Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 47

லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள்

லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள்

“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.”—2 தீ. 3:16.

பாட்டு 37 வேதம்—கடவுளது சக்தியால் அருளப்பட்டது

இந்தக் கட்டுரையில்... *

1-2. லேவியராகமப் புத்தகத்தை ஆராய்வதில் நாம் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?

அப்போஸ்தலன் பவுல், தன்னுடைய நண்பரான இளம் தீமோத்தேயுவுக்குக் கடிதம் எழுதியபோது, “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன” என்று ஞாபகப்படுத்தினார். (2 தீ. 3:16) அந்த வேதவசனங்களில் லேவியராகமப் புத்தகமும் ஒன்று! அந்தப் புத்தகத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதில் வெறுமனே சட்டங்கள் அடங்கிய பட்டியல்தான் இருக்கிறது என்றும், அவையெல்லாம் நம் காலத்துக்கு ஒத்து வராது என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை கிறிஸ்தவர்களாகிய நாம் அப்படி நினைப்பதில்லை.

2 கிட்டத்தட்ட 3,500 வருஷங்களுக்கு முன்பு இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், “நமக்கு அறிவுரை கொடுப்பதற்காக” இன்றுவரை யெகோவா அதைப் பாதுகாத்திருக்கிறார். (ரோ. 15:4) யெகோவாவின் மனதைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுவதால், இதை ஆராய்வதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டும். இந்தப் புத்தகத்தில் நமக்கு ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. அவற்றில் நான்கை மட்டும் இப்போது பார்க்கலாம்.

யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு வழி

3. வருஷத்துக்கு ஒரு தடவை வந்த பாவப் பரிகார நாளில் ஏன் மிருக பலிகள் செலுத்தப்பட்டன?

3 முதல் பாடம்: நம்முடைய பலிகளை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவருடைய அங்கீகாரம் நமக்கு அவசியம். வருஷத்துக்கு ஒரு தடவை வந்த பாவப் பரிகார நாளில், இஸ்ரவேலர்கள் எல்லாரும் ஒன்றுகூடி வந்தார்கள். அப்போது, மிருக பலிகள் செலுத்தப்பட்டன. பாவத்திலிருந்து தாங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அந்தப் பலிகள் அவர்களுக்கு ஞாபகப்படுத்தின. ஆனால், அந்தப் பலிகளின் இரத்தத்தை மகா பரிசுத்த அறைக்கு தலைமைக் குரு கொண்டுபோவதற்கு முன்பு இன்னொரு விஷயத்தைச் செய்ய வேண்டியிருந்தது. இஸ்ரவேல் தேசத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதைவிட அது முக்கியமானதாக இருந்தது.

(பாரா 4) *

4. லேவியராகமம் 16:12, 13-ன்படி, பாவப் பரிகார நாளில் மகா பரிசுத்த அறைக்குள் முதன்முதலில் நுழைந்தபோது தலைமைக் குரு என்ன செய்தார்? (அட்டைப் படம்)

4 லேவியராகமம் 16:12, 13-ஐ வாசியுங்கள். பாவப் பரிகார நாளில் நடந்ததையெல்லாம் உங்கள் மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள்: வழிபாட்டுக் கூடாரத்துக்குள் தலைமைக் குரு நுழைகிறார். அந்த நாளில் மொத்தம் மூன்று தடவை அவர் மகா பரிசுத்த அறைக்குள் போக வேண்டும். இப்போது, முதல் தடவையாகப் போகிறார். அவருடைய ஒரு கையில், நறுமணம் வீசும் தூபப்பொருள் அடங்கிய பாத்திரம்; இன்னொரு கையில், தணல்கள் நிரப்பப்பட்ட தங்கத் தூபக்கரண்டி. மகா பரிசுத்த அறைக்குள் நுழைவதற்கு முன், அந்த அறையின் நுழைவாசலில் போடப்பட்டிருக்கிற திரைச்சீலையின் முன் கொஞ்சம் நிற்கிறார். பிறகு, ஆழ்ந்த பயபக்தியோடு மகா பரிசுத்த அறைக்குள் நுழைந்து ஒப்பந்தப் பெட்டிக்கு முன் நிற்கிறார். ஒரு கருத்தில், யெகோவாவின் முன்னிலையிலேயே நிற்கிறார்! அதன்பின், பரிசுத்த தூபப்பொருளைக் கவனமாக தணல்மேல் போடுகிறார். உடனே அந்த அறை முழுவதும் நறுமணம் வீசுகிறது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) பிற்பாடு, மிருக பலிகளின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு மறுபடியும் மகா பரிசுத்த அறைக்குள் போவார். ஆனால், அதற்கு முன்பு அவர் தூபப்பொருளை எரித்ததை மனதில் வையுங்கள்.

