Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 34

நியமிப்பில் மாற்றம் ஏற்படும்போது...

நியமிப்பில் மாற்றம் ஏற்படும்போது...

“உங்களுடைய உழைப்பையும் தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது.”—எபி. 6:10.

பாட்டு 60 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

இந்தக் கட்டுரையில்... *

1-3. முழுநேர ஊழியர்கள் தங்கள் நியமிப்புகளை ஏன் விட்டுவிட்டுப் போக வேண்டியிருக்கிறது?

“நாங்க 21 வருஷம் மிஷனரிகளா சேவை செஞ்சோம். அதுக்கு அப்புறம் எங்க ரெண்டு பேரோட அப்பா அம்மாவுக்கும் உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அவங்கள கவனிச்சிக்குறது எங்களுக்கு சந்தோஷம்தான். ஆனாலும் எங்களுக்கு ரொம்ப பிடிச்ச இடத்த விட்டுட்டு வர்றது வேதனையா இருந்துச்சு” என்று ராபர்ட்டும் அவருடைய மனைவி மேரி ஜோவும் சொல்கிறார்கள்.

2 “நியமிப்ப தொடர்ந்து செய்றதுக்கு எங்களோட உடல்நிலை ஒத்துழைக்கல. அத தாங்க முடியாம நாங்க அழுதுட்டோம். நாங்க கடைசிவரைக்கும் வெளிநாட்டுல யெகோவாவுக்கு சேவை செய்யணும்னு நினைச்சோம். ஆனா அது நடக்காம போயிடுச்சு” என்று வில்லியமும் அவருடைய மனைவி ட்டெர்ரியும் சொல்கிறார்கள்.

3 “நான் சேவை செஞ்சிட்டிருந்த கிளை அலுவலகத்த மூடணும்னு அரசாங்கம் திட்டம் போட்டுட்டிருந்த விஷயம் எங்களுக்கு தெரியும். ஆனாலும், அது நிஜமாவே நடந்தப்போ அதிர்ச்சியா இருந்துச்சு. பெத்தேல விட்டு நாங்க எல்லாரும் போக வேண்டியிருந்துச்சு” என்று அலிக்ஸியே என்ற சகோதரர் சொல்கிறார்.

4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

4 மேலே சொல்லப்பட்டவர்களைப் போலவே, ஆயிரக்கணக்கான பெத்தேல் ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் புதிய நியமிப்புகள் கிடைத்திருக்கின்றன. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) தாங்கள் நெஞ்சார நேசித்த நியமிப்புகளை விட்டுவிட்டுப் போவது இந்த உண்மையுள்ள சகோதர சகோதரிகளுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், இந்த மாற்றத்தைச் சமாளிக்க எது இவர்களுக்கு உதவும்? நீங்கள் எப்படி இவர்களுக்கு உதவலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ளும்போது, மாற்றங்களைச் சந்திக்க நாமும் தயாராவோம்.

மாற்றத்தைச் சமாளிப்பது எப்படி?

நியமிப்பை விட்டுவிட்டுப் போவது முழுநேர ஊழியர்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்? (பாரா 5) *

5. நியமிப்பில் மாற்றங்கள் ஏற்படும்போது என்னென்ன கஷ்டங்கள் வரலாம்?

5 நாம் பெத்தேலில் சேவை செய்துவந்தாலும் சரி, வேறு விதமான முழுநேர ஊழியம் செய்துவந்தாலும் சரி, நம்மைச் சுற்றி இருக்கிறவர்களையும் நாம் இருக்கிற இடத்தையும் மிக அதிகமாக நேசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். அதனால், அந்த நியமிப்பை விட்டுவிட்டுப் போக வேண்டிய நிலைமை வரும்போது, நமக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். அன்பான சகோதர சகோதரிகளை விட்டுவிட்டுப் போவதை நினைத்து நாம் வேதனைப்படலாம். ஒருவேளை, துன்புறுத்தலின் காரணமாக நாம் அப்படிப் போக வேண்டியிருந்தால், அந்த இடத்தில் இருக்கிற சகோதர சகோதரிகளை நினைத்து நாம் கவலைப்படலாம். (மத். 10:23; 2 கொ. 11:28, 29) புதிய நியமிப்பு கிடைக்கும்போது அல்லது சொந்த ஊருக்குத் திரும்பிப் போகும்போது, இன்னொரு பிரச்சினையும் வரலாம். அதாவது, அங்கிருக்கும் கலாச்சாரத்துக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். “எங்களோட சொந்த கலாச்சாரத்தையே நாங்க மறந்துட்டோம். எங்க மொழியில ஊழியம் செய்றதே எங்களுக்கு கஷ்டமா இருந்துச்சு. நாங்க சொந்த ஊர்ல இருந்தாலும், வெளிநாட்டுல இருந்த மாதிரி இருந்துச்சு” என்று ராபர்ட்டும் மேரி ஜோவும் சொல்கிறார்கள். நியமிப்பு மாறும்போது, சிலருக்கு திடீரென்று பொருளாதார நெருக்கடி வரலாம். அதுபோன்ற சமயங்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் அவர்கள் திணறலாம் அல்லது இடிந்துபோய் உட்கார்ந்துவிடலாம். இந்தச் சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது?

