Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 29

‘புறப்பட்டுப் போய் . . . சீஷர்களாக்குங்கள்’

‘புறப்பட்டுப் போய் . . . சீஷர்களாக்குங்கள்’

‘நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்.’—மத். 28:19.

பாட்டு 144 உயிர் காக்கும் நற்செய்தி

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) மத்தேயு 28:18-20-ல் இருக்கிற இயேசுவின் கட்டளையின்படி, கிறிஸ்தவ சபையின் முக்கியக் குறிக்கோள் என்ன? (ஆ) இந்தக் கட்டுரையில் எந்தெந்த கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?

இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, கலிலேயாவில் இருந்த ஒரு மலையில் கூடிவரும்படி தன்னுடைய அப்போஸ்தலர்களிடம் சொல்லியிருந்தார். அங்கே கூடிவந்திருந்த அப்போஸ்தலர்கள் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தார்கள். (மத். 28:16) இயேசு, ‘ஒரே நேரத்தில் 500-க்கும் அதிகமான சகோதரர்களுக்குத் தோன்றிய’ சமயம் இதுவாக இருந்திருக்கலாம். (1 கொ. 15:6) தன் சீஷர்களை அவர் ஏன் அங்கே வரச் சொல்லியிருந்தார்? ‘நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்’ என்ற முக்கியமான கட்டளையைக் கொடுப்பதற்காகத்தான்!மத்தேயு 28:18-20-ஐ வாசியுங்கள்.

2 இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சீஷர்கள், பிற்பாடு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் பாகமாக ஆனார்கள். நிறைய பேரை கிறிஸ்துவின் சீஷர்களாக * ஆக்க வேண்டும் என்பதுதான் அந்தச் சபையின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. இன்று, உண்மைக் கிறிஸ்தவர்கள் அடங்கிய சபைகள் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைக்கு இருந்த அதே குறிக்கோள்தான் இந்தச் சபைகளுக்கும் இருக்கிறது. இப்போது நான்கு கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம். (1) சீஷராக்கும் வேலை ஏன் ரொம்ப முக்கியமானது? (2) மற்றவர்களைச் சீஷர்களாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (3) ஒருவரை சீஷராக்குவதில் கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் பங்கு இருக்கிறதா? (4) இந்த வேலையைச் செய்வதற்கு ஏன் பொறுமை தேவை?

சீஷராக்கும் வேலை ஏன் ரொம்ப முக்கியமானது?

3. யோவான் 14:6 மற்றும் 17:3 சொல்கிறபடி, சீஷராக்கும் வேலை ஏன் ரொம்ப முக்கியம்?

3 இந்த வேலை ஏன் அவ்வளவு முக்கியம்? ஏனென்றால், கிறிஸ்துவின் சீஷர்களால் மட்டும்தான் கடவுளுடைய நண்பர்களாக ஆக முடியும். அதோடு, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களால் இப்போதே நல்லபடியாக வாழ முடியும். எதிர்காலத்தில் என்றென்றும் வாழும் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். (யோவான் 14:6-ஐயும், 17:3-ஐயும் வாசியுங்கள்.) முக்கியமான ஒரு பொறுப்பை இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்த வேலையை நாம் தனியாகச் செய்ய வேண்டியதில்லை. “நாங்கள் கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கிறோம்” என்று தன்னைப் பற்றியும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களைப் பற்றியும் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 கொ. 3:9) பாவ இயல்புள்ள மனிதர்களிடம் யெகோவாவும் இயேசுவும் இப்படிப்பட்ட ஒரு வேலையைக் கொடுத்திருப்பது நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய பாக்கியம், இல்லையா?

4. இவான்-மெட்டில்டா தம்பதியின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