5. பாவப் பரிகார நாளில் தூபப்பொருள் எரிக்கப்பட்டதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 பாவப் பரிகார நாளில் தூபப்பொருள் எரிக்கப்பட்டதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். யெகோவாவின் உண்மை ஊழியர்கள் செய்கிற அர்த்தமுள்ள ஜெபங்கள் தூபப்பொருளைப் போல் இருப்பதாக பைபிள் சொல்கிறது. (சங். 141:2; வெளி. 5:8) தலைமைக் குரு தூபப்பொருளை ஆழ்ந்த பயபக்தியோடு யெகோவாவின் முன்னிலையில் கொண்டுபோனதை நினைத்துப் பாருங்கள். அதேபோல், நாம் இன்று யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது ஆழ்ந்த மரியாதையையும் பயபக்தியையும் காட்ட வேண்டும். அவர் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த கடவுள்! ஆனாலும், ஒரு பிள்ளை தன் அப்பாவிடம் பேசுவதுபோல் நாம் அவரிடம் பேசுவதற்கும் அவருடன் நெருக்கமாவதற்கும் அவர் நம்மை அனுமதிக்கிறார். (யாக். 4:8) தன்னுடைய நண்பர்களாக நம்மை அவர் ஏற்றுக்கொள்கிறார்! (சங். 25:14) இந்த அருமையான பாக்கியத்தை நாம் உயர்வாக மதிக்கிறோம். அதனால், அவருடைய மனதைக் கஷ்டப்படுத்த நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்.

6. பலிகள் செலுத்துவதற்கு முன்பு தலைமைக் குரு தூபப்பொருளை எரித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

6 நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பலிகள் செலுத்துவதற்கு முன்பு தலைமைக் குரு தூபப்பொருளை எரிக்க வேண்டியிருந்தது. அதைச் செய்வதன் மூலம் யெகோவாவின் அங்கீகாரம் தனக்கு இருப்பதை அவர் உறுதி செய்துகொண்டார். இதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? இயேசு இந்தப் பூமியிலிருந்தபோது, மனிதர்களை மீட்பதற்காகத் தன்னையே பலியாகக் கொடுத்தார். ஆனால் அதற்கு முன்பு, மனிதர்கள் மீட்படைவதற்கு வழி செய்வதைவிட மிக முக்கியமான ஒரு விஷயத்தை அவர் செய்ய வேண்டியிருந்தது. அதாவது, தன்னுடைய பலியை யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் அவருக்கு உத்தமமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டியிருந்தது. அதன் மூலம், யெகோவாவின் வழியில் நடப்பதுதான் சரியான வாழ்க்கைப் பாதை என்பதை அவர் நிரூபித்தார். யெகோவா ஆட்சி செய்யும் விதம்தான் சரியானது, நியாயமானது என்பதையும் அவர் நிரூபித்தார்.

7. இயேசுவுடைய முழு வாழ்க்கையும் ஏன் யெகோவாவுக்குப் பிடித்த விதத்தில் இருந்தது?