யெகோவாவிடம் நெருங்கிப் போவதும், அவரை நம்புவதும் ரொம்ப முக்கியம் (பாராக்கள் 6-7) *

6. நாம் எப்படி யெகோவாவிடம் நெருங்கி இருக்கலாம்?

6 யெகோவாவிடம் நெருங்கி இருங்கள். (யாக். 4:8) யெகோவா ‘ஜெபத்தைக் கேட்பார்’ என்று முழுமையாக நம்புவதன் மூலம் அவரிடம் நெருங்கி இருக்க முடியும். (சங். 65:2) “உங்களுடைய இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிடுங்கள்” என்று சங்கீதம் 62:8 சொல்கிறது. “நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட மிக அதிகமாக, பல மடங்கு அதிகமாக” யெகோவாவால் தர முடியும். (எபே. 3:20) நாம் கேட்பதைத் தருவதோடு மட்டும் அவர் நிறுத்திக்கொள்ள மாட்டார். ஒருவேளை, நாம் நினைத்துக்கூடப் பார்க்காத விதத்தில் நம்முடைய பிரச்சினைகளைத் தீர்த்தும் வைப்பார்.

7. (அ) யெகோவாவிடம் நெருங்கி இருக்க எது நமக்கு உதவும்? (ஆ) எபிரெயர் 6:10-12 சொல்கிறபடி, தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

7 யெகோவாவிடம் நெருங்கி இருப்பதற்கு நாம் இன்னொரு விஷயத்தையும் செய்ய வேண்டும். பைபிளைத் தினமும் படித்து, படித்தவற்றை ஆழமாக யோசிக்க வேண்டும். “குடும்ப வழிபாட்டயும் கூட்டங்களுக்கு தயாரிக்கிறதயும் நீங்க முன்னாடி எப்படி தவறாம செஞ்சிட்டு இருந்தீங்களோ, அதே மாதிரி இப்பவும் செய்யுங்க” என்று முன்பு மிஷனரியாக இருந்த ஒரு சகோதரர் சொல்கிறார். புதிய சபையோடு சேர்ந்து அதிகமாக ஊழியம் செய்யுங்கள். முன்பு செய்ததைப் போல் உங்களால் செய்ய முடியவில்லை என்றாலும், இப்போது நீங்கள் செய்யும் சேவையை யெகோவா நிச்சயம் மறக்க மாட்டார்.எபிரெயர் 6:10-12-ஐ வாசியுங்கள்.

8. வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள 1 யோவான் 2:15-17 எப்படி உதவுகிறது?

8 எளிமையாக வாழுங்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிடும் அளவுக்கு சாத்தானுடைய உலகத்தின் கவலைகள் உங்களை “நெருக்கி” போடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். (மத். 13:22) ‘காசு பணம் இல்லாம ஒண்ணுமே செய்ய முடியாது, முதல்ல சம்பாதிக்கிற வழிய பாருங்க’ என்று சொல்லி இந்த உலகமோ உங்கள் நண்பர்களோ குடும்பத்தாரோ சொந்தக்காரர்களோ உங்களைக் கட்டாயப்படுத்தலாம். ஆனால், இணங்கிவிடாதீர்கள்! (1 யோவான் 2:15-17-ஐ வாசியுங்கள்.) விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ளவும், மனஅமைதியோடு இருக்கவும், பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் நமக்கு என்ன தேவையோ, அதை “சரியான சமயத்தில்” தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். அதனால், அவர்மீது முழு நம்பிக்கை வையுங்கள்.—எபி. 4:16; 13:5, 6.

9. நீதிமொழிகள் 22:3, 7 சொல்கிறபடி, தேவையில்லாத கடனைத் தவிர்ப்பது ஏன் நல்லது, ஞானமான முடிவுகளை எடுக்க எது உதவும்?

