Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 44

நட்பெனும் பாலம்​—முடிவு வருவதற்கு முன்பே அதைக் கட்டுங்கள்!

நட்பெனும் பாலம்​—முடிவு வருவதற்கு முன்பே அதைக் கட்டுங்கள்!

“உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்.” —நீதி. 17:17.

பாட்டு 53 ஐக்கியமாய் உழைப்போம்

இந்தக் கட்டுரையில்... *

‘மிகுந்த உபத்திரவத்தின்போது,’ தோள் கொடுக்கும் தோழர்கள் நமக்குத் தேவை (பாரா 2) *

1-2. ஒன்று பேதுரு 4:7, 8-ன்படி, கஷ்டமான சூழ்நிலையைச் சமாளிக்க எது நமக்கு உதவும்?

‘கடைசி நாட்களின்’ முடிவு நெருங்க நெருங்க, கஷ்டங்கள் நம்மை இடியாய்த் தாக்கலாம். (2 தீ. 3:1) உதாரணத்துக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கிற ஒரு நாட்டில் என்ன நடந்தது என்று கவனியுங்கள். தேர்தல் முடிந்த பிறகு, அங்கே வன்முறை தலைவிரித்தாடியது. அதனால், அந்தப் பகுதியிலிருந்த சகோதர சகோதரிகளால் ஆறு மாதங்களுக்கும் மேல் வெளியே சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இந்தக் கஷ்டமான சூழ்நிலையை அவர்கள் எப்படித் தாக்குப்பிடித்தார்கள்? சிலர், பாதுகாப்பான இடத்தில் குடியிருந்த சகோதர சகோதரிகளின் வீடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். அதைப் பற்றி ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “கஷ்டமான ஒரு சூழ்நிலையில, என்னை சுத்தியும் நண்பர்கள் இருந்தத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் தைரியப்படுத்திக்கிட்டோம்.”

2 ‘மிகுந்த உபத்திரவம்’ ஆரம்பிக்கும்போது, தோள் கொடுக்கிற தோழர்கள் நமக்கு இருந்தால், நாம் ரொம்ப சந்தோஷப்படுவோம். (வெளி. 7:14) அதனால், நட்பெனும் பாலத்தை இப்போதே கட்டுவது முக்கியம். (1 பேதுரு 4:7, 8-ஐ வாசியுங்கள்.) அதற்கு, எரேமியாவின் வாழ்க்கை அனுபவம் நமக்கு உதவும். எருசலேம் அழிவதற்கு முன்பு இருந்த கஷ்டமான காலகட்டத்தைச் சமாளிக்க அவருடைய நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) எரேமியாவைப் போல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.

எரேமியாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

3. (அ) யாரிடமும் ஒட்டாமல் ஒதுங்கி இருப்பதற்கான என்ன சூழ்நிலை எரேமியாவுக்கு இருந்தது? (ஆ) தன்னுடைய செயலர் பாருக்கிடம் எரேமியா என்ன சொன்னார், அதனால் என்ன ஆனது?

3 எரேமியாவின் சொந்த ஊரான ஆனதோத்தில் வாழ்ந்த அவருடைய அக்கம்பக்கத்தாரும் சொந்தக்காரர்களும் மற்ற ஜனங்களும் யெகோவாவுக்கு உண்மையில்லாதவர்களாக இருந்தார்கள். குறைந்தபட்சம் 40 வருஷங்களுக்கு அவர்கள் நடுவில்தான் அவர் வாழ்ந்துவந்தார். (எரே. 11:21; 12:6) அதற்காக, யாருடனும் ஒட்டாமல் அவர் ஒதுங்கியே இருக்கவில்லை. உண்மையுள்ள அவருடைய செயலரான பாருக்கிடம் தன்னுடைய உணர்ச்சிகளைக் கொட்டினார்; ஒரு விதத்தில் நம்மிடமும் கொட்டியிருக்கிறார். (எரே. 8:21; 9:1; 20:14-18; 45:1) எரேமியாவின் வாழ்க்கை அனுபவத்தை பாருக் எழுதிய அந்தக் காலப்பகுதியில், அவர்களுக்கு இடையிலிருந்த நட்பெனும் பாலம் எவ்வளவு வலுவடைந்திருக்கும்! ஒருவர்மேல் ஒருவர் வைத்திருந்த மதிப்பு மரியாதையும் கூடியிருக்கும்!—எரே. 20:1, 2; 26:7-11.

