Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாத்தானுடைய ஒரு கண்ணியிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

சாத்தானுடைய ஒரு கண்ணியிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

பூர்வ கால இஸ்ரவேலர்கள், யோர்தானைக் கடந்து, கடவுள் வாக்குக்கொடுத்த தேசத்துக்குள் நுழையவிருந்த சமயம் அது! அப்போது, அவர்களைப் பார்ப்பதற்காக சிலர் வந்தார்கள். வேறு தேசத்தைச் சேர்ந்த பெண்கள்தான் அவர்கள்! இஸ்ரவேல் ஆண்களை அவர்கள் விருந்துக்கு அழைத்தார்கள். அந்த இஸ்ரவேலர்கள், அதை ஓர் அற்புத வாய்ப்பாக நினைத்திருக்கலாம். புதிய நண்பர்கள்... நடனம்... தடபுடலான விருந்து... என இவை எல்லாம் அவர்களை ரொம்பவே கவர்ந்திருக்கலாம். அந்தப் பெண்களுடைய கலாச்சாரமும் ஒழுக்க நெறிகளும், கடவுளுடைய சட்டத்திலிருந்து இஸ்ரவேலர்கள் கற்றுக்கொண்டவற்றைப் போல இருக்கவில்லை. ‘அவங்களால நமக்கு எதுவும் ஆகாது. அதெல்லாம் பாத்துக்கலாம்’ என்று இஸ்ரவேல் ஆண்கள் சிலர் நினைத்திருக்கலாம்.

ஆனால் நடந்தது என்ன? “மோவாபியப் பெண்களுடன் [இஸ்ரவேலர்கள்] பாலியல் முறைகேட்டில் ஈடுபட ஆரம்பித்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. இஸ்ரவேல் ஆண்கள் பொய்த் தெய்வங்களைக் கும்பிட வேண்டும் என்று அந்தப் பெண்கள் நினைத்தார்கள். கடைசியில், அவர்கள் நினைத்தது நடந்தது! அதனால், “[இஸ்ரவேலர்கள்மேல்] யெகோவாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.”—எண். 25:1-3.

இரண்டு வழிகளில் அந்த இஸ்ரவேலர்கள் கடவுளுடைய சட்டத்தை மீறினார்கள். ஒன்று, சிலைகளைக் கும்பிட்டார்கள். இரண்டு, பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் ஆயிரக்கணக்கானோர் இறந்துபோனார்கள். (யாத். 20:4, 5, 14; உபா. 13:6-9) அவர்களுடைய நிலைமையை இன்னும் மோசமாக்கியது எது? எந்தச் சமயத்தில் அவர்கள் அப்படி நடந்துகொண்டார்கள் என்பதுதான்! இஸ்ரவேல் ஆண்கள் கடவுளுடைய சட்டத்தை மீறாமல் இருந்திருந்தால், ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்கள் யோர்தானைக் கடந்து, கடவுள் வாக்குக்கொடுத்த தேசத்துக்குள் போயிருப்பார்கள்.—எண். 25:5, 9.

அந்தச் சம்பவங்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “அவர்களுக்கு நடந்ததெல்லாம் நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன. இந்த உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்கிற நம்மை எச்சரிப்பதற்காக எழுதப்பட்டிருக்கின்றன.” (1 கொ. 10:7-11) இஸ்ரவேலர்கள் சிலர் படுமோசமான பாவம் செய்ததால், கடவுள் வாக்குக்கொடுத்திருந்த தேசத்துக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. அதைப் பார்த்து சாத்தான் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பான்! பவுலின் எச்சரிப்பை மனதில் வைத்திருப்பது ரொம்பவே ஞானமானது! கடவுள் கொடுக்கப்போகிற புதிய உலகத்துக்குள் போக முடியாதபடி சாத்தானால் நம்மைத் தடுக்க முடிந்தால், அது அவனுக்கு எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்!

ஆபத்தான ஒரு கண்ணி

சாத்தான், பல தந்திரங்களைப் பயன்படுத்தி கிறிஸ்தவர்களைத் தன்னுடைய கண்ணியில் சிக்கவைக்கப் பார்க்கிறான். நிறைய பேரிடம் அந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி அவன் ஏற்கெனவே வெற்றி பெற்றிருக்கிறான். மேலே பார்த்தபடி, இஸ்ரவேலர்களிடம் அவன் பாலியல் முறைகேட்டைப் பயன்படுத்தினான். பாலியல் முறைகேடு என்பது, நம்முடைய நாளிலும் மிகவும் ஆபத்தான ஒரு கண்ணியாக இருக்கிறது. ஆபாசத்தைப் பயன்படுத்தி இந்தக் கண்ணியில் அவன் நம்மைச் சிக்கவைக்கிறான். அவன் பயன்படுத்துகிற வலிமையான ஆயுதம் இது!

