Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 13

ஊழியத்தில் அனுதாபத்தைக் காட்டுங்கள்

ஊழியத்தில் அனுதாபத்தைக் காட்டுங்கள்

“அவர் மனம் உருகினார். அதனால், அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.”—மாற். 6:34.

பாட்டு 96 தகுதியுள்ளோரைத் தேடுங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1. இயேசுவிடம் இருக்கும் மனதைத் தொடுகிற குணங்களில் ஒரு குணம் என்ன? விளக்குங்கள்.

பாவ இயல்புள்ள மனிதர்கள் படும் கஷ்டங்களை இயேசு புரிந்துகொள்கிறார்! அவரிடம் இருக்கும் மனதைத் தொடுகிற ஏராளமான குணங்களில் இதுவும் ஒன்று. அவர் பூமியில் இருந்தபோது, ‘சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்பட்டார். அழுகிறவர்களோடு அழுதார்.’ (ரோ. 12:15) உதாரணத்துக்கு, அவருடைய 70 சீஷர்கள் ஒரு தடவை வெற்றிகரமாக ஊழியம் செய்துவிட்டுத் திரும்பியபோது, அவர் ‘சந்தோஷப்பட்டார்.’ (லூக். 10:17-21) லாசருவை இழந்து தவித்த அவருடைய அன்பானவர்கள் பட்ட வேதனையைப் பார்த்தபோது, அவர் “உள்ளம் குமுறினார், மனம் கலங்கினார்.”—யோவா. 11:33.

2. மக்கள்மீது அனுதாபத்தைக் காட்ட இயேசுவுக்கு எது உதவியது?

2 தான் ஒரு பரிபூரண மனிதராக இருந்தபோதிலும் பாவ இயல்புள்ள மனிதர்களிடம் இயேசுவால் எப்படி அந்தளவு இரக்கத்தையும் கரிசனையையும் காட்ட முடிந்தது? அதற்கு முக்கியக் காரணம், அவர் மக்களை நேசித்ததுதான்! முந்தின கட்டுரையில் பார்த்ததுபோல், அவருக்கு “மனுஷர்கள்மேல் கொள்ளைப் பிரியம்” இருந்தது. (நீதி. 8:31) மனிதர்களுடைய யோசனைகளை நன்றாகப் புரிந்துகொள்ள இந்த அன்புதான் அவரைத் தூண்டியது. மனிதர்களுடைய “இதயத்தில் என்ன இருந்ததென்று [இயேசுவுக்கு] தெரிந்திருந்தது” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (யோவா. 2:25) மக்கள்மீது அவருக்கு ரொம்பவே கரிசனை இருந்தது. தங்கள்மீது இயேசு வைத்திருந்த அன்பை அவர்களாலும் உணர முடிந்தது. அதனால்தான், அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை இயேசு சொன்னபோது, அவர்கள் காதுகொடுத்துக் கேட்டார்கள். ஊழியத்தில் சந்திக்கும் மக்கள்மீது நாம் எந்தளவு கரிசனையைக் காட்டுகிறோமோ, அந்தளவு அவர்களுக்கு உதவ முடியும்.—2 தீ. 4:5.

3-4. (அ) நமக்கு அனுதாபம் இருந்தால் ஊழியத்தை எப்படிப் பார்ப்போம்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

3 பிரசங்க வேலையைச் செய்ய வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பது அப்போஸ்தலன் பவுலுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இன்று நமக்கும் அது தெரியும். (1 கொ. 9:16) ஆனால், மற்றவர்கள்மீது நமக்கு அனுதாபம் இருந்தால், ஊழியத்தை வெறுமனே கடமைக்காகச் செய்ய மாட்டோம். அவர்கள்மீது நமக்கு உண்மையான அன்பு இருப்பதைக் காட்டுவோம், அவர்களுக்கு உதவ ஆசைப்படுவோம். ஏனென்றால், “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று நமக்குத் தெரியும். (அப். 20:35) மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊழியம் செய்தால், அதை இன்னும் சந்தோஷமாகச் செய்வோம்.

4 ஊழியத்தில் நாம் எப்படி அனுதாபம் காட்டலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். முதலில், மக்களைப் பற்றி இயேசு உணர்ந்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்ப்போம். பிறகு, எந்த நான்கு வழிகளில் நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம் என்று பார்ப்போம்.—1 பே. 2:21.