4. எரேமியாவிடம் யெகோவா என்ன செய்யச் சொன்னார், அதைச் செய்தபோது எரேமியாவுக்கும் பாருக்குக்கும் இடையிலிருந்த நட்பெனும் பாலம் எப்படி உறுதியானது?

4 எருசலேமுக்கு நடக்கப்போவதைப் பற்றி, பல வருஷங்களாக இஸ்ரவேலர்களிடம் எரேமியா அஞ்சா நெஞ்சத்தோடு சொன்னார். (எரே. 25:3) மக்கள் மனம் திருந்த வேண்டும் என்பதற்காக யெகோவா இன்னொரு முயற்சியையும் எடுத்தார்; அதாவது, தான் கொடுத்த எச்சரிக்கைகளை ஒரு சுருளில் எழுதும்படி எரேமியாவிடம் சொன்னார். (எரே. 36:1-4) எரேமியாவும் பாருக்கும் தோளோடு தோள் சேர்ந்து கடவுள் கொடுத்த இந்த வேலையைச் செய்தார்கள். அதைச் செய்து முடிக்க நிறைய மாதங்கள் ஆகியிருக்கலாம். விசுவாசத்தைப் பலப்படுத்துகிற ஏராளமான விஷயங்களை அந்தச் சமயத்தில் அவர்கள் பேசியிருப்பார்கள்.

5. தான் எரேமியாவின் நெருக்கமான நண்பர் என்பதை பாருக் எப்படி நிரூபித்தார்?

5 இப்போது, சுருள் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது! அதிலிருந்த விஷயங்களை மக்களிடம் வாசித்துக்காட்ட தன் நண்பன் பாருக்கை எரேமியா நம்பியிருக்க வேண்டியிருந்தது. (எரே. 36:5, 6) அப்போது பாருக் என்ன செய்தார்? ஆபத்தான அந்த வேலையைத் தைரியமாகச் செய்தார்! ஆலயப் பிரகாரத்துக்குள் போய் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை பாருக் தைரியமாகச் செய்துமுடித்ததைப் பார்த்து எரேமியா பெருமைப்பட்டிருப்பார், இல்லையா? (எரே. 36:8-10) பாருக் செய்ததை யூதாவின் அதிகாரிகள் கேள்விப்பட்டபோது, அந்தச் சுருளில் எழுதப்பட்டிருந்ததை அவர்களிடமும் சத்தமாக வாசித்துக் காட்டும்படி பாருக்கிடம் கேட்டார்கள். (எரே. 36:14, 15) எரேமியா சொன்னதை யோயாக்கீம் ராஜாவிடம் சொல்வதென்று அந்த அதிகாரிகள் முடிவு செய்தார்கள். அதேசமயத்தில், “நீயும் எரேமியாவும் போய் ஒளிந்துகொள்ளுங்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்று பாருக்கிடம் அக்கறையோடு சொன்னார்கள். (எரே. 36:16-19) அது ஒரு நல்ல அறிவுரை!

6. எதிர்ப்பலையைச் சந்தித்தபோது எரேமியாவும் பாருக்கும் என்ன செய்தார்கள்?

6 எரேமியா எழுதிய விஷயங்களைக் கேட்டவுடன் யோயாக்கீம் ராஜாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அந்தச் சுருளை அவர் சுட்டெரித்தார், எரேமியாவையும் பாருக்கையும் கைது செய்யும்படி கட்டளையிட்டார். எரேமியா பயந்துவிட்டாரா? இல்லை! இன்னொரு சுருளை எடுத்து பாருக்கிடம் கொடுத்தார். யெகோவாவின் செய்தியை எரேமியா சொல்லச் சொல்ல பாருக் அதை மறுபடியும் அந்தச் சுருளில் எழுதினார். “யூதாவின் ராஜா யோயாக்கீம் எரித்த சுருளில் இருந்த எல்லா வார்த்தைகளையும்” அவர் எழுதினார்.—எரே. 36:26-28, 32.