7 பூமியில் வாழ்ந்த காலம் முழுவதும் தன்னுடைய தந்தையான யெகோவாவுக்கு இயேசு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். எத்தனையோ சோதனைகளும் கஷ்டங்களும் வந்தபோதும், கொடூரமான மரணம் காத்திருந்தபோதும், தன்னுடைய தந்தையின் ஆட்சிதான் சரியானது என்பதை நிரூபிப்பதில் அவர் உறுதியாக இருந்தார். (பிலி. 2:8) கஷ்டங்களை அனுபவித்தபோது, அவர் “கண்ணீர்விட்டுக் கதறி” ஜெபம் செய்தார். (எபி. 5:7) அவருடைய ஊக்கமான ஜெபங்கள், அவருடைய விசுவாசமுள்ள இதயத்திலிருந்து வந்தன; தொடர்ந்து யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தைப் பலப்படுத்தின. அவருடைய ஜெபங்கள், நறுமணம் கமழும் தூபப்பொருள்போல் யெகோவாவுக்கு இருந்தன. அவருடைய முழு வாழ்க்கையும் யெகோவாவுக்குப் பிடித்த விதத்தில் இருந்தது; யெகோவா ஆட்சி செய்யும் விதம்தான் சரியானது, நியாயமானது என்பதையும் நிரூபித்தது.

8. நாம் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம்?

8 யெகோவாவுக்குக் கீழ்ப்படியவும், அவருக்கு உத்தமமாக இருக்கவும் முழு முயற்சி எடுப்பதன் மூலம் நாம் இயேசுவைப் போலவே நடந்துகொள்ளலாம். யெகோவாவுக்குப் பிரியமாக நடக்க நாம் ஆசைப்படுகிறோம்; அதனால், சோதனைத் தீ தாக்கும்போது அவரிடம் ஊக்கமாக ஜெபம் செய்கிறோம். இப்படியெல்லாம் செய்வதன் மூலம், யெகோவாவுடைய ஆட்சியின் பக்கம்தான் நாம் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். யெகோவா வெறுக்கிற விஷயங்களை நாம் செய்துவந்தால், நம் ஜெபங்களை அவர் கேட்க மாட்டார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், யெகோவாவுடைய சட்டதிட்டங்களின்படி நாம் வாழும்போது, நம்முடைய மனப்பூர்வமான ஜெபங்கள் நறுமணம் கமழும் தூபப்பொருள் போல் அவருக்கு இருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். நாம் உத்தமமாக இருக்கும்போதும், உண்மை மனதோடு கீழ்ப்படியும்போதும், நம் பரலோகத் தந்தை சந்தோஷப்படுவார் என்பது நிச்சயம்.—நீதி. 27:11.

நன்றியும் அன்பும் கலந்த உள்ளத்தால் சேவை செய்கிறோம்

(பாரா 9) *

9. சமாதான பலிகள் எதற்காகச் செலுத்தப்பட்டன?

9 இரண்டாவது பாடம்: நம் உள்ளத்தில் நன்றி பொங்குவதால் நாம் யெகோவாவுக்குச் சேவை செய்கிறோம். இஸ்ரவேலர்களுடைய உண்மை வழிபாட்டின் இன்னொரு முக்கிய அம்சமாக இருந்த சமாதான பலிகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும்போது, நம்மால் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) “நன்றி தெரிவிக்கும்” பலியாக இஸ்ரவேலர்கள் சமாதான பலிகளைச் செலுத்தினார்கள் என்று லேவியராகமப் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். (லேவி. 7:11-13, 16-18) கட்டாயத்தினால் அல்ல, சொந்த விருப்பத்தால்தான் இஸ்ரவேலர்கள் அந்தப் பலிகளைச் செலுத்தினார்கள். யெகோவாமீது இருந்த அன்பால் மனப்பூர்வமாக அவற்றைச் செலுத்தினார்கள். பலி செலுத்தப்பட்ட மிருகத்தின் இறைச்சியை, பலி செலுத்திய இஸ்ரவேலரும் அவருடைய குடும்பத்தாரும் குருமார்களும் சாப்பிட்டார்கள். ஆனால், அந்த இறைச்சியின் சில பாகங்கள் யெகோவாவுக்கு மட்டும் கொடுக்கப்பட்டன. எந்தெந்த பாகங்கள் அப்படிக் கொடுக்கப்பட்டன?

