Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 40

‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்!

‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்!

“உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும் எந்நேரமும் நம் எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாகவும் இருங்கள்.”—1 கொ. 15:58.

பாட்டு 141 நல்லவர்களைத் தேடுவோம்

இந்தக் கட்டுரையில்... *

1. நாம் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?

நீங்கள் 1914-க்குப் பிறகு பிறந்தவரா? அப்படியென்றால், உங்கள் வாழ்நாள் முழுவதையும் ‘கடைசி நாட்களிலேயே’ கழித்திருப்பீர்கள். (2 தீ. 3:1) இந்தச் சமயத்தில் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்று இயேசு சொன்னாரோ, அவை எல்லாமே நடப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். போர்கள், பஞ்சங்கள், நிலநடுக்கங்கள், கொள்ளைநோய்கள் ஆகியவை அந்தச் சம்பவங்களில் அடங்குகின்றன. அதோடு, அக்கிரமம் அதிகமாவதும் யெகோவாவின் மக்கள் துன்புறுத்தப்படுவதும் அவற்றில் அடங்குகின்றன. (மத். 24:3, 7-9, 12; லூக். 21:10-12) அப்போஸ்தலன் பவுல் சொன்னதைப் போலவும் இன்று மக்கள் நடந்துகொள்கிறார்கள். (“ இன்றிருக்கிற மக்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது, ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம் என்பதில் யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்குத் துளிகூட சந்தேகம் இல்லை.—மீ. 4:1.

2. எந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்?

2 இப்போது நாம் ‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், 1914 கடந்துபோய் பல வருஷங்கள் உருண்டோடிவிட்டன. இந்த உலகத்துக்கு ரொம்பச் சீக்கிரத்தில் முடிவு வரப்போவதால், முக்கியமான சில கேள்விகளுக்கு நாம் பதில்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். (1) ‘கடைசி நாட்களின்’ முடிவில் என்னென்ன சம்பவங்கள் நடக்கும்? (2) அந்தச் சம்பவங்கள் நடப்பதற்காகக் காத்திருக்கும் சமயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்?

‘கடைசி நாட்களின்’ முடிவில் என்ன நடக்கும்?

3. ஒன்று தெசலோனிக்கேயர் 5:1-3-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தின்படி, உலகத் தலைவர்கள் என்ன அறிவிப்பைச் செய்வார்கள்?

3 ஒன்று தெசலோனிக்கேயர் 5:1-3-ஐ வாசியுங்கள். ‘யெகோவாவின் நாளை’ பற்றி பவுல் சொல்லியிருக்கிறார். இந்த வசனங்களில், யெகோவாவின் நாள் என்பது எதைக் குறிக்கிறது? “மகா பாபிலோன்” மீதான தாக்குதல் ஆரம்பிக்கும் சமயத்திலிருந்து, அதாவது பொய் மதங்களின் மீதான தாக்குதல் ஆரம்பிக்கும் சமயத்திலிருந்து, அர்மகெதோன் போர் முடியும் வரை உள்ள காலப்பகுதியை இது குறிக்கிறது. (வெளி. 16:14, 16; 17:5) “யெகோவாவின் நாள்” ஆரம்பிப்பதற்குக் கொஞ்சம் முன்பு, “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பை உலகத் தலைவர்கள் செய்வார்கள். சிலசமயங்களில், தேசங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காக உலகத் தலைவர்கள் இதேபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆனால், இதற்கும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் அறிவிப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. எப்படி? பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் அறிவிப்பு வெளியாகும்போது, உலகத் தலைவர்கள் இந்த உலகத்தைப் பாதுகாப்பான இடமாக மாற்றிவிட்டதாக மக்கள் நினைக்கலாம். ஆனால் அப்போது, “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பமாகும்; ‘திடீரென்று அழிவு வரும்’.—மத். 24:21.

தேசங்கள் வெளியிடுகிற “சமாதானம், பாதுகாப்பு!” என்ற பொய்யான அறிவிப்பைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள் (பாராக்கள் 3-6) *

4. (அ) “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பைப் பற்றிய என்னென்ன விஷயங்கள் நமக்குத் தெரியாது? (ஆ) என்ன விஷயம் நமக்கு ஏற்கெனவே தெரியும்?