ஊழியத்தில் இயேசு அனுதாபம் காட்டினார்

இயேசுவுக்கு அனுதாபம் இருந்ததால், ஆறுதலான செய்தியைப் பிரசங்கித்தார் (பாராக்கள் 5-6)

5-6. (அ) இயேசு யாருக்கு அனுதாபம் காட்டினார்? (ஆ) ஏசாயா 61:1, 2-ல் முன்கூட்டியே சொல்லப்பட்டபடி, மக்களுக்குப் பிரசங்கித்தபோது இயேசு ஏன் மனம் உருகினார்?

5 இயேசு எப்படி அனுதாபம் காட்டினார் என்பதற்கு ஓர் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். ஓய்வெடுக்காமல் ஊழியம் செய்திருந்ததால், அவரும் அவருடைய சீஷர்களும் ஒரு சமயம் ரொம்பவே களைப்பாக இருந்தார்கள். “சாப்பிடுவதற்குக்கூட அவர்களுக்கு நேரமே கிடைக்கவில்லை.” அதனால், ‘கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக’ “தனிமையான ஓர் இடத்துக்கு” இயேசு அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார். ஆனால், அவர்கள் அங்கே போய்ச் சேருவதற்கு முன்பே ஏராளமான மக்கள் அந்த இடத்துக்கு வந்திருந்தார்கள். இயேசு அங்கே வந்தபோது, அங்கே கூடியிருந்த மக்களைப் பார்த்தார். அப்போது அவர் எப்படி உணர்ந்தார், என்ன செய்தார்? “அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் இருந்ததால் அவர் மனம் உருகினார். * அதனால், அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.”—மாற். 6:30-34.

6 அந்த மக்களைப் பார்த்தபோது, இயேசு ஏன் மனம் உருகினார், அதாவது அனுதாபம் காட்டினார்? அவர்கள் “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல்” இருந்ததை அவர் பார்த்தார். ஒருவேளை, அவர்களில் சிலர் ஏழைகளாக இருந்ததை, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகக் கடினமாக உழைத்ததை, அன்பானவர்களை இழந்து துக்கத்தில் தவித்துக்கொண்டிருந்ததை அவர் கவனித்திருக்கலாம். முந்தின கட்டுரையில் பார்த்ததுபோல், இயேசுவும் அப்படிப்பட்ட சில கஷ்டங்களை அனுபவித்திருந்ததால், அவர்களுடைய சூழ்நிலையை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. மற்றவர்கள்மீது அவருக்கு அக்கறை இருந்தது; அவர்களுக்கு ஆறுதலான செய்தியைச் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார்.ஏசாயா 61:1, 2-ஐ வாசியுங்கள்.

7. நாம் எப்படி இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றலாம்?

7 இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அவரைச் சுற்றிலும் “மேய்ப்பன் இல்லாத ஆடுகளை” போன்ற மக்கள் இருந்தார்கள். இன்று நம்மைச் சுற்றிலும் அப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். நிறைய பிரச்சினைகளால் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு எது தேவையோ, அது நம்மிடம் இருக்கிறது. அதுதான், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி! (வெளி. 14:6) நம் எஜமானைப் போலவே நாமும் ‘ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவதால்’ நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறோம். (சங். 72:13) மக்களைப் பார்த்து நம்முடைய மனமும் உருகுகிறது. அதனால், அவர்களுக்கு நாம் உதவ விரும்புகிறோம்.

நாம் எப்படி அனுதாபம் காட்டலாம்?

ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதைப் பற்றி யோசித்துப்பாருங்கள் (பாராக்கள் 8-9)

8. ஊழியத்தில் அனுதாபம் காட்டுவதற்கான ஒரு வழி என்ன? விளக்குங்கள்.