9 தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். (நீதிமொழிகள் 22:3, 7-ஐ வாசியுங்கள்.) குடிமாறிப் போகும்போது செலவுகள் அதிகமாகலாம். அதனால், கடன் வாங்கினால்தான் சமாளிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தேவையில்லாத பொருள்களை வாங்குவதற்கெல்லாம் கடன் வாங்காதீர்கள். அப்போதுதான், கடன் தொல்லையில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள். ஒருவேளை, குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால், நாம் மனக்குழப்பத்தில் இருக்கலாம். அதுபோன்ற சமயங்களில், எவ்வளவு கடன் வாங்குவது என்று முடிவெடுப்பது கஷ்டமாக இருக்கலாம். அப்போது, நாம் எப்படி ஞானமான முடிவுகளை எடுக்கலாம்? யெகோவாவிடம் ‘ஜெபத்தின் மூலம் மன்றாடுங்கள்.’ அப்போது, அவர் உங்களுக்குச் சமாதானத்தைத் தருவார். “உங்கள் இதயத்தையும் மனதையும் . . . [அது] பாதுகாக்கும்.” நிதானமாக இருக்கவும் நல்ல முடிவுகளை எடுக்கவும் அது உதவும்.—பிலி. 4:6, 7; 1 பே. 5:7.

10. நாம் எப்படிப் புதிய நட்பு வட்டாரத்தை உருவாக்கலாம்?

10 உறவுகளோடு இணைந்திருங்கள். உங்களுடைய உணர்ச்சிகளையும் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களையும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அதுவும், நீங்கள் சந்தித்ததைப் போன்ற சூழ்நிலைகளை ஏற்கெனவே சந்தித்தவர்களிடம் அதையெல்லாம் சொல்வது ரொம்ப நல்லது. அப்படிச் சொல்லும்போது, உங்களுக்கு மனநிம்மதி கிடைக்கும். (பிர. 4:9, 10) பழைய நியமிப்பில் இருந்த நட்பு வட்டாரம் இப்போதும் உங்களுக்கு இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், புதிய நியமிப்பிலும் நட்பு வட்டாரத்தை உருவாக்குங்கள். உங்களுக்கு நல்ல நண்பர்கள் வேண்டும் என்றால், நீங்களும் ஒரு நல்ல நண்பராக இருக்க வேண்டும்! புதிய நண்பர்களை எப்படி உருவாக்கலாம்? யெகோவாவின் சேவையில் கிடைத்த அருமையான அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் சந்தோஷமாகச் சேவை செய்வதை அவர்கள் பார்க்கட்டும்! முழுநேர ஊழியத்தில் நீங்கள் காட்டுகிற ஆர்வத்தை சபையில் இருக்கிற சிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், வேறுசிலர் உங்கள் முன்மாதிரியைப் பார்த்து உங்களுக்கு நட்புக் கரம் நீட்டுவார்கள். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய அனுபவங்களைச் சொல்லும்போது, உங்கள்மீது அளவுக்கதிகமான கவனத்தை ஈர்க்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது கசப்பான அனுபவம் ஏற்பட்டிருந்தால், அதைப் பற்றி அவர்களிடம் சொல்லாதீர்கள்.

11. மாற்றங்கள் மத்தியிலும் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க என்ன செய்யலாம்?

11 உங்கள் துணையின் உடல்நிலை மோசமாக ஆனதால், உங்கள் நியமிப்பை விட்டுவிட வேண்டியிருக்கிறதா? அப்படியென்றால், உங்கள் துணையின் மீது பழிபோடாதீர்கள். அல்லது, உங்கள் உடல்நிலை மோசமாக ஆனதால், உங்கள் நியமிப்பை விட்டுவிட வேண்டியிருக்கிறதா? அப்படியென்றால், உங்களையே நீங்கள் நொந்துகொள்ளாதீர்கள். உங்களால்தான் உங்கள் துணையாலும் அந்தச் சேவையை செய்ய முடியவில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் இரண்டு பேருமே ‘ஒரே உடல்’ என்பதை மறந்துவிடாதீர்கள். வாழ்விலும் தாழ்விலும் நீங்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வீர்கள் என்று யெகோவாவுக்கு முன்னால் வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். (மத். 19:5, 6) எதிர்பாராமல் கருத்தரித்ததால் உங்கள் நியமிப்பை விட்டுவிட வேண்டியிருக்கிறதா? அப்படியென்றால், உங்கள் குழந்தையின் மீது பழிபோடாதீர்கள். உங்கள் பிள்ளையை நீங்கள் முக்கியமாக நினைத்ததால்தான் முழுநேர சேவையைக்கூட தியாகம் செய்யத் தயாராக இருந்தீர்கள் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரியவையுங்கள். “யெகோவா கொடுத்த ‘பரிசுதான்’ நீ” என்று உங்கள் பிள்ளையிடம் அடிக்கடி சொல்லுங்கள். (சங். 127:3-5) அதேசமயத்தில், உங்கள் நியமிப்பில் கிடைத்த அருமையான அனுபவங்களையும் சொல்லுங்கள். அப்படிச் செய்தால், முழுநேர ஊழியம் செய்ய வேண்டும் என்ற ஆசையை உங்கள் பிள்ளையின் மனதில் விதைக்க முடியும்.