7. எரேமியாவும் பாருக்கும் ஒன்றுசேர்ந்து வேலை செய்தபோது, அவர்களுக்கு இடையில் என்ன நடந்திருக்கலாம்?

7 ஒன்றுசேர்ந்து சோதனைகளை அனுபவிப்பவர்களுக்கு இடையில் பெரும்பாலும் நெருக்கமான பந்தம் ஏற்படுகிறது. அப்படியென்றால், பொல்லாத ராஜாவான யோயாக்கீம் எரித்துப்போட்ட சுருளுக்குப் பதிலாக வேறொரு சுருளை எழுதிய சமயத்தில், எரேமியாவும் பாருக்கும் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்துகொண்டிருப்பார்கள், இல்லையா? உத்தம புருஷர்களாகிய இவர்கள் இரண்டு பேரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

மனம்திறந்து பேசுங்கள்

8. நெருக்கமான நட்புக்கு எது தடையாக இருக்கலாம், ஆனாலும் ஏன் முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது?

8 ஏற்கெனவே யாராவது உங்களைப் புண்படுத்தியிருந்தால், மற்றவர்களிடம் மனம்திறந்து பேசுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். (நீதி. 18:19, 24) அல்லது நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளும் அளவுக்கு நேரமோ சக்தியோ இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நாம் முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது! சோதனைக் காலங்களில் சகோதரர்கள் நமக்குத் தோள் கொடுக்க வேண்டுமென்றால், இப்போதே அவர்களோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு முக்கியமான வழி, மனம்திறந்து பேசுவது!—1 பே. 1:22.

9. (அ) தன்னுடைய நண்பர்கள்மீது நம்பிக்கை இருந்ததை இயேசு எப்படிக் காட்டினார்? (ஆ) மற்றவர்களோடு இருக்கிற நட்பு இன்னும் பலமாவதற்கு மனம்திறந்து பேசுவது எப்படி உதவும்? ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

9 இப்போது இயேசுவைப் பற்றிப் பார்க்கலாம். தன்னுடைய நண்பர்களிடம் வெளிப்படையாகப் பேசியதன் மூலம் அவர்கள்மேல் தனக்கு நம்பிக்கை இருந்ததை அவர் காட்டினார். (யோவா. 15:15) இயேசுவைப் போலவே நாமும் நம்முடைய சந்தோஷங்கள்... கவலைகள்... ஏமாற்றங்கள்... ஆகியவற்றை நம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். மற்றவர்கள் உங்களிடம் பேசும்போது கவனமாகக் கேளுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு இருப்பதைப் போன்ற எண்ணங்கள்... உணர்வுகள்... இலக்குகள்... உங்களுக்கும் இருப்பது தெரியவரும். 29 வயதான ஸின்டி என்ற சகோதரியைப் பற்றி கவனிக்கலாம். 67 வயதான மேரி லூயிஸ் என்ற பயனியர் சகோதரியோடு அவர் நண்பரானார். ஒவ்வொரு வியாழக்கிழமை காலையிலும் இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக ஊழியம் செய்தார்கள். அப்போது இரண்டு பேரும் நிறைய விஷயங்களை மனம்திறந்து பேசுவார்கள். “என்னோட நண்பர்கள்கிட்ட முக்கியமான விஷயங்கள பத்தி பேசுவேன். அவங்கள பத்தி தெரிஞ்சுக்குறதுக்கும், அவங்கள நல்லா புரிஞ்சுக்குறதுக்கும் இது உதவியா இருக்கு” என்று ஸின்டி சொல்கிறார். மனம்திறந்து பேசும்போது நண்பர்களுக்கு இடையில் நெருக்கமான பந்தம் ஏற்படுகிறது. ஸின்டியைப் போலவே மற்றவர்களிடம் மனம்திறந்து பேசுவதற்கு முன்முயற்சி எடுத்தால், அவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கிற நட்பெனும் பாலம் வலுவடையும்.—நீதி. 27:9.

தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்யுங்கள்

நல்ல நண்பர்கள் ஊழியத்தில் ஒன்றுசேர்ந்து உழைப்பார்கள் (பாரா 10)

10. சகோதர சகோதரிகளோடு தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்யும்போது, நீதிமொழிகள் 27:17 சொல்கிறபடி என்ன பலன் கிடைக்கலாம்?

10 எரேமியாவையும் பாருக்கையும் போல இன்று நாமும் நம் சகோதர சகோதரிகளோடு ஒன்றுசேர்ந்து வேலை செய்யும்போது, அவர்களுடைய தங்கமான குணங்களைப் பார்க்கிறோம். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம், அவர்களிடம் நெருக்கமாகிறோம். (நீதிமொழிகள் 27:17-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, நீங்களும் உங்கள் நண்பரும் ஊழியத்துக்குப் போவதாக வைத்துக்கொள்ளுங்கள். தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி உங்கள் நண்பர் தைரியமாக வீட்டுக்காரரிடம் சொல்கிறார் அல்லது யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் முழுநம்பிக்கையோடு மனதிலிருந்து பேசுகிறார். இப்போது, உங்கள் நண்பர்மீது இருக்கும் பிரியம் இன்னும் அதிகமாகும், இல்லையா?

11-12. நண்பர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது நட்பெனும் பாலத்தைப் பலப்படுத்த முடியும் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

11 ஊழியத்தில் ஒன்றுசேர்ந்து உழைப்பது நட்பெனும் பாலத்தைப் பலப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள இரண்டு அனுபவங்களைப் பார்க்கலாம். அதிகமாக ஊழியம் செய்யப்படாத ஒரு இடத்துக்குப் போய் ஊழியம் செய்வதற்கு, 23 வயதான ஆடலீன் என்ற சகோதரி, தன்னுடைய தோழி காண்டிஸைக் கூப்பிட்டார். “ஊழியத்த ரொம்ப ஆர்வமா, நல்லா அனுபவிச்சு செய்யணும்னு ஆசப்பட்டோம்” என்று ஆடலீன் சொல்கிறார். “யெகோவாவுக்கு இன்னும் நிறைய செய்றதுக்கு எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஒரு உந்துதல் தேவைப்பட்டுச்சு” என்றும் அவர் சொல்கிறார். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஊழியம் செய்ததால் என்ன பலன் கிடைத்தது? “ஊழியம் செஞ்சது எங்களுக்கு எப்படி இருந்துச்சு... நாங்க மக்கள்கிட்ட பேசுன விஷயங்கள்ல எது எங்க மனச தொட்டுச்சு... ஊழியத்துல யெகோவாவோட வழிநடத்துதல் இருந்தத நாங்க எப்படி உணர்ந்தோம்... இத பத்தியெல்லாம் ஒவ்வொரு நாள் கடைசியிலயும் நாங்க பேசிக்கிட்டோம். இப்படி பேசிக்கிட்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒருத்தர பத்தி ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சுக்கிட்டோம்” என்று ஆடலீன் சொல்கிறார்.

12 இப்போது, கல்யாணமாகாத இரண்டு சகோதரிகளான லைலா மற்றும் மரியானாவின் அனுபவத்தைப் பார்க்கலாம். பிரான்சைச் சேர்ந்த இவர்கள், மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரமான ஜன நெருக்கடி நிறைந்த பங்குய் என்ற நகரத்தில் ஐந்து வாரங்கள் ஊழியம் செய்வதற்காகப் போனார்கள். அதைப் பற்றி லைலா இப்படிச் சொல்கிறார்: “மரியானாவும் நானும் சில கஷ்டங்கள சந்திக்க வேண்டியிருந்துச்சு. ஆனா, நாங்க ஒருத்தருக்கொருத்தர் நல்லா பேசிக்கிட்டோம், உண்மையான அன்ப காட்டுனோம். அதனால, எங்களுக்குள்ள இருந்த நட்பு பலமாச்சு. புது இடத்துக்கு தகுந்த மாதிரி மரியானா தன்னை மாத்திக்கிட்டா, அங்கிருந்த ஜனங்ககிட்ட அன்பா நடந்துகிட்டா, ஊழியத்த ஆர்வமா செஞ்சா. இதையெல்லாம் பார்த்தப்போ, அவமேல இருந்த மதிப்பு மரியாத இன்னும் அதிகமாயிடுச்சு.” வெளிநாட்டுக்குப் போய் ஊழியம் செய்ய முடியவில்லை என்றாலும், உங்களுடைய ஊழியப் பகுதியிலேயே இப்படிப்பட்ட பலன்களை அனுபவிக்கலாம்! ஒரு சகோதரரோடு அல்லது சகோதரியோடு நீங்கள் ஊழியம் செய்யும் ஒவ்வொரு தடவையும், ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ளவும், நட்பெனும் பாலத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் உங்களால் முடியும்.