8 ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களிடம் அனுதாபம் காட்ட வேண்டுமென்றால், அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். அதோடு, அவர்களுடைய சூழ்நிலையில் நாம் இருந்தால், மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புவோமோ, அதேபோல் அவர்களை நடத்த வேண்டும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (மத். 7:12) இதை எப்படிச் செய்வது? இதற்கு, நான்கு வழிகள் இருக்கின்றன. முதலாவதாக, ஒவ்வொரு நபருக்கும் என்ன தேவை என்பதைப் பற்றி யோசித்துப்பாருங்கள். நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்போது, நாம் ஒரு டாக்டரைப் போல் செயல்படுகிறோம் என்று சொல்லலாம். ஒரு நல்ல டாக்டர், தன்னிடம் சிகிச்சைக்காக வருகிற ஒவ்வொருவருடைய தேவைகளைப் பற்றியும் யோசித்துப்பார்ப்பார். அவர்களிடம் கேள்விகளைக் கேட்பார்; தங்களுடைய பிரச்சினையைப் பற்றி அவர்கள் சொல்லும்போது, அதைக் கவனமாகக் கேட்பார். என்ன சிகிச்சையைத் தரலாம் என்று மனதில் நினைக்கிறாரோ, அதை உடனடியாக தந்துவிட மாட்டார். அதற்குப் பதிலாக, அவர்களுடைய பிரச்சினைகளை நன்றாகப் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்வார். பிறகு, சரியான சிகிச்சையைத் தருவார். அதேபோல், ஊழியத்தில் சந்திக்கும் எல்லாரிடமும் நாம் ஒரே விதமாகப் பிரசங்கிக்கக் கூடாது. ஒவ்வொரு நபரின் சூழ்நிலையையும் அவர்களுடைய கருத்துகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

9. ஊழியத்தில் சந்திக்கும் நபர்களைப் பற்றி நாம் என்ன நினைத்துக்கொள்ளக் கூடாது? வேறு எப்படி அவர்களிடம் பேசலாம்?

9 ஊழியத்தில் நீங்கள் யாரையாவது சந்திக்கும்போது, அவருடைய சூழ்நிலைகள் அல்லது நம்பிக்கைகளைப் பற்றியும், அவருடைய நம்பிக்கைகளுக்கான காரணங்களைப் பற்றியும் ஏற்கெனவே உங்களுக்குத் தெரியும் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். (நீதி. 18:13) பக்குவமாகக் கேள்விகளைக் கேட்பதன் மூலம் அவரைப் பற்றியும் அவருடைய நம்பிக்கைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். (நீதி. 20:5) உங்கள் கலாச்சாரத்துக்கு ஒத்துவந்தால், அவருடைய வேலை, குடும்பம், பின்னணி, அவருடைய அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கேளுங்கள். இப்படிக் கேட்பதன் மூலம், அவர்களுக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பிறகு, அவருடைய தேவைக்கு ஏற்றபடி அனுதாபம் காட்ட முடியும்; அவருக்கு உதவி செய்யவும் முடியும். இப்படிச் செய்யும்போது, நாம் இயேசுவைப்போல் நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம்!—1 கொரிந்தியர் 9:19-23-ஐ ஒப்பிடுங்கள்.

உங்களுடைய செய்தியைக் கேட்பவருடைய வாழ்க்கை எப்படியிருக்கலாம் என்று யோசித்துப்பாருங்கள் (பாராக்கள் 10-11)

10-11. இரண்டு கொரிந்தியர் 4:7, 8-ல் சொல்லியிருக்கிறபடி, அனுதாபம் காட்டுவதற்கான இரண்டாவது வழி என்ன? ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

10 இரண்டாவதாக, அவர்களுடைய வாழ்க்கை எப்படியிருக்கலாம் என்பதை யோசித்துப்பாருங்கள். பாவ இயல்புள்ளவர்களாகிய நாம் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம். அதனால், அவர்களுடைய சூழ்நிலையை நம்மால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். (1 கொ. 10:13) இந்த மோசமான உலகத்தில் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்று நமக்குத் தெரியும். யெகோவாவின் உதவியோடுதான் நாம் பிரச்சினைகளைச் சகித்துவருகிறோம். (2 கொரிந்தியர் 4:7, 8-ஐ வாசியுங்கள்.) யெகோவாவோடு ஒரு நெருங்கிய பந்தம் இல்லாத மக்கள், எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள். அவருடைய உதவி இல்லாமல் வாழ்வது எவ்வளவு போராட்டமாக இருக்கும்! இயேசுவைப் போலவே, நாமும் அவர்களைப் பார்த்து மனம் உருகுகிறோம். “விடிவுகாலம் வரப்போகிறது” என்ற செய்தியைச் சொல்ல விரும்புகிறோம்.—ஏசா. 52:7.