4 “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பைப் பற்றிய சில விஷயங்கள் நமக்குத் தெரியும்; சில விஷயங்கள் தெரியாது. உலகத் தலைவர்கள் இந்த அறிவிப்பைச் செய்வதற்கு என்ன காரணம்? அது எப்படிச் செய்யப்படும்? ஒரே தடவை செய்யப்படும் ஒரு அறிவிப்பாக இருக்குமா அல்லது தொடர்ச்சியாகச் செய்யப்படும் பல அறிவிப்புகளாக இருக்குமா? இதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், ஒரு விஷயம் நமக்கு உறுதியாகத் தெரியும். உலகத் தலைவர்களால் இந்த உலகத்தில் நிச்சயம் சமாதானத்தைக் கொண்டுவர முடியாது. அதனால், அவர்கள் செய்யும் அறிவிப்பைக் கேட்டு நாம் ஏமாந்துவிடக் கூடாது. அதேசமயத்தில், அது எப்போது செய்யப்படுகிறது என்பதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், “யெகோவாவின் நாள்” ஆரம்பிக்கப்போகிறது என்பதற்கான அடையாளம் அதுதான்!

5. ‘யெகோவாவின் நாளுக்காக’ தயாராவது பற்றி 1 தெசலோனிக்கேயர் 5:4-6 என்ன சொல்கிறது?

5 ஒன்று தெசலோனிக்கேயர் 5:4-6-ஐ வாசியுங்கள். ‘யெகோவாவின் நாளுக்காக’ நாம் எப்படித் தயாராகலாம் என்பதைப் பற்றி பவுல் ஆலோசனை கொடுத்தார். ‘மற்றவர்களைப் போல் நாம் தூங்கிக்கொண்டிருக்காமல்,’ ‘விழிப்போடு’ இருக்க வேண்டும் என்று சொன்னார். அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் நடுநிலையோடு இருப்பதன் மூலம் நாம் விழிப்போடு இருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் “இந்த உலகத்தின் பாகமாக” ஆகிவிடுவோம். (யோவா. 15:19) கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் உலக சமாதானத்தைக் கொண்டுவர முடியும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும்!.

6. மற்றவர்கள் என்ன செய்ய நாம் உதவ வேண்டும், ஏன்?

6 நாம் விழிப்போடு இருந்தால் மட்டும் போதாது, மற்றவர்களும் விழிப்போடு இருக்க நாம் உதவ வேண்டும். அதாவது, சீக்கிரத்தில் நடக்கப்போகிற விஷயங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள நாம் உதவ வேண்டும். மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகு அவர்கள் யெகோவாவின் பக்கம் வருவது நடக்காத காரியம்! ஏனென்றால், அப்போது காலம் கடந்துபோயிருக்கும். அதனால், இப்போதே பிரசங்க வேலையைச் செய்வது ரொம்ப ரொம்ப முக்கியம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

சுறுசுறுப்பாக ஊழியம் செய்யுங்கள்

ஊழியம் செய்யும்போது, கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் இந்த உலகத்தைப் பாதுகாப்பான இடமாக மாற்றும் என்பதைக் காட்டுகிறோம் (பாராக்கள் 7-9)

7. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்?

7 “யெகோவாவின் நாள்” ஆரம்பிப்பதற்கு இன்னும் கொஞ்சக் காலம் மட்டும்தான் இருக்கிறது. அந்த நாள் வருவதற்குள், ஊழியத்தை நாம் படுசுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். “எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாக” நாம் இருக்க வேண்டும். (1 கொ. 15:58) இன்று நாம் இந்த வேலையைச் செய்வோம் என்று இயேசு அன்றே சொன்னார். கடைசி நாட்களில் நடக்கப்போகிற முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சொன்னபோது, “எல்லா தேசத்தாருக்கும் நல்ல செய்தி முதலாவது பிரசங்கிக்கப்பட வேண்டும்” என்று அவர் சொன்னார். (மாற். 13:4, 8, 10; மத். 24:14) ஒவ்வொரு தடவை நீங்கள் ஊழியத்துக்குப் போகும்போதும் இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதை நினைத்துப்பாருங்கள்.

