Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 11

யெகோவா சொல்வதைக் கேளுங்கள்

யெகோவா சொல்வதைக் கேளுங்கள்

“இவர் என் அன்பு மகன்; . . . இவர் சொல்வதைக் கேளுங்கள்.”—மத். 17:5.

பாட்டு 120 கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) யெகோவா மனிதர்களிடம் எப்படிப் பேசினார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

மனிதர்களிடம் பேசுவது என்றால் யெகோவாவுக்கு ரொம்பப் பிடிக்கும். கடந்த காலங்களில், தீர்க்கதரிசிகளையும் தேவதூதர்களையும் தன்னுடைய மகனான கிறிஸ்து இயேசுவையும் பயன்படுத்தி தன்னுடைய எண்ணங்களை அவர் மனிதர்களுக்குத் தெரியப்படுத்தினார். (ஆமோ. 3:7; கலா. 3:19; வெளி. 1:1) இன்று, தன்னுடைய வார்த்தையாகிய பைபிளைப் பயன்படுத்தி நம்மிடம் பேசுகிறார். அவரைப் போலவே யோசிப்பதற்கும், அவர் செயல்படும் விதத்தைப் புரிந்துகொள்வதற்கும் நமக்கு பைபிளைக் கொடுத்திருக்கிறார்.

2 இயேசு பூமியில் இருந்தபோது, பரலோகத்திலிருந்து மூன்று சந்தர்ப்பங்களில் யெகோவா பேசினார். அப்போது, யெகோவா என்ன சொன்னார் என்றும், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும், அதிலிருந்து நாம் எப்படி நன்மையடையலாம் என்றும் இப்போது பார்க்கலாம்.

“நீ என் அன்பு மகன்”

3. மாற்கு 1:9-11 சொல்கிறபடி, இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது யெகோவா என்ன சொன்னார், எந்த மூன்று உண்மைகளை அந்த வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன?

3 பரலோகத்திலிருந்து யெகோவா பேசிய முதல் சந்தர்ப்பம், மாற்கு 1:9-11-ல் பதிவாகியிருக்கிறது. (வாசியுங்கள்.) “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்” என்று அவர் சொன்னார். தன் அப்பாவின் குரலைக் கேட்டபோது, அதாவது தன்மீது அவர் எவ்வளவு அன்பையும் நம்பிக்கையையும் வைத்திருக்கிறார் என்பதைக் கேட்டபோது, இயேசு பூரித்துப்போயிருப்பார், இல்லையா? இயேசுவைப் பற்றிய மூன்று உண்மைகளை யெகோவாவின் வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன. ஒன்று, அவர் யெகோவாவின் மகன். இரண்டு, தன் மகனை யெகோவா நேசிக்கிறார். மூன்று, தன் மகனை யெகோவா ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் இப்போது ஆழமாகப் பார்க்கலாம்.

4. இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது ஒரு புதிய விதத்தில் கடவுளுடைய மகனாக ஆனார் என்று எப்படிச் சொல்கிறோம்?

4 “நீ என் . . . மகன்.” இந்த வார்த்தைகளைச் சொன்னதன் மூலம், தன்னுடைய அன்பு மகனான இயேசு தன்னோடு ஒரு புதிய பந்தத்துக்குள் வந்திருக்கிறார் என்பதை யெகோவா சுட்டிக்காட்டினார். இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பே கடவுளுடைய மகனாகத்தான் இருந்தார். ஆனால், அவர் ஞானஸ்நானம் எடுத்தபோது, தன்னுடைய சக்தியால் யெகோவா அவரை அபிஷேகம் செய்ததன் மூலம், ஒரு புதிய விதத்தில் அவர் தன்னுடைய மகனாக ஆனதை யெகோவா சுட்டிக்காட்டினார். அதாவது, பரலோகத்துக்குத் திரும்பிப்போகும் நம்பிக்கையைப் பெற்றவராக எதிர்கால ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் இயேசு நியமிக்கப்பட்டதை கடவுள் சுட்டிக்காட்டினார். (லூக். 1:31-33; எபி. 1:8, 9; 2:17) அதனால்தான், இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, “நீ என் . . . மகன்” என்று அவருடைய அப்பா சொன்னார்.—லூக். 3:22.

