Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 20

குழந்தை பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

குழந்தை பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள், நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் நமக்கு ஆறுதல் தருகிறார்.’—2 கொ. 1:3, 4.

பாட்டு 88 பிள்ளைகள், தேவன் தந்த சொத்து

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) நமக்கு ஆறுதல் தேவை என்பதையும் மற்றவர்களை ஆறுதல்படுத்தும் திறமை நமக்கு இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள எந்த உதாரணம் உதவுகிறது? (ஆ) சில பிள்ளைகள் எந்தக் கொடுமைக்கு ஆளாகிறார்கள்?

மனிதர்களுக்கு இயல்பாகவே ஆறுதல் தேவை! மற்றவர்களை ஆறுதல்படுத்தும் அற்புதமான திறமையும் நமக்கு இருக்கிறது. இதை யோசித்துப்பாருங்கள்: ஒரு சின்னக் குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறது. அப்போது, அந்தக் குழந்தை கீழே விழுந்துவிடுகிறது. முழங்காலில் அடிபட்டுவிட்டதால், அழுதுகொண்டே அம்மாவிடம் அல்லது அப்பாவிடம் ஓடிவருகிறது. அவர்களால் அந்தக் காயத்தை உடனடியாக ஆற்றிவிட முடியாது. ஆனால், அந்தக் குழந்தையை ஆறுதல்படுத்த முடியும். “என்ன ஆச்சு... சரி சரி அழாத...” என்று சொல்லி கண்ணீரைத் துடைத்துவிடலாம். அல்லது, “கவலப்படாத செல்லம்... சீக்கிரம் சரியாயிடும்” என்று சொல்லி ஆறுதல்படுத்தலாம். ஒருவேளை காயத்துக்கு கட்டுப் போட்டுவிடலாம் அல்லது மருந்து போட்டுவிடலாம். இதையெல்லாம் செய்வதற்குள் அந்தக் குழந்தை தன் அழுகையை நிறுத்திவிட்டு திரும்பவும் விளையாட போய்விடலாம். கொஞ்ச நாளில் அந்தக் காயமும் ஆறிவிடலாம்.

2 ஆனால், இதைவிட மோசமான வலியும் வேதனையும் பிள்ளைகளுக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது. சிலர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஒரு தடவையோ அல்லது பல வருஷங்களாகவோ அந்தக் கொடுமையை அவர்கள் அனுபவிக்கலாம். எப்படியிருந்தாலும், இந்தக் கொடுமைக்கு ஆளானவர்களுடைய மனதில் ஆழமான தழும்பு ஏற்பட்டுவிடுகிறது. சிலசமயங்களில், இந்தக் குற்றத்தைச் செய்தவர் தண்டிக்கப்படுகிறார்; வேறு சிலசமயங்களில், தண்டனையிலிருந்து அவர் தப்பித்துவிட்டதைப் போல் தோன்றலாம். ஒருவேளை, குற்றவாளி உடனடியாகத் தண்டிக்கப்பட்டாலும், வன்கொடுமையால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை, வளர்ந்து பெரிதான பிறகும் அந்தக் குழந்தை அனுபவிக்கலாம்.

3. இரண்டு கொரிந்தியர் 1:3, 4 சொல்கிறபடி, யெகோவாவின் விருப்பம் என்ன, எந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்ப்போம்?

3 சின்ன வயதில் வன்கொடுமைக்கு ஆளான ஒரு கிறிஸ்தவர், பெரியவரான பிறகும் அந்த வேதனையை அனுபவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு என்ன உதவி இருக்கிறது? (2 கொரிந்தியர் 1:3, 4-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய பிள்ளைகளுக்கு அன்பும் ஆறுதலும் கிடைக்க வேண்டும் என்பதுதான் யெகோவாவின் விருப்பம் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால், மூன்று கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்: (1) குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு ஏன் ஆறுதல் தேவை? (2) யாரெல்லாம் அவர்களுக்கு ஆறுதல் தர முடியும்? (3) நாம் எப்படி ஆறுதல் தரலாம்?

ஏன் ஆறுதல் தேவை?

4-5. (அ) பிள்ளைகள் பெரியவர்களைவிட வித்தியாசமானவர்கள் என்பதைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்? (ஆ) வன்கொடுமைக்கு ஆளான குழந்தை எப்படிப் பாதிக்கப்படலாம்?