(பாரா 10) *

10. லேவியராகமம் 3:6, 12, 14-16-ல் சொல்லப்பட்டிருக்கிற சமாதான பலிகள், யெகோவாவுக்கு இயேசு செய்த சேவையோடு எப்படி ஒத்திருக்கின்றன?

10 மூன்றாவது பாடம்: யெகோவாமீது இருக்கிற அன்பால், அவருக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கிறோம். மிருகங்களுடைய கொழுப்பைத்தான் மிகச் சிறந்த பாகமாக யெகோவா கருதினார். சிறுநீரகங்களையும் இன்னும் சில முக்கியமான பாகங்களையும்கூட அவர் மதிப்புள்ளதாகக் கருதினார். (லேவியராகமம் 3:6, 12, 14-16-ஐ வாசியுங்கள்.) அதனால், அந்தச் சிறந்த பாகங்களையும் கொழுப்பையும் இஸ்ரவேலர்கள் மனதாரச் செலுத்தியபோது, யெகோவா ரொம்பச் சந்தோஷப்பட்டார். யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்ற உள்ளப்பூர்வமான ஆசை தங்களுக்கு இருந்ததை அந்த இஸ்ரவேலர்கள் காட்டினார்கள். அதேபோல்தான் இயேசுவும்! யெகோவாமீது இருந்த அன்பால், முழு மூச்சோடு அவருக்குச் சேவை செய்தார்; அப்படிச் செய்ததன் மூலம் மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுத்தார். (யோவா. 14:31) கடவுளுடைய விருப்பத்தைச் செய்வது இயேசுவுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. கடவுளுடைய சட்டங்களை அவர் நெஞ்சார நேசித்தார். (சங். 40:8) இயேசு மனப்பூர்வமாகத் தனக்குச் சேவை செய்ததைப் பார்த்து யெகோவா மனம் குளிர்ந்து போயிருப்பார், இல்லையா?

யெகோவாவின் மீது அன்பு இருப்பதால் அவருக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கிறோம் (பாராக்கள் 11-12) *

11. நம்முடைய சேவை சமாதான பலிகளைப் போல் இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம், அது நம் மனதுக்கு ஏன் இதமாக இருக்கிறது?

11 நாம் யெகோவாவுக்குச் செய்யும் சேவையும் அந்தச் சமாதான பலிகள் போன்றதுதான்! ஏனென்றால், அவர்மேல் இருக்கும் அன்பால் நாமாகவே விருப்பப்பட்டுத்தான் அவருக்குச் சேவை செய்கிறோம். நாம் முழு இதயத்தோடு யெகோவாமீது அன்பு காட்டுவதால், மிகச் சிறந்ததை அவருக்குக் கொடுக்கிறோம். தன்மீதும் தன்னுடைய கட்டளைகள்மீதும் இருக்கிற அளவற்ற அன்பால், லட்சக்கணக்கான பேர் தனக்குச் சேவை செய்வதைப் பார்த்து யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்! நாம் என்ன செய்கிறோம் என்பதை மட்டுமல்ல, ஏன் செய்கிறோம் என்பதையும் அவர் பார்க்கிறார், அதை உயர்வாக மதிக்கிறார். இதைத் தெரிந்துகொள்வது நம் மனதுக்கு இதமாக இருக்கிறது. உங்களுக்கு வயதாகிவிட்டதா? முன்புபோல் செய்ய முடியவில்லையே என்று நினைத்து கவலைப்படுகிறீர்களா? அப்படியென்றால், யெகோவா உங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறார் என்பதை உறுதியாக நம்புங்கள். யெகோவாவுக்கு கொஞ்சம் மட்டுமே செய்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கிற அன்புதான் உங்களால் முடிந்ததைச் செய்ய உங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கிறது என்பதையும் யெகோவா பார்க்கிறார். உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுக்கும்போது அவர் சந்தோஷப்படுகிறார்.

12. சமாதான பலிகளை யெகோவா எப்படிக் கருதினார், அதைத் தெரிந்துகொள்வது நமக்கு ஏன் ஆறுதலாக இருக்கிறது?