8. ஊழிய வேலை எப்படி முன்னேறிவருகிறது?

8 ஒவ்வொரு வருஷமும் ஊழிய வேலை முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்தக் கடைசி நாட்களில், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் எப்படி அதிகமாகியிருக்கிறது என்பதை யோசித்துப்பாருங்கள். 1914-ல், 43 நாடுகளில் மொத்தம் 5,155 பிரஸ்தாபிகள் மட்டும்தான் இருந்தார்கள். ஆனால் இன்று, 240 நாடுகளில் கிட்டத்தட்ட 85,00,000 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். ஆனாலும், நம்முடைய வேலை முடிவுக்கு வந்துவிடவில்லை. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் பிரசங்கித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், மனிதர்களுடைய பிரச்சினைகளுக்கு அது மட்டும்தான் ஒரே தீர்வு!—சங். 145:11-13.

9. பிரசங்க வேலையை நாம் ஏன் விடாமல் செய்ய வேண்டும்?

9 ‘போதும்’ என்று யெகோவா சொல்லும்வரை பிரசங்க வேலையை நாம் செய்வோம். யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் மக்கள் தெரிந்துகொள்வதற்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது? (யோவா. 17:3) நமக்குத் தெரியாது! ஆனால் ஒரு விஷயம் நமக்குத் தெரியும். “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருப்பவர்களுக்கு மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்வரை ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது, நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளவும் யெகோவாவின் பக்கம் வரவும் வாய்ப்பு இருக்கிறது. (அப். 13:48) காலம் கடந்துபோவதற்குள் இப்படிப்பட்ட மக்களுக்கு நாம் உதவ வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்?

10. மக்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்க யெகோவா எப்படியெல்லாம் உதவுகிறார்?

10 மக்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்க நமக்குத் தேவைப்படுகிற எல்லாவற்றையும் யெகோவா தன்னுடைய அமைப்பின் மூலம் கொடுக்கிறார். வார நாட்களில் நடக்கும் கூட்டத்தை பற்றி யோசித்துப்பாருங்கள். ஒவ்வொரு வாரமும் அந்தக் கூட்டத்தில் நமக்குப் பயிற்சி கிடைக்கிறது. முதல் சந்திப்பிலும் மறுசந்திப்பிலும் எப்படிப் பேசுவது... பைபிள் படிப்புகளை எப்படி நடத்துவது... என்றெல்லாம் நாம் கற்றுக்கொள்கிறோம். அடுத்ததாக, கற்பிப்பதற்கான கருவிகளை பற்றி யோசித்துப்பாருங்கள். நமக்கு உதவுகிற பிரசுரங்களும் வீடியோக்களும் அதில் இருக்கின்றன. அந்தக் கருவிகள் . . .

  • பேச்சை ஆரம்பிப்பதற்கு உதவுகின்றன

  • ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் நல்ல செய்தியைச் சொல்வதற்கு உதவுகின்றன

  • பைபிளைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையை மக்களுக்குள் விதைக்க உதவுகின்றன

  • பைபிள் படிப்பு படிப்பவர்களுக்கு சத்தியத்தை நன்றாகச் சொல்லித்தருவதற்கு உதவுகின்றன

  • நம் வெப்சைட்டைப் பார்க்கும்படியும் ராஜ்ய மன்றத்துக்கு வரும்படியும் ஆர்வம் காட்டுபவர்களை அழைப்பதற்கு உதவுகின்றன

ஆனால், இந்தக் கருவிகளை வைத்திருந்தால் மட்டும் போதாது, அவற்றைப் பயன்படுத்தவும் வேண்டும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆர்வமுள்ள ஒருவரிடம் நல்ல செய்தியைச் சொல்லிவிட்டு ஒரு துண்டுப்பிரதியையோ ஒரு பிரசுரத்தையோ கொடுத்துவிட்டு வந்தால், நாம் மறுபடியும் அவரை போய் பார்க்கும்வரை அவரால் அதைப் படித்துக்கொண்டிருக்க முடியும். இப்படி, ஒவ்வொரு மாதமும் சுறுசுறுப்பாக ஊழியம் செய்வது நம்முடைய பொறுப்பு.