நல்லதைப் பாருங்கள், மன்னியுங்கள்

13. நண்பர்களோடு சேர்ந்து வேலை செய்யும்போது சிலசமயங்களில் என்ன நடக்கலாம்?

13 நண்பர்களோடு சேர்ந்து வேலை செய்யும்போது, சிலசமயங்களில், அவர்களிடம் இருக்கிற நிறைகள் மட்டுமல்ல குறைகளும் நம் கண்களில் படும். அப்படியென்றால், அவர்களுக்கும் நமக்கும் இடையில் இருக்கிற நட்பெனும் பாலத்தில் விரிசல் ஏற்படாமல் எப்படிப் பார்த்துக்கொள்வது? எரேமியாவின் அனுபவத்தை மறுபடியும் யோசித்துப்பாருங்கள். மற்றவர்களுடைய குறைகளைப் பார்க்காமல் அவர்களுடைய நிறைகளைப் பார்க்க எது அவருக்கு உதவியது?

14. யெகோவாவைப் பற்றி எரேமியா என்ன தெரிந்துகொண்டார், அது அவருக்கு எப்படி உதவியது?

14 பைபிளில் இருக்கிற எரேமியா புத்தகத்தை எரேமியாதான் எழுதினார். 1 ராஜாக்கள், 2 ராஜாக்கள் புத்தகங்களையும் அவர் எழுதியிருக்கலாம். இந்தப் புத்தகங்களை எழுதியபோது, பாவ இயல்புள்ள மனிதர்கள்மீது யெகோவா எவ்வளவு கருணை காட்டுகிறார் என்பதை எரேமியா நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார். உதாரணத்துக்கு, ஆகாப் ராஜாவுக்கு நடந்த விஷயம் எரேமியாவுக்குத் தெரிந்திருந்தது. ஆகாப் மனம் திருந்தியதால், அவருடைய வம்சத்தை அவருடைய வாழ்நாளில் யெகோவா அழிக்கவில்லை. (1 ரா. 21:27-29) மனாசேக்கு நடந்ததைப் பற்றியும் எரேமியா யோசித்துப்பார்த்திருப்பார். ஆகாபைவிட ரொம்பவே யெகோவாவின் மனதைக் காயப்படுத்திய மனாசே மனம் திருந்தியபோது, யெகோவா அவரை மன்னித்தார் (2 ரா. 21:16, 17; 2 நா. 33:10-13) இந்தச் சம்பவங்கள், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடைய விஷயத்தில் யெகோவாவைப் போலவே பொறுமையோடும் கருணையோடும் நடந்துகொள்ள எரேமியாவுக்கு உதவின.—சங். 103:8, 9.

15. பாருக்கின் கவனம் திசைதிரும்பியபோது எரேமியா எப்படி யெகோவாவைப் போலவே பொறுமையோடு நடந்துகொண்டார்?

15 தன்னுடைய நியமிப்பிலிருந்து பாருக்கின் கவனம் தற்காலிகமாகத் திசைதிரும்பியபோது, எரேமியா எப்படி நடந்துகொண்டார்? தன்னுடைய நண்பனான பாருக்மீது வைத்திருந்த நம்பிக்கையை எரேமியா உடனடியாக இழந்துவிடவில்லை. அதற்குப் பதிலாக, கடவுள் கொடுத்த அன்பான, வெளிப்படையான தகவலை பாருக்கிடம் சொன்னார். (எரே. 45:1-5) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்?