பாராட்டையும் உற்சாகத்தையும் பெற்றுக்கொள்ளும்போது நாம் செழிக்கிறோம் (பாரா 5) *

5. அன்பு காட்டும் விஷயத்திலும், மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விஷயத்திலும் நாம் எப்படி யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

5 “நீ என் அன்பு மகன்.” அன்பையும் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்துவதில் யெகோவா ஒரு நல்ல முன்மாதிரி. மற்றவர்களை உற்சாகப்படுத்த வாய்ப்புகளைத் தேட வேண்டும் என்ற பாடத்தை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். (யோவா. 5:20) நாம் அக்கறை காட்டுகிற ஒருவர், நம்மீது அன்பு காட்டும்போதும், நாம் செய்யும் நல்ல விஷயங்களுக்காக நம்மைப் பாராட்டும்போதும், நம் மனம் மலருகிறது. அதேபோல், சபையில் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் நம்முடைய அன்பும் உற்சாகமும் ரொம்பவே தேவை. நாம் மற்றவர்களைப் பாராட்டும்போது, அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறோம்; யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்ய அவர்களுக்கு உதவுகிறோம். முக்கியமாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும். தங்கள் பிள்ளைகளை மனதாரப் பாராட்டினால்... அன்பைப் பொழிந்தால்... பிள்ளைகள் செழிப்பார்கள்.

6. இயேசு கிறிஸ்துவின்மீது நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்?

6 “நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்.” தன்னுடைய விருப்பத்தை இயேசு உண்மையோடு நிறைவேற்றுவார் என்று யெகோவா நம்பியதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. யெகோவா தன் மகன்மீது அந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார், இல்லையா? அப்படியென்றால், யெகோவாவுடைய வாக்குறுதிகள் எல்லாவற்றையும் இயேசு உண்மையோடு நிறைவேற்றுவார் என்று நாமும் நம்பலாம். (2 கொ. 1:20) இயேசுவின் உதாரணத்தை இன்னும் நன்றாக ஆராயும்போது, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் இன்னும் உறுதியாகும். அதோடு, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்ற தீர்மானமும் உறுதியாகும். யெகோவா இயேசுவை நம்பியது போலவே, ஒரு தொகுதியாக, தன் ஊழியர்கள் தன் மகனிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறார்.—1 பே. 2:21.

“இவர் சொல்வதைக் கேளுங்கள்”

7. மத்தேயு 17:1-5 சொல்கிறபடி, எந்தச் சந்தர்ப்பத்தில் யெகோவா பரலோகத்திலிருந்து பேசினார், அவர் என்ன சொன்னார்?

7 மத்தேயு 17:1-5-ஐ வாசியுங்கள். இயேசு “தோற்றம் மாறிய” சமயத்தில், யெகோவா பரலோகத்திலிருந்து பேசினார். இதுதான் யெகோவா பேசிய இரண்டாவது சந்தர்ப்பம். பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் கூட்டிக்கொண்டு உயரமான ஒரு மலைக்கு இயேசு போனார். அங்கே அவர்கள் அற்புதமான ஒரு தரிசனத்தைப் பார்த்தார்கள். இயேசுவின் முகம் பிரகாசித்தது, அவருடைய உடை பளிச்சிட்டது. அப்போது இரண்டு உருவங்கள் தோன்றின, ஒரு உருவம் மோசேயையும் இன்னொரு உருவம் எலியாவையும் அடையாளப்படுத்தின. அந்த உருவங்கள், இயேசுவின் மரணத்தைப் பற்றியும் உயிர்த்தெழுதலைப் பற்றியும் இயேசுவிடம் பேச ஆரம்பித்தன. மூன்று அப்போஸ்தலர்கள் “அரைத்தூக்கத்தில்” இருந்தபோதிலும், அவர்கள் விழித்துக்கொண்டபோது, இந்த அற்புதமான தரிசனத்தைப் பார்த்தார்கள். (லூக். 9:29-32) பிறகு, பிரகாசமான ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. அப்போது, மேகத்திலிருந்து ஒரு குரலை, அதாவது கடவுளுடைய குரலை, அவர்கள் கேட்டார்கள். இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவா தன் மகனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்மீது அன்பு வைத்திருப்பதாகவும் சொன்னார். அதேபோல் இப்போதும், “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொன்னார். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், “இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்றும் சொன்னார்.

