாபம் என்ற குணத்தைத்தான் ரொம்ப உயர்வாக நினைப்பதாக சகோதர சகோதரிகள் நிறைய பேர் சொல்கிறார்கள். ஏன்? “அவங்ககிட்ட பேசுறது சுலபமா இருக்கு. ஏன்னா, அவங்க நம்மள புரிஞ்சிக்குவாங்கனு நமக்கு நல்லா தெரியும்” என்று எடிலைட் என்ற சகோதரி சொல்கிறார். “அவங்க உங்ககிட்ட எப்படி பேசுறாங்களோ, அத பார்த்தே அவங்களுக்கு உங்க மேல அனுதாபம் இருக்குங்குறத புரிஞ்சிக்க முடியும்” என்றும் அவர் சொல்கிறார். ஒரு சகோதரர் நன்றி பொங்க இப்படிச் சொல்கிறார்: “என் சூழ்நிலைய பத்தி சொல்லிட்டு இருந்தப்போ, ஒரு மூப்பரோட கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. அந்த காட்சி என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு.”—ரோ. 12:15.

18. மற்றவர்கள்மீது எப்படி அனுதாபம் காட்டலாம்?

18 மூப்பர்கள் மட்டும்தான் மற்றவர்கள்மீது அனுதாபம் காட்ட வேண்டுமா? இல்லை, நம் எல்லாராலும் காட்ட முடியும். எப்படி? குடும்பத்திலும் சபையிலும் இருப்பவர்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். சபையில் இருக்கும் டீனேஜ் பிள்ளைகள், உடல்நிலை சரியில்லாதவர்கள், அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்தவர்கள் ஆகிய எல்லார்மீதும் அக்கறை காட்டுங்கள். அவர்களுடைய நலனைப் பற்றி விசாரியுங்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளைக் கொட்டும்போது, காதுகொடுத்துக் கேளுங்கள். அவர்கள் படும் வேதனைகளை நீங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள். உங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்யுங்கள். இப்படிச் செய்தால், உண்மையான அன்பைச் செயலில் காட்டுகிறோம் என்று அர்த்தம்.—1 யோ. 3:18.

19. மற்றவர்களுக்கு உதவும்போது, அவர்களுக்கு ஏற்றபடி பேசுவது ஏன் முக்கியம்?

19 பிரச்சினைகள் வரும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வார்கள். அதனால், அதற்கேற்றபடி பேசுவது முக்கியம். சிலர், தங்கள் பிரச்சினைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேச விரும்புவார்கள். வேறுசிலர், அப்படிப் பேச விரும்ப மாட்டார்கள். அதனால், மற்றவர்களுக்கு உதவும்போது, அவர்களைத் தர்மசங்கடப்படுத்தும் கேள்விகளைக் கேட்கக் கூடாது. (1 தெ. 4:11) ஒருவேளை, மற்றவர்கள் மனம் திறந்து நம்மிடம் பேசினாலும், எல்லா சமயத்திலும் அவர்களுடைய கருத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். இருந்தாலும், அது அவர்களுடைய உணர்வு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.—மத். 7:1; யாக். 1:19.

20. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

20 அனுதாபம் என்ற அருமையான குணத்தை, சபையில் மட்டுமல்ல ஊழியத்திலும் காட்ட வேண்டும். சீஷராக்கும் வேலையைச் செய்யும்போது நாம் இந்தக் குணத்தை எப்படிக் காட்டலாம்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 77 மன்னியுங்கள்

^ பாரா. 5 யெகோவாவும் இயேசுவும் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதிக்கிறார்கள். அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, நாம் ஏன் மற்றவர்களுக்கு அனுதாபம் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும், அதை எப்படிக் காட்டலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

^ பாரா. 1 வார்த்தைகளின் விளக்கம்: ‘அனுதாபம்’ காட்டுவது என்றால், மற்றவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும், அவர்களைப் போலவே உணரவும் முயற்சி செய்வது என்று அர்த்தம். (ரோ. 12:15) இந்தக் கட்டுரையில், “அனுதாபம் காட்டுவதும்,” “மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும்” ஒரே அர்த்தத்தைத்தான் தருகின்றன.

^ பாரா. 6 சோர்ந்துபோயிருந்த அல்லது பயந்துபோயிருந்த தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களிடமும் யெகோவா கரிசனையோடு நடந்துகொண்டார். அன்னாள் (1 சா. 1:10-20), எலியா (1 ரா. 19:1-18), எபெத்மெலேக் (எரே. 38:7-13; 39:15-18) ஆகிய ஊழியர்களின் உதாரணத்தை யோசித்துப்பாருங்கள்.

^ பாரா. 65 படங்களின் விளக்கம்: ராஜ்ய மன்றங்களில் நடக்கும் கூட்டங்களில் நல்ல நட்பை அனுபவிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தப் படத்தில், (1) ஓர் இளம் பிரஸ்தாபியோடும் அவனுடைய அம்மாவோடும் ஒரு மூப்பர் அன்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார், (2) வயதான ஒரு சகோதரி காரில் ஏறுவதற்கு அப்பாவும் மகளும் உதவுகிறார்கள், (3) ஆலோசனை கேட்டு வந்திருக்கும் ஒரு சகோதரி பேசுவதை இரண்டு மூப்பர்கள் கவனமாகக் கேட்கிறார்கள்.