11 சர்கே என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, அவருக்குச் கூச்ச சுபாவம் இருந்தது; பொதுவாகவே, அவர் அமைதியாகத்தான் இருப்பார். மற்றவர்களோடு பேசுவது அவருக்கு ரொம்பக் கஷ்டம்! காலப்போக்கில், அவர் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தார். “பைபிள படிக்க படிக்க, தங்களோட நம்பிக்கைகள பத்தி மத்தவங்ககிட்ட பேசற கடமை கிறிஸ்தவர்களுக்கு இருக்குனு புரிஞ்சிக்கிட்டேன் . . . ஆனா, என்னால அப்படியெல்லாம் பேச முடியாதுனு தோணுச்சு” என்று அவர் சொல்கிறார். இருந்தாலும், கடவுளைப் பற்றிய உண்மைகளை இன்னமும் தெரிந்துகொள்ளாத மக்களைப் பற்றி அவர் யோசித்துப்பார்த்தார். யெகோவா இல்லாத ஒரு வாழ்க்கை அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதையும் அவர் யோசித்தார். “நான் கத்துக்கிட்ட புதுப்புது விஷயங்கள் எனக்கு ரொம்ப சந்தோஷத்தையும் மனநிம்மதியையும் தந்துச்சு, . . . அதனால மத்தவங்களும் இந்த உண்மைகள தெரிஞ்சிக்கணும்னு நினைச்சேன்” என்று அவர் சொல்கிறார். மக்கள்மேல் இருந்த அனுதாபம் அதிகமாக அதிகமாக, பிரசங்க வேலை செய்வதற்கான தைரியமும் அவருக்கு அதிகமானது. “ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னன்னா, மத்தவங்களுக்கு பைபிள பத்தி சொல்றதுனால என்னோட தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கு. என்னோட விசுவாசமும் பலமாகியிருக்கு” என்றும் சொல்கிறார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

ஆன்மீக விதத்தில் முன்னேற்றங்கள் செய்ய சிலருக்குக் காலம் எடுக்கலாம் (பாராக்கள் 12-13)

12-13. பைபிளைக் கற்றுக்கொடுக்கும்போது நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்? விளக்குங்கள்.

12 மூன்றாவதாக, நீங்கள் யாருக்குக் கற்றுக்கொடுக்கிறீர்களோ அவர்களிடம் பொறுமையாக இருங்கள். நமக்கு நன்றாகத் தெரிந்த பைபிள் உண்மைகளைப் பற்றி அவர்கள் யோசித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். தங்களுடைய நம்பிக்கைகள்தான் சரியானவை என்று நிறைய பேர் உறுதியாக நம்புகிறார்கள். அதோடு, குடும்பத்தோடும், கலாச்சாரத்தோடும், சமுதாயத்தோடும் ஒன்றுபட்டிருக்க தங்கள் மத நம்பிக்கைகள் உதவுவதாக அவர்கள் நினைக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?

13 இந்த உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். சீக்கிரத்தில் இடிந்து விழப்போகிற ஒரு பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலத்தைக் கட்ட வேண்டும் என்றால் என்ன செய்வார்கள்? பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தைக் கட்டுவார்களா? இல்லை! பழைய பாலத்தை மக்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போதே புதிய பாலத்தைக் கட்ட ஆரம்பிப்பார்கள். புதிய பாலத்தைக் கட்டி முடித்த பிறகுதான் பழைய பாலத்தை இடிப்பார்கள். அதேபோல், தாங்கள் உயர்வாக நினைக்கிற “பழைய” நம்பிக்கைகளை மக்கள் விட்டுவிட வேண்டும் என்றால், “புதிய” உண்மைகளைத் தெரிந்துகொள்ளவும், அவற்றை நேசிக்கவும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். அதாவது, பைபிளைப் படிக்க ஆரம்பிக்கும்போது, அவர்கள் கேள்விப்படாத பைபிள் போதனைகளைத் தெரிந்துகொள்ளவும் நேசிக்கவும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். புதிய உண்மைகளை அவர்கள் நேசிக்க ஆரம்பித்த பிறகுதான் பழைய நம்பிக்கைகளை விடுவார்கள். இதுபோன்ற மாற்றங்களைச் செய்ய அவர்களுக்குக் காலம் எடுக்கலாம்!—ரோ. 12:2.