11. ஆன்லைன் பைபிள் படிப்புப் பாடங்கள் ஏன் தயாரிக்கப்பட்டிருக்கின்றன?

11 நம்முடைய வெப்சைட்டில் இருக்கிற ஆன்லைன் பைபிள் படிப்புப் பாடங்கள் (ஆங்கிலம்) என்ற அம்சத்தைப் பயன்படுத்தியும் யெகோவா சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கிறார். எதற்காக இவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன? உலகம் முழுவதும் இருக்கிற ஆயிரக்கணக்கான மக்கள், பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் இன்டர்நெட்டை அலசுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, நம் வெப்சைட்டில் இருக்கிற இந்தப் பாடங்கள் உதவியாக இருக்கும். நம்மோடு சேர்ந்து பைபிளைப் படிக்கத் தயங்குபவர்களிடமும் நாம் இந்தப் பாடங்களைப் பற்றிச் சொல்லலாம் அல்லது இந்தப் பாடங்களுக்கான லிங்க்கை அனுப்பலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

12. எந்தெந்த கேள்விகளுக்கு பைபிள் படிப்புப் பாடங்கள் பதில் தருகின்றன?

12 ஆன்லைன் பைபிள் படிப்புப் பாடங்களின் தலைப்புகள்: “பைபிளும் அதன் நூலாசிரியரும்,” “பைபிளின் முக்கிய கதாபாத்திரங்கள்,” மற்றும் “நம்பிக்கையூட்டும் பைபிள் செய்தி.” இந்தப் பாடங்கள் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் தருகின்றன:

  • பைபிள் நமக்கு எப்படிக் கைகொடுக்கும்?

  • யெகோவா, இயேசு மற்றும் தேவதூதர்கள் யார்?

  • மனிதர்களை கடவுள் ஏன் படைத்தார்?

  • கஷ்டங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஏன் இன்னும் முடிவு வரவில்லை?

இந்தக் கேள்விகளுக்கும் பதில் தருகின்றன:

  • கஷ்டங்களுக்கும் மரணத்துக்கும் யெகோவா எப்படி முடிவுகட்டுவார்?

  • இறந்துபோனவர்களை எப்படி உயிரோடு எழுப்புவார்?

  • மனித அரசாங்கங்களை அழித்துவிட்டு தன்னுடைய அரசாங்கத்தை எப்படிக் கொண்டுவருவார்?

13. பைபிள் படிப்பு நடத்துவதை ஆன்லைன் பாடங்கள் மாற்றீடு செய்கின்றனவா? விளக்குங்கள்.

13 பைபிள் படிப்பு நடத்துவதை மாற்றீடு செய்வதற்காக இந்த ஆன்லைன் பாடங்கள் தயாரிக்கப்படவில்லை. ஏனென்றால், மற்றவர்களைச் சீஷர்களாக்குகிற அருமையான வாய்ப்பை இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். பைபிள்மீது ஆர்வம் காட்டுபவர்கள், ஆன்லைன் பாடங்களைப் படிப்பார்கள் என்றும், அதில் இருக்கிற தகவல்கள் அவர்கள் மனதைத் தொடும் என்றும், பைபிளைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள் என்றும் நாம் நம்புகிறோம். அப்படிப்பட்டவர்கள் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்புகிறோம். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும், “எங்களோடு சேர்ந்து படியுங்கள்” என்ற ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த லிங்க்கை பயன்படுத்தி பைபிள் படிப்புக்கு விண்ணப்பிக்கும்படி அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் சராசரியாக 230-க்கும் அதிகமானவர்கள் நம்முடைய வெப்சைட் மூலம் பைபிள் படிப்புக்காக விண்ணப்பிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து பைபிளைப் படிப்பது ரொம்பவே முக்கியம்.