இன்று, யார் கண்ணிலும் படாமலேயே ஒருவரால் ஆபாசத்தைப் பார்க்க முடிகிறது. பல வருஷங்களுக்கு முன்பு, ஆபாசத்தைப் பார்க்க வேண்டுமென்றால், திரையரங்கத்துக்குப் போக வேண்டும் அல்லது ஆபாசமான தகவல்களைத் தேடி புத்தகக் கடைக்குப் போக வேண்டும். ஆனால், மற்றவர்கள் கண்ணில் பட்டுவிட்டால் அவமானமாக இருக்கும் என்று நினைத்து நிறைய பேர் அப்படிப்பட்ட இடங்களுக்குப் போக விரும்பவில்லை. ஆனால் இன்று, ஒருவருக்கு இன்டர்நெட் வசதி இருந்தாலே போதும், வேலை செய்யும் இடத்தில் அல்லது காரில் உட்கார்ந்துகொண்டுகூட ஆபாசத்தைப் பார்க்க முடியும். நிறைய நாடுகளில், வீட்டைவிட்டு வெளியே வராமலேயே ஓர் ஆண் அல்லது பெண்ணால் ஆபாசத்தைப் பார்க்க முடிகிறது.

அதுமட்டுமல்ல, செல்ஃபோன் மற்றும் டேப்லெட் மூலம் ஆபாசத்தைப் பார்ப்பது ரொம்பவே சுலபமாகிவிட்டது. தெருவில் நடக்கும்போதோ பஸ் மற்றும் ரயிலில் பயணம் செய்யும்போதோ, தங்கள் கைகளில் இருக்கிற எலக்ட்ரானிக் கருவிகளின் மூலம் மக்களால் ஆபாச படங்களைப் பார்க்க முடிகிறது.

ஆபாசத்தைப் பார்ப்பதும் அதை மற்றவர்களிடமிருந்து மறைப்பதும் சுலபமாகி விட்டதால், முன்பைவிட இப்போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆபாசத்தைப் பார்க்கிற எண்ணற்ற ஆட்கள், தங்கள் திருமண வாழ்க்கையையும் சுயமரியாதையையும் மனசாட்சியையும் கெடுத்துக்கொள்கிறார்கள். அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், கடவுளோடு இருக்கும் நட்பையே கெடுத்துக்கொள்கிறார்கள்! ஆபாசத்தைப் பார்ப்பவருக்குப் பாதிப்புகள் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. நிறைய சமயங்களில், உணர்ச்சி ரீதியில் அது ஆழமான காயங்களை ஏற்படுத்துகிறது. அந்தக் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆறினாலும், ரொம்பக் காலத்துக்கு மறையாத தழும்புகளை உண்டாக்குகின்றன.

சாத்தானுடைய இந்தக் கண்ணியிலிருந்து யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. யெகோவாவுடைய பாதுகாப்பு நமக்கு வேண்டுமென்றால், அன்றிருந்த இஸ்ரவேல் ஆண்கள் செய்யத் தவறியதை நாம் செய்ய வேண்டும்! அதாவது, யெகோவாவுடைய ‘சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிய’ வேண்டும். (யாத். 19:5) ஆபாசத்தை கடவுள் அறவே வெறுக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏன் அப்படிச் சொல்கிறோம்?

யெகோவா வெறுப்பதுபோல் வெறுத்திடுங்கள்

இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த சட்டங்கள், மற்ற தேசத்தாருடைய சட்டங்களிலிருந்து வித்தியாசமாக இருந்தன. அந்தச் சட்டங்கள், இஸ்ரவேலர்களுக்கு ஒரு மதில் போலிருந்து அவர்களைப் பாதுகாத்தன. தங்களைச் சுற்றியிருந்த மக்களிடமிருந்தும் அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களிலிருந்தும் அது அவர்களைப் பாதுகாத்தன. (உபா. 4:6-8) அந்தச் சட்டங்கள் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்தின. பாலியல் முறைகேட்டை யெகோவா வெறுக்கிறார் என்பதுதான் அந்த உண்மை!