4 இந்த வேலையைச் செய்வது நமக்கு அதிக சந்தோஷத்தைத் தருகிறது. ஓர் அனுபவத்தைக் கவனியுங்கள். இவான்-மெட்டில்டா தம்பதி கொலம்பியாவில் வாழ்கிறார்கள். டாவியர் என்ற ஓர் இளைஞரிடம் அவர்கள் சத்தியத்தைப் பற்றிச் சொன்னார்கள். அவர்களிடம், “வாழ்க்கையில மாற்றங்கள செய்யணும்னு நினைக்கிறேன். ஆனா என்னால முடியல” என்று அந்த இளைஞர் சொன்னார். அவர் ஒரு குத்துச்சண்டை வீரர். போதைப் பொருளுக்கும் குடிப்பழக்கத்துக்கும் அவர் அடிமையாக இருந்தார். கல்யாணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலியான எரிக்காவோடு வாழ்ந்துகொண்டிருந்தார். “அவர் ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்துல வாழ்ந்திட்டு இருந்தார். நாங்க அவருக்கு பைபிள் படிப்பை ஆரம்பிச்சோம். அவரை போய் பார்க்குறதுக்கு, சேரும் சகதியுமான ரோட்டுல ரொம்ப நேரம் ஆளுக்கொரு சைக்கிள்ல போக வேண்டியிருந்துச்சு. அவர் நடந்துக்கிட்ட விதத்துலயும் மனப்பான்மையிலயும சில மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சுது. அதுக்கு அப்புறம் எரிக்காவும் பைபிள் படிக்க ஆரம்பிச்சாங்க” என்று இவான் சொல்கிறார். நாட்கள் போகப்போக, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதையும் குடிப்பதையும் குத்துச்சண்டை போடுவதையும் டாவியர் நிறுத்திவிட்டார். கடைசியில், எரிக்காவை கல்யாணம் செய்துகொண்டார். “2016-ல டாவியரும் எரிக்காவும் ஞானஸ்நானம் எடுத்தாங்க. ‘வாழ்க்கையில மாற்றங்கள செய்யணும்னு நினைக்கிறேன். ஆனா என்னால முடியல’னு டாவியர் அடிக்கடி சொன்னது எங்களுக்கு அப்போ ஞாபகம் வந்துச்சு. சந்தோஷத்துல எங்களுக்கு அழுகையே வந்துடுச்சு” என்று மெட்டில்டா சொல்கிறார். மற்றவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கு உதவும்போது நமக்கு அளவில்லாத சந்தோஷம் கிடைக்கிறது, இல்லையா?

மற்றவர்களைச் சீஷர்களாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

5. சீஷராக்கும் வேலையின் முதல் படி என்ன?

5 யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள விரும்புகிற ஆட்களை ‘தேடிக் கண்டுபிடிக்க’ ஆரம்பிக்கும்போது, சீஷராக்கும் வேலையில் நாம் முதல் படியை எடுக்கிறோம் என்று அர்த்தம். (மத். 10:11) சந்திக்கும் எல்லாரிடமும் சாட்சி கொடுப்பதன் மூலம் நாம் உண்மையிலேயே யெகோவாவின் சாட்சிகள் என்பதை நிரூபிக்கிறோம். பிரசங்கிக்கும்படி கிறிஸ்து கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்பதையும் நிரூபிக்கிறோம்.

6. ஊழியத்தில் நல்ல பலன்கள் கிடைக்க எது நமக்கு உதவும்?

6 பைபிளில் இருக்கும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் சிலருக்கு இருக்கிறது. ஆனால், நிறைய பேருக்கு ஆரம்பத்தில் அப்படிப்பட்ட ஆர்வம் இல்லாததுபோல் தெரியலாம். அப்படிப்பட்டவர்களுடைய ஆர்வத்தை நாம்தான் தூண்ட வேண்டும். ஊழியத்தில் நல்ல பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால், நன்றாகத் தயாரிக்க வேண்டும். அதனால், மக்கள் ஆர்வம் காட்டுகிற விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்குத் தயாரியுங்கள். பிறகு, அந்த விஷயத்தை எப்படி அறிமுகப்படுத்துவது என்பதைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள்.

7. நீங்கள் எப்படிப் பேச ஆரம்பிக்கலாம், மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதும் அவர்களை மதிப்பதும் ஏன் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