மற்றவர்களைச் சீஷர்களாக்குகிற முயற்சியை விட்டுவிடாதீர்கள்!

14. மத்தேயு 28:19, 20-ல் இயேசு கொடுத்திருக்கும் அறிவுரையின்படி, என்ன செய்ய நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும், ஏன்?

14 மத்தேயு 28:19, 20-ஐ வாசியுங்கள். நம்மோடு பைபிள் படிப்பவர்களை ‘சீஷர்களாக்கவும்,’ இயேசு “கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்கு” உதவவும் நம்மால் முடிந்த எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும். யெகோவாவின் பக்கம் வருவதும் அவருடைய அரசாங்கத்தை ஆதரிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? கற்றுக்கொள்ளும் விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தலாம். அதோடு, யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணிக்கவும் ஞானஸ்நானம் எடுக்கவும் நாம் அவர்களுக்கு உதவலாம். இப்படியெல்லாம் செய்யும்போதுதான் யெகோவாவின் நாளிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியும்.—1 பே. 3:21.

15. என்ன செய்வதற்கு நமக்கு நேரம் இல்லை, ஏன்?

15 நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், முடிவு வருவதற்கு இன்னும் கொஞ்சக் காலம் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது. அதனால், உண்மையிலேயே கிறிஸ்துவின் சீஷராவதற்கு விரும்பாத நபர்களுக்கு தொடர்ந்து பைபிள் படிப்பு நடத்த இது நேரம் அல்ல. (1 கொ. 9:26) நம்முடைய வேலை, மிகவும் அவசரமான ஒரு வேலை! காலம்கடந்து போவதற்குள், இன்னும் நிறைய பேருக்கு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் பங்குகொள்ளாதீர்கள்!

16. வெளிப்படுத்துதல் 18:2, 4, 5, 8 சொல்கிறபடி, நாம் என்ன செய்ய வேண்டும்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

16 வெளிப்படுத்துதல் 18:2, 4, 5, 8-ஐ வாசியுங்கள். தன்னை வணங்குகிறவர்களிடமிருந்து யெகோவா என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றி இந்த வசனங்கள் சொல்கின்றன. உண்மை கிறிஸ்தவர்களுக்கு மகா பாபிலோனோடு எந்தச் சம்பந்தமும் இருக்கக் கூடாது. நம்மோடு பைபிள் படிப்பு படிப்பவர்கள், சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு பொய் மதத்தில் உறுப்பினர்களாக இருந்திருக்கலாம். அந்த மத அமைப்பு நடத்திய நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்துகொண்டிருக்கலாம், அதனோடு சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்திருக்கலாம், அல்லது அப்படிப்பட்ட அமைப்புகளுக்குக் காணிக்கைகளையும் கொடுத்திருக்கலாம். ஆனால், ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆவதற்கு முன்பு, பொய் மதத்தோடு தங்களுக்கு இருந்த எல்லா தொடர்பையும் அவர்கள் துண்டித்திருக்க வேண்டும். இதை அவர்கள் எப்படிச் செய்யலாம்? தாங்கள் இனிமேலும் அவற்றின் உறுப்பினர்களாக இல்லை என்பதைத் தெரிவிக்கிற ஒரு கடிதத்தை அனுப்பலாம் அல்லது தொடர்பைத் துண்டித்துக்கொள்ள தாங்கள் விரும்புவதை வேறு ஏதாவது வழிகளில் காட்டலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

17. எப்படிப்பட்ட வேலையை ஒரு கிறிஸ்தவர் தவிர்க்க வேண்டும், ஏன்?