இஸ்ரவேலுக்குப் பக்கத்திலிருந்த தேசங்கள் செய்த அசுத்தமான செயல்களைப் பட்டியலிட்டபோது, யெகோவா இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போகிற கானான் தேசத்தில் இருக்கிறவர்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது. . . . அவர்களுடைய தேசம் அசுத்தமாக இருக்கிறது. அந்தத் தேசத்தின் குற்றத்துக்காக நான் அதைத் தண்டிப்பேன்.” கானானியர்களின் வாழ்க்கை முறை ரொம்பவே கீழ்த்தரமானதாக இருந்ததால், இஸ்ரவேலர்களின் பரிசுத்தமான கடவுளுடைய பார்வையில், அவர்களுடைய தேசம் அசுத்தமானதாகவும் கறைபட்டதாகவும் இருந்தது.—லேவி. 18:3, 25.

கானானியர்களை யெகோவா தண்டித்தபோதும், மற்றவர்கள் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டுக்கொண்டேதான் இருந்தார்கள். 1,500 வருஷங்களுக்குப் பிறகு, கிறிஸ்தவர்கள் வாழ்ந்த தேசங்களை ‘ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாத’ தேசங்கள் என்று பவுல் விவரித்தார். சொல்லப்போனால், அவர்கள் “எல்லாவித அசுத்தமான செயல்களையும் பேராசையோடு செய்து வருவதற்காக வெட்கங்கெட்ட நடத்தைக்கு தங்களையே கொடுத்துவிட்டார்கள்.” (எபே. 4:17-19) இன்றும்கூட, வெட்கங்கெட்டுப் போய் நிறைய பேர் ஒழுக்கங்கெட்ட விதங்களில் நடந்துகொள்கிறார்கள். முடிந்தவரை, இந்த உலகத்தின் ஒழுக்கங்கெட்ட காரியங்களைப் பார்க்காதபடி உண்மை வணக்கத்தார் கவனமாக இருக்க வேண்டும்.

ஆபாசத்தைப் பார்ப்பதும் ஆபாசமான தகவல்களைப் படிப்பதும் கடவுளுக்கு அவமரியாதையைக் கொண்டுவருகிறது. தன்னுடைய சாயலில் அவர் மனிதர்களைப் படைத்தார். எது சரி, எது தவறு என்பதைப் புரிந்துகொள்ளும் திறமையையும் அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஞானமான ஒரு விஷயத்தை அவர் செய்திருக்கிறார். அதாவது, செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நியாயமான வரம்புகளை வைத்திருக்கிறார். மனிதர்கள், கணவன் மனைவியாக செக்ஸை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். (ஆதி. 1:26-28; நீதி. 5:18, 19) ஆனால், ஆபாசத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தயாரிப்பவர்களோ அவற்றை விளம்பரப்படுத்துபவர்களோ என்ன செய்கிறார்கள்? கடவுளுடைய ஒழுக்கத் தராதரங்களை முழுமையாக ஒதுக்கித்தள்ளுகிறார்கள். ஆபாசத்தை விளம்பரப்படுத்துபவர்கள் யெகோவாவை அவமதிக்கிறார்கள். அவற்றைத் தயாரிப்பது அல்லது விளம்பரப்படுத்துவதன் மூலம் கடவுளுடைய தராதரங்களை ஒதுக்கித்தள்ளுகிறவர்களை அவர் நியாயந்தீர்ப்பார்.—ரோ. 1:24-27.

வேண்டுமென்றே ஆபாசமான தகவல்களை வாசிக்கிறவர்களை அல்லது ஆபாசத்தைப் பார்க்கிறவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? இப்படிப்பட்ட பொழுதுபோக்கில் எந்த ஆபத்தும் இல்லை என்று அவர்களில் சிலர் நினைக்கலாம். ஆனால், அவர்கள் உண்மையிலேயே யெகோவாவின் தராதரங்களை மதிக்காதவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் ஆபாசத்தைப் பார்க்க ஆரம்பித்திருக்க மாட்டார்கள். எப்படியிருந்தாலும் சரி, உண்மைக் கடவுளை வணங்குகிறவர்கள் ஆபாசத்தை முழுமையாக வெறுக்க வேண்டும் என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. “யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்” என்று அது சொல்கிறது.—சங். 97:10.