12 சமாதான பலிகளிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? மிருகங்களுடைய சிறந்த பாகங்கள் நெருப்பால் சுட்டெரிக்கப்பட்டபோது புகை எழும்பியது; அது யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்தியது. அதேபோல்தான் உங்களுடைய விஷயமும்! முழு மூச்சோடு நீங்கள் செய்கிற சேவை அவருடைய மனதைச் சந்தோஷப்படுத்துகிறது. (கொலோ. 3:23) நீங்கள் கொஞ்சம் செய்தாலும் சரி, நிறைய செய்தாலும் சரி, அன்பு நிறைந்த உள்ளத்தோடு செய்யும்போது, யெகோவா அதை உயர்வாக மதிக்கிறார். அதை ஒருபோதும் மறக்க மாட்டார்!—மத். 6:20; எபி. 6:10.

தன்னுடைய அமைப்பை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

13. லேவியராகமம் 9:23, 24-ன்படி, குருமார் ஏற்பாட்டின் மீது தன்னுடைய அங்கீகாரம் இருப்பதை யெகோவா எப்படிக் காட்டினார்?

13 நான்காவது பாடம்: தன்னுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை யெகோவா ஆசீர்வதித்துவருகிறார். இதைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்: கி.மு. 1512, சீனாய் மலையடிவாரம்! வழிபாட்டுக் கூடாரம் அப்போதுதான் அமைக்கப்பட்டிருக்கிறது. (யாத். 40:17) ஆரோனையும் அவருடைய மகன்களையும் குருமார்களாக நியமிக்கும் வேலையை மோசே முன்னின்று செய்துகொண்டிருக்கிறார். முதல் தடவையாக குருமார்கள் தங்களுக்காகப் பலிகளைச் செலுத்துகிறார்கள். இதைப் பார்க்க இஸ்ரவேல் தேசத்தார் எல்லாரும் கூடிவந்திருக்கிறார்கள். (லேவி. 9:1-5) அந்த ஜனங்களை ஆரோனும் மோசேயும் ஆசீர்வதிக்கிறார்கள். அப்போது, யெகோவாவிடமிருந்து நெருப்பு வந்து பலிபீடத்தின் மேல் மீதியிருந்த பலிகளை மொத்தமாக விழுங்குகிறது. இதன் மூலம், புதிதாக ஏற்படுத்தப்பட்ட குருமார் ஏற்பாட்டின் மேல் தன்னுடைய அங்கீகாரம் இருப்பதை யெகோவா காட்டுகிறார்.லேவியராகமம் 9:23, 24-ஐ வாசியுங்கள்.

14. குருமார்களான ஆரோனையும் அவருடைய மகன்களையும் யெகோவா அங்கீகரித்ததைப் பற்றி இன்று நாம் ஏன் யோசித்துப்பார்க்க வேண்டும்?

14 தலைமைக் குரு ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டபோது நடந்த பிரமிக்கவைத்த சம்பவம் எதைக் காட்டியது? குருமார்களான ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் யெகோவாவுடைய அங்கீகாரமும் ஆதரவும் இருந்ததைக் காட்டியது. யெகோவாவின் முழு ஆதரவு குருமார்களுக்கு இருந்ததற்கான தெளிவான அத்தாட்சியை இஸ்ரவேலர்கள் பார்த்தபோது, தாங்களும் அவர்களுக்கு முழு ஆதரவு தர வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனால், இதற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? ஆமாம், இருக்கிறது! அன்று ஏற்படுத்தப்பட்ட குருமார் ஏற்பாடு, அதைவிடச் சிறந்த ஒரு குருமார் ஏற்பாட்டுக்கு முன்நிழலாக இருந்தது. கிறிஸ்து மாபெரும் தலைமைக் குருவாகவும், பரலோகத்தில் அவரோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேர் மற்ற குருமார்களாகவும் சேவை செய்யப்போகிற ஏற்பாடுதான் அது!—எபி. 4:14; 8:3-5; 10:1.