8. தோற்றம் மாறிய காட்சி, இயேசுவுக்கும் சீஷர்களுக்கும் எப்படி உதவியது?

8 கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக, எதிர்காலத்தில் இயேசுவுக்குக் கிடைக்கப்போகும் மகிமையும் வல்லமையும் எப்படி இருக்கும் என்பதை இந்தத் தரிசனம் காட்டியது. இந்தத் தரிசனம், தான் சீக்கிரத்தில் அனுபவிக்கவிருந்த வேதனைகளையும் கொடூரமான மரணத்தையும் சந்திக்கத் தேவையான தைரியத்தை இயேசுவுக்குக் கொடுத்திருக்கும்! சீஷர்களின் விசுவாசத்தையும் அது பலப்படுத்தியது. எதிர்காலத்தில் நிறைய சவால்களைச் சமாளிக்கவும், கடினமாக உழைக்கவும், அந்தத் தரிசனம் அவர்களைத் தயார்படுத்தியது. கிட்டத்தட்ட 30 வருஷங்களுக்குப் பிறகு, அப்போஸ்தலன் பேதுரு இந்தத் தரிசனத்தைப் பற்றிப் பேசினார். அந்தத் தரிசனத்தை அவர் தெளிவாக ஞாபகம் வைத்திருந்ததை இது காட்டுகிறது.—2 பே. 1:16-18.

9. இயேசு தன் சீஷர்களுக்கு என்ன நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுத்தார்?

9 “இவர் சொல்வதைக் கேளுங்கள்.” இப்படிச் சொன்னதன் மூலம், தன்னுடைய மகன் சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்றும், அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் யெகோவா எதிர்பார்க்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இயேசு பூமியில் இருந்தபோது என்ன சொன்னார்? நாம் கவனித்துக் கேட்க வேண்டிய நிறைய முக்கியமான விஷயங்களைச் சொன்னார். உதாரணத்துக்கு, எப்படிப் பிரசங்கிக்க வேண்டும் என்பதைப் பற்றித் தன் சீஷர்களுக்கு அன்பாகச் சொல்லிக்கொடுத்தார். அதோடு, விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அவர்களுக்கு திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தினார். (மத். 24:42; 28:19, 20) தீவிரமாக உழைக்கவும், சோர்ந்துவிடாமல் இருக்கவும் அவர்களை உற்சாகப்படுத்தினார். (லூக். 13:24) தன்னுடைய சீஷர்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுவதும், ஒற்றுமையாக இருப்பதும், தன்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதும் எவ்வளவு முக்கியம் என்று சொன்னார். (யோவா. 15:10, 12, 13) தன் சீஷர்களுக்கு இயேசு கொடுத்த ஆலோசனைகள் எவ்வளவு நடைமுறையாக இருந்தன! அன்றுபோல் இன்றும், அவை முக்கியமானதாக இருக்கின்றன.

10-11. இயேசு சொல்வதை நாம் கேட்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

10 “சத்தியத்தின் பக்கம் இருக்கிற ஒவ்வொருவனும் நான் சொல்வதைக் கேட்கிறான்” என்று இயேசு சொன்னார். (யோவா. 18:37) “ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்” என்ற பைபிளின் ஆலோசனைக்குக் கீழ்ப்படியும்போது, இயேசு சொல்வதை நாம் கேட்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். (கொலோ. 3:13; லூக். 17:3, 4) ‘சாதகமான காலத்திலும், பாதகமான காலத்திலும்’ நல்ல செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கும்போதும் இயேசு சொல்வதை நாம் கேட்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—2 தீ. 4:2.