7 ஒருவேளை, நீங்கள் சந்திக்கும் நபரிடம் “ஒரு விஷயத்த பத்தி உங்க கருத்த கேட்க ஆசைப்படுறேன். இன்னைக்கு உலகம் முழுசும் இருக்குற பிரச்சினைகளால மக்கள் ரொம்பவே கஷ்டப்படுறாங்க. இதையெல்லாம் எந்த அரசாங்கமாவது தீர்த்து வைக்குமா? நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்கலாம். பிறகு, தானியேல் 2:44-ஐக் கலந்துபேசலாம். அல்லது, உங்கள் அக்கம்பக்கத்தில் இருக்கிற ஒருவரிடம், “நல்ல பழக்கவழக்கங்கள பிள்ளைங்களுக்கு எப்படிச் சொல்லித் தரலாம்னு நினைக்கிறீங்க?” என்று கேட்கலாம். பிறகு, உபாகமம் 6:6, 7-ஐக் கலந்துபேசலாம். நீங்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் சரி, நீங்கள் எப்படிப்பட்ட மக்களிடம் பேசுகிறீர்கள் என்பதை யோசித்துப்பாருங்கள். பைபிள் உண்மையிலேயே என்ன சொல்லித்தருகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், அவர்கள் எவ்வளவு பிரயோஜனம் அடைவார்கள் என்பதையும் யோசித்துப்பாருங்கள். அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள்; அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்புக் கொடுங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, அவர்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் சொல்வதை அவர்களும் கேட்க விரும்புவார்கள்.

8. நிறைய தடவை மறுசந்திப்பு செய்வது ஏன் முக்கியம்?

8 பைபிளைப் படிப்பதற்கு ஒருவர் ஒத்துக்கொள்வதற்கு முன்பு, நீங்கள் நிறைய தடவை மறுசந்திப்புகள் செய்ய வேண்டியிருக்கும். அதற்காக, நிறைய நேரத்தைச் செலவிடுவதும் முயற்சி எடுப்பதும் அவசியம். ஏனென்றால், நீங்கள் போகும்போது ஒருவேளை அவர் வீட்டில் இல்லாமல் போய்விடலாம். அதுமட்டுமல்ல, பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்வதற்கு முன்பு, உங்களோடு பழகுவதை அவர் சௌகரியமாக உணர வேண்டும். அதற்காகவும் நீங்கள் நிறைய தடவை மறுசந்திப்புகளைச் செய்ய வேண்டியிருக்கலாம். ஒரு செடி நன்றாக வளர வேண்டுமென்றால், தவறாமல் தண்ணீர் ஊற்றுவது ரொம்ப முக்கியம். அதேபோல், யெகோவாவின் மீதும் கிறிஸ்துவின் மீதும் ஒருவருக்கு அன்பு வளர வேண்டுமென்றால், பைபிள் விஷயங்களை அவரிடம் தவறாமல் கலந்துபேசுவது ரொம்ப முக்கியம்.

ஒருவரை சீஷராக்குவதில் கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் பங்கு இருக்கிறதா?

நேர்மை உள்ளம் படைத்த ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையை உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் செய்கிறார்கள் (பாராக்கள் 9-10) *

9-10. நேர்மை உள்ளம் படைத்த ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பங்கு இருக்கிறது என்று ஏன் சொல்லலாம்?

9 நேர்மை உள்ளம் படைத்த ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பங்கு இருக்கிறது. காணாமல்போன ஒரு குழந்தையைக் கண்டுபிடிக்கும் வேலையோடு இதை ஒப்பிடலாம். எப்படி? ஒரு நிஜ சம்பவத்தைக் கவனியுங்கள். ஒருசமயம், மூன்று வயது சின்னப் பையன் ஒருவன் காணாமல் போய்விட்டான். அவனைத் தேடும் முயற்சியில் சுமார் 500 பேர் இறங்கினார்கள். கடைசியில், சுமார் 20 மணிநேரம் கழித்து, சோளக்காட்டில் அவனை ஒருவர் கண்டுபிடித்தார். ஆனால், தான்தான் அந்தக் குழந்தையைக் கண்டுபிடித்ததாக அவர் உரிமைபாராட்டவில்லை. “நூத்துக்கணக்கான பேர் அவனை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சாங்க. அதனாலதான் அவனை கண்டுபிடிக்க முடிஞ்சுது” என்று அவர் சொன்னார்.

10 காணாமல்போன அந்தக் குழந்தையைப் போல்தான் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள். வாழ்க்கையில் அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு உதவி தேவை. (எபே. 2:12) நேர்மை உள்ளம் படைத்த இவர்களைத் தேடும் முயற்சியில் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களாகிய நாம் இறங்கியிருக்கிறோம். ஒருவேளை, உங்களுக்கென்று ஒரு பைபிள் படிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் ஊழியம் செய்யும் அதே பகுதியில் மற்ற பிரஸ்தாபிகளுக்கு பைபிள் படிப்புகள் கிடைத்திருக்கலாம். ஒரு சகோதரரோ சகோதரியோ, கிறிஸ்துவின் சீஷராக ஆகும் ஒருவரைக் கண்டுபிடிக்கும்போது, தேடும் முயற்சியில் இறங்கிய நாம் எல்லாருமே சந்தோஷப்படுகிறோம்.