14-15. பூஞ்சோலை பூமியில் நாம் என்றென்றும் வாழ்வோம் என்பதைப் பற்றித் தெரியாத அல்லது அதைப் பற்றிக் கேள்விப்படாத மக்களுக்கு நாம் எப்படி உதவலாம்? ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

14 ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களிடம் நாம் பொறுமையாக இருந்தால், பைபிள் உண்மைகளைக் கேள்விப்பட்ட உடனேயே அவர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றோ, அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ எதிர்பார்க்க மாட்டோம். அதற்குப் பதிலாக, பைபிள் என்ன சொல்கிறது என்பதை யோசித்துப்பார்க்க அவர்களுக்குப் படிப்படியாக உதவுவோம். இதைச் செய்வதற்கு, அனுதாபம் என்ற குணம் நமக்கு உதவும். உதாரணத்துக்கு, பூஞ்சோலை பூமியில் நாம் என்றென்றும் வாழ்வோம் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு எப்படி உதவலாம்? அவர்கள் இதைக் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள். மரணம்தான் வாழ்க்கையின் முடிவு என்று அவர்கள் நம்பலாம். அல்லது, நல்லவர்கள் எல்லாரும் பரலோகத்துக்குப் போவார்கள் என்று அவர்கள் நினைக்கலாம்.

15 இப்படிப்பட்டவர்களுக்கு, ஒரு சகோதரர் எப்படி உதவுகிறார் என்று கவனியுங்கள். முதலில், ஆதியாகமம் 1:28-ஐ அவர் வாசிப்பார். பிறகு, ‘மனுஷங்க எங்க வாழணும், எப்படி வாழணும்? கடவுள் என்ன விரும்புறாரு?’ என்று கேட்பார். “இந்த பூமியில நாம சந்தோஷமா வாழணும்னு விரும்புறாரு” என்று நிறைய பேர் பதில் சொல்வார்கள். அடுத்து, ஏசாயா 55:11-ஐ வாசித்துவிட்டு, கடவுளுடைய நோக்கம் மாறிவிட்டதா என்று கேட்பார். இதற்கு, பெரும்பாலும் இல்லை என்ற பதில்தான் வரும். கடைசியாக, சங்கீதம் 37:10, 11-ஐ வாசித்துக்காட்டுவார். பிறகு, மனிதர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்பார். இப்படி பைபிள் வசனங்களைப் பயன்படுத்தி, நல்லவர்கள் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புவதை நிறைய பேருக்கு அவர் புரிய வைத்திருக்கிறார்.

சின்னதாகச் செய்யப்படுகிற ஓர் அன்பான செயல், அதாவது ஆறுதலான ஒரு கடிதம் எழுதுவதைப் போன்ற ஒரு செயல், அருமையான பலனைத் தரலாம் (பாராக்கள் 16-17)

16-17. நீதிமொழிகள் 3:27-ல் சொல்லியிருக்கிறபடி, அனுதாபத்தைக் காட்டுவதற்கான சில நடைமுறையான வழிகள் என்ன? விளக்குங்கள்.

16 நான்காவதாக, என்னென்ன நடைமுறையான வழிகளில் கரிசனை காட்டலாம் என்று யோசித்துப்பாருங்கள். உதாரணத்துக்கு, வசதிப்படாத நேரத்தில் நீங்கள் ஒருவருடைய வீட்டுக்குப் போய்விட்டதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது என்ன செய்யலாம்? அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அவருக்குச் சௌகரியமாக இருக்கும் இன்னொரு சமயத்தில் வருவதாகச் சொல்லலாம். நீங்கள் சந்திக்கிற நபருக்கு ஏதோ ஒரு சின்ன வேலையைச் செய்ய உதவி தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம். அல்லது, வீட்டிலேயே முடங்கி இருக்கிற வயதானவருக்கோ உடல்நிலை சரியில்லாதவருக்கோ, வெளியே போய் செய்ய வேண்டிய ஒரு வேலை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்யலாம்? இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் அவர்களுக்கு உதவலாம்.நீதிமொழிகள் 3:27-ஐ வாசியுங்கள்.