மற்றவர்களுக்கு உதவுவது எப்படி?

12. (அ) தங்கள் சேவையைத் தொடர்ந்து செய்ய முழுநேர ஊழியர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? (ஆ) மாற்றங்களைச் சமாளிக்க அவர்களுக்கு எப்படி உதவலாம்?

12 முழுநேர ஊழியர்கள் தங்கள் சேவையைத் தொடர்ந்து செய்ய, நிறைய சபைகள் உதவுகின்றன. தனிநபர்களாக, சகோதர சகோதரிகள் நிறைய பேரும் உதவுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சபாஷ்! பணத்தையும் பொருளையும் கொடுத்து உதவுவதன் மூலம் முழுநேர ஊழியர்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள். முழுநேர ஊழியர்களின் குடும்பத்தார் தங்கள் சபையில் இருந்தால், அவர்களைக் கவனித்துக்கொள்வதன் மூலம் தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்கள். (கலா. 6:2) ஒருவேளை, முழுநேர ஊழியம் செய்யும் ஒருவருடைய நியமிப்பு மாற்றப்பட்டு, உங்கள் சபைக்கு அவர் நியமிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அவர் ஏதோ தவறு செய்துவிட்டதால் அல்லது கண்டிக்கப்பட்டதால் உங்கள் சபைக்கு வந்திருக்கிறார் என்று நினைத்துவிடாதீர்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதற்குப் பதிலாக, அந்த மாற்றத்தைச் சமாளிக்க அவருக்கு உதவுங்கள். முகம் மலர அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒருவேளை, உடல்நலப் பிரச்சினைகளால் அவரால் முன்புபோல் செய்ய முடியவில்லை என்றாலும், அவர் ஏற்கெனவே செய்த சேவைக்காக மனதார பாராட்டுங்கள். அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவருடைய பைபிள் அறிவிலிருந்தும், அவருக்குக் கிடைத்த பயிற்சியிலிருந்தும், அவருடைய அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

13. புதிய நியமிப்பைப் பெற்றுக்கொண்டு நம்முடைய சபைக்கு வந்திருப்பவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?

13 நம்முடைய சபைக்கு நியமிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் சில உதவிகள் தேவைப்படலாம். உதாரணத்துக்கு, வீடு பார்ப்பதற்கும், பயணம் செய்வதற்கும், வேலை தேடுவதற்கும், மற்ற விஷயங்களைச் செய்வதற்கும் உங்கள் உதவி தேவைப்படலாம். காய்கறிகளும் வீட்டு சாமான்களும் எங்கே கிடைக்கும்... வரி கட்டுவது எப்படி... போன்ற தகவல்களும் அவர்களுக்குத் தேவைப்படலாம். மிக முக்கியமாக, அவர்கள்மீது நாம் பரிதாபப்பட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றுதான் எதிர்பார்க்கிறார்கள். தங்களுக்கோ குடும்பத்தாருக்கோ உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது, பாசத்துக்குரிய ஒருவரை இழந்து துக்கத்தில் தவித்துக்கொண்டிருக்கலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதோடு, முன்பு சேவை செய்த இடத்தில் இருந்த நண்பர்களை விட்டுப் பிரிந்திருப்பது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அதைப் பற்றி வெளியே சொல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட வேதனைகளைச் சமாளிக்க கொஞ்சக் காலம் ஆகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

14. உள்ளூர் சபையிலிருப்பவர்கள் ஒரு சகோதரிக்கு எப்படி உதவினார்கள்?