11. உங்களுக்கென்று ஒரு பைபிள் படிப்பு இல்லையென்றாலும், மற்றவர்கள் சீஷர்களாக ஆவதற்கு நீங்கள் எப்படி உதவலாம்?

11 இப்போது உங்களுக்கு ஒரு பைபிள் படிப்பு இல்லையென்றாலும், மற்றவர்கள் சீஷர்களாக ஆவதற்குப் பல விதங்களில் உதவலாம். உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றத்துக்கு வரும் புதியவர்களை அன்போடு வரவேற்கலாம். அவர்களோடு நட்பாகப் பழகலாம். இப்படிப் பழகும்போது, நாம் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். (யோவா. 13:34, 35) கூட்டங்களில் நீங்கள் சொல்லும் பதில்கள் சின்னதாக இருந்தால்கூட, உங்களைப் பார்த்து அவர்களும் பதில் சொல்ல கற்றுக்கொள்வார்கள். இப்படி, தங்கள் விசுவாசத்தை மரியாதையான விதத்தில் வெளிப்படுத்த கற்றுக்கொள்வார்கள். நாம் வேறு என்ன செய்யலாம்? சமீபத்தில் பிரஸ்தாபியாக ஆன ஒருவரோடு நீங்கள் ஊழியம் செய்யலாம். அப்படிச் செய்யும்போது, பைபிள் வசனங்களிலிருந்து எப்படி நியாயங்காட்டிப் பேசலாம் என்பதை அவருக்குச் சொல்லித்தர முடியும். இதன் மூலம் கிறிஸ்துவைப் பின்பற்ற அவருக்குச் சொல்லித்தர முடியும்.—லூக். 10:25-28.

12. மற்றவர்களைச் சீஷராக்குவதற்கு நமக்கு விசேஷ திறமைகள் தேவையா? விளக்குங்கள்.

12 இயேசுவின் சீஷர்களாக ஆவதற்கு மற்றவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு, விசேஷ திறமைகள் தேவை என்று நினைக்க வேண்டியதில்லை. ஏன்? பொலிவியாவில் வாழும் ஃபவுஸ்டீனா என்ற சகோதரியின் உதாரணத்தைப் பாருங்கள். யெகோவாவின் சாட்சிகளோடு பழக ஆரம்பித்த புதிதில் அவருக்கு வாசிக்கத் தெரியாது. அதற்குப் பிறகு, ஓரளவு வாசிக்கக் கற்றுக்கொண்டார். இப்போது அவர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டார். மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம். ஒவ்வொரு வாரமும் ஐந்து பைபிள் படிப்புகளை நடத்துகிறார். தன்னுடைய பைபிள் மாணாக்கர்கள் வாசிக்கும் அளவுக்கு ஃபவுஸ்டீனாவால் நன்றாக வாசிக்க முடியாது. இருந்தாலும், ஆறு பேர் ஞானஸ்நானம் எடுக்க அவர் உதவியிருக்கிறார்.—லூக். 10:21.

13. நாம் ரொம்பவே பிஸியாக இருந்தாலும், சீஷராக்கும் வேலையைச் செய்யும்போது என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