நல்ல நண்பர்கள் தாராளமாக மன்னிப்பார்கள் (பாரா 16)

16. நீதிமொழிகள் 17:9-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல், நட்பெனும் பாலத்தைப் பலப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

16 நம் சகோதர சகோதரிகள் எந்தத் தவறும் செய்ய மாட்டார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயம் கிடையாது. அதனால், நட்பெனும் பாலத்தைக் கட்டிய பிறகு, அதை நன்றாகப் பராமரிப்பது முக்கியம். ஒருவேளை நம்முடைய நண்பர் தவறு செய்துவிட்டால், பைபிளிலிருந்து அவருக்குத் தேவையான ஆலோசனையை அன்பாகவும் வெளிப்படையாகவும் சொல்ல வேண்டியிருக்கலாம். (சங். 141:5) ஒருவேளை அவர் நம்மைப் புண்படுத்திவிட்டால், நாம் மன்னிக்க வேண்டும். அப்படி மன்னித்த பிறகு, அவரிடமோ மற்றவர்களிடமோ அதைப் பற்றிப் பேசுவதன் மூலம் நடந்ததை மறுபடியும் கிளறக் கூடாது. (நீதிமொழிகள் 17:9-ஐ வாசியுங்கள்.) இந்தக் கஷ்டமான கடைசிக் காலத்தில், சகோதர சகோதரிகளிடம் இருக்கும் குறைகளைப் பார்க்காமல் அவர்களுடைய நிறைகளைப் பார்ப்பது ரொம்ப முக்கியம்! இப்படிச் செய்யும்போதுதான் நட்பெனும் பாலத்தைப் பலப்படுத்த முடியும். இதை இப்போதே செய்வது அவசியம். ஏனென்றால், மிகுந்த உபத்திரவத்தின்போது நமக்குத் தோள் கொடுக்கும் தோழர்கள் தேவை!

மாறாத அன்பைக் காட்டுங்கள்

17. எரேமியா எப்படிக் கஷ்ட காலங்களில் உதவுகிற உண்மையான நண்பனாக இருந்தார்?

17 கஷ்ட காலங்களில் உதவுகிற உண்மையான நண்பனாக எரேமியா இருந்தார். ஒரு தடவை, சேரும் சகதியுமாக இருந்த ஆழமான கிணற்றுக்குள் அவர் போடப்பட்டார். அப்போது, அரண்மனை அதிகாரியான எபெத்மெலேக் அவரைக் காப்பாற்றினார். ஆனால், மற்ற அதிகாரிகள் தனக்குக் கெடுதல் செய்துவிடுவார்களோ என்று எபெத்மெலேக் பயந்தார். எரேமியா இதைக் கேள்விப்பட்டபோது, தன்னுடைய நண்பன் எப்படியாவது சமாளித்துவிடுவான் என்று நினைத்துக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. காவலர் முற்றத்தில் அடைப்பட்டுக் கிடந்தபோதிலும், யெகோவாவுடைய ஆறுதலான செய்தியை எபெத்மெலேக்கிடம் சொன்னதன் மூலம் தன்னால் முடிந்ததை எரேமியா செய்தார்.—எரே. 38:7-13; 39:15-18.

நல்ல நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவுவார்கள் (பாரா 18)

18. நீதிமொழிகள் 17:17 சொல்வதுபோல், உங்கள் நண்பர் கஷ்டத்தில் இருக்கும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