14 மாற்றத்தைச் சமாளிக்க உங்கள் ஆதரவும் முன்மாதிரியும் அவர்களுக்கு உதவும். ரொம்ப வருஷங்களாக வெளிநாட்டில் சேவை செய்த ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நான் முன்னாடி இருந்த இடத்துல ஒவ்வொரு நாளும் பைபிள் படிப்புகள நடத்துனேன். ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம், ஊழியத்துல ஒரு வசனத்த வாசிக்கிறதுக்கோ வீடியோவ காட்டுறதுக்கோகூட வாய்ப்பு கிடைக்கல. ஆனா, மறுசந்திப்புகளுக்கும் பைபிள் படிப்புகளுக்கும் உள்ளூர் சகோதர சகோதரிகள் என்னை கூட்டிட்டு போனாங்க. சுறுசுறுப்பாவும் தைரியமாவும் அவங்க பைபிள் படிப்ப நடத்துறத பார்த்தப்போ எனக்கு நம்பிக்கை வந்துச்சு. மக்கள்கிட்ட எப்படி பேச ஆரம்பிக்கலாம்னு கத்துக்கிட்டேன். இதெல்லாம் செஞ்சதுனால இழந்துபோன சந்தோஷம் திரும்பவும் கிடைச்சுது.”

முன்னேறிக்கொண்டே இருங்கள்

உங்கள் சொந்த ஊரில் அதிகமாக ஊழியம் செய்வதற்கான வழிகளைத் தேடுங்கள் (பாராக்கள் 15-16) *

15. புதிய நியமிப்பை நல்லபடியாகச் செய்ய எது உங்களுக்கு உதவும்?

15 புதிய நியமிப்பை உங்களால் நிச்சயம் நல்லபடியாகச் செய்ய முடியும். நியமிப்பில் மாற்றம் ஏற்பட்டதால், நீங்கள் தோற்றுவிட்டதாகவோ உங்கள் மதிப்பு குறைந்துவிட்டதாகவோ நினைக்காதீர்கள். உங்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவியிருக்கிறார் என்பதைப் பற்றி யோசியுங்கள். தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல நடந்துகொள்ளுங்கள். அவர்கள் போன இடத்திலெல்லாம், “கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்தார்கள்.” (அப். 8:1, 4) பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்தால் நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். இப்போது ஒரு அனுபவத்தைக் கவனிக்கலாம். ஒரு நாட்டிலிருந்த பயனியர்கள், அந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால், பக்கத்து நாட்டுக்குப் போக வேண்டியிருந்தது. அந்த நாட்டில் இவர்களுடைய மொழி பேசியவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குப் பிரசங்கிக்க அவ்வளவாக ஆட்கள் இல்லை. இந்தப் பயனியர்கள் போன சில மாதங்களிலேயே, அங்கே நல்ல வளர்ச்சி ஏற்பட்டது; நிறைய தொகுதிகள் உருவாயின.

16. புதிய நியமிப்பை நீங்கள் எப்படிச் சந்தோஷமாகச் செய்யலாம்?

16 “யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலம்” என்று பைபிள் சொல்கிறது. (நெ. 8:10, அடிக்குறிப்பு.) நம்முடைய நியமிப்பை நினைத்து நாம் சந்தோஷப்பட்டாலும், அதைவிட முக்கியமாக யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தை நினைத்துதான் அதிகமாகச் சந்தோஷப்பட வேண்டும். அதனால், எப்போதும் யெகோவாவோடு சேர்ந்து நடங்கள். அவருடைய ஞானத்தையும் வழிநடத்துதலையும் ஆதரவையும் நம்பியிருங்கள். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையால்தான் முன்பு இருந்த நியமிப்பை நீங்கள் நேசித்தீர்கள். அதேபோல் இப்போதும், மக்களுக்கு உதவுவதற்காக உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்படிச் செய்தால், இந்த நியமிப்பை நேசிக்கவும் யெகோவா உங்களுக்கு உதவுவார்.—பிர. 7:10.

17. இப்போது நமக்கு இருக்கும் நியமிப்பைப் பற்றிய எந்த விஷயத்தை மறந்துவிடக் கூடாது?