13 முக்கியமான பல பொறுப்புகளைச் செய்வதால் கிறிஸ்தவர்கள் நிறைய பேர் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்கள். ஆனாலும், நேரம் எடுத்து பைபிள் படிப்புகளையும் நடத்துகிறார்கள். அதனால், அதிக சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்கள். மிலானி என்ற சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அலாஸ்காவில் இருக்கும் ஓர் ஒதுக்குப்புறமான ஊரில் அவர் வாழ்ந்துவருகிறார். தனிமரமாக தன்னுடைய எட்டு வயது மகளை அவர் வளர்த்துக்கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல், முழுநேர வேலையும் செய்துகொண்டிருந்தார். புற்றுநோயால் அவதிப்படும் தன் அப்பாவையும் கவனித்துக்கொண்டிருந்தார். அவருடைய ஊரில், அவர் மட்டும்தான் யெகோவாவின் சாட்சியாக இருந்தார். பயங்கரமான குளிரிலும் வெளியே போய் ஊழியம் செய்வதற்குத் தேவையான பலத்தைத் தரும்படி அவர் ஜெபம் செய்துகொண்டே இருந்தார். ஏனென்றால், தனக்கு ஒரு பைபிள் படிப்பு கிடைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். கடைசியில், சாரா என்ற ஒரு பெண்ணைச் சந்தித்தார். கடவுளுடைய பெயரைக் கேட்டவுடன் சாராவுக்கு ஒரே சந்தோஷம்! கொஞ்ச நாளில் அவர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். மிலானி இப்படிச் சொல்கிறார்: “பொதுவா வெள்ளிக்கிழமை சாயங்காலத்துல நான் ரொம்ப களைப்பா இருப்பேன். ஆனாலும், நானும் என்னோட பொண்ணும் அந்த பைபிள் படிப்பை தவறாம நடத்துனோம். அப்படிச் செஞ்சது எங்களுக்கு ரொம்ப பிரயோஜனமா இருந்துச்சு. சாரா கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்றதுக்காக நாங்க ஆராய்ச்சி செஞ்சோம்; அப்படி செய்றது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களும் யெகோவாவோட ஃப்ரெண்டா ஆகுறத பார்த்தப்போ சந்தோஷமா இருந்துச்சு.” தனக்கு வந்த எதிர்ப்பையெல்லாம் சாரா வெற்றிகரமாகச் சமாளித்தார், சர்ச்சைவிட்டு வெளியேறினார், ஞானஸ்நானமும் எடுத்தார்.

இந்த வேலையைச் செய்ய நமக்கு ஏன் பொறுமை தேவை?

14. (அ) சீஷராக்கும் வேலையை மீன் பிடிக்கும் வேலையோடு எப்படி ஒப்பிடலாம்? (ஆ) 2 தீமோத்தேயு 4:1, 2–ல் இருக்கிற பவுலின் வார்த்தைகளை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

14 நீங்கள் செய்யும் ஊழியத்துக்குப் பலன் கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! சீஷராக ஆக விரும்பும் ஆட்களை உங்களால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியும். இந்த வேலையை மீன் பிடிக்கும் வேலையோடு இயேசு ஒப்பிட்டார். மீன் பிடிப்பதற்கு முன்பு, மீனவர்கள் நிறைய நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கலாம். நடுராத்திரியிலோ அதிகாலையிலோ அவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கலாம். சிலசமயங்களில், ரொம்பத் தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம். (லூக். 5:5) அதேபோல், சீஷராக்கும் வேலையைச் செய்கிற சிலர், சீஷராக ஆக விரும்புகிற ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்க நிறைய நேரம் பொறுமையோடு செலவு செய்கிறார்கள். வெவ்வேறு சமயத்திலும் வெவ்வேறு இடத்திலும் தங்கள் வலைகளை வீசுகிறார்கள். நிறைய ஆட்களைச் சந்திப்பதற்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள்! இப்படிக் கடினமாக உழைப்பவர்களால் ஆர்வமுள்ள ஆட்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. நிறைய பேரைச் சந்திக்க முடிந்த ஒரு நேரத்தில் அல்லது இடத்தில் பிரசங்கிப்பதற்கு உங்களால் முயற்சி செய்ய முடியுமா?2 தீமோத்தேயு 4:1, 2-ஐ வாசியுங்கள்.

யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவரை நேசிக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் உங்கள் மாணாக்கருக்குப் பொறுமையோடு உதவுங்கள் (பாராக்கள் 15-16) *

15. பைபிள் படிப்பு நடத்துவதற்கு ஏன் பொறுமை தேவை?