4 சின்ன வயதில் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு பெரியவர்களான பிறகும் ஆறுதல் தேவை. ஏன்? இதைப் புரிந்துகொள்ள, பிள்ளைகள் பெரியவர்களைவிட ரொம்பவே வித்தியாசமானவர்கள் என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். வன்கொடுமைக்கு ஆளாகும்போது, பிள்ளைகள் பாதிக்கப்படும் விதத்துக்கும் பெரியவர்கள் பாதிக்கப்படும் விதத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. எப்படி? சில விஷயங்களைக் கவனியுங்கள்.

5 தங்களை வளர்ப்பவர்களோடும் கவனித்துக்கொள்பவர்களோடும் நெருக்கமான, நம்பகமான ஒரு பாசப்பிணைப்பு பிள்ளைகளுக்குத் தேவை. அப்படிப்பட்ட ஒரு பிணைப்பு பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும். தன்னை நேசிக்கிறவர்கள்மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் உதவும். (சங். 22:9) ஆனால் வேதனையான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான சமயங்களில் வீட்டில்தான் வன்கொடுமை நடக்கிறது. இதைச் செய்கிற படுபாவிகள், பெரும்பாலும் நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களாகவும் குடும்ப நண்பர்களாகவும் இருக்கிறார்கள்! நம்பிக்கைக்குரியவர்களே இப்படி நடந்துகொள்ளும்போது, மற்றவர்கள்மேல் நம்பிக்கை வைப்பது அந்தக் குழந்தைக்கு ரொம்பவே கஷ்டமாகிவிடுகிறது. பல வருஷங்கள் ஆனபிறகும் அந்தக் குழந்தைக்கு அது கஷ்டமாகத்தான் இருக்கிறது.

6. பாலியல் வன்கொடுமையை கொடூரமான, மோசமான ஒரு செயல் என்று ஏன் சொல்கிறோம்?

6 தங்களைப் பாதுகாக்க பிள்ளைகளால் முடியாது. பாலியல் வன்கொடுமை என்பது கொடூரமான, மோசமான ஒரு செயல். செக்ஸ் என்பது, உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் மன ரீதியிலும் முதிர்ச்சியடைந்த பின்பு, கல்யாணம் என்ற ஏற்பாட்டுக்குள் அனுபவிக்கிற ஒரு விஷயம்! ஆனால், இதெல்லாம் நடப்பதற்கு பல வருஷங்களுக்கு முன்பே பாலியல் செயல்களில் ஈடுபடும்படி ஒரு குழந்தை கட்டாயப்படுத்தப்படும்போது, அது படுமோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். வன்கொடுமைக்கு ஆளான ஒரு குழந்தை, செக்ஸைப் பற்றித் தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளும். தான் எதற்குமே லாயக்கில்லை என்றும் நினைக்க ஆரம்பித்துவிடும். அதோடு, மற்றவர்களை நம்புவதும் அந்தக் குழந்தைக்குக் கஷ்டமாகிவிடும்.

7. (அ) பிள்ளைகளை ஏமாற்றுவது வன்கொடுமை செய்யும் படுபாவிகளுக்கு ஏன் சுலபமாக இருக்கிறது, அதை அவர்கள் எப்படிச் செய்கிறார்கள்? (ஆ) அவர்கள் சொல்லும் பொய்களால் ஏற்படும் விளைவுகள் என்ன?

7 பெரியவர்களைப் போல யோசிக்கவும் தீர்மானங்களை எடுக்கவும் அல்லது ஆபத்துகளை அடையாளம் கண்டுகொண்டு அவற்றைத் தவிர்க்கவும் பிள்ளைகளுக்குத் தெரியாது. (1 கொ. 13:11) அதனால்தான், தந்திரமாக ஏமாற்றி பிள்ளைகளை பலிகடா ஆக்குவது வன்கொடுமை செய்கிறவர்களுக்குச் சுலபமாக இருக்கிறது. இந்தப் படுபாவிகள், பிள்ளைகளிடம் மிக மோசமான பொய்களைச் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, அந்தக் குழந்தைதான் வன்கொடுமைக்குக் காரணம்... நடந்த சம்பவத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது... அப்படிச் சொன்னாலும் யாரும் அதை நம்பவோ உதவவோ மாட்டார்கள்... பெரியவர்களும் பிள்ளைகளும் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுவதற்காக இப்படிச் செய்வது இயல்புதான்... என்றெல்லாம் அவர்கள் சொல்லலாம். இவையெல்லாம் பொய் என்று புரிந்துகொள்வதற்கே அந்தப் பிள்ளைக்கு நிறைய வருஷங்கள் ஆகும். தான் ஒரு கறைபடுத்தப்பட்ட பிள்ளை என்ற எண்ணத்தோடு அந்தப் பிள்ளை வளரும். மற்றவர்களின் அன்பையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்வதற்குத் தனக்குத் தகுதி இல்லை என்றும் அந்தப் பிள்ளை நினைக்கும்.