தன்னுடைய அமைப்பை யெகோவா ஆசீர்வதிக்கிறார், வழிநடத்துகிறார். முழுமனதோடு நாம் இந்த அமைப்பை ஆதரிக்கிறோம் (பாராக்கள் 15-17) *

15-16. ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ அங்கீகரித்திருப்பதை யெகோவா எப்படிக் காட்டியிருக்கிறார்?

15 அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களில் ஒரு சிறிய தொகுதியை, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ 1919-ல் இயேசு நியமித்தார். அந்த அடிமை பிரசங்க வேலையை முன்னின்று வழிநடத்துகிறது; கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு “ஏற்ற வேளையில்” “உணவு” கொடுக்கிறது. (மத். 24:45) இந்த அடிமைக்கு யெகோவாவின் அங்கீகாரம் இருக்கிறது என்பதற்கான தெளிவான அத்தாட்சியை நாம் பார்க்கிறோமா?

16 இந்த உண்மையுள்ள அடிமை செய்துவருகிற வேலையைத் தடுத்து நிறுத்த சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். யெகோவாவின் ஆதரவு மட்டும் இல்லையென்றால், இந்த அடிமையால் எதுவும் செய்ய முடியாமல் போயிருக்கும். இரண்டு உலகப் போர்கள்... ஓயாத துன்புறுத்தல்கள்... அநீதிகள்... உலகம் முழுவதும் இருக்கிற பொருளாதார நெருக்கடிகள்... என எதுவுமே உண்மையும் விவேகமும் உள்ள அடிமையின் வேலைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை! கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்குத் தொடர்ந்து ஆன்மீக உணவை இந்த அடிமை கொடுத்துவருகிறது. 900-க்கும் அதிகமான மொழிகளில் நமக்குக் கிடைக்கிற ஏராளமான ஆன்மீக உணவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அத்தனையும் விலையின்றி கிடைக்கிறது! யெகோவாவின் ஆதரவு இருப்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா? பிரசங்க வேலையை இன்னொரு ஆதாரமாகச் சொல்லலாம். “உலகம் முழுவதும்” இந்த நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுகிறது! (மத். 24:14) தன்னுடைய அமைப்பை யெகோவா வழிநடத்துகிறார் என்பதிலும், அதை அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறார் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை!

17. யெகோவாவின் அமைப்புக்கு நம்முடைய ஆதரவை எப்படிக் காட்டலாம்?

17 அப்படியென்றால், நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி இருக்கிறது. ‘யெகோவாவோட அமைப்போட பூமிக்குரிய பாகத்துல ஒரு இடம் கிடைச்சதுக்கு நான் நன்றியோட இருக்கேனா?’ என்ற கேள்விதான் அது. மோசே மற்றும் ஆரோனின் காலத்தில், பரலோகத்திலிருந்து நெருப்பை அனுப்பியதன் மூலம் தன்னால் நியமிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய அங்கீகாரம் இருப்பதை யெகோவா காட்டினார். அதேபோல், இன்று தன்னுடைய அமைப்புக்கு தன்னுடைய அங்கீகாரம் இருக்கிறது என்பதற்கும் யெகோவா தெளிவான அத்தாட்சியைக் காட்டியிருக்கிறார். இதற்காக நாம் அவருக்கு ரொம்பவே நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். (1 தெ. 5:18, 19) யெகோவாவின் அமைப்புக்கு நாம் எப்படி ஆதரவு காட்டலாம்? நம்முடைய பிரசுரங்கள், கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றின் மூலம் தரப்படுகிற பைபிள் ஆலோசனைகளின்படி நடப்பதன் மூலம் நம் ஆதரவைக் காட்டலாம். அதோடு, பிரசங்க வேலையையும் கற்றுக்கொடுக்கும் வேலையையும் முடிந்தளவு மும்முரமாகச் செய்வதன் மூலமும் நம்முடைய ஆதரவைக் காட்டலாம்.—1 கொ. 15:58.

18. நீங்கள் என்ன செய்ய முடிவு எடுத்திருக்கிறீர்கள்?