15 பைபிள் படிப்பு நடத்துவதற்கு ஏன் பொறுமை தேவை? ஏனென்றால், பைபிளில் இருக்கிற உண்மைகளைத் தெரிந்துகொள்வதோடு, அவற்றை நேசிக்கவும் மாணாக்கருக்கு உதவ வேண்டும். பைபிளின் நூலாசிரியரான யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவரை நேசிக்கவும் அவர்களுக்கு உதவ வேண்டும். தன்னுடைய சீஷர்களிடமிருந்து இயேசு என்ன எதிர்பார்க்கிறார் என்பதைச் சொல்லிக்கொடுப்பதோடு, உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ்வது எப்படி என்றும் சொல்லித்தர வேண்டும். பைபிள் நியமங்களை வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு அவர்கள் கடினமாக முயற்சி செய்யும்போது, நாம் அவர்களுக்குப் பொறுமையாக உதவ வேண்டும். சிலரால், கொஞ்ச மாதங்களுக்குள்ளாகவே தங்களுடைய யோசனைகளையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள முடிகிறது. வேறு சிலருக்கு, இன்னும் அதிக நாட்கள் தேவைப்படுகின்றன.

16. ராவுலுடைய அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

16 பெரு நாட்டில் மிஷனரியாக சேவை செய்யும் ஒரு சகோதரர், பொறுமையாக இருப்பதால் வரும் பலனை அனுபவித்தார். “ராவுல்ங்குற ஒருத்தருக்கு நான் பைபிள் படிப்பு நடத்தினேன். ரெண்டு புத்தகத்தையும் அவரோடு சேர்ந்து படிச்சு முடிச்சிட்டேன்” என்று அந்த மிஷனரி சொல்கிறார். “ஆனா அவரோட வாழ்க்கையில நிறைய பிரச்சினை இருந்துச்சு. அவரோட கல்யாண வாழ்க்கையில புயல் வீசிட்டு இருந்துச்சு. அவர் கெட்ட வார்த்தை பேசுவாரு. இப்படியெல்லாம் நடந்துக்கிட்டதுனால, அவரோட பிள்ளைங்க அவர மதிக்கல. இவ்வளவு பிரச்சினை இருந்தாலும், அவர் தொடர்ந்து கூட்டங்களுக்கு வந்தாரு. அதனால, அவருக்கும் அவரோட குடும்பத்துக்கும் உதவி செய்றதுக்காக நான் தொடர்ந்து அவர போய் பார்த்திட்டே இருந்தேன். நான் அவரை சந்திச்சு மூணு வருஷம் கழிச்சு, அவர் ஞானஸ்நானம் எடுத்தார்” என்று அந்த மிஷனரி சொல்கிறார்.

17. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 ‘புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷராக்குங்கள்’ என்ற கட்டளையை இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கு, வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களிடம் நாம் பேச வேண்டியிருக்கிறது. பெரும்பாலும், நாம் சந்திக்கும் ஆட்கள் நம்மைப் போல் யோசிப்பதில்லை. எந்த மதத்தையும் சேராதவர்களாகவோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவோ அவர்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த மக்களுக்கு நாம் எப்படி நல்ல செய்தியைச் சொல்லலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 98 ராஜ்ய விதை விதைத்தல்

^ பாரா. 5 கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கு மற்றவர்களுக்கு உதவுவதுதான் கிறிஸ்தவ சபையின் முக்கியக் குறிக்கோள்! இந்தக் குறிக்கோளை அடைய நமக்குத் தேவையான நடைமுறை ஆலோசனைகளை இந்தக் கட்டுரை கொடுக்கும்.

^ பாரா. 2 வார்த்தைகளின் விளக்கம்: கிறிஸ்துவின் சீஷர்கள், கிறிஸ்து கற்றுக்கொடுத்த விஷயங்களைத் தெரிந்துகொள்வது மட்டுமல்ல, அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்கள். இயேசுவின் அடிச்சுவடுகளை, அதாவது அவருடைய முன்மாதிரியை, நெருக்கமாகப் பின்பற்ற முயற்சி செய்கிறார்கள்.—1 பே. 2:21.

^ பாரா. 52 படங்களின் விளக்கம்: விடுமுறைக்காகப் போகிற ஒருவர், விமான நிலையத்தில் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து பிரசுரங்களை வாங்கிக்கொள்கிறார். பிறகு, ஊரைச் சுற்றிப்பார்க்கும்போது வேறுசில சாட்சிகள் பொது ஊழியம் செய்வதைப் பார்க்கிறார். தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிய பிறகு, பிரஸ்தாபிகள் அவரைச் சந்திக்கிறார்கள்.

^ பாரா. 54 படங்களின் விளக்கம்: அதே நபர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்கிறார். கடைசியில், ஞானஸ்நானம் எடுக்கிறார்.