8. வேதனையில் தவிப்பவர்களுக்கு யெகோவாவால் நிச்சயம் ஆறுதல் தர முடியும் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?

8 பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் தீராத வேதனையை அனுபவிக்கலாம் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. பாலியல் வன்கொடுமை என்பது படுபயங்கரமான ஒரு குற்றம்! உலகம் முழுவதும் இது பரவியிருப்பது, நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்கு ஓர் அத்தாட்சி. பெரும்பாலான மக்களுக்கு இன்று ‘பந்தபாசமே இருப்பதில்லை.’ ‘பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் மேலும் மேலும் மோசமாகிக்கொண்டிருக்கிறார்கள்.’ (2 தீ. 3:1-5, 13) சாத்தானின் சதித்திட்டங்கள் உண்மையிலேயே மோசமானவை. அதுவும், அவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் மனிதர்கள் நடந்துகொள்வது இன்னும் வேதனையைத் தருகிறது. இருந்தாலும், சாத்தானையும் அவனுடைய கூட்டாளிகளையும்விட யெகோவா அதிக பலம்படைத்தவர். சாத்தானின் தந்திரங்கள் அவருடைய கண்ணுக்கு மறைவானது கிடையாது. நாம் எந்தளவு வேதனையை அனுபவிக்கிறோம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்; இதில் நாம் உறுதியாக இருக்கலாம். நமக்குத் தேவையான ஆறுதலை அவரால் கண்டிப்பாகக் கொடுக்க முடியும். நம்முடைய கடவுள், “எல்லா விதமான ஆறுதலின் கடவுள். நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார். அவரிடமிருந்து நமக்கு ஆறுதல் கிடைப்பதால் எப்பேர்ப்பட்ட சோதனையில் இருப்பவர்களுக்கும் நம்மால் ஆறுதல் தர முடிகிறது.” (2 கொ. 1:3, 4) இப்படிப்பட்ட கடவுளை வணங்குவது நமக்குக் கிடைத்த ஒரு பெரிய பாக்கியம்! அப்படியென்றால், மற்றவர்களுக்கு ஆறுதலைத் தருவதற்காக யெகோவா யாரைப் பயன்படுத்துகிறார்?

பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரெல்லாம் ஆறுதல் தரமுடியும்?

9. சங்கீதம் 27:10-ன்படி, பெற்றோரால் பாதுகாக்கப்படாதவர்களுக்கு யெகோவா எப்படி உதவுகிறார்?

9 பிள்ளைகள் வன்கொடுமைக்கு ஆளாவது தெரிந்திருந்தும் சில பெற்றோர்கள் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். சில பிள்ளைகள், நெருக்கமானவர்களால் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு முக்கியமாக ஆறுதல் தேவை. உண்மையான ஆறுதலை யெகோவாவால் கொடுக்க முடியும் என்பது சங்கீதக்காரரான தாவீதுக்குத் தெரிந்திருந்தது. (சங்கீதம் 27:10-ஐ வாசியுங்கள்.) குடும்பத்தாரால் தவறாக நடத்தப்பட்டவர்களுக்கு யெகோவா ஓர் அப்பாவைப் போல் இருக்கிறார் என்பதை தாவீது உறுதியாக நம்பினார். தன்னுடைய உண்மை ஊழியர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவுவதன் மூலம் யெகோவா ஓர் அப்பாவைப் போல் இருக்கிறார். சபையில் இருக்கும் சகோதர சகோதரிகள் நம்முடைய குடும்பத்தாரைப் போல் இருக்கிறார்கள். தன்னோடு சேர்ந்து யெகோவாவை வணங்குபவர்கள் தனக்குச் சகோதர சகோதரிகளைப் போலவும் தாயைப் போலவும் இருப்பதாக இயேசுவும் சொன்னார்.—மத். 12:48-50.