17 மகா பாபிலோனோடு சம்பந்தப்பட்ட எந்த வேலையையும் உண்மை கிறிஸ்தவர்கள் செய்யக் கூடாது. (2 கொ. 6:14-17) உதாரணத்துக்கு, ஒரு கிறிஸ்தவர், சர்ச்சின் பணியாளராக இருக்கக் கூடாது. பொய் மத வழிபாட்டை ஆதரிக்கிற கட்டிடங்களில் ஏற்படுகிற அவசர நிலை சம்பந்தப்பட்ட வேலைகளை எடுத்துச் செய்கிற கம்பெனியில் ஒரு கிறிஸ்தவர் பணியாளராக இருந்தால் என்ன செய்வது? அந்தக் கட்டிடங்களில் அவசர நிலை ஏற்பட்டால் என்ன செய்வதென்று அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு, அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிற கட்டுரை அவருக்கு உதவியாக இருக்கும். சொந்தத் தொழில் செய்யும் கிறிஸ்தவர்கள், மகா பாபிலோனோடு சம்பந்தப்பட்ட எந்த வேலைகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது; காண்ட்ராக்ட் வேலைகளையும் செய்யக் கூடாது. இந்த விஷயத்தில் நாம் ஏன் இவ்வளவு உறுதியாக இருக்கிறோம்? ஏனென்றால், கடவுளுடைய பார்வையில் அசுத்தமாக இருக்கும் இந்தப் பொய் மத அமைப்புகளின் வேலைகளிலும் அவற்றின் பாவங்களிலும் பங்கெடுக்க நாம் ஒருபோதும் விரும்புவதில்லை!—ஏசா. 52:11. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

18. வேலையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஒரு சகோதரர் எப்படி பைபிள் நியமங்களுக்குக் கட்டுப்பட்டார்?

18 கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைக் கவனியுங்கள். சொந்தத் தொழில் செய்துகொண்டிருந்த ஒரு மூப்பரிடம், உள்ளூர் சர்ச்சில் ஒரு சின்ன மரவேலையைச் செய்து கொடுக்கும்படி ஒருவர் கேட்டிருக்கிறார். நம்முடைய சகோதரர் சர்ச்சுகளில் எந்த வேலையும் செய்ய மாட்டார் என்பது அந்த நபருக்குத் தெரியும். இருந்தாலும், மரவேலை செய்ய வேறு யாரும் கிடைக்காததால் நம் சகோதரரை அவர் கட்டாயப்படுத்தியிருக்கிறார். ஆனால், நம் சகோதரர் பைபிள் நியமங்களுக்குக் கட்டுப்பட்டு, அந்த வேலையைச் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாராம். அடுத்த வாரம், உள்ளூர் செய்தித்தாளில் ஒரு புகைப்படம் வந்திருந்தது. மரவேலை செய்யும் ஒருவர், சர்ச்சில் சிலுவையை மாட்டிவிடுகிற படம்தான் அது! ஒருவேளை நம்முடைய சகோதரர் அந்த வேலையைச் செய்ய ஒத்துக்கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவருடைய புகைப்படம் செய்தித்தாளில் வந்திருக்கும்! சக கிறிஸ்தவர்கள் மத்தியில் அவருக்கு இருந்த நல்ல பெயர் என்ன ஆகியிருக்கும்? யெகோவாவோடு அவருக்கு இருந்த பந்தத்துக்கு என்ன ஆகியிருக்கும்?

பாடங்கள்

19-20. (அ) நாம் இதுவரை என்ன கற்றுக்கொண்டோம்? (ஆ) இன்னும் எதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்?

19 பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பை உலகத் தலைவர்கள் சீக்கிரத்தில் செய்வார்கள். உலகமெனும் நாடக மேடையில் அடுத்து அரங்கேறப்போகிற முக்கியமான காட்சி அதுதான்! ஆனால், உண்மையான, நிலையான சமாதானத்தை தேசங்களால் கொண்டுவர முடியாது என்பதை யெகோவா நமக்குச் சொல்லியிருக்கிறார். அந்த அறிவிப்பு வருவதற்கும், அதைத் தொடர்ந்து வரவிருக்கும் திடீர் அழிவுக்கும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் படுசுறுசுறுப்பாக ஊழியம் செய்ய வேண்டும் என்றும் மற்றவர்களைச் சீஷர்களாக்க கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்றும் யெகோவா எதிர்பார்க்கிறார். அதேசமயத்தில், பொய் மதங்களோடு நாம் எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ளக் கூடாது. அப்படியென்றால், மகா பாபிலோனின் பாகமாக இருக்கிற எந்த அமைப்பிலும் நாம் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது. பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட எந்த வேலையையும் செய்யக் கூடாது.