18 இன்று, நம் சகோதர சகோதரிகளுக்கு நிறைய கஷ்டங்கள் வருகின்றன. உதாரணத்துக்கு, இயற்கைப் பேரழிவுகளாலோ மனிதர்களால் ஏற்படுத்தப்படுகிற அழிவுகளாலோ நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி நடக்கும்போது, பாதிக்கப்பட்ட நம் நண்பர்களை சிலரால் தங்களுடைய வீட்டில் தங்கவைக்க முடிகிறது. வேறு சிலரால் பண உதவி செய்ய முடிகிறது. ஆனால், நம் எல்லாராலும் செய்ய முடிந்த ஒரு உதவி இருக்கிறது. நம் சகோதர சகோதரிகளுக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்வதுதான் அது! ஒருவேளை, யாராவது ஒரு சகோதரரோ சகோதரியோ உள்ளம் உடைந்துபோயிருக்கலாம். அப்போது, என்ன சொல்வது என்ன செய்வது என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனாலும், நம் எல்லாராலும் உதவிக் கரம் நீட்ட முடியும். எப்படி? அந்தச் சகோதரரோடு அல்லது சகோதரியோடு நேரம் செலவிடலாம். அவர் பேசும்போது, கரிசனையோடு காதுகொடுத்துக் கேட்கலாம். நம் மனதைத் தொட்ட ஆறுதலான வசனங்களை அவர்களுக்குக் காட்டலாம். (ஏசா. 50:4) உதவி தேவைப்படுகிற சமயத்தில் நீங்கள் அவர்களோடு இருப்பதே அவர்களுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும்!நீதிமொழிகள் 17:17-ஐ வாசியுங்கள்.

19. இப்போது கட்டுகிற நட்பெனும் பலமான பாலம் எப்படி எதிர்காலத்திலும் நமக்குக் கைகொடுக்கும்?

19 இப்போதே நம் சகோதர சகோதரிகளோடு நட்பெனும் பாலத்தைக் கட்டுவதற்கும், அதைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால், பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதன் மூலம் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்த நம் எதிரிகள் முயற்சி செய்வார்கள். நாம் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கிற நம்பிக்கையையும், ஒருவருக்கு ஒருவர் காட்டுகிற ஆதரவையும் கெடுக்க அவர்கள் முயற்சி செய்வார்கள். ஆனால், அவர்களுடைய திட்டம் பலிக்காது. நம்மை இறுக்கமாகக் கட்டியிருக்கும் அன்பெனும் கயிற்றை அவர்களால் அறுக்க முடியாது. நமக்குள் இருக்கிற நட்பெனும் பாலத்தை அவர்களால் தகர்க்க முடியாது. நட்பெனும் இந்தப் பாலம் இந்த உலகத்தின் முடிவுவரை மட்டுமல்ல, முடிவில்லாத காலத்துக்கும் நிலைத்திருக்கும்!

பாட்டு 107 யெகோவாவின் மா மலைக்கு வருக!

^ பாரா. 5 முடிவு நெருங்க நெருங்க, நம் சகோதர சகோதரிகளோடு இருக்கிற நட்பெனும் பாலத்தை நாம் பலப்படுத்த வேண்டும். அதைச் செய்ய எரேமியாவின் உதாரணம் எப்படி உதவும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். இப்போது நாம் வளர்த்துக்கொள்கிற நெருக்கமான நட்பு ஆபத்துக் காலத்தில் நமக்கு எப்படிக் கைகொடுக்கும் என்பதையும் பார்க்கப்போகிறோம்.

^ பாரா. 2 எரேமியா புத்தகத்தில் இருக்கிற சம்பவங்கள் காலவரிசையின்படி சொல்லப்படவில்லை.

^ பாரா. 57 படங்களின் விளக்கம்: ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ என்ன நடக்கலாம் என்பதை இந்தப் படம் விளக்குகிறது. சில சகோதர சகோதரிகள், பத்திரமாக ஒரு சகோதரருடைய வீட்டில் இருக்கிற மாடி அறையில் ஒன்றுகூடி வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கிற நட்பெனும் பாலம் பலமாக இருப்பதால், சோதனைக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் தர முடிகிறது. அடுத்ததாக வரும் மூன்று படங்கள், அதே சகோதர சகோதரிகள், மிகுந்த உபத்திரவம் வருவதற்கு முன்பே தங்களுக்குள் நட்பெனும் பாலத்தை எப்படிப் பலமாகக் கட்டுகிறார்கள் என்பதை விளக்குகிறது.