10. ஒரு மூப்பராக, தன்னுடைய வேலையைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன சொன்னார்?

10 கிறிஸ்தவ சபையில் இருப்பவர்கள் குடும்ப அங்கத்தினர்களைப் போல் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள பவுலின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர், கடினமாக உழைத்த உண்மையுள்ள ஒரு மூப்பர். அவர் சிறந்த முன்மாதிரி வைத்ததால்தான், கிறிஸ்துவின் முன்மாதிரியை அவர் எப்படிப் பின்பற்றினாரோ, அதேபோல் மற்றவர்கள் தன்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றும்படி அவரால் உற்சாகப்படுத்த முடிந்தது. (1 கொ. 11:1) ஒரு மூப்பராக, தன்னுடைய வேலையைப் பற்றி பவுல் ஒரு சமயம் என்ன சொன்னார் என்று கவனியுங்கள். “பாலூட்டுகிற தாய் தன் குழந்தைகளைக் கனிவோடு கவனித்துக்கொள்வதுபோல் உங்களை நேசித்து உங்களிடம் மென்மையாக நடந்துகொண்டோம்” என்று சொன்னார். (1 தெ. 2:7) இன்றிருக்கும் உண்மையுள்ள மூப்பர்கள் பைபிளிலிருந்து மற்றவர்களை ஆறுதல்படுத்தும்போது, பவுலைப் போலவே கனிவான, மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

முதிர்ச்சியுள்ள சகோதரிகளால் மற்றவர்களுக்கு ஆறுதலைத் தர முடியும் (பாரா 11) *

11. மற்றவர்களை ஆறுதல்படுத்தும் பொறுப்பு மூப்பர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? விளக்குங்கள்.

11 வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூப்பர்களால் மட்டும்தான் ஆறுதல் தர முடியுமா? இல்லை! ‘ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்தும்’ பொறுப்பு நம் எல்லாருக்கும் இருக்கிறது. (1 தெ. 4:18) குறிப்பாக, உற்சாகம் தேவைப்படுகிற சகோதரிகளை முதிர்ச்சியுள்ள சகோதரிகள் உற்சாகப்படுத்தலாம். மகனை ஆறுதல்படுத்தும் ஒரு தாய்க்கு யெகோவா தன்னை ஒப்பிடுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! (ஏசா. 66:13) வேதனையில் தவித்தவர்களை ஆறுதல்படுத்திய பெண்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. (யோபு 42:11) மனவேதனையால் தவிக்கும் சகோதரிகளை மற்ற சகோதரிகள் ஆறுதல்படுத்துவதைப் பார்க்கும்போது யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுகிறார்! சிலசமயங்களில், அப்படிப்பட்ட ஒரு சகோதரிக்கு உதவ முடியுமா என்று முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரியிடம் மூப்பர்கள் தனிப்பட்ட விதத்தில் கேட்கலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

நாம் எப்படி ஆறுதல் தரலாம்?

12. நாம் என்ன செய்யக் கூடாது?

12 மற்றவர்கள் நம்மிடம் சொல்ல விரும்பாத விஷயங்களைப் பற்றி நாம் கேட்கக் கூடாது. (1 தெ. 4:11) அப்படியென்றால், உதவியையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? பைபிள் சொல்லும் ஐந்து வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

13. ஒன்று ராஜாக்கள் 19:5-8 சொல்கிறபடி, தேவதூதர் எலியாவுக்காக என்ன செய்தார், நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?

13 நடைமுறையான உதவிகளைச் செய்யுங்கள். உயிருக்குப் பயந்து எலியா தீர்க்கதரிசி ஓடியபோது, தான் சாகவேண்டும் என்று சொல்லுமளவுக்கு மனச்சோர்வில் இருந்தார். சோர்ந்துபோன அவரைச் சந்திப்பதற்கு, ஒரு தேவதூதரை யெகோவா அனுப்பினார். அந்தத் தேவதூதர் நடைமுறையான உதவி செய்தார். அவருக்குச் சூடான உணவு கொடுத்து, அதைச் சாப்பிடும்படி கனிவோடு சொன்னார். (1 ராஜாக்கள் 19:5-8-ஐ வாசியுங்கள்.) இந்தப் பதிவு ஒரு முக்கியமான உண்மையைக் கற்றுக்கொடுக்கிறது. அதாவது, மற்றவர்களுக்கு நாம் செய்கிற சின்ன உதவிகூட நிறைய நன்மைகளைக் கொண்டுவரும். துவண்டுபோயிருக்கும் சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு உணவு கொடுக்கும்போது... ஒரு சின்ன பரிசைத் தரும்போது... அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுபோகும்போது... அவர்களை நாம் நேசிக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். ஒருவேளை அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியோ அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்திய ஒரு விஷயத்தைப் பற்றியோ பேசுவது நமக்குக் கஷ்டமாக இருந்தாலும், இதுபோன்ற உதவிகளை நம்மால் செய்ய முடியும்.

14. எலியாவைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?

14 வேதனையில் தவிப்பவர்கள் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் உணரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். எலியாவைப் பற்றிய பதிவிலிருந்து இன்னொரு பாடமும் இருக்கிறது. ரொம்பத் தூரத்திலிருந்த ஓரேப் மலைக்கு எலியா போவதற்கு, யெகோவா அவருக்கு அற்புதமான விதத்தில் உதவினார். ஒருவேளை, தூரமான அந்த இடத்தில், அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மக்களோடு யெகோவா ஒப்பந்தம் செய்த அந்த இடத்தில், எலியா பாதுகாப்பாக உணர்ந்திருக்கலாம். ஒருவழியாக, தன்னைக் கொல்லத் துடித்தவர்களிடமிருந்து தப்பித்து ரொம்பத் தூரமாகப் போய்விட்ட உணர்வு அவருக்கு இருந்திருக்கலாம். இந்தப் பதிவிலிருந்து நமக்கு என்ன பாடம்? வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்றால், முதலில் அவர்களைப் பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? துவண்டுபோயிருக்கும் ஒரு சகோதரி, இதுபோன்ற விஷயங்களை ராஜ்ய மன்றத்தில் பேசுவதைவிட தன்னுடைய வீட்டில் பேசுவதை விரும்பலாம். இன்னொரு சகோதரியோ, ராஜ்ய மன்றத்தில் பேசுவதை விரும்பலாம். இதுபோன்ற விஷயங்களை மூப்பர்கள் மனதில் வைப்பது முக்கியம்.

பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்பதன் மூலமும், உருக்கமாக ஜெபம் செய்வதன் மூலமும், ஆறுதலான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவதன் மூலமும், காயப்பட்ட இதயத்துக்கு மருந்து போடலாம் (பாராக்கள் 15-20) *

15-16. காதுகொடுத்துக் கேட்பது எதைக் குறிக்கிறது?

15 நன்றாகக் காதுகொடுத்துக் கேளுங்கள். “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்” என்ற தெளிவான ஆலோசனையை பைபிள் தருகிறது. (யாக். 1:19) நாம் காதுகொடுத்துக் கேட்கிறோமா? காதுகொடுத்துக் கேட்பது என்றால், ஒன்றும் செய்யாமல் இருப்பது... பேசுபவரை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது... எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பது... ஆகியவற்றை மட்டுமே குறிக்கிறதா? இல்லை, இதில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எலியாவின் விஷயத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். தன்னுடைய வேதனைகளை அவர் கடைசியாக யெகோவாவிடம் கொட்டித்தீர்த்தார். அவர் சொன்னதை யெகோவா உண்மையிலேயே காதுகொடுத்துக் கேட்டார். எலியா பயந்துபோயிருப்பதையும், தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்ததையும், தான் செய்த எல்லா வேலையும் வீண் என்று அவர் நினைத்ததையும் யெகோவா புரிந்துகொண்டார். இந்த உணர்வுகளைச் சமாளிக்க யெகோவா அவருக்கு அன்போடு உதவினார். தான் உண்மையிலேயே காதுகொடுத்துக் கேட்டதை யெகோவா காட்டினார்.—1 ரா. 19:9-11, 15-18.