11 “என் ஆடுகள் என்னுடைய குரலைக் கேட்கின்றன” என்று இயேசு சொன்னார். (யோவா. 10:27) வெறுமனே அவர் சொல்வதைக் கேட்பது மட்டுமல்ல, அதன்படி செய்வதன் மூலமும் கிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய குரலைக் கேட்கிறார்கள். ‘வாழ்க்கைக் கவலைகளால்’ அவர்களுடைய கவனம் சிதறுவதில்லை. (லூக். 21:34) கஷ்டமான சூழ்நிலைகளிலும் இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதுதான் அவர்களுக்கு மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. சகோதரர்கள் நிறைய பேர், எதிரிகளின் தாக்குதல்கள், கொடிய வறுமை, இயற்கைப் பேரழிவுகள் உட்பட பயங்கரமான சோதனைகளைச் சகித்துவருகிறார்கள். இப்படி எவ்வளவு வேதனைகளை அனுபவித்தாலும், யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இயேசு இந்த உறுதியைக் கொடுக்கிறார்: “என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவற்றின்படி நடப்பவன்தான் என்மேல் அன்பு காட்டுகிறான். என்மேல் அன்பு காட்டுகிறவனிடம் என் தகப்பனும் அன்பு காட்டுவார்.”—யோவா. 14:21.

இயேசு சொல்வதைத் தொடர்ந்து கேட்பதற்கு நம்முடைய ஊழியம் உதவுகிறது (பாரா 12) *

12. இயேசு சொல்வதைக் கேட்கிறோம் என்பதைக் காட்டும் இன்னொரு வழி என்ன?

12 இயேசு சொல்வதை நாம் கேட்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான இன்னொரு வழி, நம்மை முன்னின்று வழிநடத்துவதற்காக அவரால் நியமிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது. (எபி. 13:7, 17) கடவுளுடைய அமைப்பு சமீப காலங்களில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறது. ஊழியத்தில் நாம் பயன்படுத்தும் புதிய கருவிகள், ஊழியம் செய்யும் முறைகள், வாரநாட்களில் நடக்கும் கூட்டத்தின் வடிவமைப்பு, ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதிலும் புதுப்பிப்பதிலும் பராமரிப்பதிலும் செய்யப்பட்ட மாற்றங்கள் உட்பட நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறது. நன்றாக யோசித்து, அன்போடு கொடுக்கப்படுகிற இதுபோன்ற வழிநடத்துதல்களுக்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! சரியான சமயத்தில் அமைப்பு கொடுக்கும் இந்த ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்!

13. இயேசு சொல்வதைக் கேட்கும்போது நமக்கு என்ன நன்மை?

13 இயேசு சொல்லிக்கொடுத்த எல்லா விஷயங்களையும் கேட்டு நடந்தால் நாம் நிச்சயம் நன்மையடைவோம். தன்னுடைய போதனைகள் சீஷர்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும் என்று இயேசு வாக்குக் கொடுத்தார். “உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகத்தடி மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்று அவர் சொன்னார். (மத். 11:28-30) இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி விளக்குகிற நான்கு சுவிசேஷ புத்தகங்களை உள்ளடக்கிய கடவுளுடைய வார்த்தை, நமக்குப் புத்துணர்ச்சி தருகிறது, ஆன்மீக விதத்தில் நம்மைப் பலப்படுத்துகிறது, நம்மை ஞானமுள்ளவர்களாக ஆக்குகிறது. (சங். 19:7; 23:3) “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார்.—லூக். 11:28.

‘நான் என் பெயரை மகிமைப்படுத்துவேன்’

14-15. (அ) யோவான் 12:27, 28 சொல்கிறபடி, பரலோகத்திலிருந்து யெகோவா பேசிய மூன்றாவது சந்தர்ப்பம் என்ன? (ஆ) யெகோவாவின் வார்த்தைகள் இயேசுவுக்கு ஆறுதலையும் தெம்பையும் கொடுத்திருக்கும் என்று எப்படிச் சொல்லலாம்?

14 யோவான் 12:27, 28-ஐ வாசியுங்கள். பரலோகத்திலிருந்து யெகோவா பேசிய மூன்றாவது சந்தர்ப்பம், யோவான் எழுதிய சுவிசேஷத்தில் பதிவாகியிருக்கிறது. தன்னுடைய மரணத்துக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு, தன்னுடைய கடைசி பஸ்காவைக் கொண்டாடுவதற்காக இயேசு எருசலேமில் இருந்தார். அந்தச் சமயத்தில், “என் மனம் கலங்குகிறது” என்று சொன்னார். பிறகு, “தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று ஜெபம் செய்தார். அப்போது, அவருடைய அப்பா பரலோகத்திலிருந்து பேசினார். “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்” என்று சொன்னார்.