17 யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவை நிரந்தரமானது. ஆனால் இப்போது இருக்கும் நியமிப்போ தற்காலிகமானது! பூஞ்சோலையில், நம் எல்லாருக்குமே வேறொரு நியமிப்பு கிடைக்கலாம். அந்த நியமிப்புகளைச் செய்ய, இப்போது கிடைக்கும் அனுபவங்கள் தன்னைத் தயார்படுத்துவதாக அலிக்ஸியே நம்புகிறார். “யெகோவா நிஜமானவர்னும் புதிய உலகம் நிஜமானதுனும் எனக்கு நல்லா தெரியும். ஆனா, யெகோவா ரொம்ப தூரத்துல இருக்கிற மாதிரியும் புதிய உலகம் வர்றதுக்கு இன்னும் ரொம்ப நாள் ஆகற மாதிரியும் தோணுச்சு. இப்போ அப்படி இல்ல. என்னோட வாழ்க்கை பயணத்துல யெகோவா என் கண் முன்னாடியே இருக்காரு. புதிய உலகம் கண்ணுக்கு எட்டுற தூரத்துல தெரியுது” என்று அவர் சொல்கிறார். (அப். 2:25) நாம் எப்படிப்பட்ட நியமிப்பைச் செய்தாலும், தொடர்ந்து யெகோவாவோடு சேர்ந்து நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கலாம். அப்போது, அவர் ஒருபோதும் நம்மைவிட்டு விலக மாட்டார். அவருடைய சேவையில் நம்மால் முடிந்ததைச் செய்யும்போது, அது எந்தச் சேவையாக இருந்தாலும், அதைச் சந்தோஷமாகச் செய்ய அவர் உதவுவார்.—ஏசா. 41:13.

பாட்டு 121 ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்

^ பாரா. 5 முழுநேர ஊழியர்கள் சிலருக்குத் தங்கள் நியமிப்பை விட்டுவிட வேண்டிய நிலைமை ஏற்படலாம். அல்லது வேறொரு புதிய நியமிப்பு கிடைக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு வருகிற சவால்களைப் பற்றியும், அதை அவர்கள் எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பற்றியும், மற்றவர்கள் எப்படி உதவலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இதுபோன்ற மாற்றங்களைச் சமாளிப்பதற்கு நம் எல்லாருக்குமே உதவுகிற சில நியமங்களையும் பார்ப்போம்.

^ பாரா. 4 அதேபோல், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, பொறுப்புள்ள சகோதரர்கள் நிறைய பேர் தங்கள் பொறுப்புகளை இளம் சகோதரர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 2018 காவற்கோபுரத்தில் வெளிவந்த “வயதான கிறிஸ்தவர்களே... உங்கள் உண்மைத்தன்மையை யெகோவா உயர்வாக மதிக்கிறார்” என்ற கட்டுரையையும், அக்டோபர் 2018 காவற்கோபுரத்தில் வெளிவந்த “மாற்றங்கள் மத்தியிலும் மனசமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்” என்ற கட்டுரையையும் பாருங்கள்.

^ பாரா. 12 அவர் முன்பு சேவை செய்துகொண்டிருந்த சபை மூப்பர்கள், அறிமுகக் கடிதத்தை எவ்வளவு சீக்கிரம் அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்ப வேண்டும். அப்போதுதான், பயனியராகவோ மூப்பராகவோ உதவி ஊழியராகவோ தாங்கள் செய்துகொண்டிருந்த சேவையை அவர்களால் சீக்கிரமாகவே தொடர முடியும்.

^ பாரா. 13உயிர் உதிரும்போது...” என்ற தலைப்பில் வெளிவந்த எண் 3, 2018 விழித்தெழு! பத்திரிகையைப் பாருங்கள்.

^ பாரா. 57 படங்களின் விளக்கம்: வெளிநாட்டில் மிஷனரியாக சேவை செய்யும் ஒரு தம்பதிக்கு, தங்கள் நியமிப்பை விட்டுவிட்டுப் போக வேண்டிய நிலைமை வருகிறது. அதனால், தங்கள் சபையாரிடமிருந்து கண்ணீரோடு விடைபெறுகிறார்கள்.

^ பாரா. 59 படங்களின் விளக்கம்: தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவந்தவுடன், அங்கே இருக்கிற சவால்களைச் சமாளிக்க உதவும்படி அந்தத் தம்பதி யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறார்கள்.

^ பாரா. 61 படங்களின் விளக்கம்: யெகோவாவின் உதவியோடு திரும்பவும் முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்கிறார்கள். மிஷனரிகளாக இருந்தபோது கற்றுக்கொண்ட மொழியைப் பயன்படுத்தி, தங்களுடைய நாட்டுக்குக் குடிமாறி வந்திருப்பவர்களிடம் பிரசங்கிக்கிறார்கள்.