16 காதுகொடுத்துக் கேட்கும்போது, நாம் எப்படி அனுதாபத்தையும் கரிசனையையும் அன்பையும் காட்டலாம்? சிலசமயங்களில், பக்குவமாகவும் மென்மையாகவும் சொல்லப்படும் சில வார்த்தைகள், நாம் எப்படி உணருகிறோம் என்பதைக் காட்டுகின்றன. “உங்களுக்கு இப்படி நடந்தத நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. குழந்த பருவத்துல யாருக்கும் இப்படி நடக்கக் கூடாது!” என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். அதோடு, அவர் சொல்வதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள ஓரிரண்டு கேள்விகளைக் கேட்கலாம். “நீங்க சொன்னத என்னால புரிஞ்சிக்க முடியல. தயவுசெஞ்சு இன்னொரு தடவை சொல்ல முடியுமா?” அல்லது “நீங்க சொன்னத நான் இப்படி புரிஞ்சிக்கிட்டேன் . . . நான் புரிஞ்சிக்கிட்டது சரிதானா?” என்று கேட்கலாம். இப்படிப்பட்ட அன்பான வார்த்தைகளைச் சொல்லும்போது, உங்கள் நண்பர் சொல்வதை நீங்கள் உண்மையிலேயே கவனமாகக் கேட்கிறீர்கள் என்பதையும், அவர் சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள் என்பதையும் அவர் உணர்ந்துகொள்வார்.—1 கொ. 13:4, 7.

17. நாம் ஏன் பொறுமையாகவும் ‘நிதானமாகவும் பேச’ வேண்டும்?

17 “நிதானமாகப் பேசுகிறவர்களாக” இருப்பதும் ரொம்ப முக்கியம். உங்கள் நண்பருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்லது அவருடைய யோசனைகளைச் சரி செய்ய வேண்டும் என்பதற்காக, குறுக்கே பேசாதீர்கள். பொறுமையாக இருங்கள்! தன்னுடைய வேதனையை எலியா கடைசியாக யெகோவாவிடம் சொன்னபோது, அவர் நொந்துபோயிருந்தார். தான் சோகத்தில் மூழ்கியிருந்ததை தன்னுடைய வார்த்தைகளின் மூலம் காட்டினார். எலியாவின் விசுவாசத்தை யெகோவா பலப்படுத்திய பிறகும், முன்பு சொன்ன அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி எலியா தன் உணர்ச்சிகளைக் கொட்டினார். (1 ரா. 19:9, 10, 13, 14) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? வேதனையில் இருப்பவர்கள் ஒன்றுக்கும் அதிகமான தடவை தங்கள் இதயத்தில் இருப்பதைக் கொட்ட வேண்டியிருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் யெகோவாவைப் போல் நாமும் பொறுமையாகக் கேட்க வேண்டும். அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வைச் சொல்வதற்குப் பதிலாக, அவர்கள்மேல் அனுதாபத்தையும் கரிசனையையும் காட்ட வேண்டும்.—1 பே. 3:8.

18. வேதனையில் தவிப்பவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்வது அவர்களுக்கு எப்படி ஆறுதலாக இருக்கும்?

18 வேதனையில் தவிப்பவர்களோடு சேர்ந்து உருக்கமாக ஜெபம் செய்யுங்கள். மனம் நொந்துபோயிருப்பவர்கள், தங்களால் ஜெபம் செய்ய முடியவில்லை என்றும் யெகோவாவிடம் பேசுவதற்குத் தங்களுக்குத் தகுதியில்லை என்றும் நினைக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு ஆறுதல் தருவதற்கு, அவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்யலாம்; அதுவும் அவர்களுடைய பெயரைச் சொல்லி ஜெபம் செய்யலாம். நாமும் சபையில் இருப்பவர்களும் அவர்களை எந்தளவு நேசிக்கிறோம் என்பதை அந்த ஜெபத்தில் சொல்லலாம். யெகோவா அவர்களைத் தங்கமானவர்களாக நினைக்கிறார்; அவர்களுக்கு மன அமைதியையும் ஆறுதலையும் தரும்படி நாம் அவரிடம் கேட்கலாம். இப்படிப்பட்ட ஜெபங்கள் உண்மையிலேயே அவர்களுடைய மனதுக்கு இதமாக இருக்கும்!—யாக். 5:16.

19. ஒருவரை ஆறுதல்படுத்துவதற்கு முன்பு நாம் என்ன செய்யலாம்?

19 காயத்தை ஆற்றுகிற, ஆறுதலைத் தருகிற வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். பேசுவதற்கு முன்பு யோசியுங்கள். யோசிக்காமல் சொல்லப்படும் வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தும். அன்பான வார்த்தைகளோ காயத்தை ஆற்றும். (நீதி. 12:18) அதனால், அன்பான, ஆறுதலான, இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். பைபிளில் இருக்கும் யெகோவாவின் வார்த்தைகளைவிட வேறு எந்த வார்த்தைகளுக்கும் அதிக வலிமை இல்லை என்பதை ஞாபகம் வையுங்கள்.—எபி. 4:12.

20. வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களால் சிலர் என்ன நினைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் எதை ஞாபகப்படுத்த வேண்டும்?

20 வன்கொடுமைக்கு ஆளான சில சகோதர சகோதரிகள், தாங்கள் கறைபடுத்தப்பட்டவர்கள்... தங்கள்மீது யாருக்கும் அன்பில்லை... மற்றவர்களின் அன்பைப் பெற்றுக்கொள்வதற்குத் தங்களுக்குத் தகுதியில்லை... என்றெல்லாம் நினைக்கிறார்கள். ஆனால், அது ஒருபோதும் உண்மை அல்ல! பைபிளைப் பயன்படுத்தி, யெகோவாவின் பார்வையில் அவர்கள் எவ்வளவு மதிப்புள்ளவர்கள் என்பதை ஞாபகப்படுத்துங்கள். (“ பைபிளிலிருந்து ஆறுதல்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) ஒருசமயம் தானியேல் தீர்க்கதரிசி பலவீனமாகவும் மனச்சோர்வாகவும் இருந்தபோது, ஒரு தேவதூதர் அவரை எப்படி அன்போடு பலப்படுத்தினார் என்பதை யோசித்துப்பாருங்கள். தானியேலை பிரியமானவராக யெகோவா நினைத்தார்; அதைத் தானியேலுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். (தானி. 10:2, 11, 19) தானியேலைப் போலவே, துவண்டுபோயிருக்கும் நம் சகோதர சகோதரிகளும் யெகோவாவுக்குப் பிரியமானவர்கள்தான்!

21. மனம் திருந்தாத படுபாவிகளை யெகோவா சீக்கிரத்தில் என்ன செய்யப்போகிறார், அதுவரையில் நாம் என்ன செய்ய உறுதியாக இருக்க வேண்டும்?

21 மற்றவர்களை நாம் ஆறுதல்படுத்தும்போது, அவர்கள்மீது யெகோவா எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம். யெகோவா நியாயம் வழங்குகிற கடவுள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. வன்கொடுமை என்ற படுமோசமான ஒரு செயல் யெகோவாவின் கண்களிலிருந்து தப்ப முடியாது. யெகோவா எல்லாவற்றையும் பார்க்கிறார். மனம் திருந்தாத படுபாவிகளை அவர் தண்டிக்காமல் விடமாட்டார். (எண். 14:18) அதுவரையில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பு காட்ட நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம். சாத்தானாலும் அவனுடைய உலகத்தாலும் வன்கொடுமைக்கு ஆளானவர்களுடைய எல்லா வேதனைகளையும் யெகோவா நிரந்தரமாக சரி செய்துவிடுவார் என்று தெரிந்துகொள்வது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! சீக்கிரத்தில் நிலைமைகள் மாறப்போகிறது. அப்போது, இப்படிப்பட்ட கசப்பான நினைவுகள் நம் மனதிலோ இதயத்திலோ தோன்றாது.—ஏசா. 65:17.

பாட்டு 73 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்

^ பாரா. 5 சின்ன வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவர், பல வருஷங்கள் கழித்தும் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கலாம். இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும். அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரால் ஆறுதல் கொடுக்க முடியும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். கடைசியாக, அவர்களுக்குத் தேவையான ஆறுதலைத் தர என்னென்ன வழிகள் இருக்கின்றன என்றும் பார்ப்போம்.

^ பாரா. 11 வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சைக்காக மருத்துவரிடம் போக வேண்டுமா இல்லையா என்பது அவரவருடைய தனிப்பட்ட தீர்மானம்.

^ பாரா. 76 படங்களின் விளக்கம்: மனம் நொந்துபோயிருக்கிற ஒரு சகோதரியை முதிர்ச்சியுள்ள இன்னொரு சகோதரி ஆறுதல்படுத்துகிறார்.

^ பாரா. 78 படங்களின் விளக்கம்: மனம் நொந்துபோயிருக்கிற அந்தச் சகோதரியை இரண்டு மூப்பர்கள் போய்ப் பார்க்கிறார்கள். முதிர்ச்சியுள்ள சகோதரியையும் அந்தச் சகோதரி அழைத்திருக்கிறார்.