17 ஒரு சகோதரியின் உதாரணத்தைக் கவனிக்கலாம். சின்னதாக அவர் செய்த அன்பான ஒரு செயல் அருமையான பலனைத் தந்தது. குழந்தையை இழந்து தவித்த ஒரு குடும்பத்தின்மேல் அவருக்கு அனுதாபம் இருந்ததால், அவர் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஆறுதல் தரும் பைபிள் வசனங்களையும் அதில் எழுதினார். அந்தக் கடிதம் அவர்களுக்கு எப்படி உதவியது? “நேற்று நான் துக்கத்தில் ரொம்பவே துவண்டுபோய் இருந்தேன்” என்று குழந்தையின் அம்மா எழுதினார். “உங்கள் கடிதம் எங்களுக்கு எந்தளவு உதவியாக இருந்தது என்று உங்களுக்குத் தெரியாது. ஆறுதலான அந்தக் கடிதத்துக்காக உங்களுக்கு ரொம்பவே நன்றி சொல்கிறேன். நேற்று மட்டும் அந்தக் கடிதத்தைக் கிட்டத்தட்ட 20 தடவை வாசித்திருப்பேன். அது எனக்கு இந்தளவு ஆறுதலையும் தெம்பையும் கொடுக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நாங்கள் நன்றி சொல்கிறோம்; தயவுசெய்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றும் எழுதினார். கஷ்டப்படுகிறவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்த்து, அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்யும்போது, கண்டிப்பாக நல்ல பலன்கள் கிடைக்கும்.

உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள், சோர்ந்துவிடாதீர்கள்

18. ஒன்று கொரிந்தியர் 3:6, 7-ன்படி, ஊழியம் செய்யும்போது நாம் எதை மறந்துவிடக் கூடாது, ஏன்?

18 ஊழியத்தில், கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்கும் வேலையில் நமக்கு ஒரு பங்கு இருக்கிறது. இருந்தாலும், யெகோவாதான் மிக முக்கியமான பங்கை வகிக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. (1 கொரிந்தியர் 3:6, 7-ஐ வாசியுங்கள்.) யெகோவாதான் மக்களைத் தன் பக்கம் ஈர்க்கிறார். (யோவா. 6:44) நல்ல செய்தியை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் கடைசியில் அவரவருடைய இதயத்தைப் பொறுத்ததுதான். (மத். 13:4-8) இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிகப் பெரிய போதகரான இயேசுவின் செய்தியையே நிறைய பேர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால், நாம் சொல்லும் செய்தியையும் நிறைய பேர் ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தச் சமயங்களில், நாம் சோர்ந்துவிடக் கூடாது.

19. ஊழியத்தில் அனுதாபத்தைக் காட்டும்போது, என்ன பலன்கள் கிடைக்கின்றன?

19 ஊழியத்தில் அனுதாபத்தைக் காட்டும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். பிரசங்க வேலையை நாம் இன்னும் சந்தோஷமாகச் செய்வோம். கொடுப்பதால் கிடைக்கும் அதிக சந்தோஷத்தை அனுபவிப்போம். “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருப்பவர்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு வழி செய்வோம். (அப். 13:48) அதனால், “காலம் சாதகமாக இருக்கும்போதே எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும்.” (கலா. 6:10) அப்போது, நம் பரலோகத் தந்தைக்கு மகிமை சேர்த்த சந்தோஷம் நமக்குக் கிடைக்கும்.—மத். 5:16.

பாட்டு 44 அறுவடை வேலையில் ஆனந்தம்!

^ பாரா. 5 ஊழியத்தில் அனுதாபத்தைக் காட்டும்போது நம் சந்தோஷம் அதிகமாகும், நாம் சொல்லும் செய்தியையும் மக்கள் காதுகொடுத்துக் கேட்பார்கள். அதை எப்படிச் சொல்லலாம்? இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் அனுதாபத்தைக் காட்டுவதற்கான நான்கு வழிகளைப் பற்றியும் பார்ப்போம்.

^ பாரா. 5 வார்த்தைகளின் விளக்கம்: பைபிளைப் பொறுத்தவரை, மனம் உருகுவது என்பது, கஷ்டத்தில் இருப்பவரையோ கொடுமையாக நடத்தப்படுகிறவரையோ பார்க்கும்போது, நமக்குள் ஏற்படுகிற கனிவான உணர்ச்சியைக் குறிக்கிறது. மற்றவர்களுக்கு உதவுவதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய இந்த உணர்ச்சி நம்மைத் தூண்டலாம்.

^ பாரா. 8 மே 15, 2014 காவற்கோபுரத்தில் வெளிவந்த “ஊழியத்தில் பொன்மொழியைப் பின்பற்றுங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.