15 யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற மிகப் பெரிய பொறுப்பு இயேசுவுக்கு இருந்தது; அதை நினைத்து அவர் கவலையாக இருந்தார். முள்சாட்டையால் அடிக்கப்பட்டு, கொடூரமான ஒரு மரணத்தைச் சந்திக்க வேண்டும் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. (மத். 26:38) இருந்தாலும், எல்லாவற்றையும்விட தன்னுடைய அப்பாவின் பெயர் மகிமைப்பட வேண்டும் என்பதுதான் அவருக்கு ரொம்பவே முக்கியமானதாக இருந்தது. தெய்வ நிந்தனை செய்தவன் என்ற குற்றச்சாட்டோடு இறப்பது, கடவுளுடைய பெயருக்குக் களங்கத்தைக் கொண்டுவந்துவிடுமோ என்று நினைத்து அவர் கவலைப்பட்டார். யெகோவா சொன்ன வார்த்தைகள் இயேசுவுக்கு எவ்வளவு நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்! யெகோவாவின் பெயர் மகிமைப்படுத்தப்படும் என்ற உறுதி அவருக்குக் கிடைத்தது. தன்னுடைய அப்பாவின் வார்த்தைகள், ஆறுதலையும் சீக்கிரத்தில் தான் அனுபவிக்க வேண்டியிருந்த கஷ்டங்களைச் சகிப்பதற்கான தெம்பையும் அவருக்குத் தந்திருக்கும். அந்தச் சமயத்தில் தன்னுடைய அப்பா சொன்னது இயேசுவுக்கு மட்டுமே புரிந்திருந்தாலும், இன்று நமக்காக அந்த வார்த்தைகளை யெகோவா பதிவு செய்திருக்கிறார்.—யோவா. 12:29, 30.

தன்னுடைய பெயரை யெகோவா மகிமைப்படுத்துவார்; தன் மக்களை விடுவிப்பார் (பாரா 16) *

16. கடவுளுடைய பெயர்மீது சுமத்தப்படும் களங்கத்தை நினைத்து நாம் ஏன் சிலசமயங்களில் கவலைப்படுகிறோம்?

16 யெகோவாவின் பெயர்மீது சுமத்தப்படும் களங்கத்தை நினைத்து நாமும் இயேசுவைப் போலவே கவலைப்படலாம். ஒருவேளை, இயேசுவைப் போல் நாம் அநியாயமாக நடத்தப்படலாம். அல்லது, நம்மை எதிர்ப்பவர்கள் நம்மைப் பற்றிய கட்டுக்கதைகளை பரப்புவதைப் பார்த்து நாம் கவலைப்படலாம். இப்படிப்பட்ட கட்டுக்கதைகள், யெகோவாவின் பெயரையும் அவருடைய அமைப்பையும் களங்கப்படுத்துகிறதே என்று நினைத்து நாம் வருத்தப்படலாம். இதுபோன்ற சமயங்களில், யெகோவாவின் வார்த்தைகள் நமக்கு ஆறுதலைத் தருகின்றன. இவற்றையெல்லாம் நினைத்து நாம் அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட வேண்டியதில்லை. “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் [நம்] இதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்” என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். (பிலி. 4:6, 7) தன்னுடைய பெயரை யெகோவா நிச்சயம் மகிமைப்படுத்துவார். சாத்தானாலும் அவனுடைய உலகத்தாலும் யெகோவாவின் ஊழியர்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அவை எல்லாவற்றையும் தன்னுடைய அரசாங்கத்தின் மூலம் யெகோவா சரி செய்துவிடுவார்.—சங். 94:22, 23; ஏசா. 65:17.

யெகோவா சொல்வதைக் கேட்டு நன்மையடையுங்கள்

17. ஏசாயா 30:21 சொல்கிறபடி, இன்று யெகோவா நம்மிடம் எப்படிப் பேசுகிறார்?