ஆபாசத்தைப் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறவர்களுக்குக்கூட கெட்ட காரியங்களை வெறுப்பது கஷ்டமாக இருக்கலாம். நாம் எல்லாரும் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால், அசுத்தமான பாலியல் ஆசைகளை எதிர்த்து கடினமாகப் போராட வேண்டியிருக்கலாம். அதோடு, ஆபாசத்தைப் பார்ப்பதில் தவறில்லை என்று நம் இதயம் சொல்லலாம். (எரே. 17:9) ஆனால், கிறிஸ்தவர்களாக ஆன நிறைய பேர் இப்படிப்பட்ட போராட்டத்தில் ஜெயித்திருக்கிறார்கள். உங்களுக்கும் இதே போன்ற போராட்டம் இருந்தால், அவர்கள் அப்படி ஜெயித்திருப்பதைத் தெரிந்துகொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். ஆபாசம் என்ற சாத்தானுடைய கண்ணியில் விழாமல் இருக்க கடவுளுடைய வார்த்தை எப்படி உதவும் என்று இப்போது பார்க்கலாம்.

ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்

ஏற்கெனவே பார்த்தபடி, தவறான ஆசைகளுக்குத் தீனி போட்டதால், இஸ்ரவேலர்கள் நிறைய பேர் படுபயங்கரமான விளைவுகளைச் சந்தித்தார்கள். இன்று நமக்கும் அதேபோல் நடக்கலாம். இந்த ஆபத்தைப் பற்றி இயேசுவின் சகோதரர் யாக்கோபு இப்படி விவரித்தார்: “ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது.” (யாக். 1:14, 15) தவறான ஆசை தன்னுடைய மனதில் வேர்விடும்படி ஒருவர் விட்டுவிட்டால், காலப்போக்கில் அவர் பாவம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவற்றை மனதில் ஓடவிடக் கூடாது.

ஒழுக்கங்கெட்ட விஷயங்கள் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருப்பதுபோல் தெரிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுங்கள். “உன் கையோ காலோ உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு. . .  உன் கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு” என்று இயேசு சொன்னார். (மத். 18:8, 9) உண்மையிலேயே நம்முடைய உடல் உறுப்புகளை வெட்டவோ பிடுங்கவோ வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. பாவம் செய்ய எது நம்மைத் தூண்டுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதை உடனடியாகவும் உறுதியாகவும் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளத்தான் இயேசு இப்படிச் சொன்னார். ஆபாசம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இந்த அறிவுரையின்படி நாம் எப்படிச் செய்யலாம்?

ஆபாசம் உங்கள் கண்ணில் படுகிற சூழ்நிலை ஏற்பட்டால், ‘என்னால சமாளிக்க முடியும்’ என்று நினைக்காதீர்கள். உடனே வேறு பக்கம் பாருங்கள். உடனே டிவியை அணைத்துவிடுங்கள். உடனே உங்கள் கம்ப்யூட்டரையோ செல் ஃபோனையோ ஆஃப் செய்யுங்கள். நல்ல விஷயங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பியுங்கள். இப்படிச் செய்வதன் மூலம், கெட்ட ஆசைகள் உங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் உங்கள் யோசனைகளைக் கட்டுப்படுத்தலாம்.

கடந்த காலத்தில் பார்த்த ஆபாச காட்சிகள் உங்கள் மனதில் வந்தால் என்ன செய்வது?

ஒருவேளை ஆபாசத்தைப் பார்க்கிற பழக்கம் உங்களுக்கு இருந்திருக்கலாம்; வெற்றிகரமாக அதை நீங்கள் நிறுத்தியும் இருக்கலாம். சில சமயங்களில் மறுபடியும் அது ஞாபகத்துக்கு வந்தால் என்ன செய்வது? ஆபாசமான படங்கள் அல்லது அதைப் பற்றிய யோசனைகள், ஒருவருடைய மனதைவிட்டு ரொம்பக் காலத்துக்கு நீங்காமல் இருக்கலாம். அவை திடீரென்று ஞாபகத்துக்கு வரலாம். அப்போது, சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுவதற்கான தூண்டுதல் உங்களுக்கு வரலாம். அப்படிப்பட்ட யோசனைகள் திடீரென்று வரலாம் என்பதால், அதை எதிர்த்துப் போராடத் தயாராக இருங்கள்.