20 இந்த ‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில், “இதோ! சமாதானம் பாதுகாப்பு” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வேறுசில சம்பவங்களும் நடக்கும். நம்மிடமிருந்து யெகோவா வேறுசில விஷயங்களையும் எதிர்பார்க்கிறார். அவை என்ன? சீக்கிரத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைச் சந்திக்க நாம் எப்படித் தயாராகலாம்? பதில், அடுத்த கட்டுரையில்!

பாட்டு 100 நாம் யெகோவாவின் படைவீரர்

^ பாரா. 5 ‘சமாதானத்தையும் பாதுகாப்பையும்’ நிலைநாட்டிவிட்டதாக உலகத் தலைவர்கள் சீக்கிரத்தில் ஓர் அறிவிப்பைச் செய்வார்கள். அதுதான் மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கான அடையாளம்! அந்த அறிவிப்பு வருவதற்குள் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

^ பாரா. 3 உதாரணத்துக்கு, ‘சர்வதேச அளவில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துவருவதாக’ ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய வெப்சைட்டில் சொல்லிக்கொள்கிறது.

^ பாரா. 6 இதே பத்திரிகையில் இருக்கிற, “நியாயத்தீர்ப்பு என்ற புயல்!—போதுமான எச்சரிப்பைக் கடவுள் கொடுக்கிறாரா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 10 கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒவ்வொரு கருவியையும் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ள, அக்டோபர் 2018 காவற்கோபுரத்தில் வெளிவந்த “சத்தியத்தைக் கற்றுக்கொடுங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 11 தற்போது, ஆங்கிலம் மற்றும் போர்ச்சுகீஸ் மொழிகளில் கிடைக்கிறது. சீக்கிரத்தில் வேறுசில மொழிகளிலும் கிடைக்கும்.

^ பாரா. 16 பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட சில அமைப்புகள், ‘இளைஞர்கள் முகாம்களை’ (youth camps) நடத்துகின்றன. அல்லது, பொழுதுபோக்குக்காக சில கட்டிடங்களைக் கட்டுகின்றன; வேறுசில ஏற்பாடுகளையும் செய்கின்றன. இதுபோன்ற அமைப்புகளிலும் நாம் உறுப்பினர்களாக இருக்க முடியாது. உதாரணத்துக்கு, YMCA என்ற அமைப்பில் நாம் உறுப்பினராக இருக்க முடியுமா? அதைப் பற்றித் தெரிந்துகொள்ள, ஜனவரி 1, 1979 ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த “வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள். YWCA என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கும் விஷயத்துக்கும் இது பொருந்துகிறது. இதுபோன்ற அமைப்புகளின் உள்ளூர் நிறுவனங்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கும் மதத்துக்கும் அவ்வளவாக சம்பந்தம் இல்லை என்று சொல்லிக்கொள்ளலாம். இருந்தாலும், அவற்றின் ஆரம்பமும் குறிக்கோளும் பொய் மதங்களோடு சம்பந்தப்பட்டவைதான்!

^ பாரா. 17 மத அமைப்புகளோடு சம்பந்தப்பட்ட வேலைகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, ஏப்ரல் 15, 1999 காவற்கோபுரத்தில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள்.

^ பாரா. 83 படங்களின் விளக்கம்: காஃபி குடிக்கும் ஒரு கடையில், “சமாதானம் பாதுகாப்பு” என்ற ஓர் அறிவிப்பு, டிவியில் முக்கியச் செய்தியாக வருகிறது. அங்கிருக்கும் எல்லாரும் அதைக் கவனிக்கிறார்கள். ஊழியத்தை முடித்துவிட்டு காஃபி குடிக்கப்போயிருக்கும் ஒரு கிறிஸ்தவத் தம்பதியும் அதைப் பார்க்கிறார்கள். ஆனால், அதை நம்பி அவர்கள் ஏமாந்துபோவதில்லை.