17 இன்றும் யெகோவா நம்மிடம் பேசுகிறார். (ஏசாயா 30:21-ஐ வாசியுங்கள்.) ஆனால், பரலோகத்திலிருந்து அவர் பேசுவதில்லை. தன்னுடைய வார்த்தையாகிய பைபிளின் மூலம் பேசுகிறார்; அதன் மூலம் நமக்கு அறிவுரைகளைக் கொடுக்கிறார். அதோடு, கடவுளுடைய ஊழியர்களுக்கு ஆன்மீக உணவைக் கொடுப்பதற்கு ‘உண்மை உள்ள நிர்வாகியை’ அவருடைய சக்தி தூண்டுகிறது. (லூக். 12:42) அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள், வெப்சைட்டில் வெளிவரும் விஷயங்கள், வீடியோக்கள், ஆடியோ பிரசுரங்கள் போன்றவற்றின் மூலம் நமக்கு ஏராளமான ஆன்மீக உணவு கிடைக்கிறது, இல்லையா?

18. யெகோவாவின் வார்த்தைகள் எப்படி உங்கள் விசுவாசத்தையும் தைரியத்தையும் பலப்படுத்துகின்றன?

18 தன்னுடைய மகன் பூமியில் இருந்தபோது யெகோவா சொன்ன வார்த்தைகளை நாம் மறக்கக் கூடாது. பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கடவுளுடைய வார்த்தைகள், யெகோவாவின் கட்டுப்பாட்டில்தான் எல்லாமே இருக்கின்றன என்ற நம்பிக்கையைத் தருகின்றன. அதோடு, சாத்தானாலும் அவனுடைய பொல்லாத உலகத்தாலும் நமக்கு ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் அவர் சீக்கிரத்தில் சரி செய்வார் என்ற நம்பிக்கையையும் தருகின்றன. யெகோவா சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். நாம் அப்படி உறுதியாக இருந்தால், இப்போது இருக்கும் பிரச்சினைகளையும் சகித்துக்கொள்ள முடியும்; எதிர்காலத்தில் வரும் சவால்களையும் சமாளிக்க முடியும். பைபிள் இப்படிச் சொல்கிறது: “நீங்கள் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றி, அவர் வாக்குறுதி கொடுத்ததைப் பெற வேண்டுமென்றால் சகித்திருப்பது அவசியம்.”—எபி. 10:36.

பாட்டு 22 ‘யெகோவா என் மேய்ப்பர்’

^ பாரா. 5 இயேசு பூமியில் இருந்தபோது, பரலோகத்திலிருந்து மூன்று சந்தர்ப்பங்களில் யெகோவா பேசினார். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், தன் மகன் சொல்வதை கிறிஸ்துவின் சீஷர்கள் கேட்க வேண்டும் என்று சொன்னார். இன்று, இயேசுவின் போதனைகளை உள்ளடக்கிய தன்னுடைய வார்த்தையின் மூலமும், அமைப்பின் மூலமும் யெகோவா நம்மிடம் பேசுகிறார். யெகோவா சொல்வதையும் இயேசு சொல்வதையும் கேட்கும்போது நமக்கு என்ன நன்மை என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 52 படங்களின் விளக்கம்: ராஜ்ய மன்ற பராமரிப்பிலும் பிரசுர இலாகாவிலும் உதவுகிற ஓர் உதவி ஊழியரை ஒரு மூப்பர் கவனிக்கிறார்; அவரைப் பாராட்டுகிறார்.

^ பாரா. 54 படங்களின் விளக்கம்: சியர்ரா லியோனில் இருக்கும் ஒரு தம்பதி, சபைக் கூட்டத்துக்கான அழைப்பிதழை உள்ளூர் மீனவர் ஒருவருக்குக் கொடுக்கிறார்கள்.

^ பாரா. 56 படங்களின் விளக்கம்: நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு நாட்டில், யெகோவாவின் சாட்சிகள், ஒருவருடைய வீட்டில் கூடிவருகிறார்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காதபடி சாதாரணமாக உடை உடுத்தியிருக்கிறார்கள்.