கடவுள் விரும்புகிறபடி யோசிப்பதிலும் செயல்படுவதிலும் இன்னும் உறுதியாக இருங்கள். தன்னுடைய ‘உடலை அடக்கியொடுக்கி அடிமைபோல் நடத்த’ அப்போஸ்தலன் பவுல் தயாராக இருந்தார். அவரைப் போலவே நீங்களும் நடந்துகொள்ளுங்கள். (1 கொ. 9:27) அசுத்தமான ஆசைகள் உங்களைக் கட்டுப்படுத்தும்படி விட்டுவிடாதீர்கள். “நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.” (ரோ. 12:2) இந்த விஷயத்தை மறந்துவிடாதீர்கள்: கடவுளுடைய விருப்பத்தின்படி யோசிப்பதும் செயல்படுவதும்தான் சந்தோஷத்தைத் தரும். ஒழுக்கங்கெட்ட விஷயங்களைச் செய்வது சந்தோஷத்தைத் தராது!

கடவுளுடைய விருப்பத்தின்படி யோசிப்பதும் செயல்படுவதும்தான் சந்தோஷத்தைத் தரும். ஒழுக்கங்கெட்ட விஷயங்களைச் செய்வது சந்தோஷத்தைத் தராது!

சில பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். தவறான யோசனைகள் ஞாபகத்துக்கு வரும்போது, அந்த வசனங்களை யோசித்துப்பாருங்கள்; இப்படிச் செய்ய வேண்டும் என்பதில் ரொம்பவே உறுதியாக இருங்கள். சங்கீதம் 119:37; ஏசாயா 52:11; மத்தேயு 5:28; எபேசியர் 5:3; கொலோசெயர் 3:5 மற்றும் 1 தெசலோனிக்கேயர் 4:4-8 போன்ற வசனங்கள், ஆபாசத்தைப் பற்றி யெகோவா உணருவதுபோல் உணரவும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்.

ஆபாசத்தைப் பார்ப்பதை அல்லது ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிப்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன செய்யலாம்? நமக்கு முன்மாதிரியாக இருக்கிற இயேசுவின் அடிச்சுவடுகளைக் கவனமாகப் பின்பற்றுங்கள். (1 பே. 2:21) இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு, சாத்தான் அவரைச் சோதித்துக்கொண்டே இருந்தான். அப்போது, இயேசு என்ன செய்தார்? அவனை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருந்தார். அடுத்தடுத்து வசனங்களைப் பயன்படுத்தி, சாத்தான் கொடுத்த சோதனைகளை எதிர்த்து நின்றார். “அப்பாலே போ சாத்தானே!” என்று சொன்னார். சாத்தான் அவரைவிட்டுப் போனான். பிசாசை எதிர்த்துப் போராடுவதை இயேசு நிறுத்தவில்லை; நீங்களும் நிறுத்தக் கூடாது. (மத். 4:1-11) ஒழுக்கங்கெட்ட விஷயங்களால் உங்கள் மனதை நிரப்ப சாத்தானும் அவனுடைய உலகமும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டேதான் இருக்கும்; ஆனால், உங்கள் போராட்டத்தை நிறுத்திவிடாதீர்கள். ஆபாசத்தை எதிர்த்துப் போராட நீங்கள் எடுக்கும் முயற்சியில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்! யெகோவாவின் உதவியோடு உங்கள் எதிரியை உங்களால் தோற்கடிக்க முடியும்.

யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள், அவருக்குக் கீழ்ப்படியுங்கள்

தொடர்ந்து யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள், உங்களுக்கு உதவும்படி அவரிடம் கேளுங்கள். “உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் . . . கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்.” (பிலி. 4:6, 7) அந்தத் தேவசமாதானம், தவறான விஷயத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உங்களுக்கு உதவும். நீங்கள் யெகோவாவிடம் நெருங்கி வந்தால், “அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக். 4:8.

இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசரோடு நெருக்கமான பந்தம் வைத்திருந்தால், சாத்தானுடைய எந்தவொரு கண்ணியிலிருந்தும் நாம் பாதுகாக்கப்படுவோம். “இந்த உலகத்தை ஆளுகிறவன் [அதாவது, சாத்தான்] வருகிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை” என்று இயேசு சொன்னார். (யோவா. 14:30) இயேசுவால் எப்படி அவ்வளவு நம்பிக்கையோடு சொல்ல முடிந்தது? “என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்வதால் அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்று அவர் சொன்னார். (யோவா. 8:29) நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த முயற்சி செய்தால், அவர் உங்களையும் கைவிடவே மாட்டார். ஆபாசம் என்ற கண்ணியைத் தவிர்த்துவிடுங்கள். அப்போது, தன்னுடைய வலையில் உங்களைச் சிக்கவைக்க சாத்தானால் முடியவே முடியாது.