18 லேவியராகமப் புத்தகத்தில் கற்றுக்கொண்ட பாடங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். நம்முடைய பலிகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதில் தீர்மானமாக இருக்கலாம். யெகோவாமீது இருக்கிற நன்றியுணர்வால் அவருக்குச் சேவை செய்யலாம். நம் உள்ளத்தில் யெகோவாமீது அன்பு இருப்பதால், தொடர்ந்து அவருக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கலாம். யெகோவா பயன்படுத்தும் அமைப்பை முழுமனதோடு ஆதரிக்கலாம். இதையெல்லாம் செய்வதன் மூலம், யெகோவாவின் சாட்சிகளாகச் சேவை செய்கிற அருமையான பாக்கியத்தை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதை அவருக்குக் காட்டலாம்.

பாட்டு 114 கடவுளுடைய புத்தகம் ஒரு பொக்கிஷம்

^ பாரா. 5 பூர்வ இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த சட்டங்கள் லேவியராகமப் புத்தகத்தில் இருக்கின்றன. கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று அந்தச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை. இருந்தாலும், அவற்றிலிருந்து விலைமதிப்புள்ள பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவற்றில் சில பாடங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 4 வழிபாட்டுக் கூடாரத்தில் எரிக்கப்பட்ட தூபப்பொருள் பரிசுத்தமாகக் கருதப்பட்டது. பூர்வ இஸ்ரவேலில், யெகோவாவின் வழிபாட்டில் மட்டும்தான் அந்தத் தூபப்பொருள் பயன்படுத்தப்பட்டது. (யாத். 30:34-38) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், தங்கள் வழிபாட்டில் தூபப்பொருளை எரித்ததாக எந்தப் பதிவும் இல்லை.

^ பாரா. 9 சமாதான பலிகளைப் பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள, வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகம், தொகுதி 2, பக். 526-ஐயும், காவற்கோபுரம் 2012, ஜனவரி 15, பக். 19, பாரா 11-ஐயும் பாருங்கள்.

^ பாரா. 54 படங்களின் விளக்கம்: பாவப் பரிகார நாளில், மகா பரிசுத்த அறையை நறுமணத்தால் நிரப்புவதற்காக, தூபப்பொருளையும் தணல்களையும் எடுத்துக்கொண்டு தலைமைக் குரு அந்த அறைக்குள் போனார். பிறகு, பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு மறுபடியும் அந்த அறைக்குள் போனார்.

^ பாரா. 56 படங்களின் விளக்கம்: ஓர் இஸ்ரவேலர், சமாதான பலி செலுத்துவதற்காக, ஒரு செம்மறியாட்டை குருவிடம் கொடுக்கிறார். தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் யெகோவாமீது இருக்கிற நன்றியுணர்வைக் காட்டும் விதத்தில் அதைக் கொடுக்கிறார்.

^ பாரா. 58 படங்களின் விளக்கம்: இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது, யெகோவாவின் கட்டளைகளைப் பின்பற்றியதன் மூலமும், அவற்றைப் பின்பற்ற தன்னுடைய சீஷர்களுக்கு உதவியதன் மூலமும் அவர்மேல் ஆழ்ந்த அன்பைக் காட்டினார்.

^ பாரா. 60 படங்களின் விளக்கம்: வயதான ஒரு சகோதரி, தன் உடல்நிலை மோசமாக இருந்தாலும், கடிதங்கள் வழியாகச் சாட்சி கொடுப்பதன் மூலம் யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கிறார்.

^ பாரா. 62 படங்களின் விளக்கம்: பிப்ரவரி 2019-ல், ஆளும் குழுவில் சேவை செய்கிற சகோதரர் கெரட் லாஷ், திருத்தப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். இந்தப் படத்தில் இருக்கிற சகோதரிகளைப் போலவே ஜெர்மனியில் இருக்கிற பிரஸ்தாபிகள் இந்த பைபிளை ஊழியத்தில் சந்தோஷமாகப் பயன்படுத்துகிறார்கள்.